CHAPTER-14

Oviya Blessy

Member
Jan 4, 2025
46
0
6


அமிர்த்தாவின் கோப‌த்தையும் புன்ன‌கையுட‌ன் இர‌சித்த‌வ‌ன், "என்னோட பேரு உதயா. த‌ங்க‌ம், வைர‌ம் இதெல்லா கொள்ளைய‌டிக்கிற‌துதா என்னோட‌ வேல‌. ஆனா உன்ன‌ பாத்த‌துக்கு அப்ற‌ம், உன்னோட‌ ம‌ன‌ச‌ கொள்ளைய‌டிக்குற‌துதா இப்ப‌ என் மொத‌ல் வேல‌." என்று கூற‌, அவ‌ள் முக‌மோ கோவ‌த்தில் சிவ‌க்க‌, அதையும் இர‌சித்த‌ப‌டி அவ‌ள் முக‌ம் நோக்கி குனிந்த‌வ‌ன், "ஏன்னா இந்த‌ த‌ங்க‌ம், வைர‌ம் இதெல்லாவிட‌ நீதா அதிக‌ம் ஜொலிக்கிற‌." என்றான்.

அவ‌னின் வார்த்தைக‌ள் அவ‌ளுள் அறுவ‌றுப்பை ஏற்ப‌டுத்த‌, மேலும் கொந்த‌ளித்த‌வ‌ள், உட‌னே அவ‌னைவிட்டு த‌ள்ளி நின்று, "நீ யார்கிட்ட‌ என்ன‌ பேசிகிட்டிருக்க‌ன்னு புரியுதா?" என்றாள் கோவ‌த்துட‌ன்.

அதை கேட்டு புன்ன‌கையுட‌ன் நிமிர்ந்த‌ உதயா, "ந‌ல்லா புரியுது. என‌க்கு இப்போ தோனுறதெல்லா ஒன்னே ஒன்னுதா. நீ என‌க்கு வேணும். அவ்வ‌ளோதா." என்றான் அசால்ட்டாக‌.

அதை கேட்டு கோப‌ம‌டைந்த‌ அமிர்த்தா, "உன‌க்கு என்ன‌ தைரிய‌ம்? என‌க்கு ஏற்க‌ன‌வே ஒரு காத‌ல‌ன் இருக்கான். உன்னோட‌ இந்த‌ ப‌க‌ல் க‌ன‌வு என்னிக்குமே ப‌ழிக்காது." என்றாள்.

அதை கேட்டு புன்ன‌கைத்துக்கொண்ட‌வ‌ன், "உன்ன‌ மாதிரி ஒரு பேர‌ழ‌கிக்கு க‌ாத‌ல‌ன் இல்ல‌ன்னாதா ஆச்ச‌ரிய‌ம். ஒன்னும் பிர‌ச்ச‌ன‌ இல்ல‌. நீ என‌க்குதா சொந்த‌ம். அவ‌ன‌ உன்ன‌ ம‌ற‌ந்திர‌ சொல்லு. அதுதா அவ‌னுக்கு ந‌ல்ல‌து." என்று க‌டைசி வ‌ரியை அழுத்த‌மாக‌ கூறினான்.

அத‌ற்கு மேலும் அவ‌னை முறைத்த‌ அமிர்த்தா, "எங்க‌ளோட‌ காத‌ல் ரொம்ப‌ வ‌லிமையான‌து. உன்னோட‌ மிர‌ட்ட‌லுக்கெல்லா அவ‌ன் ப‌ய‌ப்ப‌ட‌ மாட்டான்." என்றாள்.

உதையா, "என்ன‌ வேணாலும் சொல்லு. ஆனா இந்த‌ உல‌க‌த்துல‌யே என் அள‌வுக்கு உன்ன யாரும் காத‌லிக்க‌ முடியாது." என்றான் அழுத்த‌மாக‌.

