CHAPTER-26

Oviya Blessy

Member
Jan 4, 2025
92
1
8
"இன்னும் 20 மினிட்ஸ்ல‌ என் வீட்டுல‌ இருக்க‌ணும்." என்றான் அழுத்த‌மாக‌. அதில் அக‌ல‌ விழி விரித்து, "பாஸ்!" என்றான் யோகி அதிர்வாக‌.

"புரிஞ்சிருக்கும்." என்ற‌ப‌டி பார்வையை திருப்பிக்கொண்டான் ருத‌ன்.

அதில் யோகி வேக‌மாய் திரும்பி பின்னால் ம‌ய‌ங்கி கிட‌ப்ப‌வ‌ளை பார்த்துவிட்டு இவ‌னை பார்த்து, "அப்போ இந்த‌ பொண்ணு?" என்று அதிர்வாய் கேட்க‌, "அவ‌ளும்தா." என்றான் ருத‌ன்.

அதில் ப‌ட்டென்று இவ‌ன் நெஞ்சை பிடித்திருக்க‌, ச‌ட்டென்று கார் த‌ட‌ம் புர‌ண்ட‌தில் திடுக்கிட்டு மீண்டும் ஸ்டிய‌ரிங்கை பிடித்து திருப்பியிருந்தான் யோகி.

ஒரு நொடி அவ‌னுக்கு மூச்சே நின்று திரும்பி வ‌ர‌, இங்கே அத‌ற்கெல்லாம் சிறிதும் அசாராம‌ல் மீண்டும் த‌ன் மோதிர‌த்தை சுழ‌ற்ற‌ ஆர‌ம்பித்த‌வ‌னின் க‌ண்ணில் இப்போது இர‌ச‌னை தெரிய‌, பார்வை த‌ன் முன்னிருந்த‌ அவ‌ள் பிம்ப‌த்தில் ப‌திந்திருந்த‌து.

இனி இது எனக்குதான் சொந்தம் என்ற பார்வை அது. அதை பார்த்து அதிர்வாய் விழி விரித்த யோகி, ச‌ட்டென்று முக‌த்தை உலுக்கிவிட்டு மீண்டும் பார்க்க, ருத‌னோ அவ‌ள் பிம்ப‌த்தைய‌ல்ல‌ சாலையைதான் பார்த்த‌ப‌டி மோதிர‌த்தை சுழ‌ற்றி எதையோ யோசித்துக்கொண்டிருந்தான்.

அதில் குழ‌ம்பி மீண்டும் சாலையில் பார்வையை ப‌தித்த‌வ‌ன், "ச்செ ச்செ என‌க்கு ஏ இப்பிடியெல்லா தோனுதுன்னு தெரிய‌லையே" என்று பீதியில் புலம்பிய‌ப‌டியே காரை வேக‌மாய் ஓட்டினான்.

ஆனால் ருத‌னோ யோகி க‌ற்ப‌னை செய்த‌துப்போல் ஒரு முறைக்கூட‌ அவ‌ள் பிம்ப‌த்தை பார்த்திருக்க‌வில்லை. சாலையையே பார்த்த‌ப‌டி தீவிர‌மாய் எதையோ யோசித்துக்கொண்டிருந்தான்.

அடுத்த‌ சில‌ நிமிட‌ங்க‌ளில் அவ‌ர்க‌ளின் கார் ஒரு பெரிய‌ க‌ருப்பு கேட்டிற்குள் நுழைந்த‌து.

ச‌ரியாக‌ 20 நிமிட‌த்திற்குள் வீட்டு வாச‌லில் வ‌ந்து நிறுத்தியிருந்தான் யோகி. அடுத்த‌ நொடியே க‌த‌வை திற‌ந்து ருத‌ன் இற‌ங்கியிருக்க‌, பின்னாலே அவ‌ச‌ர‌மாய் யோகியும் இற‌ங்கி, "பாஸ்!" என்றான்.

