CHAPTER-21

Oviya Blessy

Member
Jan 4, 2025
46
0
6
அர்ஜுன் கீழே கொட்டி கிட‌ந்த‌ அந்த‌ ஆசிட் க‌ல‌ந்த‌ ம‌ருதாணியில் த‌ன் கையை அழுத்த‌மாக‌ ப‌தித்து எடுத்தான். அப்போது அந்த‌ ம‌ருதாணி அவ‌ன் உள்ள‌ங்கை முழுவ‌தும் அப்பிக்கொண்ட‌து. அதை பார்த்த‌ ச‌ந்ரா அதிர்ந்து நிற்க‌, அவ‌ளோ த‌ன் பெய‌ரைதான் அவ‌ன் கையில் எழுதிவிட‌ வேண்டும் என்று நினைத்தாள். அதுவே உயிர் போகும் வ‌லியை கொடுக்கும். ஆனால் இப்போது இவ‌னே த‌ன் கை முழுவ‌தும் அந்த‌ ஆசிடை அப்பிக்கொண்ட‌து, அவ‌ளுக்கு ச‌ற்று அதிர்ச்சியைதான் கொடுத்த‌து

அப்போது அர்ஜுன், "நீ என‌க்காக‌ ப‌ண்ண‌ இந்த‌ மெக‌ந்திய‌வே நா வெச்சுகிட்டேன் போதுமா?" என்று கூற‌,

அப்போதும் ச‌ந்ரா அதிர்ச்சி மாறாம‌ல் அவ‌னை பார்த்த‌ப‌டி
ம‌ன‌திற்குள், "என்ன இது? நா கொஞ்சம் வ‌ருத்த‌ப்ப‌ட்ட‌துக்கே, இவ்வ‌ளோ நேர‌ம் வெக்க‌மாட்ட‌ன்னு சொன்ன‌ மெக‌ந்திய‌ வெச்சிட்டான்? என்னோட‌ சின்ன‌ வாட‌ல‌க்கூட‌ பாக்க‌ கூடாதுன்னு நெனைக்கிற‌ இவ‌ன், ஒரு அர‌க்க‌னா? இல்ல‌ நாந்தா த‌ப்பா நென‌ச்சுகிட்டிருக்க‌னா? உண்மையிலையே அர்ஜுன் ந‌ல்ல‌வ‌ந்தானா?" என்று யோசித்த‌வ‌ளுக்கு இப்போது அவ‌ன் கை முழுக்க‌ அப்பியிருக்கும் அந்த‌ ஆசிட் என்ன‌ செய்ய‌ போகிற‌தோ என்ப‌தில்தான் எண்ண‌ம் இருந்த‌து.

அப்போதே அர்ஜுனுக்கு திடீரென‌ கையில் எரிச்ச‌ல் ஆர‌ம்பிக்க‌, அந்த‌ வ‌லி சிறிது சிறிதாய் அதிக‌மாவ‌தையும் உண‌ர்ந்தான்.

அப்போது அர்ஜுன், ம‌ன‌திற்குள், "என்ன‌ மருதாணி வெச்ச‌ எட‌த்துல‌ ப‌ய‌ங்க‌ர‌மா எரியுது?" என்று குழ‌ப்ப‌மாக‌ த‌ன் கையை பார்க்க‌,

அவ‌ன் முக‌த்தை பார்த்தே புரிந்துக்கொண்ட‌ ச‌ந்ரா ப‌த‌றிய‌ப‌டி ம‌ன‌திற்குள், "அர்ஜுனுக்கு வ‌லி ஆர‌ம்பிச்சிருச்சின்னு நெனைக்கிறேன். ஆனா அவ‌னோட‌ க‌ஷ்ட்ட‌த்த‌ பாத்தா என‌க்கு ஏ க‌ஷ்ட்ட‌மா இருக்கு?" என்று புரியாம‌ல் விய‌ந்தாள்.

