அத்தியாயம் 153
“அப்படியே உன்னை இதுக்கு மேல உருட்டி விட்ருவேன் பாத்துக்கோ!” என்று மைக்கேல் தரையில் ஊற்றி கிடந்த முட்டையை காட்டி மீராவை விரட்ட, “சாரி சார் சாரி சார் கோபப்படாதீங்க! இருங்க, நான் உங்களுக்கு ஹெல்ப் பண்றேன்.” என்று சொல்லிவிட்டு அவன் அருகில் மெல்ல நடந்து சென்று அவன் கையைப் பிடித்து அவனை தூக்க முயற்சி செய்தாள்.
அப்படியே அவளையும் பிடித்து இழுத்து அதற்குள் தள்ளி விட வேண்டும் என்று அவன் மனம் துடித்தாலும் அவளை பார்க்கும் போது அவனுக்கு ஏதோ பாவமாக இருந்ததால் “போனா போய் தொலையட்டும்.” என்று நினைத்து அவளை கஷ்டப்படுத்தாமல் விட்டுவிட்டான்.
அவன் உடலில் ஆங்காங்கே முட்டை ஒட்டிக் கொண்டிருந்ததால் அவன் மீது உரசியும் உரசாமலும் அவனை கை தாங்கலாக அவனது ரூமிற்கு அழைத்துச் சென்ற மீரா “இங்க மெடிக்கல் ரூம்ல டாக்டர்ஸ் இருப்பாங்கன்னு நினைக்கிறேன். நான் அவங்களை வர சொல்லட்டுமா சார்?” என்று அக்கறையுடன் கேட்டாள்.
“தள்ளிவிடுறதையும் தள்ளிவிட்டுட்டு எனக்கு ட்ரீட்மெண்ட் பார்க்க ஹெல்ப் பண்ற மாதிரி நடிச்சு சிம்பதி கிரியேட் பண்றியா?” என்று கேட்ட மைக்கேல் அவளை முறைத்து பார்க்க, “அச்சச்சோ.. அப்படி எல்லாம் இல்ல. எனக்கு அப்படி யோசிக்க கூட தெரியாது. நீங்க ஏன் என்னை தப்பானவளா இருப்பேன்னு நினைக்கிறீங்க? உங்களுக்கும் எனக்கும் என்ன சார் இருக்கு? நான் ஏன் உங்களை கஷ்டப் படுத்தனும்னு நினைக்க போறேன்?” என்று கேட்டாள் மீரா.
அவளை மேலும் கீழும் ஆராய்ச்சி பார்வை பார்த்த மைக்கேல் “அது சரி, நான் அங்க வழுக்கி விழுந்ததை நீ யார் கிட்டயாவது சொல்லுவியா?” என்றபடி தன் புருவத்தை உயர்த்தி அவளை பார்க்க, அந்த நொடியை நினைத்து பார்த்து லேசாக புன்னகைத்த மீரா “மத்தவங்க கிட்ட சொல்ற அளவுக்கு அது என்ன அவ்வளவு பெரிய விஷயமா சார்? நீங்க சொல்லக் கூடாதுன்னு சொல்லிட்டா நான் யார் கிட்டயும் சொல்ல மாட்டேன்.” என்றாள்.
“ஓஹோ அப்ப நான் சொல்ல கூடாதுன்னு உன்ன மிரட்டலைனா நீயே வாலண்டியரா போய் எல்லார் கிட்டயும் இத பத்தி சொல்லி என்னை வைத்து ஃபன் பண்ணி என்ஜாய் பண்ணிட்டு இருப்ப அப்படித் தானே!” என்று மைக்கேல் கேட்க, “யார்டா இவன் சரியான மாக்கானா இருப்பான் போல இருக்கு.. நம்ம என்ன சொன்னாலும் அதுல ஒரு குத்தம் கண்டுபிடிச்சு அது ஏன் அப்படி இது ஏன் இப்படின்னு கொஸ்டின் கேட்டு சாவடிச்சுக்கிட்டே இருக்கான்! இவன் கிட்ட பேசி பேசியே நம்ம body-ல இருக்க எனர்ஜி எல்லாம் போயிரும் போல!” என்று நினைத்த மீரா “நான் என்ன சொன்னாலும் நீங்க என்ன தப்பா தான் நினைக்க போறீங்க. அப்புறம் என் கிட்ட ஏன் சார் கொஸ்டின் கேக்குறீங்க? நான் ஆன்சர் பண்றதுக்கு முன்னாடியே நான் தப்பான பொண்ணு தானே நீங்களே ஒரு முடிவுக்கு வந்துருங்க பரவால்ல.