அதில் க‌தவை மூடிவிட்டு அவ‌னை பார்த்த‌வ‌ன், "என்ன‌?" என்று புருவ‌த்தை நெளிக்க‌, "இந்த‌ பொண்ண‌ இங்க‌.." என்று அவ‌ன் த‌ய‌ங்க‌, "கொண்டு போய் வீட்டுல‌ விட்டுட்டு, அப்ப‌டியே கார‌ ச‌ர்விஸ்க்கு விட்டிரு." என்ற‌ப‌டி ந‌க‌ர்ந்தான் ருத்ன்.

அதில் அவ‌ன் ஒரு நொடி அதிர்ந்து அப்ப‌டியே நிற்க‌, "என்ன‌?" என்று அதிர்வாய் கேட்டாள் அமீரா.

"அதே ஷாக்தா என‌க்கும். கொஞ்ச‌ முன்னாடி ட்ராப் ப‌ண்ண‌லாமா கேட்ட‌துக்கு, அது என் வேல‌ இல்ல‌ன்னு சொன்னாருதான‌?" என்று யோகி கேட்க‌, அவ‌ளும் அதே விய‌ப்பாய் ஆம் என்று த‌லைய‌சைத்தாள்.

"அது என் வேல‌ இல்ல‌, உன் வேல‌ன்னு இன்டேரெக்டா சொல்லிருக்காருன்னு அப்ப‌தா புரிஞ்ச‌து." என்றான் யோகி.

அதில் அப்ப‌டியே அவ‌ள் முக‌ம் வாடிவிட‌, அவ‌ள் முக‌த்தில் ஏமாற்ற‌த்தின் சாய‌ல். "அப்ற‌ம்?" என்றாள் வாட‌லாக‌.

"அப்ற‌ம் நாந்தா உங்க‌ள‌ கூட்டிட்டு போய் வீட்டுல‌ விட்டேன்." என்றான் யோகி.

அதில் மொத்த‌மாய் வாடிவிட்ட‌வ‌ளின் ம‌ன‌ம், ஏனோ அன்றே அவ‌ன் த‌ன்னை க‌ட‌த்தி சென்றிருக்க‌ மாட்டானா என்றுதான் ஏங்கிய‌து. நிச்ச‌ய‌ம் அந்த‌ அமீராவும் அதையேதான் விரும்பியிருப்பாளோ என்ன‌வோ.

"அதுக்க‌ப்ற‌ம் உங்க‌ வீட்டுல‌ என்ன‌ ந‌ட‌ந்த‌துன்னு உங்க‌ளுக்குதா தெரியும்." என்ற‌ப‌டி மேசையை விட்டு இற‌ங்கினான் யோகி. அதில் அவ‌ள் நிமிர்ந்து அவ‌னை பார்க்க‌, அவ‌னோ அருகில் வ‌ந்து, "ப்ளேட்ஸ‌ குடுங்க‌ மேட‌ம்" என்று வாங்கினான்.

அப்போதே அவ‌ளும் குனிந்து பார்க்க‌, உண‌வை முழுதாய் காலி செய்திருந்தாள். அந்த காலி த‌ட்டை வாங்கிக்கொண்டவ‌ன், "நா வெச்சுட்டு வ‌ரேன். நீங்க‌ வாஷ் ரூம்ல‌ கை க‌ழுவிக்கோங்க‌ மேட‌ம்." என்றப‌டி ந‌க‌ர்ந்தான் யோகி.

அதில் வாட‌லாய் த‌ன் எச்சில் க‌ர‌த்தை பார்த்த‌வ‌ள், அதை யோச‌னையாய் மெல்ல‌ கீழிற‌க்க‌, அப்போதே அவ‌ள் விழியில் விழுந்த‌து அந்த‌ திரும‌ண‌ புகைப்ப‌ட‌ம்.

