அத்தியாயம் 84
இரவு 9:00 மணி இருக்கும். மேகா வீட்ல எல்லாரும் ஒண்ணா உட்கார்ந்து சாப்பிட்டுட்டு இருந்தாங்க. அப்போ சாப்பாடு பரிமாறிட்டு இருந்த வசந்தி, “ஆமாமா.. அவளை அப்படி பார்த்த உடனே எனக்கு ஒரு நிமிஷம் பயமே வந்துடுச்சு. அப்புறம் என்ன ஏதுன்னு விசாரிச்சா, சின்ன பிள்ளை மாதிரி புருஷன் கூட சேர்ந்து விளையாடிட்டு இருந்தேன்னு சொல்றா! எனக்கு சிரிப்பா வந்துடுச்சு. இந்த காலத்துப் பிள்ளைங்கள எல்லாம் என்ன சொல்றதுன்னே தெரியல.. புதுசு புதுசா என்னென்னமோ பண்றாங்க. நாம எல்லாம் நம்ம வீட்டுக்காரர்கிட்ட வாய் திறந்து பேசுறதுக்கே இப்ப வரைக்கும் பயப்படுறோம். ஒருவேளை நாமளும் லவ் மேரேஜ் பண்ணிருந்தா இப்படி எல்லாம் இருந்திருக்கலாமோ என்னமோ..!!” அப்படின்னு அங்க இருந்த மத்த பொண்ணுங்ககிட்ட சொல்லி, விஷ்வா – மேகாவோட மானத்தை கப்பலேத்தி ஊர் ஊரா அனுப்பிட்டு இருந்தாங்க.
ஒரு ஓரமா மேகா கூட உட்கார்ந்து சாப்பிட்டுட்டு இருந்த விஷ்வா, இதையெல்லாம் கண்டுக்காம போன்ல ஏதோ நோண்டிட்டு இருந்தான். அவனோட தொடையில நல்லா கிள்ளி வச்ச மேகா, “இங்க பாருங்க, நான் அப்பவே சொன்னேன்ல.. அண்ணி ஒரு ஓட்டை வாய், எல்லார்கிட்டயும் நடந்ததை சொல்லிடுவாங்கன்னு. அதுக்குள்ள வேலையை ஆரம்பிச்சிட்டாங்க பார்த்தீங்களா?” அப்படின்னு கோபமா சொன்னா.
“ஆஆஆ.. சனியனே.. வலிக்குதுடி! அவங்க யார்கிட்டயும் சொல்லக்கூடாதுன்னா, போய் அவங்ககிட்ட கேளு. அதுக்கு எதுக்குடி என்னை கிள்ளுற? விஷ்வான்னா உனக்கு அவ்வளவு இளக்கமா போயிடுச்சா?” அப்படின்னு விஷ்வா கோபமா கேட்டான்.
“நல்லா வலிக்கட்டும். நான் அவங்ககிட்ட போய் சொல்லாதீங்கன்னு சொன்னா, வேணும்னே இன்னும் நாலு பேர்கிட்ட சேர்த்து சொல்லுவாங்க. எனக்கு தேவையா இது? எல்லாம் உங்களால தான். அதனால இந்த மேட்டர் ஞாபகம் வரும்போது எல்லாம், யாராவது கிண்டல் பண்ணும்போதெல்லாம் நான் உங்களைத்தான் அடிப்பேன்” அப்படின்னு மேகா சொல்ல, “அட கொடூர குரங்கே.. இத்தனை நாளா இந்த உலகம் நான்தான் டெரர் பீஸ்ன்னு பொய் சொல்லி ஏமாத்திட்டு இருக்கு. நீ என்னை விட பெரிய சைக்கோவா இருக்க! இன்னொரு தடவை என்னை அடிச்ச, உங்க அண்ணனை கூப்பிட்டு பஞ்சாயத்து பண்ணி நியாயம் கேப்பேன் பாரு. எங்க.. அந்த மிஸ்டர் மீசையை காணோம்?” அப்படின்னு விஷ்வா கண்ணாலேயே காளீஸ்வரனை தேட ஆரம்பிச்சான்.
“போய் சொல்லுங்க.. யார்கிட்ட வேணாலும் சொல்லி நியாயம் கேளுங்க. பஞ்சாயத்து கூட்டுங்க. நீங்க சொன்னா நானும் சொல்லுவேன்” அப்படின்னு மேகா சொல்ல, “நீ என்ன சொல்லுவ?”ன்னு விஷ்வா வேகமா கேட்டான்.
“சொல்றதுக்கு நிறைய இருக்கு. என் மூஞ்சில டிராயிங் வரைஞ்சதை சொல்லுவேன், அப்புறம் எல்லாரும் இருக்கும்போதே பொறுக்கி பையன் மாதிரி என் இடுப்புல கிள்ளுனீங்களே அதையும் சொல்லுவேன். கல்யாணத்துக்கு முன்னாடி நான் குளிச்சிட்டு வரும்போது ரூமுக்குள்ள வந்தீங்களே.. இதெல்லாம் நானும் சொல்லுவேன். நீங்க செஞ்ச திருட்டுத்தனத்தை எல்லாம் சொல்லணும்னா லிஸ்ட் பெருசா போயிட்டே இருக்கும்”னு கண்ணை உருட்டி உருட்டி சொன்னா மேகா.
