ருதன் வேகமாய் அந்த ஸ்கீரினை பிடித்து விலக்க, அது பட்டு அருகிலிருந்த கண்ணாடி ஜார் கீழே விழுந்து நொறுங்கியது.
அதில் இவள் திடுக்கிட்டு பயந்து தரையை பார்க்க, அங்கே சிதறி கிடந்த கண்ணாடி துண்டுகளினுள் முழுதாய் தெரிந்தது விராஜ் முகம்.
அதில் சட்டென்று இவள் விழிகள் விரிய, அன்று ஃபோட்டோவில் பார்த்த அதே முகம் என்று வியப்பாய் பார்வையை நிமிர்த்த, அவனோ முழுதாய் வெளியில் வந்து, “சர்ப்ரைஸ்!” என்று தன் கரங்களை விரித்தான்.
அடுத்த நொடி பளாரென்று அவன் கன்னத்தில் அரைந்தான் ருதன். அதில் அவன் கன்னத்தை பிடித்து பொத்தென்று தரையில் விழ, அவன் கையிலிருந்த கொடூர முகமூடி அமீராவின் காலடிக்கு வந்து விழுந்தது. அதில் பட்டென்று அவள் தன்னவனின் மார்புக்குள் ஒன்ற, அவளை அணைவாய் தனக்குள் சுருட்டிக்கொண்டு அனலாய் விராஜை முறைத்தவன், “ராஸ்கல்!” என்று பல்லை கடித்தான் ருதன்.
“என்ன ஆச்சு இங்க?” என்று அவசரமாய் அங்கு வந்தார் விமலா. அப்போதே கன்னத்தை பிடித்துக்கொண்டு மெதுவாய் எழுந்தான் விராஜ். அதில் அதிர்வாய் விழி விரித்த விமலா, “விராஜ்?” என்றபடி அவசரமாய் அவனை தூக்கி நிறுத்தி, “நீ எப்படா வந்த? என்ன ஆச்சு?” என்று கேட்க, அவனோ தயக்கமாய் ருதனை பார்த்து, “சாரி ப்ரோ. நா அம்மான்னு நெனச்சுதா..” என்று தயக்கமாய் பார்வையை தாழ்த்தினான்.
“உன் சேட்டையெல்லா அவங்களோட நிறுத்திக்கோ. தாண்டி இந்த பக்கம் வந்த.. தொலச்சிருவேன்.” என்று அழுத்தி கூறிவிட்டு தன்னவளை இழுத்து சென்றான் ருதன்.
அதில் திடுக்கிட்ட அவளும் அவசரமாய் அவனுடன் நடக்க, அவளை மேலும் தன் அணைப்பிற்குள் அழுத்தி பிடித்து அழைத்து சென்றான் ருதன்.
அதையே பார்த்தபடி நின்ற விமலாவோ புரியாது விராஜின் பக்கம் திரும்ப, உடனே அவரை தாவி கட்டிக்கொண்டான் விராஜ்.
“மிஸ் யூ சோ மச் மாம்” என்று அவன் இறுக கட்டிக்கொள்ள, அதில் வேகமாய் அவனை விலக்கிவிட்டவர், “வந்ததும் வராததுமா என்னடா சேட்ட பண்ண?” என்று கேட்டார் விமலா.
“அதுவா..” என்று சலிப்பாய் இதழை சுழித்தவன், “உள்ள இருக்குறது நீங்கன்னு நெனச்சு பயமுறுத்தலான்னு வந்தேன். பட் அதுக்குள்ள..” என்று கூற வர, அவன் மண்டையிலேயே அடித்தார் விமலா.
“ஆ!” என்று அவன் தன் தலையை தேய்க்க, “வர வர சேட்ட கூடிட்டே போகுது உனக்கு” என்றார்.
“ச்ச் எவ்ளோ நாள் கழிச்சு வந்திருக்கேன்.. ஆளாலுக்கு போட்டு அடிக்கிறீங்க.” என்று பாவமாய் இதழை சுழிக்க, அதில் தவிப்பாய் அவன் கன்னத்தை பற்றியவர், “சாரிடா செல்லம். ரொம்ப வலிக்குதா?” என்று கேட்க, அவனோ எதுவும் கூறாமல் மெதுவாய் அவரை அணைத்துக்கொண்டான். அதில் அவருமே ஏக்கமாய் அவன் தலையை வருடிவிட்டபடி, “மிஸ் யூ சோ மச்டா கண்ணா.” என்றார்.
