Home FREE NOVELSஅன்புள்ள அரக்கனே CH-38

அன்புள்ள அரக்கனே CH-38

by oviyablessy
அன்புள்ள அரக்கனே CH-56

மொத்த தேனீ கூட்டமும் அவளை மொய்த்து கொண்டு மோதும் நேரம், பயந்து வேகமாய் அவள் முகத்தை திருப்ப, சட்டென்று த‌ன் கருப்பு கோட்டை விரித்துக்கொண்டு அவளை மூடி தன் மார்புக்குள் கொண்டு வந்தவன், பொத்தென்று அங்கிருந்த குளத்திற்குள் விழுந்திருந்தான் ருதன்.

அந்த சத்தத்தில் சிதறி ஓடிக்கொண்டிருந்த அனைவரும் திடுக்கிட்டு திரும்பி பார்க்க, இப்போது மொத்த‌ தேனீ கூட்டமும் அவர்கள் மீது பாய்ந்த‌து. அதில் அவ‌ர்க‌ள் அல‌றிக்கொண்டு வேக‌மாய் ஓட‌, அவ‌ர்க‌ளை முழுதாய் மொய்த்து சுற்றி வ‌ளைத்திருந்த‌து தேனீக்க‌ள்.

அதில் அவ‌ர்க‌ள் அக‌ல‌ விழி விரித்து அப்ப‌டியே நின்றுவிட‌, அவைக‌ள் கும்ப‌லாய் மொய்த்துக்கொண்டு பாய்ந்து அவ‌ர்க‌ள் உட‌லெங்கும் ச‌ர‌மாறியாய் கொட்டி ப‌த‌ம் பார்க்க‌, “அ…!” என்று அவ‌ர்க‌ள் க‌த்தி க‌த‌றும் ச‌த்த‌ம் அந்த‌ கார்ட‌னெங்கும் எதிரொளித்த‌து.

அப்ப‌டியே ச‌ற்று த‌ள்ளி அந்த‌ குள‌த்தின் ம‌று பக்கம்  தண்ணீரை பிளந்துக்கொண்டு வெளியில் வந்தான் ருதன். கூலாய் தன் சிகையை உலுக்கிய‌ப‌டி எழுந்த‌வ‌னின் உட‌லெங்கும் நீர் சொட்ட‌ சொட்ட‌ அப்ப‌டியே குனிந்து த‌ன் க‌ர‌ங்க‌ளை மெதுவாய் தூக்கினான். அந்த‌ க‌ர‌ங்க‌ளில் இருந்த‌வ‌ளோ அந்த‌  தண்ணீருக்குள்ளிருந்து மெதுவாய் வெளியில் வ‌ர‌, சரியாக மேலிருந்த‌ மரத்திலிருந்து சிவந்த பூக்கள் அவர்கள் மீது பொழிந்த‌து.

அந்த‌ சிவ‌ந்த‌ பூக்க‌ள் ப‌ட‌ர்ந்த‌  த‌ண்ணீர் திரையாய் மெல்ல‌ வில‌க வெளியில் வ‌ந்த‌து  பெண்ணவளின் பூமுகம். அது அழ‌காய் இவ‌ன் விழி திரையில் ப‌திய‌, இர‌ச‌னையாய் விரிந்த‌ அவ‌ன் இமைக‌ளில் நீர் வ‌ழிந்த‌து. அது ம‌ய‌ங்கி கிட‌ந்த‌ அவ‌ள் முக‌த்தில் சொட்ட‌, அழ‌காய் அவ‌ளை தூக்கிக்கொண்டு தண்ணீரைவிட்டு வெளியில் வந்தான்.

அப்படியே அவளை அந்த பூ படர்ந்த தரையில் மெல்ல‌ படுக்க வைக்க, மீண்டும் அவர்கள் மீது பொழிந்த‌து பூ மழை. அதில் வேகமாய் அவள் மீது படர்ந்து அவ‌ளை மூடிய‌வ‌ன், இம்முறை இந்த அழகை எதுவுமே மூட‌க்கூடாது என்ப‌துப்போல்  அத்தனை அருகில் அந்த‌ அழ‌கை  இரசித்தான்.

