Chapter 27

Bhavani Varun

Member
Jan 23, 2025
45
0
6
“என்னம்மா??? விருந்தே ரெடி பண்ற போலயே??” என்று சந்திரசேகர் கேலியாக கூற, “அது இல்லைங்க அங்க என்ன சாப்பிட்டாலோ என்னவோ அதான் சனா வரான்னு சொன்னதும் அவ என்ன எல்லாம் சாப்பிடுவாளோ அத செஞ்சு வெச்சுட்டு இருக்கேன்” என்று லட்சுமி கூறினார்.

“சரி அதெல்லாம் இருக்கட்டும் நான் சொன்னது ஞாபகம் இருக்குல உனக்கு…. அவளுக்கு ஏதோ சந்தேகம் வந்து கௌதம் கிட்ட விசாரிச்சு இருக்கா…. உன்கிட்ட ஏதாவது போட்டு வாங்கினாலும் வாங்குவா… இப்போதைக்கு எதுவும் சொல்லாத, ஏன்னா நமக்கே என்ன நடந்துதுன்னு தெரியாது சரியா…. எதும் உளறி வெக்காத” என்று சந்திரசேகர் எச்சரிக்கையாக இருக்குமாறு கூறவும், “ம்ம்… சரிங்க ஞாபகம் இருக்கு… முடிஞ்ச அளவுக்கு சனா அந்த டாபிக் எடுத்தா நான் அத பத்தி பேசாம வேற ஏதாவது பேசி டைவர்ட் பண்ண பார்க்கிறேன்” என்று லட்சுமி கூறினார்.

சுமார் மூன்றரை மணி நேரம் பயணம் சனந்தா மற்றும் விக்ரமுக்கு வெறும் முப்பது நிமிடங்கள் போலவே இருந்தது. இதுவரை அவள் பார்க்காத விக்ரமை பார்த்தது மட்டுமில்லாமல் அவளையும் மீறி அவனை ரசித்து கொண்டே தான் இருந்தாள். விக்ரமிற்கு, அவனை மிகவும் ஈர்த்த ஒரு பெண்ணாக மட்டுமே இந்த பயணம் முழுவதும் சனந்தாவை பார்த்து, அவளுடன் பேசிக் கொண்டே அவளை ரசித்துக் கொண்டும் இருந்தான்.

மேலும் சனந்தாவுக்கும் ஏதோ ஒரு ஈர்ப்பு விக்ரம் மீது இருப்பதை உணர்ந்து அதை ரசித்துக் கொண்டு மகிழ்ச்சியாக இருந்தாள். இருவருக்கும் பயணம் நீளாதோ என்றிருந்தது.

சனந்தாவின் வீட்டை நெருங்க இருவருக்கும் சற்று பாரமாகியது மனசு. என்ன தான் கோபத்தை காட்டினாலும் விக்ரமுக்கு அவளை பிரிந்து இரண்டு நாட்கள் இருப்பதை நினைத்து சற்று வருத்தம் இருந்தது தான். சனந்தாவிற்கு காரணமின்றி விக்ரமை பிடிக்கவும் ஆரம்பித்தது, அதை உணர்ந்தாலும் அவ்வணர்வுக்கு பெரிதாக கவனம் செலுத்தாமல் இருந்தாள். ஆனால், இன்றைக்கு விக்ரம் உடனான பயணத்தில் அவன் மீது உள்ள ஈர்ப்பை உறுதி படுத்தியது அவளுக்கு.

மேலும், இரண்டு நாட்கள் சனந்தா, அவளுடைய குடும்பத்தினருடன் செலவழிக்க போவதை நினைத்து மனநிறைவுடன் சந்தோஷமாக உணர்ந்தாலும் விக்ரமை இந்த இரண்டு நாட்கள் பிரிவதே மனதில் ஏதோ ஒரு ஓரத்தில் பாரத்தை அவளும் உணரத்தான் செய்தாள்.

