இங்கே மெல்ல கண்விழித்த அமீரா மெத்தையில் தனியாய் கிடக்க, திடுக்கிட்டு விழி திறந்தவள் புரியாது அவனை தேட, அறையே காலியாகதான் இருந்தது. அதில் வேகமாய் எழ முயற்சிக்க, அவள் உடலில் புதிய சேலை கட்டப்பட்டிருந்தது.
அதில் புரியாமல் தன் மார்பிலிருந்த சேலையை இறுக்கி பிடித்து எழுந்து அமர்ந்தவள், எப்போது மயங்கினோம், அவன் எங்கே என்று புரியாது தேட, அப்போதே தெரிந்தது அவன் கால்கள்.
அதில் அவள் திடுக்கிட்டு எட்டி பார்க்க, மெத்தைக்கு கீழே விழுந்து கிடந்தான் அவன். அதில் அவள் அதிர்வாய் கீழே இறங்கி அவனிடம் செல்ல, அந்த தரையெல்லாம் அவனின் இரத்தம்.
அதில் பொத்தென்று தரையில் அமர்ந்துவிட்டவளின் கரம் அந்த இரத்தத்தில் அழுத்தமாய் பதிய, அதை மெல்ல எடுத்து பார்த்தவளின் உள்ளங்கையெல்லாம் இரத்தம். அதில் அவள் கரம் நடுங்க விழிகள் அகல விரிய, அந்த விழி கரு அப்படியே நகர்ந்து அவன் மீது படிய, அவன் பின்தலையிலிருந்து தான் அத்தனை இரத்தமும் வந்துக் கொண்டிருந்தது. அதில் அவள் இதயமே துடிப்பை நிறுத்த, சற்று முன் அதே தலையில் இவள் பலமாய் அடித்தது கண்முன் வர, அப்படியே வாயில் கை வைத்துவிட்டவளின் கண்கள் விரிந்து கலங்கியது. அதில் அப்படியே உறைந்துவிட்டவள், நொடிகள் கடந்த பிறகே தன்னிலையடைந்து வேகமாய் அவனை நெருங்கி அவன் கன்னம் பற்றி, “இ..இங்க பாருங்க. என்ன ஆச்சு?” என்று பதற்றமான பயமாய் அவன் கன்னத்தை உலுக்க, அவனோ அசையவே இல்லை.
அதில் மேலும் பதறியவளின் உடலெல்லாம் நடுங்க, அவன் தலையடியில் கரத்தை வைத்து தொட்டு பார்த்தவள், இரத்தம் வந்துக் கொண்டே இருக்கவும் பதறி அவனை பார்த்து, “இ..இல்ல உ..உங்களுக்கு ஒன்னும் ஆகாது.” என்றபடி வேகமாய் எழுந்து, “நா போய் யாரையாவது கூட்டிட்டு வர்றேன்.” என்றபடி திரும்பி ஓட போக, சட்டென்று அவள் முன் வந்து நின்றது ஒரு உருவம்.
அதில் அவள் திடுக்கிட்டு பின்னால் நகர்ந்து நின்று நிமிர்ந்து பார்க்க, “மேடம் பயப்படாதீங்க. ஐயம் யோகி. சார்தா வர சொன்னாரு.” என்றான் அவன்.
அதில் அவளோ புரியா பதறலாய் திரும்பி ருதனை பார்க்க, அப்போதே அவளை கடந்து உள்ளே கவனித்தவன், “மை காட்!” என்று நெற்றியில் கை வைத்து, “டாக்டர் வாங்க” என்று அவசரமாய் அழைக்க, அப்போதே மருத்துவரும் உள்ளே வர, இருவரும் அவளை கடந்து உள்ளே சென்றனர்.
அதில் இவளோ புரியா பதறலாய் திரும்பி அவர்களையே பார்க்க, அந்த இருவருமே அவசரமாய் ருதனை தூக்கி மெத்தையில் படுக்க வைத்தனர். அதில் இவளும் வேகமாய் அவனருகில் செல்ல, தரையில் இருந்த இரத்ததில் கால் வைத்து வழுக்கி பொத்தென்று அதன் மீதே விழுந்தாள். அதில் அவளின் கன்னம் அந்த இரத்ததில் பதிய, அப்படியே பிரிந்த அவள் இமைகளின் முன் அத்தனை நெருக்கத்தில் அவனின் இரத்தம். அதில் அவள் அதிர்வாய் இமைகளை விரிக்கும் முன், அதன் வாசனை அவள் நாசியில் வெகுவாய் ஏற, அதில் தலை சுற்றி அப்படியே மூடியது அவள் விழிகள்.
அப்படியே அவள் ஆழ்ந்த மயக்கத்திற்கு சென்றுவிட, அவளின் அமைதியான செவிகளில், “மேடம்! மேடம்!” என்ற யோகியின் குரல் ஒலித்தது. அதில் அவள் புருவம் குறுகி மெல்ல இமைகளை பிரிக்க, “ஆர் யூ ஓகே?” என்று கேட்டான் அவன்.
