CHAPTER-6

Oviya Blessy

Member
Jan 4, 2025
46
0
6
இங்கு ம‌ருத்துவ‌மனையில் விபத்து என்று சேர்க்கப்பட்ட லிங்கேஷ்வ‌ர‌ன், சிகிச்சை ஆரம்பிக்கும் முன் இற‌ந்துவிட்ட‌ செய்தியை கேட்ட‌ அர்ஜுனிற்கு இடியே விழுந்த‌துப்போல் இருக்க‌, அவ‌னுட‌ன் இருந்த‌ ம‌ற்ற‌ நால்வ‌ருக்கும்கூட‌ அதே நிலைதான். அனைவ‌ரும் அதிர்ச்சியில் சிலையாக‌ மாறியிருக்க‌, ம‌ருத்துவ‌ரோ "நீங்க‌ எல்லா ஃபார்மாலிட்டியையும் முடிச்சிட்டு, அவ‌ரோட‌ பாடிய‌ வீட்டுக்கு எடுத்துட்டு போலாம்." என்று கூறிவிட்டு சென்றுவிட்டார்.

அதை கேட்ட‌ அர்ஜுனுக்குதான் கால்க‌ள் த‌டுமாறி அதிர்ச்சியில் பொத்தென்று இருக்கையில் அம‌ர்ந்தான். அவ‌னை பார்த்த‌ ம‌ற்ற‌ அனைவ‌ரும் அவ‌ன் அருகில் அம‌ர்ந்து, அவ‌னுக்கு எவ்வாறு ச‌மாதான‌ம் கூறுவ‌தென்று அறியாம‌ல் வெறும் க‌ண்ணீரை ம‌ட்டும் சிந்தின‌ர். அனைவ‌ரையுமே லிங்கேஷ்வ‌ர‌ன் ம‌க‌ன் போல‌ ந‌ட‌த்தியிருந்தாலும், அர்ஜுனை ம‌ட்டும் அவ‌ரின் ம‌க‌னுக்கும் மேலான‌ ஒரு ஸ்தான‌த்தில் வைத்திருந்தார் என்ப‌து அனைவ‌ருக்கும் தெரியும், அது அர்ஜுனுக்கும் தெரியும். என‌வே அவ‌ரின் இழ‌ப்பு ம‌ற்ற‌வ‌ர்க‌ளைவிட‌ அர்ஜுனைதான் அதிக‌மாக‌ பாதிக்கும் என்றும் அனைவ‌ருக்கும் தெரிந்திருந்தது. என‌வே அவ‌னை ச‌மாதான‌ம் செய்ய‌ த‌ங்க‌ளை தாங்க‌ளே ச‌மாதான‌ப்ப‌டுத்த‌ முய‌ன்றும், முடியாம‌ல் அவ‌னையும் ச‌மாதான‌ப்ப‌டுத்த‌ முடியாம‌ல் ஒருவ‌ரையொருவ‌ர் க‌ட்டிக்கொண்டு அழுத‌ன‌ர்.

இங்கு ஒரு நிமிட‌ம் அர்ஜுனுக்கு உல‌க‌ம் சுற்றுவ‌தே நின்றுவிட‌, இன்று காலை ந‌ன்றாக‌ ந‌ட‌மாடிய‌வ‌ர் இப்போது இற‌ந்துவிட்டார் என்ப‌தை அவ‌னால் ஏற்றுக்கொள்ள‌வே முடிய‌வில்லை. அவ‌னுக்கு அவ‌ரின் உட‌லைக்கூட‌ சென்று பார்ப‌த‌ற்கு தைரிய‌ம் இல்லை. இந்த‌ அதிர்ச்சியிலிருந்தே இன்னும் மீள‌ முடியாம‌ல் த‌வித்த‌வ‌னை, "வாடா போய் பாஸ் மொக‌த்தையாவ‌து பாத்துட்டு வ‌ர‌லாம்." என்று அவ‌ன் ந‌ண்ப‌ன் அழைக்க‌, அவ‌னோ அத‌ற்கு ச‌ற்றும் தைரிய‌ம் இல்லாம‌ல் த‌லைகுனிந்த‌ப‌டி அழுதுக்கொண்டே இருந்தான்.

