அத்தியாயம் 36
அமுதாவும், விஜயும் கோவில் மரத்தடியில் படிக்கட்டில் அமர்ந்திருந்தார்கள். தினேஷ் அவனுக்கு கால் செய்து அவனது பாதுகாப்பு பற்றி விசாரிக்க, தன்னை யாரும் பின்தொடர வேண்டாம் என்று வழக்கும் போல் பிடிவாதமாக சொல்லி விட்டான் விஜய். அவன் ஃபோனில் பேசிக் கொண்டு இருக்கும்போது கூட அவன் கண்களில் இருந்து தொடர்ந்து கண்ணீர் வந்து கொண்டே இருந்தது.
அவனைப் பாவமாக பார்த்த அமுதா “என்னை காப்பாத்த போய் உங்களுக்கு இப்படி ஆயிடுச்சே சார்.. எனக்கு உங்களை இப்படி பார்க்கவே ரொம்ப கஷ்டமா இருக்கு.” என்று ஃபீல் செய்து சொல்ல, அவளை மேலும் கீழும் குறுகுறுவென்று பார்த்த விஜய் “என்ன எமோஷனல் ஆகிரியா? அதுவும் என்னை பார்த்தா? செட் ஆகல.. செட்டாகல.. ஹீரோவுக்கு எல்லாம் எதுவுமே வலிக்காது.
எவ்ளோ கஷ்டம் வந்தாலும் அதை அவன் அசால்டா தட்டி விட்டுட்டு போயிடுவான் அவன் தான் ஹீரோ. என்னை இனிமே இப்படி பரிதாபமா பார்க்கிற வேலையெல்லாம் வெச்சுக்காத. அப்புறம் உன் கண்ண நோண்டி உன்னையும் அழ வெச்சிருவேன்.” என்று தனது இரு விரல்களை அவளது கண்களுக்கு நேராக கொண்டு சென்று ஆக்சன் உடன் செய்து காட்டினான்.
உடனே ஜர்க் ஆகி ஒரு ஸ்டெப் பின்னே சென்ற அமுதா “கோபப்படாதீங்க சார்.. நீங்க டெரரான ஆளுன்னு நான் கேள்விப்பட்டு இருக்கேன். அதுக்காக எல்லாத்துக்குமே கோபப்படணுமா என்ன? வயசாகுதுல்ல.. டென்ஷன் ஆகிறது உங்க ஹெல்த்துக்கு நல்லது இல்ல.” என்று அக்கறையுடன் சொல்ல, “என்னது வயசு ஆகுதா? யாருக்கு டி வயசாகுது? என்னை பார்த்தா உனக்கு வயசான கிழவன் மாதிரி இருக்கா? உன்ன விட எனக்கு வயசு அதிகம்னு குத்தி காட்டுறியா? அது சரி எனக்கு வயசான தான் இப்ப என்ன பிரச்சனை உனக்கு? நான் உன் கிட்ட பர்மிஷன் கேட்டுட்டு தான் கோபப்படனுமா?” என்று அவன் பாட்டிற்கு ஏதேதோ சொல்ல தொடங்கி விட்டான்.
“என்ன நான் ஒன்னு சொன்னா இவரு ஒன்னு புரிஞ்சுகிட்டு பேசுறாரு..!!” என்று நினைத்து அமுதா வாயடைத்துப் போய் அவனை பார்க்க, “ஏய் அமுதா இவரை எதுக்கு ஹாஸ்பிடல் கூட்டிட்டு போறேன்னு ஒத்துக்கிட்ட? அதுவரைக்கும் நம்மளால இவரை சமாளிக்க முடியுமா? இவரு எவ்ளோ பெரிய ஸ்டார்ன்னு தெரியும்ல.. இவருக்கு மட்டும் ஏதாவது ஆச்சுன்னா, அவர் குடும்பத்தில இருக்கிறவங்க, அவர் ஃபேமிலில இருக்கிறவங்கன்னு ஒருத்தர் கூட விடாம எல்லாருமே நம்மளால தானே நம்மள ரவுண்டு கட்டி பொலந்துருவாங்க.” என்று அமுதாவின் காதுகளில் கிசுகிசுத்தாள் கலை.
