Chapter 6

Bhavani Varun

Member
Jan 23, 2025
45
0
6
“அம்மா!!!! அம்மா!! என்று வள்ளி குரல் கொடுக்க, இதோ வந்துட்டேன்!!! என்று பாட்டி கூறினார். “நீங்களா!! வாங்க.. உள்ள வாங்க” என்று பாட்டி அழைக்க, இருவரும் உள்ளே சென்றனர்.

இந்தாங்க தண்ணி என்று பாட்டி உபசரிக்க, இருவரும் வாங்கி பருகினர். “என்ன விஷயமா வந்து இருக்கீங்க?” என்று பாட்டி கேட்க, “ ம்ம்…. அபர்ணா நம்மள விட்டுப் போய் மூணு மாசம் ஆகப் போகுது நம்ம வழக்கப்படி கோவிலுக்கு போயிட்டு சாமி கும்பிட்டு வரணும்… ஆனா, எங்களுக்கு நம்ம எல்லாரையும் கூப்பிட்டு ஒரு வாய் சாப்பாடு குடுக்கணும்னு ஆசைப்படுறோம் மா” என்று வள்ளி கூறவும், “அது தான் உங்களையும் அழைச்சிட்டு போலாம்னு வந்தோம்” என்று ஸ்ரீனிவாசன் கூறினார். “அதுக்கு என்ன பா கட்டாயம் வந்திடுறேன்” என்று பாட்டி கூறினார்.

ஸ்ரீனிவாசனும் வள்ளியும் ஒருவருக்கு ஒருவர் பார்த்துக் கொண்டு தயக்கத்தில் இருக்க, “ஏதாவது கேட்கணுமா உங்களுக்கு?” என்ற பாட்டி கேட்க, “நீங்க அபர்ணா பிறந்ததுக்கு அப்புறமா தான் நாங்க எப்போ கேட்டாலும் சரி, இல்ல ஒரு சில நேரத்துல கேட்காமலே கூட எங்களுக்கு நிறைய சொல்லி இருக்கீங்க….. அது படி நாங்க செஞ்சிருக்கோம்…. அதே மாதிரி அபர்ணா இருக்க மாட்டான்னு சொன்னீங்க….. இப்போ அவள…. அவளும் எங்கள விட்டு போயிட்டா” என்று வள்ளி கூறி கொண்டே கண் கலங்கி விட்டார்.

ஸ்ரீனிவாசன் வள்ளியை சமாதானம் செய்து, “அதான் மா எல்லாமே அப்படித் தான் நடக்குது…. அவ வந்து நிறைய இந்த கிராமத்துக்காக உழைச்சா அதே மாதிரி அவ எங்க வீட்டுக்கு வர போற பொண்ணையும் எப்படியும் காட்டுவான்னு சொன்னீங்க…. எங்களுக்கு அது என்னமோ கவிதாவா இருக்குமோன்னு தோணுது…. ஏன்னா கவிதாவும் விக்ரமும் சின்ன வயசுல இருந்து ஒன்னா வளர்ந்தவங்க…. அதுவும் இல்லாம இங்க இருக்கிறவங்களுக்கு இங்க இருக்குற பொண்ணு தானே விக்ரமுக்கு சரியா வரும்” என்று ஸ்ரீனிவாசன் கேட்டார்.

“இப்ப தெளிவா சொல்றேன் கேட்டுக்கோங்க….. அபர்ணா நம்மள எல்லாரையும் விட்டுட்டு போனாலுமே அவ திருப்பி இங்க வந்து ஏதோ ஒரு விதத்துல வாழ்ந்துட்டு தான் இருப்பா…. அதே மாதிரி உங்க வீட்டுக்கு வர போற பொண்ணு கவிதா கிடையாது” என்று பாட்டி உறுதியாக கூறினார்.