அதை கேட்டு ந‌க்க‌லாய் சிரித்த‌வ‌ள், "காத‌லா? பாத்த‌ ப‌த்து நிமிஷ‌த்துல‌ வ‌ர்ற‌தெல்லாம் ஒரு காத‌லா? இத‌ காத‌ல்னு சொல்லி காத‌ல‌ அசிங்க‌ப்ப‌டுத்தாத‌." என்று ஏள‌ன‌மாய் கூற‌,

உத‌யா, "ப‌த்து நிமிஷ‌மோ பத்‌தாயிர‌ வ‌ருஷ‌மோ. காத‌ல‌ நேர‌த்தால‌ இல்ல‌, அதோட‌ ஆழ‌த்தால‌தா அள‌விட‌னும். என்னோட‌ காத‌ல் ஆழ‌மான‌து." என்று த‌ன் இத‌ய‌த்தில் கை வைத்து கூற‌,

அதை கேட்டு எரிச்ச‌ல‌டைந்த‌ அமிர்த்தா, "என் ஆதிய‌விட‌ என்ன‌ யாராலையும் அதிக‌மா காத‌லிக்க முடியாது. அத‌னால‌ ம‌ரியாதையா இங்கிருந்து போயிரு. அதுதா உன‌க்கு ந‌ல்ல‌து." என்று கூறிவிட்டு ந‌க‌ர‌, அவ‌னோ அவ‌ளின் க‌ர‌ம் ப‌ற்றி நிறுத்தி, "நீயும் என்ன‌ காத‌லிப்ப‌." என்றான்.

அதில் உட‌னே அவ‌ன் க‌ர‌த்தை உத‌றிய‌வ‌ள், "உன்ன‌ மாதிரி ஒரு கொள்ள‌க்கார‌ன‌ என்னிக்குமே நா காத‌லிக்க‌ மாட்டேன். இன்னொரு தெட‌வ‌ என்ன‌ தொட‌ணுன்னு முய‌ற்சி ப‌ண்ணாத‌." என்று க‌ண்க‌ளாலே அவ‌னை எச்ச‌ரித்த‌ப‌டி அங்கிருந்து ந‌க‌ர்ந்தாள்.



அவளின் இந்த‌ கோவ‌த்தையும் இர‌சித்த‌ப‌டியே நின்ற‌வ‌ன், அவ‌ள் காதில் விழுமாறு ச‌த்த‌மாக‌, "நீ என‌க்கு சொந்த‌மாக‌ப்போற‌ நாள், ரொம்ப‌ தூர‌த்துல‌ இல்ல‌ அழ‌கி...!" என்று ச‌த்த‌மாக‌ கூறினான்.

அதை ச‌ற்றும் காதில் வாங்காம‌ல் அமிர்த்தா வேக‌மாக‌ அங்கிருந்து சென்று, வீட்டிற்குள் நுழையும்போது, எதிரில் வ‌ந்த‌ ஆதியின் மீது மோதிவிடுகிறாள்.

பிற‌கு த‌டுமாறி அவ‌னை பார்த்த‌ அமிர்த்தா, "ஆதி! நீ எங்க‌ போன‌? உன்ன‌ எங்க‌ல்லா தேடுற‌து?" என்று கேட்க‌,



அப்போது ஆதி கையில் எதையோ ம‌றைத்து பின்னால் வைத்திருந்தான். அதை க‌வ‌னித்த‌ அமிர்த்தா, "ஆதி! பின்னாடி என்ன‌ கைல‌? எதையோ ம‌றைகிற, என்ன‌ அது?" என்று கேட்க‌,



அத‌ற்கு ஆதி புன்ன‌கையுட‌ன் பின்னால் ம‌றைத்து வைத்திருந்த‌ சிவ‌ப்பு ரோஜா பூக்க‌ளை அவ‌ளிட‌ம் நீட்ட‌, அதை பார்த்த‌ அமிர்த்தா விய‌ப்புட‌ன் ம‌கிழ்ந்து, "இத‌ கொண்டு வ‌ர‌தா போனியா?" என்று கேட்க‌,

அவ‌னோ "ம்ம்" என்று கூறி புன்ன‌கைத்தான்.

அமிர்த்தாவிற்கு சிவ‌ப்பு ரோஜாக்க‌ள் என்றால் மிக‌வும் இஷ்ட‌ம். அதை பார்த்தால் போதும் அவ‌ளின் அனைத்து க‌வ‌லையும் ம‌ற‌ந்துவிடுவ‌தாக‌ எண்ணுவாள். இவ்வூரியில் வெள்ளை ரோஜாக்க‌ள்தான் எளிதில் கிடைக்கும். ஆனால் சிவ‌ப்பு ரோஜாக்க‌ள் கிடைப்ப‌தே அபூர்வ‌ம். அத‌ற்காக‌ காட்டிற்குள் வெகு தூர‌ம் செல்ல‌ வேண்டி இருக்கும். அவ‌ற்றை த‌ன‌க்காக‌ க‌டின‌ப்ப‌ட்டு இவ‌ன் கொண்டு வ‌ந்த‌தை எண்ணி ம‌கிழ்ந்த‌வ‌ள், உட‌னே அவ‌னை க‌ட்டி அணைத்துக்கொண்டாள். அவ‌னும் அவ‌ளை புன்ன‌கையுட‌ன் வாரி அணைத்துக்கொண்டான்.

