அத்தியாயம் 19
விடியற்காலை 4 மணி அளவில் ஐஸ்வர்யாவிற்கு மயக்கம் தெளிந்தது. தன் கண்களை திறந்தவுடன் தான் ஹாஸ்பிடலில் இருப்பதை உணர்ந்து கொண்ட ஐஸ்வர்யா அஸ்வின் இருக்கிறானா? என்று தான் தன்னை சுற்றி முதலில் தேடினாள். அவளை கவனித்துக் கொள்வதற்காக அவளது ரூமில் இருந்த நர்ஸ் அப்படியே சேரில் அமர்ந்து தூங்கிக் கொண்டிருக்க, அவளை அழைத்த ஐஸ்வர்யா “என் ஹஸ்பண்ட் வெளிய இருக்கறான்னு கொஞ்சம் பாக்குறீங்களா சிஸ்டர் ப்ளீஸ்! நான் உடனே அவர பாக்கணும்.” என உடைந்த குரலில் கேட்டாள்.
அவள் தலையில் நன்றாக அடிபட்டிருந்ததால் அவளுக்கு ட்ரீட்மென்ட் செய்யப்பட்ட பிறகும் கூட அவளது தலை நன்றாக வலித்தது. அரை தூக்கத்தில் எழுந்து நின்ற நர்ஸ் “வெளிய ஒரு பெண்ணும், பையனும் இருக்கிறாங்க. அவர் உங்க ஹஸ்பண்டா என்னன்னு தெரியல மேடம். உங்கள அட்மிட் பண்ணவர் கிளம்பி போய்ட்டாரு. இருங்க, நான் வெளிய போய் அவங்கள வர சொல்றேன்.” என சொல்லிவிட்டு வெளியில் சென்று பாலாவையும், வித்யாவையும் உள்ளே அழைத்து வந்தாள்.
ஒரு ஆண் வெளியில் இருப்பதாக நர்ஸ் சொன்னவுடன் அது அஸ்வினாகத் தான் இருக்கும் என நினைத்து சந்தோஷப்பட்ட ஐஸ்வர்யாவிற்கு பாலாவை பார்த்தவுடன் புஷ் என்று போய்விட்டது. இருப்பினும் அவள் அஸ்வினில் வீட்டில் இருக்கும்போது அங்கே அவன் இல்லாமல் இருந்ததால் “ஓ பாலா… நீதானா? நீ எப்ப வந்த?” என்று மெல்லிய குரலில் கேட்டாள்.
அவள் முகத்தில் இருந்த ஏதோ ஒரு எதிர்பார்ப்பு தன்னை பார்த்தவுடன் மறைந்து போனதை கவனித்து இருந்த பாலாவிற்கு கஷ்டமாக இருந்ததால் அவனுக்கு தன் வாயை திறந்து கூட அவளிடம் எதுவும் பேச முடியாமல் போய்விட்டது. “அஸ்வின் தான் உன்னை தூக்கிட்டு இங்க வந்து ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணான். அப்புறம் ஏதோ ஒர்க் இருக்குன்னு விவேக் கூட கிளம்பி போயிட்டான். அஸ்வின் பின்னாடியே பாலாவும் உன்ன பாக்குறதுக்காக ஹாஸ்பிடல் கிளம்பி வந்துட்டான். உன் கூட நைட் ஃபுல்லா இங்க இருந்து உன்னை பார்த்துக்கிறதுக்கு யாராவது வேணும்ல… அதான் நானும் இங்க கிளம்பி வந்துட்டேன்.” என்று வித்யா சொல்ல, “ஓகே ஓகே, தேங்க்ஸ்.” என்றாள் ஐஸ்வர்யா.
“நாங்க என்ன யாரோவா! இப்ப எதுக்கு நீ எங்களுக்கு தேங்க்ஸ் சொல்ற?” என்று பாலா கேட்க, “இல்ல, எனக்கு ரொம்ப புடிச்ச நான் சின்ன வயசுல இருந்து லவ் பண்ண என் அஸ்வினே என்னை புரிஞ்சுக்காம தப்பா நினைக்கும் போது, என் ஃபிரண்ட்ஸ் நீங்க எல்லாரும் என்ன புரிஞ்சுகிட்டு இந்த அளவுக்கு எனக்காக கேர் பண்ணுவதை நினைச்சா எனக்கு கொஞ்சம் ஆறுதலா இருக்கு. அதான் தேங்க்ஸ் சொன்னேன்.” என்றாள் ஐஸ்வர்யா.