அவ‌னின் ஈர‌ விழிக‌ளில் என்றுமில்லா இர‌ச‌னை நிர‌ம்பி கிட‌க்க‌, அவ‌ள் முக‌மெங்கும் ஆராய்ச்சியாய் ப‌ட‌ர்ந்த‌து அவ‌ன் பார்வை. இதுவ‌ரை தாவ‌ர‌ங்க‌ளை ம‌ட்டுமே ஆராய்ந்து, வெறும் பூக்க‌ளை ம‌ட்டுமே இர‌சித்து ப‌ழ‌க்க‌ப்ப‌ட்ட‌  அவ‌ன் விழிக‌ள் இன்று முத‌ல் முறையாய் ஒரு பெண் பூவின் அழ‌கில் மொத்த‌மாய் மூழ்கியிருக்க‌, அவ‌ன் முக‌த்திலிருந்த‌ நீர் துளிக‌ள் வ‌ழிந்து அவ‌ள் முக‌த்தில் விழுந்த‌து. அதை அப்ப‌டியே ஒரு பூவித‌ழால் அழ‌காய் துடைத்த‌வ‌ன், அவ‌ள் முக‌மெங்கும் அந்த‌ பூவித‌ழை த‌ழுவ‌, அவ‌ன் விழிக‌ளும் இர‌ச‌னையாய் அத‌னுட‌ன் ப‌ய‌ணிக்க‌, அவ‌ள் செவ்வித‌ழில் வ‌ந்து நின்ற‌து அந்த‌ பூவித‌ழ். இந்த‌ ந‌னைந்த‌ பூவித‌ழைவிட‌ அவ‌ளின் ஈர‌ செவ்வித‌ழ் அழ‌காய் தெரிய‌, மெதுவாய் அவ‌ன் விர‌ல்க‌ள் அதை விட்ட‌து. அது அப்ப‌டியே ஈர‌த்தில் வ‌ழுக்கி அவ‌ள் இத‌ழ‌ருகே விழ, அவ‌ளித‌ழில் வ‌ழிந்து வ‌ந்த‌ நீர் துளி அதை முழுதாய் வில‌க்கி சென்ற‌து. அதில் அவ‌ன் பார்வை இர‌ச‌னையாய் அவ‌ளின் செவ்வித‌ழ் குழியில் குவிய‌, அங்கே வ‌ழிந்து சென்ற‌ நீர் துளிக‌ளை குடிக்க‌ இவ‌ன் இத‌ழ்க‌ள் துடித்த‌து.

அதில் மெதுவாய் அவ‌ன் முள்ளித‌ழ் அந்த‌ செவ்வித‌ழை நெருங்க, அவ‌ன் சிகையிலிருந்த‌ பூவித‌ழ் ஒன்று ச‌ரிந்து இடையில் வ‌ந்து விழ‌வும், அதன் மேல் மென்மையாய் ப‌திந்த‌து அவ‌ன் இத‌ழ்க‌ள்.

அதில் அவ‌ன் இத‌ழ் மெல்லிய‌தாய் வ‌ளைய‌, மெதுவாய் வில‌கி அவ‌ள் மூக்குர‌ மெல்ல‌ நிமிர்ந்தவ‌ன், அவ‌ள் முக‌மெங்கும் எஞ்சியிருந்த‌ நீர் துளிக‌ளை ஒற்றை விர‌லால் இர‌ச‌னையாய் துடைத்து கீழே கொண்டு வ‌ந்து, அப்ப‌டியே அங்கிருந்த‌ ஈர‌ முடியையும் சுருட்டி அவ‌ள் காதோர‌ம் சொருகியபடி, “இன்னொரு தெட‌வ‌ என் க‌ண்ல‌ ப‌ட்டுராத‌..” என்ற‌வ‌னின் பார்வை அவ‌ள் முக‌மெங்கும் இர‌ச‌னையாய் ப‌ட‌ர, “அப்ற‌ம் க‌ண்டிப்பா தூக்கிட்டு போயிருவேன்.” என்றான் அத்த‌னை மென்மையாக‌.

அந்த‌ வார்த்தைக‌ள் ம‌ய‌ங்கி கிட‌ந்த‌ அவ‌ள் செவியின் ஆழ‌த்தில் விழுந்திருக்க‌,  இன்றும் உற‌ங்கிக்கொண்டிருந்த‌  அவ‌ள் செவியில் தெளிவாய் விழுந்த‌து.

