அத்தியாயம் 48
வெற்றி அமுதா இருவரையும் ஜோடியாக நிற்க வைத்தார்கள். அவர்களைப் போலவே ஜோடியாக மணிகண்டனும், அன்னபூரணியும் சேர்ந்து நின்று தங்கள் கைகளால் ரோஜா பூ மாலைகளை எடுத்து அவர்களிடம் கொடுத்தார்கள். அதை வாங்கிய அமுதாவும் வெற்றியும் மாறி மாறி ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். “உன் ஆசை எதுவாக இருந்தாலும் அதை நிறைவேற்றனும்னு தான் சத்தியமா நான் நினைக்கிறேன் அம்மு. ஆனா நீ சினிமால நடிக்கிறது மட்டும் எனக்கு சுத்தமா பிடிக்கல. அத தடுக்கிறதுக்கு என்ன பண்றதுன்னு நானும் எப்படி எப்படியோ யோசிச்சி பாத்துட்டேன். ஆனா எதுவும் பிடிப்பட மாட்டேங்குது.
அதனால என்ன ஆனாலும் பரவாயில்லைன்னு நமக்கு மேரேஜ் ஆனதுக்கு அப்புறமா விஜய் சார் கிட்ட போய் நீ அவர் படத்துல நடிக்க மாட்டேன்னு சொல்லிடுறேன். அவர் கிட்ட வாங்கின அட்வான்ஸை திருப்பி கொடுத்துடலாம். கான்ட்ராக்ட்டை மீறுனா பெனாலிடி கட்டணும்னு அதுல போட்டு இருந்துச்சு. அவங்க எவ்வளவு காசு கேட்டாலும் அதை கஷ்டப்பட்டு சம்பாதிச்சு உனக்காக நான் திருப்பி கொடுத்துவிடுவேன். ஆனா யாருக்காகவும் எதுக்காகவும் என்னால உன்னை விட்டுக் கொடுக்க முடியாது.” என்று நினைத்த வெற்றி அவன் கையில் இருந்த ரோஜாப்பூ மாலையை அமுதாவின் கழுத்தில் போட்டான்.
தலை குனிந்து அதை பெற்றுக் கொண்ட அமுதா தன் கையில் இருந்த மாலையை அவனை நோக்கி கொண்டு சென்றாள். அப்போது அதற்குள் தெரிந்த அவனது முகம் சோகமாக இருப்பதை பார்க்கும்போது, “ஒருவேளை நிஜமாவே உனக்கும் எனக்கும் கல்யாணம் ஆகிட்டா, நம்ம எப்படி வாழ போறோம்னு எனக்கு சத்தியமா தெரியல வெற்றி. என்ன பொறுத்த வரைக்கும் என் மனசுக்குள்ள இன்னும் என்னை நான் ஒரு காலேஜ் படிக்கிற சின்ன பெண்ணா தான் நினைச்சுட்டு இருக்கேன். எனக்கு கல்யாண வயசு எல்லாம் வந்துருச்சுன்னு என்னால நம்பவே முடியல. நம்ம உன்ன நெனச்சா, விதி ஒன்னு நினைக்கும்னு சொல்லுவாங்களே.. அந்த மாதிரி தான் இந்த மேரேஜ்ன்னு நான் நினைக்கிறேன். உனக்கு என்னால ஒரு நல்ல வைஃப்பா இருக்க முடியுமான்னு தெரியல. பட் கண்டிப்பா உன்ன டிஸ்அப் பாயிண்ட் பண்ணாம இருக்குறதுக்கு நான் ட்ரை பண்ணுவேன்.” என்று நினைத்த அமுதா வெற்றியின் கழுத்தில் மாலையை போட்டாள்.
உடனே அமுதாவின் இரண்டாவது அண்ணன் பாஸ்கரன் “ஏய்ஹேய்.. சூப்பரு..!! வாழ்த்துக்கள் டா மாப்ள!” என்று சொல்லிவிட்டு கை தட்டி விசில் அடிக்க, அவனது மனைவி சுமதி “ஏங்க இப்ப எதுக்கு ஓவரா சலம்புரிங்க? மாலை மட்டும் தான் மாத்தி இருக்காங்க… இன்னும் மோதிரம் போட வேண்டியது இருக்கு.. அப்புறம் ஒட்டுக்க எல்லாம் முடிஞ்சதுக்கப்புறம் கொண்டாடிக்கலாம்.” என்று நக்கலாகச் சொன்னாள்.
