அத்தியாயம் 21
தனது பெற்றோர்களின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்திய அஸ்வின் தனது மற்ற குடும்ப உறுப்பினர்களுடன் அவர்களது குடும்பத்திற்கு சொந்தமான தோட்டத்து வீட்டில் தங்கினான். தனக்கென்று கொடுக்கப்பட்டிருந்த தனி அறையில் தனியாக அமர்ந்து ஜன்னல் வழியாக வெளியில் தெரிந்த பசுமையான காட்சிகளை பார்த்து ஏதேதோ யோசித்துக் கொண்டிருந்தான் அஸ்வின்.
அப்போது அவனது ஆட்கள் அவனுக்கு கால் செய்து ஐஸ்வர்யா அவளது குடும்பத்தினருக்கு இறுதி சடங்கு செய்துவிட்டு மீண்டும் வந்து ஹாஸ்பிடலில் அட்மிட் ஆகி இருக்கும் செய்தியை தெரிவித்தார்கள். தனக்கு பிடிக்காது என்று தெரிந்தும் அப்படி ஒரு காரியத்தை செய்வதற்கு அவளுக்கு எப்படி தைரியம் வந்தது? என்று நினைத்து கோபத்தில் பொங்கிய அஸ்வின் “அவன் ஹாஸ்பிடல்ல இருந்து ட்ரீட்மென்ட் எடுத்து கிழிச்சது எல்லாம் போதும்.
இப்பவே அவளை டிஸ்சார்ஜ் பண்ணி இங்க கூட்டிட்டு வாங்க. இன்னைக்கு நைட்டுக்குள்ள அவ இங்க இருக்கணும்.” என்று கட்டளையிட்டான்.
“ஆனா சார்.. இன்ஸ்பெக்டர் வந்து ஐஸ்வர்யா மேடமை விசாரிக்கிறதுக்கு கூட்டிட்டு போறேன்னு சொல்லும்போதே வித்யா மேடம் விடமாட்டேன்னு பிரச்சனை பண்ணாங்க.
அப்புறம் ஐஸ்வர்யா மேடம் தான் நான் போயே தீருவேன்னு ஆம்புலன்ஸ்ல கிளம்பி போனாங்க. இப்போ நாங்க ஐஸ்வர்யா மேடமை அவ்வளவு தூரம் கூட்டிட்டு வரணும்னா வித்யா மேடம் விடமாட்டாங்க சார். அவங்க பிரச்சினை பண்ணா என்ன பண்றது?” என்று லைனில் இருந்தவன் கேட்க,
“அதை நான் பார்த்துக்கிறேன். அவ கிட்ட இது என் ஆர்டர்னு சொல்லுங்க. ஐஸ்வர்யா இப்ப இங்க வர மாட்டேன்னு சொன்னா, நாளைக்கு மார்னிங் மொத வேலையா அவளுக்கு அங்க டிவோர்ஸ் நோட்டீஸ் வரும்னு சொல்லுங்க.” என்று கோபமாக சொல்லிவிட்டு அந்த அழைப்பை துண்டித்தான்.
தோட்டத்தில் வேலை பார்ப்பவர்களை வைத்து அனைவருக்கும் உணவு தயாரிக்கச் சொன்ன வாசுதேவன் அனைத்தும் ரெடியானவுடன் சாப்பிடுவதற்காக அஸ்வினை வந்து அழைத்துச் சென்றார். அனைவரும் வரிசையாக தரையில் அமர்ந்திருக்க, வாழை இலை போட்டு சுட சுட சாப்பாடு பரிமாறப்பட்டது.
அஸ்வின் சாப்பிட மனம் வராமல் அந்த இலையை பார்த்தபடியே அமர்ந்திருக்க, அவன் அருகில் அமர்ந்திருந்த வாசுதேவன் ஆறுதலாக அவனது தோள்களில் கை போட்டு “வாழ்க்கைனா எல்லாமே இருக்கத் தான் செய்யும் அஸ்வின். எல்லா நல்லது கெட்டதையும் கடந்து வாழ பழகிக்கணும்.
அங்க பாரு அக்ஷயா இன்னும் வீல் சேர்ல உக்காந்துட்டு இருக்கா. நீ இப்படி உடைந்து போய் இருக்கிறத பாத்தா, இன்னும் உன்ன நெனச்சு அவ மனசு எவ்வளவு கஷ்டப்படும்? அதை யோசிச்சு பாரு.
