முதல் செதில் ஒன்றை அவன் பிடுங்க முயல, அதற்கே அவன் உயிர் வரை துடித்தது வலி. அதில் இறுக்கி விழி மூடி சட்டென்று அதை பிடுங்கிவிட, “ஆ!” என்று சத்தமாய் கத்திவிட்டான் அகன்.
அதில் திடுக்கிட்டு இங்கே இவளின் உறக்கம் கலைய, தொந்தரவாய் புருவத்தை சுழித்தவள், விழிகளை அசைத்து மெதுவாய் இமைகளை பிரித்தாள். ஒரு நொடி அனைத்தும் மங்கலாய் தெரிய புரியாது பார்வையை சுழற்றியவளின் நெற்றி குழப்பத்தில் சுருங்க, அந்த நெற்றியில் மென்மையாய் பதிந்தது அவன் இதழ்கள்.
அதில் இதமாய் அவள் விழிகள் மூடி திறக்க, அத்தனை அருகில் அவன் முகம். அதில் அவள் சோர்வாய் இமையை நிமிர்த்தி அவன் விழிகளை சந்திக்க, அவள் தலையை மெதுவாய் கோதிவிட்டவன், “ஒன்னும் இல்ல தூங்கு.” என்றான் மென்மையாக.
அந்த குரலிலிருந்த மென்மையும் அவன் விரல்கள் கோதுகின்ற இதத்திலும் மீண்டும் அவள் விழிகள் உறக்கத்தில் சொருக, அப்படியே ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றிருந்தாள் மௌனா.
அதில் மெதுவாய் அவள் தலையை கோதிவிட்டபடியே அவளை நெருங்கியவன் அவள் உச்சியில் மெல்லியதாய் முத்தமிட்டு, “தூங்கு.” என்று மெல்லிய குரலில் கூறினான். அதில் அவளும் நிம்மதியாய் உறங்க ஆரம்பிக்க, அதில் தான் சற்று நிம்மதியடைந்தவன், மெதுவாய் அவளை விட்டு விலகினான்.
அந்த அசைவுக்கே அவனின் காயம் இறுகி பிடித்து வலியை கொடுக்க, அதில் திடுக்கிட்டு இறுக்கி விழி மூடியவன், வலியை இழுத்து பிடித்தபடி அந்த கரத்தை அசையாமல் அப்படியே வைத்தான். நேரம் செல்ல செல்ல அவன் சதைகளுக்குள் சிக்கியிருக்கும் செதில்கள் இரத்த ஓட்டத்தையே நிறுத்தியிருக்க, கரம் மொத்தமும் உறைந்ததுப்போல அத்தனை வலித்தது. ஆனால் கத்தவும் முடியாமல் நகரவும் முடியாமல் அப்படியே அமர்ந்துவிட்டவன், திரும்பி அவளையும் பார்த்தான்.
நிம்மதியாய் உறங்கும் இவளின் உறக்கம் எப்போது வேண்டுமானாலும் கலையலாம், கலைந்தால் மீண்டும் வலி வந்துவிடும் அவளுக்கு. அதனால் அவள் அருகிலேயே இருக்க வேண்டும் என்று தோன்றியது. எனவே மெல்ல தன் கரத்தை அசையாது பிடித்துக்கொண்டு எழுந்தவன், மெதுவாய் சென்று அந்த மருந்து பெட்டியை எடுத்து வந்து அவளருகேயே அமர்ந்து சிகிச்சை பார்க்க ஆரம்பித்தான்.
ஒவ்வொரு செதிலையும் உருவும் நொடி உயிர் மொத்தமும் இழுத்து பிடிக்க, அதை பல்லை கடித்து பொறுத்துக்கொண்டவன், ஒரு துளி சத்தம் வராமல் ஒவ்வொன்றாய் சுத்தம் செய்ய ஆரம்பித்தான். சிறு சிறு செதில்களுக்கே இப்படியென்றால் மரத்தின் பெரிய பட்டை துண்டு ஒன்று மொத்தமாய் உள்ளே இறங்கிய இடம் வீங்கி போய் சிவந்து இருக்க, அதை மெல்ல மெல்ல வெளியில் எடுப்பதற்குள் அவனின் உடல் மொத்தமும் துடித்துவிட்டது. அனைத்தையும் சத்தமே வராமல் பொறுத்துக்கொண்டு சுத்தம் செய்தவனின் உடல் மொத்தமும் வலியில் இறுகி துடித்தது.
