Chapter-14

thenaruvitamilnovels

The World of Words
Staff member
Dec 25, 2024
163
0
16
www.amazon.com
தன் வீட்டிற்கு சென்று குளித்து கிளம்பி வரும்போது தேவையான உணவுகளை வாங்கிக் கொண்டு தேன்மொழியின் வீட்டிற்கு வந்தான் உதையா.

அப்போதும் விஜயா சாப்பிட மாட்டேன் என்று அடம் பிடிக்க, தேன்மொழியை கண்டுபிடிக்க வேண்டும் என்பதையே காரணமாக சொல்லி ஆதவனும், உதையாவும் அவளை சமாதானப்படுத்தி சாப்பிட வைத்தார்கள்.

அப்போது உதையா ‌“நான் இங்க இல்லாத சமயத்துல போலீஸ் ஸ்டேஷன்ல இருந்து ஏதாவது கால் வந்துச்சா?

தேனை பத்தி ஏதாவது சொன்னாங்களா? அந்த ஆளு தான் எதா இருந்தாலும் நான் கால் பண்ணி சொல்றேன். நீங்க நாளைக்கு வாங்கன்னு சொன்னான்..!!” என்று சொல்ல,

“அதெல்லாம் யாரும் கால் பண்ணல அண்ணா.

அதான் இன்ஸ்பெக்டர் நேத்தே தெளிவா சொல்லிட்டாரே.. தேன்மொழியை கண்டுபிடிக்கிறது ஒன்னும் அவங்களுக்கு இம்பார்ட்டண்ட் ஆன விஷயம் இல்ல.

டெய்லி அவங்க பார்க்கிற பல கேஸ்ல இதுவும் ஒன்னு.

ஆல்ரெடி பெண்டிங்ல இருக்கிற கேஸை பார்க்கிறதிலேயே அவங்க பிஸியா இருப்பாங்க.

சோ அவங்க வந்து விசாரிச்சு அக்காவ கண்டுபிடிச்சு தருவாங்கன்னு நம்பி அதுவரைக்கும் வெயிட் பண்ணிட்டு இருக்கறதெல்லாம் நீங்க சொன்ன மாதிரி வேஸ்ட் ஆப் டைம் தான்.

தேன்மொழிய கரெக்டா எந்த இடத்தில இருந்து கடத்திருக்காங்கன்னு நமக்கு தான் தெரிஞ்சிருச்சே..!! ‌

இப்ப சும்மா போலீஸ் ஸ்டேஷனுக்கு போறதுக்கு பதிலா, அந்த இடத்துக்கு போய் அக்கம் பக்கம் இருக்கிற வீட்ல சிசிடிவி கேமரா வச்சிருக்காங்க இல்ல.. அவங்க கிட்ட ஃபுட்டேஜை காட்ட சொல்லி கேட்டு பாப்போம்.

அதுல நமக்கு ஏதாவது இன்பர்மேஷன் கிடைச்சதுன்னா அத கொண்டு போய் ஸ்டேஷன்ல கொடுக்கலாம். அப்பையாவது அவங்க சைடுல இருந்து ஏதாவது ஸ்டெப் எடுக்குறாங்களான்னு பார்ப்போம்.

நம்மளும் நமக்கு தெரிஞ்ச மாதிரி தேடி பார்க்கலாம். எப்படியாவது அவளை சீக்கிரம் கண்டுபிடிக்கணும்.” என்று ஆதவன் சொல்ல, விஜயாவிற்கும், உதையாவிற்கும் கூட ‌ அது தான் சரி என்று பட்டது.

அதனால் சாப்பிட்டு முடித்தவுடன் மீண்டும் அந்த இடத்திற்கு சென்று அங்கே வாசலில் சிசிடிவி கேமரா வைத்திருப்பவர்களின் வீட்டிற்கு சென்று விசாரிக்க தொடங்கினார்கள்.


ஆருத்ராவுடன் சேர்ந்து சாப்பிட்டு முடித்த தேன்மொழி “நீ வீட்டிலயே இருக்கியே.. ஸ்கூலுக்கு எல்லாம் போக மாட்டியா..??” என்று கேட்க,

“முன்னாடி நானும் சித்தார்த்தும் ஸ்கூலுக்கு போயிட்டு தான் இருந்தோம்.

ஆனா நீங்க இங்க இருந்து போனதுக்கு அப்புறம், அப்பாவும் எப்ப பார்த்தாலும் தூங்கிட்டே இருக்காரா.. அதனால நாங்க கொஞ்ச நாள் ஸ்கூலுக்கு போவவே இல்லை.