அது கீழிருந்த‌ அந்த‌ பெட்டியின் மீது வைக்க‌ப்ப‌ட்டிருக்க‌, அதிலிருந்த‌ த‌ங்க‌ள் இருவ‌ரின் முக‌த்திலுமே புன்ன‌கை இல்லை. அதைதான் ஏற்க‌ன‌வே பார்த்தாளே. இப்போதே மீண்டும் நினைவிற்கு வ‌ர‌, அப்ப‌டியென்றால் அவ‌னும் த‌ன்னை பிடிக்காம‌ல்தான் திரும‌ண‌ம் செய்திருக்கிறான். அதை ம‌ற‌ந்து முத‌ல் ச‌ந்திப்பிலேயே வீணாக‌ எதிர்பார்த்தது என் த‌ப்புதான் என்று நொந்துக்கொண்டாள்.

இங்கே வெளியே வ‌ந்த‌ யோகியோ அவ‌ச‌ர‌மாய் த‌ன் மொபைலை எடுத்து அட்ட‌ன் செய்து, "ஹ‌லோ என்ன‌ ஆச்சு?" என்று ப‌த‌றி கேட்க‌, "எவ்ள‌வோ சொல்லியும் கேக்காம‌ கெள‌ம்பிட்டாரு சார்." என்றான் வினோ.

அதில் நொந்துக்கொண்ட‌வ‌ன், "எதிர்பாத்த‌துதா." என்றான் யோகி.

"இப்ப‌ என்ன‌ சார் ப‌ண்ற‌து?" என்று அவ‌ன் ப‌த‌றி கேட்க‌, "ஒன்னும் ப‌ண்ண‌ முடியாது. அவ‌ர‌ க‌ன்ட்ரோல் ப‌ண்ற‌து ந‌ட‌க்காத‌ காரிய‌ம்." என்றான் யோகி.

அதே நேர‌ம் இங்கே வாஷ் ரூமிலிருந்து வெளி வ‌ந்த‌ அமீரா, த‌ன் ஈர‌ க‌ர‌த்தை முந்தாணையால் துடைத்துவிட்டு அம‌ர்ந்து, அந்த‌ டைரியை மீண்டும் திற‌ந்தாள்.

மெதுவாய் அந்த‌ நாளுக்குள் அவ‌ள் ப‌ய‌ணிக்க‌, அன்றிர‌வு அவன் மார்பில் கிட‌ந்த‌வ‌ளின் விழிக‌ளில் க‌டைசியாய் அவ‌ன் முகம் ம‌ட்டுமே நிறைந்திருக்க‌, அப்படியே அவ‌ள் விழிக‌ள் மூடிய‌து.

"பாஸ் இது லிங்கா சாரோட பொண்ணு." என்ற யோகியின் வார்த்தை மட்டுமே க‌டைசியாய் அவள் செவியை அடைந்திருக்க‌, முழுதாய் மயக்கத்திற்கு சென்றிருந்தாள்.

அப்ப‌டியே முழுதாய் இருள் சூழ்ந்த‌ விழிக‌ள், மீண்டும் மெதுவாய் பிரிய‌ ஆர‌ம்பிக்க‌, சூரிய‌ன் சுள்ளென்று முக‌த்தில் அடித்த‌து. அதில் புரியாது விழிகளை குறுக்கி சுற்றி பார்த்த‌வ‌ள், த‌ன்னுடைய‌ வீட்டில் த‌ன்னுடைய‌ அறையில் இருந்தாள். அதில் த‌லையை பிடித்து மெதுவாய் எழுந்த‌ம‌ர‌, அப்போதே ந‌ட‌ந்த‌ அனைத்தும் அவ‌ள் கண்முன் வந்தது.

நேற்று இதே மெத்தையில் அழுதுகொண்டே ‌இருந்தவள் அப்படியே உற‌ங்கியிருக்க‌, பொழிச்சென்று அவ‌ள் முக‌த்தில் த‌ண்ணீர் ஊற்ற‌ப்ப‌ட்ட‌து.

அதில் அவ‌ள் திடுக்கிட்டு ப‌ய‌ந்து எழுந்து அம‌ர‌, அவ‌ள் முன் கோப‌மாய் நின்றிருந்தார் அவ‌ளின் த‌ந்தை. அதில் அவ‌ள் ந‌டுக்க‌மாய் த‌ன் துப்பாட்டாவால் முக‌த்தை துடைத்தப‌டியே க‌ட்டிலைவிட்டு இற‌ங்க, "உன் ஃப்ர‌ண்டு எவ‌ளோ லைன்ல‌ இருக்கா." என்று த‌ன் மொபைலை நீட்டினார் அவ‌ர்.

