அவளோ அவன் கரத்தை எடுத்து வந்து, தன் சேலையை விலக்கிவிட்டு தன் ஆழிலை வயிற்றில் பதித்தாள்.
அதில் அவன் சட்டென்று புருவம் விரிக்க, அவளுக்கோ அவனின் உள்ளங்கை சூடே போதுமான மருந்தாய் இருக்க, அப்படியே அவனை நெருங்கி அணைத்துக் கொண்டாள்.
அதில் ஜிவ்வென்று அவன் உடல் உணர்வுகளை கடத்த, அவன் இதயம் பலமாய் துடித்தது.
என்றுமே அவன் கூடல் முடிந்ததும் பெரும் சோர்வில் அவளை இழுத்து அணைத்துக் கொண்டு உறங்க நினைப்பான். ஆனால் அவளோ பிடிக்காமல் விலகி படுத்துதான் உறங்குவாள். அதுதான் அவளுக்கு கம்பர்டபிள் என்று இவனும் எதுவும் கூறாமல் விலகி படுத்துவிடுவான். ஆனால் இப்போது முதல் முறையாய் இவளே வந்து தன்னை அணைத்திருக்கவும் அப்படியே குனிந்து அவளை பார்க்க, அவளோ நிம்மதியாய் அவன் மார்பு சூட்டுக்குள் விழி மூடி உறங்க ஆரம்பித்தாள்.
அதில் அவன் இதழ்கள் வியப்பிலும் மெல்ல தடுமாறி வளைய, அப்படியே அவளை அணைத்துக்கொண்டு அவள் உச்சியில் முகத்தை புதைத்தான் அகன்.
அதில் அவள் மேலும் நெருங்கி அவனுள் புகுந்து படுத்துக்கொள்ள, அவளை தனக்குள் சுருட்டிக்கொண்டு படுத்தவனின் விழியோரம் மெல்லியதாய் நீர் கசிந்தது.
ஏனோ அவள் முதல் அணைப்பை உணர்ந்ததால் வந்த கண்ணீரா? அல்லது அவளின் முதல் உரிமையை பெற்றதால் வந்த கண்ணீரா? ஏதோ ஒன்று இந்நொடி அவன் மனம் அடைந்த நிறைவு கண்ணீராய்தான் வெளியில் வந்தது.
அடுத்த நாள் காலை, அந்த அப்பார்ட்மண்ட்டிற்கு பின்னால் மறைந்த சூரியன் இப்போது முன்னால் எழும்பி தன் கதிர்களை விரித்து நின்றது.
அதன் ஒளிக்கூட ஊடுருவாதபடி அந்த ஜன்னல் திரைகள் அந்த மெத்தைக்கு நிழலாய் படர்ந்திருக்க, அதன் மீது நிம்மதியாய் உறங்கிக் கொண்டிருந்தவளின் விழி குண்டுகள் மெல்ல அசைந்தது. அவள் புருவங்கள் குறுக, அவளின் அடிவயிற்றில் ஒரு கூர்மையான வலி மீண்டும் சுளீரென்று ஏறியது. அதில் முகத்தை சுழித்து அசைந்து படுக்க, அவளால் அசைய முடியவில்லை.
அதில் சற்று அசவுகரியத்தை உணர்ந்தவள், கால்களை நீட்ட முயல, அதுவுமே அசைய மறுத்தது. அதில் குழப்பமாய் இமைகளை பிரிக்க முயல, அவள் தலை சற்று பாரமாய் இருந்தது. அதில் புருவத்தை சுருக்கி மீண்டும் இமைகளை பிரிக்க, ஆணவனின் சூடான சுவாசம் அவள் முகத்தை நிறைத்துக் கொண்டிருந்தது.
அதில் திடுக்கிட்டு அவள் விலக முயல, அவளால் அசையக்கூட முடியவில்லை. அவன் தேகம் அவளை இறுக்கமாய் அணைத்திருக்க, அவன் அணைப்பிற்குள் சிறையாகியிருந்தாள் அவள்.
அதில் அவள் பதற்றமாய் அவனின் முகமுரச தலையை நிமிர்த்த, அத்தனையருகே அவன் முகம். அதில் அவள் விழிகள் சற்று விரிய, ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவனின் சூடான சுவாசம் இப்போது அவள் இமையில் படர்ந்தது. அதில் இமையை மூடி திறந்தவளின் விழியில் ஒருவித தடுமாற்றம்.
முதல் முறையாய் தன் கணவனின் முகத்தை முழுதாய் பார்க்கிறாள். திருமணத்திற்கு முன்பு அவள் பார்க்க விரும்பியதில்லை. திருமணத்திற்கு பின்பும் நேரங்கள் நெருக்கத்திலேயே சென்றிருக்க, இத்தனை அருகில் இத்தனை தெளிவாய் இவன் முகத்தை பார்ப்பது இதுவே முதல் முறை.
நிம்மதியாய் உறங்கும் அவனின் முகத்தில் அவளின் கூந்தல் முடிகள் சிதறி கிடக்க, அதை தன் விரல்களால் மெல்ல விலக்கியவளின் விழிகள் அவன் முகத்தை தடுமாற்றத்தோடுதான் தழுவியது.
ஏனோ அவனின் அமைதியான முகம் அவள் மனதை என்னவோ செய்தது. முதல் முறை இப்படியொரு உணர்வு. அவளுக்கு வித்தியாசமாய் இருக்க, அவள் மனம் பலமாய் துடித்தது. அந்த மனம் முதல் முறையாய் இவனை தன் கணவன் என்ற உரிமையோடு பார்க்க கூறியது.
