இங்கே அதிவேகமாய் மருத்துவமனை வாசலில் வந்து நின்றது அந்த கார். அதன் கதவை திறந்துக்கொண்டு வேகமாய் வெளியில் வந்த விக்ரமன், அவசரமாய் படிகள் ஏறி உள்ளே செல்ல போக, “சார் சார்!” என்றபடி அவரின் முன்பு வந்து நின்றார் ஒரு காவலர்.
அதில் அவர் அவசரமாய் திரும்பி பார்க்க, “நீங்க என்ன, இந்த காருல வந்து எறங்குறீங்க?” என்று காவலர் கேட்க, “என்னோட கார் இங்க வந்துச்சா?” என்று பதறி கேட்டார் விக்ரமன்.
“ஆமா சார் அதனாலதா செக் பண்ணாம விட்டோம். அப்போ அதுல வந்..” என்று கூறும் முன் பளாரென்று அவர் கன்னத்திலேயே அறைந்திருந்தார் விக்ரமன்.
அதில் அவர் திடுக்கிட்டு கன்னத்தை பிடிக்க, “இதுதா நீங்க பாதுகாப்பு குடுக்குற லட்சணமா? காருக்குள்ள யார் இருக்கான்னுக்கூட பாக்க மாட்டிங்களா?” என்று கத்தியவர் அவசரமாய் உள்ளே ஓடினார்.
அதில் அங்கிருந்த அத்தனை பேருமே அந்த ஒரு காவலரைதான் பார்க்க, அவருக்கோ தன் காக்கி சட்டைக்கு கூட மரியாதை இல்லையா என்பதுப்போல் அவமானமாய் இருந்தது.
இங்கே வேகமாய் ஐ.சி.யூ யுனிட்டிற்கு வந்தடைந்த விக்ரமன், “என்ன நடந்துச்சு?” என்று பதறி கேட்க, அவரின் ஆட்களோ, “ஐயா நாங்க ரொம்ப நேரமா இங்கதா இருக்கோம். யாருமே இங்க வரல. பட் அம்மாதா என்னமோ சொல்றாங்க..” என்று தயங்க, அவரோ வேகமாய் அவர்களை கடந்து தன் மனைவியிடம் சென்றார்.
அவரோ கதறி அழுதபடி அந்த ஐ.சி.யூ ஓட்டையையே பார்த்திருக்க, அவரின் தோளை அழுத்தி பிடித்து திருப்பி, “என்ன ஆச்சு?” என்று பதறி கேட்டார் விக்ரமன்.
அவரை பார்த்ததும் தவிப்பாய் புருவங்கள் விரித்தவர், “என்னங்க.. ந..நம்ப பையன்.” என்று உள்ளே கரத்தை நீட்ட, அவரும் பதறி உள்ளே பார்த்தார்.
அங்கே மெத்தையிலிருந்த விராஜின் உடல் தூக்கி தூக்கி போட, காரணம் புரியாது பரபரப்பாய் சிகிச்சை செய்துக்கொண்டிருந்தார் மருத்துவர்.
இங்கே மெத்தையில் இவனின் மார்புக்குள் இருந்தவளோ, அவன் இதயத்தில் இதழுரச அவனின் ஆர் வடிவ டாலருக்கு மென்மையாய் முத்தமிட்டாள். அது அவனின் பெயருக்கே கொடுத்த முத்தமோ என்னவோ. அவள் இதழ்கள் இரசனையாய் வளைய, அப்படியே அவன் மார்புக்குள் புதைந்துக்கொண்டாள்.
அவன் வாசனையில் அப்படியே மூழ்கி விழி மூடியவளின் நாசியில் வித்தியாசமாய் வேறொரு வாசனையும் சேர்ந்து ஏற, புருவத்தை குறுக்கி மெதுவாய் நிமிர்ந்து அவனை பார்த்தாள்.
விழி மூடியிருந்த அவன் முகம் முழுக்க இரத்த கிளறியாயிருக்க, விழிகள் விரித்து, “அ..!” என்று அலறியடைத்து அவனை தள்ளிவிட்டிருந்தாள் அவள்.