அப்போது மேலும் வ‌லி அதிக‌ரிக்க‌ தாங்க‌ முடியாத‌ நிலைக்கு சென்ற‌ அர்ஜுன், "ச‌ந்ரா இரு நா இப்ப‌ வ‌ந்த‌ர்றேன்." என்று கூறிவிட்டு வேக‌மாக‌ ஓடி, அங்கிருந்த‌ ஏர் கூள‌ர் அருகில் சென்று அம‌ர்ந்தான். ஆனாலும் அந்த‌ வ‌லி அவ‌ன் உயிரையே உறிஞ்சி எடுக்க‌, அதில் அவ‌ன் முக‌ம் அப்ப‌ட்ட‌மாய் வ‌லியை க‌க்கிய‌து. ஆனாலும் அவ‌ற்றை க‌ழுவ‌ ம‌ன‌ம் வ‌ராம‌ல் கூள‌ரின் முன்பு கையை நீட்டி, தானும் ஊதி ஊதி குளிர்விக்க‌ முய‌ற்சித்தான்.

அதை இங்கு தூர‌த்திலிருந்து பார்த்த‌ ச‌ந்ரா குற்ற‌ உண‌ர்வுட‌ன், "அர்ஜுனுக்கு ரொம்ப‌ வ‌லிக்குது போல‌ இருக்கே. ஆனாலும் அவ‌ ஏ போய் க‌ழுவ‌வே மாட்டிங்குறான்?" என்று யோசித்த‌ப‌டி அவ‌னையே விய‌ப்புட‌ன் பார்த்துக்கொண்டிருந்தாள்.

அப்போது வ‌லி தாங்க‌ முடியாம‌ல் அம‌ர்ந்திருந்த‌ அர்ஜுன், "இதுல‌ என்ன‌ இருக்கின்னே தெரிய‌ல‌. இப்பிடி ப‌ய‌ங்க‌ர‌மா எரியுது. ஐயோ தாங்க‌வே முடிய‌ல‌. க‌ழுவ‌லான்னு பாத்தா, ச‌ந்ரா ம‌றுப‌டியும் வ‌ருத்த‌ப‌டுவா." என்று யோசித்த‌வ‌ன், "செரி கொஞ்ச‌ நேர‌ந்தான‌, எப்பிடியாவ‌து தாங்கிக்க‌லாம்." என்று கூறி மீண்டும் ஊதியப‌டி அமர்ந்திருந்தான்.

அவ‌ன் வ‌லியை தூர‌த்திலிருந்து பார்த்துக்கொண்டிருந்த‌ ச‌ந்ரா, "நா த‌ப்பு ப‌ண்ணிட்ட‌னா? அர்ஜுன‌ ரொம்ப‌ காய‌ப்ப‌டுத்துறேன்னு நெனைக்குறேன்." என்று கூற‌,

"ஆனா இவ‌னுக்கு இதெல்லாம் ப‌த்தாது." என்ற‌ப‌டி அபி அவ‌ள் அருகில் வ‌ர‌, அவ‌ன் வ‌ந்த‌தை உண‌ர்ந்த‌ ச‌ந்ராவோ அப்போதும் அர்ஜுனிட‌மிருந்து க‌ண்க‌ளை வில‌க்க‌வில்லை.

அபி, "ஆனா இவ‌ன் ஏ இன்னு க‌த்தாம‌ இருக்கான்? ஃப‌ங்ஷ‌னையே நிறுத்துற‌ அள‌வுக்கு க‌த்துவான்னு பாத்தா, கூளா கூள‌ர்கிட்ட‌ உக்காந்திருக்கான்? ஆசிட் செரியா வேல‌ செய்ய‌லையோ?" என்று யோசிக்க‌,

அப்போதே அபியின் ப‌க்க‌ம் ப‌ட்டென்று திரும்பிய‌வ‌ள், "அந்த‌ ஏசிட் கையில‌ ப‌ட்டா எந்த‌ அள‌வுக்கு வ‌லிக்கும்?" என்று ப‌த‌ற்ற‌மாய் கேட்க‌,

அத‌ற்கு அபி, "கையையே வெட்டி போட்டுர‌லாங்குற‌ அள‌வுக்கு வ‌லிக்கும்." என்று கூற‌, அவ‌ள் முக‌மோ அதிர்ச்சியை அப்ப‌ட்டமாய் க‌க்கிவிட்டு, உட‌னே திரும்பி அர்ஜுனைதான் குற்ற‌ உண‌ர்வுட‌ன் பார்த்தாள்.

