அத்தியாயம் 44
“அந்த முனியாண்டி சரியான எமகாதகன்டி. பஞ்சாயத்துக்கு அத்தையும், வெற்றியும் வரலைனா, அதையே அவன் இஷ்டத்துக்குத் திரிச்சுச் சொல்லி, எல்லாரையும் நம்ம பக்கம் திருப்பி விட்ருவான். நான் போய் அவங்ககிட்டப் பேசி, அவங்களக் கூட்டிட்டு வரேன்,”-னு வசந்திகிட்டச் சொல்லிட்டு, “எலேய் மணி இங்க வாலே..!!” -ன்னு அவனக் கூப்பிட்டு, “இந்த வெற்றிப் பையன நேத்து சென்னையில பாத்தது.
அதுக்கப்புறம் அவன் என் கண்ணுலயே படல. அவன் எங்க இருந்தாலும் கண்டுபிடிச்சு, அவனக் கூட்டிட்டுப் பஞ்சாயத்துக்கு வந்துருடேய்..!!” -ன்னு உத்தரவு போட்டான் காளீஸ்வரன்.
“சரிங்க அண்ணே.. நான் போய் அவனக் கூட்டியாரேன்.. எங்க போயிடப் போறான்..!! அவன் இங்கதான் எங்கனயாவது சுத்திக்கிட்டு கெடப்பான்..!!” -ன்ன மணிகண்டன், வெற்றிக்குக் கால் செஞ்சபடியே அவனத் தேடி நடையைக் கட்ட, அனுராதா அம்மாவப் பாக்க கொல்லைப்புறத்துக்குப் போனான் காளீஸ்வரன்.
அங்க எல்லாரும் சாப்பிட்டுப் போட்டு இருந்த எச்சிப் பாத்திரங்கள விளக்கிக்கிட்டு இருந்த அனுராதா,
“எனக்குக் கெடைச்ச மகராசன் சரியா இருந்திருந்தா, என் மகனுக்கும் எனக்கும் இந்த நெலம வந்திருக்குமா இன்னைக்கு..!! நேத்து எல்லாரோடயும் கெளம்பி ஊருக்குப் போனவன். போன எல்லாப் பெரிய மனுசங்களும் திரும்பி வந்துட்டானுங்க. என் புள்ளைய மட்டும் இன்னும் காணோம். என்னப் பெத்த ராசா.. சோகத்துல எங்க போயி உக்காந்து என்ன பண்ணிக்கிட்டு இருக்கான்னு தெரியலையே..!! போன் பண்ணாலும் எடுக்க மாட்டேங்கறானோ..!! வெளில போனப் பையன் இன்னும் வீட்டுக்கு வரலயேன்னு இந்த வீட்ல யாருக்காவது கவல இருக்கா..?? பேருக்காகத்தான் இது பெரிய வீடு. இங்க வீடு மட்டும்தான் பெருசா இருக்கு. எல்லாரோட மனசும் சுருங்கிப் போய்க் கெடக்குது. இந்த வீட்ல நானும் என் மவனும் கேக்க நாதியில்லாம கெடக்கிறோம்..!! அங்க இந்நேரம் எல்லாரும் அந்த மானங்கெட்டச் சிறுக்கி இழுத்துட்டு வந்த வெளியூர்ப் பணக்காரனப் பஞ்சாயத்துல நிறுத்தி வெச்சு, அவன்தான் இந்த வீட்டு மாப்பிள்ளைன்னு வியக்காணம் பேசிட்டு இருப்பாங்க…!! இப்படி என்னையும் என் மகனையும் புலம்பி அழுக விட்டுட்டு, அந்த ஊருக்குள்ள இல்லாத பேரழகி, வந்திருக்கிறப் பட்டணத்தானோட என்ன வாழ்வாங்கு வாழ்ந்து கெழிக்கப் போறான்னு நானும் பாக்கத்தானே போறேன்..!!” -ன்னு கண்ணீரோட வாய்விட்டுப் புலம்பிக்கிட்டு இருந்தா.
