“நா இதெல்லா உனக்கு முன்னாலயே ஒருத்தருக்கு பல தெடவ செஞ்சிருக்கேன்.” என்று அவன் கூற, அடுத்த நொடி அவள் இதயம் நின்று துடித்தது.
அவன் விழிகளிலோ கண்ணீர் தழும்ப, அவள் விழிகளிலோ பதற்றம் ததும்பியது. அதில் அத்தனை தயக்கமாய் தன் இதழ்களை பிரித்தவள், “அ..அது யாருன்னு நா தெரிஞ்சுக்..” என்று கேட்க வர, “என் அம்மா” என்றான் அகன்.
அதில் சட்டென்று அவள் புருவங்கள் விரிய, அவன் விழிகளை தாண்டி வெளியில் ஒழுகியது அவன் கண்ணீர்.
அது ஒரு கொடிய சம்பவம். திடீரென்று ஒரு பைக்கை இடித்து தூக்கியிருந்தது ஒரு லாரி. அந்த கொடிய சத்தம் அந்த மொத்த சாலையயுமே திரும்பி பார்க்க வைத்திருக்க, கீழே இரத்த வெல்லமாய் சாலையில் கிடந்தனர் அவனின் தாய் தந்தை.
அடுத்து ஏம்புலன்ஸ் சத்தம் மருத்துவமனை என்று பல்வேறு விஷயங்கள் இன்னுமே அவன் நினைவில் நிற்க, காதை அழுத்தி மூடினான் அகன்.
அதில் இவள் பதறி அவன் கரத்தை பிடிக்க வந்து அப்படியே தயங்கி நிறுத்தினாள். அவனோ காதை அழுத்தி மூடியபடி, “அப்ப எனக்கு 17 வயசு. ஸ்கூல்ல இருந்து ஸ்ட்ரெயிட்டா ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போனாங்க.” என்றவனின் விழிகளில் இன்னுமே அந்த துயரம் அப்படியே இருந்தது.
உள்ளே இருவருக்கும் சிகிச்சை நடந்துக்கொண்டிருக்க, வேகமாய் கதவை திறந்துக் கொண்டு நுழைந்திருந்தான் அகன்.
“ம்மா..! ப்பா..!” என்று அவன் கதறிக்கொண்டு அருகில் வர, அவனை இழுத்து பிடித்தார் அவனின் சித்தப்பா.
“என்ன விடுங்க” என்று கத்தி கதறியவன், “அப்பா எந்திரிப்பா! அம்மா!” என்று மீண்டும் மீண்டும் அவன் கத்திய கத்தல் இன்னுமே அவன் மனதில் அழுத்தமாய் ஒலித்தது.
அதை கேட்ட மௌனாவிற்கோ இதயம் கனத்து கண்ணீர் அதிகரிக்க, “அன்னிக்கு என் அப்பா என்னவிட்டு போயிட்டாரு. அம்மாவும் என்னவிட்டு போக போறாங்கன்னு சொல்லிட்டாங்க.” என்றான் கமறிய குரலில்.
அதில் இவளின் உள்ளம் பதறி துடிக்க, அவனுக்கோ அந்த நிமிடம் இன்னுமே கண்ணுக்குள் இருந்தது.
“அவங்கள காப்பாத்துனாலும் கொறஞ்சது மூனு மாசந்தா.” என்று தன் சித்தப்பாவிடம் மருத்துவர் கூறியதை ஒளிந்து நின்றபடி கேட்டுக்கொண்டிருந்தான் அகன்.
“வேணுன்னா டிஸ்சார்ஜ் பண்ணிக்கோங்க.” என்று அந்த மருத்துவர் கூறியிருக்க, அதன் பிறகு படுத்த படுக்கையாய் கிடந்த தன் தாயை அந்த வாடகை வீட்டில் வைத்து அவன்தான் பார்த்துக் கொண்டான். அவனுக்கு சொந்தம் என்று இருப்பது அவனின் சித்தப்பா மட்டுமே. தன் தந்தையின் தம்பி. அவருக்குமே மனைவி இல்லை. இரண்டு பெண் குழந்தைகளை அவர்தான் பார்க்க வேண்டும் என்பதால் அவராலும் அவனுடன் இருக்க முடியவில்லை. அவ்வப்போது வந்து பார்த்துக் கொண்டார். அவனுக்கு தேவையான அனைத்தையும் தூரத்திலிருந்தே செய்து கொடுத்தார்.
ஆனாலும் அருகிலிருந்து அத்தனை கவனிப்பாய் பார்த்தது அகன் மட்டும்தான். தன் தாயுக்கே தாயாய் இருந்து அவரை குளிப்பாட்டுவது, புடவை மாற்றுவது, சோர் ஊட்டுவது, அவருக்கு டயப்பர் மாட்டுவது என்று அனைத்தையும் தாண்டி இந்த வயதில் நிற்கும் தருவாயில் இருந்த அவரின் மதாவிடாய் நேரங்களில், நேப்கின் மாட்டுவது, கரைகளை சுத்தம் செய்வது என்று அனைத்தையுமே அவன்தான் செய்தான்.