அந்த காட்சியை இங்கே அரை இமைகளின் நடுவே பார்த்துக்கொண்டுதான் இருந்தாள் மௌனா. ஏனோ அதற்குமேல் அவளால் விழியை திறக்க முடியவில்லை. அத்தனை சோர்வில் அவள் முதுகெழும்பு இறுக்கி பிடித்திருக்க, அசையவோ எழவோ தெம்பில்லாமல், அவள் விழிகள் பாதி மட்டுமே திறக்க முடிந்தது. அந்த அரை விழிகளில் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்தவளின் கண்ணீர் விழியோரம் வழிந்தது.
அடுத்த அரை மணி நேரம் கழித்து ஓரளவு சுத்தம் செய்து முடித்திருந்தவன், அதற்கே பெருமூச்சாய் தலையை பின்னால் சாய்த்து ஓய்வெடுத்தான். இதற்குமேல் எடுக்கவோ தாங்கவோ அவன் உடலில் ஒரு துளி சக்திக்கூட மிச்சமில்லாதிருக்க, இதற்குமேல் முடியாது என்று அப்படியே காயத்தை மட்டும் சுத்தம் செய்ய ஆரம்பித்தான்.
அதுவுமே அவன் கரம் மொத்தமும் உருகும் அளவிற்கு வலியை கொடுக்க, பல்லை கடித்து தாங்கியவனின் கழுத்து நரம்பெல்லாம் வெளியில் தெரிந்தது. எப்படியோ உயிரை இழுத்து பிடித்து சுத்தம் செய்து முடித்தவன், மருந்து போட ஆரம்பிக்க, அதுவோ ஆயிரம் அக்கினி துளிகளை இறக்குவதுப்போல வலித்தது. அத்தனை வேதனைகளையும் தாங்கிகொண்டு அவன் எப்படியோ மருந்து போட்டு கட்டுப்போட்டு முடிக்க, இங்கே இவளோ மெல்ல மெல்ல அசைய முயன்றபடி எழ முயன்றாள்.
அதை இப்போதே கவனித்து பதறியவன் வேகமாய் திரும்பி, “என்ன ஆச்சு? எதாவது வேணுமா?” என்று கேட்க, அவளோ கண்ணீரோடு அவன் காயத்தை பார்த்தாள்.
அதில் வேகமாய் அதை முதுகுக்கு பின் மறைத்தவன், “அ..அது அந்த நீம் ட்ரீல லைட்டா ஸ்லிப் ஆகி கீறிருச்சு. சின்னதா ஒரு ஸ்க்ரேச் அவ்ளோதா” என்றான் அகன். அந்த சின்ன கீறலைதான் அவள் முழுதாய் பார்த்தாளே. அதில் அவள் கண்ணீர் பெருக, வேதனையோடு அவனை நிமிர்ந்து பார்த்தவளின் விழியில் தவிப்பு அதிகரித்தது. அதில் அவள் கன்னத்தை பிடித்தவன், “ஒன்னும் இல்லடா. மருந்து போட்டுட்டேன். நீ தூங்கு.” என்று அவளை படுக்க வைத்தான்.
அவளோ படுக்க மறுத்தபடி எழ முயல, “என்ன ஆச்சு? வேற எதாவது வேணுமா?” என்று கேட்டான் அகன்.
அதில் அவளோ தன் அடிவயிற்றை தாங்கி பிடித்தபடி மெல்ல எழுந்து, “வ்..வாஷ் ரூம்.. போகணும்.” என்றாள்.