அப்புறம் ஆகாஷ் சித்தப்பா ஹோம் ஸ்கூலிங் அரேஞ்ச் பண்ணி கொடுத்துட்டாரு.

நீங்க திரும்பி வந்ததால இப்போ எங்களுக்கு ஒன் வீக் லீவ்.

லீவ் முடிஞ்சதுக்கு அப்புறம், எங்க டீச்சர்ஸ் வீட்டுக்கே வந்து தியரி அண்ட் பிராக்டிகல் கிளாஸ் சொல்லிக் கொடுத்துட்டு போவாங்க.” என்றாள் ஆருத்ரா.

குளிப்பதற்காக தனது ரூமிற்கு சென்றிருந்த மகிழ் அழுது கொண்டே “மம்மீ.. மம்மீ..!!” ஏற்றபடி அங்கே ஓடி வந்து லிண்டாவை தேடினான்.

அவள் அங்கே இல்லாததால் அவன் தொடர்ந்து அழுது கொண்டே சுற்றி முற்றி பார்த்து அவளைத் தேடிக் கொண்டிருக்க, “ஹே மகிழ் ஏன் அழுகிறா?” என்று கேட்டாள் ஆருத்ரா.

“நான் உன் கிட்ட சொல்ல மாட்டேன் போ.” என்று அவன் சொல்ல, “ஏன் சொல்ல மாட்ட? லிண்டா சித்தி ஜனனி அத்தை கூட எங்கயோ போயிருக்காங்க.

நீ அவங்கள தேடி அழுதுட்டு இருக்க.

நான் உன் அக்கா. இப்ப நானும் பெரிய பொண்ணு தான்.

நீ அழுதா நான் ஏன்னு கேட்பேன். சித்தி வீட்ல இல்லாதப்ப நான் தானே உன்ன பாத்துக்கணும்.” என்று பெரிய மனுஷி போல அக்கறையுடன் விசாரித்தாள் ஆருத்ரா.

அப்போதும் மகிழன் தனக்கு என்ன பிரச்சனை என்று அவளிடம் சொல்லாமல் “நீ எப்படி கேட்டாலும் நான் உன் கிட்ட சொல்ல மாட்டேன் ஆரு‌.” என்று சொல்லிவிட,

“ஏன் சொல்ல மாட்டேங்குற?” என்று அப்போதும் விடாப்பிடியாக கேட்டாள் ஆருத்ரா‌.

“ம்ம்.. நான் உன் கிட்ட என்னன்னு சொன்னா நீ அத வெச்சே என்னை கலாய்ப்ப. தேவையா எனக்கு?

அதான் நான் சொல்ல மாட்டேன்.

ஆனா நான் ரொம்ப சோகமா இருக்கேன்.

மம்மீ வந்ததுக்கு அப்புறம் முதல்ல உங்க கிட்ட இத பத்தி சொல்லணும்.” என்று தன் கண்ணீரை துடைத்தபடி சொன்னான் மகிழன்.

அந்த இரண்டு குழந்தைகளின் பேச்சை அதுவரை அமைதியாக கேட்டுக் கொண்டிருந்த தேன்மொழி மெல்ல நடந்து மகிழனின் அருகே சென்று மென் குரலில்,

“ஏன் எதா இருந்தாலும் நீ உங்க மம்மீ கிட்ட தான் சொல்லுவியா?

நான் உனக்கு பெரியம்மா தானே! என் கிட்ட சொல்ல மாட்டியா?

நீ அப்பவே பசிக்குதுன்னு சொன்னில.. வா.. நான் உனக்கு சாப்பாடு போட்டு கொடுக்கிறேன்.

எதுக்காகவும் இனிமே அழக் கூடாது ஓகேவா?” என்று அன்புடன் கேட்க,

“எனக்கு இப்ப பசிக்கல. சாப்பிடுற மூடே போயிடுச்சு.” என்று சொன்ன மகிழன் சோகமாக தன் முகத்தை வைத்துக்கொள்ள,

தன் ஒற்றைக் கையால் அவன் முகத்தை ஏந்தி கொண்ட தேன்மொழி “என்ன ஆச்சு உனக்கு? நான் உன்னை கிண்டல் பண்ணி சிரிக்கலாம் மாட்டேன்.

பெரியம்மாவும் அம்மா மாதிரி தான். நீ எதுவா இருந்தாலும் என் கிட்ட சொல்லு.

நான் ஆருத்ரா கிட்ட கூட சொல்ல மாட்டேன் பிராமிஸ்...!!” என்று மெல்ல அவன் காதுகளில் கிசுகிசுத்தாள் தேன்மொழி.

