அத்தியாயம் 81
விஷ்வா கோபமா அந்த மர்மக் குரல்கிட்ட, “ஒழுங்கு மரியாதையா என் முன்னாடி வந்து பேசு. இல்லன்னா பேசவே பேசாத, அப்படியே போயிடு,” என்றான்.
என்னதான் அந்த குரல் அவனைப் பெருசா பாதிக்கலைனாலும், தொடர்ந்து அதோட பேசிக்கிட்டே இருந்ததுனால விஷ்வாவுக்கு தலை வலிக்கிற மாதிரி இருந்தது. அதனால அவன் தலையை பிடிச்சுக்கிட்டு அமர்ந்திருக்க, அவன் முன்னாடி ஒரு இளைஞன் தோன்றுனான்.
அவனைப் பார்த்தவுடனே பதறிப்போய் எழுந்து நின்ன விஷ்வா, கலங்கிய கண்ணோட “விஜய்..!!” என்றான்.
“I am so sorry விஷ்வா. எவளோ ஒருத்திக்காக நான் உன்னை தனியா விட்டுட்டு போனது தப்பு தான்,” என்று உடைந்த குரல்ல அவன் முன்னாடி நின்ன விஜயோட உருவம் சொன்னது.
“தப்பு தாண்டா. அந்த தப்புக்காக நான் உன்னை என்னைக்குமே மன்னிக்க மாட்டேன். என்னை பத்தி நீ யோசிக்கவே இல்லைல..!!” என்று விஷ்வா கேட்க, “ஹே.. சாரிடா. இனிமே நான் உன் கூடவே இருக்கேன் சரியா? நடுவுல நடுவுல வந்து உன்னை டிஸ்டர்ப் பண்ணாம எப்பவுமே உன் கூடவே இருக்கேன். முன்னாடி மாதிரி நீயும் நானும் எப்பவும் ஒண்ணாவே இருக்கலாம். ஆனா நமக்கு நடுவுல இந்த பொண்ணுங்களே வேணாம்டா.
நீ அந்த பொண்ண கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொல்லு. இப்பவே அவளை உன்னை விட்டுட்டு போகச் சொல்லு. உனக்கு நான் இருக்கேன்,” என்றான் விஜய்.
“டேய் உனக்கு அவகூட என்னடா பிரச்சனை? அவளை எதுக்கு போகச் சொல்ற? பாட்டிக்காகத்தான் நான் அவளை கல்யாணம் பண்ணிக்கிட்டேன். அவளை நான் அனுப்பி விட்டுட்டா, பாட்டி கோவப்படுவாங்கடா,” என்று விஷ்வா எவ்வளவோ சொல்லிப் பார்த்தும் அதை கேட்காம விஜய்,
“அதெல்லாம் எனக்குத் தெரியாது. அவ உன்கூட இருக்கிறது எனக்குப் பிடிக்கல. நீ அவகூட இருக்கிற வரைக்கும் நான் உன் கூட இருக்க மாட்டேன். உனக்கு நான் வேணும்னா, நீ அவளை போகச் சொல்லு,” என்று சொன்னதையே சொல்லிக்கிட்டு இருந்தான்.
இதனால எரிச்சல் அடைந்த விஷ்வா, “ஆஆஆ..!! Enough விஜய்.. முடியாதுடா. என்னால அவளை யாருக்காகவும், எதுக்காகவும் போகச் சொல்ல முடியாது. அவ என் பொண்டாட்டி. புரிஞ்சுதா உனக்கு??” என்று தொண்டை கிழிய கத்த, அதுவரைக்கும் அவன் கண் முன்னாடி இருந்த உருவம் அப்படியே காத்துல கரைஞ்சு போயிடுச்சு.
சுத்தி முத்தி பார்த்துட்டு தரையில உட்கார்ந்து விஜயை நினைச்சு, “டேய் விஜய் சாரிடா. மறுபடியும் என்னை தனியா விட்டுட்டு போயிடாதடா,” என்று சொல்லித் தலையில அடிச்சுக்கிட்டு அழுதான் விஷ்வா. கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி அவன் கண்ணுக்கு தெரிஞ்சது நிஜமாவே விஜயோட ஆத்மாவா? இல்ல, தம்பியோட பிரிவால மனசளவுல பாதிக்கப்பட்ட விஷ்வா அவனா கற்பனை பண்ணிக்கிட்ட உருவமா? அந்த கடவுளுக்குத் தான் வெளிச்சம்.
