Home மூர்கனின் காதலிமூர்கனின் காதலி CH 40

மூர்கனின் காதலி CH 40

by Thenaruvi Tamil Novels

அத்தியாயம் 40

“அதுக்கு இப்ப என்னம்மா பண்றதுன்னு கேக்குறேன்..?? உன்னையும் ‌தானே வெளியூர்ல படிக்க வச்சேன்…!! அந்தப் புள்ளையும் நீயும் ஒரே காலேஜ்லதான் படிச்சீங்க.‌ அது வெளியூர்ல வேலை தேடிப் போயி, நல்லா புளியங்கொம்பா பிடிச்சுட்டு வந்திருக்கு. உனக்கு இந்த மாதிரி வசதியான மாப்பிள்ளையை கல்யாணம் கட்டணும்னு ஆசை இருந்திருந்தா, அவளுக்கு முன்னாடி எப்படியாவது அந்தப் பையனை நீ வளைச்சுப் போட்டிருக்கணும்..!! இப்ப பாரு.. காளீஸ்வரன் குடும்பத்துக்கு அந்த விஷ்வா பேர்ல லாட்டரி சீட்டு அடிச்சிருக்கு. பொண்ண பணக்காரனுக்கு கட்டிக் கொடுத்து, அவன் பெரிய ஆள் ஆயிடுவான்.

அப்புறம் ஊருக்குள்ள முன்ன இருந்ததைவிட அவனுக்கு ‌ செல்வாக்கு அதிகமாகி ‌ சுலபமா எலக்சன்ல ஜெயிச்சுப்புடுவான். அப்புறம் நம்ம தலையில துண்டு போட்டுட்டு உக்காந்திருக்க வேண்டியதுதான். எனக்கு அத நெனச்சாதான் கடுப்பா இருக்கு மித்ரா.”ன்னு சொல்லி சலிச்சுக்கிட்டான் மாயாண்டி.

அப்பா சொன்னதை தன் மண்டைக்குள்ள ஓடவிட்டுக்கிட்டு இருந்த மித்ரா, “நடக்கப் போற பஞ்சாயத்துல அவங்க குடும்பத்தை அசிங்கப்படுத்துறதை விட, விஷ்வாவையும் மேகாவையும் எப்படியாவது பிரிச்சு அவள அந்த வெட்டிப் பையன் வெற்றிக்கு கட்டி வச்சுடனும். அப்புறம் எப்படியாவது விஷ்வா கிட்ட பேசி பழகி நான் அவனை கல்யாணம் பண்ணிக்கணும். அதுக்கு நீங்கதான் எனக்கு ஹெல்ப் பண்ணனும்ப்பா.

நான் விஷ்வாவ கல்யாணம் பண்ணிக்கிட்டா, இப்போ ‌ அவங்களுக்கு என்னென்ன கிடைக்கும்னு நீங்க சொன்னீங்களோ.. அதெல்லாம் நமக்குக் கிடைக்கும்.”ன்னு சொல்லிட்டு வில்லத்தனமா சிரிச்சா.

அவள் இப்படி உடைச்சுப் பேசுன பிறகு தான் தன் மகளோட எண்ணத்தைப் புரிஞ்சி கிட்ட மாயாண்டி, “அம்மா மித்ரா.. நீ உன் அப்பனையே மிஞ்சிருவ போலயே..!! எவ்வளவோ பண்ணியாச்சு.. இதையும் நீ சொன்ன மாதிரி முயற்சி பண்ணிப் பார்த்துடலாம். அந்தப் பையனும் ஹீரோ கணக்கா நல்லாத் தான் இருக்கான். உனக்கு பொருத்தமான மாப்பிள்ளை தான். நீ அப்பா கிட்ட சொல்லிட்டல்ல.. இனி ஆக வேண்டியத நான் பாத்துக்குறேன்.”ன்னு உறுதியா சொல்ல, “ரொம்ப தேங்க்ஸ் அப்பா. நான் போய் கெளம்புறேன். இன்னைக்கு அந்த மேகாவை விட நான் தான் அழகா இருக்கணும். என்னோட அழகுல அப்படியே அந்த விஷ்வா சொக்கிப் போயி அவள விட்டுட்டு என் முந்தானைய புடிச்சுட்டு சுத்தணும்.” என்ற மித்ரா ‌ ஊஞ்சல்ல இருந்து குதிச்சு இறங்கி தன் ரூமுக்கு வேகமா ஓடிச் சென்றாள்.