“நான் இங்கேயே உன்னை….” என்று விக்ரம் பேசவும், “ஐயோ!! இல்ல சார் உள்ள வாங்க… உள்ள பார்க் பண்ணுங்க அம்மா சாப்பாடு எல்லாம் ரெடி பண்ணி வெச்சிருப்பாங்க” என்று சனந்தா கூறவும், “இல்ல இல்ல… பரவால்ல வேண்டாம்” என்று விக்ரம் தயக்கத்துடன் கூறினான்.

“இல்ல நான் ஏற்கனவே சொல்லிட்டேன்… அதனால வாங்க சார்” என்று சனந்தா கூறவும், “இங்கேயே என்ன பண்ணிட்டு இருக்கீங்க…. உள்ள பார்க் பண்ணு விக்ரம்” என்று பிரகாஷ் கூறவும், வேறு வழியின்றி அமைதியாக விக்ரம் அவனது வண்டியை உள்ளே பார்க் செய்தான்.

வண்டியின் சத்தம் கேட்கவும் லக்ஷ்மி மற்றும் சந்திரசேகர் வெளியே வந்தனர். சனந்தா இறங்கி பிரகாஷிடம் சென்று, “எப்படி இருக்கீங்க அங்கிள்?? நீங்க சொன்னது உண்மை தான் அந்த ஊரு ரொம்ப அடிக்ட் ஆகுது… ரொம்ப அழகா இருக்கு அங்க” என்று பிரகாஷிடம் உற்சாகமாக கூறினாள் சனந்தா.

“நான் நல்லா இருக்கேன் மா… நான் தான் சொன்னேன்ல உனக்கு ரொம்ப புடிக்கும்னு” என்று பிரகாஷ் கூற, பின்னிருந்து லக்ஷ்மி வந்து சனா!!! என்று அழைக்க, சனந்தா சென்று அவரை அணைத்துக் கொண்டு, “எப்படி இருக்கீங்க??? உங்கள ரொம்ப மிஸ் பண்ணேன்” என்று கூறினாள் சனந்தா.

அப்பா!! என்று சந்திரசேகரை அணைத்துக் கொண்டு, எப்படி இருக்கீங்க?? என்று சனந்தா கேட்க, “நாங்க எல்லாம் நல்லா இருக்கோம் டா….. நீ எப்படி இருக்க?? உன்னோட ஹெல்த் எப்படி இருக்கு??” என்று சந்திரசேகர் கேட்க, “ரொம்ப நல்லா இருக்கேன் பா” என்று சனந்தா கூறினாள்.

விக்ரம், சனந்தாவின் லக்கேஜ் மற்றும் அவன் ஊரிலிருந்து வள்ளி அனுப்பிய திண்பண்டங்கள் எண்ணெய் என அனைத்தையும் இறக்கி பிரகாஷிடம் ஒப்படைத்து, பின் தயக்கத்துடன் சந்திரசேகரிடம் கொடுக்க, அவர் அதை வாங்கிக் கொண்டு, “ரொம்ப நன்றி தம்பி” என்று கூறினார்.

சனந்தா விக்ரமை அறிமுகம் செய்து வைக்க இன்முகத்துடன் வரவேற்றனர் சனந்தாவின் பெற்றோர். “பார்க்கிங்லயே நின்னுட்டு இருக்கோம்… வாங்க வீட்டுக்குள்ள போலாம் வாங்க…. தம்பி நீங்களும் உள்ள வாங்க… நேரம் ஆச்சு சாப்பிட்டு பேசலாம் வாங்க” என்று லக்ஷ்மி அழைக்கவும், மறுக்க மனமின்றி விக்ரம் அமைதியாக இருந்தான்.

“லக்கேஜ் ஏதாவது கொண்டு போகணுமா டா??” என்று சந்திரசேகர் கேட்க, “நான் பெருசா எதுவும் கொண்டு வரலப்பா ஒரு பேக் மட்டும் தான்… இதெல்லாம் அங்க ஆன்ட்டி அங்கிள் அவங்க கொடுத்து விட்டாங்க” என்று சனா கூறவும், அவளுடைய பையை வாங்கிக் கொண்டார் சந்திரசேகர்.