அதைக் கேட்டு கோபப்பட்ட காளீஸ்வரன், “போதும் அத்த நிறுத்து. எங்க அப்பாரு செத்துப் போயி இத்தனை வருசமாகியும் உன்ன இந்த வீட்ல நான் எங்க ஆத்தாவுக்குச் சமமா மதிப்போடத்தான் வச்சிருக்கேன். எனக்கூடிப் பொறந்தவ வேற.. நீ பெத்தப் பையன் வேறன்னா நான் பிரிச்சுப் பாத்து வளர்த்தேன்..?? வாய் இருக்குன்னு இஷ்டத்துக்குப் பேசக் கூடாது. வெற்றி மனசு சங்கடப்பட்டுப் போனான். உங்க எல்லாரையும் விட எனக்கு வெற்றியப் பத்தித் தெரியும். அதான் அவன் சரியானதுக்கப்புறம் அவனே பொறுமையா வீட்டுக்கு வரட்டும். இல்லனா யாரையாவது விட்டுத் தேடச் சொல்லலாம்னு நெனச்சிகிட்டு இருந்தேன்.
இது என் குடும்பம். எல்லாரும் என் புள்ளைங்கன்னுதான் எனக்கு நெனக்கத் தெரியும். மேகா எவனையோ ஒருத்தனக் காதலிக்கிறான்னு தெரிஞ்சப்போ, எவனோ தெரியாதவன்கிட்டப் போயி நம்ம புள்ள மாட்டிக்கிட்டு அதோட வாழ்க்கை சீரழிஞ்சு போச்சுன்னா என்ன பண்றதுன்ற பயத்துல தான் நான் அங்க போனேன். அவ அவன்கூட நல்லா இருக்கக் கூடாதுன்னு நெனச்சு அவங்க ரெண்டு பேரையும் பிரிக்கப் போகல. அங்க போய்ப் பாத்ததுல, அந்த விஷ்வா தம்பி நம்மப் பிள்ளைய நல்லா வெச்சுக்குவான்னு எனக்குத் தோணுச்சு.
வெற்றியும் அவ வேணாம்னு தானாவே விலகிக்கிட்டான். அதனால அவங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வைக்கிறேன்னு சொன்னேன்.
இதுல என்ன தப்பு இருக்கு..?? இதுக்காக நீ நம்ம வீட்டுப் புள்ள நல்லா இருக்கக் கூடாதுன்னு நெனச்சு சபிக்கலாமா அத்த..?? இத்தனை நாளா அம்மா மாதிரி அவள நீ வளர்த்துட்டு, உன் வாயில இருந்து இப்படி வரலாமா..??” -ன்னு கலங்கினக் கண்ணோட கேட்டான். காளீஸ்வரன் கேட்ட ஒவ்வொரு கேள்வியும் அனுராதாவோட இதயத்தக் குத்த, “என்ன மன்னிச்சிரு சாமி. இந்தக் கூறுகெட்டச் சிறுக்கிக்கு அறிவு மழுங்கிப் போச்சு. நீ சொன்ன மாதிரி, அந்தப் புள்ளையும் என் புள்ளதான். எங்க இருந்தாலும் அவ நல்லா இருந்தா எனக்குப் போதும்,” -ன்னு காளீஸ்வரனோடக் கையப் பிடிச்சிகிட்டு அழுதவ, எல்லாரோடயும் கெளம்பிப் பஞ்சாயத்துக்குப் போனா.
சரியா 10:00 மணிக்கு எல்லாரும் ஊருக்குள்ள இருக்கிறப் பொதுவான எடத்துலக் கூடிட, பஞ்சாயத்து ஆரம்பிச்சது. பெரிய மீசையோட, பெரிய ஆலமரத்துக்கு அடியில இருந்த திண்ணையில நாலஞ்சுப் பெரிசுகள் தீர்ப்புச் சொல்றதுக்காக உக்காந்திருந்தாங்க. அதுல ஒருத்தர், “ஏப்பா முனியாண்டி.. நீதான் காளீஸ்வரன் தங்கச்சி மேகவாணி மேலேயும், அவர் குடும்பத்து மேலேயும் பிராதுக் குடுத்திருக்க. அது என்ன ஏதுன்னு நீயே விலாவாரியாச் சொல்லிரு,” -ன்னு சொல்ல, எல்லாருக்கும் வணக்கம் வச்ச முனியாண்டி, வெற்றிக்கு நிச்சயிக்கப்பட்ட மேகா வேற ஒருத்தன, குறிப்பா அசலூர்க்காரனக் காதலிக்கிறதுனால, அவ ஊர்க் கட்டுப்பாட்ட மீறிட்டான்னு, அவளோடக் குடும்பத்தினர் அவளுக்கு சப்போர்ட் பண்றதுனால, அவங்களும் ஊர்க் கட்டுப்பாட்ட மதிக்கலைன்னு, இவங்களோட இந்தச் செயல் மத்த இளசுகளையும் காதலிக்கத் தூண்டும்ன்னும் குற்றம் சொன்னான்.
தொடரும்..
(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)