அதில் அவன் பொத்தென்று கட்டிலின் கீழ் சென்று விழ, இவளோ வேகமாய் கட்டிலைவிட்டு இறங்கி தன் கரங்களை வாயில் வைத்து அதிர்வாய் நடுங்க, அவனோ அதே முகத்தை மெதுவாய் திருப்பி அவளை பார்த்தான்.
அதில் சட்டென்று பயந்து பின்னால் நகர்ந்தவளுக்கோ, அவன் முகமே அவன் என்ன செய்துவிட்டு வந்திருக்கிறான் என்பதை தெளிவாய் காட்ட, அவளின் பயந்த விழிகளில் முழு அரக்கனாகவே இப்போது காட்சியளித்தான் அவன்.
அதில் அவள் இதயம் அத்தனை பலமாய் துடித்து பின்னால் நகர, அவனுமே எழுந்து அவளிடம் வர, “வே..வேண்டா ப்ளீஸ்” என்று பின்னாலே சென்றவளின் உடலெல்லாம் வியர்த்து கண்கள் கலங்க, திடீரென்ற இடி சத்தத்தில் திடுக்கிட்டு பயந்து பின்னால் சாய்ந்தவள் எதிலோ இடித்து நின்றிருக்க, அவள் மார்பில் மொத்தமாய் புதைந்தது அவன் மார்பு.
அதில் பயந்து இறுக்கி விழி மூடியவளின் உடல் நடுங்க, அவள் கன்னத்தை அழுத்தி உரசியது அவனின் தாடி. அதில் இவள் நடுக்கம் அதிகரிக்க மேலும் இறுக்கி விழி மூடியளின் கண்ணீர் வெளியேற, பட்டென்று காதுக்கு பின்னால் ஒரு சத்தம். அதில் அவள் திடுக்கிட்டு விழி திறக்க, அவளை உரசி எக்கி பின்னிருந்த ஜன்னலைதான் மூடியிருந்தான் அவன்.
அதில் அவள் நடுக்கமாய் பின்னால் திரும்ப முயல, பட்டென்று அவளை தூக்கியிருந்தான். அதில் அவள் திடுக்கிட்டு நிமிரும் முன்பே அவளை கட்டிலில் கிடத்தியிருந்தவனின் இரத்த முகம் அத்தனை அருகில் இருக்க, பயத்தில் நடுங்கி விழி மூடினாள்.
அப்போது அவள் நாசியை மெதுவாய் அவன் மீசையுரச, பயத்தில் இறுக்கி விழி மூடினாள். அந்த விழியையும் தழுவி சென்ற அவனின் மீசை அப்படியே, அவள் நெற்றியில் புதைத்து அழுத்தி முத்தமிட்டான்.
அதில் அவள் இதயம் மேலும் பலமாய் துடிக்க அவன் காலரை இறுக்கி பிடித்தாள். அப்போது மெதுவாய் விலகி அவள் முகம் பார்த்தவன், “இனிமே சத்தம் வராது. தூங்கு.” என்றபடி விலகியிருந்தாள்.
அதில் பட்டென்று அவள் விழி திறக்க, அங்கே அவன் இல்லை. அதில் வேகமாய் திரும்பி தேட போக, அவள் இடையை இறுக்கி சுற்றியது அவனின் வலிய கரம். அதில் அவள் திடுக்கிட்டு குனியும் முன் இழுத்து தன் பக்கம் திரும்பியவன், அவள் முகமுரசும் நெருக்கத்தில், “குட் நைட்!” என்றபடி விழி மூடினான்.
அதில் மூடிய அவன் விழிகளையே பார்த்திருந்தவளுக்கோ இதயம் இன்னும் பலமாய் துடிக்க, மின்னலுக்கு பயந்து தள்ளிவிட்டதாகவா நினைக்கிறான் என்ற கேள்வியாய் அவன் முகத்தையே பார்த்திருக்க, அப்போதே அவன் முகத்தில் அப்பியிருந்த இரத்தத்தையும் மீறி அவன் முகத்திலிருந்த சோர்வை கவனித்தாள். தன்னை விட அதிக காயம் பட்டவன், இப்போது எங்கோ அலைந்து திரிந்துவிட்டு வேறு வந்திருக்க, அந்த சோர்வு அவன் முகத்தில் பிரதிபளித்தது. அதில் அப்படியே பார்வையை நிமிர்த்த, அவன் தலையிலிருந்த பேண்டேஜ் இப்போது இல்லை.