அவர்கள் பேசுனதை ஓரமா நின்னு கேட்டுக்கிட்டு இருந்த மித்ராவோட அம்மா கீதா, “இதெல்லாம் எங்க‌ போய் முடியப் போகுதோ தெரியல. இன்னொருத்திய விரும்பறவன் மேல எப்படித்தான் இவளால ஆசைப்பட முடியுதோ..!! இதுல இவங்க அப்பனும் இவ என்ன சொன்னாலும் கேக்குறான்..!! ச்சே.. எல்லாம் என் கிரகம்.. இந்த பாழாப் போன குடும்பத்துல வந்து மாட்டிக்கிட்டு முழிக்கிறேன்.”ன்னு புலம்பிக்கிட்டே போயிட்டாங்க.

அரண்மனையில்..

பாவாடை தாவணி போட்டிருந்த இளம் பொண்ணு ஒருத்தி, புதுசா பூத்த மல்லிகைப்பூக்களைப் பறிச்சு அதைக் கட்டி தன் தலையில வச்சுக்கிட்டு, மொத்தத்துல கிராமத்து தேவதை மாதிரி freshஆ இருந்தா. அவள் நீளமா இருந்த தன் பாவாடையை லேசா தூக்கிப் பிடிச்சுக்கிட்டு அரண்மனையோட படிகள்ல வேகமா ஏறிக்கிட்டு இருந்தா. அவள் வேகமா போனதுல அவ கால் கொலுசு ஜல் ஜல்ன்னு சத்தம் எழுப்ப, மத்தவங்க எல்லாரும் மேகா மற்றும் விஷ்வாவுடன் தியான மண்டபத்துல இருந்த நிலையில, ஒரு ஓரமா நின்னு பல் விளக்கிக்கிட்டிருந்த அரவிந்த் “என்ன ஜல் ஜல்னு கொலுசு சத்தம் கேக்குது..!! ஒருவேளை மோகினிப் பிசாசு எதாவது வந்திருச்சா..?? கிராமத்துல பேய் பிசாசு எல்லாம் நிறைய இருக்கும்னு சொல்லுவாங்களே..!! ஆனா எப்படி அது பகல்லயே வரும்..??”ன்னு வாய்விட்டு புலம்பிக்கிட்டு இருந்தான்.

அரண்மனைக்குள்ள வந்த அந்தப் பொண்ணு அவன் சொன்னதைக் கேட்டுட்டு “என்ன இவரு ஒரு சாதாரண கொலுசு சத்தத்துக்குப் போய் இப்படி பயப்படுறாரு..!! கருப்பு யூனிஃபார்ம் போட்டிருக்கிறவங்க எல்லாம் பாதுகாப்புக்கு வந்தவங்கன்னு சொன்னாங்களே.. ஒரு கொலுசு சத்தத்துக்கே இப்படிப் பயப்படுறாரு. இவரா பாதுகாப்பு கொடுக்கப் போறாரு..??”ன்னு நெனச்சு ஹிஹிஹி என சத்தமா சிரிச்சா. 

அதனால “வந்திருக்கிறது கன்பார்ம்மா மோகினிப் பிசாசுதான்டோய்..!!”ன்னு நெனச்சுப் பதறிய அரவிந்த் வேகவேகமா பல்லை விளக்கினவன் “எல்லா அரண்மனைக்குள்ளயும் பேய் இருக்கும்னுதானே காலம் காலமா படம் எடுக்குறாங்க…!! நம்ம இன்னும் அஞ்சு நிமிஷம் இங்க இருந்தாலும் அடுத்து அரண்மனை 5க்கு கன்டென்ட் ஆயிடுவோம். முதல்ல இந்த இடத்தை காலி பண்ணனும்.”ன்னு நெனச்சான்.

“இவர கொஞ்சம் பயமுறுத்திப் பார்க்கலாம். ஜாலியா இருக்கும்.”ன்னு நெனச்ச அந்தப் பொண்ணு தனக்குள்ள குறும்பாக் சிரிச்சுட்டு மெல்ல அவனருகில் போய் “பேபேபேபே..!!!”ன்னு சத்தமா கத்த, “ஆஆஆ..!!”ன்னு அலறின அரவிந்த் கால் வழுக்கி பால்கனி வழியா கீழ விழப் போனான்.

தொடரும்..

(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)

You may also like

Leave a Comment

About Me

Featured