அத்தியாயம் 37
விஷ்வாவுடன் கார்ல மதுரைக்குப் போய்க்கிட்டு இருந்தா மேகா. ரொம்ப நேரமா விஷ்வாவை சைட் அடிச்சிக்கிட்டே இருந்த மேகா, காலையிலிருந்து அவள் ஏகப்பட்டதைப் பார்த்ததால உடம்பாலயும் மனசாலயும் சோர்வாகிப் போய் தன் கண்ணை மூடி அப்படியே தூங்க ஆரம்பிச்சிருந்தா.
அவள் தூங்கும்போது அவளோட வாய் ‘ஆஆஆ’ன்னு திறந்தபடி இருக்க, அவளைப் பார்த்துச் சிரிச்ச விஷ்வா, “சரியான லூசுடீ நீ”ன்னு நினைச்சு அவள் வாயை மூடிட்டு, அவள் உக்காந்திருந்த சீட்டோட அட்ஜஸ்ட்மென்ட்ட மாத்தி சீட்ட சாய்ச்சு அவளை அப்படியே படுக்க வெச்சான்.
இப்படியே அவங்களோட பயணம் தொடர, மத்தவங்க எல்லாரும் விடியற்காலை 5 மணி சுமாருக்கு மதுரையில் இருக்கிற மேகாவோட கிராமத்துக்குப் போயிருக்க, நடுவுல கார் நிறுத்தி நிறுத்தி வந்ததால ஒரு மணி நேரம் தாமதமாத் தான் விஷ்வா வந்து சேர்ந்தான். அவனுக்கு முன்னாடியே வீட்டுக்குப் போயிருந்த ஆண்கள் நடந்ததை வீட்ல இருந்த மத்தவங்க கிட்ட சொல்லியிருந்ததால, “ஹே மாப்பிள்ளை வீட்டுக்கு வர்றாரு…!! எல்லாரும் ரெடியா இருங்க. மாப்பிள்ளையையும் பொண்ணையும் தடபுடலா வரவேற்கணும்”ன்னு காளீஸ்வரன் முன்னாடியே சொல்லி இருந்தாரு.
“ஆமாமா, நம்ம வீட்டு மாப்பிள்ளை ரொம்பப் பெரிய ஆளு. அதனால நம்மளும் அவங்களுக்கு ஒண்ணும் குறைஞ்சவங்க இல்லன்னு தெரியப்படுத்துற மாதிரி எல்லாத்தையும் சிறப்பா செஞ்சுடணும்!”ன்னு கத்திக்கிட்டு எல்லாரையும் வேலை வாங்கினபடி அங்கயும் இங்கயும் சுத்திக்கிட்டு இருந்தான் மணிகண்டன். விஷ்வாவோட கார் மேகாவோட வீடு இருக்கிற தெருவுக்குள்ள நுழையும்போதே “மாப்பிள்ளை வந்துட்டாரு..!! மாப்பிள்ளை வந்துட்டாரு!!”ன்னு ஒருத்தன் கத்திக் கிட்டே ஓடி வர, தன் தோளில் இருந்த 10000 வாலா சரவெடியை வாசலுக்கு நடுவுல போட்ட மணி அதைப் பத்த வெச்சான்.
அதனால விடியற்காலை நேரத்தோட அமைதியான சமயத்துல அந்த சரவெடி ‘படபட’ன்னு வெடிக்க, ஆழ்ந்த தூக்கத்துல இருந்த மேகா “ஐயையோ என்னாச்சு!!”ன்னு கேட்டபடி பதறியடிச்சு எழுந்து உக்காந்தா. “ஏய் வெடிதான்டீ வெடிக்கிறாங்க!! இதுக்கு ஏன் இவ்ளோ ஷாக் ஆகுற?”ன்னு விஷ்வா கேக்க, கார் ஜன்னல் வழியா வெளிய எட்டிப் பார்த்த மேகா “இது எங்க ஊருதானே?”ன்னு அரைத் தூக்கத்துல கேட்டா.