அதில் பதறி எழுந்தவன், “சரி சரி ஸ்ட்ரெயின் பண்ணாத. வா என்ன புடிச்சுக்கோ.” என்று அவளை தாங்கி பிடித்தான். அதில் அவளும் அவன் காயம் படாத கரத்தை அழுத்தி பிடித்து எழ முயல, அவளை அப்படியே அள்ளி தூக்கியிருந்தான் அகன்.
அதில் அவள் திடுக்கிட்டு அதிர்ந்து அவனை பார்க்க, “நடந்தா வயிறு ஸ்ட்ரெயின் ஆகும். நானே தூக்கிட்டு போறேன்.” என்றபடி நடக்க ஆரம்பித்தான். அதில் அவளோ பதறியபடி அவன் காயத்தை பார்க்க, அந்த கரத்திலும் அழுத்தம் கொடுத்தபடிதான் தூக்கி சென்றான்.
அதில் அவள் அவசரமாய் இறங்க முயல, அவளால் அசைய கூட முடியவில்லை உடல் மொத்தமும் அத்தனை சோர்வில் இருந்தது. அதற்குள் அவனே வாஷ் ரூம் கதவை திறந்து அவளை உள்ளே கொண்டு வந்து இறக்கிவிட, அவளோ பதற்றமாய் விலகி நின்று அவன் கரத்தை பார்த்தாள். அவனோ வேகமாய் அதை மறைத்தபடி, “முடியுமா ஹெல்ப் பண்ணவா?” என்று பதற்றத்தோடு அவளை கேட்டான்.
அதில் தயக்கமாய் திரும்பி நின்றவள், “வெளிய இருங்க ப்ளீஸ்.” என்றாள்.
அதில் அவனுமே எதுவும் கூறாமல் வெளியில் சென்று கதவை மூடிவிட, அவளோ நிற்க முடியாமல் அந்த சிங்க்கில் சாய்ந்து குற்ற உணர்வாய் கண்ணீர்விட்டாள்.
தன் வலிகளை போக்கிய வரை சரி. எதற்காக அவனின் வலியைக்கூட பொருட்படுத்தாமல் தனக்கு இவ்வளவும் செய்ய வேண்டும்? அவனை காயப்படுத்தி தான் தன் காயத்தை சரி செய்ய வேண்டுமா? ஏன் இவ்வாறெல்லாம் செய்கிறான் என்று குற்ற உணர்விலும் அழுகைதான் வந்தது அவளுக்கு.
இங்கே வெளியில் வந்த அகனின் கரத்தில் கட்டையும் மீறி இரத்தம் கசிந்துக்கொண்டிருக்க, அவளை தூக்கியதில் இப்போது கரமே கழன்று விழும் அளவிற்கு வலித்தது. அதை உடலை இறுக்கிக்கொண்டு பொறுத்தவன், வேகமாய் அந்த கட்டின் மீது இன்னொரு கட்டை போட ஆரம்பித்தான்.
அதில் சற்று இரத்த போக்கு நிற்பதுப்போல் தோன்ற, அப்பாடா என்று திரும்பி கழிவறையை பார்த்தான். வெகு நேராமாகியிருக்க அவளோ இன்னுமே உள்ளேயே இருக்கவும், வேகமாய் கதவருகே சென்று, “மம்மு!” என்று மெல்லமாய் கதவை தட்டினான்.
அதில் உள்ளே இருந்து எந்த சத்தமும் வராது போக, மேலும் மெல்லமாய் தட்டியவன், “ஆல் ஓகே?” என்று கேட்க, அதில் சில நொடிகள் கடந்து அத்தனை தயக்கமாய் வந்தது அவள் குர்ல்.
“எனக்கு.. அது சேஞ்ச் பண்ண..னும்.” என்றாள் மௌனா.
அதில் வேகமாய் திரும்பி கடிகாரத்தை பார்த்தவன், கிட்டத்தட்ட ஒரு மணி நேரம்தான் ஆகியிருக்கும். அதற்குள் ஃபுல்லாகிவிட்டாதா என்று குழம்ப, அடுத்த நொடியே பதறி புருவம் விரித்தான். இரத்த போக்கு அந்த அளவு அதிகமாக உள்ளது என்று புரிய, வேகமாய் சென்று ஒரு புதிய கவரை எடுத்தான்.