அவ‌ர் இற‌ந்துவிட்டார் என்ப‌து அவ‌ன் காதுக‌ள் ந‌ம்பியிருந்தாலும், அவ‌ன் ம‌ன‌மோ ந‌ம்ப‌ ம‌றுக்க‌, அவ‌ன் க‌ண்க‌ள் அந்த‌ உண்மையை க‌ண்டுவிட்டால் ம‌ன‌மும் ந‌ம்பிவிடும் என்று ப‌ய‌ந்து, அவ்விட‌த்தைவிட்டு ந‌க‌ர‌வே ம‌றுத்தான். ஆனால் ம‌ற்ற‌வ‌ர்க‌ளோ அவ‌னின் நிலை புரிந்து அவ‌னை எழுப்பி அழைத்து செல்ல‌, அவ‌னோ வ‌ர‌வே மாட்டேன் என்று முர‌ன்டுபிடித்த‌ப‌டியேதான் சென்றான். ஐ.சி.யூவின் வார்டு வ‌ரை சென்ற‌வ‌னுக்கு, அத‌ற்குமேல் செல்ல‌ கால்க‌ள் வ‌ராம‌ல் வெளியிலும் செல்ல‌ ம‌ன‌ம் வ‌ராம‌ல் அப்ப‌டியே நின்றுவிட்டான்.

பிற‌கு லிங்கேஷ்வ‌ர‌னின் உட‌லை பார்த்த‌ ம‌ற்ற‌ அனைவ‌ரும், அர்ஜுனைவிட்டுவிட்டு அவ‌ரை நோக்கி செல்ல‌, அவ‌ரை பார்த்த‌ அர்ஜுனுக்கோ இத‌ய‌ம் துடிப்ப‌தையே நிறுத்த‌, க‌ண்க‌ள் சிவ‌ந்த‌ நிலையில் க‌ண்ணீரே உறைந்து நின்ற‌து. அவ‌னுக்கு அவ‌ரின் இர‌த்த‌ம் ப‌டிந்த‌ கால்க‌ள் ம‌ட்டுமே முத‌லில் தெரிய‌, அத‌ற்கு மேல் அங்கு நிற்க‌ முடியாத‌வ‌னின் கால்க‌ள் மெல்ல‌ முன்னோக்கி செல்ல‌ துவ‌ங்கிய‌து. ம‌ற்ற‌ அனைவ‌ரும் மூடியிருக்கும் அவ‌ரின் முக‌த்தின் போர்வையை வில‌க்கிவிட்டு, அவ‌ரின் முக‌த்தை ப‌ற்றி அழுதுக்கொண்டிருக்க‌, அங்கே அதிர்ச்சியுட‌ன் மெல்ல‌ ந‌க‌ர்ந்து அருகில் வ‌ந்த‌வ‌ன், அவ‌ரின் முக‌த்தை பார்த்த‌ அடுத்த‌ நொடியே அவ‌னின் உறைந்த‌ க‌ண்ணீர் த‌ரையை தொட்ட‌து. அடுத்த‌ நொடி பொத்தென்று மெத்தை அருகில் த‌ரையில் விழுந்த‌வ‌ன், போர்வைக்கு வெளியில் தொங்கிக்கொண்டிருந்த‌ அவ‌ரின் இர‌த்த‌ம் ப‌டிந்த‌ கையை மெல்ல‌ தொட்டான். அவ‌ரின் க‌ர‌ம் ப‌ற்றிய‌ அடுத்த‌ நொடி அவ‌ன் கைக‌ளிலும் இர‌த்த‌ம் ப‌டிய‌, அவ‌ற்றை உற்று பார்த்த‌வ‌னின் கைக‌ள் ந‌டுங்க‌ ஆர‌ம்பித்த‌து. பிற‌கு மெல்ல‌ த‌ன் பார்வையை நிமிர்த்திய‌வ‌னுக்கு தைரிய‌ம் ச‌ற்றும் இல்லாம‌ல் போக‌, க‌ண்க‌ளை மூடி தைரிய‌த்தை வ‌ள‌ர்த்துக்கொண்ட‌வ‌ன், மீண்டும் நிமிர்ந்து அவரின் முக‌ம் பார்த்தான்.

அடுத்த‌ நொடி ந‌டுங்கிக்கொண்டிருந்த‌ அவ‌ன் கைக‌ளால் அவ‌ரின் க‌ன்ன‌ம் ப‌ற்றிய‌வ‌ன், அதிர்ச்சியும் க‌ண்ணீருமாக‌, "ஏ பாஸ்? ஏ இப்பிடி ப‌ண்ணீங்க‌?" என்று வார்த்தைக்கூட‌ வெளியில் வராத‌வாறு கேட்க‌, அத‌ற்கு அவ‌ரின் மூடிய‌ க‌ண்க‌ளிட‌ம் எந்த‌ ப‌திலும் வ‌ராம‌ல் இருக்க‌, "ஏ பாஸ் என்ன‌விட்டு போனீங்க‌?" என்று க‌ம‌றிய‌ குர‌லில் கேட்க‌,

அத‌ற்கும் அவ‌ரிட‌ம் ப‌தில் வ‌ராம‌ல் இருக்க‌, அவ‌னோ த‌ன் குர‌லை உய‌ர்த்தி, "ஏ என்ன‌ த‌னியா விட்டுவிட்டு போனீங்க‌? ஏ?" என்று க‌த்தினான்.

