அத்தியாயம் 4: நாராயணன் பேலஸ்
ஜாயினிங் ப்ரொசிஜர் எல்லாம் முடித்துவிட்டு ஆபீஸ் ரூமில் இருந்து வெளியே வந்த ரித்திகா, சித்தார்த்தைச் சந்தித்தாள். முதல் சந்திப்பிலேயே இருவருக்கும் ஒருவரை ஒருவர் பிடித்துவிட்டது.
பொதுவாகவே ரித்திகாவுக்குக் குழந்தைகள் என்றாலே மிகவும் பிடிக்கும் என்பதால், சித்தார்த்தைப் பார்த்தவுடன் அவளுக்கு அவனுடன் ஏதோ ஒரு பிணைப்பு ஏற்பட்டுவிட்டது.
சித்தார்த் மற்ற குழந்தைகளைப் போல சாதாரணமாக இருப்பவன் இல்லை. தன்னுடைய சொந்த அப்பாவைக்கூடப் பார்த்துப் பயந்து பேசத் தயங்குபவன்.
அவனுடைய பாட்டியிடம் மட்டுமே தயக்கமின்றிப் பேசும் சித்தார்த், இப்படிச் சகஜமாக ரித்திகாவிடம் பேசுவது அவனைப் பார்த்துக் கொள்ளும் ஆயா சுகந்திக்கு ஆச்சரியமாக இருந்தது.
ரித்திகாவுக்குச் செய்து முடிக்க வேண்டிய முக்கியமான வேலைகள் நிறைய இருப்பதால், அவள் பள்ளியில் இருந்து கிளம்புவதாக சித்தார்த்திடம் சொல்லிவிட்டு கிளம்ப நினைத்தாள். ஆனால், ரித்திகா கிளம்புவதை சித்தார்த் விரும்பவில்லை.
சித்தார்த்: “என்னை விட்டு போகாத ரித்தி என்று மீண்டும் மீண்டும் சொல்லியபடி அடம்பிடித்து அழுதான்.
ஒரு வழியாக சித்தார்த்தைச் சமாதானப்படுத்திய ரித்திகா, தினமும் அவனை வந்து பார்ப்பதாகச் சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினாள்.
வரும் வழியில் தாங்கள் தங்கப்போகும் வீட்டின் அட்ரஸைத் தன்னுடைய அம்மாவுக்கு கால் பண்ணி சொல்லிவிட்டு அவளும் அங்கே கிளம்பிச் சென்றாள். அந்த அட்ரஸுக்கு ரித்திகா வருவதற்கும், அவளுடைய பெற்றோர்கள் வருவதற்கும், சரியாக இருந்தது.
தன்னுடைய அம்மாவையும், அப்பாவையும், லாரியில் இருந்து பத்திரமாக இறக்கிக் கூட்டி வந்து, அந்த பெரிய கேட்டின் முன்னே நின்றாள் ரித்திகா. ரித்திகாவும் அவளுடைய பெற்றோர்களும் அந்தப் பிரம்மாண்டமான கேட்டைப் பார்த்து வியப்பில் திகைத்துப்போய் நின்றனர். அந்தக் கேட்டின் லெஃப்ட் சைடில் “நாராயணன் பேலஸ்” என்று தங்கத்தால் பொறிக்கப்பட்டு அதற்குப் பாதுகாப்புக்கு மேலே பல வேலைபாடுகளுடன் அழகாக இருந்தது.
தங்கள் மகளால் இவ்வளவு பெரிய இடத்தில் தாங்கள் தங்கப் போவதற்கான பெருமிதம் ரித்திகாவின் பெற்றோர்களின் முகத்தில் வெளிப்படையாகத் தெரிந்தது.
அந்தப் பள்ளியில் இருந்தது போலவே அங்கேயும் ஒரு செக்யூரிட்டி ஆபீஸ் இருந்தது. ரித்திகாவும் அவளுடைய பெற்றோர்களும் அந்தச் செக்யூரிட்டி ஆபீசுக்குள் நுழைந்தனர். ரித்திகா அந்தப் பள்ளியில் தனக்குக் கொடுத்த ஐடென்டிட்டி கார்டையும், தன்னுடைய அப்பாயின்ட்மென்ட் லெட்டரையும் எடுத்து அந்தச் செக்யூரிட்டி ஆபீசரிடம் காண்பித்தாள்.