அதில் மேலும் இறுக கட்டிக்கொண்டு அவர் தோள்பட்டையில் தாடையை புதைத்தான் விராஜ்.
இங்கே இவன் அணைப்பிற்குள் சென்றுக்கொண்டிருந்த அமீராவோ, தயக்கமாய் திரும்பி விராஜை தான் பார்த்தாள். அன்று முதல் முறையாய் அந்த புகைப்படத்தில் பார்க்கும்போதே அவனை எங்கோ பார்த்ததுப்போலதான் இருந்தது. இப்போது நேரில் பார்க்கவும் நிச்சயம் எங்கோ பார்த்திருக்கிறோம் என்று அழுத்தமாகவே தோன்றியது.
ஆனால் எங்கு என்றுதான் புரியாமல் அவனையே பார்த்தபடி நடக்க, அந்நேரமே அவனும் நிமிர்ந்து அவளை பார்க்க, திடுக்கிட்டு திரும்பிக்கொண்டாள் அமீரா. அதில் அப்படியே ருதன் அவளை அணைவாய் அழைத்துக்கொண்டு படிகள் ஏற, இங்கே அணைப்பிற்குள் இருந்த விராஜோ அவர்களையேதான் பார்த்தான். அவன் முகத்தில் எந்த பாவனையும் வெளிப்படையாய் தெரியவில்லை.
இங்கே அவளை அறைக்குள் அழைத்து வந்த ருதன், அவளை மெத்தையில் அமர வைத்து, “ஒரு நிமிஷம்.” என்றபடி எங்கோ நகர்ந்தான். அதைக்கூட உணராத அவளோ இன்னுமே விராஜை பற்றிய யோசனையிலேயே மூழ்கியிருந்தாள். இவன் யாராக இருப்பான்? எங்கு பார்த்திருப்போம் என்று அவள் ஆழ்ந்த யோசனையில் இருக்க, மெதுவாய் அவள் பூ பாதத்தை பற்றியது ஓரு கரம்.
அதில் அவள் திடுக்கிட்டு கீழே பார்க்க, அவள் முன் மண்டியிட்டிருந்தவன் மெதுவாய் அவள் பாதத்தை எடுத்து தன் உள்ளங்கையில் தாங்கி, அவள் கால் விரலில் மெதுவாய் எதையோ நுழைத்தான். அதில் அவள் புரியாது தன் பாதத்தை பார்க்க, அவள் கால் விரலில் கருப்பு கல் பதித்த மெட்டி அழகாய் மின்னியது.
அதில் அவள் புருவங்கள் வியப்பில் விரிய, அவனோ அந்த பாதத்தை இறக்கிவிட்டு அடுத்த பாதத்தை எடுத்து அதிலும் அழகாய் அந்த மெட்டியை அணிவித்தான். அதில் மெல்ல நிமிர்ந்து அவனை பார்த்தவளின் விழியில் இரசனை துளிர்க்க, மெதுவாய் அந்த பாதத்தை எடுத்து தன் மார்பில் வைத்தான் அவன்.
அதில் திடுக்கிட்டு குனிந்தவள், பதறி தன் பாதத்தை விலக்க முயல, அதை அழுத்தி தன் இதயத்தில் பதித்தான் அவன். அதில் அவள் புரியா பதற்றமாய் நிமிர்ந்து அவனை பார்க்க, அவனோ மெதுவாய் குனிந்து அந்த மெட்டியோடு அந்த விரல்களில் அழுத்தி முத்தமிட்டான்.
அதில் அவள் சிலிர்த்து விழி மூட, அவன் இதயத்திலிருந்த உள்ளங்கால் கூசி குறுகியது. அதில் அவன் மார்பு சட்டை கசங்க, அதை உணர்ந்து மெல்ல இதழ் வளைத்தவன், அந்த பாதத்தை அழுத்தி பிடித்து பட்டென்று இழுத்திருந்தான். அதில் பொத்தென்று அவள் அவன் மீது விழ, அவளை தாங்கி பிடித்து அவள் முகத்தில் விழுந்த கூந்தலை மெதுவாய் விலக்கி காதோரம் சொருகினான். அதில் அவள் இமைகள் மீண்டும் சிலிர்வாய் மூட, அந்த இமையில் மெதுவாய் மீசையை புதைத்து முத்தமிட்டான். அதில் அவள் உடலெங்கும் சிலிர்த்து அடங்க, அவன் தோள்சட்டையை இறுக்கி பிடித்தது அவள் விரல்கள்.