அத‌ற்கு அவ‌ன் ந‌ண்ப‌னோ அவ‌ன் தோள்க‌ளை ப‌ற்றி அவ‌னை ச‌ம‌ன்செய்ய‌, அதில் அமைதிய‌டைந்த‌வ‌ன், "என்ன‌ திரும்ப‌ அனாதையாக்கிட்டீங்க‌ல்ல‌ பாஸ்?" என்று கூறி க‌ண்க‌ள் க‌ல‌ங்கினாள்.

அவ‌னின் வேத‌னையை புரிந்த‌ ம‌ற்ற‌ அனைவ‌ரும் அவ‌னை வ‌ருத்த‌த்துட‌ன் பார்க்க‌, அவ‌னோ உட‌னே லிங்கேஷ்வ‌ர‌னை க‌ட்டிக்கொண்டு க‌த‌றி அழுதான்.

"ஏன் பாஸ்? ஏ என‌க்கு இவ்ளோ அன்ப‌ குடுத்தீங்க‌? இப்ப‌ ஏ திடீர்னு என்ன‌விட்டு போனீங்க‌?" என்று க‌த‌றிய‌ப‌டி அழுதுக்கொண்டிருந்தான்.

அப்போது அவ‌ன் ந‌ண்ப‌ன் ஒருவ‌ன், "ஆமா, ச‌ந்ரா எங்க‌டா காணோம்? அவ‌ள‌ வெளிய‌க்கூட‌ பாக்க‌ல‌?" என்று கூற‌,

அப்போது லிங்கேஷ்வ‌ர‌னை அணைத்திருந்த‌ அர்ஜுன் மெல்ல‌ நிமிர‌, அப்போதே த‌ங்க‌ளுக்கு இந்த‌ செய்தியை கூறிய‌தே ச‌ந்ரா தானே, அவ‌ள் எங்கே என்று யோசித்தான்.

அப்போது ஒருவ‌ன், "அவ‌தான‌ ந‌ம‌க்கு கால் ப‌ண்ணி வ‌ர‌ சொன்ன‌து? இப்போ எங்க‌ போனா?" என்று கேட்க‌,

அத‌ற்கு ம‌ற்றொருவ‌ர், "பாவ‌ம்டா அந்த‌ பொண்ணு. ந‌ம்ப‌ளாலையே தாங்க‌ முடிய‌ல‌. அவ‌ எப்பிடி தாங்குவா?" என்று வ‌ருத்த‌மாக‌ கூற‌,

ச‌ட்டென‌ எழுந்து நின்ற அர்ஜுன் அங்கிருந்து செல்ல‌ போக‌, "டேய் அர்ஜுன் எங்க‌ போற‌?" என்று ஒருவ‌ன் கேட்க‌,

அர்ஜுன், "நீங்க‌ பாஸ் கூட‌வே இருங்க‌. நா போய் ச‌ந்ரா எங்க‌ன்னு பாத்துட்டு வ‌ர்றேன்." என்று கூறி விரைவாக‌ வெளியில் சென்றான்.

பிற‌கு ரிச‌ப்ஷ‌னில் அவ‌ளை ப‌ற்றி விசாரிக்க‌, அந்த‌ ரிச‌ப்ஷ‌னிஸ்ட், "அந்த‌ ஏக்சிட‌ன்ட் கேஸ்க்கு கூட‌ வ‌ந்த பொண்ணா? அவ‌ங்க‌ கொஞ்ச‌ நேர‌த்துக்கு முன்னாடிதா வெளிய‌ போனாங்க‌." என்று கூற‌, "ஓகே தேங்க் யூ." என்று கூறி விரைவாக‌ ம‌ருத்துவ‌ம‌னையைவிட்டு வெளியேறினான்.

அங்கு பார்க்கும் இட‌மெல்லாம் இருளாக‌வே தெரிய‌, இந்த‌ இருட்டில் அவ‌ள் எங்கு சென்றிருப்பாள், என்று குழ‌ம்பிய‌வ‌னுக்கு ப‌த‌ற்ற‌ம் அதிக‌ரிக்க‌, சுற்றி அவ‌ளை தேட‌ ஆர‌ம்பித்தான்.