ரித்திகா மற்றும் அவளுடைய பெற்றோர்களின் ஆதார் கார்டை வாங்கி அதை ஸ்கேன் செய்து அவர்களுடைய டீடெயில்ஸ் அனைத்தையும் செக்யூரிட்டி சிஸ்டம் ல் அப்லோட் செய்தார் அந்தச் செக்யூரிட்டி ஆபீசர். பின் அவர்கள் 3 பேருடைய கைரேகையையும் மிஷினில் ஸ்கேன் செய்து அதையும் அப்லோட் செய்தார்.
அவர் இந்த ப்ராசஸ் அனைத்தையும் முடித்துவிட்டு அவர்களுக்கான வீட்டை ஒதுக்கித் தருவதற்கு அரை மணி நேரத்துக்கு மேல் ஆனது. அதுவரை அவளுடைய பெற்றோர்களும், அவளும், செக்யூரிட்டி ஆபீசிலேயே காத்திருந்தனர். அவர்கள் இங்கே செக்யூரிட்டி பலமாக இருக்கும் என்று கேள்விப்பட்டு இருக்கிறார்கள்.
ஆனால் இவ்வளவு தூரம் அனைத்தையும் பார்த்துப் பார்த்துச் செய்வார்கள் என்று கேள்விப்பட்டதில்லை. இப்போது அவர்களுக்குப் புரிந்தது, ஏன் அனைவரும் நாராயணன் குரூப்ஸில் வேலைக்குச் சேர வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள் என்று. நாராயணன் குரூப்ஸுக்குக் கீழே வேலை பார்க்கும் நபர்களுக்குக் கிடைக்கும் சலுகையும், பாதுகாப்பும், வேறு எங்கு வேலை பார்ப்பவர்களுக்கும் கிடைப்பதில்லை.
இங்கு அனைவருக்கும் அவர்கள் வீடு கொடுத்துவிட மாட்டார்கள். வெளியூரிலிருந்து குடும்பமாக வருபவர்களுக்கும், வீட்டில் ஒரே ஆளாக இருந்து சம்பாதித்து தங்கள் ஒட்டுமொத்தக் குடும்பத்தையும் காப்பாற்றும் நபருக்கும், பிழைப்பிற்காக வெளியூருக்குத் தனி நபராக வந்தவர்களுக்கு, ஐந்து நபர்களுக்கு ஒரு வீடு என்னும் வீதம் வீடுகள் ஒதுக்கப்பட்டு இருந்தது. ஒரு அப்பார்ட்மென்ட்க்கு 100 வீடுகள் என அங்கே, A பிளாக் முதல் F பிளாக் வரை அப்பார்ட்மென்ட் வீடுகள் இருந்தன.
இதேபோல் அவர்கள் பிசினஸ் செய்யும் ஒவ்வொரு ஊரிலும் அவர்களுக்குச் சொந்தமான அப்பார்ட்மென்ட் வீடுகள் இருக்கின்றன. நாராயணன் குடும்பத்தினர், ஈரோட்டைச் சேர்ந்தவர்கள் என்பதால், அவர்கள் தங்கும் நாராயணன் பேலஸும் அங்கேயே தான் இருந்தது. அதனால்தான் மற்ற ஊர்களை விட இங்கே இருக்கும் வீடுகளுக்குச் செக்யூரிட்டி அதிகமாக உள்ளது. இதைப்பற்றி எல்லாம் ரித்திகாவும், அவளுடைய பெற்றோர்களும் தங்களுக்குள்ளேயே பேசிக் கொண்டு இருக்கும் போது, அனைத்து வேலையையும் செய்து முடித்திருந்த செக்யூரிட்டி ஆபீசர் ரித்திகாவை அழைத்தார்.
செக்யூரிட்டி ஆபீசர்: “மிஸ். ரித்திகா இது நீங்க உங்க ஃபேமிலியோட தங்கப்போற வீட்டோட டிஜிட்டல் கீ. இந்த டிஜிட்டல் கீயை நீங்க பத்திரமா வச்சுக்கோங்க. இத நீங்க எமர்ஜென்சி நா மட்டும் தான் யூஸ் பண்ணனும். மத்தபடி உங்க வீட்டுக்கு முன்னாடி பிங்கர் பிரிண்ட் அக்சஸ் மெஷின் இருக்கும். அதுல உங்க மூணு பேரோட பிங்கர் பிரிண்ட் மட்டும் தான் யூஸ் பண்ண முடியும். அதை யூஸ் பண்ணி நீங்க வீட்டுக்குள்ள போகலாம். அது ஆட்டோமேட்டிக் டோர். நீங்க உள்ள போயிட்டு டோரை லாக் பண்ணுனா ஆட்டோமேட்டிக்கா லாக் ஆயிடும். உள்ள இருந்து அன்லாக் பண்ணனும்னா நார்மலா ஓபன் பண்ணாலே போதும். உங்களுக்கு இங்கே எந்த ப்ராப்ளம் இருந்தாலும், நீங்க எப்ப வேணாலும், செக்யூரிட்டி ஆபீஸை காண்டாக்ட் பண்ணலாம்.” என்று சொல்லிவிட்டுத் தன்னுடைய கார்டை அவளிடம் கொடுத்தார்.
