Chapter 35

Bhavani Varun

Member
Jan 23, 2025
45
0
6
“சரி நீ முதல்ல போயிட்டு கை கால் மூஞ்செல்லாம் கழுவிட்டு வா நம்ம சாப்பிட்டுட்டு அதுக்கப்புறம் பேசலாம்” என்று வள்ளி கூற, சரி என்று சனந்தா அவளுடைய அறைக்கு சென்றாள்.

“நான் கூட ரொம்ப சின்ன பொண்ணா இருக்காலே சும்மா வாலன்டியரா வந்திருக்கோம்னு இருந்துட்டு போயினுவான்னு நினைச்சேன் வள்ளி…. ஆனா, ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து செய்யும் போது எனக்கு உண்மையிலேயே ஆச்சரியமா இருக்கு” என்று ஸ்ரீனிவாசன் சனந்தாவை பற்றி கூற,

“ஆமாங்க எனக்கும் அப்படித் தான் இருக்கு…. ஒன்னு ஒன்னும் பார்த்து பண்றா…. அவங்க நினைச்சா அவங்களுடைய பண பலத்தை காட்டலாம்… ஆனா, அதெல்லாம் இல்ல இங்க பாருங்க அவங்க அம்மா எனக்கும் உங்களுக்கும் துணிமணி எடுத்து கொடுத்து இருக்காங்க….. நம்ம என்ன போடுவோமோ நமக்கு எது பிடிக்கும்னு பார்த்து பார்த்து வாங்கி அனுப்பி இருக்காங்க… அவங்க நினைச்சா ரெண்டு பட்டு புடவை என்ன பத்து பட்டு புடவை கூட வாங்கி கொடுத்து இருக்கலாம்.. ஆனா, அப்படி இல்ல அவங்க… அது போக ஒரு சாமி ஃபோட்டோவும் அனுப்பி இருக்காங்க” என்று வள்ளி கூறினார்.

“அம்மா எனக்கு விக்ரமுக்கு அபிக்கு மூணு பேருக்கும் ஒரே மாதிரி டி-ஷர்ட் வாங்கிட்டு வந்து இருக்கா” என்று சரவணன் காட்ட, “அப்படியா….. நல்லா இருக்கு பா” என்றார் வள்ளி. இவை அனைத்தும் விக்ரம் கவனித்துக் கொண்டிருந்தான், “இவளுக்கு ஒரு விஷயம் எடுத்தா அதுல எல்லாமே சரியா பண்ணனும்னு யோசிப்பா போல அதே மாதிரி ஒருத்தர புடிச்சுட்டாலும் அவங்களுக்காக எல்லாம் பண்ணனும்னு யோசிக்கிறா…. எல்லாரையும் நல்ல கவனிக்குறா” என்று சனந்தாவை பற்றி நினைத்துக் கொண்டான் விக்ரம்.

சனா ஃபிரஷ் அப் ஆகி வந்தவுடன் அனைவரும் ஒன்றாக சேர்ந்து உணவு அருந்தினர். “சனா, அப்பா அம்மா பத்தி பெருசா எங்களுக்கு தெரியாதே” என்று தயக்கத்துடன் ஸ்ரீனிவாசன் கேட்க, “அப்பா ஹோட்டலியர் அங்கிள்… சான் குரூப் ஆஃப் ஹோட்டல்ஸ் எங்களோடது தான்… அம்மா ஹோம் மேக்கர்… ஆனா, அப்பாவோட பேக் போன் அம்மா தான்னு சொல்லுவேன் நான்…. அம்மா இல்லனா அப்பா இவ்வளவு தூரம் வளர்ந்து இருக்கவே முடியாது” என்று சனந்தா கூறினாள்.

“ஓ அப்படியா!!! உங்க தாத்தா பாட்டி அவங்க எல்லாரும்??” என்று வள்ளி கேட்க, “அவங்க எல்லாரும் இப்போ யாரும் இல்லன்னு தான் நினைக்கிறேன் ஆன்ட்டி… எனக்கு அதை பத்தி சரியா தெரியல… ஏன்னா அப்பா அம்மா ரெண்டு பேரும் வீட்டை எதிர்த்து தான் கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க…. ரெண்டு பேரோடது லவ் மேரேஜ்…. அப்பாவோட ஃப்ரெண்ட்ஸ் தான் அவங்க வீட்டை விட்டு வெளியில வந்த காலகட்டத்தில எல்லாம் ஹெல்ப் பண்ணாங்க”.

