காலை நேரம் ஒன்பது மணியளவில் மழை வரும் அறிகுறியாய் அந்த அகண்ட வானம் ஈர மேகங்களுடன் சூழ்ந்திருக்க, அதன் கிழக்கே உயர்ந்து நின்ற சூரியன், மஞ்சளுக்கு பதில் மங்களான ஆரஞ்சு நிறத்தில் காட்சியளித்தது.
அதே நேரம் இங்கே குளியலறை கதவு திறக்கப்பட, தகதகவென அதே ஆராஞ்சு நிற புடவையில் புதுமலாராய் வெளியில் வந்தவள், தன் ஈர கூந்தலை வளைத்து முன்பக்கம் போட்டு துவட்ட ஆரம்பித்தாள் அமீரா.
அவள் முகத்தில் இப்போது அழுத தடயங்கள் சுத்தமாய் மறைந்திருக்க, அப்படியே கண்ணாடி முன்பு வந்து நின்றவள், ஹேர் ட்ரயரை எடுத்து தலையை காய வைக்க போக, அன்னிச்சையாய் அவள் பார்வை கீழே பதிந்தது. அதில் அவள் புருவத்தை குறுக்க, அங்கே கருப்பு நிறத்தில் அழகிய கிஃப்ட் பாக்ஸ் ஒன்று வைத்திருந்தது. அதில் குழப்பமாய் ட்ரயரை கீழே வைத்தவள், மெதுவாய் அதை கையில் எடுத்தாள்.
அதேப்போல் இங்கே ருதனின் கையிலும் ஒரு கருப்பு பாக்ஸ் இருக்க, அதை அவன் விரல்கள் அழகாய் வருடி மெதுவாய் திறந்தது. அப்படியே மெல்ல திறந்த அந்த பெட்டியின் உள்ளே ஒரு கருப்பு நிற பேனா. அதை மெதுவாய் அவன் விரல்கள் எடுத்து விழியருகே உயர்த்த, அந்த கருப்பு பேனாவின் கொண்டை பகுதியில் அழகாய் தொங்கியது அவளின் தங்க ஜிமிக்கி. அன்று அவள் நலங்கில் தொலைத்த அதே ஜிமிக்கிதான். இன்று இந்த Push-button டைப் பேனாவின் பின் புற கொண்டை பகுதியில் நிரந்தரமாய் பொருத்தப்பட்டு, சைடில் அழகாய் தொங்கியது அந்த ஜிமிக்கி.
அதனருகே விழியை சாய்த்து பார்த்தவனின் விழிகளில் முழு இரசனை மின்ன, அந்த ஆடுகின்ற தொங்கட்டாவில் அழகாய் இதழை பதித்து முத்தமிட்டான் ருதன்.
அவளுக்கு சொந்தமான சிறு பொருளைக்கூட அழகாய் மாற்றியமைத்து தன்னுடனே வைத்துக்கொள்பவனை சிறு வியப்பாய் பார்த்தபடி நின்றிருந்தான் யோகி. இத்தனை வருடங்களில் அவனுடைய பொருளொன்றில் வண்ணம் இணைவது இதுவே முதல் முறை.
இங்கே அமீராவோ அந்த கிஃப்ட் ரேப்பரை பிரித்து திறந்து பார்க்க, உள்ளே ஒரு புதிய மொபைல் இருந்தது. அதில் வியப்பாய் புருவம் விரித்தவள், மெல்ல அதை எடுத்து திருப்பி பார்க்க, பின்புறத்தில் முழு பிங்க் நிற கவர், அதில் வண்ண தாமரை பூக்கள் அழகாய் பதித்த டிசைன் பொறிக்கப்பட்டு இருந்தது. அதில் அவள் விழிகள் இரசனையில் நிறைய, திடீரென்று அந்த ஃபோன் அடித்தது. அதில் அவள் திடுக்கிட்டு மொபைலை கீழே விட, பொத்தென்று அந்த பாக்ஸிற்குள்ளே விழுந்துவிட்ட அந்த மொபைலின் ஸ்கிரீனில் ஹஸ்பண்ட் என்ற பெயர் பெரிதாய் வந்தது.