அதை பார்த்த‌ அபி, "என்ன‌ அவ‌ன‌ பாத்து ஃபீல் ப‌ண்றியா?" என்று கேட்க‌,

அப்போதும் அர்ஜுனிட‌மிருந்து க‌ண்க‌ளை வில‌க்காத‌வ‌ள், "என‌க்கு தெரில." என்றாள் ப‌ட்டென்று.

அதில் அதிர்ந்த‌ அபி, "இங்க‌ பாரு ச‌ந்ரா, நம்ம‌ வாழ்க்கைய‌வே அழிச்ச‌வ‌ன் அவ‌ன். அவ‌ன‌க்கு நீ பாவ‌ம் பாக்காத‌. ஏன்னா அவ‌ன் அழிய‌ வேண்டிய‌வ‌ன்." என்று கூற‌, அப்போதும் ச‌ந்ராவின் க‌வ‌ன‌ம் இங்கு அல்ல‌ அர்ஜுனின் மீதுதான் உள்ள‌து என்ப‌தை உண‌ர்ந்த‌வ‌ன், "புரிஞ்சதா?" என்றான் ச‌த்த‌மாக‌.

அதில் திடுக்கிட்ட‌ ச‌ந்ரா, "ஆ..ங்? ம்ம் புரிஞ்சது." என்று அவ‌னை பார்த்து கூற‌,

அதை கேட்ட‌ அபி, "செரி நா கெள‌ம்புறேன். நீ ஜாக்கிர‌த‌." என்று கூற‌,

அத‌ற்ஜு அவ‌ளும், "ம்ம்" என்றாள்.

பிற‌கு அபி யாரும் அறியாத வ‌ண்ண‌ம் அங்கிருந்து சென்றுவிட்டான்.

இங்கே அதே இட‌த்தில் நின்றிருந்த‌ ச‌ந்ரா, அவ‌னை பார்த்த‌ப‌டியே த‌ன் ம‌ன‌தை க‌லைத்து, "இல்ல‌. அர்ஜுன் மேல‌ என‌க்கு எந்த‌ ஃபீலிங்கும் இருக்க‌ கூடாது. அவ‌ என‌க்கு அநியாய‌ம் ப‌ண்ண‌வ‌ன்." என்று த‌ன‌க்குள் கூறி த‌ன் குற்ற‌ உண‌ர்வை துர‌த்தி அடித்தாள்.

சிறிது நேர‌ம் க‌ழித்து ம‌ருதாணி ந‌ன்றாக‌ காய்ந்துவிட்ட‌தை உண‌ர்ந்த‌ அர்ஜுன், எழுந்து கை க‌ழுவ‌ குளிய‌ல‌றைக்கு சென்றான். அங்கு சென்று பைப்பை ஆன் செய்த‌தும், எரிச்ச‌ல் நின்றுவிடும் என்று எண்ணிய‌வ‌னுக்கு, த‌ண்ணீர் ப‌ட்ட‌தும் ப‌ல‌ ம‌ட‌ங்கு வ‌லி கூடிய‌து. அதில் மேலும் துடித்தெழுந்த‌வ‌ன், க‌டின‌ப்ப‌ட்டு அதையும் தாங்கிக்கொண்டு ம‌ருதாணியை க‌ழுவி முடித்தான்.