அவள் அப்படி சொன்னவுடன், மகிழன் தனது சிறுவயதில் ஆருத்ராவின் அம்மாவோடு தான் பேசி விளையாடிய தருணங்கள் அனைத்தையும் நினைத்துப் பார்த்தான்.

இரண்டு வருடங்களுக்கு பிறகு மீண்டும் தனது பெரியம்மா தனக்கு கிடைத்து விட்டதால் அவனுக்கும் சந்தோஷமாக தான் இருந்தது.

அதனால் உடனே அவள் கையை பிடித்து ஒரு ஓரமாக அழைத்துச் சென்ற மகிழ் ஆருத்ரா தன்னை கவனிக்கிறாளா? என்று எட்டிப் பார்த்துவிட்டு அவன் தனது குட்டி கைகளில் மறைத்து வைத்திருந்த ஒரு சிறிய பொருளை தன் கையை விரித்து அவளிடம் காண்பித்து,

“எனக்கு இதோட மூணு பல்லு கொட்டிடுச்சு.

அம்மா இந்த மாதிரி பல்லு விழுந்தா மறுபடியும் வந்துரும்னு சொன்னாங்க.

பட் ஆல்ரெடி எனக்கு விழுந்த பல்லே இன்னும் வரல big மம்மீ. இப்ப புதுசா இந்த பல்லு வேற விழுந்திருச்சு.

இப்படியே ஒவ்வொரு பல்லா விழுந்து தாத்தாவுக்கு இருக்கிற மாதிரி எனக்கும் பல்லே இல்லாம ஆயிடுச்சுன்னா நான் எப்படி சாப்பிடுவேன்?

எனக்கு இப்பவே ரொம்ப பசிக்குது. இதே மாதிரி தினமும் பசிக்கும்ல!” என்று கலங்கிய கண்களுடன் கேட்டான்.

அந்த குழந்தையின் அப்பாவித் தனத்தை கண்ட தேன்மொழிக்கு சிரிப்புதான் வந்தது. அதேசமயம் அவள் ஏற்கனவே தன் மனதிற்குள் போட்டு வைத்திருந்த திட்டம் பற்றியும் அவளுக்கு ஞாபகம் வர,

அவன் உயரத்திற்கு கீழே குனிந்த தேன்மொழி “என் கிட்ட ஒரு மேஜிக் ட்ரிக் இருக்கு.

அதே மாதிரி நம்ம செஞ்சோம்னா, உனக்கு சீக்கிரம் எல்லா பல்லும் வளந்துரும்..

நீ என் கூட வரியா நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து அதை பண்ணலாம்?” என்று கேட்டாள்.

தன் பல்லை காப்பாற்றிக்கொள்ள ஏதோ வழி கிடைத்த சந்தோஷத்தில் தன் கண்ணீரை வேகமாக துடைத்துக் கொண்ட மகிழன்,

“எனக்கு சீக்கிரமா ஒன் டேல புது பல்லு வர என்ன பண்ணனும் big mummy?

அந்த மேஜிக் ட்ரிக் என்னன்னு சொல்லுங்க. நம்ம இப்பவே அத பண்ணலாம்.” என்று சொல்ல,

“நான் சொல்றேன். அதென்ன புதுசா இருக்கு என்ன நீ ஏன் big mummyன்னு கூப்பிடுற?” என்று புரியாமல் கேட்டாள் அவள்.

“அதுவா..!! நீங்க அத மறந்துட்டீங்களா? நீங்க எனக்கு பெரியம்மா தானே..

சோ நான் உங்கள எப்பையும் big mummyன்னு தானே கூப்பிடுவேன்.. ஏன் இனிமே நான் உங்கள அப்படி கூப்பிடக்கூடாதா?” என்று அவன் பாவமாக தன் முகத்தை வைத்துக் கொண்டு கேட்க,

அவனைப் பார்த்து திருப்தியாக புன்னகைத்த தேன்மொழி “சேச்சே.. அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல.

உனக்கு எப்படி பிடிக்குதோ நீ என்னை அப்படியே கூப்பிடு. இது‌ கூட நல்லா தான் இருக்கு.

ஓகே தென், நீ என்ன இப்பவே கார்டன் ஏரியாவுக்கு கூட்டிட்டு போ.

அங்க போனா தான் நான் சொன்ன மேஜிக் ட்ரிக்கை பண்ண முடியும்.” என்று சொல்ல,

“அப்படின்னா சீக்கிரம் இப்பவே வாங்க போலாம்.” என்ற மகிழன் அவள் கையை பிடித்து இழுத்துக் கொண்டு கார்டன் ஏரியாவை நோக்கி ஓடினான்.