“அதுல ரொம்ப முக்கியமான ஒருத்தர் பிரகாஷ் அங்கிள்…. அதே மாதிரி அப்போ ரெண்டு பேர் கிட்ட இருந்த ஒரே பலம் சாப்பாடு மட்டும் தான் ஆன்ட்டி…. சோ, அப்படி வீட்டிலேயே சின்னதா இட்லி கடை போட்டு அப்படி தான் கொஞ்சம் கொஞ்சமா வளர்ந்தாங்க…. அம்மா, அப்பா எப்பயாவது இந்த கதை எல்லாம் சொல்லுவாங்க…. எனக்கு தெரிஞ்சு நான் ஸ்கூல்ல படிக்கும் போது கூட எங்களுடையது எல்லாமே ரொம்ப சின்ன வீடு தான்…. அதுக்கப்புறம் தான் நாங்க கொஞ்சம் கொஞ்சமா வளர்ந்தது” என்று சனந்தா கூறினாள்.

“நீ என்கிட்ட முதல் நாள் உன்னை கூட்டிட்டு வரும் போது வீட்டுக்கு காசு கொடுக்கணும்னு கட்டாயம் இல்ல அதனால நான் சர்வீஸ் இதெல்லாம் பண்றேன்னு சொல்லும் போது, நான் நினைச்சேன் நீங்க வெல் டு டூ அப்படின்னு” என்று சரவணன் கூற, “முன்ன இருந்ததை விட இப்போ நல்லா இருக்கோம் அப்படி பார்த்தா நாங்க வெல் டு டூ தானே” என்று சனந்தா புன்னகையுடன் கூறினாள்.

“அப்படி சொல்றியா….. இந்த பரம்பரை பணக்காரங்க அப்படி எல்லாம் நினைச்சிட்டேன் உன்னை நான்” என்று சரவணன் கூற, “இல்ல இல்ல இப்போ எங்க கிட்ட இருக்கிற எல்லாமே அப்பா அம்மா சேர்ந்து உழைச்சது மட்டும் தான்…. இப்ப வரைக்கும் அப்பா டெய்லி ஹோட்டலுக்கு போய் பார்த்துட்டு வருவாரு…. ஊட்டிக்கு எப்படியும் மாசத்துக்கு ஒரு வாட்டி இல்ல வேலை இருக்கு மீட்டிங் இருக்கு அப்படின்னா அப்பவும் வருவாரு” என்று சனந்தா கூறினாள்.

“நீ நடந்துக்குறத பார்த்தாலும் சரி, உன்ன பார்த்தாலும் சரி எங்களுக்கு நீ வசதியான இடத்துல இருந்து வந்த பொண்ணுன்னு எல்லாம் தோணவே இல்ல…. இப்ப கூட நீ அம்மா கொடுத்தாங்கன்னு சொல்லி கொண்டு வந்த புடவை, இவருக்கு ஷர்ட் இதெல்லாம் பார்க்கும் போது…. நாங்க என்ன போடுவோம் எங்களுக்கு என்ன புடிச்சிருக்குன்னு அப்படினு பார்த்து தான் வாங்கி கொடுத்து அனுப்பி இருக்காங்க… அதே மாதிரி நீ இங்க இருக்கிற மக்களுக்காகவும் இதை ரெடி பண்ணலாம்னு அதுக்காக எல்லாம் ஏதோ வாங்கிட்டு வந்து இருக்க, இதெல்லாம் பார்க்கும் போது சும்மா வீட்ட பத்தி தெரிஞ்சுக்கலாம்னு தான் கேட்டோம் தப்பா எடுத்துக்காத சனா” என்று வள்ளி கூறினார்.

“அதெல்லாம் ஒன்னும் பரவால்ல ஆன்ட்டி… நான் ஃபோட்டோஸ் காட்டினேன் அம்மாக்கு அதனால அவங்க பார்த்து இப்படித் தான் உங்களுக்கு புடவை பிடிக்கும்னு கொஞ்சம் காட்டன் இருக்குற மாதிரி எடுத்துக் கொடுத்தாங்கனு நினைக்குறேன்… அங்கிள் பெரும்பாலும் வொயிட் ஷர்ட்ஸ் தான் போடுறாரு அதனால அதுவும் பார்த்து எடுத்துக் கொடுத்தாங்க போல அன்ட்டி”.

“இங்க மட்டும் இல்ல எங்கயுமே சரி பண பலத்தை காட்டவே கூடாதுன்னு சொல்லி சொல்லி வளர்த்தாங்க என்னையும் என் தம்பியையும்…. ஆட்கள் பலத்த எங்க வேணாலும் தைரியமா நின்னு காட்டலாம்… ஆனா, பண பலத்தை காட்டவே கூடாது… எப்ப எது அடிச்சிட்டு போகும்னு தெரியாதுன்னே சொல்லி வளர்த்தாங்க”.

