அத்தியாயம் 66
தூங்கிக் கொண்டு இருந்த தன்னை அவசரமாக எழுப்பிய நிரஞ்சனா கனமான புடவை ஒன்றை கட்டி விட்டு எக்கச்சக்கமான ஆபரணங்களை எல்லாம் மாட்டி விட்டதால் தனக்கு ஏதோ அவள் தண்டனை கொடுக்கிறாள் என நினைத்து சலித்துக் கொண்டால் கீர்த்தனா “ம்ம்…ம்ம்..ம்ம்.. அக்கா என்ன இதெல்லாம்? எனக்கு இந்த மாதிரி எல்லாம் டிரஸ் பண்றதுக்கு பிடிக்காதுன்னு உங்களுக்கு தெரியுமில்ல?
ஏன் இதை எல்லாம் போடச் சொல்லி என்ன டார்ச்சர் பண்றீங்க? எனக்கு சிம்பிளா டி-ஷர்ட்டும், பேண்ட்டும் தான் போட பிடிக்கும். வெளிய போகணும்னா நான் அதை போட்டுட்டு வரக் கூடாதா?” என்று கேட்டுவிட்டு சினங்கினாள்.
“கேசுவலா நம்ம எங்கேயாவது வெளிய போனா நீ சொல்ற மாதிரி எது வேணா போட்டுட்டு போகலாம். இப்ப நம்ம ரொம்ப ஸ்பெஷலானவங்கள மீட் பண்ண போறோம். அதுக்குத் தான் தாத்தா உன்ன ஸ்பெஷலா ரெடி பண்ணி என்ன கூட்டிட்டு வர சொல்லிருக்காரு.” என்ற நிரஞ்சனா ஏதேதோ சொல்லி அவளை சமாதானப்படுத்தி தொடர்ந்து அவளை அலங்கரித்தாள்.
ஒரு தங்க வளையலை கையில் எடுத்து விளையாடிக் கொண்டிருந்த கீர்த்தனா “இப்ப நம்ம யார் மீட் பண்ண போறோம்? அவங்க நிஜமாவே ரொம்ப ஸ்பெஷலா? எனக்கு அவங்கள தெரியுமா?” என்று ஆர்வத்துடன் கேட்டாள்.
“உனக்கு அவங்கள நல்லாவே தெரியும் கீர்த்து. பட் அவங்கள பார்த்தா உனக்கு அவங்க யாருன்னு ஞாபகம் வருமான்னு தான் தெரியல.” என்று நிரஞ்சனா சோகமாக சொல்ல, “அப்படியா? யார் அவங்க? நான் எனக்கு ஏதாவது ஞாபகம் வருதான்னு யோசித்து பார்க்கிறேன்.” என்று சொல்லிவிட்டு விட்டத்தை பார்த்து தனது கன்னத்தை தட்டியபடி யோசிக்க தொடங்கினாள் கீர்த்தனா.
அவனது இந்த அப்பாவித் தனமான செய்கைகளை கண்டு வழக்கம் போல சிரித்த நிரஞ்சனா அவளது புடவையை சரி செய்துவிட்டு “உன்னோட ஃபேமிலி மெம்பர்ஸை தான் நம்ம இப்ப பாக்க போறோம். நீ ரொம்ப நாளா இங்க இருக்க இல்ல.. சோ அவங்க உன்னை காணோம்ன்னு தேடிட்டு இருப்பாங்க இல்ல.. அதான் ரிஷி சாரும் தாத்தாவும் உன்னை கூட்டிட்டு போய் அவங்க கிட்ட காமிச்சு நீ எங்க கூட தான் இருக்கேன்னு சொல்ல போறாங்க.” என்றாள்.
“என்னோட ஃபேமிலியா? அப்படின்னா யார் இருப்பாங்க?” என்று ஒன்றும் புரியாமல் கீர்த்தனா குழப்பத்துடன் கேட்க, “உன் ஃபேமில யார் யார் இருக்காங்கன்னு எனக்கு தெரியாது.. பட் பொதுவா ஒரு குடும்பம்னா அப்பா, அம்மா, அவங்களோட குழந்தைன்னு இருப்பாங்க.
இப்ப நானு, உங்க திலீப் அண்ணா, அப்புறம் எங்க பையன் தருண் நாங்க மூணு பேரும் ஒரு ஃபேமிலி. இப்ப உனக்கு புரியுதா?” என்று கேட்டாள் நிரஞ்சனா.