அப்போது வ‌லியுட‌ன் கையை ட‌வ‌லால் துடைத்துவிட்டு பார்க்க‌, அவ‌ன் கை முழுக்க‌ தீயால் எரிந்ததைவிட‌ ப‌ய‌ங்க‌ர‌மாக‌ வெந்திருக்க‌, வ‌லியில் அவ‌ன் ஒரு கை ம‌ட்டும் அல்ல‌ இர‌ண்டு கைக‌ளுமே ந‌டுங்கிய‌து.

இதை காண்பித்தால் ச‌ந்ரா மேலும் வ‌ருந்துவாள் என்று என்ணிய‌வ‌ன், அவ‌ற்றை த‌ன் பேக்கெட்டில் விட்டு ம‌றைத்த‌ப‌டி வெளியில் வ‌ந்தான். அப்போதே அவ‌னுக்காக‌ அந்த‌ அறையில் காத்துக்கொண்டிருந்த‌ ச‌ந்ரா, "என்ன‌ அர்ஜுன் க‌ழுவிட்டியா? எங்க‌ காட்டு. எப்பிடி செவ‌ந்திருக்குன்னு பாக்க‌லாம்." என்று கூற‌,

அத‌ற்கு அர்ஜுன் ப‌ய‌ந்து, "இல்ல‌ இல்ல‌. ந‌ல்லாதா செவ‌ந்திருக்கு. விடு." என்று கூற‌,

அதை கேட்ட‌ ச‌ந்ராவோ, "இல்ல‌ காட்டு அர்ஜுன்." என்று வேண்டுமென்றே வ‌ம்ப‌டியாய் அவ‌ன் க‌ர‌த்தை எடுத்து பார்க்க‌, அவ‌ன் உள்ள‌ங்கை முழுவ‌தும் இவ்வாறு வெந்து கிட‌ப்ப‌தை பார்த்த‌வ‌ளுக்கு, மீண்டும் குற்ற‌ உண‌ர்வு ம‌ன‌தை கொன்ற‌து.

அத‌னால் அவ‌ள் முக‌ம் முற்றிலும் வாடிவிட‌, அதை பார்த்த‌ அர்ஜுன், "ஒன்னும் இல்ல‌ ச‌ந்ரா. விடு." என்று கூறி த‌ன் கையை உருவிக்கொண்டான்.

அதை பார்த்த ச‌ந்ராவிற்கு இத‌ன் விளைவு இவ்வ‌ள‌வு கொடூர‌மாக‌ இருக்குமென்று தெரியாம‌ல், ம‌ன‌ம் மீண்டும் குற்ற‌ உண‌ர்வால் குத்த‌, "என்ன‌ இது அர்ஜுன்? இப்பிடி வெந்து போயிருக்கு?" என்று வ‌ருத்த‌த்துட‌ன் கூற‌,

அதை கேட்ட‌ அர்ஜுன், "இல்ல‌ இல்ல‌. நீ ஃபீல் ப‌ண்ற‌ அள‌வுக்கு ஒன்னும் இல்ல‌. என‌க்கு ம‌ருதாணி அல‌ர்ஜி இருக்கு அவ்ளோதா." என்றான்.

அதை கேட்டு விய‌ந்து அவ‌னை பார்த்த‌வ‌ள், "இப்ப‌க்கூட‌ உன‌க்கு என் மேல‌ ச‌ந்தேக‌ம் வ‌ர‌லையா அர்ஜுன்? என் ம‌ன‌சு க‌ஷ்ட‌ப்ப‌ட‌க் கூடாதுன்னு, ஆசிட் க‌ல‌ந்த‌ எங்கிட்டையே அல‌ர்ஜின்னு பொய் சொல்ற‌." என்று ம‌ன‌திற்குள் எண்ணிய‌வ‌ள், "ஐய‌ம் சாரி அர்ஜுன்." என்றாள் குற்ற‌ உண‌ர்வுட‌ன்.