அப்போது அமிர்த்தாவிற்கு ஏனோ உத‌யாவின் முக‌ம் அவ‌ள் நினைவில் வ‌ந்து செல்ல‌, "என்ன‌விட‌ உன்ன‌ யாராலையும் அதிக‌மா காத‌லிக்க‌ முடியாது." என்று கூறிய‌ உத‌யாவின் வார்த்தைக‌ள் நினைவிற்கு வ‌ர‌, அதில் திடுக்கிட்ட‌வ‌ளின் ம‌ன‌திற்குள், "என்ன‌ என் ஆதிய‌விட‌ அதிக‌மா யாராலையும் காத‌லிக்க‌ முடியாது. அந்த‌ உத‌யா என் ஆதியோட‌ கால் தூசுக்கு கூட‌ வ‌ர‌மாட்டான். செரியான அயோக்கிய‌ன்." என்று எண்ணி ஆதியை இறுக‌ க‌ட்டிக்கொண்ட‌வ‌ள், "நாங்க‌ இதே மாதிரி எப்ப‌வும் ச‌ந்தோஷ‌மா இருக்க‌ணும். ம‌றுப‌டியும் அந்த‌ உத‌யாவ‌ என் க‌ண்ல‌ காட்டாதீங்க‌ ஈஷ்வ‌ரா." என்று ம‌ன‌திற்குள் வேண்டிக்கொண்டாள்.

அடுத்த‌ நாள் காலை....

அமிர்த்தாவும் ஆதியும் அருவியின் ந‌டுவே சிரித்து பேசி ம‌கிழ்ச்சியாக‌ விளையாடிக் கொண்டிருக்கும்போது, அன்னிச்சையாக‌ அந்த‌ வ‌ழியாக‌ வ‌ந்த‌ கொள்ளைக்கார‌ உதையா இவ‌ர்க‌ளை பார்த்துவிட்டான். அதை பார்த்த‌ நொடி உதயாவின் ம‌ன‌தில் தீ கொளுந்துவிட்டு எரிய‌, அப்போதே நேற்று அவ‌ள் கூறிய‌ அந்த‌ ஆதி இவ‌ன்தான் என்று புரிந்த‌து.

அங்கு த‌ன்ன‌வ‌ளை தொட்டு தொட்டு விளையாடும் ஆதியை பார்க்க‌ பார்க்க‌ கோப‌ம் த‌லைக்கேற‌, உட‌னே கோப‌த்துட‌ன் வேக‌மாக‌ வ‌ந்து ஆதியை தாக்கி கீழே த‌ள்ளினான் உத‌யா. அதில் அமிர்த்தா அதிர்ச்சியுட‌ன் "ஆதி!" என்று க‌த்த‌,

அதில் கீழே சென்று விழுந்த‌ ஆதி, த‌ன்னை அடித்த‌ உத‌யாவை கேள்வியுட‌ன் பார்க்க‌, அவ‌ன் ஏனென்று யோசிக்கும் முன்பே அவ‌னை அடிக்க‌ துவ‌ங்கினான் உத‌யா.

"அவ‌ என‌க்கான‌வ‌. என்ன‌ தைரிய‌ம் இருந்தா என் முன்னாடியே அவ‌ள‌ தொடுவ‌?" என்று கேட்ட‌ப‌டி அவ‌ன் முக‌த்திலேயே முழு கோப‌த்துட‌ன் குத்த‌, அதை பார்த்த‌ அமிர்த்தாவோ மீண்டும் "ஆதி..!" என்று க‌த்த‌, அப்போதே அவ‌ன் அடிக்கும் நோக்க‌த்தை புரிந்துக்கொண்ட‌ ஆதி, "என்ன‌டா சொன்ன‌? அவ‌ என்னோட‌ காத‌லி." என்று அவ‌னும் அவ‌னுட‌ன் ச‌ண்டையிட‌ துவ‌ங்கினான்.