“எல்லாம் எனக்கு தெரியும் போடி!” என்று பாஸ்கரன் சுமதியை பார்த்து சொல்ல, “அட வீட்ல ஒரு விசேஷம் நடக்கும்போது கூட இப்படித் தான் ரெண்டு பேரும் சண்டை போட்டுட்டு இருப்பீங்களா? கொஞ்ச நேரம் அமைதியா நில்லுங்க.” என்று சொல்லி அவர்களை அதட்டிய மணிகண்டன் அன்னபூரணியிடம் தாங்கள் அவர்கள் இருவருக்காகவும் வாங்கி வைத்த மோதிரங்களை கொண்டு போய் கொடுக்கச் சொன்னார்.
முதலில் அந்த மோதிரத்தை கையில் வாங்கிய வெற்றி அமுதாவின் ரைட் ஹேண்டை பிடித்து அதில் மோதிரத்தை மாட்டி விட, தன் கையில் இருந்த மோதிரத்தையும் அதை தனக்கு அணிவித்த வெற்றிகையும் குறுகுறுவென்று பார்த்துக் கொண்டிருந்தாள் அமுதா. அதனால் வெற்றி தனது கையை அவள் முன்னே நீட்டி மோதிரத்தை போடு என்பதை போல தன் கண்களாலேயே சைகை செய்தான்.
அதை கவனித்த அமுதா வெற்றியின் கையில் மோதிரத்தை போடுவதற்காக மெல்ல தன் கையை அவன் அருகில் கொண்டு சென்றாள். திடீரென்று எண்ணமோ அவளுக்கு பதட்டமாக இருந்தது. அதனால் நடுங்கிய கைகளுடன் அவள் மோதிரத்தை போட போக, அவன் கை விரல்கள் தன் கையின் மீது பட்டவுடன் என்னவோ ஷாக் அடித்ததை போல சட்டென அவள் தன் கையை விளக்கி கொண்டாள். அதில் அமுதாவின் கையில் இருந்த தங்க மோதிரம் கீழே விழுந்து எங்கேயோ உருண்டு ஓடிவிட்டது.
பயந்த விழிகளுடன் அதை பார்த்துக் கொண்டிருந்த அமுதா அப்படியே தலை நிமிர்ந்து தன்னை கோபத்துடன் முறைத்து பார்த்துக் கொண்டிருந்த அவளுடைய குடும்பத்தினரை கண்டாள். “ஏய் அறிவில்லையா உனக்கு? ஒரு மோதிரத்தை கூட ஒழுங்கா போட தெரியாதா?” என்று தனது அடித் தொண்டையில் இருந்து கத்தி கேட்ட மணிகண்டன் அடிப்பதற்காக தன் கையை ஓங்கி கொண்டு அமுதாவை நோக்கி செல்ல, குறுக்கில் புகுந்து அவர் அதில் சென்று கையைப் பிடித்து தடுத்த வெற்றி “ஆமா மாமா இருங்க மாமா.. இப்ப எதுக்கு டென்ஷன் ஆக்குறீங்க?
அவ என்ன வேணும்னா கீழ போட்டா? அவ பதட்டத்துல இருந்ததுனால மோதிரம் தெரியாம கீழ விழுந்துருச்சு.. அதுக்கு பாவம் அவள் என்ன பண்ணுவா? நீங்க கோபப்படாதீங்க… வீட்டுக்குள்ள தானே விழுந்துச்சு… நம்ம தேடுனா கிடைச்சுடும். அவள கோபப்பட்டு திட்டுறதையும் அடிக்கிறதையும் விட்டுட்டு சீக்கிரம் மோதிரத்தை தேடலாம்.” என்றான்.
உடனே அமுதாவை பார்த்து முறைத்து விட்டு ஓங்கிய தன் கையை கீழே இறக்கிய மணிகண்டன், “எல்லாரும் சீக்கிரம் அந்த மோதிரத்தை தேடி கண்டுபிடிங்க!” என்று ஆணையிடும் தோரணையில் சொல்ல, அந்த வீட்டில் உள்ள சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அந்த மோதிரத்தை சிரத்தையுடன் தேட தொடங்கினார்கள்.