அங்கிருந்த அனைத்துச் செக்யூரிட்டி ஆபீசர்களும் மிகவும் புரொபஷனல் ஆக இருந்தனர். அந்தச் செக்யூரிட்டி கார்டையும், கீ கார்டையும் பெற்றுக்கொண்டு, செக்யூரிட்டி ஆபீசருக்கு நன்றி சொல்லிவிட்டு, அங்கே இருந்து ரித்திகா தன்னுடைய குடும்பத்துடன், தாங்கள் தங்கப்போகும் D-பிளாக்கில் இருக்கும் இருபத்தி இரண்டாவது வீட்டிற்குச் சென்றாள்.
அவர்கள் தங்கப்போகும் D – பிளாக் அப்பார்ட்மென்ட்க்குச் செல்வதற்கு அவர்கள் சில நூறு மீட்டர்கள் நடந்து செல்ல வேண்டி இருந்தது. அவர்கள் தங்கப் போகும் 22 ஆவது வீடு இரண்டாவது மாடியில் இருந்தது. அதற்கு லிஃப்டின் வழியாகச் சென்றனர். அந்த வீட்டை வந்தடைந்த உடன் தன் கைரேகையை வைத்து அந்த வீட்டைத் திறந்தாள் ரித்திகா. டைல்ஸ் போட்டிருந்த அந்த வீடு ஒரு குடும்பம் தங்குவதற்குத் தாராளமாக இருந்தது. ரித்திகாவின் குடும்பத்திற்கு அந்த வீடு பிடித்து இருந்தது.
அவர்கள் இங்கே வரும் போதே, பழைய தேவையில்லாத பெரிய பொருட்கள் அனைத்தையும் வந்த விலைக்கு விற்றுவிட்டனர். தங்களுடைய பழைய வீட்டில் இருந்து முக்கியமான பொருட்களை மட்டுமே ஒரு லாரிக்குப் பிடிக்கும் அளவிற்கு எடுத்து வந்திருந்தனர். இப்போதுதான் அவர்களுக்கு முக்கியமான வேலை இருக்கின்றது. லாரியில் இருக்கும் அனைத்துப் பொருட்களையும் வீட்டிற்குள் எடுத்து வந்து வைக்க வேண்டும்.
ஒரு பத்து நிமிஷம் ஓய்வெடுத்த அவர்கள், பின் அனைத்துப் பொருளையும் எடுத்து வைக்க ஆரம்பித்தனர். வீட்டின் வாசலில் ரித்திகாவின் அப்பாவும், லிஃப்டின் அருகே ரித்திகாவின் அம்மாவும், நின்று கொள்ள மணி அனைத்துப் பொருட்களையும் எடுத்து கொடுக்க ரித்திகா கீழே இருந்து லிஃப்டின் வழியாக அனைத்துப் பொருட்களையும் எடுத்துக்கொண்டு வந்து தன்னுடைய அம்மாவிடம் கொடுத்துவிட்டுச் சென்றாள். ரித்திகாவின் குடும்பத்தினரும், மணியும், அனைத்துப் பொருட்களையும் எடுத்து வந்து வீட்டிற்கு உள்ளே வைத்துவிட்டு, அதை எல்லாம் அதற்கான இடத்தில் அடக்கி வைப்பதற்கு மணி இரவு 10 மணி ஆகிவிட்டது.
அனைவரும் களைப்பாக இருந்ததால், இதற்கு மேல் உணவு சமைத்துச் சாப்பிடுவது எல்லாம் சாத்தியமற்றது என்று நினைத்த ரித்திகா, தங்களுக்கும், மணிக்கும் சேர்த்து உணவையும் ஆர்டர் செய்தாள். அவள் ஆர்டர் செய்தன வற்றையெல்லாம் கொண்டு வந்த டெலிவரி பாய், அந்தப் பெரிய கேட்டின் வெளியே நின்று கொண்டு ரித்திகாவுக்குக் கால் செய்தார். அவரைச் செக்யூரிட்டி ஆபீஸில் காத்திருக்குமாறு சொல்லிவிட்டு, கீழே மணியுடன் சென்ற ரித்திகா அதை பணம் கொடுத்து வாங்கினாள்.
