அத்தியாயம் 63
விஷ்வா மனசார மேகா கிட்ட தேங்க்ஸ் சொன்னான். தன்னால விஷ்வாவை நல்லாப் பாத்துக்க முடியுது, நல்லவிதமா மாத்த முடியுதுன்னு நெனச்சு சந்தோஷப்பட்டா மேகா. எல்லாத்தையும் கவனிச்சுக்கிட்டு இருந்த காளீஸ்வரன், “இந்தப் புள்ளை பிடிவாதம் பிடிக்குதேன்னு, நாம தான் தப்பு பண்றோமோன்னு உள்ளுக்குள்ள உறுத்திக்கிட்டே இருந்துச்சு. இப்ப இவங்களை இப்படிப் பார்க்கும்போதுதான் சந்தோஷமா இருக்கு. குறை இல்லாத மனுஷங்கன்னு யார் இருக்கா..?? இது தப்போ சரியோ, இவங்க ரெண்டு பேருக்கும் நடுவுல இருக்கிற பாசம் எப்பவும் இவங்கள சந்தோஷமா வச்சிருக்கும்னு நான் நம்புறேன்”ன்னு நெனச்சு நிம்மதிப் பெருமூச்சு விட்டார்..
மேகாவும் விஷ்வாவும் போய் சாப்பிட உட்கார, அவங்களைப் பாத்து திருப்தியா சிரிச்ச சௌபர்ணிகா, எவ்ளோ வருஷத்துக்கு அப்புறம் இன்னைக்கு தான் மனசார சந்தோஷமா சாப்பிட்டா. அவ முகத்துல தெரிஞ்ச மகிழ்ச்சியைக் கவனிச்ச முத்து, “காலையில நடந்ததை மேகா சொல்லும்போது கூட நான் அதையெல்லாம் பெருசா நெனைக்கல. அது எப்படி கூடப் பொறந்த அக்காவப் பாத்து ஒருத்தன் பயப்படுவான்னு சந்தேகமாத்தான் இருந்துச்சு. ஆனா அவரு சும்மா சாப்பிடுங்கன்னு ஒரு வார்த்தை சொன்னதுக்கு, இவங்க முகத்துல எவ்ளோ சந்தோஷம் தெரியுது..!! அப்போ அந்த அளவுக்கு இவங்களுக்கு விஷ்வா சார் மேல பாசம் இருக்கு.
அதான் அவருக்காக இவங்க இன்னும் கல்யாணம் கூடப் பண்ணிக்காம இருக்காங்க. சௌபர்ணிகா நீங்க கிரேட்..!! தெரிஞ்சோ தெரியாமலோ நீங்க என் மனசைத் தொட்டுட்டீங்க.” என்று தனக்குள் சிரிச்சுக்கிட்டான்.
மேகாவோட கையில அடிபட்டு இருந்தனால, அவளுக்கு சாப்பாடு ஊட்டிவிட்ட விஷ்வா,
“இன்னைக்கு நைட் அங்க பேலஸ்லதான் தூங்குவியா..??” என்று கேட்க, நேத்து அவன் அவ பக்கத்துல தூங்கினதையும், தியான மண்டபத்துல நடந்ததையும் நெனச்சுப் பாத்த மேகாவுக்கு, உடனே பொறை ஏறிடுச்சு. அவ தலையில நங் நங்னு தட்டுன விஷ்வா “என்னடி.. மறுபடியும் ஸ்பெஷலா எதாவது நடந்தா எப்படி இருக்கும்னு கற்பனை பண்ணிப் பாத்தியா..?“ன்னு கிண்டலா கேட்டுட்டு அவ தோளில இடிச்சான்.
அவங்களுக்கு சாப்பாடு போட்ட வசந்தி “தண்ணி குடிமா”ன்னு சொல்ல, விஷ்வாவப் பாத்து வேகமா ‘இல்லை’ன்னு தலையாட்டின மேகா, ஒரு சொம்பு தண்ணிய எடுத்து மடமடன்னு குடிச்சா. அவளைப் பாத்து லேசா சிரிச்சுட்டு “எங்க ஆக்காட்டுப் பாக்கலாம்..!!”னு வித்தியாசமான மாடுலேஷன்ல ஒரு மாதிரி விஷ்வா சொல்ல, அவளுக்கு கூச்சமா இருந்துச்சு.