“அப்படி இல்ல மா… கவிதாவும் ஆசைபடுறா ஒரு வேலை….” என்று வள்ளி இழுக்க, “அதையும் மீறி அவங்களுக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும் நீங்க நினைச்சீங்கனாலும் அது நடக்காது…. இது நீங்க முடிவு பண்றது இல்ல ரெண்டு பேரோட மனசு….. விக்ரமுக்கு அப்படி இல்ல அவனோட மனசு வேற இடத்துல இருக்கு கூடிய சீக்கிரம் அந்த மனசு இங்க வந்து சேரும்…. அப்படி சேரும் போது அவனே உங்க வீட்டுக்கு வர போற பொண்ண கூட்டிட்டு வருவான்…. நீங்க ரொம்ப குழப்பிக்காதீங்க” என்று பாட்டி கூறினார்.

“இத பத்தி விக்ரம் கிட்ட பேசலாம்னு தான் இருக்கோம்….. ஏற்கனவே ஒரு தடவ பேசி இருக்கோம் அவனும் இன்னும் ஒரு வருஷம் போகட்டும் அப்புறமா கல்யாணத்த பத்தி பேசிக்கலாம்னு சொல்லிட்டான்…. இப்ப திருப்பி கேட்கலாமான்னு ஒரு யோசனை….. கல்யாண வயசு வந்துருச்சு நாங்க பொண்ண பார்க்குறது பத்தி என்ன ஏதுன்னு ஒரு வார்த்தை கேட்கலாமா?” என்று ஸ்ரீனிவாசன் கேட்க, “ம்ம்…. விக்ரம் கிட்ட கேளுங்க அவ்வளவு தானே” என்று பாட்டி கூறினார். சிறிது நேரம் பேசிவிட்டு ஸ்ரீனிவாசனும் வள்ளியும் புறப்பட்டனர்.

“என்னங்க அம்மா அப்படி சொல்றாங்க…. நான் கவிதா தான் நம்ம வீட்டுக்கு எப்படியும் வந்துருவான்னு நினைச்சனே” என்று வள்ளி கூற, “நீ என்ன சொன்னாலும் அதுல விக்ரம் மனசும் தான் சேர்ந்து இருக்கு….. அவனுக்கு பிடிச்சிருந்தா அவளையே கல்யாணம் பண்ணிக்கட்டும்…. இல்லன்னா நம்ம எப்படி வற்புறுத்த முடியும்” என்று ஸ்ரீனிவாசன் கேட்க, “அதுவும் சரி தாங்க ஒரு பிள்ளையை பறி கொடுத்தோம் இன்னொரு புள்ளையாவது சந்தோஷமா இருக்கட்டும்” என்று வள்ளி கூறினார்.

இருவரும் அவர்கள் வீட்டிற்கு நடந்த செல்லும் வழியில் கவிதா அவர்களை பார்த்து, “அத்தை மாமா என்ன இந்த பக்கம்?? எங்கே போறீங்க?” என்று கேட்க, “ஒன்னும் இல்ல…. பாட்டிய பார்த்துட்டு அபர்ணா இறந்து மூனாவது மாசம் வருது இல்லையா அதுக்கு எல்லாரையும் அழைச்சு சாப்பாடு போடலாம்னு இருக்கோம்…. இங்க முதல்ல அந்த பாட்டிக்கு தானே அழைப்பு குடுப்போம் அது தான் சொல்லிட்டு வர்றதுக்காக அவங்களை பார்க்க போனோம்” என்று வள்ளி கூறினார்.

“அப்படியா!! சரிங்க அத்தை ஏதாவது வேலை இருக்குன்னா சொல்லுங்க வந்து உங்களுக்கு உதவி பண்றேன்” என்று கவிதா கூற, “இருக்குன்னா நானே கண்டிப்பா சொல்றேன்” என்று வள்ளி கூறினார்.

“ம்ம்…. ஹய்யோ அந்த பாட்டி ஏதாவது சொல்லி வெச்சிருப்பாங்களோ” என்று கவிதா மனதில் நினைத்துக் கொண்டு, “வேற ஏதாவது பேசினாங்களா அத்தை, பாட்டி உங்க கிட்ட” என்று கேட்க, ஒன்னுமில்ல மா என்று வள்ளி கூறி, “சரி எங்களுக்கு வேலை இருக்கு நாங்க கிளம்புறோம்” என்று இருவரும் புறப்பட்டனர்.