“ஆமா, நீ என்னடா சொல்லாம கொள்ளாம வந்திருக்க??” என்று பிரகாஷை பார்த்து கேட்க சந்திரசேகர் கேட்க, “விக்ரம் என்னை மீட் பண்ணனும்னு சொன்னான்… எப்படியும் சனாவ கூட்டிட்டு இங்க விட்டு அதுக்கப்புறம் தான் அவன் வரணும்…. அதான் நானே வந்தேன்னா, நான் சனாவையும் பார்த்த மாதிரி இருக்கும்… விக்ரமோட மீட்டிங்கும் முடிஞ்சுரும்ல அதுக்காக தான் டா வந்தேன்…. அதுவும் இல்லாம சனா வேற வரான்னா விருந்து இருக்கும்ல எல்லாத்துக்கும் சேர்த்து தான் வந்து இருக்கேன்” என்று புன்னகையுடன் கூறி சந்திரசேகரைடன் நடந்து சென்றார் பிரகாஷ்.

சனந்தா, பிரகாஷுடன் பேச தான் விக்ரம் வந்திருக்கிறான், தனக்காக இல்லை என்று அறிந்தவுடன் ஏனோ அவளது முகம் மாறியது. இவ்வளவு நேரம் இருந்த சந்தோஷம் முகத்தில் காணாமல் போனது. விக்ரம், பிரகாஷ் கூறிய பின் சனந்தாவின் முகம் மாற்றத்தை கண்டதும் எப்படி அவளுக்கு எடுத்துக் கூறுவது என்று புரியாமல் தவித்துக் கொண்டிருந்தான்.

இவ்வளவு நேரம் சந்தோஷமாக அவளுடைய பெற்றோரிடம் பேசிக் கொண்டிருந்த அந்த சிரிப்பு சட்டென்று காணாமல் போனது. “நான் அவளுக்காக தான் வந்தேன்னு நான் எப்படி அவளுக்கு சொல்லுவேன்… எப்படி புரிய வைப்பேன்” என்று விக்ரம் குழப்பத்தில் இருக்க, பிரகாஷ் திரும்பி பார்த்து, “என்ன இன்னும் அங்கேயே நின்னுட்டு இருக்கீங்க உள்ள வாங்க” என்று அழைக்க, இருவரும் அமைதியாக உள்ளே சென்றனர்.

நாகரிகம் கருதி சனந்தா அமைதியாக அனைவருடன் சேர்ந்து உணவருந்த வேண்டுமே என்பதற்காக சாப்பிட்டு முடித்தாள். “ஏன் சனா எதுவுமே சாப்பிடல ஒழுங்கா…. வேற ஏதாவது செய்யவா உனக்கு??” என்று அக்கறையாக லக்ஷ்மி கேட்க, “இல்லமா வண்டியில வந்த களைப்பு தான் வேற ஒன்னும் இல்ல நான் போய் ரெஸ்ட் எடுத்துக்கிறேன்” என்று கூறி, “அங்கிள் தப்பா எடுத்துக்காதீங்க கொஞ்சம் டயர்டா இருக்கு… அதான் நான் ரூமுக்கு போய் ரெஸ்ட் எடுத்துக்கிறேன்” என்று பிரகாஷ் பார்த்து கூற, “ஒன்னும் பரவால்ல சனா.. நீ போய் ரெஸ்ட் எடுத்துக்கோ நாளைக்கு உனக்கு செக்கப் இருக்குல்ல” என்ற பிரகாஷ் கேட்க, “ஆமா அங்கிள்” என்று கூறினாள் சனந்தா.

சனந்தா விக்ரமை பார்த்து, “கொஞ்சம் டயர்டா இருக்கு சார் நான் ரூமுக்கு போறேன் ரொம்ப தேங்க்ஸ் என்னை கூட்டிட்டு வந்து விட்டதுக்கு” என்று கூறி அவளுடைய அறைக்கு சென்றாள்.