அவளை பாவமாக பார்த்த அமுதா “இவர் பேசுறதை எல்லாம் பார்த்தா எனக்கே மத்தவங்க இவரை கண்டுபிடிக்காம எப்படி ஹாஸ்பிடல் கூட்டிட்டு போயிட்டு வர்றதுன்னு நினைச்சா பயமா தான் இருக்கு. அங்க மட்டும் யாராவது இவரை கண்டுபிடிச்சாங்கன்னா அவ்ளோ தான் பெரிய பிரச்சினையாகிடும். ஹாஸ்பிடல்லை கொஞ்ச நேரத்துல இழுத்து மூடுற அளவுக்கு இவரோட fans எல்லாரும் அங்க வந்து குவிந்திடுவாங்க. அப்புறம் யாரையும் கண்ட்ரோல் பண்ணவும் முடியாது..
இவரையும் பத்திரமா அங்க இருந்து கூட்டிட்டு வரவும் முடியாது. ஆனா இந்த நிலைமையில எப்படி இவர விட்டுட்டு போக முடியும் சொல்லு? என்னால தானே இவருக்கு இப்படி ஆச்சு!” என்று அவளிடம் மெல்லிய குரலில் சொல்ல, “அதுவும் சரி தான்.” என்றாள் கலை.
இப்படியே அவர்கள் மாறி மாறி பேசிக் கொண்டு இருக்க, அமுதா புக் செய்து இருந்த கேப் அங்கே வந்து சேர்ந்தது. அதில் அவர்கள் மூவரும் ஏரி அமர்ந்து அருகில் உள்ள கண் மருத்துவமனையை நோக்கி பயணிக்க தொடங்கினார்கள். சிவந்து இருந்த விஜயின் கண்களை மட்டும் பார்த்துவிட்டு அவன் பார்ப்பதற்கு விசித்திரமாக தன் உடலை முழுவதுமாக மூடும் படியான ஆடை அணிந்து இருந்ததால், “என்ன சார் அடிக்கிற வெயிலுக்கு இப்படி குளிர்காலத்தில் டிரஸ் பண்ற மாதிரி ஜாக்கெட் எல்லாம் போட்டு இருக்கீங்க! உங்க கண்ணு மட்டும் தான் வெளியே தெரியுது.
இந்த கண்ணு இப்ப பாக்குறதுக்கு வித்தியாசமா இருந்தாலும் இந்த கண்ணை எங்கயோ பார்த்த மாதிரியே இருக்கு. நீங்க இந்த ஊர் காரரா? எங்க தங்கி இருக்கீங்க?” என்று டிரைவர் விஜயை பார்த்து கேட்க, அவனுக்கு விஜய் ஏதோ பதில் சொல்ல வருவதற்குள் அவன் வாயை பொத்திய அமுதா, “இவருக்கு பேச்சு வராது அண்ணா. பாவம் இதற்கு ஒரு வாரமா டைபாய்டு ஃபீவர். அதான் குளிருதுன்னு இப்படி டிரஸ் பண்ணி இருக்காரு. இன்னும் வந்த காய்ச்சல் கூட சரியாகல.
அதுக்குள்ள கண்ணுல ஒரு பூச்சி விழுந்து இப்படி red அடிச்சு. ஒரு மனுசனுக்கு எத்தனை சோதனை ஒரே நேரத்தில வருது பாருங்க! அதான் இவர பார்க்கவே பாவமா இருக்குன்னு பக்கத்துல இருக்குற eye ஹாஸ்பிடல் கூட்டிட்டு போக போறேன்.” என்று சொல்ல,
“அடிப்பாவி எனக்கு பாவம் பார்த்து நீ ஹாஸ்பிடல் கூட்டிட்டு போக போறியா? அதுவும் எனக்கு என்னென்ன வியாதி இருக்குன்னு சொல்றா.. இவளுக்கு எவ்வளவு தைரியம்!” என்று நினைத்த விஜய் அவள் கையை எடுத்துவிட்டு அவளிடம் ஏதோ பேச வந்தான்.