அதில் அவ‌ளும் த‌ய‌க்க‌மாய் அதை வாங்க போக‌, ச‌ட்டென்று ஸ்பீக்க‌ரில் போட்டு, "இப்பிடியே பேசு." என்றார் அவ‌ர்.

அதில் திடுக்கிட்டு க‌ர‌த்தை இற‌க்கிவிட்ட‌வ‌ள், த‌ய‌க்க‌மாய் நிமிர்ந்து த‌ன் த‌ந்தையை பார்த்த‌ப‌டியே, "ஹ‌..ஹ‌லோ!" என்றாள் த‌டுமாற்ற‌மாக‌.

"ஹேய் மீரா! இன்னிக்கு ஃபைன‌ல் எக்ஸாம் இருக்கு ம‌ற‌ந்துட்டியா?" என்று கேட்டாள் தோழி.

அப்போதே அவ‌ளுக்கும் அது நினைவிற்கு வ‌ர‌ நிமிர்ந்து த‌ன் த‌ந்தையை பார்த்தாள். அவ‌ரோ எதுவும் கூறாது இறுக்க‌மாய் நிற்க‌, "இன்னும் வீட்டுல‌ உக்காந்து என்ன‌ ப‌ண்ற‌? டைம் ஆயிருச்சு சீக்கிர‌ம் வ‌ந்திரு. நா உள்ள‌ போக‌ போறேன்." என்றாள்.

"ஹா ச‌ரி." என்று அவ‌ள் கூறும் முன்பே இணைப்பை துண்டித்திருந்தார் லிங்கா.

அதில் அவ‌ள் திடுக்கிட்டு ப‌ய‌ந்து நிமிர்ந்து அவ‌ரை பார்க்க‌, "ஃபைன‌ல் எக்ஸாமா இன்னிக்கு?" என்று கேட்டார்.

அத‌ற்கு அவ‌ளும் ப‌ய‌த்துட‌ன் ஆம் என்று மெல்ல‌ த‌லைய‌சைக்க‌, "அப்ற‌ம் ஏ வீட்டுல‌ ப‌டுத்து தூங்கிட்டிருக்க‌? எவ‌னோதான‌ ஃபீஸ் க‌ட்டுறான்னா?" என்று கோப‌மாய் கேட்டார்.

அவ‌ளோ ப‌த‌றி இல்லை என்று வேக‌மாய் த‌லைய‌சைக்க‌, "கெள‌ம்பு. ட்ரைவ‌ர்கிட்ட‌ சொல்லிட்டேன். எக்ஸாம் முடிஞ்ச‌தும் நேரா வீட்டுக்குதா வ‌ர‌ணும். லாஸ்ட் டே, அத‌னால‌ ஃப்ர‌ன்ட்ஸ் கூப்புட்டாங்க‌ அது இதுன்னு எங்கையாவ‌து சுத்த‌ போன‌.." என்று அவ‌ர் ப‌ல்லை க‌டிக்க‌, அவ‌ளோ வேக‌மாய் இல்லை என்று த‌லைய‌சைத்தாள்.

"சாய‌ங்கால‌த்துக்குள்ள‌ வீட்டுல‌ இருக்க‌ணும்." என்று அழுத்தி கூறிவிட்டு சென்றிருந்தார் லிங்கா.

அத‌ன் பிற‌குதான் அவ‌ச‌ர‌ அவ‌ச‌ர‌மாய் கிள‌ம்பி காலேஜிற்கு சென்றிருந்தாள். அங்கு எக்ஸாமை முடித்துவிட்டு வெளியே வ‌ர‌, ச‌ரியாக‌ அவ‌ளுக்கான‌ கார் அவ‌ள் முன் வ‌ந்து நின்ற‌து. அவ‌ளும் அதில் ஏறி அம‌ர்ந்து வீட்டிற்கு சென்றுக்கொண்டிருக்க‌, செல்லும் வழியில் திடீரென்று ஜ‌ன்ன‌ல் வ‌ழியே ட்ரைவ‌ரின் முக‌த்தில் அடித்து சித‌றிய‌து ஒரு ம‌து பாட்டில். அதில் திடுக்கிட்டு காரை திருப்பியிருந்த‌வ‌ர், முன்பிருந்த‌ போஸ்ட் ம‌ர‌த்தில் ப‌ல‌மாய் மோதியிருந்தார்.