அதில் அகல விழி விரித்தவளின் இதயம் முழுதாய் துடிப்பை அதிகரிக்க, பதற்றமாய் அதை எடுக்க சென்றவள், அப்படியே கரத்தை நிறுத்தினாள். “எனக்கு சொந்தமானத மறைக்குற உரிம உனக்கு கெடையாது. புரியுதா?” என்ற அவனின் அழுத்தமான குரல் காதில் ஒலிக்க, அவள் முகத்தில் மெல்ல கோவம் பூசியது. அதில் புருவத்தை இடுக்கி அந்த மொபைல் ஸ்கீரின் வரும் பெயரையே முறைத்தவள், “வேற எந்த உரிமதா எனக்குன்னு இருக்கு?” என்று முனுமுனுக்க, அடுத்த நொடியே ஃபுல் ரிங் முடிந்து கால் கட் ஆனது.
அதில் இங்கே மொபைலை இறக்கிய ருதனின் புருவங்கள் குழப்பத்தில் சுருங்க, இன்னும் மொபைலை பார்க்கவில்லையோ என்று யோசித்தபடியே மீண்டும் கால் செய்தான். இங்கே ஹேர் ட்ரையரை ஆன் செய்தவளோ, கண்ணாடியை பார்த்து தலையை காய வைத்துக்கொண்டிருக்க அந்த சத்தத்தில் அந்த மொபைல் சத்தம் சுத்தமாய் அவள் செவியை அடையவில்லை.
அவளருகே கிடந்த மொபைலில் மீண்டும் மீண்டும் கால் வந்து அமைதியாய் கட்டாகிவிட, கடைசியாய் அந்த ஸ்கிரீன் அணைந்த அசைவில் அன்னிச்சையாய் அவள் அதன் பக்கம் திரும்ப போக, “அம்மாடி!” என்றார் விமலா. அதில் அவள் திடுக்கிட்டு திரும்பி வாசலை பார்க்க, அங்கே புன்னகையுடன் உள்ளே வந்தவர், “இப்பதா எந்திரிச்சியாமா?” என்றபடி அருகில் வர, அவளோ அவசரமாய் ட்ரயரை ஆஃப் செய்து கீழே வைத்து கூந்தலை சரி செய்தாள். அதில் புன்னகைத்தபடி அருகில் வந்து அவள் முகத்திலிருந்த கூந்தலை மொத்தமாய் விலக்கி ஒதுக்கி விட்டவர், அப்படியே அவள் கன்னம் பற்றி புன்னகைத்து, “அழகா இருக்கம்மா” என்றார். அதில் அவள் கடமைக்கென்று மெல்லியதாய் புன்னகைத்து பார்வையை தாழ்த்த, “செரி இன்னிக்கு என்கூட கோவிலுக்கு வர்றியா?” என்று கேட்டார்.
அதில் அவள் நிமிர்ந்து அவரை பார்க்க, அவள் பார்வையில் முழுதாய் புன்னகைத்தவர், “அது ஒன்னும் இல்லம்மா. என் சின்ன பையனுக்கு படிப்பு முடிஞ்சதில்ல? அவனுக்காக ஒரு வேண்டுதல் வெச்சிருக்கேன்.. நீயும் என்கூட வந்தா நல்லாருக்கும்னு தோனுச்சு. போய்ட்டு வரலாமா?” என்று கேட்டார்.
இப்போது அவளுக்குமே மனம் சரியில்லாதிருக்க, கோவிலுக்கு சென்றாலாவது அமைதி கிடைக்கும் என்று தோன்றியது. அதில் தயக்கமாய் அவரிடம் தலையசைத்து, “சரி” என்றாள் மெல்லமாக. அதில் புன்னகையாய் அவள் தாடையை பிடித்து அவள் விழி பார்த்தவர், “இப்பவாவது அத்தன்னு வாய் நெறைய கூப்புடலால்ல?” என்று கேட்டார்.