அதனால கொஞ்சமா தன் வாயைத் திறந்த மேகா, அவனையே குறுகுறுன்னு பாக்க, “நல்லா வாயைத் திறந்தாதானே ஈஸியா உள்ள போகும்..!!”ன்னு சொன்ன விஷ்வா, சாப்பாட்டை எடுத்து அவ வாயில திணிச்சு ஊட்டி விட்டான்.
சாப்பிட வந்த வெற்றி, அந்தக் காட்சியப் பாத்துட்டு மனசு உடைஞ்சு அங்க இருந்து போய்ட்டான். அவன் என்னதான் விஷ்வாவும் மேகாவும் சந்தோஷமா வாழட்டும்னு நெனச்சாலும், இன்னும் அத அவன் மனசால ஏத்துக்க முடியாமப் போனதுனால, காதல் தோல்வில சுத்திட்டு இருந்தான் வெற்றி. தன் தம்பியையும் அவனோட வருங்கால மனைவியையும் இப்படி சந்தோஷமாப் பாத்து, தானும் சந்தோஷப்பட்ட சௌபர்ணிகா, வழக்கமா சாப்பிடுறதைவிடவே கொஞ்சம் அதிகமா சாப்பிட்டா.
அடுத்த நாள் காலையில..
நாளை மறுநாள் விஷ்வாவுக்கும் மேகாவுக்கும் நிச்சயதார்த்தம் இருந்தனால, கல்யாணத்துக்குத் தேவையானதெல்லாம் வாங்க மேகா வீட்ல உள்ளவங்க எல்லாரும் மதுரைக்குப் போறதுக்காக கெளம்பி கிட்டு இருந்தாங்க. அந்த செய்தி காதுக்கு வந்தவுடனே, “இது என்னோட மேரேஜ். இங்க சிம்பிளா, அது இந்த ஊர்ல நடந்தாலும், என் கல்யாணத்துல எதுவும் சிம்பிளா இருக்கக் கூடாது”ன்னு நெனச்ச விஷ்வா, தனக்கான எல்லாத்தையும் தானே பாத்து முடிவு செய்ய நெனச்சான்.
அதப் பத்திப் பேசுறதுக்காக, அவன் ரெடியாகி மேகா வீட்டுக்குப் போக, குளிச்சுட்டு அப்போதான் வந்திருந்த சௌபர்ணிகா, அவங்க எல்லாரும் வெளியில கெளம்புறதப் பாத்துட்டு என்னன்னு கேட்டா. மேகா அவ கிட்ட விஷயத்தைச் சொல்ல, “இங்க இருக்கிற லோக்கல் கடையில எல்லாம் எதுவும் வாங்க வேணாம். என்னென்ன வேணும்னு டீட்டெய்லா லிஸ்ட் போட்டுக் குடுங்க. 24 மணி நேரத்துல எல்லாத்தையும் நான் அரேஞ்ச் பண்றேன்.
இல்லன்னா இங்க இருந்தே உங்களுக்குப் பிடிச்சதை ஆன்லைன் ஷாப்பிங் கூடப் பண்ணிக்கோங்க”ன்னு, அவங்க பேசினதைக் கேட்டுட்டு உள்ள வந்த விஷ்வா சொன்னான்.
தன் தம்பிய ஒரு பார்வை பாத்துட்டு, சிரிச்ச முகமா மேகாவப் பாத்த சௌபர்ணிகா, “சரியாச் சொன்னீங்க. நானும் அதையேதான் சொல்ல வந்தேன்.
அதுமட்டுமில்லாம நம்மகிட்டயே ஓன் க்ளோதிங் அண்ட் காஸ்மெட்டிக்ஸ் பிராண்ட் இருக்கு. ஆர்டர் பண்ணா விஷ்வா சொன்ன மாதிரியே 24 மணி நேரத்துல டெலிவர் பண்ணிடுவாங்க. இப்போ நிச்சயதார்த்தத்துக்கு மட்டும் அப்படி வாங்கிக்கலாம். அப்புறம் கல்யாணத்துக்கு இன்னும் டைம் இருக்குல்ல… அதனால அதுக்குள்ள எல்லாரோட காஸ்ட்யூம்ஸையும் கஸ்டமைஸ் பண்ணிக்கலாம். என்னோட ஃப்ரெண்ட் ஒருத்தவங்க நகைக்கடை வச்சிருக்காங்க.