அவ‌ன் நிற்கும் அதே இட‌த்தைவிட்டு ச‌ற்று த‌ள்ளிதான் ச‌ந்ராவும், அந்த‌ சாமியார் எங்கு சென்றார் என்று தேடிக்கொண்டிருந்தாள். ஏற்க‌ன‌வே த‌ன் த‌ந்தையின் இழ‌ப்பால் விர‌க்தியில் இந்த‌ கோவிலுக்கு வ‌ந்த‌வ‌ளுக்கு, அந்த‌ சாமியார் கூறிய‌ வார்த்தைக‌ளால் குழ‌ப்ப‌ம்தான் அதிக‌ம் சூழ்ந்துக்கொண்ட‌து. அடுத்து ஆப‌த்தில் இருக்கும் அந்த‌ உயிரை எண்ணி அவ‌ள் ம‌ன‌ம் ப‌த‌ற‌ ஆர‌ம்பிக்க‌, இன்னொரு இழப்பை தாங்கும் அள‌விற்கு அவ‌ள் உட‌லில் ச‌க்தி இல்லை என்று ம‌ன‌ம் கூறிய‌து. அந்த‌ உயிர் யாரென்று தெரியாம‌லே அவ‌ள் உள்ள‌ம் அந்த‌ உயிருக்காக‌ ப‌த‌றிய‌து.

அந்த‌ ப‌த‌ற்ற‌த்திலும் குழ‌ப்ப‌த்திலும் கால் போன‌ போக்கில் ந‌ட‌ந்த‌வ‌ளின் எண்ண‌ம் பாதையிலேயே இல்லை. இருட்டில் யார் மீதோ தெரியாம‌ல் மோதிவிட‌, அதில் நிலை த‌டுமாறி விழ‌ போன‌வ‌ளை, த‌ன் இரு க‌ர‌ங்க‌ளால் அவ‌ள் இடையை இறுக‌ ப‌ற்றி அவ‌ளை தாங்கினான். அதில் த‌டுமாறிய‌ அவ‌ளின் முக‌ம் அவ‌ன் மார்பில் புதைய‌, அப்போதே அவ‌னின் ஸ்ப‌ரிச‌ம் அவ‌ன் யார் என்று கூறிய‌து.

ஏற்க‌ன‌வே கோவில் வைத்து அவ‌னை அணைத்திருந்த‌வ‌ளுக்கு அவ‌னின் வாச‌ம் ந‌ன்றாக‌ தெரிந்திருக்க‌, அவ‌ன் மார்பில் புதைந்த‌ அடுத்த‌ நொடியே அவ‌னை இறுக‌ அணைத்துக்கொண்டு க‌த‌றி அழுதாள் ச‌ந்ரா.

அடுத்த‌ நொடி ப‌த‌றிய‌வ‌ன், "ச‌ந்ரா!" என்று கூறி அவளை அணைத்து, "ச‌ந்ரா என்ன‌ ஆச்சு? இங்க‌ என்ன‌ ப‌ண்ணிகிட்டிருக்க‌?" என்று கேட்க‌,

அத‌ற்கு ப‌தில் கூறாம‌ல் அவ‌னை இறுக‌ க‌ட்டிக்கொண்டு க‌த‌றி அழுதாள். அவ‌ள் நிலை புரிந்த‌வ‌ன் அவ‌ளை மெல்ல‌ வில‌க்கி அவ‌ளின் விழி பார்த்து, "ச‌ந்ரா இங்க‌ ஏ வ‌ந்த‌? என்ன‌ ஆச்சு?" என்று கேட்க‌,

அத‌ற்கு மீண்டும் அவ‌னை க‌ட்டிக்கொண்ட‌வ‌ள் அழுத‌ப‌டியே, "என் அப்பா என்ன‌ ஏமாத்திட்டாரு அர்ஜுன். அவ‌ரு என‌க்கு ப‌ண்ண‌ பிராமிஸ‌ மீறிட்டாரு." என்று கூறி அவ‌ன் மார்பில் புதைந்து அழ‌, அவ‌னோ புரியாம‌ல் அவ‌ளை பார்த்தான்.

மேலும் ச‌ந்ரா, "உல‌க‌த்துல‌ யார் உன்கூட‌ இல்ல‌ன்னாலும், நா உன்கூட‌ இருப்ப‌ன்னு என‌க்கு பிராமிஸ் ப‌ண்ணாரு. ஆனா அவ‌ரே அத‌ மீறிட்டாரு அர்ஜுன்." என்று கூறி க‌த‌றி அழுதாள்.

அதை கேட்ட‌ அவ‌னுக்கோ அழுகை முட்டிக்கொண்டு வ‌ர‌, அதை த‌ன‌க்குள் க‌ட்டுப்ப‌டுத்திக்கொண்ட‌வ‌ன், அவ‌ளை மெல்ல‌ த‌ன்னிட‌மிருந்து வில‌க்கி, "என‌க்கு புரியுது ச‌ந்ரா. ஆனா விதிய‌ ந‌ம்ப‌ளால‌ என்ன‌ ப‌ண்ண‌ முடியும்?" என்று த‌ன் வ‌லியை ம‌றைத்து அவ‌ளுக்கு கூறிய‌வ‌ன், பிற‌கு அவ‌ளை பார்த்து, "செரி வா நாம‌ ஹாஸ்பிட்ட‌லுக்கு போலாம்." என்று அவ‌ள் க‌ர‌ம் ப‌ற்றி அழைக்க‌,

உட‌னே அவ‌ன் கையை உத‌றிவிட்ட‌ ச‌ந்ரா, "இல்ல‌ என்னால‌ முடியாது அர்ஜுன். என்னால‌ அவ‌ர‌ அந்த‌ நெல‌மையில‌ ப‌க்க‌ முடிய‌ல‌." என்று கூறி ம‌ன‌ம் க‌சிந்து அழுதாள்.