“அதனால தான் நான் சர்விஸ் பண்றேன்னு சொல்லும் போதும் ஒத்துக்கிட்டாங்க…. அடுத்து நான் பி.ஹெச்.டி முடிச்சிட்டு வேலைக்கு போவேன் தான் அப்பயும் அவங்க எதும் சொல்ல மாட்டாங்க…. நம்ம வீட்டுல இவ்ளோ இருக்கே நீ ஏன் வேலைக்கு போறன்னு வீட்ல கண்டிப்பா கேட்க மாட்டாங்க…. வேலைக்கு போன்னு தான் சொல்லுவாங்க… அவ்வளவு ஏன் இப்ப இங்க வாங்கிட்டு வந்த ஸ்டடி மெட்டீரியல்ஸ் எல்லாமே இங்க வேலை பார்க்குறதுக்காக வந்த ஸ்டைபெண்டுல தான் வாங்கிட்டு வந்தேன்” என்று சனந்தா கூற, சனந்தாவின் மீதும் அவளது பெற்றோர் மீது அனைவருக்கும் மதிப்பும் மரியாதையும் கூடியது.

அனைவரும் உணவு அருந்தி முடித்த பின் சனந்தா ஸ்ரீனிவாசனிடம் ஒரு பாக்கெட் ரேடியோவை கொடுக்க ஸ்ரீனிவாசன் அர்த்தமாக புன்னகைத்து, “நினைச்சேன் நீ இந்த மாதிரி தான் வாங்கிட்டு வருவன்னு” என்று கூறவும், “ஆமா அங்கிள் உங்களுக்கு என்ன வாங்குறதுன்னு எனக்கு தெரியல… சரி அப்ப அந்த ஹெட் ஃபோன்ஸ் பிஞ்சு இருந்ததுன்னு சொல்லி அதை வாங்கினேன் ஆனா, இப்போ பாக்கெட் ரேடியோல நிறைய அப்டேடட் வெர்ஷன் நிறைய வந்துருச்சு அதனால தான் உங்களுக்கு இதை வாங்கிட்டு வந்தேன்…. இதை யூஸ் பண்ணுங்க நல்ல சத்தமும் கேட்கும் உங்களுக்கே கேக்கணும்னாலும் நீங்க வயர் ஹெட் ஃபோன்ஸும் இதுல இருக்கு யூஸ் பண்ணிக்கலாம்” என்று கூறவும், “ரொம்ப நன்றி சனா” என்று மனதார கூறினார் ஸ்ரீனிவாசன்.

“ஆன்ட்டி இங்க வாங்க” என்று வள்ளியை சமையலறைக்குள் அழைத்துச் சென்று, சிறு சிறு பொருட்களை எடுத்து, “ஆன்ட்டி இதுல வந்து குட்டி குட்டியா கட் பண்ணலாம்…. இத இப்படி யூஸ் பண்ணனும்… அப்புறம் இந்த கரண்ட் கூட நமக்கு அப்பப்போ இருக்கும் இருக்காதுல அதனால பேட்டரி பிளண்டர் இது…. பேட்டரி டைப் இது… நம்ம சார்ஜ் போட்டு விட்டா போதும் எப்ப வேணா யூஸ் பண்ணிக்கலாம்…. அப்புறம் இது கிளீன் பண்றதுக்காகவே கிளாத் டிஷ்யூஸ்… இதுல இந்த எண்ணெய் கரை இது எல்லாம் கூட உங்களுக்கு பிசுபிசுப்பு இல்லாம கிளீன் ஆகிடும்….. இது சிங்க் க்ளீன் பண்றதுக்கு இந்த பவுடர்… இத யூஸ் பண்ணீங்கன்னா க்ளாக் ஆகாது” என்று வாங்கிட்டு வந்த அனைத்தையும் எப்படி உபயோகிக்க வேண்டும் என்பதையும் சொல்லிக் கொடுத்தாள் சனந்தா.

பின் சனந்தா, சரவணன் மற்றும் விக்ரம் மூவரும் மொட்டை மாடியில் சென்று சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தனர். “ஆஆ!!!… இங்க வந்து நிக்குறத நான் ரொம்ப மிஸ் பண்ணேன்…. எவ்வளவு நல்லா இருக்கு” என்று சனந்தா ரசித்துக் கொண்டே கூறினாள்.