அதில் அவன் விரல்கள் அவள் காதோரமிருந்த கூந்தலுள் நுழைந்து பிடிக்க, இவளோ சிலிர்வாய் அவன் தோள் வளைவில் புதைய, வாகாய் அவள் கழுத்தினுள் புகுந்தது அவன் முகம். அதில் அவள் நெளிவாய் அவனுள் புகுந்துக்கொள்ள, அவனும் முழுதாய் அவள் கழுத்தில் புதைந்தான். அடுத்த நொடி அவளின் வாசம் மொத்தமும் அவன் நாசியில் ஏற, அவன் உடலெங்கும் மீண்டும் அந்த போதை நிரம்பியது. அதில் தன் நாசியை மேலும் அழுத்தி தேய்த்து முழுதாய் அவள் வாசத்தை தனக்குள் நிரப்பியவன், “அம்மு!” என்றான் கிறக்கமாக. அவன் மீசை குறுகுறுப்பில் அவன் காலரை சுருட்டி பிடித்து நெளிந்தவள், “ம்ம்” என்றாள். “இப்பதா குளிச்சியா?” என்று அவள் கழுத்தெங்கும் அவன் இதழை படரவிட, அதில் கூச்சமாய் அவன் பின் சிகைக்குள் கரத்தை நுழைத்து குறுகினாள் பெண்ணவள்.
அதில் அப்படியே அவன் மீசையை அவள் காதோரம் நுழைத்து முத்தமிட, கூச்சத்தில் கழுத்தை குறுக்கி சிலிர்த்தவளின் உடலெங்கும் குளிர் பரவியது. அதில் அவள் மேலும் அவனுள் புகுந்து உஷ்ணம் தேட, அவள் காதை மெல்லியதாய் கடித்து மீண்டும் குளிரூட்டியவன், “ஓய்!” என்றான். அதில் சிலிர்த்து குறுகியவள், “ம்ம்” என்றபடி மேலும் அவனுள் புதையவே முயன்றாள்.
அதில் ஈரமான இடத்தை தன் மீசையால் அழுத்தி துடைத்தபடியே அவள் காது மடலில் அழுத்தி முத்தமிட்டவன், “நானும் போய் குளிச்சுட்டு வர்றேன்.” என்றான் மெல்லிய குரலில்.
அதில் அவள் விரல்கள் விடாது அவன் சட்டையை சுருட்டி பிடிக்க, அப்படியே இதழை நகர்த்தி அவள் கன்னத்தில் மெல்லியதாய் கடித்தான். அதில் புருவத்தை குறுக்கியவளின் விரல்கள் பிடியை தளர்த்த, அவள் கன்னத்தை தன் தாடியால் அழுத்தி துடைத்தபடியே அவள் இடையை வளைத்து அப்படியே அவளை மெத்தையில் அமர வைத்தான். அதில் அவள் மெதுவாய் விழியை பிரிக்க, அவள் இரு விழிகளின் நடுவே அழுத்தி முத்தமிட்டு, “அதுக்குள்ள ரெடியா இரு.” என்றான் மெல்லிய குரலில்.
அதில் அவள் திடுக்கிட்டு இமையை நிமிர்த்த, அத்தனை அருகில் அவன் விழிகள், அசையாது அவள் விழிகளை இரசிக்க, இவள் விழிகள் சற்று தடுமாறி இமை குடையை தாழ்த்தியது. அதில் இரசனையாய் இதழ் வளைத்து அங்கு மெல்லியதாய் இதழ் பதித்தவன், “ஓய்!” என்றான்.
அதில் அவள் பதற்றமாய் இமையை நிமிர்த்தி அவன் விழிகளை சந்திக்க, “ரெடியா இரு. வெளிய போலாம்.” என்றான் மெல்லிய குரலில்.
அதில் தடுமாறி அவன் விழிகளையே பார்த்தவள், “எ..எங்க?” என்று தயங்கி கேட்க, அதில் அவள் கன்னத்தில் உரசி நின்ற கூந்தலை அழகாய் விலக்கியபடியே அவள் விழி பார்த்து, “டு மேக் திஸ் நைட் மோர் பியூட்டிஃபுல்.” என்றான் மெல்லிய குரலில்.
அதில் சட்டென்று அவள் புருவங்கள் விரிய, அவள் இதயம் பதற்றத்தை கூட்டியது. அதில் இரசனையாய் இதழ் வளைத்தவன், “ஜஸ்ட் 15 மினிட்ஸ்” என்றபடி மெதுவாய் எழுந்தான்.