அவளது முகம் மாற்றமும், உணவும் சரியாக சாப்பிடாமல் எழுந்து போனது இதை அனைத்திற்கும் தான் தான் காரணம் என்று அவனை கடிந்து கொண்டான் விக்ரம். சனந்தா அறைக்கு சென்று, “என்னை கூட்டிட்டு வந்து விட்டதே பெருசு… எனக்காக மட்டுமே வந்தாருன்னு நான் ஏன் எதிர்பார்க்கிறேன்…. ப்ச்… இதெல்லாம் எங்க போய் முடிய போகுதோ தெரியல… அவருக்கும் எனக்கும் செட்டே ஆகாது…. சனா, இந்த ஃபீலிங்ஸ எல்லாம் நீ இன்னும் வளர்த்துக்காத… சொன்னா கேளு… வேண்டாம்…. அவருக்கு உன்னை பிடிக்கல… என்ன தான் அவரு சிரிச்சு பேசினாலும் இங்க வந்ததுக்கான காரணம் நீ கிடையாது” என்று அவளுக்கு அவளே அறிவுரை கூறிக் கொண்டு சிறிது நேரத்தில் உறங்கியும் போனாள்.

சனந்தாவின் வீடு ஒரு சிறிய மாளிகை போல் இருந்தது. “இப்படிப்பட்ட வீட்டிலிருந்து வந்த பொண்ணு மாதிரியே இல்லையே அவ… சகஜமா பழகுறா… ரொம்ப அலட்டிகாம இருக்கா… அவள தான், நான் கஷ்ட படுத்துறேனா??” என்று விக்ரமுக்கு சற்று குற்ற உணர்ச்சியும் இருந்தது.

என்ன தான் பலமுறை சந்திரசேகரிடம் அவனுடைய கோபத்தை காட்டினாலும் அவர் விக்ரமை நடத்திய விதத்தில் அவனுடைய கோபமும் தோற்று தான் போனது. அனைவருக்கும் உண்மையாக நடந்தது என்னவென்று தெரியாது இருப்பினும் தன்னுடைய கோபத்தை அவர் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்பதை நினைத்து விக்ரமிற்கு சந்திரசேகரின் பெருந்தன்மையை நினைத்து குற்ற உணர்ச்சி ஜாஸ்தியானது.

“சரிப்பா நம்ம வெளிய கார்டன்ல நடந்துட்டே பேசலாம்” என்று பிரகாஷ் அழைக்க, விக்ரமும் அவருடன் சென்றான். நீயும் வாடா என்று சந்திரசேகரை அழைக்க, சந்திரசேகர் விக்ரமை ஒரு நொடி பார்த்து, “ம்ம்… நீங்களும் வாங்க சார் எல்லாமே தெரிஞ்சுக்க வேண்டிய விஷயம் தானே நம்ம பேச போறது… வாங்க” என்று விக்ரம் அழைக்க, சரி என்று அவர்களுடன் சேர்ந்து சென்றார் சந்திரசேகர்.

விக்ரம்… என்று பிரகாஷ் ஆரம்பிக்கவும், “சார் அதுக்கு முன்னாடி ஒரு விஷயம்” என்று விக்ரம் சந்திரசேகரை பார்த்து, “ரொம்ப ரொம்ப சாரி சார் என்னை மன்னிச்சிடுங்க… என் தங்கச்சியோட இழப்புக்கு காரணம் உங்க பொண்ணு தான்னு உறுதியா நினைச்சு நான் ரொம்ப கோவப்பட்டு பேசிட்டேன்.. என்னை மன்னிச்சுருங்க” என்று விக்ரம் மனதார கேட்டான்.