அந்த‌ செவியோர‌ம் கூந்த‌லை சொருகிவிட்ட‌வ‌ன், “அப்ற‌ம் ஏன்டி திரும்ப‌ என் க‌ண்ல‌ ப‌ட்ட‌?” என்று கேட்க‌, அன்றிர‌வு மீண்டும் அவ‌ள் தன் நெஞ்சில் விழுந்தது க‌ண்முன் வ‌ந்த‌து.

அந்த‌ நொடி அவளை தாங்கி பிடித்தவனின் விழிகள் வியப்பில் விரிய‌, அவன் இத‌ய‌ம் அத்த‌னை ப‌ல‌மாய் துடித்த‌து.

அன்றும் இதேபோல் த‌ண்ணீரின் ந‌டுவே த‌ன் நெஞ்சில் ம‌ய‌ங்கி கிட‌ந்த‌வ‌ள், இத்த‌னை நாட்க‌ள் க‌ழித்து மீண்டும் த‌ன் நெஞ்சில் அதேப்போல் கிட‌க்க‌வும் ஒரு நொடி அவ‌னுக்கு ஒன்றுமே புரிய‌வில்லை. ச‌ற்று முன் இதே காரில் இதே இட‌த்தில்தான் அம‌ர்ந்து வ‌ந்திருந்தான். அப்போதெல்லாம் எங்கு ம‌றைந்திருந்தால், எவ்வளவு நேரமாக இருக்கிறாள், ஒருவேளை த‌ன்னை ஃபாலோ செய்கிறாளா, அப்ப‌டியென்றால் யார் இவ‌ள் என்று புருவ‌த்தை சுழித்த‌வ‌ன், “ஹேய் ஹூ ஆர் யூ? ஹ‌லோ!”  என்று அவ‌ள் க‌ன்ன‌த்தை த‌ட்ட‌, அவ‌ளும் மெதுவாய் இமைக‌ளை பிரிக்க‌ முய‌ன்று மீண்டும் ம‌ய‌க்க‌த்திற்கு சென்றிருந்தாள்.

“என்ன‌ ஆச்சு பாஸ்?” என்று யோகி அருகில் வ‌ர‌, “யார் இவ‌? என் காருக்குள்ள‌ என்ன‌ ப‌ண்றா?” என்று அவ‌னை பார்த்தான் ருத‌ன். அப்போதே அவ‌ள் முக‌த்தை க‌வ‌னித்த‌ யோகியும் அவ‌ளை ப‌ற்றி விள‌க்கியிருக்க‌, அதில் குழ‌ப்ப‌மாய் அவ‌ள் முக‌த்தை பார்த்த‌ ருத‌னும், அதற்குமேல் பெரிதாய் எதையும் யோசிக்காம‌ல் அவ‌ளை த‌ன் காரின் இருக்கையில் சாய்த்தான். இதே இட‌த்தில் வேறு ஒரு பெண் இருந்திருந்தால் தூக்கி வெளியில் போட்டுவிட்டு காரை எடுத்து சென்றிருப்பான். இவ‌ள் த‌ன் ம‌ன‌ம் க‌வ‌ர்ந்த‌வ‌ள் என்ப‌தாளோ என்ன‌வோ பூவாய் அவ‌ளை ப‌டுக்க‌ வைத்து,  இவ‌னும் முன் இருக்கையில் சென்று அம‌ர்ந்திருந்தான். ஏனோ அவ‌ன் இத‌ய‌ம் சீராக‌ அந்த‌ இடைவெளி அவ‌னுக்கு தேவைப்ப‌ட்ட‌து.

அத‌ன் பிற‌கு அவ‌ள் ப‌க்க‌ம் திரும்பாம‌லே முன் சீட்டில் சாய்ந்த‌ம‌ர்ந்த‌வ‌ன், த‌ன் முன்னிருந்த‌ க‌ண்ணாடியை திருப்பி த‌ன் சிகையை ச‌ரி செய்துக்கொண்டிருக்க‌, அத‌னுள்ளும் அவ‌ள் பிம்ப‌மே தெரிந்த‌து. அதில் மீண்டும் அவ‌ன் இத‌ய‌ துடிப்பு மெதுவாய் அதிக‌ரிக்க‌, அந்த இத‌ய‌த்தில் அவ‌ள் சாய்ந்த‌ இத‌ம் இன்னுமே மிச்ச‌மிருந்த‌து. அதில் அவ‌ன் மெதுவாய் குனிந்து பார்க்க‌, அவ‌ன் ச‌ட்டையில் அன்று முத‌ல் முறையாய் த‌ன் மார்புக்குள் புகுந்த‌ பெண்ண‌வ‌ளின் அதே வாச‌ம் மீண்டும் நிறைந்திருந்த‌து.