“இந்த பொண்ணு வேற நம்ம விக்ரம் மேல ஆசையா இருக்கு என்ன ஆகப் போகுதுன்னு தெரியலங்க” என்று வள்ளி கூற, “நம்ம விக்ரம் எந்த விதத்திலும் அந்த பொண்ணுக்கு நம்பிக்கை குடுக்கலா மா அதுவும் இல்லாம கவிதா இன்னொரு தங்கச்சி மாதிரி தான்னு சொல்லிட்டு இருப்பான் எப்ப பேசினாலும்…. அது அவளுக்கும் தெரியும் தான் அதனால பார்த்துக்கலாம்” என்று ஸ்ரீனிவாசன் கூறினார்.


“மச்சான் நீ அன்னிக்கு ஒரு நாள் பார்த்தேன்னு காரணத்தினால வாரம் ஒரு நாள் இந்த ஹாஸ்பிடல்ல கூட்டிட்டு வந்து என்னையும் சாவடிக்கிற பார்த்தியா அது தான் டா என்னால தாங்கவே முடியல” என்று சரவணன் கடுப்பில் கூற, “என்ன மச்சான் எனக்காக இது கூட பண்ண மாட்டியா… பார்க்கிங்ல தானே வெயிட் பண்ற என்ன இப்போ” என்று விக்ரம் கேட்டான்.

“நீ கேட்ப டா…. நீ ஏன் கேக்க மாட்ட வாரத்துல ஒரு நாள் இந்த மீட்டிங் சைன் போட வரணும்ன்ற சாக்க வெச்சுக்கிட்டு இங்க வந்து அரை மணி நேரம் இல்ல ஒரு மணி நேரம் பார்க்கிங்லையே நிப்பாட்டிட்டு போய் ஹாஸ்பிடல் முழுக்க தேடிட்டு வர…. ஆனா, அந்த பொண்ண பார்த்த பாடு என்னமோ இல்ல….. நீ போயி அட்மினிஸ்ட்ரேஷன்ல கூட வெள்ளை டிரஸ் போட்டிருந்த பொண்ணு எங்கன்னு கேட்டா சிரிப்பாங்க… அவ்வளவு ஏன் சிசிடிவில கூட உன்னால கண்டுபிடிக்க முடியாது அந்த பொண்ண…. இங்க எல்லாரும் வெள்ளை கோட் போட்டு சுத்திட்டு இருக்காங்க….. அந்த ஒரு வெள்ளை டிரஸ் வெச்சு நீ தேடிக்கிட்டு இருக்க பார்த்தியா என்னால முடியல” என்று சரவணன் குறை கூறினான்.

விக்ரம் அவனை முறைத்து கொண்டிருக்க, “சரி வா நேரமாகுது கிளம்பலாம்….. வழக்கம் போல யாரும் வரலல வா போலாம்” என்று சரவணன் கூற, விக்ரம் சலித்துக் கொண்டு வண்டியில் ஏறினான். “ரொம்ப சலிச்சுகாத டா… இனிமே வார வாரம் சைன் ஊட்டில போய் போட்டாலே போதும்னு சொல்லிட்டாங்க… மீட்டிங்கு கூப்பிட்டப்போ வந்தா போதுமாம்” என்று சரவணன் கூற, “ப்ச்… இந்த சாக்குல தான் இங்க வந்திட்டு இருந்தேன்.. இப்ப அதுவும் இல்ல” என்று கடுப்புடன் கூறினான் விக்ரம்.

“சரி இதெல்லாம் விடு மச்சான் அந்தப் பொண்ண என்ன நம்ம ஊருக்கு கூட்டிட்டு வர தான் போறியா?” என்று சரவணன் கேட்க, “நமக்கும் எப்படியும் ஒரு வாலண்டியர் டீச்சர் தேவைப்படுது…. அது இந்த பொண்ணா இருந்துட்டு போகட்டுமே” என்று விக்ரம் கூற, “சரி இதுக்கப்புறம் உன் இஷ்டம் நான் எதுவும் தலையிட விரும்பல” என்று சரவணன் கூறினான்.

“இந்த மீட்டிங் முடிச்சிட்டு அடுத்த பிரகாஷ் சார பார்த்துட்டு ஊருக்கு கிளம்பலாம்” என்று விக்ரம் கூற, சரி என்று ஆமோதித்தான் சரவணன்.

