இந்தியாவின் மிகபெரிய கல்லூரி ஒன்றில் மிக பிரமாண்ட ஏற்பாடுகளுடன் நடந்துக்கொண்டிருந்தது அக்கல்லூரியின் கல்சுரல்ஸ் விழா. அதன் பெரிய சிவப்பு கற்களால் ஆன கட்டிடம், வண்ண அலங்காரங்களால் நிரம்பி வழிய, அதன் முன்னால் அகன்ற மைதானம், சுற்றியும் பச்சை மரங்கள், மத்தியில் புல்வெளி படர்ந்த நிலங்கள், சுற்றிலும் மாணவர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
இந்த கல்லூரி மாணவர்கள் மட்டுமல்லாது, அருகிலுள்ள பல்வேறு கல்லூரியை சேர்ந்த பிற மாணவ, மாணவிகளும் கலை மற்றும் போட்டிகளில் பங்கேற்பதற்காக இங்கு வந்து குவிந்திருந்தனர்.
“ப்பா! கல்சுரல்ஸ்னா இதுதான்டா கல்சுரல்ஸ். புது புது காலேஜு, புது புது ஃபிகரு.. கண்ணுக்கே குளிர்ச்சியா இருக்குடா மச்சான்.” என்று அவன் கூற, அவன் தோளில் கரமிட்டிருந்தவனோ தன் கூலரை மெல்லியதாய் இறக்கி அருகில் செல்லும் பெண்களையெல்லாம் உற்று பார்க்க, தூ என்று அவர்கள் துப்பி சென்றனர்.
அதில் சுகமாய் தன் நெஞ்சில் கை வைத்து நீவியவன், “ஆஹா அமிர்தம்.” என்று கூற, அவன் மண்டையிலேயே பலமாய் வந்து விழுந்தது ஒரு புத்தகம்.
அதில் அவன் அமர்ந்திருந்த திட்டிலிருந்து பொத்தென்று கவிழ்ந்து குப்புற விழ, சட்டென்று பின்னிருந்து எகுறி அந்த இடத்தில் வந்து அமர்ந்தான் ஒருவன். அதில் அருகே இருந்தவன் திடுக்கிட்டு திரும்ப, தன் கூலரை கழற்றிவிட்டு கூலாய் புருவம் உயர்த்தினான் விராஜ். மெல்லிய மீசை, சுத்தமாய் ஷேவ் செய்திருந்த தாடி, அளவாய் ட்ரிம் செய்யப்பட்ட சிகை முடி, இளம் முகம் என்று முழு மாணவ கோலத்தில் அவன் முகம்.
“டேய் வீர்!! எங்கடா போயிருந்த?” என்று அவன் கேட்க, “மொதல்ல மூஞ்சில இருக்குற எச்சிய தொடைங்கடா ரெண்டு பேரும்.” என்றபடி கூலரை தன் டீ ஷர்டில் மாட்டினான் விராஜ்.
அதில் கீழே விழுந்தவனோ இடுப்பை பிடித்து எழுந்து நிற்க, அதற்குள் சிரித்தபடி விராஜ் தோளில் கரத்தை போட்டு அவனை நெருக்கமாய் இழுத்தவன், “மொதல்ல சொசைட்டிய ரசிச்சு பழகுடா மச்சான். பாரு..” என்றபடி சுற்றி பார்த்தபடி, “இந்த பக்கம் கேர்ள்ஸ், அந்த பக்கம் கேர்ள்ஸ், காலேஜ் மொத்தமும் எத்தன கேர்ள்ஸ். இப்பவே சைட் அடிச்சாதா உண்டு. நெக்ஸ்ட் செம்ல இந்நேரம் நீ லண்டன் யுனிவர்சிட்டில இருப்ப. அப்றம் எங்க தேடுனாலும் இண்டியன் ஃபிகர்ஸ பாக்க முடியாது சொல்லிட்டேன்.” என்றான்.
“ச்ச் பாக்குற பொண்ணெல்லா தேவத கெடையாது. பாத்தவொடனே மனசு சொல்லணும்.” என்று தன் சிகையை கலைத்து சரி செய்தான் விராஜ்.