“ஏன், உங்க ஊரு எப்படி இருக்கும்னு உனக்கே மறந்திருச்சா? இப்ப எதுக்கு சம்பந்தமே இல்லாம காலங்கார்த்தால உங்க வீட்டு வாசல்ல இப்படி வெடி வெடிக்கிறாங்க?”ன்னு கேட்டான் அவன்.
“நீங்க எங்க வீட்டுக்கே வந்தது இல்லையே!! அப்புறம் எப்படி கரெக்டா இதுதான் எங்க வீடுன்னு சொல்றீங்க?”ன்னு ஆச்சரியமா மேகா கேக்க, “ஏண்டீ என்னப்பத்தி நீ என்னதான் நெனச்சிட்டு இருக்க? உன்ன நான் மேரேஜ் பண்ணிக்கப் போறேன்னு மீடியாவுல அனௌன்ஸ் பண்ணிட்டு, உன்னையப் பத்தி இப்ப வரைக்கும் எதுவும் தெரியாமயா இருப்பேன்?”ன்னு கேட்டான் விஷ்வா.
“ஓஹோ, அப்போ என்னப்பத்தி எல்லா இன்வெஸ்டிகேஷனும் பண்ணிட்டுத் தான் எல்லாமே பண்றீங்களா? நீங்க சொன்னது கரெக்ட் தான். நான் சரியான லூசு. நான்தான் எதைப் பத்தியும் பெருசா யோசிக்காம, உங்களை ஒரே ஒரு கிஸ் பண்ணிட்டு கடைசியில உங்களால மீடியாவுல உங்களை லவ் பண்றேன்னு சொல்லிட்டேன். இப்போ இதெல்லாம் இங்க வந்து நிக்குது…”ன்னு மேகா அழுதுக்க, “நீ என்னமோ என்ன வேண்டா வெறுப்பா கல்யாணம் பண்ணிக்கிற மாதிரி நடிக்காத டி. நீ தூங்குறதுக்கு முன்னாடி என்ன அப்படியே திங்கிற மாதிரி பாத்துட்டு இருந்ததை எல்லாம் நான் நோட் பண்ணிட்டுத் தான் இருந்தேன்”ன்னான் விஷ்வா.
அப்ப விஷ்வாவோட பாடிகார்டுகளால அவனோட கார் கதவு திறக்கப்பட, ரெண்டு பேரும் வெளிய போனாங்க. விடியறதுக்குள்ள அந்த கிராமத்துல இருக்கிற மேகாவோட பெரிய வீடு பிரம்மாண்டமா பல வண்ணப் பூக்களாலயும், லைட்டுகளாலயும் அலங்கரிக்கப்பட்டு விழாக்கோலம் பூண்டு ஜொலிச்சுக் கிட்டு இருந்துச்சு.
அந்தப் பெரிய வீட்டை மேலும் கீழும் பார்த்த விஷ்வா, “என்ன டி இது!! இந்த வீடு சந்திரமுகியில வர்ற பேய் வீடு மாதிரியே இருக்கு!”ன்னு கிண்டலா கேக்க, “சும்மா எதையாவது சொல்லணும்னு சொல்லாதீங்க. நீங்க இருக்கிறது பங்களான்னா, நான் பொறந்தது பேலஸ்ல… இது மதுரையை ஆண்ட மகாராஜா அந்தக் காலத்துல இங்க வரும்போது தங்குறதுக்காகக் கட்டுனது.
மன்னராட்சி காலமெல்லாம் முடியும்போது எங்க தாத்தாவுக்குத் தாத்தா இந்த அரண்மனையை வாங்குனாரு. அப்போ இருந்து இங்க இருக்கிறது ஒரு பெரிய கௌரவமா நெனச்சு நாங்க எல்லாம் வாழ்ந்துகிட்டு இருக்கோம். கவர்மெண்ட்ல இருந்து இது பாதுகாக்கப்பட வேண்டிய சின்னம்னு சொன்னதால, நாங்க இதை பெருசா யூஸ் பண்ணாம அப்படியே விட்டுட்டு பக்கத்துல இன்னொரு வீட்டைக் கட்டி குடியிருக்கோம்”ன்னு அவங்க அரண்மனையோட ஹிஸ்டரியைச் சொன்னா மேகா.
தொடரும்..