அதில் பின்னிருந்த அமீரா அதிர்வாய் முன்னிருந்த‌ இருக்கையில் வந்து ப‌ல‌மாய் மோதி வில‌க‌, ட்ரைவ‌ரோ பொத்தென்று ஸ்டிய‌ரிங்கின் மீதே முக‌த்தை புதைத்திருக்க‌, ஹார‌ன் ச‌த்த‌ம் நிற்காம‌ல் ஒலித்த‌து.

"அண்ணா என்ன‌ ஆச்சு?" என்று பின்னிருந்து அவ‌ள் ப‌த‌றி கேட்க‌, அவ‌ரிட‌ம் அசைவே இல்லை. அதில் ப‌த‌றிய‌வ‌ள் "அண்ணா!" என்று அவ‌ர் தோளை பிடித்து உலுக்க‌, ச‌ட்டென்று அவ‌ள் பிட‌றியை இறுக்கி பிடித்து வெளியில் இழுத்தான் ஒருவ‌ன்.

"ஆ!" என்று அவ‌ள் அல‌றிய‌ப‌டி வெளியில் வ‌ந்து விழ‌, ச‌ட்டென்று அவ‌ள் முக‌த்த‌ருகே நெருங்கி, "என்ன‌ தெரியுதா?" என்று அழுத்தி கேட்டான் ராகுல்.

அவ‌ளோ வ‌லியில் இறுக்கி மூடியிருந்த‌ க‌ண்க‌ளை மெதுவாய் பிரித்து பார்க்க‌, அவ‌ள் விழிக‌ள் அக‌ல‌ விரிந்த‌து. அதில் மேலும் இறுக்கி பிடித்து நெருக்கி இழுத்த‌வ‌ன், "உன் அப்ப‌ன் என்ன‌டி, என்ன‌விட‌ வ‌ச‌தியான‌ மாப்ள‌ பாத்திருக்கானாமே உன‌க்கு?" என்று ப‌ல்லை க‌டித்து கேட்டான்.

அவ‌ளோ வ‌லியில் முக‌த்தை இறுக்கி, "என்ன‌ விட்டிரு" என்று க‌த‌றி அழுதாள்.

"விட்ட‌ர்றேன். உன்ன‌ முழுசா அனுப‌விச்சுட்டு விட்ட‌ர்றேன்." என்று அவ‌ன் அழுத்தி கூற‌, அவ‌ளோ அதிர்ந்து அவ‌னை பார்த்தாள்.

"நா தூக்கி போட்ட‌துக்கு அப்ற‌ம் நீ எவ‌னுக்கு வேணுன்னாலும் பொண்டாட்டியா இரு. இன்னிக்கு ஒருநாள் ம‌ட்டும் என‌க்கு பொண்டாட்டியா இரு." என்று அவ‌ன் அழுத்தி கூறிய‌ வார்த்தை இன்னுமே அவ‌ள் காதுக‌ளில் ஒலிக்க‌, காதை அழுத்தி மூடினாள் அமீரா.

அத‌ன் பிற‌கு அவ‌னிட‌மிருந்து த‌ப்பி ஓட‌, அவ‌னும் அவ‌ன் கூட்டாளிக‌ளும் ஜீப்பில் அவ‌ளை துர‌த்த‌, இவ‌ளோ பாறை நிறைந்த‌ இற‌க்க‌த்தில் இற‌ங்கி ஓட‌ ஆர‌ம்பிக்க‌, "ஷிட்" என்ற‌ப‌டி அவ‌ர்க‌ளும் ஜிப்பை விட்டுவிட்டு இற‌ங்கி அவளை துர‌த்த‌ ஆர‌ம்பித்த‌ன‌ர்.