“ஆமா எங்களுக்கெல்லாம் வாங்கிட்டு வர அதே மாதிரி உன்னோட ஃபிரெண்ட்ஸ் அவங்களுக்கெல்லாம் இங்க இருந்து ஏதாவது வாங்கிட்டு போய் இருக்கலாம்ல நீ” என்று சரவணன் கேட்க,

“நீங்க கொடுத்து அனுப்பினதே நிறைய இருந்துது… அவ்வளவும் அம்மா அப்பா மட்டுமே எப்படி யூஸ் பண்ணுவாங்க அதனால அதிலிருந்து கொண்டு போய் நான் எங்க டீம் ஃப்ரெண்ட்ஸ் எல்லாருக்கும் கொடுத்தேன்… அவங்க எல்லாம் யூஸ் பண்ணிட்டு அவங்களுக்கு பிடிச்சிருந்தா திருப்பி நான் போகும் போது அவங்களுக்காக கொண்டு போவேன்…. அதுவும் இல்லாம அப்பப்போ ஏதாவது அவங்களுக்கு வேணும்ன்குற பொருள நான் எங்கேயாவது போகும் போது பார்த்தேனா கண்டிப்பா அத வாங்கிட்டு தான் போவேன்… அதனால பர்டிகுலரா இப்போ எதுவும் வாங்கிட்டு போகல” என்று சனந்தா கூறினாள்.

“ஆங்… அப்புறம் இது உங்களுக்கு” என்று சனந்தா கொடுக்க, “எனக்கு தான் டி-ஷர்ட் வாங்கி கொடுத்தல அப்புறம் என்ன இது?” என்று சரவணன் கேட்க, “இதுல என்ன இருக்குன்னு எனக்கு தெரியல…. ஒருத்தங்க சொன்னாங்க, அந்த இடத்துக்கு போனேன் இந்த பாக்ஸ் கொடுத்தாங்க உங்களுக்குன்னு பேர் எழுதி இருக்கு அதனால நானும் கொண்டு வந்து கொடுத்துட்டேன்…. வேணும்னா எடுத்துக்கோங்க இல்லன்னா என்கிட்ட கொடுத்துடுங்க நான் வாங்கிட்டு வந்த இடத்துக்கு வேணாலும் அனுப்பிடுறேன்” என்று சனந்தா கேலியாக கூறவும், சரவணனுக்கு யாரிடம் இருந்து அந்த கிஃப்ட் வந்து இருக்கும் என்பது புரிய, “நீ ஒன்னும் சொல்ல வேண்டாம்” என்று சரவணன் அதை வாங்கிக் கொண்டு, “மச்சான் காலையில பார்க்கலாம் டா” என்று விக்ரமை பார்த்து கூறிவிட்டு ஓடி விட்டான்.

“இவன் அலப்பறை தாங்க முடியலையே” என்று விக்ரம் கூற, சனந்தா விக்ரம் முன் ஒரு சிறிய பெட்டியை நீட்டினாள். “என்னது இது??” என்று விக்ரம் கேட்க, “திறந்து பாருங்க… இத நீங்க யூஸ் பண்ணி நான் பார்த்ததில்லை சார்… எனக்கு இத பார்த்தும் உடனே உங்க ஞாபகம் தான் வந்தது…. உங்க மூணு பேருக்கும் டி-ஷர்ட் வாங்கிட்டு வந்துட்டேன்…. ஆனா, அதுக்கப்புறம் இதை பார்த்தேன் இதுல ஒரு சின்னதா கஸ்டமைஸ்டு பண்ணி இருக்கேன் நீங்க பார்த்துட்டு சொல்லுங்க” என்று சனந்தா கூறினாள்.

“விக்ரம் பெட்டியை பிரித்து பார்க்க அதில் ஒரு வாட்ச் இருந்தது அதைப் பார்த்து புன்னகைத்து, “ஆமா, ரொம்ப யூஸ் பண்ண மாட்டேன் எப்பயாவது வெளியில போகணும்னா மட்டும் போட்டுட்டு போடுவேனே தவிர… மீதி நேரம் பயன்படுத்த மாட்டேன் தான்…. சரி, அதெல்லாம் இருக்கட்டும், நான் உன்னை எல்லா நாளும் திட்டிட்டு இருக்கும் போதே நீ என்னை இவ்வளவு நோட் பண்ணி இருக்கியா??” என்று விக்ரம் குறும்பாக கேட்க, சனந்தா அவள் வெட்கத்தை மறைத்துக் கொண்டு, “ப்ச்… முதல்ல ஓபன் பண்ணி பார்த்துட்டு உங்களுக்கு பிடிச்சிருக்கான்னு சொல்லுங்க சார்” என்று கூறினாள்.