அவ‌ளின் க‌ண்ணீர் ஏனோ அவ‌னின் இதய‌த்தை நேர‌டியாக‌ தாக்க‌, அவ‌னுக்கு அது சொல்ல‌ முடியாத‌ வ‌லியை த‌ந்த‌து. ஆனாலும் த‌ன்னை ச‌ம‌ன் செய்துக்கொண்ட‌வ‌ன், "ச‌ந்ரா ப்ளீஸ்.." என்று ஏதோ கூற‌ வ‌ருமுன், க‌ண்க‌ளை இறுக்கி மூடி க‌த‌றி அழ‌ ஆர‌ம்பித்தாள் ச‌ந்ரா.

அதை பார்த்த‌வ‌ன் ச‌ற்றும் தாம‌திக்காம‌ல் அவ‌ளை இழுத்து அணைத்துக்கொண்டான். அதில் முற்றிலுமாக‌ அவ‌னுள் புதைந்த‌வ‌ள், அவ‌னை இறுக‌ அணைத்துக்கொள்ள‌ க‌ண்ணீர் ம‌ட்டும் நிற்காம‌ல் வ‌ந்த‌து. அவ‌ளை இறுக‌ அணைத்துக்கொண்டிருக்கும் அர்ஜுனுக்கும் அதே நிலைதான். என்ன‌ கூறி அவ‌ளை ச‌ம‌ன் செய்வ‌து என்று தெரிய‌வில்லை. ஏனென்றால் அவ‌னுக்கே ஒரு ஆறுத‌ல் தேவைப்ப‌ட்ட‌து.

இருவ‌ரும் ஒருவ‌ர் அணைப்பில் ம‌ற்றொருவ‌ர் ஆறுத‌லை தேடிக்கொண்டிருக்க‌, அப்போது அர்ஜுனின் கைப்பேசி ஒலித்த‌து.

அதில் திடுக்கிட்டு மெல்ல‌ அவ‌ளைவிட்டு வில‌கிய‌வ‌ன், த‌ன் காலை அட்ட‌ன் செய்து, "ஹ‌லோ!" என்று கூற‌, அங்கு ம‌ருத்துவ‌ம‌னையில் இருந்த‌ இவ‌னின் ந‌ண்ப‌ன்தான் எங்கு இருக்கிறாய் என்று கேட்டு கால் செய்திருந்தான்.

அத‌ற்கு அர்ஜுன் அவ‌னிட‌ம் "நா இப்ப‌ வ‌ந்த‌ர்றேன்." என்று கூறி இணைப்பை துண்டித்தான்.

அப்போது த‌ன் அருகில் இருந்த‌ ச‌ந்ராவை பார்த்த‌வ‌ன், "ப்ளீஸ் ச‌ந்ரா. என‌க்காக‌ வா. நாம‌ பாஸ்க்கு செய்ய‌ வேண்டிய‌தெல்லா செய்ய‌ணும். அது ந‌ம்ப‌ க‌ட‌ம‌." என்று கெஞ்சி அழைக்க‌, அவளும் த‌ன் ம‌ன‌தை திட‌ப்ப‌டுத்திக்கொண்டு அவனுட‌ன் சென்றாள்.