அதில் தயக்கமாய் பார்வையை தாழ்த்தியவள், “சரிங்க அத்த..” என்றாள். அதில்தான் நிறைவு பெருமூச்சாய் புன்னகைத்தவர், “சரி நீ சீக்கிரம் ரெடியாகிட்டு வா. நா கீழ வெயிட் பண்றேன்.” என்றார்.
அதில் அவளும் பார்வையை நிமிர்த்தாமலே சரியென்று மெல்ல தலையசைக்க, அவரும் புன்னகைத்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தார்.
அதில் அப்படியே திரும்பி யோசனையில் ஆழ்ந்தவளுக்கோ, “என் சின்ன பையனுக்கு படிப்பு முடிஞ்சதில்ல? அவனுக்காக ஒரு வேண்டுதல்” என்ற வார்த்தைகள் திரும்ப காதில் ஒலிக்க, மீண்டும் விராஜின் உருவம் கண்முன் வந்தது. அன்று ஃபோட்டோவில் பார்த்தது, நேற்று தரையில் சிதறியிருந்த கண்ணாடிக்குள் பார்த்தது இரண்டும் ஒன்றாய் வந்து குவிய, யார் இவன்? இவனை எங்குதான் பார்த்திருக்கிறோம் என்ற குழப்பத்தில் ஆழ்ந்தாள்.
“நீ என்ன மறந்த மாதிரி, என்னால ஏ உன்ன மறக்க முடியல மீரா?” என்றபடி நின்றிருந்தவனின் கண்களில் நீர் துளிர்த்து நிற்க, அவன் கண் முன்னிருந்த சுவரில் சட்டமாய் மாட்டியிருந்தது ஒரு படம்.
அதில் தவிப்பாய் கரத்தை பதித்து, “அட்லீஸ்ட் என் கண்ணுல படாமலாவது இருந்திருக்கலால்ல மீரா? எதுக்காக நா இருக்குற வீட்டுக்கே மருமகளா வந்த?” என்றவனின் விரல்கள் அதை மெல்ல வருடி தழுவ, முழுதாய் தெரிந்தது அந்த ஓவியப்படம்.
அன்று முதல் முறையாய் அவளை பார்க்கும்போது தன் பிஞ்சு விரல்களின் பிடியில் அழகிய தூரிகையை அசைத்து உண்ணிப்பாய் ஒரு ஓவியத்தை தீட்டிக்கொண்டிருந்தாளே, அதுதான் இப்போது முழுமையடைந்து இவன் முன் சட்டமாய் மாட்டியிருந்தது.
அதனுள் ஒரு அழகிய பிங்க் தாமரையில் நீர் துளிகள் விழ, அதை மார்பருகே பிடித்திருந்த பெண்ணொருவளின் கண்ணீர்தான் அதை நனைத்துக் கொண்டிருந்தது. கண்ணீருடன் அந்த அரண்மனை ஜன்னலில் அவள் சாய்ந்தமர்ந்திருக்க, அந்த ஜன்னலுக்கு வெளியே வெள்ளை குதிரையில் தன் நீண்ட சிகைகள் காற்றில் பறக்க வேகமாய் வந்துக்கொண்டிருந்தான் ஒரு ராஜகுமாரன்.
அந்த ஓவியம் என்ன கூறுகிறது என்று இவனுக்கு புரியவில்லை. ஆனால் அந்த ஓவியத்தில் இருக்கும் ராஜகுமாரனின் முகத்தில் இப்போது தன் உருவ பிம்பம்தான் தெரிய, அதனருகே கண்ணீருடன் அமர்ந்திருந்த பெண்ணின் முகத்தில் இப்போது அமீராவின் பிம்பம் விழுந்தது.
அதில் சட்டென்று விழி விரித்தவன் வேகமாய் திரும்பி பார்க்க, அங்கே வியப்பில் உறைந்து நின்றிருந்தாள் அமீரா. அதில் அவனும் பதற்றமாய் அவள் பக்கம் முழுதாய் திரும்ப, அப்போதே அவள் பின்னிருந்து மெதுவாய் முன்னால் வந்தார் விமலா.