அவ சொன்ன லிஸ்ட்டை கேட்டு வாயடைச்சுப்போன விஷ்வா, அதுக்கப்புறம் பேசாம அமைதியா சாப்பிட ஆரம்பிச்சான். சாப்பிட்டு முடிச்சதும் காளீஸ்வரன் அவங்க ரெண்டு பேரையும் ஜீப்ல கூட்டிட்டு போய் தோட்டத்து வீட்டுல இறக்கிவிட்டு வந்தாரு.
“பாஸை நாங்க தனியா விடமாட்டோம். அவர் எங்க இருக்காரோ அங்கதான் நாங்களும் இருப்போம்”னு மகேஷும் மத்தவங்களும் சொல்ல, “நாங்களே அவங்க ரெண்டு பேரும் தனியா இருக்கட்டும்னு தான் அங்க அனுப்புறோம். நீங்க வேற ஏன் நடுவுல போய் தொந்தரவு பண்றீங்க? பேசாம இங்கயே இருங்க”ன்னாரு காளீஸ்வரன்.
“சார், மண்டபத்துல இருந்து மேகா மேடமை இப்பதான் எவனோ ஒருத்தன் கடத்திட்டு போனான். அது யாருன்னே இன்னும் தெரியல. விஷ்வா சாருக்கு எதிரா அப்பப்போ எவனாவது ஏதாவது பண்ணிட்டே இருக்கான். நாங்க கூட இருக்கும்போதே இப்படி நடந்திருக்கு. பாதுகாப்புக்கு யாரும் இல்லாம தனியா இருக்காங்கன்னு தெரிஞ்சா எவனாவது பிளான் பண்ணி ஏதாவது பண்ணிட்டா என்ன பண்றது?” அப்படின்னு மகேஷ் சீரியஸா கேட்டான்.
“சரி, பாதுகாப்புக்குதானே போகணும்? அப்போ உள்ள போய் அவங்களுக்கு டிஸ்டர்ப் பண்ணாம வாசல்லயே இருங்க. அங்க கயித்துக்கட்டில் இருக்கும், அதுலயே படுத்துக்கோங்க”னு காளீஸ்வரன் ஸ்ட்ரிக்ட்டா சொல்லிட்டாரு. அதனால கொட்டுற பனியில மகேஷும் மத்தவங்களும் அந்த பழைய கயித்துக்கட்டில்ல உட்கார்ந்திருந்தாங்க.
மேகாவும் விஷ்வாவும் அந்த பழைய காலத்து தோட்டத்து வீட்டுக்குள்ள நுழைஞ்சாங்க. மழைக்காலம்ங்கிறதால அந்த ஓட்டு வீடு ஜிலுஜிலுன்னு இருந்தது. வேட்டி சட்டையில இருந்த விஷ்வா, “என்னடி இது, ஏசியும் இல்ல ஃபேனும் ஓடல.. ஆனா இப்படி குளுருது?”ன்னு கையைத் தேய்ச்சுக்கிட்டே கேட்டான்.
“இது என்ன சென்னையா? ஜன்னலைத் திறந்து வச்சாலும் காத்து வராம இருக்கறதுக்கு? கிராமத்துல எல்லாம் இப்படித்தான் நல்லா குளுகுளுன்னு இருக்கும். கிளைமேட் எவ்ளோ சூப்பரா இருக்கு.. உங்களுக்குத்தான் என்ஜாய் பண்ண தெரியல”ன்னு சொல்லிட்டு, மேகா தன் முந்தானையை இடுப்புல சொருகிட்டு கதவை லாக் பண்ணா. அந்த பழைய கதவு கிரீச்-ன்னு சத்தத்தோட மூடிச்சு.
அந்த வீட்டை விஷ்வா சுத்தி முத்தி பார்த்தான். சாதாரண ஓட்டு வீடா இருந்தாலும் அழகா பராமரிச்சிருந்தாங்க. சுவத்துல மேகாவோட அப்பா அம்மா, தாத்தா பாட்டின்னு வழி வழியா எல்லா போட்டோவும் இருந்தது. கடைசியா மேகாவோட பேரண்ட்ஸ் அவங்க நாலு பசங்க கூட சிரிச்சுக்கிட்டு இருக்கிற மாதிரி ஒரு போட்டோ இருந்தது. “இதெல்லாம் மெமரிஸ் கலெக்ஷனா?”ன்னு நினைச்ச விஷ்வா, “அடுத்தது இந்த வரிசையில மேகா அண்ணன் பேமிலி, அப்புறம் என்னோட புள்ளகுட்டிங்க போட்டோவெல்லாம் மாட்டி ஹிஸ்டரியை காப்பாத்துவாங்களோ?”ன்னு யோசிச்சான்.