பிற‌கு இருவ‌ரும் ம‌ருத்துவ‌ம‌னைக்கு சென்று, அங்கு ம‌ற்ற‌ நால்வ‌ருட‌ன் சேர்ந்து அனைத்து ஃபார்மாலிட்டியையும் முடித்துவிட்டு, லிங்கேஷ்வ‌ர‌னின் உட‌லை வீட்டிற்கு எடுத்து வ‌ந்த‌ன‌ர். அவ‌ருக்கு சொந்த‌ம் என்று சொல்லிக்கொள்ள‌ ச‌ந்ராவை த‌விர‌ வேறும் யாரும் இல்லாத்தால், அவ‌ரின் சில‌ நெருங்கிய‌ ந‌ண்ப‌ர்க‌ளிட‌ம் த‌க‌வ‌லை கூறி, அவ‌ர்க‌ள் வ‌ரும் வ‌ரை காத்திருந்த‌ன‌ர். பிற‌கு லிங்கேஷ்வ‌ரனின் ப‌ள்ளி ப‌ருவ‌ ந‌ண்ப‌ர்க‌ள், க‌ல்லூரி ம‌ற்றும் பிஸ்ன‌ஸ் பார்ன‌ர்ஸ் சில‌ர் என்று அனைவ‌ரும் வ‌ந்து சேர்ந்த‌ பிற‌கே, இறுதி ச‌ட‌ங்கிற்கான‌ வேலைக‌ள் ந‌ட‌ந்த‌து. அர்ஜுனே ம‌க‌னுக்கான‌ அனைத்து ச‌ட‌ங்குக‌ளையும் செய்து முடித்தான். ஆனால் ச‌ந்ராவிற்கோ லிங்கேஷ்வ‌ர‌னை அந்த‌ நிலையில் பார்க்க‌க்கூட‌ தெம்பில்லாம‌ல் இரு ஓர‌மாக‌ நின்று அழுதுக்கொண்டே இருந்தாள். அதே வ‌லி அர்ஜுனிற்கும் இருக்க‌தான் செய்கிற‌து. ஆனால் அவ‌ற்றை க‌டின‌ப்ப‌ட்டு த‌ன‌க்குள் புதைத்த‌வ‌ன், த‌ன் த‌ந்தைக்கும் மேலான‌வ‌ரின் இறுதி ச‌ட‌ங்குக‌ளை ச‌ரி வ‌ர‌ செய்து முடித்தான். அவ‌னுக்கு அவ‌னுடைய‌ ந‌ண்ப‌ர்க‌ளும் ம‌ற்றும் லிங்கேஷ்வ‌ர‌னிட‌ம் வேலை பார்க்கும் அனைவ‌ரும் ச‌ட‌ங்கில் ப‌ங்கேற்று ப‌க்க‌ ப‌ல‌மாக‌ இருந்த‌ன‌ர்.

இறுதியில் அனைத்து ச‌ட‌ங்குக‌ளும் ந‌ட‌ந்து முடிவ‌த‌ற்கு அடுத்த‌ நாள் சாய‌ங்கால‌ம் ஆகிவிட‌, துக்க‌ம் விசாரிக்க‌ வ‌ந்த‌வ‌ர்க‌ள் அனைவ‌ரையும் அர்ஜுனே பேசி வ‌ழி அனுப்பிக்கொண்டிருந்தான். ச‌ந்ரா லிங்கேஷ்வ‌ர‌னின் உட‌ல் வைக்க‌ப்ப‌ட்ட‌ அந்த‌ இட‌த்திலிருந்து ச‌ற்றும் ந‌க‌ர‌வில்லை. அம‌ர்ந்த‌து அம‌ர்ந்த‌ப‌டியே ஒரு இட‌த்தை வெறித்து பார்த்துக்கொண்டிருந்தாள்.

அனைத்து ச‌ட‌ங்குக‌ளும் முடிந்து, வ‌ந்த‌வ‌ர்க‌ள் அனைவ‌ரும் சென்ற‌ பிற‌கு, வீடே வெறுமையை உண‌ர‌ அத‌ற்குள் இர‌வாகியிருந்த‌து. அப்போது அர்ஜுனின் ந‌ண்ப‌ர்க‌ளும் ச‌ந்ராவிட‌ம் ஆறுத‌லாக‌ நாலு வார்த்தைக‌ள் பேசிவிட்டு, பிற‌கு அவ‌ள் உட‌லை பார்த்துக்கொள்ள‌ கூறிவிட்டு அங்கிருந்து விடைபெற்ற‌ன‌ர். இறுதியாக‌ அர்ஜுன்தான் அவ‌ளை இந்நிலையில் த‌னியாக‌ விட்டு செல்ல‌வும் ம‌ன‌மில்லாம‌ல், அவ‌ளுட‌னே இங்கு இருக்க‌வும் முடியாம‌ல், அவ‌ள் முன் த‌ய‌ங்கிய‌ நிலையில் சென்று நின்றான்.

அப்போது மெல்ல‌ த‌ன் பார்வையை உய‌ர்த்தி அவ‌னை பார்த்த‌வ‌ள், "தேங்க்ஸ் அர்ஜுன். இன்னிக்கு நீங்க‌ ப‌ண்ண‌ எல்லாத்துக்குமே ரொம்ப‌ தேங்க்ஸ்." என்று வெறுமையாய் கூறினாள்.

அத‌ற்கு அர்ஜுன், "இதெல்லாமே என்னோட‌ க‌ட‌ம‌. சோ நீ தேங்க்ஸெல்லாம் சொல்ல‌ வேண்டாம். ப‌ட்..." என்று ஏதோ கூற‌ வ‌ர‌, அவ‌ளும் அவ‌னை கேள்வியுட‌ன் பார்க்க‌, "இத‌ ப‌த்தியே யோசிச்சுகிட்டில்லாம‌, சாப்புட்டு ந‌ல்லா தூங்கி ரெஸ்ட் எடு. நா காலையில் வ‌ந்து பாக்குறேன்." என்றான்.