அதில் இவன் பதற்றமாய் இருவரையும் பார்க்க, “என்னடா? கோவிலுக்கு போகணும்னு சொன்னல்ல? ரெடியானியா இல்லையா?” என்று கேட்டார் விமலா.
அதில் தடுமாறி பதற்றமாய் முகத்தை தோள்பட்டையில் துடைத்தவன், “இ..இன்னும் ஃபைவ் மினிட்ஸ் மாம். ரெடியாயிட்டு கீழ வர்றேன். நீங்க போங்க.” என்றான்.
“சரி சீக்கிரமா வா. நாங்க கார்ல வெயிட் பண்றோம்.” என்றபடி அமீராவின் கரத்தை பிடிக்க, அவளோ திடுக்கிட்டு தெளிந்து அவரை பார்க்க, “வாம்மா” என்று அழைத்து சென்றார் விமலா.
அதில் அவளும் தயக்கமாய் நிமிர்ந்து அவனையே பார்த்தபடி நகர, இவனோ பதற்றமாய் தலையை அழுத்தி கோதியபடி அவசரமாய் அங்கிருந்து நகர்ந்தான்.
அப்படியே இங்கே விமலாவும் அமீராவும் வாசலை தாண்டி வெளியில் வந்த நொடி, வேகமாய் அவரின் கரத்தை பிடித்தாள் அமீரா. அதில் அவர் நின்று திரும்பி அவளை பார்க்க, அவளோ தயக்கமாய் பார்வையை தாழ்த்தி, “சாரிங்க அத்த நா.. வரல.” என்றாள் தயக்கமாக.
அதில் புருவம் விரித்தவர், “ஏம்மா என்ன ஆச்சு?” என்று கேட்க, அவளோ தடுமாற்றமாய் தன் நெற்றி கூந்தலை விலக்கியபடி, “அது… த்..தல கொஞ்சம்.. வலிக்குற மாதிரி இருக்கு.” என்றாள்.
அதில் பதறி அவள் நெற்றியில் கரத்தை வைத்து பார்த்தவர், “என்ன ஆச்சு? ஒழுங்கா தல காயலயா?” என்று கேட்க, அவளோ அமைதியாய் பார்வையை தாழ்த்தினாள்.
அதில் கூந்தலையும் தொட்டு பார்த்தவர், “சரிம்மா. நீ போய் ரெஸ்ட் எடு. நாம இன்னொரு நாள் போய்க்கலாம்.” என்றார்.
அதில் பதறி நிமிர்ந்தவள், “இல்ல இல்ல நீங்க போயிட்டு வாங்க.” என்றாள் அமீரா.
அதில் புன்னகையாய் அவள் கன்னம் பற்றியவர், “மருமக வந்ததுக்கு அப்றம் நா போற மொதல் கோவில் தரிசனம். நீ இல்லாமா எப்பிடிம்மா?” என்று கேட்க, அவளோ சிறு வியப்பாய் அவரின் விழிகளையே பார்க்க, “நாளைக்கு போயிக்கலாம். நீ போய் ரெஸ்ட் எடு.” என்றார் விமலா.
அதில் அவளும் தயக்கமாய் பார்வையை தாழ்த்தி சரியென்று தலையசைக்க, “நீ ரூம்ல இரு. நா அங்கயே சாப்பாடு குடுத்து விடுறேன்.” என்று அவர் கூற, அவளும் சரியென்று மெல்ல தலையசைத்தாள்.
அதில் அவரும் புன்னகைத்துவிட்டு உள்ளே செல்ல, இவளோ மொத்தமாய் வாடிய நிலையில் அப்படியே வெளியே நடக்க ஆரம்பித்தாள்.