“ஷொபா.. அதுக்குன்னு ஒருத்தி வெள்ள ரெக்கையோடயா வந்து குதிக்க முடியும்?” என்று கூற, திடீரென்று சடசடவென்று ஒரு சத்தம்.
அதில் மூவரும் திடுக்கிட்டு திரும்ப, அங்கே பல வெள்ளை சிறகுகள் சடசடவென்று எழும்பி பறக்க, அந்த வெள்ளை புறாக்களுக்கு நடுவே, வெள்ளை சுடிதாரில் அழகாய் குனிந்து கீழே விழுந்த புத்தகத்தை எடுத்தாள் அந்த தேவதை.
அதில் இங்கே விராஜின் மனமும் சேர்ந்து அதனுடன் விழுந்திருக்க, அவன் விழிகளில் முதல் முறையாய் படர்ந்தது ஒரு இரசனை.
அங்கே தன் புத்தகத்தை சரிபார்த்தபடியே மெதுவாய் நிமிர்ந்தவளின் முகத்தில் கூந்தல் சரிந்து மறைக்க, அதை அழகாய் விலக்கியபடி அவள் முழுதாய் நிமிரும் நேரம் திடீரென்று மறைத்து எதிரில் நின்றான் அவன் தோழன்.
“என்னடா மச்சான். அந்த ரெக்க ஓகேவா?” என்று கிண்டலாய் புருவம் உயர்த்தி கேட்க, அவன் மண்டையில் அழுத்தி கை வைத்து கீழே தள்ளிவிட்டு வியப்பாய் அவளை பார்த்தான் விராஜ். அவளோ அதற்குள் காணாமல் போயிருக்க, திடுக்கிட்டு அவசரமாய் தேடியபடி முன்னால் நகர்ந்தான் விராஜ்.
அதில் கீழே விழுந்தவனோ மெதுவாய் எழுந்து நிற்க, அவன் தோளில் கரமிட்டு செல்லும் தங்கள் தோழனையே பார்த்த மற்றொருவன், “மச்சானுக்கு சிறகு விரிஞ்சிடுத்தூ..” என்று ஓலமிட்டு கூற, இங்கே ஒரு பட்டாம்பூச்சியின் சிறகு இரண்டாய் விரிந்து பறந்தது. அது பறந்து சென்ற இடத்தை சுற்றி அந்த கார்டன் பகுதி மொத்தமும் பெண்களின் ஓவிய போட்டி நடந்துக்கொண்டிருந்தது.
அனைவரும் அவரவர் தனிப்பட்ட ஓவிய நிறுத்தற்பலகை (Easel) முன்பு நின்று, அந்த கேன்வாஸில் வண்ணங்களை தீட்டி வரைந்துக்கொண்டிருக்க, அங்கேதான் அந்த வெள்ளை தேவதையை சுற்றி தேடியபடி உள்ளே நுழைந்தான் விராஜ்.
அங்கே நிறைய பெண்கள் இருக்க, அந்த வெள்ளை சுடி எங்கே என்று அவன் பார்வையை சுழலவிட்ட நேரம், எங்கிருந்தோ பறந்து வந்த ஒரு வெள்ளை இறகு ஒன்று அவன் கண்ணில் வந்து அமர்ந்தது. அதில் அவன் திடுகிட்டு இமையை உலுக்க, அவன் பார்வையை மறைத்திருந்த வெள்ளை இறகு மெதுவாய் நழுவி விழும் நேரம், அதனிடையே அந்த வெள்ளை சுடிதாரின் தரிசனம்.