இற‌க்க‌த்தின் முடிவிலும் ஒரு சாலை வ‌ந்திருக்க‌, அதில் ஓடிக்கொண்டிருக்கும்போதுதான் இருட்ட ஆரம்பித்து பால‌ம் வ‌ந்திருக்க‌, அங்கே த‌வ‌றி விழுந்து அவ‌ர்க‌ளிட‌ம் மாட்டும் நேர‌ம் ஒருவ‌ன் வ‌ந்து காப்பாற்ற, அவ‌ன் காரில் ஒளிந்த‌து, இறுதியாக‌ அவ‌ன் முக‌ம் வ‌ரை க‌ண்முன் வ‌ந்து குவிய‌ ச‌ட்டென்று விழி விரித்தாள்.

அவ‌ள் இத‌ய‌ம் அத்த‌னை ப‌ல‌மாய் துடிக்க‌, அவ‌ன்தான் த‌ன்னை கொண்டு வ‌ந்து விட்டிருப்பானா என்று அதிர்வாய் எழுந்து சுற்றியும் பார்க்க‌, அவ‌ள் முன் வ‌ந்து நின்றார் அவ‌ளின் த‌ந்தை.

த‌ந்தையை பார்த்த‌தும் அவ‌ள் க‌ண்ணீர் வெள்ள‌மாய் பெருக‌, "அப்பா!" என்று வேகமாய் அவ‌ரை க‌ட்டிக்கொள்ள‌ போக‌, ப‌ளாரென்று அவ‌ள் க‌ன்ன‌த்தில் அடித்திருந்தார் அவ‌ர்.

அதில் பொத்தென்று மெத்தையில் அம‌ர்ந்துவிட்ட‌வ‌ள், க‌ண்ணீருட‌ன் க‌ன்ன‌த்தை பிடிக்க‌, அவ‌ரோ ப‌ல்லை க‌டித்து, "உன்ன‌ அப்ற‌மா பாத்துக்குறேன். ப‌த்து நிமிஷ‌த்துல‌ குளிச்சு ரெடியாகி ஹாலுக்கு வர்ற‌." என்று அழுத்தி கூறிவிட்டு ந‌க‌ர்ந்தார்.

அதில் அப்ப‌டியே க‌ன்ன‌த்தில் கை வைத்து க‌த‌றி அழுதாள் அமீரா. எவ்வளவு பெரிய பிரச்சனையிலிருந்து மீண்டு வந்துள்ளாள், அதை கேட்கவோ ஆறுதலாய் அணைக்கவோக்கூட‌ யாரும் இல்லை. ந‌ட‌ந்த‌தையெல்லாம் நினைத்தால் இப்போதுமே அவ‌ள் உட‌லெல்லாம் ந‌டுங்க‌, க‌ண்ணீர் ம‌ட்டும் நிற்காம‌ல் வ‌ந்த‌து.

அப்ப‌டியே இங்கே ஹாலுக்கு வ‌ந்து ந‌டுநாய‌க‌மாய் அம‌ர்ந்தார் லிங்கா. அவ‌ரின் முன்பிருந்த‌ இருவ‌ரும், "என்ன‌ ஆச்சு? பொண்ணு எங்க‌?" என்று கேட்க‌, "ரெடியாகிட்டு இருக்கா. இப்ப‌ வ‌ந்திருவா." என்றார் லிங்கா.