அப்படியே அவளின் கடந்த காலம் ஒவ்வொன்றாய் கண்முன் வர, ஒவ்வொரு அடியாய் வைத்து முன்னால் நடந்தாள். சிறு வயதிலிருந்து ஓவியம் வரைவதில் அவளுக்கு பிரியம் அதிகம். அது அவள் தாயிடமிருந்து வந்தது. அவளின் தாயும் ஓவிய கலையில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். அந்த ஆர்வம் அவளுக்கும் இருக்க, அவர்தான் அவளுக்கு கற்றுக்கொடுத்தார். அவரின் இறப்பிற்கு பிறகு தனிமையே இவளுக்கு வாழ்க்கையாகிவிட, அவளின் துக்கங்கள், சோகங்கள், கனவுகள் அனைத்தையுமே ஓவியத்தில்தான் காட்டுவாள். ஆனால் அவள் தந்தைக்கு அதுப்போல் கிறுக்கிக்கொண்டிருந்தாள் சுத்தமாக பிடிக்காது. அதனாலேயே பள்ளி காலத்தில் பலமுறை விரல் உடையும் அளவிற்கு அடி வாங்கியிருக்கிறாள். அதனால் பலநாட்கள் அவள் விரல்கள் எல்லாம் வீங்கி போய் சிவந்த நிலையில், சாப்பிடக்கூட முடியாமல் அழுதுக் கொண்டிருப்பாள். அப்போது அங்கிருக்கும் வேலைக்கார அம்மா ஒருவர்தான் கண்ணீருடன் அவளுக்கு ஊட்டிவிடுவார். அவர்தான் கதையின் ஆரம்பத்தில் அவளின் போலி தாயாக வந்த சகுந்தலா.
சிறுவயதிலிருந்து அவள் படும் அனைத்து வேதனைகளையும் இவர் அறிவார். ஆனால் அவரால் ஒன்றுமே செய்ய முடிந்ததில்லை. இப்போதுக்கூட அவளின் தந்தை அனுமதித்ததால்தான் அவளுக்கு ஊட்டிவிட முடிந்தது. இத்தனை சிறிய வயதில் இந்த குழந்தை படும் வேதனைகளெல்லாம் பார்க்க முடியாமல் அவருக்குமே நெஞ்சம் கலங்கும். சீக்கிரமே இந்த அரக்கனிடமிருந்து விடுபட்டு இவளுக்கு நல்ல வாழ்க்கை அமைய வேண்டும் என்று அவர் வேண்டாத நாளே இல்லை.
அத்தனை துன்பங்களுக்கு பிறகு அவள் வரைவதை முழுவதுமாய் நிறுத்தியிருந்தாள். ஆனால் பள்ளியிலும் கல்லூரிகளிலும் அவளின் திறமை தெரிந்த தோழிகள் மற்றும் ஆசிரியர்களின் கட்டாயத்தால் தந்தைக்கு தெரியாமல் சில முறை போட்டிகளில் பங்கு பெற்றிருக்கிறாள். ஆனால் தன் கல்லூரியை தாண்டி வெளியில் சென்று எங்கும் கலந்துக் கொண்டதில்லை.
ஆனால் அந்த ஒருநாள், ஆசியர்களின் பெரும் கட்டாயத்தால் வெளி கல்லூரி செல்ல சம்மதித்தாள். ஆனால் தந்தையை சமாளிக்க வேண்டுமே. அவரிடம் இன்டர்ன்ஷிப் விஷயமாக என்று பொய் கூறிதான் அனுமதி வாங்கியிருந்தனர் ஆசிரியர்கள்.
அப்படித்தான் அன்று அவர்களுடன் சென்றாள். அந்த கல்லூரியில் கால் வைத்தாள், வரைந்தாள், புதிதாய் ஒருவனை சந்தித்தாள். அந்த ஒருவனின் முகம் இன்று இந்த வீட்டிலிருக்கும் விராஜின் முகம் என்று இப்போதே தெளிவாய் புரிய, பொத்தென்று அந்த இருக்கையில் அமர்ந்துவிட்டாள்.