சாதாரண கூர்த்தா பேண்ட் செட்டை அணிந்திருந்த தேன்மொழி தனது நீண்ட கூந்தலை வழக்கம் போல அழகாக பின்னலிட்டு இருந்தாள்.

அவள் அவனுடன் சேர்ந்து ஓடும்போது, அதுவும் காற்றில் பறந்து அங்கும் இங்கும் ஆடி அவள் பின்னே ஓடிக் கொண்டிருந்தது.

ஓடி சென்று அவர்கள் இருவரும் கார்டன் ஏரியாவில் மூச்சு வாங்க நின்றார்கள்.

“இப்ப என்ன பண்ணனும் big mummy?” என்று மகிழன் கேட்க, சுற்றி முற்றி யாராவது இருக்கிறார்களா என்று பார்த்த தேன்மொழி அங்கே இருந்த ஒரு மரத்தின் அருகில் சென்று லேசாக தன் கைகளால் குளியை தோண்டி,

“இதுக்குள்ள நீ உன் பல்லை போட்டு புதைச்சு வச்சிரு.

என் தம்பி சின்ன பையனா இருக்கும்போது உன்ன மாதிரி தான் அவனுக்கும் பல்லு விழும் போது எனக்கு சீக்கிரமா பல்லு வளரனும்னு அழுவான்.

அப்போ நானும் அவனும் சேர்ந்து எங்க வீட்ல இருந்த ரோஜா பூ தொட்டில அவன் பல்ல புதைச்சு வச்சோம்.

ஒரே வாரத்துல அவனுக்கு பல்லு வளந்துருச்சு தெரியுமா..??

இது தான் நான் சொன்ன மேஜிக் ட்ரிக்.

நீயும் இப்படி பண்ணா சீக்கிரமா உனக்கும் பல்லு வளர்ந்திடும்.” என்று சொல்லிவிட்டு அவனைப் பார்த்து அழகாக புன்னகைத்தாள்.

அவளை ஆச்சரியமாக பார்த்த மகிழ் “நெஜமாவா? இப்படி மண்ணுல இருந்து செடி தான் வரும்.

பல்லு கூட வருமா?” என்று கேட்க, “நீ வரும்னு நம்பனும். அப்ப தான் சீக்கிரம் வரும்.” என்றாள் தேன்மொழி.

அவள் சொன்னதைப் போலவே தன் கையில் இருந்த குட்டி பல்லை அந்த குழிக்குள் போட்டு மூடிய மகிழன்,

“எனக்கு நாளைக்கே புது பல்லு வந்துருமா?” என்று ஆசையாக கேட்க, ஒரு நொடி யோசித்த தேன்மொழி “நான் இப்ப இங்க இருந்து ஓடப் போறேன்.

நான் 100 எண்ணி முடிக்கிறதுக்குள்ள நீ என்ன புடிச்சுட்டா, உனக்கு நாளைக்கே புது பல்லு வந்துரும்.

என்ன டெஸ்ட் பண்ணி பார்த்திடலாமா..??” என்று அவனிடம் கேட்ட தேன்மொழி “இவன யோசிக்க விடக் கூடாது.

யாரோட disturbanceம் இல்லாம இந்த இடம் முழுக்க சுத்தி பாக்குறதுக்கு இது ஒன்னு தான் ஆப்சன்.

இப்ப விட்டுட்டா இந்த இடத்துல எனக்கு ஹெல்ப் பண்ற மாதிரி யார் இருக்காங்கன்னு என்னால கண்டுபிடிக்க முடியாமயே போயிடும்.” என்று நினைத்து அவன் பதில் சொல்ல வருவதற்குள் “சீக்கிரம் வா.. வந்து என்ன புடி.

1, 2, 3.. சீக்கிரம் வா மகிழ். நீ என்ன நான் 100 கௌண்ட் பண்ணி முடிக்கறதுக்குள்ள புடிச்சா தான் உனக்கு நாளைக்கே புது பல்லு வரும்.” என்று சொல்லிவிட்டு அங்கும் இங்கும் ஓடி அவனுக்கு போக்கு கட்ட தொடங்கினாள்.

அவள் டச்சராக இருந்தாலும் இன்னொரு பக்கம் ஸ்போர்ட்ஸிலும் கெட்டிக்காரி தான்.

எத்தனை ஓட்டப்பந்தயங்களில் ஓடி இருப்பாள்.. அவளை இந்த சிறு பையனால் பிடித்து விட முடியுமா என்ன..??

எங்களது பேஸ்புக் குரூப்பில் இணைய இந்த லிங்கை கிளிக் செய்யவும்:

 

Author: thenaruvitamilnovels
Article Title: Chapter-14
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.