ஆனால் அப்போதும் தன் ஒரு கையால் அவனது கையை பிடித்துக் கொண்ட அமுதா அவளது மற்றொரு கையை அவன் வாயில் வைத்து அழுத்தியபடி “இல்ல நீங்க பேசுறதுக்காக strain பண்ணாதீங்க. உங்களால பேச முடியாதுன்னு நான் அந்த அண்ணா கிட்ட சொல்லிட்டேன். உங்களுக்கு இப்போ வர வர காதும் கேட்க மாட்டேங்குதா? டென்ஷன் ஆகாமல் ரிலாக்ஸ்ட்டா இருங்க. நம்ம சீக்கிரம் ஹாஸ்பிடலுக்கு போயிடலாம். அவ்ளோ தான் வந்தாச்சு பக்கம் தான்.” என்று சொல்ல,
விஜயின் கோபம் அதன் எல்லையை கடந்து கொண்டிருந்தது. அதனால் சட்டென்று அவள் கையை எடுத்துவிட்டு வந்த கடுப்பில் அவள் தன் அருகில் அமர்ந்திருந்ததால் அவள் காலில் மிதித்தவன் மெல்லிய குரலில் “விட்டா நான் ஹாஸ்பிடல் போறதுக்குள்ள போய் சேர்ந்துட்டேனு நீயே சொல்லி பாட கட்டி என குழிக்குள்ள அனுப்பிடுவ போல!” என்று எரிச்சலுடன் கேட்க,
அவன் தன் காலை மிதித்ததால் சத்தமாக சத்தக் கூட முடியாமல் வலியை பொறுத்துக் கொண்டு அவனை கலங்கிய கண்களுடன் பார்க்க அமுதா, “உங்க வாய்ஸ் தான் எல்லாருக்குமே தெரியுமே சார்.. நீங்க வாய தொறந்து பேசினா உங்கள அவர் கண்டுபிடிச்சிட மாட்டாரா? நானே உங்க வாய்ஸ் வச்சு தான் உங்களை அடையாளம் கண்டுபிடிச்சேன். அதான் உங்களால பேச முடியாதுன்னு பொய் சொன்னேன். அது உங்கள டென்ஷன் ஆக்கும்னு நான் நினைக்கல சாரி சார். நான் சொல்லலைன்னாலும் நீங்களே புரிஞ்சிப்பீங்கன்னு நினைத்தேன். என் தப்பு தான்.” என்று உடைந்த குரலில் மெதுவாக சொன்னாள்.
அவள் அப்படி சொன்னது அவனுக்கு சுருக்கென்று இருந்தது. தன்னைப் பற்றி அவள் யோசிப்பதை இப்போது தான் அவன் உணர்ந்தான். அதனால் உடனே குனிந்து தனது ஷூ காலை பார்த்த விஜய் “இந்த ஷூவோட அவ கால்ல மிதிச்சிட்டமே.. ஒருவேளை ரொம்ப வலிச்சு இருக்குமோ? ச்சை.. அவசரப்பட்டுடோமே.. நம்ம நம்மள பத்தி கேர் பண்றதே இல்ல. அதான் நம்மள சுத்தி இருக்குறவங்க எல்லாரும் நமக்காக இந்த அளவுக்கு யோசிக்க வேண்டியது இருக்கு. பேசாம அவ கிட்ட இப்பவே இதுக்காக நம்ம சாரி சொல்லலாமா?” என்று சில நொடிகள் யோசித்தான்.
பின் அவளது பாவமான சிவந்த முகத்தையும் கலங்கிய கண்களையும் பார்த்தான். அவளது அழகிய கருவிழிகளை பார்த்தவுடன் அவனுக்கு திபு திபு என்று இருந்து கொண்டிருக்கும் தன் கண்கள் தான் ஞாபகம் வந்தது. அதனால் அதுவரை கொஞ்சம் குறைந்ததைப் போல இருந்த கண் எரிச்சல் மீண்டும் அதிகமானதைப் போல இருக்க, தன் பற்களை கடித்துக் கொண்டு அந்த வலியை பொறுத்துக் கொண்ட விஜய் அவளிடம் மன்னிப்பு கேட்பதைப் பற்றி எல்லாம் அப்படியே யோசிக்காமல் விட்டு விட்டான்.
எப்படியோ ஒரு வழியாக அவர்கள் ஹாஸ்பிடலுக்கு சென்று சேர்ந்தார்கள். அவன் கண்களை சோதித்து பார்க்க டாக்டர் எதனால் இப்படி ஆனது என்று விஜய் இடம் விசாரித்தார். அப்போதும் அவனைப் பேச விடாமல் நடந்ததை டாக்டரிடம் சொன்ன அமுதா “ஆசிட் டிராப் இவர் கண்ணுல பட்டுருச்சா டாக்டர்? அதனால தான் இவருக்கு இப்படி ஆயிடுச்சா? இதனால இவருக்கு பார்வை எல்லாம் போயிடாதே! எனக்கு நினைச்சாலே பயமா இருக்கு.” என்று பதட்டமான முகத்துடன் சொல்ல, டாக்டர் கொடுத்த ஐ ட்ராப்ஸ்ஸுன் விளைவால் வலி கொஞ்சம் குறைந்து இருப்பதால் சகஜமாக அமர்ந்திருந்த விஜய் அவளை பார்த்து முறைத்தான்.