அதில் இரசனையாய் இவன் இமைகள் விரிய, அங்கே அந்த ஓவியபலகையின் பின்னால் முழுதாய் மறைந்திருந்தது அந்த தேவதையின் முகம். அதில் இவன் சுவாரசியமாய் விழியை குறுக்கி மெதுவாய் முன்னால் அடியெடுத்து வைக்க, அவளின் பிஞ்சு விரல்கள் பிடித்திருந்த அந்த தூரிகை (Brush) வண்ணத்தில் தேய்த்து எடுத்து, அழகாய் வரையும் அழகில் இவன் இதயம் மெல்லிய மயிலிறகாய் மாறியது. அதில் மெதுவாய் அவன் தலையை சாய்த்து அவள் முகம் பார்க்க முயல, அந்த ஓவியப்பலகையின் பின்னால் அவளின் ஓர குறு முடிகள் அழகாய் பறக்க மெதுவாய் பாதி முகம் தெரிந்தது. அதிலேயே இவன் விழிகள் அப்படியே உறைந்திருக்க, அவள் விழிகளோ குறுகி விரிந்து நுணுக்கமாய் அந்த ஓவியத்தை தீட்டியது. அதில் இவன் அப்படியே கால்களை அகல வைத்து அருகில் வர, மெதுவாய் அவளின் முழு முகமும் தெரியும் நொடி சட்டென்று திரும்பியவள் அவன் மீது பலமாய் மோதியிருந்தாள்.
அதில் அவள் திடுக்கிட்டு அவசரமாய் விலகி, “ச..சாரி.” என்று கூந்தலை மெல்ல விலக்கியபடி நிமிர, முழுதாய் தெரிந்தது அமீரா முகம். அதில் பொத்தென்று பின்னிருந்த மரத்தில் சாய்ந்துவிட்டவனின் இதயம் துடிப்பை அதிகரிக்க, இமைகள் இமைக்க மறந்து அப்படியே உறைந்திருந்தது.
அவன் பார்வையில் சற்று தடுமாறி விலகி நின்றவள், பதற்றமாய் பார்வையை தாழ்த்தி, “சாரி.” என்று மீண்டும் கூறிவிட்டு திரும்பி வரைய ஆரம்பித்தாள்.
அப்போதே மெல்ல தலையை சாய்த்து, அவளை தாண்டி அவள் ஓவியத்தை பார்த்தான். இபோதே ஆரம்பித்த ஓவியத்தில் பெரிதாய் ஒன்றும் புரியாமல் விழியை குறுக்கியவன், அப்படியே பார்வையை நகர்த்தி அதை தீட்டிக்கொண்டிருந்த உயிர் ஓவியத்தை இரசித்தான். முதல் முறையாய் அவன் மனம் ஒருவளை தேவதை என்று கூறியது. அதில் தன் இதயத்தில் கரத்தை வைத்து மெதுவாய் நீவியவன், அழகாய் இதழ் வளைத்தான்.
அவன் இன்னுமே அங்கேயே நிற்கவும் மெல்லியதாய் திரும்பி அவனை பார்த்தவள், ஒருவித பதற்றமாய் மீண்டும் திரும்பிக்கொண்டாள். ஆனால் ஒரு ஆடவன் தன்னையே பார்க்கிறான் என்ற பதற்றத்தில் அவள் விரல்கள் தடுமாற, வண்ணம் இடம் மாறியது.
அதை கவனித்து மெல்லியதாய் இதழ் வளைத்தவன், அப்படியே அங்கிருந்து நகர்ந்தான். அவன் சென்ற பிறகுதான் மூச்சுவிட்டவள், நிம்மதியாய் வரைய ஆரம்பித்தாள்.
இங்கே மறைவாய் நின்றபடி இன்னும் அவளையே பார்த்திருந்தவனின் இதழ்கள் இரசனையாய் வளைய, அங்கிருக்கும் அத்தனை பெண்களிலும் அவள் ஒருவள் மட்டும் தனியாய் தெரிந்தாள். அதில் அப்படியே அந்த மறைவுக்குள்ளே நடக்க ஆரம்பித்தவன், அவளின் ஒவ்வொரு பாவனைகளையும் தன் விழியில் நிறைத்து இதயத்தில் சேகரித்து, அத்தனை இரசனையாய் அவளையே பார்த்திருந்தான்.
அப்படியே போட்டிகள் முடிந்து, தன் பொருட்களை எடுத்துக்கொண்டு அவள் கிளம்ப, அந்த கார்டன் ஏரியாவை தாண்டி வெளியில் வந்த நொடி சுற்றியும் ஆண்கள் கூட்டமாய் இருந்தது. அதில் பதற்றமாய் தன் பேகை இறுக பற்றியவள், மெதுவாய் நடக்க ஆரம்பித்தாள். ஏற்கனவே பள்ளி முதல் கல்லூரி வரை ஆண் வாடையே இல்லாமல் வுமன்ஸ் எஜுகேஷனில் மட்டுமே படித்து வளர்ந்தவளுக்கு இங்கிருக்கும் ஆண்களை பார்த்தாலே அத்தனை அசவுகரியமாக இருக்க, அப்படியே குனிந்த தலை நிமிராமல் அனைவரையும் கடக்க முயன்றாள்.