அத‌ற்கும் அவ‌ள் இத‌ழோர‌ம் விர‌க்தியாய் ஒரு புன்ன‌கை தோன்றி ம‌றைய‌, அதை பார்த்த‌வ‌ன் அவ‌ளில் தோள்க‌ளை ப‌ற்றி, "ப்ளீஸ் ச‌ந்ரா. நீ இப்பிடி இருக்குற‌து பாஸுக்கும் புடிக்காது. ப்ளீஸ் அவ‌ருக்காக‌வாவ‌து நீ அதுல‌ இருந்து வெளிய‌ வா. ம்ம்? நா காலையில‌ வ‌ந்து பாக்குறேன்." என்று கூறிவிட்டு அங்கிருந்து ந‌க‌ர‌, அவ‌ன் க‌ர‌ம் ப‌ற்றி த‌டுத்தாள் ச‌ந்ரா.

அதை உண‌ர்ந்த‌ அர்ஜுன் திரும்பி அவ‌ளை கேள்வியுட‌ன் பார்க்க‌, அத‌ற்கு ச‌ந்ரா, "என்னால‌ உங்க‌ள‌ மாதிரி ந‌டிக்க‌ முடிய‌ல‌ அர்ஜுன்." என்று கூற‌, அதை கேட்டு அதிர்ந்து அவ‌ன் அவ‌ளை பார்க்க‌,

மேலும் ச‌ந்ரா, "உங்க‌ ம‌ன‌சுல‌ எவ்ளோ வ‌லிய‌ ம‌ற‌ச்சு வெச்சுட்டு, என‌க்கு ஆறுத‌ல் சொல்றீங்க‌ன்னு என‌க்கு ந‌ல்லாவே தெரியும் அர்ஜுன்." என்று கூறிய‌ அடுத்த‌ நொடி அவளை இறுக‌ க‌ட்டிக்கொண்டு, இதுவ‌ரை க‌ட்டுப்ப‌டுத்திய‌ அனைத்து க‌ண்ணீரையும் வெளியேற்றிவிட்டான் அர்ஜுன்.

அதில் அவ‌ள் க‌ண்க‌ளும் க‌ல‌ங்க‌, அவ‌ன் முதுகை மெல்ல‌ த‌ட்டிக்கொடுத்த‌வ‌ள், "என்ன‌விட‌ என் அப்பாக்கூட‌ அதிக‌ நாள் இருந்த‌து நீங்க‌தா. என்ன‌விட‌ அதிக‌மா அவ‌ருமேல‌ பாச‌ம் வெச்சிருக்குற‌தும் நீங்க‌தா. இப்போ என்ன‌விட‌ அதிக‌மான‌ வ‌லியில‌ இருக்குற‌தும் நீங்க‌தா. காலையிலிருந்து நீங்க‌ ந‌டிச்ச‌தெல்லாம் போதும். ப்ளீஸ் இப்பவாவ‌து ம‌ன‌சுவிட்டு அழுதிருங்க‌. அப்ப‌தா கொஞ்ச‌மாவ‌து பார‌ம் கொறையும்." என்று கூற‌, அவ‌னால் த‌ன் வ‌லியை இத‌ற்குமேல் க‌ட்டுப்ப‌டுத்த‌வே முடிய‌வில்லை. அவ‌ளை இறுக்க‌மாக‌ அணைத்த‌ப‌டி, அவ‌ள் தோளில் தாடையை ப‌தித்து த‌ன் வ‌லிக‌ள் அனைத்தையும் க‌ண்ணீராக‌ கொட்டி தீர்த்தான்.

பிற‌கு பார‌ம் தீர‌ அழுது முடித்த‌வ‌ன், த‌ன்னை தானே ச‌ம‌ செய்துக்கொண்டு மெல்ல‌ அவ‌ளைவிட்டு வில‌க‌, ச‌ந்ரா "டேக் கேர்" என்றாள் மெல்லிய‌ குர‌லில். அத‌ற்கு அர்ஜுனும் க‌ண் அசைத்துவிட்டு, "யூ டூ." என்று கூறி அங்கிருந்து ந‌க‌ர்ந்தான்.