அதில் பதற்றமாய் அவன் நெற்றியை ஆராய்ந்தவள், அப்படியே அவன் பின் சிகைக்குள் விரல்களை நுழைக்க, அங்கே காயத்தில் மட்டும் பேண்டேஜ் ஒட்டியிருக்க, அப்போதே இவள் மனம் லேசானது. அதில் அப்படியே தன் விரல்களை சிகையிலிருந்து வெளியில் எடுத்தவள், தன் முந்தாணையை எடுத்து மெதுவாய் அவன் முகத்திலிருந்த இரத்தத்தை துடைக்க துவங்கினாள். அவனோ அதைக்கூட உணராது அசதியில் உறங்க, முதல் முறையாய் அவனை கணவனாய் பார்க்க கூறியது இவள் மனம்.
அப்படியே அவன் கன்னத்தையும் துடைத்தவளின் விழிகளில் மென்மை பரவ, “யாரோ ஒருத்தன் இல்ல உன் புருஷன்.” என்ற அவனின் அழுத்தமான வார்த்தைகள் காதில் ஒலிக்க, அவன் செய்த ஒவ்வொன்றும் அவள் கண்முன் வந்து நின்றது.
தனக்கு பிடித்த நிறத்தில் புடவை, பிடித்த உணவு, தாமரை மெத்தை, அவள் டேஸ்ட்டில் மொத்த வீடு என்று தன்னை பற்றி துள்ளியமாக தெரிந்து வைத்திருப்பவன் வேறு யாராக இருக்க முடியும்? இப்போதே அனைத்தும் புரிய, அந்த முந்தாணை அப்படியே நழுவி விழ, அதை பிடித்திருந்த அவள் விரல்களே அவன் கன்னத்தில் படர்ந்தது.
இப்போது அவள் பார்வை அவன் முகமெங்கும் மென்மையாய் தழுவ, அவன் கன்னத்தில் மெதுவாய் பதிந்தது அவள் இதழ்கள். அதில் அப்படியே விழி மூடியவளின் கண்கள் கண்ணீரை வெளியேற்ற, இது அவன் வலியை உணர்ந்ததால் வந்த கண்ணீரோ என்னவோ. மனம் லேசாகும் வரை அப்படியே இருந்தவள், மெதுவாய் தன் இதழை பிரிக்கும் நேரம் சட்டென்று அவ்விதழ்களை கவ்வியிருந்தது அவன் இதழ்கள்.
அதில் அவள் திடுக்கிட்டு விழி விரிக்க, அவனோ முகத்தை சாய்த்து மேழும் ஆழமாய் அவளிதழை சுவைக்க, இவள் விழிகள் இறுக்கி மூடியது. அதில் அவள் கூந்தலுள் விரல்களை நுழைத்து இழுத்து பிடித்தவனின் முத்தம் இதழையும் தாண்டி அவள் நாவையும் இழுத்து வைத்து சுவைக்க, அதில் மெல்ல விழிகள் சொருகி மோகத்திற்குள் நுழைந்தவள், அவன் இதழில் கரைந்து முத்தத்தில் மயங்கி அவன் முதுகு சட்டையை இறுக்கி பிடித்த தருணம் சட்டென்று அவளைவிட்டு விலகினான் அவன்.
அதில் திடுக்கிட்டு விழிகளை திறந்தவள், பதற்றமாய் அவன் விழிகளை பார்க்க, அவனோ புருவத்தை குறுக்கி, “சாப்படாம பால் மட்டுந்தா குடிச்சியா?” என்று கேட்டான்.
அதில் படபடவென்று விழித்தவள் ஒற்றை முத்தத்தில் அது வரை தெரிந்துவிட்டாதா என்றுதான் பதற்றமாய் விழித்தாள். அதில் அவன் முகம் இறுக வேகமாய் எழுந்து, “அவன..” என்று பல்லை கடித்து யோகியை தேடி செல்ல போக, சட்டென்று அவன் கரத்தை பிடித்தாள் அமீரா.