அதில் அவள் பதற்றமாய் நிமிர்ந்து அவனை பார்க்க, “அதுக்குள்ள ரெடியாகலன்னா நா வந்து ரெடி பண்ணுவேன்.” என்றான். அதில் சட்டென்று இவள் விழிகள் விரிய, அவனோ டிங் என்று கண்ணடித்து குளியலறைக்குள் புகுந்தான்.
அவன் கதவை அடைத்ததுமே திடுக்கிட்டு எழுந்தவள், அவசர அவசரமாய் சென்று அலமாறியை திறந்தாள். அதனுள் வெளியே அணிய தனி சேலை செக்ஷனே தொங்கி கிடக்க, அதில் ஒன்றை அவசரமாய் எடுத்து அணிய ஆரம்பித்தாள்.
அடுத்த சில நிமிடங்களில் புடவையை கட்டி முடித்து கண்ணாடி முன்பு நின்றவள், அவசரமாய் தன்னை சரிபார்த்துக்கொண்டாள். அவசரத்தில் சுலபமாக கட்டும் புடவை ஒன்றை எடுத்து கட்டியிருந்தவள், இப்போதே அதை முழுதாய் பார்க்க, அந்த சாம்பல் கலந்த கருப்பு புடவை அவள் தேகத்திற்கு அத்தனை அழகாய் பொருந்தியிருந்தது.
அதை விழி விரிய மேலிருந்து கீழ் பார்க்க, “வெல்கம் டூ மை டார்க் வேர்ல்ட்” என்ற அவனின் குரல் அவள் உன் மனதில் ஒலித்தது. அதில் அவள் உள்ளம் பதற, அன்றும் இதேப்போல் கருப்பு சேலையில்தானே அந்த ரோஜா மாளிகைக்குள் நுழைந்தாள். அங்கு நடந்தவையெல்லாம் ஒவ்வொன்றாய் அவள் கண்முன் வந்து குவிய, அதேதான் இன்றும் நடக்க போகிறதா என்று அவள் பதறி யோசிக்கும்போதே, அவளை பின்னிருந்து இறுக அணைத்தான் ருதன்.
அதில் அவள் திடுக்கிட்டு நிமிர, வழக்கமான கோட் சூட் இல்லாமல், கருப்பு ஜீன்ஸ், அப்படியே மேலே கருப்பு உள் சட்டைக்குமேல் கருப்பு நிற கேஷுவல் ஜேக்கட் ஒன்று அணிந்திருந்தான். அதில் ஒருநிமிடம் அவள் விழிகள் இரசனையாய் அவனை ஆராய, அந்த கண்ணாடியில் அவளை மேலிருந்து கீழ் இரசனையாய் அளந்தவன், “ப்யூட்டிஃபுல்.” என்றான் ஆழ்ந்த மெல்லிய குரலில். அதில் திடுக்கிட்டு தெளிந்தவளின் மனம் படபடப்பை அதிகரிக்க, பதற்றமாய் பார்வையை தாழ்த்தினாள். அதில் மெல்லியதாய் இதழ் வளைத்து அவள் கழுத்தருகே மீசை உரச மெல்லியதாய் முத்தமிட்டவன், “போலாமா?” என்றான் மெல்லிய குரலில்.
அதில் கூச்சமல்லாது பதற்றமாய் மெல்ல நெளிந்தவள், “ம்ம்” என்றாள் மெல்லமாக. அதில் அழகாய் புன்னகைத்தவன் அவள் பஞ்சு கன்னத்தில் அழுத்தி முத்தமிட்டு, “லெட்ஸ் கோ.” என்றபடி அவள் இடையில் கரமிட்டு தன் பக்கம் திருப்பினான். அதில் திடுக்கிட்டு அவன் கை வளைவுக்குள் வந்தவள், பதற்றத்தை உள்ளுக்குள் மறைத்துக்கொண்டு அவசரமாய் அவனுடன் நடக்க, அவனும் அணைவாய் அவளை அழைத்து சென்றான்.
அப்படியே படிகள் இறங்கி இருவரும் ஹாலுக்கு வந்த நொடி, அவன் கரத்தை பிடித்து தடுத்தாள் அமீரா. அதில் அவன் கேள்வியாய் திரும்பி அவளை பார்க்க, அவளோ தயக்கமாய் பார்வையை நிமிர்த்தி அவன் முகம் பார்த்து, “நா போய்.. அத்தகிட்ட சொல்..லிட்டு வரட்டுமா?” என்று அத்தனை தயக்கமாய் கேட்டாள்.
