Home FREE NOVELSதீயாய் தித்திக்கிறாய்CH-9

தீயாய் தித்திக்கிறாய்CH-9

by oviyablessy

அவள் விழிக‌ளை ச‌ந்தித்த‌வ‌ன், “உன் அம்மா இருந்திருந்தா ப‌ண்ணிருக்க‌ மாட்டாங்க‌ளா?” என்று கேட்டான்.

அதில் ச‌ட்டென்று அவ‌ளின் இத‌ய‌மே ஒரு நொடி நின்று துடிக்க‌, “உன‌க்கு எல்லாமாவும் நானே இருப்பேன்.” என்ற‌ அவ‌னின் வார்த்தைக‌ள் அவ‌ள் அடி ம‌ன‌தில் அழுத்த‌மாய் ஒலித்த‌து.

அந்த வார்த்தையில் உள்ள உண்மைத்தன்மை இப்போதே அவன் விழியில் தெரிந்தது அவளுக்கு. அதில் அவ‌ள் விய‌ப்பாய் அவ‌ன் விழிக‌ளை பார்க்க‌, அடி வ‌யிற்றில் மீண்டும் க‌த்தி இற‌ங்கிய‌து.

அதில் திடுக்கிட்டு இறுக்கி விழி மூடிய‌வ‌ளின் முக‌ம் மீண்டும் வ‌லியில் இறுக‌, அதில் ப‌த‌றி அவ‌ளைவிட்டு வில‌கிய‌வ‌ன், “நா எதாவ‌து பெயின் கில்ல‌ர் த‌ர‌வா?” என்று ம‌ருந்து பெட்டியை தேடினான்.

அதில் வ‌லியை இழுத்து பிடித்து விழியை பிரித்த‌வ‌ள், “இ..ல்ல‌ வேண்டா. அதெல்லா என‌க்கு ஒத்துக்காது.” என்றாள் இறுகிய‌ குர‌லில்.

“அதுக்காக‌ வ‌லியோட‌ இருப்பியா?” என்று அவ‌ன் ப‌த‌றி கேட்க‌, அவ‌ளோ க‌டின‌ப்ப‌ட்டு எழ‌ முய‌ன்ற‌ப‌டி, “ப்..ப்ளீஸ் என்ன‌ தூக்கி கீழ‌ ப‌டுக்க‌ வைக்கிறீங்க‌ளா?” என்று கேட்டாள்.

அதில் ப‌த‌றிய‌ப‌டி அவ‌ள‌ருகே வ‌ந்த‌ம‌ர்ந்த‌வ‌ன், “ஏ இங்க‌ க‌ம்ஃப‌ர்ட‌பிளா இல்ல‌யா?” என்ற‌ப‌டி மெத்தையை ஆராய்ந்து பார்க்க‌, அவ‌ளோ உட‌லை குறுக்கி துடித்த‌ப‌டி, “இ..ல்ல‌.. மெத்..தையில‌ க‌ரையாயிருச்சு..ன்னா க‌ஷ்ட‌மாயிரும்.” என்றாள் இறுகிய‌ குர‌லில்.

“க‌ரையான‌ வேற‌ மெத்த‌க்கூட‌ வாங்கிக்க‌லாம். நீ மொத‌ல்ல‌  ஸ்ட்ரெயின் ப‌ண்ணாம‌ ப‌டு.” என்று அவ‌ன் ப‌டுக்க‌ வைக்க‌, அவ‌ளோ வ‌லியில் மெத்தையை இறுக்கி பிடித்தாள்.

அதை பார்த்த‌வ‌னுக்கோ உட‌லெல்லாம் ப‌த‌றி துடிக்க‌, வேக‌மாய் அவ‌ள் க‌ன்ன‌த்தை பிடித்த‌வ‌ன், “ரெண்டே ரெண்டு நிமிஷ‌ம். இப்போ வ‌ந்த‌ர்றேன்.” என்று கூறிவிட்டு அவ‌ச‌ர‌மாய் ஓடினான்.

