Home FREE NOVELSமூர்கனின் காதலி CH 75

மூர்கனின் காதலி CH 75

by Thenaruvi Tamil Novels

அத்தியாயம் 75

கமிஷனர் விஷ்வாவை தன்னோட வரச் சொல்லி கூப்புட, பக்கத்துல நின்னுட்டிருந்த மகேஷோட காதுல, “அவளுக்கு மயக்கம் தெளிறதுக்குள்ள அவளைக் கடத்தினவன் யாரா இருந்தாலும் கண்டுபிடிச்சுத் தூக்குங்க.‌ எனக்கு ஆதித்யா மேலயும், முனியாண்டி மேலயும் தான் டவுட்டா இருக்கு. முதல்ல அவங்க ரெண்டு பேரையும் விசாரிங்க”ன்னு சொன்ன விஷ்வா, கமிஷனரோட போலீஸ் ஜீப்ல ஏறி பக்கத்துல இருக்கற போலீஸ் ஸ்டேஷனுக்குப் போனான்.

அவங்களோட லாயரோட விஷ்வாவைப் பார்க்க போலீஸ் ஸ்டேஷனுக்கு தயாளனும், அரவிந்தும் போயிருக்க, மகேஷ் தன்னோட ஆட்களை வெச்சு முனியாண்டியையும் ஆதித்யாவையும் கடத்தறதுல மும்முரமா இருந்தான்.

மேகா இருந்த ரூமுக்குள்ள அவளோட குடும்பத்தாரைக் கூட விஷ்வாவோட பாடிகார்ட்ஸ் விடல. அதனால, மத்தவங்க வெளியில இருந்து கத்திக்கிட்டு, “நெசமாவே நம்ம பிள்ளைக்கு ஏதாவது ஆயிடுச்சா??”ன்னுலாம் யோசிச்சு, விஷ்வா மேல நம்பிக்கை இல்லாம பயப்பட ஆரம்பிச்சுட்டாங்க.
விஷ்வா போலீஸ் ஸ்டேஷனுக்குப் போயிருந்தாலும்கூட, “அந்தப் பொண்ணு மயக்கத்துல இருந்தாக் கூட பரவால்ல. நாங்க அவளைப் பார்த்து, அவளுக்கு என்ன ஆச்சுன்னு தெரிஞ்சுக்காம இங்க இருந்து போக மாட்டோம்”னு மகளிர் அமைப்பினர் வாசல்ல நின்னு போராட்டம் பண்ணிக்கிட்டு இருந்தாங்க.‌

அதையெல்லாம் தன்னோட ஃபோன்ல லைவ் நியூஸா பார்த்த சௌபர்ணிகா, “நீ இங்கேயே இருந்து இவளைப் பார்த்துக்கோ. நான் வெளியில போய் என்ன நடக்குதுன்னு பார்த்துட்டு வரேன். இவளுக்கு மயக்கம் தெளிஞ்சுச்சுன்னா எனக்கு கால் பண்ணு”ன்னு வெண்ணிலாகிட்ட தன்னோட மொபைல் நம்பரைக் கொடுத்துட்டு, விஷ்வாவோட ஆட்கள்ட்ட டூப்ளிகேட் சாவியை வெச்சு கதவைத் திறக்கச் சொல்லி வெளியில போனா.

அவளைப் பார்த்தவுடனே மேகாவோட குடும்பத்தினர் அவளைச் சுத்தி வளைச்சு, “மேகாவுக்கு என்ன ஆச்சு?? இன்னும் ஏன் அவளுக்கு மயக்கம் தெளியாம இருக்கு??”ன்னு கேள்வி கேட்க, “மேகாவை யாரோ கடத்தினதுதான் உங்களுக்கே தெரியுமே!! அப்போ அவளுக்கு நிறைய மயக்க மருந்து கொடுத்திருக்காங்க. அதனாலதான் அவ இன்னும் மயக்கத்துலயே இருக்கா.