இன்னும் கொஞ்ச நேரம் இப்படியே அந்த முட்டையோட இருந்தீங்கன்னா அது காஞ்சி போயிரும். அப்புறம் நீங்க எத்தனை தடவை சோப்பு போட்டு குளிச்சாலும் அதோட ஸ்மெல் போகாது. நீங்க முதல்ல போய் ரெப்ரெஷ் ஆகிட்டு வாங்க. அதுக்குள்ள நான் போய் நீங்க கேட்ட மாதிரி சிக்கன் பிரியாணி செஞ்சு எடுத்துட்டு வரேன்.” என்றவள், மீண்டும் தன்னிடம் அவன் ஏதேனும் கேட்பதற்கு முன்பாக இடத்தை காலி செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் வேகமாக அங்கிருந்து சென்று விட்டாள்.
“பார்த்து போ லூசு! என் கிட்ட இருந்து தப்பிச்சு போறேன்னு எங்கேயாவது போய் என்ன மாதிரி நீயும் வழுக்கி கீழே விழுந்துறாத.” என்று மைக்கேல் குரல் கொடுக்க, “எனக்கு கண்ணு நல்லா தெரியும் சார். நான் என்ன பாத்துக்குவேன். டோன்ட் வரி. You take care.” என்ற மீரா சிட்டாக பறந்து அங்கிருந்து சென்று மறைந்து விட்டாள்.
“அவளுக்கு கண்ணு தெரியும்ன்னா, அப்ப எனக்கு தான் கண்ணு தெரியாம நான் போய் வழுக்கி விழுந்துட்டேன்னு என்ன பாத்து கிண்டலா சொல்லிட்டு போறாளா அவ? இருக்கு அவளுக்கு, இன்னிக்கு நான் அவளுக்கு பனிஷ்மென்ட் கொடுக்காம அவளை சும்மா விடவே மாட்டேன்.” என்று நினைத்த மைக்கேல் முதல்ல குளிச்சிட்டு அப்புறம் மீராவை காண செல்வதற்காக வேகமாக எழுந்து அவசர அவசரமாக தனது அறை கதவை நோக்கி நடந்தான். அவனது கெட்ட நேரமோ என்னவோ மீண்டும் வழுக்கி தரையில் விழுந்தான்.
“Oh God, அவ சரியான நெகட்டிவ் எனர்ஜியா இருப்பா போல இருக்கு.. அவளை பார்த்ததுல இருந்து எனக்கு எல்லாமே கெட்டதா நடக்குது. முதல்ல அந்த சைத்தானை இங்க இருந்து துரத்தணும்.” என்று நினைத்த மைக்கேல் தன் இடுப்பை பிடித்துக் கொண்டு மெல்ல எழுந்து குளிப்பதற்காக சென்றான்.
மாத்திரையின் விளைவால் அர்ஜுன் உறங்கிக் கொண்டிருக்க, தானும் ஒரு தனி அறையில் விஐபி ஏரியாவில் ஹாஸ்பிடலில் தங்கி விட்டாள் தேன்மொழி. விஜயாவிடம் இருந்து அவளுக்கு தொடர்ந்து கால் வந்து கொண்டே இருக்க அதை அட்டென்ட் செய்து அவள் ஹலோ என்று சொல்லி முடிப்பதற்குள், “ஏண்டி நீ பாட்டுக்கு வயித்துல புள்ளைய வச்சுக்கிட்டு அங்க கிளம்பி போயிட்ட.. உனக்கு என்ன ஆச்சுன்னு பார்க்க வரலாம்னு பார்த்தா இங்க வாசல்ல நிக்கிற ஆளுங்க என்னை வெளிய போகவே விட மாட்டேங்குறாங்க.