நடந்தது எல்லாத்தையும் ஏத்துக்கிட்டு நீ நார்மலா வாழ ஸ்டார்ட் பண்ணா தான் இங்க எல்லாமே சரியாகும்.” என்று சொல்லி அவனை சமாதானப்படுத்தி சாப்பிட வைத்தார்.
அக்ஷயாவிற்காக தனியாக தட்டில் இலை போட்டு சாப்பாடு கொண்டு வந்த திலகா மற்றவர்களுக்கு பரிமாறிக் கொண்டு இருந்த தன் மகன் பாலாவை அழைத்து “அங்க பாரு அக்ஷயா மட்டும் சாப்பிடுறவங்க எல்லாரையும் சோகமா பாத்துட்டு சங்கடத்தில உட்கார்ந்து இருக்கா.
இந்தா.. இந்த சாப்பாட்டை போய் அவளுக்கு ஊட்டி விடு. இன்னும் அவளுக்கு உடம்பு முழுசா சரியாகலைல..
அதான் நம்ம டவுன் ஹாஸ்பிட்டல்ல வேலை செய்ற டாக்டரையும், நர்சையும் பக்கத்துல இருந்து நம்ம புள்ளைய பார்த்துக்கறதுக்காக வர சொல்லி இருக்கேன்.
அவங்க வந்துட்டு இருக்காங்க. என்ன தான் அவங்க கூடவே இருந்தாலும், நம்ம வீட்டு ஆளுங்க பக்கத்துல இருந்து பார்த்துக்கிற மாதிரி வருமா?
பெத்தவங்கள இழந்துட்டு நிக்கிற பிள்ளையை பக்கத்துல இருந்து நம்ம தான் பாத்துக்கணும். இந்த மணிப் புள்ளைக்கு மாமா மாமானு அஸ்வின் பின்னாடி சுத்தரத்துக்கே நேரம் சரியா இருக்குது.
நீதான் பொறுப்பா நம்ம அக்ஷயாவை பார்த்துக்கணும்.” என்று சொல்லி அனுப்பி வைத்தாள்.
திலகா சொல்வதற்காக இல்லை என்றாலும் கூட, அக்ஷயாவின் மீது ஒரு தனி பாசத்தை கொண்டிருந்த பாலா இப்போது அவள் இருக்கும் நிலையை கண்டு அவனுக்கும் வருத்தமாக இருந்ததால் தான் அவளுக்கு துணையாக இருக்க வேண்டும் என்று நினைத்து கையில் சாப்பாட்டு தட்டுடன் அவள் அருகில் சென்று இன்னொரு chair போட்டு அமர்ந்தான்.
“நீங்க சாப்பிட போகலையா மாமா?” என்று அக்ஷயா மெல்லிய குரலில் கேட்க, “எனக்கு என்ன நான் அப்புறம் சாப்பிட்டுக்கிறேன் மா. அம்மா உனக்கு என்ன கொடுக்கணும்னு டாக்டர் கிட்ட கேட்டு தனியா உனக்காக இதை சமைச்சிருக்காக. நான் ஊட்டி விடுறேன் நீ சாப்பிடு.” என்ற பாலா ஸ்பூன் கூட பயன்படுத்தாமல் நேரடியாக அவளுக்கு ஊட்டி விட முயற்சி செய்ய, தனது நிலையை நினைத்து தன்மீதே ஒருவித வெறுப்பில் இருந்த அக்ஷயா “இல்ல மாமா எனக்கு வேண்டாம். சாப்பிடவே எனக்கு புடிக்கல.” என்றாள்.
“அப்படி எல்லாம் சொல்லக் கூடாது. உன்னை சாப்பிட வைக்காமல் உனக்கு எப்படி மருந்து கொடுக்கிறது? உன்ன செக் பண்றதுக்கு டாக்டர்ஸ் வந்துட்டு இருக்காங்க.
அவங்க வர்றதுக்குள்ள நீ முதல்ல சாப்பிடு. நீ சாப்பிட்டா தான் நானும் சாப்பிடுவேன்.” என்று ஏதேதோ சொல்லி அவளை சமாதானப்படுத்திய பாலா அவளுக்கு ஊட்டி விட, வரிசையில் அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருந்த அஸ்வின் அந்த காட்சியை பார்த்து கொஞ்சம் நிம்மதியாக இருப்பதைப் போல உணர்ந்தான்.