அதில் புரியாது அவ‌னை அழைக்க‌ முய‌ன்ற‌வ‌ள், மீண்டும் வ‌லியில் குறுகிக்கொண்டு துடிக்க‌ ஆர‌ம்பித்தாள்.

இங்கே கிச்ச‌னுக்கு வ‌ந்த‌ அக‌ன், த‌ன் மொபைலை எடுத்து இந்த‌  பிர‌ச்ச‌னைக்கான‌ நாட்டு வைத்திய‌ங்க‌ளை ச‌ர்ச் செய்தான். அதுவோ எக்க‌ச்ச‌மாய் வ‌ர‌, அவ‌னுக்கோ உள்ள‌ம் ப‌த‌றிய‌து. தெரியாத‌ எதையாவ‌து கொடுத்து வ‌லி அதிக‌மாகிவிட்டால் என்ன‌ செய்ய‌ என்று ப‌த‌றி யோசித்த‌வ‌ன், அப்போதே யோச‌னை வ‌ந்து வேக‌மாய் த‌ன் மாமியாருக்கு கால் செய்தான்.

இங்கே கிச்ச‌னில் ச‌மைத்துக்கொண்டிருந்த‌ மேக‌லாவோ, த‌ன் கைப்பேசி ஒலிக்கும் ச‌த்த‌ம் கேட்டு திரும்பி பார்க்க‌, அங்கே அவ‌ரின் ப‌ட்ட‌ன் ஃபோன் விடாது ஒலித்த‌து.

அதில் அடுப்பு புகையில் இருமிய‌ப‌டி எழுந்த‌வ‌ர், த‌ன் மொபைலை எடுத்து பார்க்க‌, “மாப்பிள்ளை” என்று த‌மிழில் சேவ் செய்து வைத்திருந்தார்.

அந்த‌ பெய‌ரை பார்த்த‌தும் புருவ‌த்தை சுருக்கிய‌வ‌ர், “இந்நேர‌த்துல‌ கூப்புடுறாரு?” என்ற‌ப‌டி அட்ட‌ன் செய்தார்.

“ஹ‌லோ மாப்..” என்று இவ‌ர் ஆர‌ம்பிக்கும் முன், “ஹ‌லோ அத்த‌!” என்று அவ‌ன் ப‌த‌றினான்.

அதில் ச‌ட்டென்று இவ‌ரின் உள்ள‌ம் ப‌த‌ற‌, “என்ன‌ ஆச்சு மாப்ள‌? எதாவ‌து பிர‌ச்ச‌னையா?” என்று ப‌த‌றி கேட்டார் மேக‌லா.

அத‌ற்கு அவ‌னும் ப‌த‌றிய‌ப‌டி அனைத்தையும் வேக‌மாய் கூற, அதை கேட்ட‌ அவ‌ருக்கு நெஞ்ச‌ம் ப‌த‌றிய‌து.

“என்ன‌ மாப்ள‌ சொல்றீங்க‌? ரொம்ப‌ இர‌த்த‌ போக்கு இருக்கா?” என்று இவ‌ர் ப‌த‌றி கேட்க‌, “ஆமா அத்த‌. என‌க்கென்ன‌மோ ப‌ய‌மா இருக்கு.” என்றான் அக‌ன் ப‌த‌றிய‌ப‌டி.

அதில் குழ‌ம்பிய‌ மேக‌லாவிற்குமே ம‌ன‌ம் ப‌த‌றிய‌து. என்றுமில்லாம‌ல்  இன்று எப்ப‌டி இந்த‌ளவு இர‌த்த‌ போக்கு ஆன‌து என்று யோசித்த‌வ‌ருக்கு ப‌த‌ற்ற‌ம்தான் அதிக‌மான‌து.

அதே விஷ‌ய‌ம்தான் இங்கே மௌனாவின் ம‌ன‌திலும் ஓடிக்கொண்டிருக்க‌, உட‌லை குறுக்கி வ‌லியில் துடித்துக் கொண்டிருந்தவ‌ள், அங்கிருந்த‌ கேல‌ண்ட‌ரைதான் பார்த்தாள்.

