அத்தியாயம் 46
சரிங்கிற விஷ்வா, தன்னோட ஆட்களுக்கு மெசேஜ் அனுப்பினான். பஞ்சாயத்துல மாத்தி மாத்தி எல்லாரும் பேசிட்டிருக்க, ஊர் பெரிசுகள், “இதோ வருவான், அதோ வருவான்னு எவ்வளவு நேரமா சொல்லிக்கிட்டே இருப்பீங்கடா..!! எங்களுக்கு என்னமோ இதெல்லாம் சரியாப் படல. இன்னும் கொஞ்ச நேரத்துல வெற்றி இங்க வராட்டி, அவனை நீங்கதான் ஏதோ பண்ணிட்டீங்கன்னு நெனச்சு, நாங்க வேற மாதிரி முடிவெடுக்க வேண்டியிருக்கும்.”ன்னு காளீஸ்வரனை எச்சரிச்சாங்க.
அப்போ, பழைய ஓடாத தியேட்டர்ல ராமசாமியோட பாதுகாப்புல அடைஞ்சு கெடந்த வெற்றியை மீட்டு, மணியோட விஷ்வாவோட ஆளுங்க அங்க கூட்டிட்டு வந்தாங்க.
வெற்றியோட மூஞ்சில கொஞ்சம் அடிபட்டிருந்ததால, பஞ்சாயத்துல இருந்தவங்க “உனக்கென்னப்பா ஆச்சு?? உங்க வீட்ல இருக்கிறவங்களே, இந்தப் புள்ளையை விட்டுட்டு ஓடிப்போகச் சொல்லி உன்னை அடிச்சுக் கொடுமைப்படுத்தினாங்களா??”ன்னு கேட்டாங்க. மேகாவை ஒரு பார்வை பார்த்துட்டு, பொதுவா எல்லாரையும் கும்பிட்டுப் போட்ட வெற்றி, “எங்க குடும்பத்துல யாருக்கும் அந்த புத்தி வராதுங்க ஐயா. நேத்து நைட்டு நான் சென்னையில இருந்து கெளம்பும்போதே, மேகாவுக்கு என்ன பிடிக்கலைன்னு தெரிஞ்ச அப்புறம், அவ எனக்கு வேணாம்னு எல்லார்ட்டயும் சொல்லிட்டுத் தான் வந்தேன்.
நான் விடியக் காத்தால ஊருக்கு வரும்போது, எனக்கு வீட்டுக்குப் போக சங்கடமா இருந்துச்சுன்னு, நம்ம கோயில் தெப்பக் குளத்துக்கிட்ட உக்காந்திருந்தேன்.
அப்போ முனியாண்டி ஐயாவோட ஆளுங்க, என்னைக் கடத்திட்டுப் போய், பழைய தியேட்டர்க்குள்ள அடைச்சு வச்சுட்டாங்க.
இப்போ இவங்கெல்லாம் வந்து என்னைக் காப்பாத்தலைன்னா, நான் அங்கயேத்தான் கெடந்திருப்பேன்.”னு சொன்னான்.
அதனால எல்லாரும் இப்போ முனியாண்டியைப் பார்க்க, “ஐயா! இவன் சொல்றதை யாரும் நம்பாதீங்க. எப்படி இருந்தாலும் இவனுங்க எல்லாரும் ஒரே குடும்பம் தானே? அதான் மாமன்காரனை இவன் விட்டுக் கொடுக்காமப் பேசுறான்.”னு அவன் சொல்ல, “அப்போ இவரு உங்க ஆளுதானே? இவர் சொல்றதை உண்மைன்னு ஒத்துப்பீங்களா??”ன்னு கேட்ட முத்து, விஷ்வாவோட ஆட்களோட ராமசாமியை அங்க கூட்டிட்டு வந்தான்.
கையில துப்பாக்கியோட வந்தவங்களைப் பார்த்த அடுத்த செகண்டே, உசிரு பயத்துல அவங்ககிட்ட ஒரு அடிகூட வாங்காம, ஏற்கனவே அப்ரூவர் ஆகிருந்த ராமசாமி, “என்னை மன்னிச்சிடுங்க ஐயா… நான் பல வருசமா முனியாண்டி ஐயாவுக்கு விசுவாசமா இருந்துட்டேன். அதனாலதான் அவர் இப்படிச் செய்யச் சொல்லும்போது, என்னால செய்யாம இருக்க முடியலை. நான்தான் எங்க தோட்டத்துல வேலை பார்க்குற ஆளுங்களை வச்சு, வெற்றியை கடத்தி பழைய தியேட்டர்க்குள்ள அடைச்சு வைக்கச் சொன்னேன். ஆனா, அதை இவர் சொல்லித்தாங்க செஞ்சேன்”னு சொன்னாரு.
ராமசாமியோட மத்த ஆளுங்களும் உசிரு பயத்துல முனியாண்டிக்கு எதிராவே சாட்சி சொல்ல, இப்போ எல்லாமே அவனுக்கு எதிராத் திரும்பிடுச்சு.
அதனால அவன் தலைகுனிஞ்சு நிக்க, “ஊர் கவுரவம், கொடுத்த வாக்கு அப்படீ இபடின்னு பேசிட்டு, கடைசியில நீங்க இப்படிப் பண்ணியிருக்கக் கூடாது முனியாண்டி.”ன்னு பஞ்சாயத்துல இருந்த பெரிசுகள், “உன்னையும் உன் குடும்பத்துல இருக்கிறவங்களையும் பத்து வருசத்துக்கு நம்ம ஊரை விட்டுத் தள்ளி வைக்கிறோம். அப்பத்தான் இனிமே எல்லாரும் பித்தலாட்டம் பண்ணக் கூடாதுன்னு நெனப்பாங்க.”ன்னு தீர்ப்பு சொன்னாங்க.
அதனால தலைகுனிஞ்சு முனியாண்டி, தன்னோட குடும்பத்தோட பஞ்சாயத்தை விட்டு வெளியில போக, “நான் இதெல்லாம் வேணாம் வேணாம்னு எத்தனை தடவை சொல்லிருப்பேன். கேட்டீங்களா நீங்க? இப்போ தண்டனை கிடைச்சிருச்சுல்ல! நல்லா அனுபவிங்க. அப்பவாவது உங்களுக்குப் புத்தி வரட்டும். உங்கூட இருக்குற பாவத்துக்கு நானும் சேர்ந்து எல்லாத்தையும் அனுபவிக்கிறேன்”னு வெளிப்படையாவே வாய்விட்டுப் புலம்பிக்கிட்டே, தன் குடும்பத்தோட போனா மித்ராவோட அம்மா.
தொடரும்…