அதையெல்லாம் அவனின் தாயால் உணரவும் பார்க்கவும் மட்டுமே முடிந்ததே தவிர, உடலை ஒரு இஞ்ச்கூட அசைக்க முடியவில்லை. தனக்கு பெண் பிள்ளை இல்லை என்று எத்தனை முறை கவலைப்பட்டிருப்பார். அப்படி பெண் பிள்ளை இருந்தாலும் இந்தளவு தன்னை பார்த்துக்கொள்வாளா என்று தெரியாது. அவனோ பெற்ற குழந்தைக்கு செய்வதுப்போலதான் அனைத்தையும் செய்தான்.
இதனால் அவனுக்கு பள்ளி செல்ல முடியவில்லை. பள்ளியில் பர்மிஷன் வாங்கி வீட்டிலிருந்தே படித்து, தேர்வுகளுக்கு மட்டுமே பள்ளி சென்றான். மற்ற நேரங்களில் தன் தாயுடனே இருந்து அவருக்கு தேவையான அனைத்தையும் அவன்தான் செய்தான். அதையெல்லாம் பார்த்து அவனின் தாயால் கண்ணீர் மட்டுமே விட முடிந்தது.
கடைசியாய் அவரின் நீர் நிறைந்த விழிகளில் தன் மகனின் பிம்பம் மெல்ல மங்கலாகி தன் தாயின் பிம்பம்தான் தெரிய, அப்படியே அவரின் விழிகள் மூடியிருந்தது. வாழ்ந்த இத்தனை வருடங்களில் கடைசி நாட்களில் தான் அவரின் ஆன்மா திருப்தியடைந்ததோ என்னவோ, நிம்மதியாய் உயிர் பிரிந்தார்.
தன் கண்முன்னே தன் தாயின் உயிர் பிரிந்திருக்க, அவன் உயிருமே அசைவை நிறுத்தியிருந்தது. ஏனோ கத்த தோன்றவில்லை. கதற தோன்றவில்லை. அப்படியே தன் தாயின் பிண்டத்தை பார்த்தவனின் விழிகளில் மெல்ல நீர் நிரம்பி பொத்தென்று தரையில் விழுந்தது.
அடுத்த நொடி தன்னிலை பெற்று கண்ணீரை துடைத்துக் கொண்டவன், “இதெல்லாம் உங்கிட்ட ஒருநாள் சொல்லனும்னு..” என்று நிமிரும் முன் வேகமாய் அவனை கட்டிக்கொண்டாள் மௌனா.
அதில் அவன் திடுக்கிட்டு குனிந்து அவளை பார்க்க, அவளோ அவனை இறுக கட்டிக்கொண்டபடி அவன் கழுத்தில் முகம் புதைத்து, “ஐயம் சாரி” என்றாள் கண்ணீருடன்.
அதில் எதுவும் கூறாமல் அவளை இறுக கட்டிக்கொண்டவன், அவள் தோள்பட்டையில் முகத்தை புதைத்தான்.
அதில் அவனின் சிகைக்குள் கரத்தை நுழைத்து கண்ணீருடன் வருடிக் கொடுத்தவளுக்கோ உள்ளம் அத்தனை வலியை உணர்ந்தது.
“அவரு அப்பா அம்மா இல்லாம வளந்த புள்ள. எவ்ளோ கஷ்டத்த பாத்திருப்பாரு? அவருக்குன்னு இப்ப இருக்குற ஒரே உறவு நீதா.” என்று தன் தாய் கூறிய வார்த்தைகள்தான் நினைவில் ஓட, அவனை இன்னும் இறுக்கமாய் கட்டிக்கொண்டவள், “இனிமே நானும் உங்களுக்கு எல்லாமாவும் இருப்பேன்.” என்று மனதிற்குள் அழுத்தமாய் கூறிக்கொண்டாள்.
அடுத்த சில நிமிடங்களில் அவளை விலக்கி தன் கண்களை துடைத்துக் கொண்டவன், “மொதல்ல இத குடி.” என்றபடி மேசையிலிருந்த கஷாயத்தை எடுத்து நீட்டினான்.
அவளுக்கு கசப்பெல்லாம் பழகிய ஒன்றாய் இருக்க, முகம் சுழிக்காமல் அதை பிடித்து தண்ணீர் போல் மெல்ல குடிக்க ஆரம்பித்தாள். அதில் அவளின் தலையை நீவி கொடுத்து குடிக்க வைத்தவன், காலி க்ளாஸை விலக்கிவிட்டு அவள் இதழ்களை துடைத்துவிட்டான்.
அதில் அவளின் விழிகள் சிறு இரசனையோடு அவனை தழுவ, அவனோ துடைத்து முடித்துவிட்டு, “இப்ப கொஞ்சம் ரெஸ்ட் எடு. நா போய் எதாவது குக் பண்ணி எடுத்துட்டு வர்றேன்.” என்றபடி நகர போக, வேகமாய் அவன் கரம் பற்றினாள் மௌனா.