அதில் அவளின் தடுமாற்ற விழிகளில் மெல்லிய இரசனை துளிர்க்க, அந்த இரசனையோடே அவன் முகமெங்கும் படர்ந்தது அவள் பார்வை.
அவனின் பட்டையான புருவங்கள், அதை பாதி மறைத்திருந்த அவன் சிகை முடிகள் கலைந்து அவன் நெற்றியில் சிதறி கிடக்க, குழந்தையாய் உறங்கிக் கொண்டிருந்தான் அவன். அதை மெதுவாய் அவள் விரல்கள் விலக்கி சரி செய்ய, மெல்லியதாய் சுருங்கி விரிந்தது அவன் நெற்றி.
அப்போதும் அசதியாய் அவன் உறக்கத்தை தொடர, அவன் தனக்காக பட்ட அலைச்சலும் தவிப்பும் இன்னுமே அவன் முகத்தில் அசதியாய் தேங்கியிருந்தது. அதை பார்த்தவளின் விழிகளில் இரசனை மறைந்து மெல்லியதாய் தவிப்பு தெரிய, ஏற்கனவே உரசிக்கொண்டிருந்த அவன் முகத்தை மேலும் உரசியபடி நெருங்கி படுத்தாள்.
அதில் மெல்லியதாய் அவன் உறக்கம் கலைய, அவள் கூந்தல் முடிகள் தொந்தரவாய் அவன் முகத்தை உரசியது. அதில் முழுதாய் உறக்கம் கலைந்தவன், புருவத்தை சுழித்து இமைகளை பிரிக்க, அத்தனை நெருக்கத்தில் அவள் முகம். அதில் ஒரு நொடி அவன் புருவங்கள் விரிய, அப்போதே பெண்ணவளின் மாதவிடாய் நெடி அவன் நாசியை நிறைத்தது. அதில்தான் அவள் வலி நினைவில் எட்ட, பதறி முழு தூக்கத்தையும் விரட்டியவன், “ம்..மூனா!” என்று அவள் கன்னம் பற்ற, “மௌனா” என்று சோர்வுடன் திருத்தினாள் அவள்.
அதில் சில நொடிகள் அவள் விழிகளை பார்த்தவன், எதுவும் கூறாமல் அவள் உடலை ஆராய்ந்தபடி, “உ..உனக்கு இப்ப ஓகேவா? வலி எப்பிடி இருக்கு?” என்று பதற்றமாய் கேட்டான்.
அதில் எதுவும் கூறாமல் அவன் விழிகளையே பார்த்தவள், மெதுவாய் தன் கன்னத்திலிருந்த அவன் கரத்தை பற்றினாள். அவனோ புரியாது தன் கரத்தை பார்த்துவிட்டு அவளை பார்க்க, அந்த கரத்தை அப்படியே எடுத்து வந்து மீண்டும் தன் சேலைக்குள் தன் ஆழிலை வயிற்றில் அழுத்தமாய் பதித்தாள் மௌனா.
அடுத்த நொடி ஜிவ்வென்று இவன் உடல் சிலிர்க்க, பெண்ணவளோ அவன் உள்ளங்கையை முழுதாய் பதிய வைத்து உணர வைத்தாள். அவள் அடி வயிற்றில் நேற்றிரவு இருந்த அனல் இப்போது சுத்தமாய் இல்லாமல் இதமாய் மாறியிருக்க, அதை உணர்ந்த பிறகுதான் அவன் மனம் சற்று தணிந்தது.
“தேங்க் காட். வலி எதுவும் இல்லல்ல?” என்று அவன் பதறி கேட்க, அவளோ இல்லை என்று மெல்ல தலையசைத்தாள். அதில்தான் முழு நிம்மதியடைந்தவன், “சரி நீ ரெஸ்ட் எடு. நா போய் உனக்கு..” என்றபடி விலக போக, சட்டென்று அவன் சட்டையை பிடித்து நெருக்கமாய் இழுத்தாள் மௌனா.
அதில் திடுக்கிட்டு மீண்டும் அவள் முகமுரச வந்தவன், தடுமாற்றமாய் அவள் விழிகளை சந்திக்க, அந்த தடுமாற்றத்தையும் அமைதியாய் உள் வாங்கியவள், “எனக்கு ஒன்னு வேணும்.” என்றாள் சோர்ந்த குரலில்.
அவளின் சோர்ந்த குரல் சட்டென்று அவன் தடுமாற்றத்தை விரட்டியிருக்க, “என்ன வேணும் சொல்லு.” என்று பதறி கேட்டான்.
அதில் சில நொடிகள் அவன் விழிகளையே பார்த்தவள், அவன் சட்டையை மேலும் சுருட்டி பிடித்தபடி அவன் நாசியை உரச, அவனோ புரியாது அவள் விழிகளையே பார்க்க, அவளின் விழிகளை மெதுவாய் மூடியவள், அப்படியே அவன் நாசியுரச சாய்ந்து அவன் இதழோடு இதழ் சேர்த்தாள் மௌனா.
அதில் சட்டென்று அவன் விழிகள் அகல விரிய, அவன் இதயம் பலமாய் துடித்தது.
– காதல் தீ தொடரும்…
எனது கதைகளை காட்சிகளாக காண பின் தொடருங்கள்👇
insta id : oviya_blessy
FB id : Oviya Blessy Novels