மஞ்சள் வாங்க கடைக்க போன போதே, அங்கு எக்ஸ்ட்ரா நேப்கினையும் வாங்கியிருந்தான். அதுவும் இரத்த போக்கு அதிகமாக உள்ளது என்று கூறியதால், கர்ப காலம் முடிந்து பெண்கள் உபயோகிக்கும் Maternity Pads என்னும் சிறப்பான நேப்கின்களை அந்த கடைக்கார பெண் கொடுத்திருந்தார்.
அதை இப்போது எடுத்துக்கொண்டவன், கழிவறை கதவை திறந்து உள்ளே சென்றான். அவன் சட்டென்று உள்ளே வரவும் அவள் பயந்து வேறு பக்கம் திரும்பி நிற்க, அவனோ வேகமாய் அவள் அருகே வந்து, “காட்டு.” என்றான்.
அவளோ தயக்கமாய் தன்னை மறைத்துக்கொண்டு, “ப்ளீஸ் நானே பண்ணிக்கிறேன்.” என்றாள் சோர்வாக. அவளால் நிற்ககூட முடியவில்லை தடுமாறினாள்.
“உனக்கு இதெல்லா யூஸ் பண்ண தெரியாது ம்மு. நா ஒரு தெடவ மட்டும் பண்ணி காட்டுறேன்.” என்றான் அகன்.
அது அவளுக்குமே சரியென்றுதான் பட, உடல் வேறு நிற்க முடியாமல் தடுமாற, வேறு வழியின்றி மனதை சமன் செய்தவள், அவன் பார்க்காத இடம் ஒன்றும் இல்லயே என்று தயக்கமாய் அவன் பக்கம் திரும்பினாள். அடுத்த நொடியே அவன் கடமையை செய்ய வர, அவளோ தடுமாறினாள்.
அதில் அவள் கரத்தை எடுத்து தன் தோளில் பதித்தவன், “என்ன புடிச்சுக்கோ.” என்றான். அதில் அவளும் அவனின் தோளை அழுத்தி பிடித்துக்கொள்ள, அப்படியே குனிந்து அவளுக்கு நேப்கினை மாற்ற ஆரம்பித்தான்.
முதலில் நிறைந்திருந்த நேப்கினை வெறும் காயாலே எடுத்தவன், அதை கேரி பேகில் சுற்றி டஸ்பினில் போட்டுவிட்டு, புதிய நேம்கினை அவளுக்கு போட்டுவிட்டான்.
அதில் அவனின் கரமெல்லாம் அவளின் கரை பட்டிருக்க, அவன் முகத்தில் எந்த ஒரு அருவருப்பும் இல்லை. குழந்தைக்கு செய்வதுப்போல பொறுப்பாய் செய்தவன், முழுதாய் மாட்டி முடித்துவிட்டே கரத்தை விலக்கினான்.
“இப்பிடித்தான் போடணும். புரிஞ்சதா?” என்று அவன் கேட்க, அதில் அவளுக்கோ கண்ணீர் தேங்கி நிற்க, “ம்ம்” என்றாள்.
அதன் பிறகு அவள் ஆடைகளை சரி செய்துவிட்டவன், பிறகுதான் திரும்பி தன் கரத்தை கழுவிக் கொண்டான்.
அதை பார்த்தவளின் தொண்டை அழுகையில் அடைக்க, இப்போது புரிந்தது அவன் தன்னை எப்படி குளிப்பாட்டியிருப்பான் என்று.
இந்த கரையின் வாசனையே பிடிக்காது என்று ஒதுக்கி வைத்தவர் தன் தந்தை. வீட்டில் எங்காவது கரையாகிவிட்டால் கடித்து துப்பிவிடும் அன்னை. இந்த நேரங்களில், தான் உபயோகிக்கும் பொருட்களைக்கூட தொட தயங்கும் சகோதரிகள், தன்னை தனிமை படுத்தும் உறவினர்கள். இப்படியான சமூகத்தில் வளர்ந்த ஒரு கிராமத்து பெண்ணவளுக்கு, இப்படியொரு கணவன் வித்தியாசமாய் தெரிந்தான்.