இருவ‌ரின் ச‌ண்டையும் வ‌ள‌ர்ந்துக்கொண்டே போக‌, இருவ‌ரும் மாற்றி மாற்றி அடித்துக்கொண்ட‌ன‌ர். அப்போது ச‌ண்டையில் உதயா நிமிட‌த்திற்கு ஒரு முறை அமிர்த்தாவை திரும்பி பார்க்க‌, அப்போது ஒவ்வொரு முறை ஆதி அடி வாங்கும்போதும் அவ‌ளின் முக‌த்தில் தோன்றிய‌ துடிப்பை க‌வ‌னித்தான்.

அதை பார்த்த உதயாவிற்கு ஏனோ அது சிறிதும் பிடிக்க‌வே இல்லை. என‌வே அவ‌னை அடிப்ப‌தை நிறுத்திவிட்டு, அவ‌னிட‌ம் அமைதியாக‌ அடி வாங்க ஆர‌ம்பித்தான்.

அவ‌ன் அடிப்ப‌தை நிறுத்திய‌தும்தான் வேக‌த்தை கூட்டி அவ‌னை தாருமாறாக‌ அடிக்க‌ ஆர‌ம்பித்தான் ஆதி. ஆனால் உத‌யாவோ அப்போதும்கூட‌ அமிர்த்தாவையேதான் பார்த்துக்கொண்டிருந்தான். அவ‌ளின் ஒவ்வொரு அசைவுக‌ளையும் இர‌சித்துக்கொண்டே அடி வாங்கிக்கொண்டிருந்தான்.

இறுதியில் அடி வாங்கி அடி வாங்கி த‌ள்ளாடி கீழே ச‌ரிந்தான் உத‌யா.

அப்போது கோப‌த்துட‌ன் அவ‌ன் முன் வ‌ந்த‌ ஆதி, "அமிர்த்தா என‌க்கான‌வ‌. என‌க்கு ம‌ட்டுந்தா சொந்த‌ம். புரிஞ்சதா? இன்னொருதெட‌வ‌ அவ‌ பின்னாடி வ‌ராத‌. கொன்னிருவேன்." என்று கூற‌, அத‌ற்கும் அமிர்த்தாவை பார்த்து புன்ன‌கைத்த‌ப‌டியே கிட‌ந்தான் உத‌யா.

அதை பார்த்து அவ‌னை முறைத்த‌வ‌ன், "வா அமிர்த்தா." என்று அவ‌ள் கையை ப‌ற்றி அழைத்து சென்றான் ஆதி.

அப்போதும் உத‌யா செல்லும் அவ‌ளையே பாத்துக்கொண்டிருக்க‌, அமிர்த்தாவும் திரும்பி உதயாவை முறைத்த‌ப‌டியே அங்கிருந்து சென்றாள்.

அப்போது உத‌யாவை தேடிக்கொண்டு அந்த‌ வ‌ழியே வ‌ந்த‌ அவ‌னின் கொள்ளைக்கார‌ர்க‌ள், அவ‌னின் இந்நிலையை க‌ண்டு ப‌த‌றி உட‌னே அவ‌னை தூக்கிக்கொண்டு அவ‌னுடைய‌ வீட்டிற்கு கொண்டு சென்ற‌ன‌ர். பிற‌கு அங்கே வைத்து அவ‌ன் காய‌ங்க‌ளுக்கு ம‌ருந்திட்டு, அவ‌னுக்கு உண்ண‌ உண‌வும் கொடுத்து அவ‌னை உப‌ச‌ரித்தார்க‌ள்.

அப்போது அவ‌னுக்கு ம‌ருந்திட்டுக்கொண்டிருந்த‌வ‌ன், "ஏ த‌லைவா நீங்க‌ அவ‌ன‌ அடிக்க‌ல‌? உங்க‌ முன்னாடி அவ‌ வெறும் ஒரு தூசுதான‌?" என்று கேட்க‌,

அத‌ற்கு உதயா, "ஆமா. ஆனா நா அவ‌ங்கிட்ட‌ அடிவாங்குபோது அவ‌ சிரிச்சா" என்றான் ம‌ய‌க்க‌ புன்ன‌கையுட‌ன்.

அதை கேட்ட‌ அவ‌னோ குழ‌ம்பிய‌ப‌டி, "எவ‌ சிரிச்சா? புரிய‌லய த‌லைவா." என்று கூற‌,

அதையெல்லாம் காதில் வாங்காத‌ உதயாவோ அமிர்த்தாவின் அந்த‌ பூ முக‌த்தையும் அவ‌ளின் அந்த‌ பொன் சிரிப்பையுமே திரும்ப‌ திரும்ப‌ நினைத்து பார்த்து ம‌ய‌க்க‌ உல‌கில் மித‌ந்துக்கொண்டிருந்தான்.