“இல்லம்மா.. ஸ்கின்ல ஆசிட் ஒரு டிராப் பட்டாலே அப்படியே வெந்து போயிடும். எனக்கு என்ன தோணுதுன்னு அந்த ஆசிட்டை இவர் தட்டி விடும்போது, அதுல இருந்து பறந்து போன சின்ன ட்ராப்போட பார்ட்டிகல்ஸ் காத்துல கலந்து அது இவர் கண்ணில் பட்டிருக்க வாய்ப்பு இருக்கு. டைரக்ட்டா இவரு கண்ணுல படாததுனால ஒன்னும் பிரச்சனை இல்ல.
பட் இவர் ஒரு 2, 3 டேஸ் கண்ணை ஸ்ட்ரைன் பண்ணாம இருக்கிறது நல்லது. டைமுக்கு மெடிசன்ஸ் அண்ட் ஹைட்ராப்ஸ் எல்லாம் எடுத்துக்கிட்டு அதுவும் blind foldல இருந்தாருன்னா இவருக்கு சீக்கிரம் சரியாயிடும். ஒன்னும் பிரச்சனை இல்ல.” என்றார் டாக்டர்.
டாக்டரிடம் அவனது ட்ரீட்மென்ட் பற்றி இன்னும் சில விஷயங்களை கேட்டுக் கொண்டு அவனை அழைத்துக் கொண்டு கலைச்செல்வியுடன் டாக்டரின் கேபினை விட்டு வெளியில் வந்தாள் அமுதா. அவர்கள் இப்போது வந்திருப்பது சிட்டியிலேயே கொஞ்சம் பெரிய ஹாஸ்பிடல் தான். அதனால் பில் அமௌன்ட்டும் கொஞ்சம் பெரியதாகவே வந்திருந்தது. அவ்வளவு பணம் அமுதாவிடம் இருக்க வாய்ப்பில்லை என்று நினைத்த விஜய் அவனே ரிசப்ஷனில் பணத்தைக் கட்டிவிட்டு மாத்திரை மருந்துகளை வாங்கிக் கொண்டு அவளுடன் வெளியில் வந்தான்.
அங்கே வெயில் பல்லைக் காட்டிக் கொண்டு அடிக்க, தன்னிடம் மீதம் இருக்கும் பணத்தை நிறைத்து பார்த்த அமுதா “இல்ல சார், இங்க வெயில் ஓவரா இருக்கு. கேப் வர்ற வரைக்கும் நம்ம வெயிட் பண்ண முடியாது. இந்த ஏரியால ஆட்டோ சீக்கிரம் கிடைச்சிரும். சோ நம்ம ஆட்டோலையே போயிடலாம். நான் உங்களுக்காக தான் சொல்றேன்.” என்று சொல்ல, அவளை மேலும் கீழும் பார்த்த விஜய் “சரி போய் தொல.. போய் ஆட்டோ கூப்பிடு..!!” என்றான்.
“நல்லவேளை… இவர் ஆட்டோல போறதுக்கு ஓகே சொல்லிட்டாரு. மறுபடியும் கேப் புக் பண்ணனும்னு சொல்லி இருந்தா, என் கிட்ட காசு இல்லன்னு சொல்லி இவர் கிட்ட அசிங்கப்பட வேண்டியதாகி இருக்கும்.” என்று நினைத்த அமுதா “தேங்க்ஸ் சார்” என்று உற்சாகமான குரலில் சொல்லிவிட்டு துள்ளி குதித்து ஆட்டோ பிடிக்க ஓடினாள்.
அவளை தன் கண்களை சுருக்கி பார்த்த விஜய் “இப்ப நான் என்ன சொல்லிட்டேனு இவ இந்த குதி குதிக்கிறா? சரியான லூசா இருப்பா போல.. இன்னைக்கு இவ கிட்ட வந்து மாட்டணும்னு என் தலையில எழுதி இருந்திருக்கு.” என்று நினைத்து மானசிகமாக தன் தலையில் அடித்து கொண்டான்.
ஆனால் உண்மையில் யார் யாரிடம் மாட்டிக் கொண்டது? என்ற கேள்விக்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.
– காதல் மலரும்