“ஓஹோ… ஃபேமிலின்னா, அப்பாவும் அம்மாவும் பாப்பாவும் இருப்பாங்களா? அப்ப என் பாப்பா எங்க?” என்று கீர்த்தனா கேட்க, “ஐயோ எப்படித் தான் இப்படி எல்லாம் இவ யோசிக்கிறாளோ தெரியல! இப்ப இவளுக்கு நான் என்ன சொல்றது!” என்று உள்ளுக்குள் புலம்பிய நிரஞ்சனா “கீர்த்தனா.. உங்க அப்பா அம்மாவுக்கு நீ தான் பாப்பா. உனக்கு பாப்பா வரணும்னா முதல்ல உனக்கும் ரிஷி சாருக்கும் கல்யாணம் நடக்கணும். அதுக்கு அப்புறம் தான் நீங்க ஒரு நியூ ஃபேமிலியா மாறுவீங்க.” என்று தன்னால் முடிந்த வரை அவளுக்கு விளக்கி சொன்னாள்.
எல்லாம் புரிந்தது என்பதைப் போல தலையாட்டிய கீர்த்தனா “ஓகே ஓகே.. அதுக்குத் தான் தாத்தா எனக்கும் டிம்பிலுக்கும் கல்யாணம் பண்ணி வைக்கிறேன்னு சொன்னாரா! இப்ப எனக்கு எல்லாமே புரிஞ்சிருச்சா அக்கா. இனிமே நான் உங்க. கிட்ட டவுட்டே கேக்க மாட்டேன்.” என்று பெருமையாக சொன்னாள்.
அவளது தலையில் இருந்த கட்டை நர்ஸ் ஒரு பக்கம் சரி செய்து கொண்டிருக்க, அவளது கூந்தலை மெதுவாக பின்னி அதில் மல்லிகை பூவை வைத்த நிரஞ்சனா “பாப்போம் பாப்போம்.. நீ டவுட்டு கேக்காம இருந்தா உலகமே அழிஞ்சு போயிடுச்சு நம்ம யாருமே உயிரோட இல்லைன்னு அர்த்தம்.
தாத்தா நல்ல நேர முடியறதுக்குள்ள வீட்ல இருந்து எல்லாரும் கிளம்பி உங்க வீட்டுக்கு போகணும்னு ஸ்ட்ரிக்டா சொல்லிட்டாரு. சீக்கிரம் வா.. நம்மளால லேட் ஆக கூடாது.” என்று சொல்லி அவளை அழைத்துச் சென்றாள்.
அவர்கள் வெளியில் சென்று பார்க்கும் போது, ஆபீஸ் செல்ல வேண்டிய வேலையும் இருந்ததால் ரிஷி வழக்கம்போல கருப்பு நிற கோட் சூட் போட்டு தயாராகி தனது வீல்சேரில் அமர்ந்து இருந்தான். அவனைப்போல தாத்தாவும் பிராண்டட் கோட் சூட், பெரிய தங்கத்தில் ஆன புரூச், கழுத்தில் இரண்டு, 3 தங்க வைரத்திலான ஸ்டைலிஷ் ஆன சங்கிலிகள் என ராயல் லுக்கில் தயாராகி இருந்தார்.
கீர்த்தனாவின் கையை பிடித்து அவர்கள் அருகில் அழைத்துச் சென்ற நிரஞ்சனா “நாங்க ரெண்டு பேரும் ரெடி ஆகிட்டோம் தாத்தா.” என்று சொல்ல, தனது மகனை தயார்படுத்தி அங்கே தூக்கிக் கொண்டு வந்த திலீப் “நாங்களும் ரெடி!” என்றான்.
மும்பரமாக யாருக்கோ ஃபோனில் மெயில் அனுப்பிக் கொண்டு இருந்த ரிஷி நிரஞ்சனாவின் குரலைக் கேட்டவுடன் நிமிர்ந்து பார்த்தான். சிவப்பு மற்றும் பச்சை வண்ணம் கலந்த பட்டுப் புடவையல் தலை சீவி பூ வைத்து பார்ப்பதற்கே அதனை அழகாக மங்களகரமாக இருந்த கீர்த்தனாவை பார்த்த பிறகு அவன் கண்கள் ஒரு நொடி கூட வேறு எங்கும் செல்லவில்லை.
