Home மூர்கனின் காதலிமூர்கனின் காதலி CH 68

மூர்கனின் காதலி CH 68

by Thenaruvi Tamil Novels

அத்தியாயம் 68

காளீஸ்வரன், மீராவையும் ஆதித்யாவையும் அரண்மனையில் தங்கச் சொன்னதால வேற வழியில்லாம மேகா அவங்கள அங்க தங்க வச்சு, அவங்களுக்குத் தேவையான எல்லாத்தையும் ஏற்பாடு பண்ணிக் கொடுக்குறா. அதனால, அவன் மேல செம கோபத்துல இருந்த விஷ்வா, மேகாகிட்ட பேசவே இல்ல.

மறுநாள் காலையில…

நாளைக்கு மேகாவுக்கும், விஷ்வாவுக்கும் நிச்சயதார்த்தம்ங்கறதால, அவளோட வீட்டு வாசல்ல பந்தக்கால் நட்டு, அதுக்கு பூஜை செஞ்சுகிட்டு இருந்தாங்க. அப்போ வேகமா மேகாகிட்ட போன மீரா, “மேகா, ப்ளீஸ்… கொஞ்சம் என் கூட வர்றியா…?”ன்னு மெல்லிய குரல்ல கேட்டா.

மேகாவும் விஷ்வாவும் பக்கத்துல பக்கத்துல நின்னுட்டு இருந்ததால, அவங்க பேசுறத கவனிச்ச விஷ்வா, மேகாவைப் பார்த்து முறைச்சான். “சாரி, ப்ளீஸ் வெயிட் பண்ணுங்க. வந்துடறேன்”ன்னு சொன்ன மேகா, பழகின தோசத்துக்காக மீரா கூட போனா.

ஒரு ஓரமா மேகாவை கூட்டிட்டுப் போன மீரா, கண்ணீரோட, “ஆதித்யா உன்ன ஏமாத்த ட்ரை பண்ண மாதிரி, இப்போ என்னையும் ஏமாத்த பாக்குறான்டி. நான் ஒரு பைத்தியக்காரி… உன்ன லவ் பண்ணும்போதே அவன் உன்ன விட்டுட்டு என் பின்னாடி வரும்போது, ஈஸியா அவன் என்னையும் விட்டுட்டு எப்பவாவது போயிடுவான்னு நான் யோசிக்காம விட்டுட்டேன்”ன்னு சொல்லிட்டு அவளை கட்டிப்பிடிச்சு அழுதா.

“ஏய், என்னடி சொல்ற… அவனே உடம்பு சரியில்லாம அங்க ரூம்லதானே கிடந்தான்… அவன் இப்போ என்ன பண்ணான்?”ன்னு குழப்பமா கேட்டா மேகா.
“நான் பிரெக்னென்ட்டா இருக்கிறதே அவனுக்கு நேத்துதான்டி தெரியும். நீ கிளம்பினதுக்கு அப்புறமா, நான் அவன் கிட்ட உங்களுக்கு மேரேஜ் ஆகுற அதே நாள்ல நம்மளும் மேரேஜ் பண்ணிக்கலாமான்னு கேட்டேன்.

அவன் அப்பவே வேணாம் வேணாம்’னுதான் சொன்னான். நான் எவ்வளவோ பேசி அவன சம்மதிக்க வைக்க ட்ரை பண்ணேன். நீ கேர்லெஸ்ஸா இருக்காத. டேப்லெட் எடுத்துக்கோன்னு சொன்னேன்ல… உன்ன யாரு பிரெக்னென்ட் ஆகச் சொன்னாங்கன்னு கேட்டு அவன் என்கூட சண்டை போட்டான். சரி, திடீர்னு இந்த விஷயம் தெரிஞ்சதுனால இப்படி ரியாக்ட் பண்றான் போல… அப்புறமா எங்க வீட்ல இருக்கவங்கள கூட்டிட்டு வந்து இவன்கிட்ட பேசி எல்லாத்தையும் சரி பண்ணிக்கலாம்’னு நினைச்சு நானும் சும்மா விட்டுட்டேன். காலையில விடியறதுக்கு முன்னாடியே என் கிட்ட போனை வாங்கி யார் கிட்டயோ பேசினான். இப்போ நான் குளிச்சிட்டு வர்றதுக்குள்ள அவன ரூம்ல ஆள காணோம்.