யோசனையில் நடந்தபடியே அவள் கார்டன் ஏரியாவிற்குள் வந்திருக்க, அதன் நடுவே இருந்த கார்டன் பெஞ்சில்தான் இப்போது அமர்ந்திருந்தாள்.
அன்று நடந்த அனைத்தும் ஒட்டு மொத்தமாய் அவள் கண்முன் வந்து குவிய, அதன் பிறகு விராஜுடன் கடந்த தருணங்கள், அதன் பிறகு அவன் தன் கல்லூரிக்கு வந்தது, கல்லூரி அருகே இருவரும் தனிமையில் சந்தித்தது, “எனக்கு உங்கள புடிச்சிருக்கு.” என்ற அவனின் வார்த்தைகள், “நா வெயிட் பண்றேன்” என்று கடைசியாய் கூறிவிட்டு சென்ற எல்லாமே நினைவில் வந்து அவள் இதயத்தை பலமாய் துடிக்க வைக்க, “மீரா!” என்றது குரல்.
அதில் அவள் திடுக்கிட்டு பயந்து நிமிர, அவள் முன் கலக்கத்துடன் நின்றிருந்தான் விராஜ். அதில் சட்டென்று அவள் எழ போக, அவள் முன் அந்த பெயிண்டிங்கை நீட்டினான் அவன். அதில் அப்படியே அமர்ந்தவளின் பார்வை அதில் குவிய, அந்த ஓவியத்திற்குள் தன் வாழ்க்கைதான் தெரிந்தது அவளுக்கு.
“இந்த பெயிண்டிங்க அன்னிக்கே நா வாங்கிட்டேன். இப்ப வரைக்கும் உங்க நியாபகமாதா வெச்சிருக்கேன்.” என்றான்.
அதில் சட்டென்று அவள் நிமிர, அதில் தயக்கமாய் பார்வையை தாழ்த்தியவன், “பட் என் அண்ணனோட வொய்ஃப் நீங்கதான்னு எனக்கு தெரியாது.” என்றான். அதில் அவளும் வாடலாய் பார்வையை அந்த ஓவியத்தில் குவிக்க, “இனிமே இது உங்ககிட்ட இருக்குறதுதா சரி.” என்றான்.
அதில் அவளும் வாடலாய் அதை வாங்கிக்கொள்ள, அதிலிருந்த கரத்தை மெதுவாய் விலக்கியவன், “அன்னிக்கு சொன்னதுதா இன்னிக்கும். இனி உங்கள டிஸ்டர்ப் பண்ண மாட்டேன். நீங்க என் மொகத்த மறந்தது மறந்ததாவே இருக்கட்டும்.” என்று கூறும்போதே அவன் விழிகள் சிவந்து கண்ணீர் பெருகியது. அதில் அவசரமாய் அதை துடைத்துக்கொண்டு அவன் திரும்பி செல்ல போக, சட்டென்று அவன் கரத்தை பிடித்தது அவள் கரம்.
அவளின் முதல் தொடுதலில் சட்டென்று நின்றுவிட்டவனின் புருவங்கள் முழுதாய் விரிய, “சாரி ஃபார் எவ்ரிதிங்” என்றாள் அவள்.
அதில் அவனும் வேகமாய் திரும்ப, அவளோ தயக்கமாய் அவன் கரத்தை விட்டுவிட்டு விலகி நின்றாள். அதில் அவன் மனம் வெகுவாய் வலிக்க நிமிர்ந்து அவளை பார்த்தான்.
அதில் குற்ற உணர்வாய் பார்வையை தாழ்த்தியபடியே நின்றவள், “நீங்க எந்தளவு ஹர்ட் ஆகியிருப்பீங்கன்னு எனக்கு தெரியும். பட் என்னோட சுச்சுவேஷன் அதவிட மோசமானது.” என்றவளின் குரல் கமறியது.
அதில் அவன் இதயம் வலித்து கண்ணீர் பெருக, “புரியுதுங்க. நீங்க இனி கில்டியால்லா ஃபீல் பண்ண வேண்டா. நடந்தத எதையும் மாத்த முடியாது. பட் மறக்க முடியும். மறந்தரலாம்.” என்று கூறும்போதே அவன் இதயம் ஆயிரம் முறை செத்து புதைந்தது.