அவனைப் பொறுத்தவரை ஐஸ்வர்யாவின் பின் பாலா வருவது தான் அவனுக்கு பிரச்சினையாக இருந்தது. மற்றபடி அவனுக்கு தெரிந்தவரை பாலா மிகவும் நல்லவன் என்பதால் அவன் தன் தங்கையுடன் பழகுவதை எல்லாம் அவன் பெரிதாக கண்டுகொள்ளவில்லை. அருகில் இருந்து அவளை யாராவது நல்லபடியாக கவனித்துக் கொண்டால் அதுவே தனக்கு போதும் என்று நினைத்தான் அஸ்வின்.
அஸ்வின் சொன்ன விஷயத்தை வித்யாவிடமும், ஐஸ்வர்யாவிடமும் ஹாஸ்பிடல் சென்று சொன்ன அவனது ஆட்கள் “ப்ளீஸ் மேடம் பிரச்சனை பண்ணாம நீங்க எங்க கூட கிளம்பி வாங்க.” என்று ஐஸ்வர்யாவை அழைத்தார்கள்.
“அது எப்படிங்க உடம்பு சரி இல்லாம ஹாஸ்பிடல்ல படுத்திருக்கிறவளை அவ்ளோ தூரம் டிராவல் பண்ணி கூட்டிட்டு போக முடியும்?
அஸ்வின் கிட்ட நான் பேசிக்கிறேன். நீங்க என்ன பண்ணாலும் என்னால ஐசுவ அனுப்ப முடியாது.” என்று வித்யா பிடிவாதமாக சொல்ல,
“நிலைமை தெரியாம ஏன் மேடம் இப்படி பிடிவாதம் பிடிக்கிறீங்க? அங்கே அக்ஷயா மேடமை கூட உடம்பு சரி இல்லாம ஆம்புலன்ஸ்ல தான் அவ்ளோ தூரம் கூட்டிட்டு போயிருக்காங்க.
ஐஸ்வர்யா மேடமை கூட்டிட்டு வரணும்னு அஸ்வின் சாரோட ஆர்டர். நீங்க நாங்க சொல்றதை கேட்கலைனா அப்புறம் வலுக்கட்டாயமாக உங்கள நாங்க கூட்டிட்டு போற மாதிரி ஆயிடும்.
எப்படியும் அக்ஷயா மேடம்க்கு ட்ரீட்மென்ட் கொடுக்குறதுக்கு அங்க யாராவது டாக்டர் அரேஞ்ச் பண்ணி இருப்பாங்க. அவர்களே ஐஸ்வர்யா மேடமையும் பாத்துக்குவாங்க.
இதுக்கு மேலயும் ஐஸ்வர்யா மேடமை அனுப்ப மாட்டேன்னு நீங்க பிரச்சனை பண்ணா, விஷயம் பெருசாகி கிட்டே போகும். இது எல்லாம் தேவையா சொல்லுங்க?” என்று கேட்டான் அவன்.
அதற்கும் வித்யா பதில் பேச வர, அவள் கையைப் பிடித்து தடுத்த ஐஸ்வர்யா “அதான் அஸ்வின் நான் வர மாட்டேன்னு சொன்னா நாளைக்கு எனக்கு டிவோர்ஸ் நோட்டீஸ் அனுப்புவேன்னு சொல்கிறானே..
அவன் அந்த அளவுக்கு பிடிவாதமாக இருக்கும் போது நம்மளால என்ன பண்ண முடியும் வித்யா? நான் அஸ்வின் கூட சேர்ந்து வாழ்றேனோ இல்லையோ..
என் மேல எந்த தப்பும் இல்லைன்னு ப்ரூப் பண்றதுக்காகவாவது நான் அவன் கூட இருக்கணும். அக்ஷயாவே அவ்வளவு தூரம் டிராவல் பண்ணி போயிருக்கும்போது எனக்கு என்ன?
நம்ம கிளம்பலாம். ஆம்புலன்ஸ் கூட வேண்டாம். அவங்க கூடயே கார்ல போயிடலாம்.” என்று சொல்லி விட்டாள்.
“ஏற்கனவே அஸ்வின் ஐஸ்வர்யாவை புரிஞ்சுக்காம அவ கூட சண்டை போட்டுட்டு இருக்கான். இதுல இந்த விஷயத்துக்காக இவங்களுக்குள்ள இருக்கிற பிரச்சனை இன்னும் பெரிசாக வேண்டாம்.” என்று நினைத்த வித்யா ஐஸ்வர்யாவை அழைத்துக் கொண்டு கிளம்புவதற்கு சரி என்று சம்மதித்தாள்.