விக்ரம் வாட்சை எடுத்து பார்த்து, “ரொம்ப நல்லா இருக்கு… டயல் கலர் புதுசா இருக்கு நல்லா இருக்கு” என்று விக்ரம் கூற, “அவ்வளவு தானா வேற எதுவும் தெரியலையா அதுல உங்களுக்கு??” என்று சனா கேட்க, விக்ரம் சிறிது நேரம் அதை பார்த்து, “உள்ள ஃபோட்டோ இருக்கு…. ஆ.. ஒய்!! இது நான் தானே!!! என்று விக்ரம் ஆச்சிரியமாக கேட்க, “ஆமா நீங்க தான் சார்” என்றாள் சனந்தா.

“இது எப்ப எடுத்த?? என்னை கேட்காம என்னை ஃபோட்டோ எப்ப எடுத்த??” என்று விக்ரம் கேலியாக கேட்க, “அது உங்கள எடுக்கணும் எடுக்கல…. சீனரி நல்லா இருக்குன்னு எடுத்தேன் நீங்க அங்க நின்னுட்டு இருந்தீங்க அவ்வளவு தான்…. ஆனா, இந்த ஃபோட்டோ எனக்கு பிடிச்சிருந்துது அதனால தான் அந்த ஃபோட்டோவ டயல்ல வெச்சு கொடுக்க சொன்னேன்” என்று சனந்தா கூறினாள்.

“ம்ம்…. நல்லா இருக்கு” என்று விக்ரம் கூற, “அவ்வளவு தானா வேற எதுவும் தெரியலையா உங்களுக்கு??” என்று சனந்தா கேட்க, “இன்னும் என்ன இருக்கு இதுல??” என்று விக்ரம் ஆர்வத்துடன் கேட்க, “ஐயோ நீங்க எல்லாம் என்ன தான் போலீஸோ இப்படி கொடுங்க” என்று சனந்தா வாட்சை வாங்கிக் கொண்டு, “இதுல முள்ளு சுத்துதில்ல அதனுடைய எண்டு பாருங்க” என்று சனந்தா காட்ட, “மணிமுள்ளின் கடைசியில் எஸ் என்ற எழுத்தும், நிமிடங்கள் முள்ளின் கடைசியில் வி என்ற எழுத்தும் ஆங்கிலத்தில் இருந்தது, நன்றாக கவனித்து பார்த்தால் மட்டுமே புரியும்.

அதை விக்ரம் பார்த்து புன்னகைத்துக் கொண்டே சனந்தாவை அர்த்தமாக பார்க்க, சனந்தா வெட்கத்துடன் தலையை வேறு பக்கமாக திருப்பி, “லெட்டர்ஸ் மாத்தி வெச்சுட்டாங்க… ஹவர் ஹேண்ட்ல வி வெக்க சொன்னேன்… மினிட் ஹேண்ட்ல எஸ் வைக்க சொன்னேன்…. நான் தானே உங்க ஊருக்கு வந்தேன்…. நான் தானே உங்களை தேடி சுத்திட்டு இருக்கேன்… அப்படி நினைச்சு அப்படி வைக்க சொன்னேன்… ஆனா, அவங்க மாத்தி வெச்சிட்டாங்க… எனக்கும் டைம் ஆயிருச்சுன்னு சொல்லி வாங்கிட்டு வந்துட்டேன்” என்று சனந்தா வேறு பக்கம் பார்த்துக் கொண்டே கூறினாள்.

விக்ரம் சனந்தாவின் தாடையை பிடித்து அவன் புறம் திருப்பி, “இங்க பாரு இப்ப நீ வெச்சுட்டு வந்திருக்கிறது தான் சரி…. நீ ஒரே இடத்தில தான் இருக்குற…. நான் தான் உன்னை சுத்தி சுத்தி வந்துட்டு இருக்கேன்…. இது இப்போ உனக்கு புரியாது கொஞ்ச நாள் ஆகட்டும் எல்லாம் சரியாகும் அப்ப நான் ஏன் இதை சொன்னேன்னு உனக்கு புரியும் சனந்தா” என்று விக்ரம் அவளின் கண்களை பார்த்துக் கொண்டே பேசவும், விக்ரம் கூறியது சற்று குழப்பத்தை ஏற்படுத்தினாலும், அவன் அவளின் மிக அருகில் நின்று அவள் கண்களை பார்த்து பேசியதில் கரைந்து தான் போனாள் சனந்தா.

கருத்துக்கள் எதுவாயினும் வரவேற்கப்படும்
நன்றிகள் பல
 

Author: Bhavani Varun
Article Title: Chapter 35
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.