தன் அங்கங்களை இரசிக்கவும் ருசிக்கவும் மட்டுமே உரிமை கொள்கிறான் என்று நினைத்தாள். ஆனால் அவற்றின் வலிகளுக்கு மருந்தாகிறான், அருவருப்பானாலும் முகம் சுழிக்காமல் தூய்மை செய்கிறான். கணவன் என்ற உரிமையை கட்டிலில் மட்டுமல்லாது, கஷ்டத்தின் போதுமே இந்தளவு ஆழமாய் காட்டுகிறான். இப்படிப்பட்ட கணவன் மட்டுமல்ல, ஆண்மகனையே முதல் முறையாய் இன்றுதான் பார்க்கிறாள்.
இப்படிப்பட்ட
ஒருவன் எங்கோ ஒரு மூலையில் இருக்கும் ஒரு குட்டி கிராமத்தில் கிடந்த ஒரு பட்டிகாட்டு பெண்ணிற்கு ஏன் கிடைக்க வேண்டும்? இத்தனை பெண்களை தாண்டி, எங்கோ இருக்கும் தன்னை எவ்வாறு கண்டுபிடித்தான், எப்படி கைபிடித்தான்? சுத்தமாய் புரியவில்லை அவளுக்கு.
“ஐ லவ் யூ ம்மு!” என்று அவன் கூறும்போது அதிலிருந்த உண்மை தெரிந்ததே தவிர, காதல் இப்போதே புரிந்தது. ஆனால் எவ்வாறு? எப்போது எங்கு முளைத்தது இந்த காதல்? அதற்குள் இவ்வளவு ஆழமாய் நிற்பது எவ்வாறு? என்ற குழப்பத்தில் அவள் இருக்க,
அதற்குள் அவளை அள்ளி தூக்கியிருந்தான் அகன்.
அதில் திடுக்கிட்டு அவனை பார்த்தவள், “இல்ல நானே..” என்று கூற வர, “ஷ்ஷ்ஷ்” என்றவன் எதுவும் கூறாமல் அவளை தூக்கி சென்று மெத்தையில் படுக்க வைத்தான்.
இப்போதே அவள் உடல் இதமாய் உணர, மனம்தான் இன்னும் பாரமாய் உணர்ந்தது. விழிகள் கண்ணீரோடு அவன் காயத்தைதான் தழுவ, அவன் அதை காட்டினால்தானே வேகமாய் மறைத்துக் கொண்டு, “இப்ப வந்தர்றேன்.” என்றபடி அவசரமாய் நகர்ந்தாள்.
செல்லும் அவனையே பார்த்தபடி விழியை இறுக்கி மூடியவளின் கண்ணீர் பொழபொழவென்று வெளியேற, அப்படியே கதறி அழ ஆரம்பித்தாள்.
நிச்சயத்திற்கு பிறகு எத்தனை முறை அவன் தன்னை பார்க்க முயன்றிருபான், பேச முயன்றிருப்பான்? வேண்டுமென்றே அவனை தவிர்த்து மறுத்து சங்கடப்படுத்தினாள். சடங்கு நேரங்களில் ஒருமுறைக்கூட அவன் முகத்தை நிமிர்ந்து பார்க்கவில்லை. அவனை பார்த்து சிறு புன்னகை கூட கொடுத்ததில்லை. மொத்தத்தில் அவனை கண்டுக்கொள்ளவே இல்லை.
ஆனால் அவனோ தன்னை பெற்ற குழந்தையை போல பார்த்துக்கொள்கிறான். தனக்காக காயப்படுகிறான், அதை பொருட்படுத்தாமல் தன் காயத்தை சரி செய்கிறான். அவனின் ஒவ்வொரு அசைவிலும் அத்தனை தவிப்பு, அத்தனை துடிப்பு. ஏனோ தான் படும் வேதனையைவிட அவன் துடிப்பது அதிகமாயிருந்தது.