“அப்பையுமே உன‌க்கு ஒரு சேன்ஸ் குடுத்தேன். என்ன‌விட்டு உன்ன‌ தூர‌மா அனுப்பி வெச்சேன்.” என்ற‌ப‌டியே அவ‌ன் விர‌ல் அவ‌ள் முக‌த்தை அள‌ந்துக்கொண்டிருக்க‌, “ப‌ட் அடுத்த‌ நாளே நீ திரும்ப‌வும் என் க‌ண்ல‌ ப‌ட்ட‌.” என்று கூற‌, அவ‌ன் விழிக‌ளில் விம‌லா காண்பித்த‌  புகைப்ப‌ட‌த்தில் அமைதியாய் நின்றிருந்த‌ அவ‌ளின் உருவ‌ம் இன்னுமே  நீங்காம‌ல் ப‌திந்திருந்த‌து.

“சோ நோ மோர் சேன்ச‌ஸ் அகைன். லைஃப் லாங் யூ ஆர் இன் மை டொமைன்.” என்ற‌ப‌டி அவள் க‌ழுத்தில் முக‌த்தை புதைத்தான்.

அதில் ச‌ட்டென்று விழி திற‌ந்த‌வ‌ளுக்கோ, அந்த‌ வார்த்தை மொத்த‌ உட‌லையும் அதிர‌ வைத்திருக்க‌, அந்த‌ உறைந்த‌ உட‌லை மேலும் இழுத்து த‌ன‌க்குள் புதைத்து க‌ட்டிக்கொண்ட‌வன், அவ‌ள் க‌ழுத்தில் த‌ன் மீசையை புதைத்து முத்த‌மிட்டு, “யூ ஆர் த‌ குயின் ஆஃப் மை டொமைன்.” என்ற‌ப‌டியே உற‌க்க‌த்திற்கு சென்றிருந்தான்.

அவ‌ன் அசைவு நின்ற‌ நொடிதான், அவ‌ள் மெல்லிய‌தாய் அசைந்து விழிக‌ளை நக‌ர்த்தி அவ‌னை பார்க்க‌, அவ‌னோ அவ‌ள் வாச‌னையிலேயே உற‌ங்கியிருந்தான்.

அதில்தான் மெல்லிய‌தாய் மூச்சுவிட்டுக்கொண்ட‌வ‌ளின் இத‌ய‌ம் மெல்ல சீராக‌ ஆர‌ம்பிக்க‌, மெதுவாய் உட‌லை அசைக்க‌ முய‌ன்று முடியாம‌ல் அப்ப‌டியே நிறுத்தினாள். அவ‌ளின் மொத்த‌ உட‌லும் அவ‌னுள் சிக்கியிருக்க‌, வேறு வ‌ழியின்றி அப்ப‌டியே விழி மூடி உற‌க்க‌த்திற்கு சென்றிருந்தாள்.

அடுத்த‌ நாள் காலை வ‌ரையிலும் அவ‌ள் ஆழ்ந்த‌ உற‌க்க‌த்தில் இருக்க‌, “அம்மாடி அமீரா! அமீரா!” என்ற மித‌மான‌ குர‌லில் மெல்லிய‌தாய் அசைந்த‌து அவ‌ள் விழிக‌ள்.

“விடிஞ்சிருச்சும்மா” என்ற‌ மென்மையான‌ குர‌லில் விழியை சுருக்கி இமையை பிரித்த‌வ‌ள், அடுத்த‌ நொடி திடுக்கிட்டு எழுந்து அம‌ர்ந்தாள்.

அவ‌ள் முன் புன்ன‌கையுட‌ன் காஃபியை நீட்டினார் விம‌லா. அவ‌ளோ புரியாது அவ‌ச‌ர‌மாய் சுற்றி பார்க்க‌, வேறு இட‌மாக‌ இருந்த‌து.

“ந‌ம்ப‌ வீட்டுல‌தாம்மா இருக்க‌.” என்றார் விம‌லா.