அதில் அவள் வேகமாய் தன் கன்னத்தில் கை வைத்து தொட்டு பார்க்க, அங்கு படிந்திருந்த இரத்தம் இப்போது இல்லை. அதில் புரியா பதற்றமாய் அவள் பார்வையை சுழற்ற, அங்கே யோகி மட்டும்தான் இருந்தான். “இந்தாங்க தண்ணி குடிங்க.” என்று அவன் தண்ணீரை நீட்ட, அதை விலக்கியபடி எழுந்து அமர முயன்றவள், சோஃபாவில் கிடந்தாள்.
அதில் திடுக்கிட்டு புரியாது ஒரு நொடி சுற்றி பார்த்தவள் அவசரமாய் ருதனை தேட, அவள் முன் மண்டியிட்டு அமர்ந்திருந்த யோகி அப்படியே நகர்ந்து தன் பின்னிருந்த ருதனை காண்பித்தான்.
அங்கே மெத்தையில் விழி மூடி படுத்திருந்தவனின் தலையில் கட்டு, அவன் வயிற்றில் வைத்திருந்த கரத்திலும் கட்டு, உள்ளங்காலில் கட்டு என்று அசைவில்லாது அவன் கிடக்க, அதில் பதறி கலங்கி வேகமாய் எழுந்து அவனிடம் ஓடினாள் அமீரா.
அதில் யோகியும் மெல்ல எழுந்து அவளையே பார்க்க, அங்கே வேகமாய் சென்று ருதனின் அருகில் அமர்ந்தவள், தவிப்பாய் அவன் தலை கட்டை தொட போய், தயக்கமாய் நிறுத்தி அவனுக்கு வலிக்குமே என்று நெற்றி குறுகி தவிப்பாய் கலங்கியவள், அப்படியே அந்த விரல்களை அவன் நெற்றி பேண்டேஜில் படரவிட்டு கண்களை மூடி கதறி அழுதாள்.
அப்போது மெதுவாய் அவள் பின்னால் வந்து நின்றவன், “அவரு உங்களுக்காக பல தெடவ காயப்பட்டுட்டாரு மேடம். நீங்களுமே அவர காயப்படுத்தாதீங்க.” என்றான் யோகி.
அதில் வேகமாய் எழுந்து அவன் சட்டையை பிடித்தவள், “யாரு நீங்கல்லா? இவருக்கும் எனக்கும் என்ன சம்மந்தம்?” என்று அழுதபடி கேட்க, அவனோ வாடலாய் திரும்பி ருதனை பார்த்துவிட்டு மெல்ல திரும்பி இவளை பார்த்து, “உங்களுக்கு தெரியாத உண்மைகள் நெறைய இருக்கு மேடம்.” என்றான் யோகி.
“ப்ளீஸ் சொல்லுங்க.” என்று நொந்து அழுதவள், “யாரு இவரு? எனக்கும் இவருக்கும் என்ன சம்மந்தம்?” என்று கேட்க, தன் சட்டையிலிருந்த அவள் கரத்தை மெல்ல விலக்கிவிட்டவன், “அது உங்களுக்கே தெரியதா போகுது மேடம். ப்ளீஸ் அவர நல்லா பாத்துக்கோங்க.” என்று கூறிவிட்டு நகர்ந்தான்.
அதில் அவள் வேகமாய் அவன் பின் செல்ல போக, “அம்மு!” என்றான் ருதன்.
அதில் அப்படியே நின்றுவிட்டவளின் விழிகள் விரிய, உயிர் வரை ஒலித்தது அந்த அழைப்பு. அதில் அவள் மெல்ல திரும்ப, அவனோ அரை மயக்கத்தில் இதழ்களை பிரித்து “அம்மு!” என்றான் மீண்டும்.
அதில் மெல்ல அவன் அருகில் வந்தமர்ந்தவள், அவன் வயிற்றியிலிருந்த கரத்தை மெதுவாய் பிடித்து, நிமிர்ந்து பாதி திறந்திருந்த அவனின் விழிகளையே பார்க்க, அவள் விழிகளில் அப்படியொரு எதிர்பார்ப்பு கண்ணீராய் தேங்கியது. அதை அவன் விழிகள் கண்டதோ இல்லையோ, அப்படியே முழுதாய் மூடிவிட, அவன் இதழ்களும் அசைவை நிறுத்தியது. அந்த இதழ்களின் மீது இவளின் கண்ணீர் துளி பொத்தென்று விழ, அடுத்த துளி அவள் விழியிலேயே உறைந்தது.