மறுநாள் காலையில விஷ்வா – மேகா கல்யாணத்துக்காக மதுரையில இருக்குற அங்காளம்மன் கோவிலுக்கு எல்லாரும் போனாங்க. அது ரொம்ப சிம்பிளான கிராமத்து ஸ்டைல் மேரேஜ். மேகா ஒரு சிவப்பு நிற கூறப்புடவையில இருக்க, விஷ்வா வெள்ளை பட்டு வேட்டி சட்டையில இருந்தான். இம்முறை மேகா வீட்டோட குலதெய்வக் கோயில்ல கல்யாணம் நடக்குறதுனால, அவங்க வழக்கப்படி தாலி வாங்கி வச்சிருந்த காளீஸ்வரன் அதை விஷ்வா கிட்ட கொடுத்தாரு. அம்மன் சன்னதியில எல்லார் முன்னாடியும் மேகா கழுத்துல ரெண்டாவது முறையா தாலி கட்டுனான் விஷ்வா. இப்போ அவ கழுத்துல ரெண்டு தாலி தொங்கிட்டு இருந்தது.
அந்த ரெண்டு தாலியையும் ஒண்ணா சேர்த்துப் பிடிச்ச மேகா, “ரெண்டு தடவை நீங்க என் கழுத்துல தாலி கட்டிருக்கீங்க. சோ, நம்ம ரிலேஷன்ஷிப் டபுள் டைம் ஸ்ட்ராங் ஆயிடுச்சு. இனிமே நீங்க என்னை விட்டு எங்கயும் போக முடியாது. லைஃப் லாங் உங்களை நானும், என்னை நீங்களும் டாலரேட் பண்ணித்தான் ஆகணும். நமக்கு வேற ஆப்ஷனே இல்லை,” என்று சிரிச்சுக்கிட்டே விஷ்வா தோள்ல இடிச்சா.
அவ அப்படிச் சொன்னதும் விஷ்வாவுக்கு விஜய் சொன்னது ஞாபகம் வந்துடுச்சு. அவ பக்கத்துல நிக்கிறதுக்கே ஒரு மாதிரி அன்-கம்ஃபர்டபிளா ஃபீல் பண்ணி, “இரு நான் வந்துடுறேன்,”னு சொல்லிட்டு அங்கே இருந்து நகர்ந்தான்.
“சீக்கிரம் வாங்க. இங்க பொங்கல் வச்சுட்டு கிளம்பி ரெண்டு மணி நேரத்துல ரிஜிஸ்டர் ஆபீஸ்ல இருக்கணும். லேட் ஆனா அண்ணா திட்டுவாரு,”னு மேகா சொல்ல, விஷ்வா லேசா தலையசைச்சுட்டு வெளிய வந்தான். காரை ஓரம் கட்டி அதுல சாஞ்சு நின்னுட்டு சிகரெட் பிடிக்க ஆரம்பிச்சான். அப்போ அந்த புகையில விஜயோட உருவம் தெரியுற மாதிரி அவனுக்குத் தோணுச்சு.
உடனே சிகரெட்டை கீழே போட்டுட்டு, “விஜய்..!!”னு முணுமுணுத்தான். அந்த புகை அப்படியே கலைஞ்சு போயிடுச்சு. விஷ்வா ஏதோ பிரம்மை பிடிச்சவன் மாதிரி வானத்தையே பார்த்துட்டு நிக்க, அவனைத் தேடி வந்த மகேஷ், “என்ன பாஸ் இங்க வந்து நிக்கிறீங்க? உள்ள எல்லாரும் உங்களுக்காகத் தான் வெயிட்டிங். வாங்க போலாம்,”னு கையைப் பிடிச்சு இழுத்துட்டு போனான்.
பொங்கல் வைக்கத் தேவையானதை ரெடி பண்ணிட்டு இருந்த மேகா,
“உங்களைக் காணோமேன்னு கால் பண்ணலாம்னு நினைச்சேன். பரவால்ல நீங்களே வந்துட்டீங்க. இங்க வாங்க. நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து தான் பொங்கல் வைக்கணுமாம். நமக்கு யாரும் ஹெல்ப் கூட பண்ணக்கூடாதுன்னு அண்ணா ஸ்ட்ரிக்ட்டா சொல்லிட்டாரு,”னு சொல்லிட்டு அடுப்பை பத்த வச்சா.
விஷ்வா இதுவரைக்கும் வாழ்க்கையில சுடுதண்ணி கூட வச்சது கிடையாது. அதனால அவ பக்கத்துல உட்கார்ந்து, என்ன பண்றதுன்னு தெரியாம அவளையே பார்த்துட்டு இருந்தான். மேகா எல்லாத்தையும் பானைக்குள்ள போட்டு கிண்டிக்கிட்டு இருந்தா.
விஷ்வா ஆச்சரியமா, “உனக்கு சமைக்கத் தெரியுமா?”னு கேட்டான்.