செல்லும் அவ‌னையே பார்த்துக்கொண்டிருந்த‌வ‌ளுக்கு, ஏனோ இந்நிலையில் அவ‌ன் அணைப்பே மீண்டும் தேவைப்ப‌ட்ட‌து. ஆனால் த‌ன் ம‌ன‌தை க‌ட்டுப்ப‌டுத்திய‌ப‌டி அமைதியாக‌ விட்டிற்குள் சென்றுவிட்டாள். பிற‌கு என்றுமே இருவ‌ர் ம‌ட்டும் இருந்தாலும், அதில் ம‌கிழ்ச்சி ம‌ட்டுமே நிறைந்திருந்த‌ இந்த‌ விட்டின் ஒவ்வொரு மூலைக‌ளும் இன்று வெறுமையாய் ம‌ட்டுமே காட்சிய‌ளித்த‌து. அவ‌ற்றை ந‌க‌ர்ந்த‌ப‌டியே விர‌க்தியாய் பார்த்த‌வ‌ள், மெல்ல‌ ந‌ட‌ந்து த‌ன் அறைக்குள் சென்று மெத்தையில் அம‌ர்ந்தாள். அவ‌ளின் பிற‌ப்பிலிருந்து இன்று வ‌ரை த‌ன‌க்கு சொந்த‌மான‌ எதுவும் த‌ன்னுட‌ன் நீண்ட‌ நாள் இருந்த‌தே இல்லை என்ப‌தை நினைத்து பார்த்த‌வ‌ள், இந்த‌ நொடி, இவ்வுல‌கில் த‌னிமை ஒன்றுதான் நிற‌ந்த‌ர‌ம் என்று ஆணித்த‌ன‌மாய் ந‌ம்பினாள். ஆனால் நிற‌ந்த‌ர‌மில்லா அன்பு த‌ரும் ம‌கிழ்ச்சியையும் நிறைவையும், என்றும் நிர‌ந்த‌ர‌மாக‌ இருக்கும் இந்த‌ த‌னிமை ஏன் த‌ருவ‌தில்லை என்ற‌ கேள்விக்கு அவ‌ளிட‌ம் ப‌தில் இல்லை.

அப்போதே காலையிலிருந்து ஒன்றுமே சாப்பிடாம‌ல், த‌ண்ணீரும் குடிக்காம‌ல் வ‌ற‌ண்டு கிட‌ந்த‌ த‌ன் தொண்டையின் தாக‌த்தை உண‌ர்ந்தாள். உண‌வு உண்ண‌தான் ம‌ன‌மில்லை, த‌ண்ணீரையாவ‌து குடித்து ப‌சியையும் போக்கிவிட‌லாம் என்று எண்ணிய‌வ‌ள், எழுந்து த‌ன் அருகில் உள்ள‌ மேசையில் இருந்த‌ த‌ண்ணீரை எடுத்து மெல்ல‌ குடித்தாள். தாக‌ம் தீர‌ குடித்த‌வ‌ள், க‌ண்ணாடி ட‌ம்ள‌ரை கீழே இற‌க்கும் நொடி, அந்த‌ ட‌ம்ள‌ரில் பாய்ந்த‌ தோட்டாவால், அது சில்லு சில்லாய் சித‌றிய‌து. அதில் திடுக்கிட்ட‌வ‌ள் ச‌ட்டென‌ த‌ன் முன் இருக்கும் ஜ‌ன்ன்ன‌ல் வ‌ழியாக‌ பார்க்க‌, அங்கு எதிரில் இருக்கும் பில்டிங்கின் ஜ‌ன்ன‌ல் வ‌ழியாக‌ ஒருவ‌ன் பெரிய‌ துப்பாக்கியுட‌ன் நிற்ப‌து இவ‌ளுக்கு தெரிய‌வில்லை. அவ‌னோ "ஷிட்" என்று கூறி மீண்டும் அவ‌ளை நோக்கி குறி வைக்க‌, இங்கு ஒரு நிமிட‌ம் என்ன‌ ந‌ட‌ந்த‌து என்றே புரியாம‌ல் நின்ற‌வ‌ளுக்கோ கீழே உடைந்து கிட‌ந்த‌ க‌ண்ணாடி சில்லுக‌ளின் ந‌டுவே ஒரு தோட்டா தென்ப‌ட்ட‌து. உட‌னே அவ‌ற்றை குனிந்து எடுத்துவ‌ளுக்கு அப்போதுதான் புரிந்து ஜ‌ன்ன‌லின் ப‌க்க‌ம் திரும்ப‌, அத‌ற்குள் அவ‌ன் ட்ரிக‌ரை அழுத்திவிட‌, அவ‌ளை நோக்கி பாய்ந்த‌ தோட்டா அவ‌ள் தேக‌த்தை துளிக்க‌ போகும் நொடி, திடீரென‌ இடையில் வ‌ந்து அந்த‌ தோட்டாவை த‌ன் நெஞ்சில் வாங்கிக்கொண்டான் அர்ஜுன்.

அதை பார்த்த‌ அவ‌னோ "ஷிட்" என்று துப்பாக்கியை கீழ் இற‌க்க‌, இங்கு ச‌ந்ராவோ நெஞ்சில் இர‌த்த‌ம் தெறித்து நிற்கும் அர்ஜுனை பார்த்து அதிர்ச்சியில் உறைந்து நின்றாள்.

- ஜென்மம் தொட‌ரும்...
 

Author: Oviya Blessy
Article Title: CHAPTER-6
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.