அவ‌ள் வாட‌லை பார்த்து ப‌த‌றிய‌ அர்ஜுன், "ஹேய் ச‌ந்ரா! இங்க‌ பாரு நீ ப்ளீஸ் இதுக்கெல்லா வ‌ருத்த‌ப்ப‌டாத‌. என‌க்கு ஒன்னும் இல்ல‌, சின்ன‌ காய‌ந்தா." என்று கூற‌,

ச‌ந்ரா, "இல்ல‌ அல‌ர்ஜி இருக்குன்னுதா நீ ம‌ருதாணி வெக்க‌ மாட்ட‌ன்னு சொல்லியிருக்க‌. நாந்தா கேக்காம‌ போட்டுவிட்டுட்டேன். ஐய‌ம் சாரி." என்று குற்ற‌ உண‌ர்வுட‌ன் கூற‌,

அதை கேட்டு த‌ன் காய‌ம் ப‌டாத‌ வ‌ல‌து கையை உய‌ர்த்தி அவ‌ள் க‌ன்ன‌ம் ப‌ற்றிய‌வ‌ன், "நீ ப்ளீஸ் இப்பிடி வ‌ருத்த‌ப்ப‌டாத‌. என‌க்கும் ஒன்னும் இல்ல‌. இது சீக்கிர‌மே செரியாயிரும். ப‌ட் நீ இப்பிடி ஃபீல் ப‌ண்ற‌த‌ பாத்தாதா என‌க்கு..." என்று எதோ கூற‌ வ‌ந்த‌வ‌ன், பிற‌கு நிதானித்து நிறுத்திவிட, ச‌ந்ரா அவ‌னை கேள்வியுட‌ன் பார்த்தாள்.

அப்போது அர்ஜுன், "செரி இது உன்னோட‌ ஃப‌ங்ஷ‌ன். நீ போய் மெக‌ந்தி போட்டுக்கோ. அவ‌ங்க‌ உன்ன‌ அப்ப‌வே கூப்புட்டாங்க‌." என்றான்.

அத‌ற்கு சந்ராவும், "ம்ம் செரி." என்று கூறி சென்று மெக‌ந்தி போட்டுகொண்டாள். மெஹ‌ந்தியில் அவ‌ளின் வ‌ருங்கால‌ க‌ண‌வ‌னின் முத‌ல் எழுத்து "A" என்று எழுத‌ப்ப‌ட்ட‌து. ஆனால் அது அர்ஜுனா அபிஷேக்கா என்ப‌து விதி ம‌ட்டுமே அறிந்த‌ உண்மை.

சாய‌ங்கால‌ வேளை...

ச‌ந்ரா வேண்டுத‌ல் என்று கூறி கோவிலுக்கு செல்ல‌, அர்ஜுனும் அவ‌ளுட‌ன் வ‌ருகிறேன் என்று கூறியும், அவ‌ன் கையில் உள்ள‌ காய‌த்தை கார‌ண‌ம் காட்டி அவ‌னை த‌ன்னுட‌ன் வ‌ர‌ வேண்டாம் என்றாள் ச‌ந்ரா. அத‌ற்கு மேல் வாக்குவாத‌ம் செய்தாலும் ப‌ய‌னில்லை. ஏனென்றால் அவ‌ள்தான் பிடிவாத‌க்காரியாயிற்றே என்று உண‌ர்ந்த‌வ‌ன், ச‌ரியென்று அவ‌ள் பாதுகாப்பிற்காக‌ ட்ரைவ‌ரையும் அனுப்பி, இருட்டும் முன் வ‌ந்துவிடு என்று கூறிதான் அனுப்பினான். ஆனால் அவ‌ளோ இது த‌னிப்ப‌ட்ட‌ வேண்டுத‌ல் என்று ட்ரைவ‌ரிட‌ம் கூறி அர்ஜுனிட‌மும் கூற‌ வேண்டாம் என்று கூறிவிட்டு த‌னியாக‌வே ஆட்டோவில் சென்றுவிட்டாள். ஏனோ அர்ஜுனின் இந்த‌ அக்க‌றையை அவள் ம‌ன‌ம் ஏற்க்க‌ ம‌றுத்த‌து. என‌வே அர்ஜுனுக்கு தெரியாம‌ல் த‌னியாக‌வே வெளியில் சென்றாள்.