அதில் புரியாது அவ‌ர் ப‌க்க‌ம் திரும்பிய‌வ‌ள், “ப‌ட் நா எப்..” என்று கேட்க‌ வ‌ர‌, “எல்லா அவ‌னால‌தாம்மா. என் ம‌ரும‌க‌ளுக்கு ஆர்த்திக்கூட‌ எடுக்க விடாம‌ விடிய‌ காலையில‌யே  உன்ன‌ இங்க‌ கூட்டிட்டு வ‌ந்திருக்கான்.” என்றார் விம‌லா.

அதில் அவ‌ளோ புரியாது குழ‌ம்பி யோசிக்க‌, “ச‌ரி மொத‌ல்ல‌ காஃபிய‌ குடிமா.” என்று அவ‌ர் நீட்ட‌, அப்போதே அந்த‌ காஃபியை பார்த்தாள் அமீரா.

அவ‌ரும் புன்ன‌கையுட‌ன் அவ‌ளிட‌ம் நீட்ட‌, அவ‌ளோ வாங்காது த‌ய‌க்க‌மாய் நிமிர்ந்து, “இல்ல‌ அது..” என்று த‌டுமாற, “என்ன‌ ஆச்சு?” என்று அவ‌ர் புரியாது கேட்க‌, “அது நா.. காஃபியெல்லாம் குடிக்க‌ மாட்டேன்.” என்றாள் த‌ய‌க்க‌மாக‌.

“ஓ ச‌ரிம்மா போய் டீ போட்டு கொண்டு வ‌ர‌வா?” என்ற‌ப‌டி அவ‌ர் எழ‌ போக‌, “ஆங் இல்ல‌..” என்று இவ‌ள் வேக‌மாய் கூற‌, அவ‌ரும் புரியாது அவ‌ளை பார்த்தார்.

அவ‌ளோ த‌ய‌க்க‌மாய் பார்வையை தாழ்த்தி, “ப்ளீஸ் த‌ப்பா எடுத்துகாதீங்க‌. என‌க்கு டீ காஃபி குடிக்குற‌ ப‌ழ‌க்க‌ம் இல்ல‌.” என்று கூற‌, அதில் புரியாது புருவ‌த்தை குறுக்கிய‌வ‌ர், “காலையில‌ குடிக்க‌மாட்டியா என்ன‌?” என்று கேட்க‌, “இல்ல‌ எப்ப‌வுமே.” என்றாள் த‌ய‌க்க‌மாக‌.  ஏனென்றால் அவ‌ளின் த‌ந்தைக்கு அந்த‌ ப‌ழ‌க்க‌ம் இல்லை. அதனாலேயே அந்த‌ வீட்டில் அதெல்லாம் செய்வதும் இல்லை, இவ‌ளுக்கு கிடைத்த‌தும் இல்லை. அப்ப‌டியே அவ‌ளும் ப‌ழ‌கியிருந்தாள்.

“ஓ அப்ப‌டியா செரி. வேற‌ எதாவ‌து வேணுமா?” என்று அவ‌ர் கேட்க‌, அவ‌ளும் வேண்டாம் என்று மெல்ல‌ த‌லைய‌சைத்தாள்.

அதில் புன்ன‌கைத்த‌ப‌டி எழுந்த‌வ‌ர், “ச‌ரி உன‌க்கு தேவையான‌ ட்ரெஸெல்லா அந்த‌ க‌ப்போர்ட்டுல‌ இருக்கு. நீ போய் குளிச்சுட்டு வாமா.” என்றார்.

அதில் அவ‌ளும் ச‌ரியென்று த‌லைய‌சைக்க‌, அவ‌ரும் புன்ன‌கைத்த‌ப‌டி எழுந்து அங்கிருந்து ந‌க‌ர்ந்தார். இவ‌ளும் மெதுவாய் க‌ட்டிலைவிட்டு இற‌ங்கி சென்று, அந்த‌ க‌ப்போர்டை திற‌க்க‌, உள்ளே மொத்த‌மும் புட‌வைக‌ளாக‌ இருந்த‌து.

அதில் ஒரு நொடி திகைத்து பிற‌கு அப்ப‌டியே வாடிய‌வ‌ள், இனி இவ‌ர்க‌ளுக்கு பிடித்த‌து போல‌தானே இருக்க‌ வேண்டும் என்று த‌ன‌க்குள் எண்ணியபடி, அதில் ஒரு புட‌வையை எடுத்துக்கொண்டு குளிய‌ல‌றைக்குள் புகுந்தாள்.