அதற்குள் தீடீரென்று ஒருவன் வழி மறைத்து நிற்க, திடுக்கிட்டு பின்னெட்டு வைத்து நிமிர்ந்து அவனை பார்த்தாள். அவனோ தன் தாடியை அழுத்தி நீவியபடி அவளை கீழிருந்து மேல் அளவிட்டு, “அதர் காலேஜ் ஸ்டூடன்ட்டா?” என்றான்.
அதில் இவளும் பயத்துடன் தடுமாறி ஆம் என்று தலையசைக்க, “பேர் என்ன?” என்றபடி நெருங்கினான்.
அதில் பயத்துடன் அமைதியாய் அவள் பின்னால் நகர, அவனோ சட்டென்று அவள் மார்புக்கு கரத்தை நீட்ட, அவளோ திடுக்கிட்டு பின்னால் நகர, அவள் ஐடியை பிடித்திருந்தான்.
அதில் அவளோ பதற்றமாய் தன் ஐடியை பார்க்க, அவனோ அதை தூக்கி பெயரை பார்க்கும் நொடி பட்டென்று அவன் கரத்தை அழுத்தி பிடித்தது ஒரு வலிய கரம்.
அதில் அவன் திடுக்கிட்டு நிமிர, அத்தனை கோவமாய் அவன் முன் வந்து நின்றான் விராஜ். அதில் இவன் திடுக்கிட்டு அவள் ஐடியை விட்டுவிட இவளோ வியப்பாய் நிமிர்ந்து விராஜை பார்க்க, அவனோ அவனின் கரத்தை உடையும் அளவிற்கு அழுத்தி பிடித்து, “எந்த டிப்பார்ட்மண்ட்டுடா நீ?” என்று கேட்டான்.
அதில் விரல்கள் உடைய, “ஆ!” என்று அவன் முறுக்கும் திசையில் வளையவே ஆரம்பித்தவன், “உ..உங்க டிப்பார்ட்மண்ட்தான் சீனியர்.” என்று நடுங்கி கூற, அமீராவோ பதற்றமாய் இருவரையும் பார்த்தாள்.
அவள் பயத்தில் இவன் கரத்தை சட்டென்று விட்ட விராஜ், “இன்னொரு தெடவ கண்ல பட்ட..” என்று அழுத்தம் கொடுக்க, அவனோ கரத்தை உதறியபடி வேகமாய் அங்கிருந்து ஓடியிருந்தான்.
அதில்தான் கோபத்தை சற்று தணித்தவன் அமீராவின் பக்கம் திரும்ப, அவளோ தயக்கமாய் பார்வையை தாழ்த்தி, “தேங்க் யூ.” என்றாள் தடுமாற்றமாக.
அதில் இறுக்கத்துடனே மெல்லியதாய் தலையசைத்தவன், “தனியாதா வந்தீங்களா?” என்று கேட்க, “இ..இல்ல காலேஜ்மேட்ஸ் எல்லாம் ஒன்னாதா.” என்றாள்.
“எங்க அவங்கல்லா?” என்று அவன் கேட்க, அதற்கும் தயக்கமாய், “அ..து காம்படீஷன்காக ஸ்பிலிட் ஆயிட்டோம். எங்க இருக்காங்கன்னு தெரியல.” என்றாள் தடுமாற்றமாக.
“சரி கால் பண்ணி கேளுங்க.” என்று அவன் கூற, அவளோ தயக்கமாய் அப்படியே நின்றாள்.
“என்ன ஆச்சு?” என்று அவன் கேட்க, “எ..ங்கிட்ட ஃபோன் இல்ல.” என்றாள் அத்தனை தயக்கமாக.
“சரி நம்பர் சொல்லுங்க.” என்று அவன் தன் மொபைலை எடுக்க, “நம்..பரும் இல்ல.” என்றாள் தயக்கமாக.