அதில் அவ‌ர்க‌ளும் புன்ன‌கைத்து கையிலிருந்த கூல் ட்ரிங்கை சுவைக்க, அடுத்த‌ சில‌ நிமிட‌ங்க‌ளில் இங்கே அறையைவிட்டு வெளியில் வ‌ந்தாள் அமீரா. அவ‌ளின் காதுக்கு புதிய‌ ம‌னித‌ர்க‌ளின் பேச்சு ச‌த்த‌ம் கேட்க‌, அப்ப‌டியே அந்த‌ காரிடோரை தாண்டி வெளியில் வ‌ந்தாள். அங்கே ஹாலிலிருந்துதான் ச‌த்த‌ம் வ‌ர‌, அப்ப‌டியே முன்னால் வ‌ந்தாள். அவ‌ள் முன்பிருந்த‌ அந்த‌ பெரிய‌ தூண் மெதுவாய் வில‌க‌, த‌ன் த‌ந்தையின் முன் அம‌ர்ந்திருந்த‌ன‌ர் விக‌ர‌ம‌ன் மற்றும் விம‌லா.

"அந்த‌ ஆர்.கே உன்கிட்ட‌ ச‌ம்ம‌ந்த‌ம் பேச‌ வ‌ந்த‌தா கேள்விப்ப‌ட்டேன்?" என்றார் விக்ர‌ம‌ன்.

அதில் ஏள‌ன‌ சிரிப்பை உதிர்த்த‌ப‌டி கூல்ட்ரிங்க்ஸை சுவைத்த‌வ‌ர், "உன‌க்குதா தெரியுமே. என‌க்கு ச‌ம்ம‌ந்தியாக‌ணும்னா ஒன்னு என் ஸ்டேட்ட‌ஸ்க்கு மேல‌ இருக்க‌ணும், இல்ல‌ன்னா என‌க்கு ஈக்குவ‌லாவாவ‌து இருக்க‌ணும். என் வீட்டு மாப்பிளையாக‌ அவ‌ன் பைய‌னுக்கு த‌குதி ப‌த்தாது." என்றார் லிங்கா.

அதில் சிரித்துக்கொண்ட‌ விக்ர‌ம‌னும், "அப்ப‌ உன் ஸ்டேட்ட‌ஸ்க்கு மேட்ச் ஆகுற‌ ஒரே மாப்ள‌ என் பைய‌ன் ம‌ட்டுந்தா." என்றார்.

அத‌ற்கு லிங்காவும் திமிர் குறையா புன்னகையுடன் ஏதோ கூற‌ வ‌ர‌, அப்போதே மெதுவாய் அங்கு வ‌ந்து நின்றாள் அமீரா. அதில் அனைவ‌ரும் திரும்பி அவ‌ளை பார்க்க‌, அந்த‌ மயில் நீல‌ நிற‌ சுடியில், குறைந்த‌ ஒப்ப‌ணைக‌ளுட‌ன் தேவ‌தையாய் வ‌ந்து நின்ற‌வ‌ள், த‌ன் முக‌த்தில் விழுந்த‌ கூந்த‌லை மெதுவாய் வில‌க்கிய‌ப‌டி த‌ய‌க்க‌மாய் நிமிர்ந்து, அவ‌ர்க‌ளுக்கு வ‌ண‌க்க‌ம் வைத்தாள்.

அதில் புன்ன‌கைத்த‌ விக்ர‌ம‌னும், "வ‌ந்து உக்காரும்மா." என்று கூற, அவ‌ளோ த‌ய‌க்க‌மாய் த‌ன் த‌ந்தையை தான் பார்த்தாள்.

அவ‌ரும் வா என்று இறுக்க‌த்துட‌னே க‌ண் அசைக்க‌, அவ‌ளும் பார்வையை தாழ்த்தி த‌ய‌ங்கிய‌ப‌டியே மெல்ல‌ ந‌ட‌ந்து வ‌ந்து அவ‌ர்க‌ளுக்கு எதிரே அம‌ர்ந்தாள்.

"தேவ‌த‌ மாதிரி இருக்கா." என்று இர‌ச‌னையாய் கூறினார் விம‌லா. அதற்கு அவ‌ளோ நிமிர‌க்கூட‌ இல்லாம‌ல் அப்ப‌டியே அம‌ர்ந்திருந்தாள்.

அதில் புன்ன‌கைத்த‌ப‌டி எழுந்து அவ‌ள் அருகில் வ‌ந்த‌ம‌ர்ந்தார் விம‌லா. அதில் அவ‌ள் திடுக்கிட்டு நிமிர‌, அவ‌ள் க‌ன்ன‌ம் ப‌ற்றி, "பொம்ப‌ள‌ புள்ள‌ வெறும் த‌லையோட‌ இருந்தா எப்ப‌டிம்மா? திரும்பு." என்றார்.