அதில் சட்டென்று அவன் முகம் இறுக, அதில் தடுமாறியவள், “இ..இல்ல தேடுவாங்கல்ல அதா..” என்று தயங்கினாள்.
“இனி நம்பலல்லா தேட மாட்டாங்க வா.” என்று அவள் கரத்தை அழுத்தி பிடித்து இழுத்து சென்றான்.
அதில் திடுக்கிட்டு அவசரமாய் அவனுடன் நடந்தவள், புரியா பதற்றமாய் அவனையே பார்க்க, வாசல் தாண்டி தன் காருக்கு வந்தவுடன்தான் அவள் கரத்தை விட்டான்.
அதில் அவள் திடுக்கிட்டு அவன் கரத்தை பார்க்க, அவள் பக்கம் கதவை திறந்துவிட்டவன், “கெட் இன்.” என்றான். அதில் அவளும் தயக்கமாய் உள்ளே ஏறி அமர, கதவை மூடிவிட்டு மறு பக்கம் சென்று ஓட்டுநர் இருக்கையில் வந்து அமர்ந்தான் ருதன்.
அதில் அவளோ தயக்கமாய் திரும்பி அவனை பார்க்க, அவன் முகத்தில் சற்று முன் இருந்த மென்மை துளியும் இல்லாமல் இறுக்கமாய் அமர்ந்திருந்தான். அதில் குழப்பமாய் புருவம் சுழித்தவளுக்கோ, திடீரென்று இவனுக்கு என்னவாயிற்று என்று சுத்தமாக புரியவில்லை.
அதில் அவள் அவனையே பார்த்தபடி இருக்க, அவனோ தன் சீட் பெல்ட்டை மாட்டியபடி, “சீல்ட் பெல்ட் போடு.” என்றான் அவளை பாராமலே. அதில் அவளும் அவசரமாய் திரும்பி சீட் பெல்ட்டை போட, பதற்றத்தில் அது நழுவியது. அதில் அவள் அவசரமாய் அதை எடுத்து மாட்ட போக, அவள் கரத்தை பிடித்தது அவன் கரம். அதில் அவள் திடுக்கிட்டு திரும்ப, அவள் தேகத்தை முழுதாய் உரசியபடி நெருங்கினான் அவன். அதில் அவள் முழுதாய் இருக்கையில் புதைய, அவள் கழுத்தை உரசியபடி குனிந்து அந்த சீட் பெல்ட்டை மாட்டினான். அந்த உரசலில் அவள் உடலெல்லாம் குளிர் பரவ, இருக்கையின் ஓரத்தை இறுக்கி பிடித்தாள். அதற்குள் மாட்டிவிட்டு மெதுவாய் விலகியவனின் தாடி அவள் முகத்தை தழுவ, அவளோ மெல்லியதாய் முகத்தை திருப்ப, அவன் மீசை அவள் இதழில் புதைய அழுத்தி முத்தமிட்டு விலகினான் அவன். அதில் அவள் திடுக்கிட்டு அவனை பார்க்க, அவனோ அவளை பாராது இருக்கையில் சாய்ந்து மெல்ல இதழ் வளைத்தான்.
அதில் இவள் இதழ்களும் மெல்லியதாய் வளைய, சட்டென்று முகத்தை திருப்பி முழுதாய் இதழ் வளைத்தாள். அதை அவள் முன்னிருந்த சைட் மிரர் தெளிவாய் இவனுக்கு காட்டிவிட, இரசனையாய் இதழ் வளைத்தவன், அப்படியே திரும்பி குஷியாய் காரை ஸ்டார் செய்தான்.
அதில் அந்த கார் சீறி பாய்ந்து கிளம்ப, அது கேட்டை தாண்டி வெளியே செல்லும் வரை, இங்கே ஜன்னல் வழியே பார்த்தபடி நின்றிருந்தான் விராஜ்.
அந்த கார் அவன் விழித்திரையிலிருந்து முழுதாய் மறைந்துவிட்ட நொடி, அவன் விழியோரம் நீர் துளிர்த்து நிற்க, “உன்னால எப்பிடி என்ன மறக்க முடிஞ்சது மீரா?” என்றான்.
– நொடிகள் தொடரும்…