அதனால நகைகளை அவங்ககிட்ட இருந்து வாங்கிக்கலாம்”ன்னு சொல்ல, “நிச்சயதார்த்தத்தைப் பொறுத்தவரைக்கும் இந்த ஊர்ல எல்லாம் எங்களுக்குப் பிடிச்ச மாதிரி பண்ணணும்னுதானேம்மா முன்னாடியே பேசி வச்சிருந்தோம்..!!”ன்னு காளீஸ்வரன் கேட்டார்.
“இப்பவும் நிச்சயதார்த்தம் நீங்க முடிவு பண்ண மாதிரித்தான் சார் நடக்கப் போகுது. ஆனா இது என் தம்பியோட நிச்சயதார்த்த விழா. அதைவிட எங்க வீட்ல நடக்கப் போற முதல் விசேஷம். விஷ்வாவோட நிச்சயதார்த்தம் எங்க எப்படி நடந்தாலும், கண்டிப்பா அது சாதாரணம் இல்லை. பிரஸ், மீடியான்னு எல்லாரும் நியூஸ் கவரேஜ் பண்ண வருவாங்க. அதனால சிம்பிளா இருந்தாலும் எல்லாமே க்ளாஸியா இருக்கணும். எங்க ஃபேமிலிக்குன்னு வெளியில ஒரு மரியாதை இருக்குல்ல சார்.. எங்க வீட்டுக்கு வரப் போற மருமகளுக்கு நாங்களும் எங்களுக்குத் தோணுறதைச் செய்யணும்னு ஆசைப்படுவோம்ல..!! அதை நீங்க வேணாம்னு சொல்லிப்புடாதீங்க ப்ளீஸ்”ன்னு சௌபர்ணிகா கெஞ்சுன மாதிரி கேட்க, அவ பேச்ச மறுத்து காளீஸ்வரன் எதோ சொல்ல வர்றதுக்குள்ள அனுராதா முந்திக்கிட்டு, “வேண்டாம் தம்பி. யாரும் எதுவும் சொல்லாதீங்க. அந்தப் பொண்ணு சொல்றதும் சரிதானே..!! வாய்க்கும் வாய்க்கும் நம்ம குடும்ப கௌரவம், மரியாதைன்னு நாம பேசுற மாதிரிதானே அவங்களுக்கும்.. அந்தப் பொண்ணே சொந்தமா தமிழ்நாடு முழுக்க நிறைய துணிக்கடை வச்சிருக்காங்க. இது அவங்க வீட்டு விசேஷம். இதுக்கு வெளியில போய் வாங்கினா.. அவங்களுக்கு சங்கடமா இருக்காதா..??” என்று கேட்டவுடனே அதுவும் சரிதான்னு நெனச்சு எல்லாரும் சும்மா ஆயிட்டாங்க.
“பரவால்ல, இவங்க நான் எதாவது செய்யணும்னு நெனச்சா, அதை எனக்கு முன்னாடியே செஞ்சு முடிச்சுடுறாங்க..!!”ன்னு நெனச்ச விஷ்வா, தன் அக்காவை பெருமையா பாத்துக்கிட்டு இருக்க,
“அதுல்லாம் சரிதான். நீங்க பண்றதப் பண்ணுங்கம்மா. ஆனா மாப்பிள்ளைக்கு எங்க சைடுல போடுற மோதிரம், மத்த நகை எல்லாம் நாங்க எங்க ஆசாரி கிட்ட குடுத்துதான் செய்வோம். அதுதான் எங்க குடும்ப வழக்கம். அதை மட்டும் மாத்த முடியாது. உங்களுக்கு எப்படி வேணும்னு சொன்னீங்கன்னா, அவரு அதே மாதிரியே செஞ்சு கொடுத்துடுவாரு. மேகாவுக்குப் போட வேண்டிய நகையெல்லாம் நாங்க ஏற்கனவே அவ சின்னப் பிள்ளையா இருக்கும்போதே செஞ்சு வச்சுட்டோம்.