என்ன கல்யாணம் பண்ணிக்க கூடாதுன்னு சொல்லாம கொள்ளாம எங்கயோ அவன் ஓடிப் போயிட்டான் மேகா. ப்ளீஸ் மேகா, நீதான் ஏதாவது பண்ணி எங்க ரெண்டு பேரையும் சேர்த்து வைக்கணும்”ன்னு மேகா கிட்ட கெஞ்சி கதறினா மீரா.

சின்ன வயசுல இருந்தே அவங்க ரெண்டு பேரும் ரொம்ப நெருங்கிய ஃப்ரெண்ட்ஸ். அதனால, அவ இப்படி தன்னிடம் உதவி கேட்டு கெஞ்சும்போது, மேகாவால அத மறுக்க முடியல. அதனால, அவளை கூட்டிட்டு நேரா அவளோட அண்ணன் கிட்ட போன மேகா, விஷயத்தை அவங்க கிட்ட சொன்னா.

விஷ்வாவும் அங்கதான் இருந்தான். அதனால, உடனே அவன் தன்னோட ஆட்களை உஷார் பண்ணி, “அந்த ஆதித்யா இந்த ஊர் எல்லைய தாண்டி வெளிய போகக் கூடாது. போய் அவன தூக்கிட்டு வாங்கடா”ன்னு விஷ்வா சொல்ல, “நம்ம ஊர்க்காரப் பிள்ளைய ஏமாத்திட்டு அவன் அப்படியே ஓடிப் போயிடுவானா… அவன பிடிச்சு பஞ்சாயத்துக்கு இழுத்திட்டு வாங்கடா”ன்ன காளீஸ்வரன், தன்னோட ஆட்களையும் ஆதித்யாவ தேடி கண்டுபிடிக்கச் சொல்லி அனுப்பி விட்டுட்டு, பஞ்சாயத்தைக் கூட்டுறதுக்காக மீராவ அழைச்சுகிட்டு அவளோட குடும்பத்தாரைப் பார்க்கப் போனார்.

அடுத்த ஒரு மணி நேரத்துல பஞ்சாயத்து கூட்டி முடிச்சது. ஆதித்யாவ குண்டுகட்டா தூக்கிட்டு வந்த விஷ்வாவோட ஆட்கள், அங்க போட்டுட்டுப் போனாங்க. அவனை கண்ணீரோட பார்த்துட்டு இருந்த மீரா, “என்னால தான் இப்போ நீ உயிரோடவே இருக்கேன்றத மறந்துட்டு, உன்னால எப்படி இப்படி எனக்கே துரோகம் பண்ண முடியுது…? இது உன்னோட குழந்தைடா. உனக்கு நம்ம குழந்தை மேலயே கொஞ்சம்கூட பாசம் இல்லல்ல…!! சீ… நீ எல்லாம் மனுஷ ஜென்மமே இல்லடா”ன்னு ஆதித்யாவ திட்ட,

“போதும், வாய மூடுடி. நான் மனுஷனா இல்லையான்னு கூட தெரியாமத் தான் என் கூட வந்து படுத்தியா…? உனக்கு நல்ல பணக்காரனா பார்த்து கல்யாணம் பண்ணிக்கிட்டு, ஆடம்பரமா வாழணும்னு ஆசை. அதான் நீ உன் க்ளோஸ் ஃப்ரெண்டுக்கே கொஞ்சம்கூட யோசிக்காம துரோகம் பண்ண… என்ன குறை சொல்றதுக்கெல்லாம் உனக்கு எந்தத் தகுதியும் இல்ல”ன்னு அவளை செருப்பால அடிச்ச மாதிரி பதில் சொன்னான் ஆதித்யா.