மாப்பிள்ளைக்கு அடிபட்டுருச்சுன்னு டிவி நியூஸ்ல சொன்னதை பார்த்ததுல இருந்து நான் உங்க எல்லாருக்கும் மாத்தி மாத்தி ஃபோன் பண்ணிட்டு இருக்கேன். ஒருத்தரும் எடுக்க மாட்டேங்கறீங்க! என்ன தான் நடக்குது அங்க? இப்ப மாப்பிள்ளை எப்படி இருக்காரு? நீ எங்க இருக்க?” என்று அடுக்கடுக்காக கேள்விகளை அவளிடம் கேட்டுக் கொண்டு இருந்தாள் விஜயா.
“அவர் இப்ப நல்லா தான் இருக்காரு அம்மா. நான் அவர் கூட ஹாஸ்பிடல்ல தான் இருக்கேன். அத்தையும் இங்க தான் இருக்காங்க. அவருக்கு மேஜரா எந்த இஸ்யூவும் இல்லாததுனால நாளைக்கு ஈவினிங் எல்லாம் ஒன்ஸ் செக் பண்ணிட்டு அவரை டிஸ்டார்ஜ் பண்ணிடுவேன்னு சொன்னாங்க.
நான் காலையில கிளம்பி வீட்டுக்கு வரேன். அங்க வந்து எல்லாத்தையும் கிளியரா சொல்றேன். எனக்கு இப்ப டயர்டா இருக்கு! நான் தூங்கவா?” என்று தேன்மொழியை கேட்க, “எல்லாம் அந்த கடவுளோட ஆசிர்வாதம் தான். நான் வேண்டின சாமி நம்மளை கைவிடல. இதுக்கு அப்புறமாவது மாப்பிள்ளை கூட சண்டை போடாம அவர் கூட சேர்ந்து சந்தோஷமா வாழ்ற வழியை பாரு.
வாழ்க்கை திரும்பத் திரும்ப உனக்கு வாய்ப்பு குடுத்துகிட்டே இருக்காது. மாப்பிள்ளை மாதிரி ஒரு தங்கமான மனுஷனை எங்கேயும் பார்க்க முடியாது. நீ சின்ன புள்ள தனமா என்ன பண்ணாலும் அந்த மனுஷன் எவ்வளவு பெரிய ஆளா இருந்தாலும் உன்ன பொறுத்துக்கிட்டு நீதான் முக்கியம்னு நெனச்சு உன் கூட வாழ்றாரு. நீ அதை நினைச்சு பாக்கணும் தேனு சும்மா சும்மா அவர் கூட சண்டை போட்டு அவரை விட்டு பிரிஞ்சு போகணும்னு நினைக்க கூடாது.” என்று தன் மகளுக்கு அறிவுரை வழங்கினாள் விஜயா.
அவள் சொல்வதைப் போல அர்ஜுன் தன்னிடம் எப்போதும் அவனது அதிகாரத் திமிரையோ, பணத் திமரையோ காட்டியது இல்லை என்பதை தாண்டி அவளை பல தருணங்களில் இந்த உலகில் உள்ள அனைவரையும் விட அவள் தான் அவனுக்கு முக்கியமானவள் என்று உணர வைத்திருக்கிறான். முக்கியமாக இன்று அவள் கால்களில் கூட அவன் விழுந்திருக்கிறான் என்றெல்லாம் நினைத்து பார்த்த தேன்மொழி “இன்னைக்கு அர்ஜுன் பண்ணதை பத்தி நான் அத்தை கிட்ட சொன்னா கூட அவங்க எதுவும் கண்டுக்க மாட்டாங்க. ஆனா அம்மா கிட்ட சொன்னா அவ்வளவு தான் நான் தொலைஞ்சேன்.” என்று யோசித்தவாறு தனக்கு தூக்கம் வருவதாக சொல்லி அந்த அழைப்பை துண்டித்து விட்டாள்.