இது அவ‌ளின் மாத‌விடாய் தேதியே தான். புதிய‌ உற‌வு புதிய‌ இட‌ம் என்ப‌தால் அந்த‌ நேர‌ம் நெருங்கிய‌தைக்கூட‌ க‌வ‌னிக்காம‌ல் விட்டிருக்க‌, இன்று மாத‌விடாய் தொட‌க்க‌த்தில் க‌ருமுட்டை உடைந்து த‌ன்னை சுத்திக‌ரிக்கும் நேர‌த்தில் அவ‌னுட‌ன் கூட‌லில் இணைந்திருந்தாள். அதுதான் இவ்வ‌ள‌வு இர‌த்த‌ போக்கிற்கும் கார‌ண‌ம்.

அது ப‌டித்த‌ பெண் மௌனாவிற்கு ஓர‌ள‌வு புரிந்துவிட‌, அவ‌ளுக்கோ அழுகைதான் வ‌ந்த‌து. ஏற்க‌ன‌வே உயிர் போகும் அள‌விற்கு வ‌லிக்கும், இன்று உயிரே போய்விட்டால் ந‌ல்ல‌து என்று தோன்றும் அள‌விற்கு வ‌லி இருக்க‌, த‌ன் க‌ண‌வ‌ன் மீதும் கோவ‌ம் வ‌ந்த‌து. நேர‌ம் கால‌ம் இல்லாம‌ல் இவ‌ன் செய்த‌ செய‌லுக்கு, இவ‌ள் ம‌ட்டுமே வ‌லியை அனுப‌விக்கிறாள்.

“அத்த‌!” என்று இவ‌ன் ச‌த்த‌மாய் அழைக்க‌, அதில் திடுக்கிட்டு த‌ன்னிலை பெற்ற‌ மேக‌லா, “ஹா மாப்ள‌. அவ‌ளுக்கு மாத்ர‌ கீத்ர‌ எதுவும் குடுத்த‌ர‌ல‌ இல்ல‌?” என்று கேட்டார்.

“இல்ல‌ அத்த‌. அவ‌ வேணான்னு சொல்லிட்டா. வெந்தைய‌ம் குடுத்து பாக்க‌வா?” என்று அவ‌ன் ப‌த‌றி கேட்க‌, “இல்ல‌ மாப்ள‌. அது எல்லாருக்குமே வேல‌ செய்யாது. அவ‌ளுக்கு நா சொல்ற‌த‌ குடுங்க‌.” என்றார்.

“ச‌ரி சொல்லுங்க‌.” என்ற‌ப‌டி அவ‌ன் பேப்ப‌ர் பெண்ணை தேட‌, “கொஞ்ச‌ம் வேப்ப‌ எல‌, அதோட‌ ம‌ஞ்ச‌ள் சேத்து நல்லா அர‌ச்சு குடுக்க‌ணும்.” என்றார் மேக‌லா.

“என்ன‌?” என்று முக‌த்தை சுழித்த‌வ‌ள், “வேப்ப‌ எலையா?” என்று கேட்க‌, “ஆமா மாப்ள‌. மைய அரச்சு நெல்லிக்கா அள‌வு உருண்ட பண்ணி அப்ப‌டியே முழுங்க‌ வையுங்க‌.” என்றார் மேக‌லா.

“அத‌ எப்பிடி.. அவ‌ளுக்கு க‌ச‌க்குமே” என்று இவ‌ன் ப‌த‌றி விழிக்க‌, “அதெல்லா க‌ச‌க்காது.  சின்ன‌ வ‌ய‌சுல‌ இருந்து குடுத்து ப‌ழ‌க்க‌ப்ப‌டுத்திருக்கோம். க‌ண்ண‌ மூடிட்டு சாப்பிட்டிருவா.” என்றார் மேக‌லா.