“இதவிட நல்ல மாப்ள உனக்கு கெடைக்கவே மாட்டான்.” என்று தன் தாய் கூறிய வார்த்தைகளும் கண்முன் வர, அழுகை மட்டுமே வந்தது அவளுக்கு.
அப்போது திடீரென்று அவன் வரும் சத்தம் கேட்க, திடுக்கிட்டு விழித்து தன் கண்ணீரை அவசரமாய் துடைத்துக் கொண்டாள்.
“மம்மு!” என்றபடி அவன் அருகில் வர, இவளோ கண்ணீர் மொத்தமும் துடைத்துவிட்டு அவனை பார்த்தாள்.
“மருந்து எடுத்து அரமணி நேரம் மேல ஆயிருச்சு. இப்பவே சாப்புட்டுக்கோ. இல்லன்னா மிட் நைட்ல வலி வந்திரும்.” என்றான்.
சாப்பாடு என்றதுமே அவளுக்கு அடி வயிறு பிரட்ட, “இ..இல்ல வேண்டா.” என்றாள் தடுமாற்றமாக.
“பால் மட்டுந்தா கொண்டு வந்திருக்கேன். குடிச்சுட்டு படுத்துக்கோ.” என்றான் அகன்.
அதில் அவளுமே மெல்ல சரியென்று தலையசைக்க, அவனும் கையிலிருந்தவற்றை மேசையில் வைத்துவிட்டு, மெல்ல அவளை தூக்கி அமர வைத்தான்.
அதில் அவளுமே சற்று சிரமத்தோடு எழும்பி சாய்ந்தமர, அவளிடம் பால் க்ளாஸை நீட்டினான். அந்த வாசனைக்கே அவளுக்கு குமட்டிக்கொண்டு வர, “சக்கர போடல. அப்படியே குடிச்சிரு.” என்றான். ஏனென்றால் இந்த நேரத்தில் சக்கரதைதான் வாந்தி வர செய்யும்.
“கொஞ்சமாவது குடி.” என்றபடி அவன் க்ளாஸை வாயில் வைக்க, அவளும் மெதுவாய் இதழை பிரித்து அவற்றை குடிக்க ஆரம்பித்தாள்.
அப்படியே முக்காவசி க்ளாஸும் காலியாகிவிட, வாயிலிருக்கும் வேப்ப இலை கசப்பும் பின் சுவையும் சேர்ந்து இப்போது குமட்டிக்கொண்டு வந்தது. அதில் சட்டென்று அனைத்தும் வெளியில் வர போக, பட்டென்று அவள் வாயுக்குள் தன் விரலை நுழைத்திருந்தான் அகன்.
அதில் திடுக்கிட்டு அவள் அப்படியே நிறுத்த, அவள் கசப்பான நாவில் தேனின் சுவை கரைந்தது. அதில் அவள் விழிகள் சற்று விரிந்து அவனை பார்க்க, அவனோ மெதுவாய் தன் விரலை வெளியில் எடுத்து, “இப்ப கொமட்டாது.” என்றான்.
உண்மையிலேயே அவளுக்கும் குமட்டல் சற்று தணிந்திருக்க, ஆனாலும் உள்ளே மெல்லியதாய் ஒரு அசவுகரியம். அதில் அவள் முகம் சுழித்து என்னவென்று உணரும் முன், அவள் வாயுக்குள் ஒரு கரண்டி தேன் உள்ளே சென்றிருந்தது. அதில் அவள் திடுக்கிட்டு அவனை பார்க்க, மெதுவாய் அந்த கரண்டியை வெளியில் எடுத்தவன், “முழுங்கு.” என்றான்.
அதில் அவளும் அப்படியே விழுங்கிவிட, அவள் குமட்டல் மொத்தமாய் அடங்கியிருந்தது. நாவு முதல் தொண்டை வரை கசப்பு மறைந்து தேன் சுவை வழுக்கி செல்ல, அவளோ மீண்டும் அந்த தேனை பார்த்தாள்.