அவன் மனசாட்சி உடனே, “பார்றா.. கல்யாணம் முடிஞ்சு ஃபர்ஸ்ட் நைட்டுக்கு வந்தாச்சு. அடுத்து குழந்தையெல்லாம் பெத்து பேமிலி மேன் ஆகப்போறியா நீ? பொண்ணுங்களே பிடிக்காது, யாரையும் நம்ப மாட்டேன், சேர்ந்து வாழ மாட்டேன்னு சீன் போட்டுட்டு, இப்போ போட்டோவைப் பார்த்த உடனே பேமிலி பத்தி யோசிக்க ஆரம்பிச்சுட்ட? விஜய் சொன்ன மாதிரி நீ மாறிட்ட விஷ்வா. இந்த குட்டி பிசாசு உன்னை மாத்திட்டா”ன்னு கிண்டல் பண்ணுச்சு. விஷ்வா உடனே மனசுக்குள்ள, “சேச்சே.. அப்படிலாம் ஒன்னும் இல்ல. ஏதோ ஒரு ப்ளோல தோணிடுச்சு. என்னைக்குமே இவ எனக்கு பேருக்குத்தான் பொண்டாட்டி. இவ கூட சேர்ந்து வாழ்றதெல்லாம் நடக்காத காரியம்”னு வீராப்பா சொல்லிக் கிட்டான்.
அவன் போட்டோவை பார்க்கிறத கவனிச்ச மேகா, “அடுத்து எங்க பெரியண்ணன் பேமிலி போட்டோவை இங்க மாட்டணும். நாங்களும் போட்டோ எடுத்து மாட்டலாம்னு அண்ணாகிட்ட கேட்டுட்டே இருக்கோம். எங்க மூணு பேருக்கும் கல்யாணமாகி குழந்தைங்க வந்ததுக்கு அப்புறம் எல்லாரும் சேர்ந்து எடுத்து மாட்டிக்கலாம்னு வைராக்கியமா இருக்காரு. மணி அண்ணனுக்கு கல்யாணமே வேணாம்னு சொல்லிடுச்சு. முத்து அண்ணன் எப்ப பார்த்தாலும் பண்ணிக்கிறேன்னு சொல்றாரே தவிர பண்ற மாதிரி தெரியல. எனக்கு மேரேஜ் ஆயிடுச்சு, ஆனா பேமிலி..!!” அப்படின்னு நிறுத்தினா. மனசுக்குள்ள, “உங்க கூட நான் சேர்ந்து வாழ்ந்து, நமக்குன்னு பேபிஸ் வந்து நம்ம பேமிலி கம்ப்ளீட் ஆகுமா விஷ்வா? இல்ல கடைசி வரைக்கும் ரூம் மேட்ஸ் மாதிரியே இருந்துடுவோமா?”ன்னு நினைச்சு வருத்தப்பட்டா.
அவ பேமிலி பத்தி யோசிக்கும்போது, அன்னைக்கு விஷ்வா கிட்ட காதலை சொல்லப்போனப்போ அவன் பொண்ணுங்களை பத்தி கேவலமா பேசினது ஞாபகம் வந்துடுச்சு.
உடனே அவனை கோபமா பார்த்தா. அவ பாதியில பேச்சை நிறுத்திட்டு தன்னை கோபமா பார்க்கவும் விஷ்வா, “I am sorry மேகா. என்னால என்னைக்குமே உன் பேமிலி கம்ப்ளீட் ஆகாது. இதுக்குத்தான் அன்னைக்கே என்னை விட்டு போயிடுன்னு சொன்னேன். நீதான் கேட்கல. எல்லாத்தையும் தெளிவா சொன்னதுக்கு அப்புறம்தான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன். இப்போ நீ எதையாவது நினைச்சு பீல் பண்ணா அதுக்கு நான் ஒன்னும் பண்ண முடியாது. நீ சொல்ற மாதிரி நான் ஒரு ரோபோட் தான். எனக்கு பீலிங்ஸ் கிடையாது, அது வராது. இப்படியே கொஞ்ச நாள் போகட்டும், என்ன ஆகுதுன்னு பார்ப்போம். ஆனா இந்த வாழ்க்கை வேணாம்னு உனக்கு எப்ப தோணுதோ, அப்ப நீ தாராளமா என்னை விட்டுட்டு போகலாம். உன்னை நான் கட்டாயப்படுத்த மாட்டேன்.
என்னால உனக்கு பண்ண முடிஞ்ச ஒரே நல்லது இது மட்டும்தான். வேற எதையும் என்கிட்ட எதிர்பார்க்காத”ன்னு கறாரா சொல்லிட்டான்.
அவன் பேசப்பேச மேகா கண்ணுல இருந்து கண்ணீர் அருவியா கொட்டுச்சு. விஷ்வா மேல காதல் வந்த அந்த நிமிஷத்துல இருந்து அவனோட வாழ்க்கை எப்படி இருக்கணும்னு அவ கட்டி வச்சிருந்த கனவு கோட்டையெல்லாம் அவன் ஒரே வார்த்தையில உடைச்சுட்டான்.
தொடரும்…
(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)