அதில் அவன் அதே கோபமாய் திரும்பி அவளை பார்க்க, அவளோ தயக்கமாய் பார்வையை தாழ்த்தி, “அவரு மேல தப்பில்ல. நாந்தா வேண்டான்னு சொன்னேன்.” என்றாள் தயக்கமாக.
அதில் அவள் கரத்தை உதறிவிட்டு, “வேண்டான்னா விட்டிருவானா?” என்றபடி எழ போக, “ப்ளீஸ்” என்றாள் அமீரா.
அதில் அவன் கோபமாய் திரும்பி அவளை பார்க்க, “எனக்குதா சாப்பட பிடிக்காம..” என்று அவள் தயக்கமாய் கூற, சட்டென்று புருவம் விரித்து அவள் கன்னம் பற்றியவன், “இங்க பாரு.” என்றான் பதறலாக.
அதில் அவளும் மெதுவாய் நிமிர்ந்து அவன் விழி பார்க்க, அவ்விழிகளை பதற்றமாய் ஆராய்ந்தபடியே, “திரும்ப வாமிட் வர்ற மாதிரி இருக்கா?” என்று கேட்டான். அவன் கண்ணில் தெரிந்த பதற்றத்தில் இவள் தலை தானாய் ஆம் என்று ஆட, வேகமாய் தலையை சாய்த்து அவள் இதழில் அழுத்தி முத்தமிட்டவன், “இரு வந்தர்றேன்.” என்றபடி அவசரமாய் நகர்ந்தான்.
அதில் திடுக்கிட்டு, “எங்கப்..” என்று கேட்க வந்த வார்த்தை அப்படியே இதழுள் அடங்க, அவ்விதழை ஏக்கமாய் வருடியது அவளின் விரல்கள். அவன் இதழ் திணித்த சுவை இன்னுமே அவளிதழில் ஒட்டி, எச்சிலில் கலந்திருக்க, இவனிடம் பிடிக்காததே இந்த திடீர் விலகல்தான் என்று இதழை சுழித்தாள்.
இங்கே வேகமாய் மருத்துவருடன் உள்ளே வந்த விக்ரமனோ, “எதுக்கு தனியா கூப்புட்டீங்க? என்ன ஆச்சு என் பையனுக்கு?” என்று பதறி கேட்க,
“மூளைய ட்ரிகர் பண்ற ஒரு ஆபத்தான மருந்து உங்க பையன் ஒடம்புல இஞ்சக்ட் ஆகிருக்கு.” என்று அவர் கூற, சட்டென்று இவர் இதயம் அதிர, “அதுதா அவரு பாடிக்கு ஒத்துக்காம இவ்ளோ ரியேக்ட் ஆகிருக்கு.” என்றார் மருத்துவர்.
“என்ன? என்ன இஞ்சக்ஷன்? என்ன சொல்றீங்க?” என்று அவர் பதறி கேட்க,
“ஆமா அவரோட கழுத்துல செலுத்தப்பட்டிருக்கு. அது செலுத்தப்பட்ட ஃபியூ செக்கண்ட்ஸ்க்கு மட்டும் அவரால கான்சியஸ்க்கு வந்துட்டு போக முடியும். அப்பிடி அவரு முழிக்கும்போதுதா மூளையில மிகப்பெரிய அதிர்ச்சி ஒன்னு ட்ரிகர் ஆகியிருக்கு. லைக் எதையோ பாத்து ஷாக் ஆகிருக்காரு.” என்று அவர் கூற, சட்டென்று அந்த மின்னல் வெளிச்சத்தில் பார்த்த ருதனின் முகம்தான் இவருக்கு கண்முன் வந்தது.