“ஆனா..” என்று இவ‌ன் ம‌ன‌ம் ப‌த‌றி யோசிக்க‌, “ப‌ய‌ப்ப‌டாம‌ குடுங்க‌. அது ம‌ட்டுந்தா அவ‌ வ‌லிக்கு கேக்கும்.” என்றார் மேக‌லா.

அதில் ச‌ற்று தைரிய‌ம் பெற்ற‌வ‌ன், “ச‌ரிங்க‌ அத்த‌. நா இப்ப‌வே க‌டைக்கு போய் வெப்ப‌ எலைய‌ மொத‌ல்ல‌ வாங்கிட்டு வ‌ர்றேன்.” என்று அவ‌ன் அவ‌ச‌ர‌மாய் கிள‌ம்ப‌ போக‌, “மாப்ள‌ மாப்ள‌! அது க‌டையெல்லாம் கெடைக்காது. எங்க‌யாவ‌து ம‌ர‌த்துல‌ இருந்துதா பொறிக்க‌ணும்.” என்றார் மேக‌லா.

“ம‌ர‌மா?” என்று யோசித்த‌வ‌னுக்கு அப்ப‌டியொன்றை இந்த‌ ஊரில் பார்ப்ப‌தே அரிதாயிற்றே என்று தோன்றிய‌து. எங்கு பார்த்தாலும் க‌ட்டிட‌ங்க‌ள், சாலைக‌ள் என்று இய‌ற்கையே மொத்த‌மாய் அழிந்து கிட‌க்கும் ந‌க‌ர‌ ப‌குதியாயிற்றே இது. இங்கு போய் வேப்ப‌ ம‌ர‌த்தை எங்கு தேடுவ‌து என்று யோசித்த‌ப‌டியே திரும்பிய‌வ‌னின் பார்வை ஜ‌ன்ன‌ல் ப‌க்க‌ம் விழ‌, அடுத்த‌ நொடி விழியை அப்ப‌டியே நிறுத்தினான்.

அங்கே பில்டிங் வ‌ளாக‌த்தின் வெளியே தூர‌த்தில் ஒரு வேப்ப‌ ம‌ர‌ம் தெரிந்த‌து. ஆனால் அதுவுமே பாதி சொட்டையாகி இலைக‌ளெல்லாம் உதிர்ந்து ஓர‌ள‌வுதான் இலையோடு இருந்த‌து.

அதில் விழியை விரித்த‌வ‌ன், “கெட‌ச்சிருச்சு. நீங்க‌ ம‌ஞ்ச‌ள் எத்த‌ன‌ ஸ்பூன்னு ம‌ட்டும் சொல்லுங்க‌.” என்றான் வேகமாக‌.

“ஸ்பூனா? அந்த பொடி ம‌ஞ்ச‌லெல்லாம் க‌ல‌ப்ப‌ட‌மா இருக்கும். விர‌லி ம‌ஞ்ச‌ள்னு சொல்லுவாங்க‌ல்ல‌? அது ஒரு துண்டு சேத்து அரைக்க‌ணும்.” என்றார் மேக‌லா.

“விர‌லி ம‌ஞ்ச‌ளா?” என்று அவ‌ன் அவ‌ச‌ர‌மாய் த‌ன் ஃப்ரிட்ஜை திற‌ந்து தேட‌, “அது க‌ண்டிப்பா க‌டையில‌ கெடைக்கும்பா” என்றார் மேக‌லா.

அடுத்த‌ நொடி ஃப்ரிட்ஜை மூடிய‌வ‌ன், “தேங்க் யூ சோ ம‌ச் அத்த. நா இப்ப‌வே போறேன்.” என்ற‌ப‌டி அவ‌ச‌ர‌மாய் ஓடினான்.