“அதெல்லாம் நீ ஒன்னும் சொல்ல வேண்டாம். டாக்டர் நீ நல்லா ரெஸ்ட் எடுக்கணும்னு சொல்லி இருக்காரு. நீ தூங்கு, நாங்க வெளிய வெயிட்டிங் ஏரியால தான் இருக்கோம். உனக்கு ஏதாவது வேணும்னா நர்ஸ்க் கிட்ட சொல்லி அனுப்பு. நாங்க வரோம்.” என்ற வித்யா பாலாவை அழைத்துக் கொண்டு வெளியில் சென்று விட்டாள்.
ஏதோ மயக்கத்தில் இருந்ததால் இவ்வளவு நேரம் தன்னை மறந்து நிம்மதியாக இருந்த ஐஸ்வர்யாவிற்கு இப்போது அவள் எடுத்துக் கொண்ட மருந்துகளை தாண்டியும் கூட கொஞ்சமும் தூக்கம் வரவில்லை. வாழ்க்கையில் நம்மை சுற்றி ஒரே துக்கமாக இருக்கும் போது அவளுக்கு எப்படி தூக்கம் வரும்? விட்டத்தை பார்த்தபடி படித்துக் கொண்டிருந்த ஐஸ்வர்யா அஸ்வினை பற்றியே யோசித்துக் கொண்டிருந்தாள்.
“அவன் என்னை டார்ச்சர் பண்றதுக்காக தான் கல்யாணம் பண்ணதா சொன்னான். ஒருவேளை அவன் என்ன கண்டுக்காம அப்படியே டெரஸ்ல விட்டிருந்தா, அவனுக்கு கஷ்டம் கொடுக்காம நானே செத்துப் போய் இருப்பனே.. எதுக்காக அவன் என்னை தூக்கிட்டு வந்து ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணி காப்பாத்துனான்? ஒருவேளை நான் ஈஸியா சாகக் கூடாதுன்னு நெனச்சானா? இல்ல அவனுக்கு முன்னாடி என் மேல இருந்த பாசம் இன்னும் கொஞ்சம் மிச்சம் இருக்கா?” என யோசித்துக் கொண்டு இருந்தாள்.
இரண்டு மணி நேரங்களுக்கு பிறகு தனது சொந்த பந்தங்களை எல்லாம் அழைத்த வாசுதேவன் அஸ்வின் ஐஸ் பெட்டிக்குள் பதப்படுத்தி வைத்திருந்த மலர்விழி மற்றும் கருணாகரனின் உடல்களை தகனம் செய்வதற்காக அவர்களது சொந்த ஊருக்கு அஸ்வினையும் மற்றவர்களையும் அழைத்து சென்றார்.
பாலா மட்டும் ஐஸ்வர்யாவுடன் ஹாஸ்பிடலில் இருந்ததால் அவனுக்கு கால் செய்த மனோகரன் “தம்பி நீ போய் அக்ஷயாவை ஹாஸ்பிடல்ல இருந்து ஆம்புலன்ஸ்ல கூட்டிகிட்டு நம்ம ஊருக்கு வந்துரு. உங்க சித்தப்பா அஸ்வினோட அம்மா, அப்பாவை நம்ம ஊர்ல இருக்கிற தோட்டத்துல தான் புதைக்கணும்னு சொல்லிட்டாரு. அதனால நாங்க எல்லாரும் கிளம்பிக்கிட்டு இருக்கோம். கடைசியா ஒரு தடவ அக்ஷயாவும் பெத்தவங்கள பாக்கணும்னு ஆசைப்படுவா இல்ல! நீ போய் எப்படியாவது டாக்டர் கிட்ட பேசி அவள கூட்டிட்டு வந்துரு.” என்று சொல்ல,
ஐஸ்வர்யாவை அங்கே விட்டு செல்ல மனம் வரவில்லை என்றாலும் அக்ஷயா தனது மாமன் மகள் என்பதால் அவள் மீது இந்த பாசத்தில் “நானே அவளையும் போய் ஹாஸ்பிடல்ல பார்க்கணும்னு நினைச்சுக்கிட்டு தான் இருந்தேன். இதோ இப்பவே கிளம்புறேன் பா. அஸ்வின் கிட்ட அவ எந்த ஹாஸ்பிடல்ல இருக்கான்னு மட்டும் கேட்டு சொல்லுங்க. அவ கூட நம்ம வீட்ல வேலை செய்றவங்க இருக்காங்கன்னு சொன்னான். அவங்க நம்பரையும் எனக்கு வாங்கி அனுப்புங்க.” என்று சொல்லிவிட்டு அந்த அழைப்பை துண்டித்தான் பாலா.