“யாரோ வேணுமின்னே இவருக்கு இஞ்சக்ட் + ஷாக் கொடுத்து வலுக்கட்டாயமா கோமால இருந்து வெளிய கொண்டு வந்திருக்காங்க.” என்று அவர் கூற, சட்டென்று அவரை பார்த்தவர், “என்ன டாக்டர்?” என்று வியப்பாய் கேட்க, “எஸ். நவ் ஹீ இஸ் அவுட் ஆஃப் கோமா.” என்றார் மருத்துவர்.
அதில் பொத்தென்று அந்த இருக்கையில் அமர்ந்துவிட்டவரின் விழிகள் வியப்பில் உறைய, மனம் அத்தனை நிம்மதியை உணர்ந்தாலும், இதற்கு காரணமானவனைதான் நம்ப முடியவில்லை. இவன் ஏன் இவ்வாறு செய்ய வேண்டும் என்ற குழப்பம்தான் அதிகம் சூழ்ந்து பயத்தை கிளப்பியது.
இங்கே அந்த கட்டிலின் சாய்வில் சாய்ந்தபடி அமர்ந்திருந்தவளின் கரங்களோ, தான் அணிந்திருந்த அவன் கருப்பு சட்டையை இறுக்கி அணைத்திருக்க, அதன் ஸ்பரிசத்தில் அப்படியே சாய்ந்து விழி மூடியிருந்தவளின் மனம் லேசாய் உணர்ந்தது.
அப்போது அவள் நெஞ்சில் ஏதோ ஒரு துணி படர, திடுக்கிட்டு குனிந்து பார்த்தாள். அவன்தான் உணவு படாமல் இருக்க க்ளாத் போட்டுவிட்டு அவள் அருகே அமர்ந்தான்.
அதில் அவள் நிமிர்ந்து அவனை பார்க்க, அவனோ சூப்பை நன்றாக கலந்தபடி, “நம்ப வீட்டுக்கு போற வரைக்கும் இந்த துணிதா. சோ சிந்தாம சாப்புடு.” என்றபடி ஒரு ஸ்பூன் எடுத்து நீட்ட, அவளோ அதை வாங்காது குழப்பமாய் சுற்றி பார்த்து, “அப்போ இது..” என்று தயங்க, “யோகியோட வீடு.” என்றான்.
அதில் அவள் திடுக்கிட்டு அவனை பார்க்கும் நேரம், அவள் வாயுக்குள் கரண்டியை திணித்திருந்தான். அதில் அவளும் அவசரமாய் விழுங்கியபடி வாயில் கை வைக்க, “வார்மாதா இருக்கு குடி.” என்று அடுத்த வாயை நீட்டினான்.
அதில் மீண்டும் மெதுவாய் வாய் திறந்த அவளுக்கோ, “சூடா இல்ல குடிம்மா” என்று தன் தாய் ஊட்டிய உணவு கண்முன் வர, அவள் கண்கள் கலங்கியது. அதுப்போல் எத்தனை எத்தனை அன்பை அவர்களிடமிருந்து பெற்றிருந்தாள். அந்த நாட்கள், அந்த நினைவுகள் அதெல்லாமே பொய்யா என்று நினைக்கும்போது உள்மனம் கதறி அழுதது. அதற்குள் அடுத்த வாயை அவன் ஊட்ட, கண்ணீருடனே வாங்கியவளின் இதழோரம் வழிந்து வந்தது ஒரு துளி. அதை அவள் மீதிருந்த க்ளாத்தின் நுனியால் அழகாய் துடைத்துவிட்டவன், உற்று பார்த்து தன் கட்டை விரலாலும் அந்த ஈரத்தையும் சுத்தமாய் துடைத்துவிட்டு அடுத்த வாயை ஊட்ட, அப்போதே அவளின் கண்ணீர் விழிகள் நிமிர்ந்து இவன் முகத்தை தழுவியது.