அவர்கள் ஒரு பக்கம் அஸ்வினின் சொந்த ஊரை நோக்கி சென்று கொண்டிருக்க, அங்கே சாப்பிட்டு முடித்த அஸ்வின் தனது ரூமிற்கு சென்று விட்டான் என்பதை கவனித்துக் கொண்டிருந்த மனிஷா அவனை எப்படி நெருங்கி செல்லலாம் என்று திட்டம் போட்டுக் கொண்டிருந்தாள்.
அஸ்வினின் ரூமிற்கு சென்ற வாசுதேவனின் மகன் லோகேஷ் “என்ன அஸ்வின்.. பொண்ணுங்க மாதிரி சும்மா சும்மா ரூம்குள்ள வந்து உட்கார்ந்துகிற.. நீ ரொம்ப வருஷம் கழிச்சு இப்ப தான் நம்ம ஊருக்கே வந்திருக்க.
ஃபர்ஸ்ட் டைம் தோட்டத்துக்கு வந்துட்டு சுத்தி பாக்காம இருக்கலாமா? வா அப்படியே சும்மா ஒரு ரவுண்டு வெளியே போயிட்டு வரலாம். உனக்காகத் தான் நான் பைக் எடுத்துட்டு வந்திருக்கேன்.” என்று அழைக்க,
“நீ போறதுனா போ. எனக்கு மூடு இல்ல டா.” என்று சலிப்புடன் சொன்னான் அஸ்வின்.
“நீ நல்ல மூடுல இல்லைன்னு தானே வாடா எங்கேயாவது வெளிய போலாம்னு கூப்பிடுறேன்.” என்ற லோகேஷ் வலுக்கட்டாயமாக அஸ்வினை வரச் சொல்லி அழைத்துக் கொண்டிருக்க, அப்போது அந்த ரூமிற்குள் நுழைந்த விவேக் “அட வா மச்சான் வெளிய போலாம்! இவ்ளோ அழகான தோட்டதை சுத்தி பாக்காம இருக்கிறது எல்லாம் ரொம்ப தப்பு.
அதுவும் கிராமத்து பொண்ணுங்க எல்லாம் செமையா இருப்பாங்கன்னு நான் கேள்விப்பட்டு இருக்கேன். வா போய் சைட் அடிக்கலாம்” என்று தன் பங்கிற்கு சொல்லி அவனை அழைத்துக் கொண்டு வெளியில் கிளம்பி விட்டான்.
அப்போது அஸ்வினை தேடிக் கொண்டு அங்கே வந்த ஒரு வேலைக்காரன் “தம்பி நீங்க கல்லு வாங்கிட்டு வர சொன்னீங்க இல்ல! இங்க நல்லா இருக்காதுன்னு பக்கத்து கிராமத்தில போய் நான் வாங்கிட்டு வந்தேன்.
4, 5 பானை இருக்கு. இதை நான் என்ன பண்றது? உங்க ரூம்ல கொண்டு போய் வைக்கவா?” என்று கேட்க, “பார்றா.. அஸ்வின் அதுக்குள்ள இதெல்லாம் ரெடி பண்ணிட்டியா.. நான் இது எல்லாம் குடிச்சதே இல்லடா. இன்னைக்கு நைட்டு கண்டிப்பா நம்ம இத வச்சு என்ஜாய் பண்றோம்.” என்று உற்சாகமான குரலில் சொன்னான் விவேக்.
“அதை அப்புறம் பாத்துக்கலாம்.” என்று அவனிடம் சொன்ன அஸ்வின் வேலைக்காரனிடம் “நீங்க அதை கொண்டு போய் என் ரூம்ல வைங்க. என் தங்கச்சிக்கு ஏதாவது வேணுமான்னு கேட்டு வாங்கி கொடுங்க.
நான் மொத்தமா எல்லாத்துக்கும் சேர்த்து உங்களுக்கு அப்புறமா காசு கொடுத்துடறேன். இப்போதைக்கு செலவுக்கு சித்தப்பா கிட்ட வாங்கிக்கோங்க.” என்று சொல்லிவிட்டு சுற்றிப் பார்ப்பதற்காக லோகேஷ் மற்றும் விவேக்குடன் கிளம்பினான்.
முத்தங்கள் தொடரும்