அதை பார்த்த‌
ம‌ற்றொருவ‌ன், "ஓ... த‌லைவ‌ர் காத‌ல்ல‌ விழுந்திட்டாரு..." என்று கூறி இர‌க‌சிய‌மாய் சிரித்துக்கொண்டு, "செரி வாங்க‌ வாங்க‌ ந‌ம்ப‌ போலாம். த‌லைவ‌ர் த‌னியா இருக்க‌ட்டும்." என்று கூற‌,

அதை கேட்ட‌ அனைவ‌ரும் வெளியில் சென்றுவிட்ட‌ன‌ர். அப்போது மெத்தையில் சாந்த‌ உதயாவோ திரும்ப‌ திரும்ப‌ அமிர்த்தாவை ப‌ற்றியே யோசித்துக்கொண்டிருந்தான். அவ‌ளின் நினைவுக‌ளிலேயே அந்த‌ நாள் முடிவ‌டைந்த‌து.

அடுத்த‌ நாள் காலை...

உதயா அமிர்த்தாவை பார்க்க‌ செல்ல‌, அங்கோ அவனுக்கு ஒரு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.

அங்கு ச‌ங்க‌ர‌ன் கோவிலில், கொவிலின் பாதுகாவ‌ல‌ர் ம‌ற்றும் குருவான‌வ‌ர் த‌லைமையில் அமிர்த்தாவுக்கும் ஆதிக்கும் திரும‌ண‌ம் ந‌ட‌க்க‌ ஏற்பாடு ந‌ட‌ந்து கொண்டிருந்த‌து. அமிர்த்தாவின் அம்மாவும் அக்கா தாமிராவும் அவ‌ர்க‌ளின் வ‌ழ‌க்க‌ப்ப‌டி பெண்ணிற்கு க‌ட்ட‌ வேண்டிய‌ தாலியை அருகிலிருக்கும் த‌ங்க‌ள் குல‌ தெய்வ‌ கோவிலுக்கு ஆசீர்வாத‌ம் வாங்க‌ எடுத்து சென்றிருந்த‌ன‌ர். பிற‌கு அவ‌ர்க‌ள் இருவ‌ரின் ம‌ற்ற‌ சொந்த‌க்கார‌ர்க‌ள் ம‌ற்றும் அக்க‌ம் ப‌க்க‌த்தின‌ர் ம‌ட்டும் கூடி ச‌ட‌ங்கு ச‌ம்பார்தாய‌ங்க‌ளை முன்னின்று ந‌ட‌த்திக்கொண்டிருந்த‌ன‌ர். ஆதி ம‌ற்றும் அமிர்த்தாவின் முக‌த்திலோ புன்ன‌கைக்கு அள‌வே இல்லை.

அதை பார்த்துக்கொண்டிருக்க‌ உதயாவின் க‌ண்க‌ள் சிவ‌க்க‌, த‌ன் காத‌ல் இவ்வ‌ள‌வு சீக்கிர‌ம் த‌ன்னைவிட்டு செல்வ‌தை அவ‌னால் ஏற்றுக்கொள்ள‌ முடிய‌வில்லை.

அப்போது கோபத்தின் உச்சியில் இருந்த‌ உதயா, திரும‌ண‌ம் ந‌ட‌க்கும் அந்த‌ சிவ‌ன் கோவிலின் உள்ளே அராஜ‌க‌மாய் நுழைந்து, அங்கு ஆதியுடன் சண்டைப்போட‌ ஆர‌ம்பித்தான். அப்போது இவ‌னை இங்கு பார்த்த‌ ஆதியும் அவ‌னை அடிக்க‌ முய‌ற்சி செய்தான். ஆனால் உதயா த‌ன் மீது ஒரு அடிக்கூட‌ விழ‌ விடாம‌ல், அவ‌னை ச‌ர‌ மாறியாக‌ தாக்கினான். அதை பார்த்த‌ ம‌ற்ற‌ அனைவ‌ரும் அதிர்ச்சியுட‌ன் பின்னே த‌ள்ளி நிற்க‌, ப‌த‌றிய‌ப‌டி ஆதியிட‌ம் ஓடி வ‌ந்த‌ அமிர்த்தாவையும் ஒரு பெண் ப‌ற்றி பின்பே இழுத்து பிடித்துக்கொண்டார். அத‌னால் அமிர்த்தா, "ஆதி!" என்று க‌த்திய‌ப‌டி நின்றாள்.