அத‌ற்கும் அவ‌ள் த‌ன் த‌ந்தையை பார்க்க‌, அவ‌ரும் இறுக்க‌மாய் க‌ண் அசைத்தார். அப்போதே அவ‌ளும் திரும்பி த‌ன் த‌லையை காட்ட‌, விம‌லாவும் தான் வாங்கி வ‌ந்த‌ ம‌ல்லிகை ச‌ர‌த்தை அழகாய் அவ‌ள் த‌லையில் வைத்துவிட்டார்.

அதில் அவ‌ளும் பொம்மைப்போல் அமைதியாய் அம‌ர்ந்திருக்க‌, அவ‌ர் பூவை வைத்துவிட்டு க‌ர‌த்தை வில‌க்கிய‌தும் மெதுவாய் திரும்பினாள் அமீரா. அதில் புன்ன‌கைத்த‌ விம‌லாவும் த‌ன் ஒரு கையால் சுற்றி எடுத்து திருஷ்டி க‌ழித்துவிட்டு, த‌ன் கண் மையை எடுத்து அவ‌ள் காதின் பின் திருஷ்டி பொட்டை வைத்துவிட்டார். அப்போதும் அவ‌ள் பார்வையை தாழ்த்திய‌ப‌டி பொம்மை போல் அம‌ர்ந்திருக்க‌, அவள் த‌லையை பாச‌மாய் வ‌ருடி, "எங்க‌ளுக்கு பொண்ண‌ ரொம்ப‌ புடிச்சிருக்கு." என்றார் விம‌லா.

அத‌ற்கு லிங்காவோ விக்ர‌ம‌னை பார்த்து, "அப்ற‌ம் என்ன‌, இப்ப‌வேக்கூட‌ த‌ட்ட‌ மாத்திக்க‌லாம்." என்றார்.

அதில் அமீராவோ உள்ளுக்குள் அதிர்ந்தாலும் விர‌ல்க‌ளை பிசைந்த‌ப‌டி அமைதியாய் அம‌ர்ந்திருந்தாள்.

"என்ன‌ அண்ணா நீங்க‌, பொண்ணுகிட்ட‌ ஒரு வார்த்த‌ கேக்க‌ வேண்டாமா?" என்றார் விம‌லா.

அப்போதும் அவ‌ள் நிமிர‌க்கூட‌ இல்லை, பதற்றமாய் அமர்ந்திருக்க, அவ‌ள் த‌லையை அழுத்தி வ‌ருடி, "அம்மாடி!" என்றாள் விம‌லா.

அதில் அவ‌ளும் மெதுவாய் நிமிர்ந்து அவ‌ரை பார்க்க‌, அவ‌ரோ த‌ன் மொபைலில் உள்ள‌ புகைப்ப‌ட‌த்தை காட்டி, "இதுதா எங்க‌ பைய‌ன். புடிச்சிருக்கா?" என்று கேட்டார்.

அவ‌ர் முக‌த்திற்கு நேரே நீட்ட‌வும் அவ‌ள் விழிக‌ள் த‌ன் த‌ந்தையிட‌ம் அனும‌தி கேட்கும் முன்பே, அந்த‌ புகைப்ப‌ட‌ம் இவ‌ள் விழியில் விழுந்துவிட‌, அவ‌ள் விழிக‌ள் விய‌ந்த‌து. அந்த‌ ஸ்கீரீனில் கூள‌ருட‌ன் ஸ்டையிலாய் நின்றிருந்தான் அவன்.

"பேரு விராஜ். ரொம்ப நல்ல பையன்." என்றார் விம‌லா. அதை படித்துக்கொண்டிருந்த அமீராவின் விழிகள் அகல விரிந்தது.

- நொடிக‌ள் தொட‌ரும்...
 

Author: Oviya Blessy
Article Title: CHAPTER-26
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.