எல்லா ஆபரணங்களும் பார்க்க அழகாக இருக்கிறது என சொன்னாலும் அத்தனையையும் அணிந்து கொள்ள அவளுக்கு பிடிக்காததால் சிம்பிளாகவும் நேர்த்தியாகவும் இருக்கும் ஒரு சில தங்க வைர ஆபரணங்களை மட்டும் தேர்ந்தெடுத்து நிரஞ்சனா கீர்த்தனாவிற்கு அணிவித்து அவளை அழைத்து வந்திருந்தாள். ரிஷி எக்கச்சக்கமாக அவளுக்கு வாங்கி கொடுத்திருந்தாலும் அவளது கைகளில் நான்கு தங்க வளையல்கள் மட்டுமே இருந்தது.
அவளது காதில் தங்க ஜிமிக்கி ஆடிக் கொண்டே இருக்க, அதைக் கண்டு அவளது எளிமையான அழகில் வியந்து ஆடிப் போனான் ரிஷி. கீர்த்தனாவை குறுகுறுவென்று பார்த்துக் கொண்டிருந்த தாத்தா “ஏம்மா நிரஞ்சனா.. ஏதோ ஒன்னு நம்ம பாப்பா கிட்ட குறையிற மாதிரி இருக்கே!” என்று கேட்க,
“நகை அதிகமா போடல தாத்தா. இவ குத்துது வேண்டாம்னு சொல்றா. அதான் சிம்பிளா ரெடி பண்ணி கூட்டிட்டு வந்துட்டேன்.” என்று நிரஞ்சனா சொல்ல, “அது எல்லாம் இல்லமா.. அவளுக்கு புடிச்ச மாதிரி அவ ரெடியாகட்டும். அது பரவாயில்ல.. ஆனா இன்னும் ஏதோ ஒன்னு குறையிற மாதிரி இருக்கு.” என்றார் தாத்தா.
அவர்கள் பேசப் பேச தனது கண்களால் மேலும் கீழும் கீர்த்தனாவை அளவு எடுத்துக் கொண்டு இருந்த ரிஷி “பொட்டு, அவ நெத்தியில பொட்டு இல்ல. தாத்தா அதை தான் சொல்றாருன்னு நினைக்கிறேன் சிஸ்டர்.” என்றான்.
“ஆமா ஆமா கரெக்ட், பொட்டு தான் மிஸ்ஸிங். பட் இந்த கால ஸ்டிக்கர் பொட்டு எல்லாம் வெச்சா என்ன நல்லா இருக்குது? நீங்க வாங்க நம்ம எல்லாரும் சாமி ரூமுக்கு போய் சாமி கும்பிட்டுட்டு கிளம்பலாம். அங்க போய் குங்குமம் வச்சுக்கலாம்.” என்று சொல்லி தாத்தா அனைவரையும் கோவில் போலவே இருக்கும் தங்கள் வீட்டின் பூஜை அறைக்கு அழைத்துச் சென்றார்.
அந்த அறையில் மூன்று வேலையும் பூஜை செய்து அங்கே இருக்கும் தெய்வங்களை ஆராதிப்பதற்காகவே தனியாக ஒரு அர்ச்சகர் வேலைக்கு அமர்த்தி வைக்கப்பட்டு இருந்தார். அவர்கள் அனைவரும் அங்கே நின்று எல்லாம் வல்ல இறைவனை மனம் உருகி பிரார்த்தித்தனர்.
கீர்த்தனாவிற்கு சாமி கும்பிடுவது பற்றி எல்லாம் எந்த ஐடியாவும் இல்லை என்பதால், இரு கைகளையும் மற்றவர்களை பார்த்து கூப்பி நின்று கொண்டு ஒரு கண்ணை மூடி மற்றொரு கண்ணால் தன் அருகில் நிற்கும் மற்றவர்கள் என்ன செய்கிறார்கள் என்று ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டு இருந்தாள்.
கண்டிப்பாக இவள் தான் தனக்கு மனைவியாக வர வேண்டும் என நினைத்து சாமி கும்பிட்டவுடன் குங்குமத்தை ஆசையாக அர்ச்சகரிடம் கேட்டு வாங்கிய ரிஷி கீர்த்தனாவை குனியச் சொல்லி அவள் நெற்றியில் அழகாக வட்டமாக குங்குமத்தை வைத்தான்.
இப்போது பார்க்க அப்படியே அச்சு அசலாக கிராமத்து வீட்டின் பண்ணையார் அம்மாவை போல இருந்தாள் கீர்த்தனா. இப்படி அவளை பார்க்கும்போது அவளது குடும்பத்தினருக்கே அவள் தங்கள் வீட்டு பெண் தான் என்று அடையாளம் கண்டுபிடிப்பது கொஞ்சம் கடினம் தான்.
தொடரும்…
(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)