அதை நாங்க அவளுக்குப் போட்டுடுவோம். அதையும் நீங்க மறுக்கக் கூடாது. உங்ககிட்ட எல்லாமே இருக்குங்கறதுக்காக, எங்க வீட்டுப் பிள்ளையை நாங்க வெறும் கையோட அனுப்ப முடியாது”ன்னு கராரா சொல்லிட்டார்.
“அதுல நாங்க மறுத்துப் பேச என்னங்க இருக்கு..?? உங்க பொண்ணுக்கு நீங்க ஆசைப்படுறதச் செய்யுங்க. அதே மாதிரி எங்க வீட்டு மருமகளுக்கு நாங்க ஆசைப்படுறதைச் செய்றோம்”ன்னு சௌபர்ணிகா சொல்ல, எல்லாரும் ‘சரி’ன்னு அதுக்கு ஒத்துக்கிட்டாங்க. அப்புறம் ஆளாளுக்கு கல்யாணத்துக்காக என்னென்ன வாங்கணும்னு தனித்தனியா லிஸ்ட் போட ஆரம்பிச்சாங்க.
மேகாவும் வெண்ணிலாவும் ஒன்னா உட்கார்ந்து அதப் பத்தி பேசி, சிரிச்சு டிஸ்கஸ் பண்ணிக்கிட்டு இருக்க, “ஓய் இங்க வா..!!”ன்னு தன் ஒரு விரலை நீட்டி அவளைக் கூப்பிட்டான் விஷ்வா.
எஜமானோட கட்டளைக்கு எப்பவும் அடங்கிப் போற செல்ல நாய்க்குட்டியப் போல துள்ளிக் குதிச்சு ஓடிப்போய் அவன் பக்கத்துல நின்ன மேகா, “சொல்லுங்க..!!”ன்னு கேட்க, “உன்னோட ஹேர் ஸ்டைல், ஆக்ஸசரீஸ், காஸ்ட்யூம்ல இருந்து செப்பல் வரைக்கும் எல்லாத்தையும் நான்தான் தேர்ந்தெடுப்பேன்.
இது நிச்சயதார்த்தத்துக்கு நான் உனக்கு தேர்ந்தெடுத்து இருக்கிற லெஹங்கா. உனக்கு சம்மதமான்னு பாரு”ன்னு சொன்ன விஷ்வா, தன் கையில இருந்த டேபை அவ கிட்ட நீட்டினான். சௌபர்ணிகாவோட V2 க்ளோதிங்ஸ் மேனேஜர் விஷ்வாவுக்கு தனியா அனுப்பின, இன்னும் சந்தைக்கே வராத புது டிசைன்கள்ல ஒண்ணைத்தான் அவன் தேர்ந்தெடுத்து வச்சிருந்தான்.
“இது நல்லாத்தான் இருக்கு. பரவால்ல, பொண்ணுங்களைப் பத்தி எதுவுமே தெரியாது, எனக்கு பொண்ணுங்களையே பிடிக்காதுன்னு இவரு சொல்லிட்டுத் திரிஞ்சாலும்… பொண்ணுங்களுக்கு காஸ்ட்யூம் எல்லாம் நல்லாத்தான் செலக்ட் பண்றாரு”ன்னு நெனச்சவள், வேணும்னே, “அதுதான் ஆல்ரெடி நீங்க சொல்றதைத் தான் நான் போடணும்னு சொல்லிட்டீங்க. நீங்களே இதுதான் என் நிச்சயதார்த்த டிரஸ்ன்னு முடிவு பண்ணிட்டு, அப்புறம் என்ன சும்மா சம்பிரதாயத்துக்காக எனக்கு சம்மதமான்னு கேக்குறீங்க..?? நான் என்ன சொன்னாலும் எப்படியும் உங்க இஷ்டப்படிதான் எல்லாமே நடக்கும்.. அப்படியே நடக்கட்டும்”ன்னு சொல்லிட்டு தன் முகத்தைத் தூக்கி வச்சுக்கிட்டா மேகா.
தொடரும்..
(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)