உத‌யாவின் க‌ண்க‌ளில் அவ‌ன் மீது தெரிந்த‌து கொலைவெறி ம‌ட்டுமே. என‌வே அவ‌னின் கோப‌த்திற்கும் ஆக்ரோஷ‌த்திற்கு ஈடுகொடுத்து ஆதியால் போராட‌ முடியாம‌ல் போன‌து. அப்போது அங்கு அதிர்ச்சியில் நின்றிருந்த‌ அமிர்த்தாவிற்கோ என்ன‌ ந‌ட‌க்கிற‌தென்று புரியாம‌ல் இருக்க‌, அவ‌ளை க‌வ‌னித்த‌ உதயா ஆதியை விட்டுவிட்டு அமிர்த்தாவின் அருகில் வ‌ந்தான்.

அதை பார்த்த‌ அமிர்த்தாவிற்கோ ப‌ய‌ம் எழ‌, அவ‌ளை பிடித்திருந்த‌ பெண்ணும் உத‌யா அருகில் வ‌ருவ‌தை பார்த்து த‌ய‌க்க‌த்துட‌ன் அவ‌ளை விட்டுவிட்டார். அப்போது அமிர்த்தாவின் பார்வை உத‌யாவை க‌ட‌ந்து இர‌த்த‌ காய‌த்துட‌ன் கீழே விழுந்த‌ ஆதியை ப‌ர்த்த‌தும் ப‌த‌றி அவ‌ன் அருகில் செல்ல‌ முற்ப‌டும்போது, அவ‌ளின் கர‌ம் ப‌ற்றி இழுத்து த‌ன்னை பார்க்க‌ செய்த‌வ‌ன், "நீ ஒட‌னே என்னோட‌ வா. என்னோட‌ எட‌த்துல‌ உன்ன‌ ராணி ஆக்குறேன்." என்றான் உத‌யா.



அதை கேட்டு கோவ‌த்தில் கொந்த‌ளித்த‌ அமிர்த்தா, "என் கைய‌ விடு" என்று க‌த்தி அவ‌ன் கையை உத‌றி த‌ள்ளிய‌வ‌ள், "உன்ன‌ மாதிரி மிருக‌த்த‌ என்னால‌ என்னிக்குமே காத‌லிக்க‌ முடியாது. என‌க்காக‌ ஒருத்த‌ன் இருக்கும்போது உன்ன‌ நா எப்பிடி காதலிப்ப‌ன்னு நீ எதிர்பாக்குற‌?" என்று கூறிய‌ப‌டி ஆதியிட‌ம் செல்ல‌ முய‌ற்சிக்க‌, மீண்டும் அவ‌ள் க‌ர‌ம் ப‌ற்றி த‌ன் ப‌க்க‌ம் இழுத்து நிறுத்திய‌வ‌ன், "அவ‌ன் இருந்தாதான‌?" என்று கூறிய‌ப‌டி அவ‌ன் அருகில் செல்ல‌, அப்போதே உத‌யாவின் கொள்ளைக்கூட்ட‌ கூட்டாளிக‌ள் அங்கு வ‌ந்து சேர்ந்த‌ன‌ர்.

வ‌ந்த‌வ‌ர்க‌ள் கையில் கிடைக்கும் ஆயுத‌ங்க‌ளை எடுத்துக்கொண்டு உத‌யாவின் க‌ண் அசைவிற்கு த‌லைய‌சைத்துவிட்டு, அங்கு இருக்கும் அனைவ‌ரையும் விர‌ட்டி அடித்த‌ன‌ர். அதை பார்த்த‌ அமிர்த்தாவிற்கோ கோப‌த்தைவிட‌ இங்கு என்ன‌ ந‌ட‌க்க போகிற‌தோ என்று ப‌ய‌ம்தான் அதிக‌ரித்த‌து. அவ‌ர்க‌ளை பார்த்த‌ உத‌யா க‌ண் அசைவால் ஆதியை பிடிக்க‌ கூற‌, அவ‌ர்க‌ளும் கீழே கிட‌ந்த‌ ஆதியை தூக்கி நிறுத்தின‌ர். அதை பார்த்த‌ அமிர்த்தாவோ "ஆதி...!" என்று க‌த்திய‌ப‌டி அவ‌ன் அருகில் வ‌ர‌, அவ‌ளையும் இருவ‌ர் பிடித்துவிட்ட‌ன‌ர்.