தன்னை சுற்றியுள்ள அனைத்து பொய்களிலும் இவன் மட்டுமே உண்மையாய் தெரிந்தான். இவன் காட்டும் ஒவ்வொரு துளி அன்பிலும் உண்மை தெரிந்தது. ஆரம்பத்தில் இவனிடமிருந்து ஓடவே முயற்சித்தவள், இன்று இவனிடம் மட்டுமே பாதுகாப்பை உணர்ந்தாள். அதில் அவள் கண்ணீர் விழி தாண்டி அவன் கரத்தில் வந்து விழ, அப்போதே அவளிதழிருந்து நிமிர்ந்து அவள் விழியை பார்த்தான். அது முற்றிலுமாய் கலங்கியிருக்க, சட்டென்று புருவம் விரித்து மறு கரத்தால் அவள் கண்ணீரை துடைத்துவிட்டவன், “காரமா இருக்கா?” என்று கேட்க, அவளும் கண்ணீருடன் ஆம் என்று தலையசைத்தாள்.
அதில் மெல்லியதாய் புன்னகைத்து, “அப்போ உன் ஒடம்பு செரியாயிருச்சுன்னு அர்த்தம்.” என்றபடி அவளிதழில் அழுத்தி ஒரு முத்தம் வைத்து உறிஞ்சினான். அந்த காரத்திற்கு அவனிட்ட மருந்தோ என்னவோ அவள் காயத்திற்கு அது போதவில்லை.
அதற்குள் அவன் விலகி தண்ணீரையும் புகட்ட, சிறு ஏக்கத்துடன் அவன் விழி பார்த்தபடியே மெல்ல குடித்தாள். பிறகு அவள் வாயையும் அந்த க்ளாத்தால் துடைத்துவிட்டவன், அதை எடுத்து மடித்து, தான் எடுத்து வந்த உணவு ட்ரேவில் வைத்தவன், “செரி வச்சுட்டு வந்தர்றேன்.” என்றபடி அந்த காலி பாத்திரங்களை எடுத்துக்கொண்டு எழுந்தான்.
அதில் அவள் வேகமாய் அவன் கரத்தை பிடிக்க, அவனும் நின்று திரும்பி அவளை பார்த்து, “வேற எதாவது வேணுமா டார்லு?” என்று அத்தனை மென்மையாய் கேட்டான்.
அதற்கு அவளோ சிறு தவிப்புடன், “பதில் வேணும்.” என்றாள்.
அதில் அவனும் புரியாது புருவத்தை சுழிக்க, “எங்கிட்ட ஏ பொய் சொன்னீங்க?” என்று கேட்டாள்.
அதில் புரியாது குழம்பி அவளருகே அமர்ந்தவன், “பொய் சொன்னனா?” என்று கேட்க, அதற்கு கண்ணீருடன் ஆம் என்று தலையசைத்தவள், “என் மனசுல இருக்குறதுதா அவங்க பண்ண பெரிய பாவம், அதனாலதா கொன்னேன்னு ஏ உங்கள நீங்களே தப்பா காட்டிகிட்டீங்க? ஏ உண்மைய சொல்லல?” என்று கேட்டாள்.
அதில் சட்டென்று அவனிதழ் கேலியாய் வளைய, “எந்த உண்ம?” என்று கேட்டான்.
“அவங்க என்ன பாசம்ங்குற பேருல ஏமாத்துன உண்ம.” என்று கூறும்போதே அவள் மனம் வேதனையில் குமுற, அவனோ நக்கலாய் ஒரு சிரிப்பை உதிர்த்துவிட்டு, “அந்த யோகி பையன் சொன்னனா?” என்று கேட்க, “ம்ம்” என்று கண்ணீருடன் தலையசைத்தாள்.
அதில் சலிக்காமல் தன் புருவத்தை கட்டை விரலாய் சொரிந்தவன், “பட் நீ இன்னுமே என்ன முழுசா புரிஞ்சுக்கலன்னு நெனைக்குறேன்.” என்று கூற,
அதில் அவள் குழப்பமாய் அவனை பார்க்க, அதில் மெதுவாய் அவள் முகம் நெருங்கி ஆழ்ந்த பார்வையாய் அவள் விழி பார்த்தவன், “உன் உண்மையான அப்பா அம்மாவ கொன்னதும் நாந்தா.” என்றான்.
அதில் சட்டென்று விழி விரித்தவளின் இதயம் துடிப்பை நிறுத்த, வானத்தில் பெரிய இடி ஒன்று இடித்தது, அவள் உயிரிலும்தான்.
– நொடிகள் தொடரும்…