அதில் புரியாது புருவத்தை குறுக்கியவன், அவள் பயந்த முகத்தில் வேறு எதுவும் கேட்காமல் தன் மொபைலை உள்ளே வைத்துவிட்டு, “சரி டோன்ட் வரி. நா இந்த காலேஜ் ஸ்டூடன்ட்தான்.. நா உங்கள சேஃபா அவங்ககிட்ட விட்டர்றேன் வாங்க.” என்றபடி கரத்தை நீட்டி அவளுக்கு வழிவிட்டான். அதில் அவளும் பதற்றமாய் மெல்ல முன்னால் நடக்க, அவனும் அவளை உரசக்கூட இல்லாமல் நாகரீகமாய் இடைவெளிவிட்டே உடன் நடந்தான்.
அதில் அவளும் அவனுடன் சேர்ந்து தன் நண்பர்களை தேட ஆரம்பிக்க, செல்லும் வழியில் அவளை சைட் அடித்து விசில் அடித்த ஆண் கூட்டத்தையெல்லாம் பார்வையாலே எரித்து அடக்கினான் விராஜ். அதையெல்லாம் உணர்ந்த அவளும் குனிந்த தலை நிமிராது அவனுடன் நடக்க, திடீரென்று இரு ஆண்கள் அவளை நெருங்கி வந்தனர். அதில் சட்டென்று பின்னெட்டு வைத்தவள், விராஜின் சட்டை நுனியை சுருட்டி பிடித்து அவன் பின்னால் ஒளிந்தாள்.
அதில் அவன் முன்னால் நிமிர்ந்து பார்க்க, அவனின் நண்பர்கள்தான், “டேய் மச்சான்..” என்றபடியே கண்களால் அமீராவையும் காட்டி ஏதோ ஜாடை பேச, விராஜோ சீரியாஸாய் இதழில் விரல் வைத்து தடுத்து, இங்கிருந்து செல்லுங்கள் என்று கண்ணிலே கோபமாய் கூறினான். ஏனோ அவளை பயமுறுத்தும் அனைத்தையும் ஒதுக்கி வைத்தான்.
அதில் அவர்களும் புன்னகைத்துவிட்டு ம்ம் என்ஜாய் என்பதுப்போல் கண் ஜாடை செய்துவிட்டு அவனை கடந்து சென்றனர். அவர்கள் கடந்த பிறகே அவள் விரல்கள் மெதுவாய் அவன் சட்டை நுனியை விட, அதில் அழகாய் இதழ் வளைத்தான் விராஜ். ஏனோ அவள் தன்னை மட்டும் நம்புகிறாள் என்பது அவனுக்கு பிடித்திருந்தது.
அதன் பிறகு அவளின் கல்லூரி மாணவிகள் மற்றும் ஆசிரியைகளை கண்டுபிடித்து அவர்களிடம் அவளை ஒப்படைத்துவிட்டவன், “கேர்ஃபுல்.” என்றான் முழு அக்கறையோடு. அதில் அவளும் அப்போதே முழுதாய் நிமிர்ந்து, “தேங்க் யூ சோ மச்.” என்றாள் புன்னகையுடன்.
இப்போது தடுமாற்றமே இல்லாமல் அவள் முகத்தில் தெரியும் முழு புன்னகையில் அழகாய் இதழ் விரித்து புன்னகைத்தவன், “பாய்!” என்றபடி நகர போக, “ஹா உங்க பேரு?” என்றது ஒரு குரல்.
அதில் அவன் வியந்து சட்டென்று திரும்ப, அது அவள் அல்ல அவளின் தோழி. அதில் மெல்லிய ஏமாற்றமாய் புன்னகைத்தவன், “வீர்” என்றான்.
“நைஸ்.” என்று அவள் புன்னகைக்க, அதில் புன்னகைத்துவிட்டு தயக்கமாய் அமீராவின் பக்கம் திரும்பி, “உங்க நேம்?” என்று கேட்க, அவளோ மெல்லியதாய் புன்னகைத்துவிட்டு, “மீரா.” என்றாள்.