மணி: “ரித்திகா பாப்பா எனக்கு காலையில ஒரு முக்கியமான சவாரி இருக்கு. அதனால நான் கிளம்புகிறேன் மா.”
ரித்திகா: “என்ன அண்ணா இப்படி சொல்றீங்க? உங்களுக்கும் சேர்த்தி தான் சாப்பாடு வாங்கி இருக்கேன்.
வாங்க சாப்பிட்டு அப்புறமா கிளம்பலாம்.”
மணி: “இல்ல மா; பரவால்ல. நீங்க சாப்பிடுங்க. நான் இப்ப சாப்பிட்டு கிளம்பினா ரொம்ப லேட் ஆயிடும். நான் போற வழியில எங்கயாச்சும் சாப்பிடுகிறேன்.”
இனி தான் எவ்வளவு சொன்னாலும் மணி கேட்கப்போவதில்லை என்று புரிந்துகொண்ட ரித்திகா, அவருக்குத் தர வேண்டிய பணத்தைக் கொடுத்து அவரை வழியனுப்பி வைத்தாள். ரித்திகா தன்னுடைய வீட்டிற்குச் சென்று கொண்டிருக்கும் போது, ஒரு ஆடம்பரமான கருப்பு கார் வேகமாக அவளைக் கடந்து சென்றது. அதைக் கண்ட ரித்திகா, “ச்சே..!! கேட்டுக்கொள்ள வந்தும் இவ்வளவு வீடு இருக்க இடத்தில எவ்வளவு வேகமா போறாங்க.. இந்த பணக்காரங்க எல்லாரும் ஏன் தான் இப்படிப் பொறுப்பு இல்லாம இருக்காங்களோ?” என்று புலம்பியபடியே தன்னுடைய வீட்டை வந்தடைந்தாள்.
வீட்டிற்கு உள்ளே வந்த ரித்திகா இடம் “மணி எங்க மா?” என்று கேட்டார் சுதாகர்.
ரித்திகா: “மணி அண்ணாக்கு நாளைக்கு ஏதோ முக்கியமான சவாரி இருக்குன்னு சொன்னாரு. நானும் சாப்பிட்டு போங்கன்னு சொல்லி கேட்டேன். ஆனா அவரு போயே ஆகனும்னு அடம் பிடிச்சாரு. அதான் அவருக்கு காசு குடுத்து அனுப்பி வச்சுட்டேன்.”
இப்படி ரித்திகாவும், சுதாகரும், பேசிக்கொண்டிருக்க; சமையலறையில் இருந்து வெளியே வந்த ரேவதி, “அப்பாவும், பொண்ணும் பேசினதெல்லாம் போதும். போயி சாப்பிட்டு படுங்க. நாளைக்கு காலையில கிளம்பி அவ ஸ்கூலுக்கு போக வேண்டாமா?” என்று கடிந்துகொள்ள அனைவரும் அமைதியாகக் கப் சிப் என்று சாப்பிட்டுப் படுத்துக் கொண்டனர்.
அதே நேரம் நாராயணன் பேலஸில்..
தன்னுடைய ஆடம்பரமான கருப்பு காரை கார் பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு, வீட்டின் உள்ளே வந்தான் வருண் நாராயணன்.
33 வயதான வருண்; ஆறரை அடி உயரத்தில் இருப்பவன், கம்பீரமாக வெள்ளை சட்டை மற்றும் கருப்பு ஷூட் மற்றும் பேண்ட் அணிந்து இருந்தவன், இறுக்கமான முகத்துடன் உள்ளே வந்தான். அவன் உள்ளே வரும் போது, அவனுக்காக அவனுடைய தாய் செண்பகம் சோபாவில் அமர்ந்தபடி காத்திருந்தாள்.
அந்த பெரிய லிவ்விங் ரூமில் செண்பகத்தைத் தவிர வேறு யாரும் இல்லை. செண்பகத்தின் அருகே சென்று அமர்ந்த வருண் நாராயணன், ஃபொர்மலிட்டிக்காகப் புன்னகைத்தான்.
அது அவன் பார்த்து பார்த்து கட்டிய அரண்மனையாக இருந்தாலும் கூட, அவனுக்கு அங்கே இருக்க பெரிதாக விருப்பம் இல்லை என்பதைப் போல இருந்தது அவனுடைய நடவடிக்கை.
நேசம் தொடரும்…
(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் நன்றி 🙏)