இங்கே மெத்தை மொத்த‌மும் க‌ச‌ங்கும் அள‌விற்கு துடித்து பிர‌ண்டுக் கொண்டிருந்தாள் மௌனா. இந்நேர‌ம் த‌ன் வீட்டில் இருந்திருந்தால் த‌ன் அம்மாவும் ச‌கோத‌ரிக‌ளும் எதையாவ‌து கொடுத்து த‌ன் வ‌லியை குறைத்திருப்பார்க‌ளே. அங்கு வைத்திய‌ம் என்றால் ஊரே வைத்திய‌ சாலைதான். எங்கு வேண்டுமானாலும் எந்த‌ மூலிகை வேண்டுமானாலும் கிடைக்கும். ஆனால் இங்கு ப‌ச்சை நிற‌த்தில் பெயிண்ட்டை ம‌ட்டும்தான் பார்க்க‌ முடியுமே த‌விர‌, புல் பூண்டைக்கூட‌ பார்க்க‌ முடியாது போல‌. இப்ப‌டியொரு இட‌த்தில் வ‌ந்து சிக்கிவிட்டோமே என்று சித்திர‌வ‌தையாய் இருந்த‌து அவ‌ளுக்கு.

குறைந்த‌ப‌ட்ச‌ம் திரும‌ண‌ம் செய்யாம‌லாவ‌து இருந்திருக்க‌லாம். இன்று இந்த‌ தாங்க‌ முடியா வ‌லியும் அதிக இர‌த்த‌ போக்கும் இருந்திருக்காது என்று தோன்றிய‌து. இன்னும் எத்த‌னை எத்த‌னை வ‌லிக‌ளை நான் ம‌ட்டுமே அனுப‌விக்க‌ வேண்டும் என்று இறுக்கி விழி மூடி அழ‌வே துவ‌ங்கியிருந்தாள்.

அந்த‌ க‌ண்ணீரை துடைக்க‌ கூட‌ அருகில் யாரும் இல்லை. இர‌ண்டு நிமிட‌த்தில் வ‌ருகிறேன் என்று கூறி சென்ற‌ த‌ன் க‌ண‌வ‌ன், இப்போது வீட்டில் இருக்கும் அறிகுறியே தெரிய‌வில்லை அவ‌ளுக்கு. அதில் அசைய‌ முய‌ன்று எட்டி பார்க்க‌ நினைத்தாலும் முடிய‌வில்லை அவ‌ளால்.

அதில் த‌ன்னையே மீண்டும் ஆராய்ந்து பார்த்த‌வ‌ளுக்கு, இவ‌ன் உண்மையிலேயே த‌ன் மீது உள்ள‌ அக்க‌றையில்தான் இதெல்லாம் செய்தானா அல்ல‌து அவ‌னின் அடுத்த‌ ஆசைக்கு ப‌லியிட‌ இது ஒரு ஆர‌ம்ப‌மா? எதுவுமே புரியவில்லை அவ‌ளுக்கு. அவ‌ன் முக‌த்தைக்கூட‌ ஒழுங்காய் பார்க்காம‌ல்தானே ம‌ண‌மேடை வ‌ரை வ‌ந்திருந்தாள். அப்ப‌டியிருக்க‌ அவ‌ன் குண‌ம் என்ன‌வாக‌ இருக்கும் என்று ஒரே நாளில் அவ‌ளால் சொல்லிவிட‌ முடியுமா என்ன‌? அதை ப‌ற்றி யோசித்தாலே குழ‌ப்ப‌த்தை முந்திக்கொண்டு ப‌ய‌ம்தான் முத‌லில் எழுந்த‌து.

அவ‌னை ப‌ற்றி முழுதாய் தெரியாம‌லே முழு உட‌லையும் கொடுத்துவிட்டாள். ஆனால் ம‌ன‌ம்? அது அவ்வ‌ள‌வு எளிதில் அவ‌ன் ப‌க்க‌ம் சாய்ந்துவிடாதே. இதையெல்லாம் யோசிக்கும் நேர‌த்தில் அவ‌ளின் வலியும் நொடிக்கு நொடி அதிக‌ரிக்க‌, உட‌லை இறுக்கி குறுக்கி பிர‌ண்டு சுருண்டு அன‌லில் விழுந்த புழுவைவிட‌ அதிக‌ம் துடித்தாள் மௌனா.