“மீரா” என்று இரசனையாய் தனக்குள் சொல்லி பார்த்தவன், பிறகு புன்னகைத்துவிட்டு “பாய் மீரா.” என்றபடி புன்னகையோடே அங்கிருந்து நகர்ந்தான்.
அதில் புன்னகைத்த அமீராவும் செல்லும் அவனையே சிலநொடி பார்த்திருக்க, வேகமாய் அவளை உலுக்கினாள் தோழி. அதில் அவள் திடுக்கிட்டு அவளை பார்க்க, “கெளம்பலாமா?” என்றாள். அதில் அவளும் சரியென்று புன்னகைக்க, அனைவரும் மற்ற ஃபார்மாலிட்டியை முடித்துவிட்டு தங்கள் கல்லூரி பேருந்தில் ஏறி அமர்ந்தனர்.
ஜன்னல் அருகே அமர்ந்துவிட்ட அமீராவோ அன்னிச்சையாய் வெளியே கவனிக்க, அங்கே தன் நண்பர்களுடன் பேசியபடி அவளையேதான் பார்த்தபடி நின்றிருந்தான் விராஜ்.
“டேய் மச்சான். போறாடா போய் பேசுடா. அப்றம் மீட் பண்ணவே முடியாது.” என்று அவன் நண்பன் அவசரப்படுத்த, அவனோ எதையும் காதில் வாங்காமல் அவளை மட்டுமே பார்த்திருந்தான்.
அவனை பார்த்த இவளும் சிநேகமாய் புன்னகைக்க, அவனுமே புன்னகைத்து பார்த்து போங்கள் என்று தலையசைத்தான். அப்படியே அவர்களின் பேருந்து நகர ஆரம்பிக்க, “டேய் மச்சா போறாடா..” என்று இவன் அவசரப்படுத்த, விராஜோ அசையக்கூட இல்லாமல் அவளையே பார்த்தபடி நின்றிருந்தான்.
அப்படியே அந்த பேருந்து கடந்து சென்றிருக்க, “டேய்!” என்று அவனை உலுக்கினான் தோழன். அதில் கூலாய் அவன் பக்கம் திரும்பியவன், அந்த பேருந்தை பார் என்று கண்காட்டினான். அதில் அவனும் புரியாது அந்த பேருந்தை உற்று பார்த்து புரியாது அவன் பக்கம் திரும்ப, “LSR காலேஜ் ஃபார் வுமன்ஸ்” என்றான் விராஜ்.
அதில்தான் வியப்பாய் விழியை விரித்த நண்பர்கள் இருவருக்கும் அவன் திட்டம் புரிய, “வாவ்டா மச்சான்” என்றபடி அவனை இறுக கட்டிக்கொண்டு துள்ளினர்.
அதன் பின்னான நாட்களில் பலமுறை அவள் கல்லூரி முன்பே வைத்து அவளை சந்தித்தான், பேச முயன்றான். ஆனால் அவளோ நட்பாகக்கூட அவனிடம் நின்று பேசவில்லை. ஏன் அன்றுப்போல் சிநேகமாய் புன்னகைக்கூட இல்லை. ஏதோ ஒரு பதற்றத்துடனே அவனை தவிர்த்தாள், விலகி சென்றாள். அதில் இவனுக்குமே காரணம் புரியவில்லை. தன்னை தவறாக நினைத்துவிட்டாளோ என்று குழம்பினான். அடுத்த நாளே அவளின் தோழிகளின் உதவியுடன், கல்லூரிக்கு பின்னிருந்த ஒரு தனிமையான பசுமை பகுதி ஒன்றுக்கு அவளை வரவழைத்திருந்தான்.
தோழிகளுடன் புரியாது வந்தவளோ அங்கே இவனை பார்தத்ததும் அதிர்ந்து தன் தோழிகளை பார்க்க, அவர்களோ எப்போதோ சென்றிருந்தனர்.
அதில் இவள் பதறி சுற்றி பார்க்க, அவளை நெருங்கி அடியெடுத்து வைத்தவன், “எதுக்கு மீரா என்ன இப்பிடி அவாய்ட் பண்றீங்க?” என்று கேட்க, அவ்ளோ பதற்றமாய் அங்கிருந்து நகர முயற்சிக்க, அவள் கரத்தை பிடித்து தடுத்தான்.