“ஆமா, நீ சொல்றது கரெக்ட் தான். நான் அவ்வளோ பெரிய தப்பு பண்ணியும், மேகாவோட நல்ல மனசுக்கு அவ என்ன ஈஸியா மன்னிச்சுட்டா. ஆனா கடவுள்னு ஒருத்தன் இருக்கான்ல… எல்லாருக்கும் அவங்க பண்ண தப்புக்கு தண்டனை கிடைக்கும். இப்போ எனக்கு கிடைச்சிருக்கு. அத நான் அனுபவிக்கிறேன். கண்டிப்பா ஒரு நாள் உனக்கும் கிடைக்கும்டா”ன்னு ஆதித்யா கிட்ட கோபமா சொன்ன மீரா, பஞ்சாயத்துல ஊர் பெரியவங்களோட உட்கார்ந்திருந்த காளீஸ்வரனைப் பார்த்து,

“இவ்ளோ மோசமானவன கல்யாணம் பண்ணிக்கனுமானு எனக்கே யோசனையாதான் இருக்கு. இருந்தாலும், என் வயித்துல வளர குழந்தைக்காக நான் இவன்கூட சேர்ந்து வாழ்ந்து தான் ஆகணும். தயவுசெஞ்சு எங்களுக்கு இங்க இருக்கிற பெரிய மனுசங்க எல்லாரும் சேர்ந்து கல்யாணம் பண்ணி வச்சிருங்க ஐயா”ன்னு கும்பிட்டுக் கெஞ்சினா.

“இவ பொய் சொல்றா. யாரும் இவ சொல்றத நம்பாதீங்க. நான் இவள லவ் பண்ணவே இல்ல. எவன்கூடயோ போய் இருந்து பிரெக்னென்ட் ஆகிட்டு வந்துட்டு இவ என் மேல பழி போட பாக்குறா. அது எப்படிங்க என் ஆஃபீஸ்ல வேலை செய்ற இவள மாதிரி ஆளையெல்லாம் நான் லவ் பண்ண முடியும்?”ன்னு ஆதித்யா நரம்பில்லாத நாக்குன்னு தன் இஷ்டத்துக்குப் பேச, மீரா தொடர்ந்து அதையெல்லாம் பொறுத்துக்க முடியாம அழுதுட்டே இருந்தா.

“ஏன்மா, நீங்க ரெண்டு பேரும் காதலிச்சதுக்கு உன்கிட்ட ஏதாவது சாட்சி இருக்கா?”ன்னு பஞ்சாயத்துல உள்ளவங்க கேட்க, வாயைத் திறந்து பதில் கூட சொல்ல முடியாத மனநிலையில இருந்த மீராவால தன்னோட நிலையை நினைச்சு கண்ணீர் சிந்த மட்டுமே முடிஞ்சது.

“நான் இருக்கேன். இவங்க ரெண்டு பேரும் காதலிச்சதுக்கு நான்தான் சாட்சி. நானும் இவரோட கம்பெனிலதான் வேலை பார்த்தேன். இவங்க ரெண்டு பேரும் லவ் பண்றது எங்க ஆஃபீஸ்ல இருக்கிற எல்லாருக்கும் தெரியும். மிஸ்டர் ஆதித்யாவுக்கு லவ் பண்றேன்ற பேர்ல பொண்ணுங்கள ஏமாத்திட்டு ஓடிப் போறதுன்னா ரொம்பப் பிடிக்கும். அவரோட வேலை முடிஞ்ச உடனே, அதான் இவளையும் கழட்டிவிடப் பார்க்கிறாரு”ன்னு மீராவுக்காக முன் வந்து பஞ்சாயத்துல மேகா சாட்சி சொன்னதால, பஞ்சாயத்துல உள்ளவங்க ஆதித்யாவ மிரட்டி, அவன மீராவோட கழுத்துல தாலி கட்ட வச்சதோட மட்டும் இல்லாம, அத முறையா ரெஜிஸ்டரும் செஞ்சாங்க.