பிற‌கு ஆதியை ச‌ந்திக்க‌ வைத்த‌த‌ற்கு ந‌ன்றி செலுத்தும் வித‌மாக‌, அருகில் உள்ள‌ அதே காளி தேவி கோவிலுக்கு சென்று 108 விள‌க்கு ஏற்றி வைத்து, த‌ன் காத‌ல் கைக்கூட‌ வேண்டும் என்று வேண்டுத‌லும் செய்தாள். பிற‌கு வேண்டுத‌ல் அனைத்தும் முடிந்து வீட்டிற்கு திரும்பும்போது இர‌வாகிவிட்ட‌து. அதை உண‌ர்ந்த‌வ‌ள் நிச்ச‌ய‌ம் அர்ஜுன் கால் செய்திருப்ப‌னே என்று மொபைலை பார்க்க‌, அவ‌ளின் மொபைலோ வ‌ழ‌க்க‌ம்போல் ஸ்விச்டு ஆஃப் ஆகியிருந்த‌து.

சரி வீட்டிற்கே சென்று பேசிக்கொள்ள‌லாம் என்று ஆட்டோவின் இருக்கையில் சாய்ந்து அம‌ர‌, அப்போதே வ‌ழியில் அபியை யாரோ கத்தியால் குத்தும் காட்ச்சியை பார்த்து அதிர்ந்தாள். அந்த‌ நொடி உட‌னே ஆட்டோவில் இருந்து இற‌ங்கிய‌வ‌ள், யார் அவ‌ர்க‌ள் என்று அபியை காப்பாற்ற‌ "அபி..!" க‌த்திய‌ப‌டி வேக‌மாக‌ ஓடினாள். ஆனால் அத‌ற்குள் அபியை குத்திய‌வ‌ன் அங்கிருந்து சென்றுவிட‌, அவ‌ளோ அவ‌ன் முக‌த்தை பார்க்க‌வில்லை. அப்போது அபியோ வ‌லியுட‌ன் இர‌த்த‌ம் வ‌ழிய‌ வ‌ழிய‌ கீழே விழுந்து ச‌ரிந்தான்.

அப்போதே அங்கு வ‌ந்து சேர்ந்த‌ ச‌ந்ரா அதிர்ச்சியுட‌ன், "அபி..! உன்ன‌ யாரு இப்பிடி ப‌ண்ண‌து?" என்ற‌ப‌டி அவ‌னை த‌ன் ம‌டியில் கிட‌த்த‌ முய‌ற்சிக்க‌, அவ‌னோ வ‌லியில் க‌ண்க‌ள் சிவ‌ந்த‌ நிலையில், ச‌..ச‌ந்ரா!" என்று ம‌ட்டும் கூற‌, அவ‌ன் வ‌யிற்றில் குத்துப்ப‌ட்ட இட‌த்தில் இர‌த்த‌ம் நிறைய‌ சென்றுக்கொண்டிருந்த‌து.

அதை பாத்து ப‌த‌றிய‌ ச‌ந்ரா, "உன‌க்கு ஒன்னும் ஆகாது. வா ந‌ம்ம‌ ஹாஸ்பிட்ட‌ல் போலாம்." என்று கூற‌,

அபி, "இல்ல‌. நா பொழைக்க‌மாட்டேன். உன்னால‌ என்ன‌ காப்பாத்த‌ முடியாது. க‌த்தி ந‌ல்லா ஆழ‌மா எற‌ங்கியிருக்கு. நா செத்திறுவேன்." என்று இறுகிய‌ குர‌லில் கூறினான்.