சில நிமிடங்களுக்கு பிறகு ஆக்சிடென்ட் ஆனதில் உடல் நிறைய ஏராளமான கட்டுக்களுடன் இருந்த அக்ஷயாவை சென்று சந்தித்தான் பாலா. அவளது உயிருக்கு இப்போதைக்கு எந்த ஆபத்தும் இல்லை என டாக்டர் சொல்லி இருந்ததாலும், அவள் இயல்பு நிலைக்கு திரும்ப இன்னும் எத்தனை நாட்கள் ஆகுமோ என்று கணித்து சொல்ல முடியாது என அவர்கள் சொன்னதைக் கேட்டு வருத்தப்பட்ட பாலா அக்ஷயாவின் அருகில் சென்று அமர்ந்து தன்னையும் அறியாமல் அவளை பார்த்து அழுதான்.
ஐஸ்வர்யாவின் குடும்பத்தினர் எனக்கு அவ்வளவு பெரிய துரோகத்தை செய்ய பார்த்தார்கள் என இன்று கூட அக்ஷயாவால் நம்ப முடியவில்லை. அஸ்வின் தன்னை பார்க்க வரும்போது எல்லாம் அவனிடம் தான் பலவீனமாக இருப்பதை காட்டிக் கொண்டால், ஏற்கனவே கடும் துயரத்தில் இருக்கும் தன் அண்ணன் இன்னும் உடைந்து விடுவான் என நினைத்து அனைத்து உணர்ச்சிகளையும் கட்டுப்படுத்திக் கொண்டு இருந்த அக்ஷயா பாலாவை பார்த்தவுடன் அவன் கையைப் பிடித்துக் கொண்டு “மாமா!” என மெல்லிய குரலில் அழைத்தாள்.
அவளால் சரியாக தன் வாயைத் திறந்து பேசக் கூட முடியவில்லை. அவளது கண்களில் இருந்து கண்ணீர் மட்டும் அருவி போல கொட்ட, “அழாத டா அக்ஷயா! உனக்கு எதுவும் ஆகாது. நான் உன்ன கூட்டிட்டு போக தான் வந்திருக்கேன். டாக்டர் கிட்ட பேசிட்டேன். ஆம்புலன்ஸ்ல தான் உன்ன கூட்டிட்டு போகணும்னு சொல்லிட்டாங்க. நம்ம ஆளுங்க ஆம்புலன்ஸ் அரேஞ்ச் பண்ணி இருக்காங்க. அவங்க வந்ததும் நம்ம கிளம்பிடலாம்.” என்ற பாலா மெதுவாக வாஞ்சையுடன் அவளது கட்டு போட்டு இருந்த தலையை வருடினான்.
“அஸ்வின் அண்ணா எங்க மாமா?” என்று அக்ஷயா கேட்க, “அஸ்வினை வாசு மாமா அவர் கூட நம்ம ஊருக்கு கூட்டிட்டு போய்ட்டாரு டா. அத்தயையும், மாமாவையும் நம்ம தோட்டத்தில தான் அடக்கம் பண்ணனும்னு எல்லாரும் அங்க கிளம்பி போயிட்டு இருக்காங்க.உன்னை கூட்டிக்கிட்டு வர சொன்னாங்க. அதான் நான் ஹாஸ்பிடல் கிளம்பி வந்தேன்.” என்றான் பாலா.
ஒரு பெரிய நம்பிக்கை துரோகத்தை சந்திக்கும்போது இந்த உலகில் உள்ள யாரை கண்டாலும் நமக்கு பயமாகத் தான் இருக்கும். யாரை நம்புவது? யாரை சந்தேகப்படுவது என்று ஒரே குழப்பமாக இருக்கும். ஆனால் ஒரு மோசமான சூழ்நிலையில் யாரையாவது ஒருவரை நம்பி தானே ஆக வேண்டும்!