குட் மார்னிங் சார்!! என்று சரவணன் மற்றும் விக்ரம் கூற, பிரகாஷ் அவர்களை பார்த்து “குட் மார்னிங்!!! வாங்க உட்காருங்க” என்றார். இருவரும் அமர்ந்து கொள்ள, “ஊருல எல்லாரும் எப்படி இருக்காங்க?” என்று பிரகாஷ் கேட்க, “எல்லாரும் நல்லா இருக்காங்க சார்” என்றான் சரவணன். “நான் வழக்கமா வாங்கி இருக்குற பொருட்கள் வாங்கி இருக்கேன்…. போகும் போது நிச்சயமா கொண்டு போங்க” என்று பிரகாஷ் கூறினார்.

“நீங்க மட்டும் தான் சார் அங்க வேலை செஞ்சி இன்னும் எங்க கூட தொடர்புல இருக்குறது… அதுவும் இல்லாம எங்களுக்கு அன்றாட தேவைக்கான பொருட்களையும் மாதம் ஒரு வாட்டி இல்லேன்னா ரெண்டு வாட்டியாவது அனுப்புறீங்க… ரொம்ப நன்றி சார்” என்று விக்ரம் மனநிறைவுடன் கூறினான்.

“எதுக்கு பா நன்றி எல்லாம்… என்னை ரொம்ப நல்ல பார்த்துக்கிட்டீங்க… எனக்கும் அங்க இருக்குற எல்லாரையும் ரொம்ப பிடிக்கும் பா” என்றார் பிரகாஷ். இதை கேட்டு விக்ரம் மற்றும் சரவணன் புன்னைத்தனர்.

“ம்ம்…. விக்ரம் நீ கேட்டதெல்லாம் நான் ஏற்பாடு பண்ணிட்டேன்… அவங்க வீட்டிலயும் ஒத்துக்கிட்டாங்க…. ஆனா, ஒன்னே ஒன்னு தான்… இப்ப தான் அவளுக்கு ஆப்ரேஷன் எல்லாம் முடிஞ்சு இருக்கு இல்லையா அதனால அவ தங்கரத்துக்காக மட்டும்…” என்று பிரகாஷ் பேச, “அதெல்லாம் நாங்க பத்திரமா பார்த்துக்கிறோம் சார் ஒன்னும் பயப்பட வேண்டாம்” என்றான் விக்ரம்.

“அது இல்லப்பா…” என்று பிரகாஷ் பேச, சந்திரசேகர் வந்து சேர்ந்தார். விக்ரமுக்கு அவரை பார்த்ததும் எல்லையில்லா கோபம் இருக்க, “நான் தான் சொன்னேன்ல சார் நாங்க ஒன்னும் உங்க பொண்ண கொன்னுட மாட்டோம்னு… அப்புறம் என்ன சார்… அங்க நல்லாவே சாப்பாடு கிடைக்கும் அதுல எந்த பயமும் தேவையில்லை…. தங்குறதுக்கான இடத்த கூட நாங்க பார்த்துக்கிறோம் நீங்க ஒன்னும் யோசிக்க வேண்டாம்… தைரியமா அனுப்புங்க” என்று விக்ரம் கோபத்தில் கூறினான்.

சந்திரசேகர் சைகையில் பிரகாஷிடம், “தங்குறதுக்கு மட்டும் கேளுடா” என்று கூற, பிரகாஷ், ஒன்னும் பண்ண முடியல என்பது போல் தலையை அசைத்தான்.

“தம்பி!! ஒரே ஒரு சின்ன ரிக்வஸ்ட் தான் தம்பி… எங்க ஹோட்டல் ஊட்டியிலேயே இருக்கு….. ஊட்டியிலிருந்து அரை மணி நேரம் ஆகுமா வண்டியில வந்தா…. நான் வேணா தினமும் அவளுக்கு வண்டி ஏற்பாடு பண்ணி கூட உங்க ஊருக்கு கூட்டிட்டு வந்து போக சொல்றேன்” என்று சந்திரசேகர் தயக்கத்துடன் கேட்டார்.