அவள் இதயமும் அத்தனை பலமாய் துடிக்க, அவள் உறைந்த விழிகளோ அசைவை நிறுத்திய அவனின் இதழில் குவிந்திருக்க, அவள் ஆசைப்பட்ட வார்த்தை மீண்டும் வாராமல் போன வலி அவளின் அடி மனதிலிருந்து எழுந்து, அவளின் உறைந்த கண்ணீர் அப்படியே பெருகி அவன் மார்பில் சொட்டு சொட்டாய் விழுந்தது.
அதில் மெல்ல பார்வையை இறக்கி அவனின் மார்பில் குவித்தவளின் விழியில் அவன் நெஞ்சிலிருந்த காயம் விழ, அதில் தவிப்பாய் நெற்றி குறுக்கியவளின் விரல்கள் மெல்ல அதை வருடியது. இதே நெஞ்சிலிருந்து குருதி வழிய வழிய அவன் தன்னை நெருங்கியது, அந்த நெஞ்சை கத்தி துளைத்தது கண்முன் வந்து கண்ணீர் பெருக, “என் ஹார்ட் அவ்ளோ வீக் இல்ல டார்லு.” என்ற அவனின் வார்த்தைகளும் கண்முன் வந்து, அப்படியே அவள் விரல்கள் அவன் இதயத்திற்கு நகர்ந்தது. அங்கே அம்மு என்று பச்சை குத்தியிருந்த அந்த பெயரையும் அவள் விரல்கள் மெல்ல வருட, அவளுள் சிலிர்வாய் ஒரு குளிர் மெல்ல பரவியது.
அவளுக்கு விவரம் தெரிந்த வரையிலிருந்தே வீட்டிலும் சரி, வெளியிலும் சரி மீரா அமீரா என்றுதான் அழைத்ததுண்டு. அம்மு என்று யாரும் அழைத்ததே இல்லை. ஆனாலும் ஏதோ ஒரு குரல் தன்னை அம்மு என்று அழைப்பதுப்போலவே அவள் அடி மனதில் ஒரு உணர்வு. அதில் அவள் விரல்கள் அந்த பெயரை அழுத்தி வருட, அதை மெதுவாய் நனைத்தது அவளின் கண்ணீர் துளிகள். அங்கே தன் இதழையும் மென்மையாய் பதித்து விழி மூடியவளின் மனதில் ஆயிரம் உணர்வுகள் கிளம்பி அடங்க, மெதுவாய் இதழ்களை பிரித்து நிமிர்ந்து அவனை பார்த்தாள்.
வந்தததிலிருந்து தன்னிடம் அதிகாரமாய் அத்து மீறியவன், தன் கழுத்தில் கத்தி வைத்தவன், தன்னை வன்மையாய் முத்தமிட்டவன், கழுத்தை பிடித்தவன், கோபப்பட்டவன், தாபப்பட்டவன் இப்போது அசைவின்றி கிடப்பது அவளுக்கு அத்தனை வலிக்க, அதற்கு தான்தான் காரணம் என்ற குற்ற உணர்வும் சேர்ந்து கண்ணீருடன் மெதுவாய் அவன் கன்னத்திற்கு கீழ் கரத்தை படரவிட்டு பற்றியவள், மெதுவாய் அவன் முகம் நெருங்கி, “இனி உங்கள கஷ்டப்படுத்த மாட்டேன்.” என்று கமறிய குரலில் கூறியவள், “என் கேள்விக்கெல்லா பதில் கெடைக்குற வரைக்கும் உங்களவிட்டு போகவும் மாட்டேன்.” என்றபடி அப்படியே அவன் கழுத்தில் புதைந்து கண்ணீருடன் அவனை கட்டிக்கொண்டாள்.
அடுத்த நாள் காலை, மெல்ல உறக்கம் கலைந்து இமைகளை பிரித்தவள், புரியாது மெத்தையை தடவ, அங்கே அவன் இல்லை. அதில் புரியாது முழுதாய் இமைகளை பிரிக்க முயன்றவளின் விழிகள் மீண்டும் இருட்டிக்கொண்டே வர, சட்டென்று தலையை உலுக்கி விழி திறந்தவள், அப்படியே மெத்தையில் கரத்தை பதித்து மெதுவாய் எழுந்து அமர்ந்தாள்.
அப்போது மெத்தையில் அவள் மட்டுமே கிடக்க, புரியாமல் சுற்றியும் பார்த்தவளின் உடலெல்லாம் அத்தனை சோர்வாய் இருக்க, அவளின் கரம் அன்னிச்சையாய் அவளின் வயிற்றை இறுக்கி பிடித்தது.
மறு கரம் அவளின் தலையை பிடிக்க, தலை சுற்றலாய் அப்படியே பார்வை மங்கி, திடீரென்று வயிற்றை பிரட்டிக்கொண்டு வந்து வாந்தி வந்துவிட, அதை உடனே ஏந்திக்கொண்டது அவன் கரங்கள்.
– நொடிகள் தொடரும்…