அப்போது ஒருவ‌ன் உத‌யாவின் கையில் ஒரு க‌த்தியை கொடுக்க‌, அதை பார்த்த‌ அங்கிருந்த‌ மிச்ச‌ மீதி ம‌க்க‌ளும் அல‌றிய‌டித்து அங்கிருந்து ஓடிவிட்ட‌ன‌ர். அப்போது கோவிலே வெறுமையாய் வெறிச்சோடி கிட‌க்க‌, அதை பார்த்த‌தும் எதிர்பார்த்த‌தை சாதித்த‌ புன்ன‌கை அவ‌ன் முக‌த்தில் விரிய‌, அடுத்த‌ பார்வை ஆதியின் ப‌க்க‌ம் தான் திருப்பினான். அதை பார்த்து ப‌ய‌ந்த‌ அமிர்த்தா, "அவ‌ன் இல்ல‌ன்னா நா செத்திருவேன்." என்று ப‌ய‌த்துட‌ன் க‌த்தி கூற‌,

அதை கேட்டு அவ‌ள் ப‌க்க‌ம் திரும்பிய‌ உத‌யா, "நீ இல்ல‌ன்னா நா செத்திருவேன் செல்ல‌ம்." என்று கூறி க‌த்தியை ஆதியின் முன்பு தூக்கி பிடிக்க‌, அப்போது வாங்கிய‌ அடியில் ஆதியின் க‌ண்க‌ள் ஏற்க‌ன‌வே இருட்டிக்கொண்டு வ‌ர‌, உத‌யாவின் கையில் என்ன‌ இருக்கிற‌தென்றுக்கூட‌ அவ‌னுக்கு தெரிய‌வில்லை. அப்போது அமிர்த்தா "ஆதி...!" என்று ப‌ய‌த்தில் க‌த்தி க‌த‌ற‌, அதில் அவ‌ள் ப‌க்க‌ம் திரும்பிய‌ உத‌யா, "இப்போ சொல்லு. என்கூட‌ வ‌ர்றியா? இல்ல‌ இவ‌ன‌ கொன்னுர‌ட்டுமா?" என்று கேட்க‌,

அத‌ற்கு அமிர்த்தா க‌ண்ணீருட‌ன் ஆதியின் ப‌க்க‌ம் திரும்ப‌, அதை பார்த்து கோப‌ம‌டைந்த‌வ‌ன், க‌த்தியை ஓங்க‌, "வ‌ர்றேன்." என்று க‌த்திவிட்டாள் அமிர்த்தா.

அதை கேட்டு புன்ன‌கையுட‌ன் அவ‌ள் ப‌க்க‌ம் திரும்பிய‌வ‌ன், "அப்போ என்ன‌ காத‌லிக்கிற‌தான‌?" என்று கேட்க‌,

அத‌ற்கு அமிர்த்தா, "ஆமா ஆமா. உன்ன‌தா காத‌லிக்கிறேன். த‌ய‌வுசெஞ்சு அவ‌ன‌ விட்டிரு." என்று கூறி க‌த‌றி அழுதவ‌ள் த‌ரையில் விழுந்து அழ‌, அவ‌ளின் கைக‌ளை விட்டுவிட்ட‌ன‌ர். அப்போது அவ‌ன் முன்பு கை கூப்பி, "நா உன்கூட‌வே வ‌ந்த‌ர்றேன். அவ‌ன‌ விட்டிரு." என்று கெஞ்சி அழுதாள்.

அதை கேட்டு புன்ன‌கைத்த‌ உத‌யா, "நீ என்ன‌ காத‌லிக்கிற‌, நா உன்ன‌ காத‌லிக்கிற‌. அப்போ நியாய‌ப்ப‌டி, ந‌ம‌க்கு ந‌டுவுல‌ இவ‌ன் இருக்க‌ கூடாதே?" என்று கூறி ச‌த‌க்கென்று க‌த்தியை அவ‌ன் வ‌யிற்றில் இற‌க்கியிருந்தான்.

அதை பார்த்து அதிர்ந்த‌ அமிர்த்தா க‌ண்க‌ள் விரிய‌, "ஆதி...!" என்று க‌த்த‌, ஆதியின் க‌ண்க‌ளோ வ‌லியில் பிதுங்கி வெளி வ‌ராத‌ குறைதான்.