‘எல்லாரும் கேக்குறாங்க’ன்னு, ‘அவளை யாரோ கடத்திட்டுப் போயிட்டான். நான்தான் போய்க் காப்பாத்திட்டு வந்தேன். இது மத்தவங்களுக்குத் தெரிஞ்சு பிரச்சனை வரக்கூடாதுன்னுதான் அவ மயக்கத்துல இருந்தாலும் பரவால்லன்னு அவ கழுத்துல தாலி கட்டினே’ன்னு விஷ்வானால வெளியில சொல்ல முடியுமா?? அதான் அவன் ஏதேதோ கதை சொல்லி மீடியாவை சமாளிச்சுட்டு, இப்போ எல்லாத்தையும் அவன் தலையில போட்டுக்கிட்டுப் போயி போலீஸ் ஸ்டேஷன்ல உக்காந்திருக்கான். இன்னும் உங்களுக்கு வேற என்ன தெரியணும்?? என் தம்பிக்கும் உங்க வீட்டுப் பொண்ணுக்கும் முறைப்படி கல்யாணமே நடந்து முடிஞ்சுடுச்சு. இப்போ அவன் உங்க வீட்டு மாப்பிள்ளை. இன்னுமா நீங்க அவனை நம்பாம அவன் மேல சந்தேகப்படுவீங்க?? உங்களுக்கு வேற என்ன தெரியணும்? சொல்லுங்க”ன்னு சௌபர்ணிகா கோபமா கேட்டதால அதுக்கு மேல யாரும் அவகிட்ட ஒரு கேள்வியும் கேட்கல.

எம்.வி. டெக்னோட சீனியர் லாயர் விஷ்வாவுக்கு ஜாமீன் வாங்கறதுக்காக ஒரு பக்கம் போராடிக்கிட்டு இருக்க, அவனுக்காக ஸ்டேஷனுக்குப் போன இன்னொரு லாயர், “விஷ்வா சார் மேல எந்தத் தப்பும் இல்லன்னு மேகா மேடமுக்கு மயக்கம் தெளிஞ்சதுக்கப்புறம் அவங்களே டைரக்ட்டா ஸ்டேஷனுக்கு வந்து ஸ்டேட்மென்ட் குடுப்பாங்க சார். என்னோட க்ளைன்ட் மேகா மேடம் அன்கான்சியஸ் ஸ்டேட்ல இருக்கும்போது அவங்களுக்குத் தாலி கட்டினதைத் தவிர வேற எந்தத் தப்பும் பண்ணல.

இவங்க ரெண்டு பேரும் லவ் பண்ணுறது உலகத்துக்கே தெரியும். அப்படி இருக்கறப்போ, இந்த மேரேஜ்ல தனக்குப் பிரச்சனைன்னு மேகா மேடமே வந்து சொல்லாத வரைக்கும் நீங்க விஷ்வா சார் மேல தப்பு இருக்குன்னு ப்ரூஃப் பண்ண முடியாது”ன்னு இன்ஸ்பெக்டர் கிட்ட சொன்னார்.

“அதேதான் சார் நாங்களும் சொல்றோம். மேகா மேடமே வந்து, ‘இந்தக் கல்யாணம் இப்படி நடந்ததுல அவங்களுக்கு எந்த ஆட்சேபணையும் இல்ல’ன்னு அவங்க கைப்பட ஸ்டேட்மென்ட் எழுதிக் கொடுத்தா மட்டும்தான் நாங்க விஷ்வா சாரை ரிலீஸ் பண்ண முடியும்.

உங்களால முடிஞ்சுச்சுன்னா இவருக்கு பெயில் வாங்கிட்டு வாங்க. இல்லன்னா நாளைக்கு எதா இருந்தாலும் கோர்ட்ல பார்த்துக்கோங்க”ன்னு இன்ஸ்பெக்டர் ‌உறுதியா சொல்லிட்டார்.

தயாளனுக்கு கால் பண்ண சௌபர்ணிகா, “அங்க என்னடா ஆச்சு??”ன்னு கேட்க, “நம்ம லாயர் எவ்வளவோ பேசிப் பார்த்துட்டாரு மேடம். பட் நோ யூஸ்”ன்னு அவன் சொன்னவுடனே “ஓகே நீ வை”ன்னவள், பெயில் வாங்கறதுக்காக ஜட்ஜைப் பார்க்கப் போன அவங்களோட ஆபிஸோட லீடிங் அட்வகேட் சுதாகருக்கு கால் பண்ணி என்ன ஆச்சுன்னு கேட்டா.