“ம்ம்ம்.. நெறைய சாப்பட கூடாது.” என்றபடி எடுத்து ஓரமாய் வைத்தான் அகன். அதில் அவளோ குழந்தையாய் இதழ் சுழிக்க, அந்த இதழில் அழுத்தி முத்தமிட்டவன், “இப்ப படுத்துக்கோ.” என்றான்.
அதில் அவளுமே மெதுவாய் சரிந்து படுக்க முயல, அவளை தாங்கி பிடித்து பொறுமையாய் படுக்க வைத்தான் அகன். அதில் நிம்மதியாய் படுத்துக்கொண்டவளின் உடல் சற்று ஓய்வை உணர, அடிவயிற்றில் இன்னுமே வலி இருக்க தான் செய்தது.
அதில் அவள் நெற்றி சுருங்கி விரிய, மெல்லியதாய் குறுகி படுத்தாள். அதை கவனித்தவன், “இன்னும் வலி இருக்கா?” என்று பதறி கேட்க, அவளோ ஆம் என்று சோர்வாய் தலையசைத்தாள்.
உறக்கம் பாதியில் பறிபோனதால் மீண்டும் வலி வந்திருக்கும் என்று புரிய, மீண்டும் ஒத்தடம் கொடுத்தால் சரியாகிவிடும் என்று தோன்றியது. “சரி நா போய் சுடு தண்ணி எடுத்துட்டு வர்றேன்.” என்றபடி அவன் நகர போக, சட்டென்று அவன் கரத்தை பிடித்தாள் மௌனா.
அதில் அவன் திடுக்கிட்டு திரும்பி அவளை பார்க்க, சோர்வுடன் இமைகளை மூடி பிரித்தவள் வேண்டாம் என்று மெல்ல தலையசைத்தாள். அதில் வேகமாய் அவள் அருகில் வந்தவன், “வேற எதாவது வேணுமா?” என்று கேட்க, அவளோ சோர்வுடன் ஆம் என்று கண் இமைத்தாள்.
“என்ன வேணும் சொல்லு” என்று அவன் வேகமாய் கேட்க, அவளோ சோர்வுடன் மெல்ல தன் கரத்தை எடுத்து, தன்னருகே உள்ள மெத்தையில் வைத்து, அங்கே அவனை வரும்படி தட்டி காண்பித்தாள்.
அதில் அவனும் யோசிக்காது உடனே அந்த பக்கம் வந்தமர்ந்து அவளை நெருக்கி, “சொல்லு.” என்று கூற, அவளோ மெதுவாய் அவன் கரத்தை பிடித்தாள்.
அதில் அவன் புரியாது தன் கரத்தை பார்க்க, அவளோ அந்த கரத்தை அப்படியே எடுத்து வந்து, தன் சேலையை விலக்கிவிட்டு தன் ஆழிலை வயிற்றில் பதித்தாள்.
அதில் அவன் சட்டென்று புருவம் விரிக்க, அவளுக்கோ அவனின் உள்ளங்கை சூடே போதுமான மருந்தாய் இருக்க, அப்படியே அவனை நெருங்கி அணைத்துக் கொண்டாள்.
அதில் ஜிவ்வென்று அவன் உடல் உணர்வுகளை கடத்த, அவன் இதயம் பலமாய் துடித்தது.
அவளுடன் எத்தனை முறை கூடியிருந்தாலும், அவளாக காட்டும் முதல் நெருக்கம், முதல் அணைப்பு இது. அதில் புதிதாய் அவனுள் பல உணர்வுகள் பாய, அவன் உடலெங்கும் மிதமாய் ஒரு மின்சாரத்தையே உணர்ந்தது.
– காதல் தீ தொடரும்…
எனது கதைகளை காட்சிகளாக காண பின் தொடருங்கள்👇
insta id : oviya_blessy
FB id : Oviya Blessy Novels