அதை கேட்ட‌ ச‌ந்ராவிற்கோ க‌ண்ணீர் நிற்காம‌ல் வ‌ர‌, "அப்பிடியெல்லா ஒன்னும் ஆகாது. வா நாம‌ ஒட‌னே போலாம்." என்று அவ‌னை தூக்க‌ முய‌ற்சிக்க‌, அவ‌னோ வேண்டாம் என்று த‌டுத்து, "மொத‌ல்ல‌ நா சொல்ற‌த‌ கேளு." என்றான் இறுகிய‌ குர‌லில்.

அதை கேட்டு அவ‌னை பார்த்த‌ ச‌ந்ரா, "இல்ல‌ நீ மொத‌ல்ல‌ ஹாஸ்பிட்ட‌லுக்கு வா. நாம‌ எதுவா இருந்தாலும் அப்ற‌ம் பேச‌லாம்." என்று ப‌த‌றிய‌ப‌டி அவ‌னை தூக்க‌ முய‌ற்சிக்க‌, அவ‌னோ மீண்டும் அவ‌ளை த‌டுத்து இறுகிய‌ குர‌லில் வ‌லியுட‌ன், "சொல்ற‌த‌ கேளு ச‌ந்ரா. என்ன‌ குத்துன‌வ‌ன்.." என்று எதோ கூற‌ வ‌ர‌,

"சொல்லு அபி. உன்ன‌ இப்பிடி ப‌ண்ண‌து யாரு? சொல்லு, யார் உன்ன‌ இப்பிடி ப‌ண்ண‌து?" என்று அவ‌ள் கேட்க‌,

அத‌ற்கு அபி க‌டின‌ப்ப‌ட்டு வார்த்தைக‌ளை வெளியிட்டு, "என்ன‌ இப்பிடி ப‌ண்ண‌து வேற‌ யாரும் இல்ல‌. அவ‌ன்.." என்று கூற‌ வ‌ர‌,

ச‌ந்ரா, "சொல்லு அபி. நா அவ‌ன‌ நிச்ச‌ய‌மா சும்மா விட‌மாட்டேன்." என்று கொலைவெறியுட‌ன் கூறினாள்.

"என்ன‌ இப்பிடி ப‌ன்ன‌து, அர்ஜுன்தா." என்றான் அபி.

அதை கேட்டு அதிர்ந்த‌ ச‌ந்ரா, "என்ன‌? அர்ஜுனா?" என்று கேட்க‌,

அபி, "ஆமா அவ‌ந்தா. அவ‌ன் நாம‌ மெஹ‌ந்தி ஃப‌ங்ஷ‌ன்ல‌ பேசிகிட்டிருக்கும்போது பாத்துட்டான். அதோட அவனுக்கு எல்லா விஷயமும் தெரிஞ்சிருச்சு. அதா அவ‌ன் என்ன‌ இப்பிடி ப‌ண்ணிட்டான்." என்று கூறிய‌வ‌னின் வார்த்தைக‌ள் மேலும் இறுக‌, "உ..உன் முன்னாடி. உன் முன்னாடி அவ‌ன் ந‌ல்ல‌வ‌ன் மாதிரி ந‌டிக்கிறான் ச‌ந்ரா. அவ‌ன் உன்ன‌ அடைய‌ற‌துக்காக‌ என்ன‌ ம‌றுப‌டியும் கொல்ல‌ துணிஞ்சிட்டான்." என்று கூறி மூச்சை இழுத்த‌வ‌ன், "அவ‌ன விடாத‌." என்று இறுக்க‌மாக‌ கூற‌, அதை கேட்ட‌ ச‌ந்ரா, "விட‌மாட்டேன் அபி. நீ மொத‌ல்ல‌ வா நாம‌ ஹாஸ்பிட்ட‌ல் போலாம்." என்று அழுத‌ப‌டி கூற‌,

அபி, "அவ‌ன‌ விட்டுடாத‌. இந்த‌ ஜென்ம‌த்துலையும் ந‌ம்ப‌ள‌ பிரிச்ச‌ அவ‌ன‌ விட்டுட‌வே விட்டுடாத‌."என்று கூறிய‌ப‌டியே அவ‌ன் மூச்சு நின்றுவிட்ட‌து.