“இது பப்ளிக் இஸ்யூ ஆனதுனால ஜட்ஜ் ஜாமீன் தர மாட்டேன்னு சொல்லிட்டாரு மேடம். இனிமே நாளைக்கு கோர்ட்ல போய்த்தான் பேச முடியும். மேகா மேடம் மட்டும் நேர்ல வந்து இந்தக் கல்யாணத்துல அவங்களுக்கு முழு சம்மதம்ன்னு சொல்லிட்டா, ஒண்ணும் பிரச்சனை இல்லை. கேஸ் நிக்காது”ன்னு சுதாகர் சொல்ல, “அப்போ அதுவரைக்கும் விஷ்வா போலீஸ் ஸ்டேஷன்லதான் இருக்கணுமா சார்??”ன்னு சோகமா கேட்டா சௌபர்ணிகா.

“எஸ் மேடம், வேற வழி இல்லை”ன்னு சுதாகர் சொல்லிட, கொஞ்ச நேரம் அவர்கிட்ட பேசிட்டு மறுபடியும் மேகாவோட ரூமுக்கேப் போய்ட்டா. இப்போ மேகாவுக்கு மயக்கம் தெளிவதற்காகக் காத்திருக்கறதைத் தவிர அவங்களுக்கு வேற வழி இல்லை.

சில மணி நேரத்துக்கு அப்புறம்… இப்பதான் ஓரளவுக்குத் தேறி இருந்த ஆதித்யாவையும், தன்னோட வீட்ல விஷ்வா போலீஸ் ஸ்டேஷனுக்குப் போன சந்தோஷத்துல கோழி அடிச்சுக் குழம்பு வெச்சு சாப்பிட்டுட்டிருந்த முனியாண்டியையும் மகேஷ் தன்னோட ஆட்களோட போயி தூக்கிக்கிட்டு வந்து தலைகீழா தொங்கவிட்டு அடி அடின்னு அடிச்சு வெளுத்தான்.

வலியைத் தாங்க முடியாம அவங்க ரெண்டு பேரும், “ஆஆஆ… ஐயோ அம்மா வலிக்குது!!”ன்னு அலறிக்கிட்டு இருக்க, “சொல்லுங்கடா, உங்க ரெண்டு பேர்ல மேகாவைக் கடத்தினது யாரு??”ன்னு கேட்டான் மகேஷ்.

“டேய், அவளை யாரோ கடத்திட்டாங்களாம்ன்னு எனக்கு நீ சொல்லிதான்டா தெரியும். நானே ஹாஸ்பிடல் செக்-அப்ன்னு இத்தனை நாளா இருந்துட்டு இப்பதான் உருப்படியா என் ஆபிஸ் பக்கமே போக‌ ஆரம்பிச்சிருக்கேன். போன தடவை உங்ககிட்ட வாங்கின அடியே இன்னும் முழுசா ஆறல. அதுக்குள்ள நான் எதுக்குடா இந்த வேலையைப் பார்க்கப் போறேன்?? என் பொண்டாட்டி புள்ளை மேல சத்தியமா அவளை நான் கடத்தல”ன்னு அடியைத் தாங்க முடியாம ஆதித்யா அழுது கதற,

“என்னோட ஒரே பொண்ணு சங்கமித்ரா மேல சத்தியமா சொல்றேன். நானும் அந்தப் பிள்ளையைக் கடத்தல தம்பி. எனக்கும் இப்பதான் நீங்க சொல்லி, அந்தப் பிள்ளையை யாரோ கடத்திட்டாங்களேன்னு தெரியும். இந்த வயசான காலத்துல நான் எதுக்குங்க அந்த மாதிரியான சில்லறை வேலையெல்லாம் பார்க்கப் போறேன்?? தயவுசெஞ்சு என்னை விட்டுடுங்க. உங்க அடியை எல்லாம் தாங்குற அளவுக்கு என் உடம்புல தெம்பு இல்ல. எனக்கு ஏதாவது ஆயிடுச்சுன்னா, என் பொண்டாட்டியும் பொண்ணும் ஆதரவு இல்லாம நடுத்தெருவுல நிப்பாங்க. ஏற்கனவே நாங்க ஊரைவிட்டு வந்து ஒண்டிக் குடித்தனம் இருக்கோம்”னு முனியாண்டியும் தன் பங்குக்கு புலம்பினான்.