அவ‌ள் அப்போதும் ஆதியென்றே அழைத்த‌து உதயாவிற்கு மேலும் கோப‌த்தை கூட்ட‌, அவ‌ன் ப‌க்க‌ம் திரும்பி மீண்டும் அவ‌ன் வ‌யிற்றில் க‌த்தியை இற‌க்கினான். ஆனால் இப்போது ஆதியின் க‌ண்க‌ள் ம‌ட்டும‌ல்ல‌, உத‌யாவின் க‌ண்க‌ளும் வ‌லியில் விழி பிதுங்க‌ நின்ற‌து. அப்போதே உத‌யா மெல்ல‌ திரும்பி த‌ன் பின்னால் பார்க்க‌, அவ‌ன் பின்புற‌மும் க‌த்தியை இற‌க்கியிருந்தாள் அமிர்த்தா.

அவ‌ள்தான் என்று தெரிந்த‌தும் புன்ன‌கைத்த‌வ‌ன், அவ‌ள் க‌ண்க‌ளில் தெரியும் கொலைவெறியையும் இர‌சித்த‌ப‌டி நிற்க‌, உட‌னே அந்த‌ க‌த்தியை உறுவிய‌வ‌ள், அதில் அவ‌ன் திடுக்கிட்டு மீண்டும் துடிக்க‌, அவ‌னை க‌ட‌ந்து சென்று ஆதியின் அருகில் செல்ல‌, ஆதியை பிடித்திருந்த‌வ‌ர்க‌ளோ அவ‌னைவிட்டுவிட்டு ஆதிக்கு என்ன‌வென்று பார்க்க‌ சென்றுவிட‌, வ‌லியில் கீழே ச‌ரிந்த‌ ஆதியை த‌ன் ம‌டியில் தாங்கினாள் அமிர்த்தா.

இங்கு உத‌யாவின் இர‌த்த‌ போக்கு அதிக‌மாகிக்கொண்டே போக‌, அதை க‌ண்டு கொந்த‌ளித்த‌ அவ‌னின் கூட்டாளி உட‌னே க‌த்தியுட‌ன் சென்று அமிர்த்தாவை குத்த‌ செல்ல‌, அதை ப‌ர்த்த‌ ஆதியோ அதிர்ச்சியுட‌ன், "அமிர்த்தா!" என்று அதிர்ந்து கூற‌, அதை கேட்ட அமிர்த்தா உட‌னே பின்னால் திரும்புவ‌த‌ற்குள் க‌த்தியை உட‌லில் சொருகியிருந்தான் அவ‌ன்.

அப்போது அமிர்த்தாவின் முக‌த்திலேயே இர‌த்த‌ம் தெறிக்க‌, அவ‌ளோ அதிர்ச்சில் உறைந்தாள். குத்திய‌வ‌னும் அதிர்ச்சியுட‌ன் உறைந்து நிற்க‌, ஆதிக்கோ அதைவிட‌ அதிர்ச்சியாக‌ இருந்த‌து. ஏனென்றால் அந்த‌ க‌த்தி இற‌ங்கிய‌தோ குறுக்கே வ‌ந்த‌ உத‌யாவின் வ‌யிற்றில்தான். அப்போதும்க்கூட‌ உத‌யாவின் க‌ண்க‌ளில் வ‌லியைவிட‌ த‌ன்ன‌வ‌ளை காப்பாற்றிய‌ திருப்த்திதான் அதிக‌ம் இருந்த‌து. அதைப்ப‌ர்த்த‌ அமிர்த்தாவோ அதே அதிர்ச்சியுட‌ன் த‌ன் முக‌த்தில் தெறித்த‌ அவ‌ன் இர‌த்தத்தை கைக‌ளால் தொட்டு எடுத்து மெல்ல‌ பார்க்க‌, அவ‌ள் கைக‌ள் தானாய் ந‌டுங்கிய‌து. "காத‌ல‌ நேர‌த்தால‌ இல்ல‌, அதோட‌ ஆழ‌த்தால‌தா அள‌விட‌ணும். என்னோட‌ காத‌ல் ஆழ‌மான‌து." என்று அவ‌ன் கூறிய‌ வார்த்தைக‌ளே இப்போது அவ‌ள் நினைவ‌டுக்கில் வ‌ந்து நின்ற‌து. அப்போதே அவ‌ன் காத‌ல் ஆழ‌மான‌து என்று அமிர்த்தாவும் புரிந்துக்கொண்டாள்.

- ஜென்ம‌ம் தொட‌ரும்...
 

Author: Oviya Blessy
Article Title: CHAPTER-14
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.