உண்மையில் கர்ப்பமாக இருப்பதால் அவளுக்கு மிகவும் சோர்வாக தான் இருந்தது. அவள் ரெகுலராக சாப்பிடும் மருந்து மாத்திரைகளை அந்த ஹாஸ்பிடலில் உள்ள மெடிக்கலில் சாப்பிட்டு முடித்தவுடன் வாங்கி போட்டுக் கொண்ட தேன்மொழி கண்களை மூடி படுத்தாள். அவளுக்கு அர்ஜுனின் அருகில் அவனை கட்டிப்பிடித்துக் கொண்டு உறங்கினால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது.
இருப்பினும் உடல்நிலை சரி இல்லாமல் ஹாஸ்பிடலில் அட்மிட் ஆகி ரெஸ்ட்டில் இருப்பவனை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று நினைத்து தலையணையை எனது தலைவனாகி இறுக்கி அணைத்துக் கொண்டு உறங்க தொடங்கினாள்.
நள்ளிரவு நேரத்தில் தேன்மொழி அயர்ந்து உறங்கிக் கொண்டிருக்கும்போது ஒரு சிறிய கை தன்மீது வந்து விழுவதைப்போல உணர்ந்ததால் அவள் திடுக்கிட்டு தன் கண்களை திறந்து பார்த்தாள். அவள் அருகில் யாரோ இருப்பதாக அவளுக்கு தோன்ற, சட்டென்று லைட்டை போட்டு திரும்பி பார்த்தாள் தேன்மொழி. ஆருத்ரா தான் அவளை இறுக்கமாக கட்டிப்பிடித்துக் கொண்டு படுத்திருந்தாள்.
அவளது இது மாதிரியான அணைப்புகளை கடந்த சில நாட்களாகவே மிகவும் மிஸ் செய்திருந்த தேன்மொழிக்கு அவளை தன் அருகில் கண்டவுடன் ஒரு நொடி ஆனந்த கண்ணீரே வந்துவிட்டது. அதனால் அவள் லைட்டை ஆஃப் செய்துவிட்டு தானும் ஆருத்ராவை கட்டிப்பிடித்துக் கொண்டு படுக்க,
“உங்கள டிஸ்டர்ப் பண்ணதுக்கு சாரி. எனக்கு இங்க ஹாஸ்பிடல்ல இருக்கிறதுக்கு பயமா இருக்கு. சித்தார்த் அண்ணா பாட்டி கூட தூங்கிட்டு இருக்கான். அதான் நான் இங்க வந்தேன்.” என்று மெல்லிய குரலில் தன் கண்களை மூடிய நிலையில் அப்படியே சொன்னாள் ஆருத்ரா.
“இல்லடா.. எனக்கு டிஸ்டர்ப் எல்லாம் ஆகல. மம்மி கிட்ட நீ எதுக்கு சாரி கேக்குற? தேவை இல்லாம யாருன்னு பார்க்கிறேன்னு லைட் போட்டு நான் தான் உன்னை எழுப்பி விட்டுட்டேன் சாரி. நீ தூங்கு!” என்ற தேன்மொழி ஆருத்ராவை தன்னுடன் சேர்த்து அணைத்துக் கொண்டு அவளது முதுகில் தட்டிக் கொடுத்து தூங்க வைத்தாள்.
சில நிமிடங்களுக்கு பிறகு தூங்கிக் கொண்டு இருந்த சித்தார்த் தங்களுக்கு அருகில் ஆருத்ரா இல்லை என்பதால் பதட்டம் அடைந்து அவளை தேடிக் கொண்டு அங்கும் இங்கும் சுற்றிக் கொண்டு இருந்தான். பின் அவன் எதற்கும் சென்று பார்ப்போமே என நினைத்து தேன்மொழி இருந்த ரூமிற்கு சென்றான். அங்கே ஆருத்ராவும் தேன் மொழியும் ஒருவரை ஒருவர் கட்டி அணைத்து நிம்மதியாக படுத்து உறங்கிக் கொண்டு இருந்ததை பார்த்தவுடன் அவன் கண்கள் ஓரமாக கண்ணீர் துளிர்விட்டது.
அதை துடைத்துக் கொண்ட சித்தார்த் எதுவும் பேசாமல் மீண்டும் தனது ரூமிற்கு சென்று ஜானகியுடன் படுத்துக் கொண்டான்.
– மீண்டும் வருவாள் 💕
(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)