ஆனா அதுக்கெல்லாம் மனசு இறங்காத மகேஷ், தன் கையில இருந்த உருட்டுக் கட்டையை வெச்சு அவன் பின்னாடி அடிச்சு, “அன்னைக்கு ஊர்ல விஷ்வா சாரை எவனோ ஒருத்தன் கத்தியால குத்த ட்ரை பண்ணான். அப்பவே நாங்க உன் மேலதான் சந்தேகப்பட்டோம். அன்னைக்கும் இப்படித்தான் நாங்க உன்னை விசாரிக்கும்போது நல்லவன் வேஷம் போட்டு நீ தப்பிச்சுட்ட. உனக்கு எதிரா எங்ககிட்டயும் எதுவும் மாட்டல. அதனால நாங்களும் உன்னை அடுத்த தடவைப் பார்த்துக்கலாம்னு விட்டு வெச்சோம். ஆனா நீ இவ்வளவு பெரிய வேலையைப் பார்த்து விட்டுட்டல… ஒழுங்கா நீதான் பண்ணேன்னு உண்மையை ஒத்துக்கு. இல்லைன்னா உன்னை அடிச்சே கொன்றுவேன்”னு முனியாண்டியை மிரட்டினான்.

முதல்ல எவ்வளவு அடி வாங்கியும் தொடர்ந்து, “நான் எதுவும் பண்ணல, என்னை விட்டுடுங்க!!”ன்னு அழுத்தமா சொல்லிக்கிட்டிருந்த முனியாண்டி, கடைசியில தன் மேல மகேஷுக்கு நம்பிக்கை வரணும்ன்றதுக்காக இந்த உண்மையைச் சொல்லித்தான் ஆகணும்னு நினைச்சு, “சிவராத்திரி அன்னைக்குக் கோவில்ல வெச்சு விஷ்வா தம்பியை நான்தான் கத்தியால குத்த ஆள் அனுப்பினேன். பஞ்சாயத்துல எங்க குடும்பத்துக்கு நடந்த அவமானத்துக்குப் பழிவாங்கத்தான் அப்படிப் பண்ணினேன். ஆனா அன்னைக்கு மேகா குறுக்க வந்து விஷ்வா சாரைக் காப்பாத்திட்டா. என்ன இருந்தாலும் நான் பண்ணது தப்புதான் தம்பி. அதுக்கு நான் விஷ்வா சார் கால்ல விழுந்து மன்னிப்பு கேட்கக்கூடத் தயாரா இருக்கேன். ஆனா மேகாவை நான் கடத்தலையா. அது எங்க ஊரா இருந்தாலும், அன்னைக்கே விஷ்வா சாரைக் குத்தறதுக்கு வெளியூர்ல இருந்து ஆள வரவெச்சு கஷ்டப்பட்டுதான் அதைச் செஞ்சேன். இப்படி சென்னை வரைக்கும் வந்தெல்லாம் அவ்வளவு ஆட்களை மீறி என்னோட ஆளை வெச்சு மேகாவைக் கடத்தற அளவுக்குலாம் நான் பெரிய ஆள் இல்ல தம்பி. என்கிட்டயும் அந்த அளவுக்கு ஆளுங்க இல்ல. நீங்க நம்பினாலும் நம்பலைன்னாலும் இதுதான் உண்மை”ன்னான் முனியாண்டி.

“அப்போ இவன் பண்ணலையா!! இவன் இப்படி அப்ரூவர் ஆயிட்டதுனால அடுத்து என் மேலதானே சந்தேகப்படுவானுங்க!! இப்ப என்ன பண்றது?? சென்டிமென்ட்டா பேசி என்னைக் காப்பாத்தறதுக்கு இங்க மீரா கூட இல்லையே!!”ன்னு நினைச்சு தனக்குள்ளேயே புலம்பிக்கிட்டிருந்தான் ஆதித்யா.

போலீஸ் ஸ்டேஷன்ல ஒரு மர பென்ச்ல‌ தனியா உக்காந்திருந்த விஷ்வா, “இந்நேரம் அவளுக்கு மயக்கம் தெளிஞ்சிருக்குமா??”ன்னு யோசிச்சுட்டே தன்னோட மொபைல் ஃபோனை எடுத்து சௌபர்ணிகாவுக்கு கால் பண்ணினான். அதனால இன்ஸ்பெக்டர் அவனை உற்றுப் பார்க்க, கடுப்பான விஷ்வா அவரை முறைச்சுப் பார்த்து, “என்ன…??”ன்னு தன் குரலை உயர்த்தி கேட்க, “ஒண்ணும் இல்ல சார், நீங்க பேசுங்க. வெளியில இருந்து யாராவது வந்தாங்கன்னா நானே சொல்றேன்”னு பவ்யமா சொன்னார் இன்ஸ்பெக்டர்.

தொடரும்..

(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)

You may also like

Leave a Comment

About Me

Featured