சந்திரசேகர் விக்ரமை பார்த்து, “உன் நிலைமை எனக்கு புரியாம இல்ல பா… எங்க பக்கமும் தப்பு இருக்குமோ… அப்படி தப்பு உண்மையிலேயே எங்க பக்கம் இருந்துட்டா, அது ஈடு கட்டவே முடியாத இழப்பு தான் உங்களுடையது…. அதனால என்னால எதுவும் பேச முடியாம நீங்க சொன்னதுக்கு எல்லாமே நாங்க ஒத்துக்கிட்டோம்… எல்லாத்துக்கும் மேல நீங்க செஞ்ச உதவி எதுக்குமே ஈடு இணையாகாது” என்று சந்திரசேகர் கூறினார்.

“உண்மையிலேயே உங்க பொண்ணு அங்க சந்தோஷமா தான் சார் இருக்காங்க… அவங்களுக்கு ரொம்ப புடிச்சிருக்கு அங்க இருக்க…. நாங்க முடிஞ்ச அளவுக்கு எல்லா வசதிகள நாங்க செஞ்சு கொடுக்க பார்க்குறோம்” என்று விக்ரம் கூற, “ம்ம்… ஒரு வாட்டி என்கிட்ட பேசும் போது சொன்னா நீங்க எல்லாரும் நல்லா பார்த்துக்குறீங்கனு… எங்களுக்கு ரொம்ப சந்தோஷம் அதுல…. நான் உங்களுக்கு ரொம்ப நன்றி தான் சொல்லணும்…. சனா, நிறைய ஆட்களோட பழகுற பொண்ணு கிடையாது…. அங்க அதுக்காகவே ஒரு வாய்ப்பு அமைஞ்சுருக்கு, அதுவே எங்களுக்கு ரொம்ப சந்தோஷம் கூட” என்று சந்திரசேகர் கூறினார்.

“ம்ம்… அப்புறம், நாங்க அங்க சிசிடிவி ஃபுட்டேஜ் பார்த்து தான் உங்க பொண்ணு தான் தப்பு பண்ணிட்டாங்கனு முடிவு பண்ணிட்டோம் சார், அதுக்கு பின்னால என்ன நடந்திருக்கும்னு எங்களுக்கு தெரியல… அதான் விசாரிக்க சொல்லி இருக்கேன்” என்று விக்ரம் கூறவும், “நானும் அது தான் கேட்டு இருக்கேன்… ஆனா, பெருசா இன்ஃபர்மேஷன் வரமாட்டேங்குது” என்று பிரகாஷ் முறையிட்டார்.

“எனக்கும் அப்படித் தான் சார் இருக்கு…. நான் வந்து சொல்லும் போது வேற யாரோ விசாரிச்சு இருக்காங்கன்னு சொன்னாங்க… அது நீங்க தான்னு அப்புறமா எனக்கு தெரிஞ்சுது” என்று விக்ரம் கூறினான்.

“ஆமா பா நான் தான் விசாரிக்க சொல்லி இருந்தேன்… அப்புறம் விக்ரம் ஒரு முக்கியமான விஷயம் பேசணும்…. கார்ல போகும் போது வந்து இடிச்சது லோக்கல்ல இருக்குற லாரி கிடையாது பா… ஏதோ பிளான் மாதிரி எனக்கு தோணுது… ஏன்னா எந்த விவரமும் வாங்க முடியல அதுவும் சந்தேகமா இருக்கு…. அதனால அந்த டீடைல்ஸ் நான் உனக்கு அனுப்புறேன் அது என்ன லாரி ஏதுன்னு நீயும் உன் சைடுல இருந்து விசாரி…. அது என்னன்னு தெரிஞ்சா நமக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும்னு நினைக்கிறேன்” என்று பிரகாஷ் கூறவும், “கண்டிப்பா செய்றேன் சார் நீங்க அனுப்புங்க” என்று விக்ரம் கூறினான்.

கருத்துக்கள் எதுவாயினும் வரவேற்கப்படும்
நன்றிகள் பல.
 

Author: Bhavani Varun
Article Title: Chapter 27
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.