அதில் அவன் திரும்பி அவளை பார்க்க, அவள் விழிகளிலோ புதிதாய் ஒரு ஏக்கம் துளிர்விட்டிருந்தது. நொடிக்கூட விலகாமல் அவன் அருகாமையிலேயே இருக்க வேண்டும் என்று உள்ளம் தவித்தது.
அதில் அவளின் கன்னம் பற்றியவன், “என்ன ஆச்சு ம்மு?” என்று பதற்றமாய் கேட்க, அதில் சிறு ஏக்கத்தோடு அவன் விழிகளையே பார்த்தவள், “இப்ப வேற எதுவும் வேண்டா. நீங்..” என்று கூற வர, அவனின் கைப்பேசி ஒலித்தது.
அதில் அவள் திடுக்கிட்டு நிறுத்தி திரும்பி பார்க்க, அந்த மேசையின் மீது அவனின் கைப்பேசி “ஆஃபிஸ் காலிங்” என்ற சத்தத்தோடு ஒலித்தது.
அதில் சட்டென்று நெற்றியை விரித்தவளுக்கு, இப்போதே அவன் அலுவலகம் செல்ல வேண்டும் என்ற நினைவே வந்தது.
திரும்பி மொபைலை பார்த்தவனுக்கோ இப்போதே அவன் தவறவிட்ட முக்கிய வேலை ஒன்று நினைவிற்கு வந்தது.
அதில் அவசரமாய் காலை அட்டன் செய்தவன், “ஹலோ சார்.” என்றான் வேகமாக.
“என்ன பண்ணிட்டிருக்க அகன்? நா நைட்டே அந்த மெயில சென்ட் பண்ண சொன்னேந்தான?” என்று கேட்டார் அவனின் டீம் ஹெட்.
“சாரி.. சாரி சார். ஒரு மெடிக்கல் எமர்ஜன்சி. அதா மறந்துட்டேன். இப்பவே அனுப்பிரட்டுமா?” என்று கேட்க, “நோ யூஸ். பேசாம நீயே இன்னிக்கு ப்ரசன்ட் பண்ணிரு.” என்றார் அவர்.
“நானா?” என்று அவன் புருவம் விரிக்க, “எஸ். நம்ப டீம்ல ஒருத்தர் ப்ரசன்ட் பண்ணா போதும். சோ நீயே பண்ணிரு. நா வேணுன்னா பர்மிஷன் வாங்கி குடுக்குறேன்.” என்றார்.
அதில் தயக்கமாய் புருவத்தை சொரிந்தவன், “சாரி சார். இன்னிக்கு என்னால ஆஃபிஸ் வர முடியாது.” என்றான்.
அதில் மௌனா சட்டென்று திகைத்து அவனை பார்க்க, “எனக்கு ஒரு மூனு நாள் லீவ் வேணும் சார்.” என்றான் அகன்.
“ஆர் யூ மேட்? நீ கமிட் ஆயிருக்குற ப்ராஜக்ட் அர்ஜன்சி தெரியும்தான? க்ளையண்ட் சைடுல இருந்து எவ்ளோ பிரஷர் இருக்கு. இந்த மூனு நாள் தான் ரொம்ப க்ரிட்டிக்கல். இந்த நேரத்துல லீவ் கேட்டுட்டு இருக்க?” என்று கேட்டார்.
அதில் அகன் தயக்கமாய் நிமிர்ந்து தன் மனைவியை பார்க்க, அவளோ பதற்றமாய் அவனை நோக்க, அவன் மனமோ அவளை தவிற வேறு எதை பற்றியுமே இப்போது யோசிக்கவிடவில்லை.
“சாரி சார். இந்த லீவ் எனக்கு ரொம்ப அவசியம். என்னால வர முடியாது. வேணுன்னா அந்த ப்ராஜக்ட்டுல இருந்து வெலகிக்குறேன்.” என்றான் அகன்.
அதில் இங்கே இவருக்கோ கோபம் பற்றிக்கொண்டு வர, “என்ன வெளையாடிட்டு இருக்கியா? லாஸ்ட் மினிட்ல வந்து முடியாதுன்னு சொல்லிட்டிருக்க? இத மட்டும் சொன்ன டேட்ல முடிச்சு குடுக்கலன்னா உன் வேலையே..” என்று கூற வர, “நா ரிசைன் பண்றேன் சார்.” என்றான் அகன்.
அதில் மௌனா அதிர்ந்து அவனை பார்க்க, “வாட்?” என்றார் டீம் ஹெட்.
“நானே இந்த வேலைய ரிசைன் பண்றேன்.” என்றான் அகன். அவன் முகத்தில் அப்படியொரு தெளிவு, அவன் முடிவில் அப்படியொரு உறுதி.
– காதல் தீ தொடரும்…