அதை பார்த்து அதிர்ந்த‌ ச‌ந்ரா ச‌த்த‌மாக‌ அழுதாள். உட‌னே எழுந்து அங்கிருந்து சென்று யாராவ‌து உத‌விக்கு வ‌ருவார்க‌ளா என்று பார்த்துக்கொண்டிருந்தாள். தான் வ‌ந்த‌ ஆட்டோவும் சென்றிருக்க‌, அப்போதே வேறு ஒருவ‌ர் அங்கு வ‌ந்தார். அவ‌ரை பார்த்த‌ ச‌ந்ரா உட‌னே சென்று, "அண்ணா ப்ளீஸ் என‌க்கு ஹெல்ப் ப‌ண்ணுங்க‌." என்று ப‌த‌றிய‌ நிலையில் கூற‌,

அவ‌ள் நிலையை பார்த்த‌ அவ‌ரும், "என்ன‌ ஆச்சுமா?" என்று கேட்க‌,

ச‌ந்ரா, "என்னோட‌ ஃபிர‌ண்டு அங்க‌ அடிப்ப‌ட்டு கெட‌க்குறான்." என்று அழுத‌ப‌டி கூற‌,

அதை கேட்டு ப‌த‌றிய‌ அவ‌ரும், "அப்பிடியா? வாமா. போலாம்." என்று அவ‌ளுட‌ன் செல்ல‌, இருவ‌ரும் அபி இருக்கும் இட‌த்தை வ‌ந்த‌டைந்த‌ன‌ர்.

அப்போது அவ‌ர், "எங்கம்மா?" என்று கேட்க‌,

சந்ரா, "அதோ அங்க." என்று கை காட்டிய‌ப‌டி திரும்ப‌, அங்கு யாருமே இல்லை.

அதை பார்த்த‌ அவ‌ர், "என்ன‌ம்மா, யாரோ அடிப்ப‌ட்டு கெட‌க்குறாங்க‌ன்னு சொன்ன‌? ஆனா அங்க‌ யாரையுமே காணோ?" என்று கேட்க‌, அதை பார்த்த‌ ச‌ந்ராவோ அதிர்ச்சியில் உறைந்து நின்றிருந்தாள்.

அதை பார்த்த‌ அவ‌ரும் அவ‌ள் தோள்க‌ளை ப‌ற்றி, "ஹ‌லோ! எங்க‌ம்மா உன் ஃபிர‌ண்டு?" என்று கேட்க‌,

அதில் திடுக்கிட்ட‌ ச‌ந்ரா, "இங்க‌தா அண்ணா இருந்தான்." என்று அவ‌ன் விழுந்து கிட‌ந்த‌ இட‌த்தை பார்த்த‌ப‌டி கூற‌, அங்கு அவனின் இர‌த்த‌ அடையாள‌ம்கூட‌ இல்லாம‌ல் இருந்த‌து.

உண்மையில் அர்ஜுன் ந‌ல்ல‌வ‌னா இல்லை அர‌க்க‌னா? இங்கு யார் கூறுவ‌து உண்மை, அபியா இல்லை ச‌ந்ராவின் ம‌ன‌மா? உண்மையில் அபிக்கு நேர்ந்த‌து என்ன‌? அத‌ற்கு கார‌ண‌ம் யார்? நொடியில் அபி ம‌றைந்த‌து எவ்வாறு? அடுத்த‌தாக‌ ச‌ந்ராவின் முடிவு என்ன‌வாக‌ இருக்கும்? இப்ப‌டியான‌ அனைத்து கேள்விக‌ளுக்கும் ப‌தில் தெரிந்துக்கொள்ள‌ காத்திருங்க‌ள்.

- ஜென்ம‌ம் தொட‌ரும்...
 

Author: Oviya Blessy
Article Title: CHAPTER-21
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.