“எங்க அண்ணனைப் பார்த்ததுக்கு அப்புறமா இப்படி கேக்குறீங்க? எங்க வீட்ல எல்லாருக்கும் சமைக்கத் தெரியும். எல்லாரும் எல்லாம் கத்துக்கணும்னு எங்க அண்ணா ஒவ்வொண்ணையும் பார்த்துப் பார்த்துச் சொல்லிக் குடுத்து வளர்த்திருக்காரு.
நாங்க சின்னப் பசங்களா இருக்கும்போது காலால செருப்பு இல்லாம கல்லுல மண்ணுல ஓட விடுவாரு. காட்டுக்குள்ள மாட்டிக்கிட்டா எப்படித் தப்பிக்கணும்னு ‘சர்வைவர் டெக்னிக்ஸ்’ எல்லாம் அப்பவே சொல்லிக் குடுத்தாரு. எங்க அண்ணியும் எனக்கு அம்மா மாதிரி தான்.
எங்க அப்பா அம்மா இருந்திருந்தா கூட இப்படி வளர்த்திருப்பாங்களான்னு தெரியல,”னு மேகா தன் அண்ணன் பெருமையைப் பேசினா.
அவங்க சொந்தக்காரங்க கூட சிரிச்சுப் பேசிட்டு இருந்த காளீஸ்வரனை பார்த்த விஷ்வா, “ஆமா, உங்க அண்ணா உனக்கு பெத்தவங்க இல்லைங்கிற குறையே தெரியாம வளர்த்திருக்காரு. ஆனா நான் தான் சரியான அண்ணனா இருந்து என் தம்பியைப் பார்த்துக்கல.
அதான் ஒரு லவ் பிரேக்கப்புக்காக அறிவில்லாம என் தம்பி தற்கொலை பண்ணிக்கிட்டான். நான் மட்டும் பிசினஸ் பிசினஸ்னு அலையாம அவனை கவனிச்சுருந்தா, இப்படி ஆகியிருக்காது. அவனைத் தைரியமான ஆளா வளர்க்காம விட்டுட்டேன்,”னு குற்ற உணர்ச்சியில வருந்தினான்.
அரிசி வெந்துடுச்சான்னு மேகா செக் பண்ண, பொங்கல் பொங்கி வந்தது. உற்சாகமா விஷ்வா சட்டையைப் பிடிச்சு இழுத்து, “இங்க பாருங்க பொங்கல் பொங்குது..!!”னு கத்துனா. வியர்த்து விறுவிறுத்து, புடவையைத் தூக்கிச் சொருகிக்கிட்டு சாதாரணமா இருந்த மேகா, விஷ்வா கண்ணுக்குப் பேரழகியா தெரிஞ்சா. ஒரு நிமிஷம் அவளை ரசிச்சவன், தன் தோள்ல இருந்த துண்டை எடுத்து அவ முகத்துல இருந்த வியர்வையைத் துடைச்சு விட்டான்.
இதை கவனிச்சுட்டு இருந்த மகேஷ், எல்லாத்தையும் போட்டோவாவும் வீடியோவாவும் எடுத்துக்கிட்டான். “இதெல்லாம் எதுக்குடா? பாட்டிக்கு அனுப்பவா?”னு அரவிந்த் கேட்க, “அவங்களுக்கும் தான். ஆனா இப்படி கேண்டிட் போட்டோ எடுக்கச் சொன்னதே மேகாதான்,” என்றான் மகேஷ்.
“மேகாவா.. எதுக்கு?”னு அரவிந்த் குழப்பமா கேட்க, “முதல்ல அவங்களும் பாஸும் பிரஸ் மீட்ல இருக்கும்போது நான் எடுத்த போட்டோ அவங்களுக்குப் பிடிச்சிருந்தது. அதனால எங்களுக்கே தெரியாம இந்த மாதிரி நல்ல போட்டோ ஏதாவது இருந்தா எடுத்து அனுப்புங்கன்னு சொன்னாங்க,”னு சொல்லி அந்த போட்டோவை மேகாவுக்கு அனுப்புனான் மகேஷ்.
தாவணி பாவாடை கட்டியிருந்த வெண்ணிலா பசங்க கூட சேர்ந்து நொண்டி விளையாடிட்டு இருந்ததை பார்த்த அரவிந்த், “இதுவும் ஒரு அழகான மொமெண்ட் தானே,”னு நினைச்சு அவளுக்கே தெரியாம போட்டோ எடுத்தான். மத்தவங்க பர்மிஷன் இல்லாம போட்டோ எடுக்கிறது தப்புன்னு அந்த கிறுக்குப் பயலுக்கு யார் சொல்றது?
தொடரும்..
(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)