அடுத்த‌ சில‌ நிமிட‌ங்க‌ளில் குளித்து ரெடியாகி த‌லையை துவ‌ட்டிய‌ப‌டியே அவ‌ள் வெளியில் வ‌ர‌, காஃபியுட‌ன் மீண்டும் உள்ளே வ‌ந்தார் விம‌லா.

அதில் அவ‌ள் துவ‌ட்டுவ‌தை நிறுத்தி அவ‌ரை பார்க்க‌, அவ‌ரோ புன்ன‌கையுட‌ன் அவ‌ள் அருகில் வ‌ந்து, “இது ப்ளேக் காஃபி அவ‌னுக்கு.” என்றார்.

அதில் ச‌ட்டென்று அவள் கையிலிருந்த டவள் கீழே விழுந்திருக்க, அவ‌ன் இங்கா இருக்கிறான் என்று அதிர்ந்து சுற்றி தேடினாள். “அவ‌ன் மேல‌ ஜிம்ல‌ இருக்கான்.” என்றார் விமலா.

அதில் அவ‌ள் திடுக்கிட்டு அவ‌ரை பார்க்க‌, அவ‌ள் க‌ர‌த்தை பிடித்து அந்த‌ க‌ருப்பு க‌ப்பை கையில் திணித்து, “போய் குடுத்துட்டு வா” என்றார் விம‌லா.

அதில் ச‌ட்டென்று இவ‌ளின் மொத்த‌ இத‌ய‌மும் அதிர்வை உண‌ர‌, “ந‌..நானா?” என்று ப‌த‌ற்ற‌மாய் கேட்டாள்.

“ம்ம். வேற‌ யாரு?” என்று அவ‌ர் கேட்க‌, ப‌ய‌த்தில் அவளின் குளித்த‌ உட‌ல் விய‌ர்க்க‌ துவ‌ங்கிய‌து.

“வா நா காட்டுறேன்.” என்று அவ‌ர் அழைத்து செல்ல‌, அவ‌ளோ விழி விரிய‌ அவ‌ர் இழுத்த இழுப்பில் சென்றாள்.

அப்ப‌டியே அவ‌ளை அழைத்து வ‌ந்து நிறுத்திய‌வ‌ர், “அங்க‌தா.” என்று க‌ர‌த்தை நீட்டி கூற‌, இவ‌ளுக்கோ போக‌மாலே உள்ள‌ங்கால் ந‌டுங்கிய‌து.

“சீக்கிர‌மா போம்மா ஆறுனா அவ‌னுக்கு பிடிக்காது.” என்று கூற,  அவ‌ளோ பதறி அவரை பார்க்க, போ என்று கண் அசைத்தார் அவர்.

அதில் அவளும் த‌ய‌க்க‌மாய் அந்த கப்பை இறுக்கி பிடித்து முன்னால் நகர, அதில் புன்ன‌கைத்த‌ விம‌லாவும் அப்ப‌டியே அங்கிருந்து ந‌க‌ர்ந்தார்.

இங்கே மெதுவாய் உள்ளே நுழைந்த அமீரா, ப‌த‌ற்ற‌மாய் பார்வையை நிமிர்த்த‌, அந்த‌ ஜிம் அறையே காலியாக‌ இருந்த‌து. அதில் அவ‌ள் புரியாது சுற்றி பார்க்க‌, அப்ப‌டி ஒருவ‌ன் இருப்ப‌த‌ற்கான‌ த‌டைய‌மே இல்லாது இருந்த‌து. அதில்தான் ச‌ற்று நிம்ம‌தியாய் மூச்சுவிட்ட‌வ‌ள் வேக‌மாய் திரும்பி செல்ல‌ போக‌, ச‌ட்டென்று அவ‌ள் முன் இருந்த‌து அவ‌னின் அக‌ண்ட‌ மார்பு.

அதில் பட்டும் படாமல் மோதி வில‌கிய‌வ‌ள் அக‌ல‌ விழி விரிக்க‌, வெறும் க‌ருப்பு உள்ப‌னியனில் அட‌ங்காம‌ல் தெரிந்த‌ அந்த‌ வெண்ணிற‌ மார்பில் விய‌ர்வை துளிக‌ள் பூத்து வ‌ழிய‌வும் ப‌ட்டென்று த‌ன் ஒரு க‌ர‌த்தால் க‌ண்க‌ளை மூடி திரும்பிக்கொண்டாள் அமீரா.

      – நொடிக‌ள் தொட‌ரும்…

You may also like

Leave a Comment

About Me

Featured