அதில் அவள் பதறி, “என் கைய விடுங்க.” என்று உதற முயல, அவனும் சட்டென்று கரத்தை விலக்கியிருந்தான். அதில் அவளோ வேகமாய் விலகி நிற்க, “ப்ளீஸ்ங்க ஒரு டூ மினிட்ஸ்.” என்றான்.
அதில் அவளும் பார்வையை தாழ்த்தி அமைதியாய் நின்றாள். “நீங்க நெனைக்குற மாதிரி, எனக்கு தப்பான இன்டன்ஷனெல்லா கெடையாது. எனக்கு உங்கள புடிச்சிருக்கு. அத சொல்லதா இத்தன நாள் பின்னாடி சுத்துனேன்.” என்று முன்னெட்டு வைக்க, அவளோ சட்டென்று பின்னால் நகர்ந்தாள்.
அதில் அப்படியே நின்றுவிட்டவன், “எனக்கு புரியுது. பசங்க நாங்க ஈசியா சொல்லிருவோம். பட் உங்களுக்கு டைம் தேவ. எனக்கு பிரச்சன இல்ல. எவ்ளோ டைம் வேணுமோ எடுத்துக்கோங்க. அடுத்த மாசம் இதே நாள் உங்களுக்காக இங்க வெயிட் பண்ணுவேன். நல்லா யோசிச்சு உங்க பதில சொல்லுங்க. அது எதுவா இருந்தாலும் சரி. அதுக்கப்றம் நா டிஸ்டர்ப் பண்ண மாட்டேன்.” என்றான்.
“ப்ளீஸ் இதோட முடிச்சுக்கலாம். எப்ப கேட்டாலும் என் பதில் நோதா.” என்று அவள் கூற, “பரவால்லங்க. இந்த ஒரு மாசத்துல என்ன வேணுன்னாலும் மாறலாம். நா வெயிட் பண்றேன். உங்க முடிவுல உறுதியா இருந்தா, அடுத்த மாசம் வந்து சொல்லுங்க. அதுவரைக்கும் உங்க கண்ல படமாட்டேன்.” என்றபடி அங்கிருந்து நகர்ந்திருந்தான்.
அதில் செல்லும் அவனையே பார்த்தவளுக்கோ, அவன் நிலையும் புரிந்தது. ஆனால் தன் நிலையை அவனுக்கு யார் புரிய வைப்பது என்றுதான் கலங்கியது அவள் விழிகள்.
அடுத்த ஒருமாதம் கழித்து இதே இடத்தில் அவளுக்காக காத்திருந்தான் விராஜ். இன்னும் சற்று நேரத்தில் அவனுக்கு லண்டன் ஃப்ளைட் உள்ளது. அவன் கை கடிகாரத்தில் நேரம் சென்றுக்கொண்டே இருக்க, அனைத்தையும் உதறிவிட்டு அவள் ஒருவளின் பதிலுக்காக மட்டுமே காத்திருந்தவன், கை கட்டி அந்த அமைதியான குளத்தை வெறித்து பார்த்தபடி நின்றிருந்தான்.
அப்போதே பின்னால் பறவைகள் சட்சடவென்று எழும்பி பறக்க, உடனே திரும்பி பார்த்தான். அதன் நடுவே அமைதியாய் நடந்து வந்தாள் பெண்ணவள். அதில் அவன் முழுவதுமாய் திரும்பி நிற்க, அது தன் தேவதை அல்ல அவளின் தோழி புவி.
அதில் அவனோ வேகமாய் அவளுக்கு பின்னால் தன்னவளை தேடி ஏமாற்றமடைய, அவன் அருகே நெருங்கி ஒரு கடிதத்தை கொடுத்தாள் அவள். அதில் அவன் கேள்வியாய் அவளை பார்க்க, “உங்க மீரா குடுத்ததுதான்.” என்றாள் அவள்.
அதில் அவனும் அவசரமாய் வாங்கி அவற்றை பிரித்து பார்க்க, “சாரி எனக்கு இஷ்டம் இல்ல. இனிமே என்ன டிஸ்டர்ப் பண்ணாதீங்க.” என்று எழுதியிருந்தது.