அப்ப‌டியே ர‌ண‌ வேத‌னைக‌ளோடு வெகு நேர‌ம் க‌ட‌ந்திருக்க‌, ச‌டாரென்று அறை க‌த‌வு திற‌க்க‌ப்ப‌ட்ட‌து. அதில் அவ‌ள் திடுக்கிட்டு அர‌ண்டு நிமிர‌, அவ‌ச‌ர‌மாய் பாய்ந்து உள்ளே வ‌ந்தான் அக‌ன்.

அதில் அவ‌ளோ ப‌த‌றி எழ‌ முய‌ல‌, “இரு இரு ஸ்ட்ரெயின் ப‌ண்ணாத‌.” என்ற‌ப‌டி வேக‌மாய் அருகில் வ‌ந்து அவ‌னே அவ‌ளுக்கு உத‌வி செய்தான்.

அதில் அவ‌ளோ அத்த‌னை வ‌லியோடு த‌ன் உட‌லை தூக்கி மெதுவாய் சாய்ந்த‌ம‌ர‌, “இத‌ சாப்புடு.” என்று கொடுத்தான் அக‌ன்.

அதில் அவ‌ள் வ‌லியோடு இமையை பிரித்து அதை என்ன‌வென்று ஆராய‌, வேம்பு ம‌ஞ்ச‌ள் வாச‌ம் க‌ப்பென்று வ‌ந்த‌து. அதில் முடியா நிலையிலும் சிறு விய‌ப்போடு மெல்ல‌ நிமிர்ந்த‌வ‌ள், “உங்க‌ளுக்கு எப்பிடி..” என்று கேட்க‌ வ‌ர‌, “உன் அம்மாதா சொன்னாங்க‌. இத‌ சாப்புடு செரியாயிரும்.” என்று வாய‌ருகே அந்த உருண்டையை நீட்டினான்.

அதில் அவ‌ளோ வ‌லியோடு மெல்ல‌ அசைந்த‌ம‌ர்ந்து, மெதுவாய் த‌ன் இத‌ழ்க‌ளை திற‌க்க‌, அந்த‌ உருண்டையை அப்ப‌டியே அவ‌ள் வாயிக்குள் போட்ட‌வ‌ன், அவ‌ளை விழுங்க‌ வைத்தான்.

அவ‌ளோ ப‌ழ‌க்க‌ப்ப‌ட்ட‌ சுவை என்ப‌தால் மெல்லிய‌தாய் ம‌ட்டுமே முக‌த்தை சுழித்து, அப்ப‌டியே விழுங்கிவிட்டாள். அது உள்ளே இற‌ங்கிய‌ நொடி அவ‌ள் வாயெல்லாம் க‌ச‌ப்பாய் இருக்க‌, இப்போது அவ‌ள் முக‌ம் அதிக‌ம் சுழிந்த‌து. அத‌ற்குள் வேக‌மாய் அவ‌ன் த‌ண்ணீரை எடுத்து நீட்ட‌, அதையும் மெல்ல‌  குடிக்க‌ ஆர‌ம்பித்தாள்.

அப்ப‌டியே ஒரு க‌ர‌த்தால் அவ‌ளை குடிக்க‌ வைத்துக் கொண்டிருந்த‌வ‌னின் ம‌று க‌ர‌ம் அவ‌னின் முதுகுக்கு பின்னால் ம‌றைந்திருக்க‌, அந்த‌ க‌ர‌ம் முழுக்க சிதைந்து கிழிந்து இர‌த்த‌ம் ஒழுகிக்கொண்டிருந்த‌து.

       – காய‌ தீ தொட‌ரும்…

எனது கதைகளை காட்சிகளாக காண பின் தொடருங்கள்👇
insta id : oviya_blessy
FB id : Oviya Blessy Novels

You may also like

Leave a Comment

About Me

Featured