அதில் அவளும் பார்வையை நிமிர்த்தாமல் சரியென்று தலையசைக்க, அவனோ முகத்தை திருப்பி வலியை இழுத்து பிடித்து கண்ணீரை துடைத்துவிட்டு அவள் பக்கம் திரும்பி, “நா உங்ககிட்ட ஒன்னே ஒன்னுதா கேக்கணும் மீரா.” என்றான்.
அதில் அவளோ நிமிர்ந்து அவனை பார்க்க, “நீங்க சந்தோஷமா இருக்கீங்களா?” என்று தவிப்பாய் கேட்டான்.
அதில் சட்டென்று அவள் புருவம் விரிய, “பெரியவங்க பேசி அவசரமா நடத்துன கல்யாணம்னு சொன்னாங்க. பட் இதுல.. நீங்க ஹேப்பியா இருக்கீங்களா?” என்று அவன் கேட்க, அவளோ வாடலாய் பார்வையை தாழ்த்தினாள்.
“அவன் உங்கள நல்லா பாத்துக்குறானா?” என்று கேட்டவனின் வார்த்தையில் வலி தெரிய, அவளோ அமைதியாய் நின்றாள். உண்மையில் அவளிடமே அதற்கு பதில் இல்லையே. அவன் எந்த நேரத்தில் எப்படியிருக்கிறான் என்று சுத்தமாய் புரியவில்லை. ஒரு நேரம் உலகத்தின் அனைத்து அன்பையும் அள்ளி கொடுத்து இரசிக்க வைக்கிறான், மறு நேரமே அனைத்தையும் பறித்துக்கொண்டு அரக்கனாய் மாறுகிறான். அதையெல்லாம் யோசித்தபடியே அவள் கலங்கி நிற்க, அதில் இவன் தவிப்பு அதிகரிக்க, “என்ன ஆச்சுங்க?” என்று கேட்டான்.
அதில்தான் நிகழ் உலகம் வந்தவள், “ஒ..ஒன்னும் இல்ல.” என்றபடி நகர போக, அவள் கரத்தை பிடித்தான் விராஜ்.
அதில் அவள் திடுக்கிட்டு அப்படியே நிற்க, “என் அண்ணன பத்தி எனக்கு தெரியும்.” என்றான் விராஜ்.
அதில் அவள் சட்டென்று விழி விரிக்க, “சோ என்ன பிரச்சனன்னாலும் எங்கிட்ட சொல்லுங்க. உங்கள லவ் பண்ணவனா இல்ல, இந்த வீட்டு பையனா கேக்குறேன். ஒரு வெல் விஷரா என்னிக்குமே நா உங்கக்கூட இருப்பேன்.” என்றான் விராஜ்.
அதில் அவள் கண்ணீர் பெருக, வேகமாய் தன் கரத்தை உருவிக்கொண்டவள், “தேங்க் யூ.” என்று கூறிவிட்டு வேகமாய் நகர்ந்தாள்.
அதில் வேகமாய் அவளை தடுக்க கரத்தை உயர்த்தி, பிறகு தயக்கமாய் இறக்கிவிட்டவன், புரியா தவிப்பாய் அவளையே பார்த்தான்.
இங்கே வீட்டிற்குள் படிகள் ஏறி தன் அறைக்கு வந்த அமீரா, கண்ணீரை துடைத்தபடி வேகமாய் உள்ளே நுழைய, சட்டென்று அவள் கழுத்தை அழுத்தி பிடித்து சுவரில் சாய்த்தான் ருதன். அதில் அவள் திடுக்கிட்டு சுவரில் புதைந்து விழியை விரிக்க, அத்தனை அருகில் அவளை அழுத்தமாய் பார்த்தவனின் கண்கள் கோவத்தில் சிவந்திருந்தது.
– நொடிகள் தொடரும்…