மீரா தங்கள் குடும்பத்தை பஞ்சாயத்துல நிக்க வச்சு அசிங்கப்படுத்தி விட்டதால, அவளோட குடும்பத்துக்காரங்க, “இவன்தான் வேணும்னுதானே இப்படி தரம் தாழ்ந்து போய் கல்யாணத்துக்கு முன்னாடியே வயிற்றை நெப்பிகிட்டு வந்த… அதான் பெத்த கடமைக்கு உனக்கு நியாயம் கிடைக்கும்னு இப்போ கல்யாணம் பண்ணி வச்சுட்டோம்ல… இனிமே உனக்கும் எங்க குடும்பத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்ல. அப்படியே இவன்கூட எங்கயாவது ஓடிப் போயிரு”ன்னு பஞ்சாயத்துலயே எல்லார் முன்னிலையிலும் சொல்லி அவள தலைமுழுகிட்டுப் போயிட்டாங்க.

மீரா கல்யாணம் ஆகி வயித்துல குழந்தையோட இப்படி ஆதரவில்லாம நிக்கிறத பார்க்கப் பொறுக்காம, “இந்தத் தம்பிக்கு உடம்பு சரியாகி, மேகா கல்யாணம் முடிஞ்சதுக்கு அப்புறமா நீங்க எல்லாருமா சேர்ந்து சென்னை கிளம்பிப் போங்க. அதுவரைக்கும் நீயும் உன் புருஷனும் நம்ம அரண்மனையிலயே தங்கிக்கோங்க”ன்னு மீராகிட்ட சொன்னார் காளீஸ்வரன்.

அதனால மனசு உருகி அவரோட கால்ல விழுந்த மீரா, “நீங்க எனக்கு செஞ்ச உதவிய நான் சாகுற வரைக்கும் மறக்க மாட்டேன்னா”ன்னு கண் கலங்க கைகூப்பி சொன்னா. அவளை எழுப்பி விட்ட காளீஸ்வரன், “முழுகாம இருக்கிற பொண்ணு இப்படி சும்மா பொசுக்கு பொசுக்குன்னு எல்லார் கால்லையும் விழுந்துட்டு இருக்கக் கூடாதுமா”ன்னவரு, மீராவையும் ஆதித்யாவையும் தன்னோட ஜீப்ல ஏத்திக்கிட்டு அரண்மனைக்குப் கிளம்பினார்.

அதையெல்லாம் பார்த்தபடி ஓரமா நின்னுட்டு இருந்த விஷ்வா, “இப்பதான் இந்த மேகா ஏன் இப்படி இருக்கான்னு தெரியுது. இவ குடும்பத்துல எல்லாரும் அநியாயத்துக்கு நல்லவங்களா இருக்காங்க. அடுத்தவங்களுக்கு ஒண்ணுன்னா அப்படியே துடிக்கிறாங்க. அதான் எல்லாரும் இவங்கள ஷிஃப்ட் போட்டு வச்சு செய்றாங்க…!! என்ன பண்ணித் தொலைக்கிறது… இவங்க கூட எல்லாம் சேர்ந்து குப்ப கொட்டணும்னு என் தலையில எழுதி இருக்கு…!!”ன்னு நினைச்சவன், மகேஷை கூப்பிட்டு, “அன்னைக்கு சிவராத்திரி அப்போ என்ன குத்த வந்தவன் யாருன்னு கண்டுபிடிச்சீங்களாடா?”ன்னு கேட்க, “இது என்ன சிட்டியா பாஸ்… சிசிடிவி கேமராவ வச்சு கண்டுபிடிக்கிறதுக்கு… உங்ககிட்ட கேட்டா நீங்க அவன பார்க்கலன்னு சொல்றீங்க. மேகாகிட்ட கேட்டா, ‘அவன நான் பார்த்தேன். ஆனா, அவன் எப்படி இருப்பான்னு மறந்திருச்சு. இன்னொரு தடவை நேர்ல பார்த்தா சொல்றேன்’னு சொல்றாங்க. அப்புறம் எத வச்சு நாங்க அவன கண்டுபிடிக்கிறது?”ன்னு கேட்டான் அவன்.

தொடரும்…

(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)

You may also like

Leave a Comment

About Me

Featured