ஆனால் அந்த மோதிரத்தை கீழே போட்ட அமுதா மட்டும் அப்படியே சிலை போல உறைந்து போய் நின்று கொண்டிருந்தாள். “இந்த வீட்ல இதுக்கு முன்னாடி நடக்காதது எல்லாம் இப்ப திடீர்னு நடக்குது. என் பெரியண்ணே இன்னைக்கு இவ்ளோ கோபப்பட்டு என்னை அடிக்கவே வந்துட்டாரு! அமுதா எங்கள பெத்த ஆத்தா… அவ இந்த வீட்டோட குலசாமி.. மகாலட்சுமி அப்படி இப்படின்னு எல்லாம் சொல்லிட்டு இருந்த என் அண்ணன் இப்போ கோவத்துல என்னையே அடிக்க வர்றாரு.. இதை எல்லாம் என்னால கொஞ்சம் கூட நம்ப முடியல. என்னை சுற்றி எல்லாமே கொஞ்சம் கொஞ்சமா மாறிக்கிட்டே இருக்கு.” என்று நினைத்த அமுதா கலங்கிய கண்களுடன் நடப்பதை பார்த்துக் கொண்டிருந்தாள்.
வெற்றி பதற்றத்துடன் வியர்த்து வடிய அந்த மோதிரத்தை தேடிக் கொண்டிருப்பதை கவனித்த கலைச்செல்வி அவனுக்காக தானும் மற்றவர்களுடன் சேர்ந்து அந்த மோதிரத்தை தேட தொடங்கினாள். அடுத்த இரண்டாவது நிமிடத்தில் அவள் கைகளில் தான் மோதிரம் கிடைத்தது. அதை கனத்த இதயத்துடன் கையில் எடுத்த கலைச்செல்வி “இந்த மோதிரத்தை நான் வெற்றி கைல போட்டு இருந்தா எவ்வளவு நல்லா இருந்திருக்கும்! இப்ப இத என் கையாலையே நான் அமுதா கிட்ட குடுக்க வேண்டிய நிலைமை ஆயிடுச்சு.” என்று நினைத்து கண்கலங்கினாள்.
பின் யாருக்கும் தெரியாமல் தனது கண்ணீரை துடைத்துக் கொண்டு “மோதிரம் கிடைச்சிடுச்சு!” என்று உற்சாகமான குரலில் சொன்னாள். உடனே அவள் அருகில் சென்ற அன்னபூரணி அந்த மோதிரத்தை வாங்கி “அம்மா மீனாட்சி.. என்ன டா நல்ல காரியம் நடக்கும்போது இப்படி தடங்கல் ஆயிடுச்சுன்னு நினைச்சு மனசே ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. எப்படியோ மோதிரத்தை கண்டுபிடிச்சு கொடுத்துட்ட அம்மா ரொம்ப நன்றி!” என்று முணுமுணுத்துவிட்டு அமுதாவின் கையில் மீண்டும் மோதிரத்தை கொண்டு சென்று கொடுத்தாள்.
தன் கையில் இருந்த மோதிரத்தை பார்த்த அமுதா காதல் ஏக்கங்களை கண்களில் தேக்கி வைத்து தன்னையே பார்த்துக் கொண்டிருந்த வெற்றியை பார்த்தாள். அவளும் வெற்றியும் சிறுவயதில் இருந்தே இந்த வீட்டில் ஒன்றாக வளர்ந்தவர்கள். அவளுடைய சந்தோஷம் துக்கங்கள் என அனைத்திடுமே அவன் அவளுடன் இருந்திருக்கிறான். அப்படிப்பட்டவனை எந்த ஒரு விஷயத்திற்காகவும் அவள் காயப்படுத்த விரும்பவில்லை.
அதனால் இம்முறை அமுதா நன்றியுடன் அவனைப் பார்த்து லேசாக புன்னகைக்க, அவனும் அந்த ஒரு சில நொடிகளில் “என் அம்மு எனக்கு கிடைக்க மாட்டாளா?” என்று யோசித்து பதறிப் போயிருந்ததால் இப்போது நிம்மதி பெருமூச்சு விட்டுவிட்டு அவள் அருகில் சென்றான். இப்போது தானாகவே தனது ஒற்றை கையால் அவன் கையை பற்றிய அமுதா அதில் மோதிரத்தை அணிவித்தாள்.
அந்த காட்சியை போட்டோகிராபர் தனது கேமராவில் படம் பிடித்து வைத்துக்கொண்டார். அதன் பிறகு வெற்றியையும் அமுதாவையும் அருகருகில் நிற்க வைத்து சில போட்டோக்களை எடுத்தார்கள். அந்த குடும்பத்தில் உள்ள அனைவரும் அவர்களுடன் சேர்ந்து குரூப் ஃபோட்டோ எடுத்தார்கள். கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்தில் அனைத்தும் முடிந்தது. இரவு விருந்திருக்கு அனைவரும் தயாரானார்கள்.