அதே மனநிலையில் இருந்த அக்ஷயா சில நிமிடங்கள் தனது பெற்றோர்களை நினைத்து கண்ணீர் சிந்தித்து விட்டு “அப்பாவையும், அம்மாவையும் கடைசியா நான் ஒரு தடவை பாக்கணும். ப்ளீஸ் சீக்கிரம் என்ன அங்க கூட்டிட்டு போங்க மாமா.” என்று சொல்லிவிட்டு அவள் அவன் கையைப் பிடிக்க, தானும் அவளது கையை பிடித்துக் கொண்ட பாலா அவளை அப்படியே மெதுவாக தூக்கி வீல்சேரில் அமர வைத்து வெளியில் தள்ளிக் கொண்டு போனான்.
பின் தயாராக இருந்த ஆம்புலன்சில் அவளை ஏற்றிக் கொண்டு தங்களது சொந்த ஊரை நோக்கி பயணப்பட்டான். நடுவில் அவனுக்கு கால் செய்த அஸ்வின் அக்ஷயா பற்றி கேட்டு தெரிந்து கொண்டான். காலை 7 மணி அளவில் அவர்கள் தங்களது குடும்பத்திற்கு சொந்தமான தோட்டத்தை சென்று அடைந்தார்கள்.
கருணாகரன் சென்னைக்கு செல்லும்போது தங்களது சொத்துக்களை பிரித்து கேட்டு அவரது அப்பாவிடம் வாங்கிக் கொண்டு சென்று விட்டதால், அந்த பாகப்பிரிவினையில் இப்போது இந்த தோட்டம் வாசுதேவனுக்கு சொந்தமாக இருக்கிறது. இருப்பினும் தங்களது குடும்பத்தில் யார் இறந்தாலும் அவர்களை தெய்வமாக நினைத்து தங்களது தோட்டத்திற்குள் புதைத்து வருடம் தோறும் அவர்களை வந்து வழிபடும் பழக்கத்தை அவர்கள் குடும்பம் கொண்டிருந்ததால் தன் அண்ணன், அண்ணியையும் எந்த வேற்றுமையும் பார்க்காமல் அனைத்து சாஸ்திர சம்பிரதாயங்களையும் முறைப்படி செய்து அங்கே அடக்கம் செய்தார் வாசுதேவன்.
அஸ்வினும், அக்ஷயாவும் போன வாரம் வரை இரத்தமும் சதையுமாக தங்களுடன் இருந்தவர்கள் இப்போது மண்ணுக்குள் மக்கி போகப் போகிறார்களே என நினைத்து ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்துக் கொண்டு கதறி அழுதார்கள்.
ஹாஸ்பிடலில் ஐஸ்வர்யாவிற்கு துணையாக இருக்க வேண்டும் என நினைத்து வெளியில் அமர்ந்து இருந்த வித்யா போர் அடித்ததால் தனது மொபைல் ஃபோனை நோண்டிக் கொண்டிருந்தாள். அப்போது டிவி நியூஸ் ஒன்று அவள் கண்ணில் பட்டது. அதில் சில நாட்களுக்கு முன் காணாமல் போனதாக சொல்லப்பட்ட பிரபல தொழிலதிபர் தினகரன் மற்றும் அவரது குடும்பத்தை சேர்ந்தவர்கள் இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
கிட்டத்தட்ட அவர்களது உடல் நெருப்பில் எறிந்து ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு இருந்தாலும், அங்கே மீதம் எறியாமல் இருந்த சில பொருட்களை வைத்து போலீசார் அவர்களை அடையாளம் கண்டுபிடித்து பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள். மேலும் இது தொடர்பான விசாரணை முடிக்கி விடப்படும் என போலீச இன்ஸ்பெக்டர் தகவல் கொடுத்திருப்பதாக நியூசில் ஒரு பெண் வாசித்து கொண்டிருந்தாள்.
அந்த குடும்பத்தில் மீதம் இருக்கும் ஒரே நபர் ஐஸ்வர்யா மட்டும் தான் என்றும், அவள் இப்போது அஸ்வினை திருமணம் செய்து கொண்டு பிரபல தொழிலதிபர் கருணாகரன் வீட்டு மருமகள் ஆகிவிட்டாள் என்றும் கூட அந்த நியூஸில் சொல்லப்பட்டது. அனைத்தையும் அதிர்ச்சி விலகாமல் பார்த்துக் கொண்டிருந்த வித்யா அந்த மொபைல் ஃபோனை கையில் இறுக்கி பிடித்துக் கொண்டு ஐஸ்வர்யாவை காண பதட்டத்துடன் அவளது ரூமிற்கு ஓடினாள்.
– முத்தங்கள் தொடரும்