அதில் மொத்தமாய் வாடிப்போனவனின் கண்களில் கண்ணீர் நிறம்ப, அவற்றை அவசரமாய் துடைத்துக்கொண்டு தன் முன் நிற்பவளை நிமிர்ந்து பார்த்தவன், “தேங்க்ஸ் ங்க” என்று கூறிவிட்டு நகர்ந்தான்.
அதில் திரும்பி அவனை பார்த்தவளுக்கோ, தன் தோழியின் மீது கோவமாய் வந்தது. இப்படியொருவனை காயப்படுத்த அவளுக்கு எப்படி மனது வந்தது என்று.
அப்படியே அங்கிருந்து வெளியே வந்தவனோ தன் காரில் ஏறி அமர்ந்து, “போலாம் ட்ரைவர்.” என்றான் விராஜ்.
“இனி நேரா ஏர்போட்டுக்குதான தம்பி?” என்று அவர் கேட்க, அதில் வாடலாய் தன் கையிலிருந்த அவள் கடிதத்தை பார்த்தவன், “ம்ம்” என்று தலையசைத்தான்.
அதில் அந்த காரும் நகர ஆரம்பிக்க, அப்படியே இருக்கையில் சாய்ந்து அமைதியாய் வெளியே வேடிக்கை பார்த்தவனின் கண்களிலிருந்து பொழபொழவென்று கண்ணீர் வந்திருந்தது. அதில் அப்படியே தலையை தாழ்த்தி கதறி அழ ஆரம்பித்தான். முதல் முறையாக ஒரு பெண்ணை பார்த்ததும், இவள் எனக்கானவள் என்று தோன்றியது. ஆனால் அவன் காதல் துளிர்விட்ட நொடியே மொத்தமாய் அழிந்திருந்தது.
அதை நினைத்து பார்த்தபடியே இன்று அந்த ஜன்னலருகே நின்றிருந்தவனின் கண்ணீர் விழியை தாண்டி வெளியில் வர, அந்த விழியில் அப்பட்டமான வலி.
சந்தனத் தென்றலை..
ஜன்னல்கள் தண்டித்தால்..
நியாயமா… நியாயமா…
காதலின்கேள்விக்குகண்களின்பதில்என்ன.. மௌனமா… மௌனமா…
என்ற பாடல் காரில் ஒலித்துக்கொண்டிருக்க, அருகே சாய்ந்து அமர்ந்திருந்த அமீராவிற்கோ திடீரென்று ஒருவனின் நினைவு வந்து மறைந்தது. அதில் அவள் திடுக்கிட்டு திரும்பி அந்த ப்லேயரை பார்க்க, சட்டென்று பாடலை மாற்றியது ருதன் விரல்கள்.
அதில் சட்டென்று அந்த நினைவுகள் அறுப்பட்டு அவன் கரத்தை பார்க்க, அவனோ அப்படியே திருகி வால்யூமை அதிகப்படுத்தினான்.
எம்புட்டுஇருக்குதுஆச..
உன்மேல.. அதகாட்டபோறேன்..
என்ற பாடல் வரிகள் ஆரம்பிக்க, அதில் பதற்றம் ஏற மெல்ல திரும்பி அவனை பார்த்தாள். அவனோ ஸ்டைலாய் ஜன்னலில் கரத்தை முட்டு கொடுத்து கன்னத்தில் விரல் வைத்தபபடி அவளையேதான் விழுங்கும் பார்வை பார்த்தான். அதில் இமையை விரித்தவளின் தொண்டை எச்சிலை விழுங்க, அப்படியே திரும்பி தன்னை எங்கு தூக்கி செல்கிறான் என்று பதற்றமாய் சாலையை பார்த்தாள்.
அந்த இருட்டில் அவளுக்கு இது என்ன சாலை என்றுக்கூட சரியாக புரியவில்லை. ஆனால் வீட்டை விட்டு வெகு தூரம் வந்துவிட்டோம் என்பது மட்டும் புரிய, மீண்டும் பதற்றமாய் மெல்ல அவன் பக்கம் திரும்பும் நொடி சட்டென்று அவள் இதழ்களை கவ்வியிருந்தான் ருதன்.
– நொடிகள் தொடரும்…