“எதுக்கு சார் இவ்வளவு சிரமப்பட்டுகிட்டு அதுவும் ஆப்ரேஷன் ஆன பொண்ணு வேற…. எதுக்கு அவ்ளோ கஷ்டப்படணும் நாங்களே அங்கே வெச்சு பத்திரமா பார்த்துக்குறோம் நீங்க கவலையே படாதீங்க” என்று திமிராக விக்ரம் பேச, வேற என்ன பேசுவது என்று தெரியாமல் பிரகாஷ் மற்றும் சந்திரசேகர் அமைதியாக விட்டனர்.

அங்கு பேச்சை மாற்றும் விதமாக சரவணன், “அந்த ஃபைல் குடுத்தீங்கன்னா நாங்க சப்மிட் பண்றதுக்கு யூஸ்ஃபுல்லா இருக்கும்” என்று கேட்க, “இந்தா பா எல்லா ஃபார்மாலிட்டீஸும் முடிஞ்சுது நீங்க கொண்டு போயி மெயின் ஆஃபீஸ்ல சப்மிட் பண்ணிடுங்க” என்று பிரகாஷ் டாக்குமெண்ட் கொடுத்தார்.

“சரிங்க சார் நாங்க கிளம்புறோம் அடுத்த வாரத்துல யாராவது ஒருத்தவங்க வந்து இங்கேயே உங்க பொண்ண பிக்கப் பண்ணிப்போம்” என்று விக்ரம் கூற, “இந்தாங்க பா வாங்கி வெச்சிருக்குற பொருட்களை கொண்டு போங்க” என்று பிரகாஷ் கூறவும் அதனை எடுத்துக் கொண்டு இருவரும் புறப்பட்டனர்.

“என்னடா இது என்னால எதிர்த்து கூட பேச முடியல என் பொண்ணுக்காக…. என்ன நடந்துச்சுன்னு தெரிஞ்சாலாச்சும் பேசலாம்… அவ கிட்டயும் கேட்க முடியல…. உண்மைலேயே சனா தான் குடிச்சிட்டு அந்த பொண்ண கூட்டிட்டு போய் ஆக்ஸிடென்ட் ஆச்சா…. ஒன்னுமே புரியல… இதுல அவளுக்கே ஞாபகம் கூட இல்ல…. எப்படி இத நான் கடந்து வர போறேன்னு தெரியல…. அவங்க பொண்ணையும் இழந்து இருக்காங்க… இதுக்கு காரணம் நம்ம பொண்ணு தான்னு வேற எல்லா சிச்சுவேஷனும் இருக்கு…. எல்லாதுக்கும் மேல சனா உயிரோட இருக்க காரணமும் அவங்க தான்… அதனால தான் நானும் எதுவும் பேசாம அவங்க கேட்டதுக்கு ஒத்துக்கிட்டேன்” என்று சந்திரசேகர் புலம்பினார்.

“நீ ஒன்னும் கவலைப்படாதே இன்னும் கொஞ்ச நாள்ல எப்படியும் கௌதம் கூட வந்திருவான்…. வந்ததும் அவனையும் நான் அங்க அனுப்புறேன் அவளுக்கு துணையா இருப்பான்” என்று பிரகாஷ் கூற, ம்ம்…. சரி என்று அமைதியாக சந்திரசேகர்.



“என்ன மச்சான் எப்படி நின்னுட்டு இருக்க??” என்று சரவணன் விக்ரமை பார்த்து கேட்க, “உனக்கு அது யாருன்னு தெரியலையா??” என்று விக்ரம் மெல்லிய குரலில் கேட்க, இல்லை!!!! என்பது போல் தலையை அசைத்தான் சரவணன்.

“இவ தான் நான் தேடிட்டு இருந்த பொண்ணு டா” விக்ரம் கூற, சரவணனும் அதிர்ச்சியில், “அதான் அவள எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கா” என்று மனதில் நினைத்துக் கொண்டான்.

கருத்துக்கள் எதுவாயினும் வரவேற்கப்படும்
நன்றிகள் பல
 

Author: Bhavani Varun
Article Title: Chapter 6
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.