அவர்களின் என்கேஜ்மென்ட் காதும் காதும் வைத்ததைப் போல ஒரு சிலருக்கு மட்டும் தெரிந்த படி நடந்ததால், அங்கே ஏராளமானவர்கள் வந்திருக்கவில்லை. இருப்பினும் அமுதாவின் குடும்பத்திலேயே ஆட்கள் அதிகம் என்பதால் அந்த வீடு விழாக்கோலம் பூண்டு கலகலவென்று இருந்தது.
உணவுகள் தயாரானவுடன் முதலில் பந்தியில் வெற்றியையும் அமுதாவையும் அமர வைத்து அவர்களுக்கு உணவுகளை பரிமாறி ஒருவரை ஒருவர் ஊட்டி விட்டபடி சாப்பிட சொன்னார்கள். வெற்றி அதை சந்தோஷமாக செய்ய, அவனது சந்தோஷத்தையும் தனது குடும்பத்தில் உள்ள மற்றவர்களின் சந்தோஷத்தையும் கெடுக்க விரும்பாத அமுதா தானும் அவனுக்கு ஊட்டி விட்டாள்.
அவர்களுக்கு எதிரில் அன்னபூரணியின் வற்புறுத்தலால் சாப்பிடுவதற்காக அமர்ந்த கலைச்செல்விக்கு இதையெல்லாம் தன் கண்களில் பார்ப்பதற்கு பதிலாக அப்படியே இந்த பூமியை பிளந்து உள்ளே சென்று தன்னை தானே புதைத்து இறந்து போகலாம் போல இருந்தது. அந்த அளவிற்கு அவள் மனதில் வெற்றியின் மீது காதல் இருந்தது. அவர்களது இளம் பிராயம் முதலே வெற்றி எப்போதும் அமுதாவின் பின்னே சுற்றிக் கொண்டிருப்பதால், அவளுடனே இருந்த கலைச்செல்விக்கு வெற்றியைப் பிடித்து போய்விட்டது.
ஆனால் ஒருபோதும் அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல் கலைச்செல்வி வெற்றியுடன் ஒரு எதார்த்தமான தோழியாக சண்டைக்கோழி போல அவனுடன் விளையாட்டாக சண்டை போட்டுக் கொண்டே இருப்பாள். ஆனால் உள்ளுக்குள் இப்படியாவது தனக்கு அவனுடன் பேச நேரம் கிடைக்கிறதே.. என்று நினைத்து அந்த தருணங்களை எல்லாம் தனக்குள் ரசித்து தீர்ப்பாள் கலைச்செல்வி.
எப்படியோ தானே காரை ஓட்டிக் கொண்டு தினேஷ் உடன் சென்னை சென்று இருந்த விஜய் அவர்கள் இருவரும் சாப்பிட்டு வெகு நேரம் ஆகிறது என்பதால் ஒரு 7 நட்சத்திர ரெஸ்டாரண்டில் சாப்பிடுவதற்காக காரை நிறுத்தினான். அவர்கள் இருவரையும் பின் தொடர்ந்து வந்திருந்த விஜயின் பாடிகார்டுகள் பாதுகாப்பிற்காக வழக்கம்போல் அவனை சூழ்ந்து கொண்டார்கள். அதைக் கண்டு எரிச்சல் அடைந்த விஜய் “இவனுங்களோட பெரிய தொல்லையா போச்சு.. நான் தான் இவனுங்களுக்கு மாசம் சம்பளம் குடுத்து வேலைக்கு வச்சிருக்கேன். இவனுங்க இல்லாம எங்கேயாவது வெளியே போனாலும் பிரச்சனை.. இவனுங்களோட கூட்டமா வெளியே போனாலும் அப்பயும் எல்லாரோட அட்டென்ஷனும் என் மேல தான் இருக்குது.. அதனால கிரவுட் கிரியேட் ஆகி அதுலயும் பிரச்சனை!
இந்த மாதிரி யாரோட டிஸ்டபன்ஸும் இல்லாம என்னை யாருன்னு யாருக்குமே தெரியாத ஒரு இடத்துக்கு போனா மட்டும் தான் என்னால அங்க நிம்மதியா இருக்க முடியும்.” என்று நினைத்து அவசர அவசரமாக தன் முன்னே இருந்த உணவுகளை சாப்பிட தொடங்கினான்.
-காதல் மலரும்