தாபம் 27

thenaruvitamilnovels

The World of Words
Staff member
Dec 25, 2024
605
47
28
www.amazon.com
அத்தியாயம் 27: வருணுக்கு வந்த கனவு…

ஜான்வியின் கல்லறையில் அமர்ந்திருந்த வருண், தன்னை அறியாமல் தூங்கி விட்டான். அப்போது அவனுக்கு ஒரு கனவு வந்தது. அந்தக் கனவில் அழகான காலை வேளையில் காரில் வருண், சித்தார்த் உடனும், நிறைமாத கர்ப்பிணியான ஜான்வியுடனும் மகிழ்ச்சியாகச் சென்று கொண்டிருந்தான்.


அனைத்தும் சரியாகத்தான் சென்று கொண்டிருந்தது.
அப்போது அவர்கள் சென்று கொண்டிருந்த காரின் வேகம் மெது மெதுவாக அதிகரித்தது. வருண் தன்னுடைய குடும்பத்தினருடன் சிரித்து, ஜாலியாக பேசி விளையாடிக் கொண்டிருந்ததால் அதை அவன் கவனிக்கவில்லை.

ஒரு கட்டத்தில் யாரும் இல்லாத தார் ரோட்டில் அந்தக் கார் அதிவேகத்தில் சீறிப் பாய்ந்தது.
அப்போதுதான் பின் சீட்டில் அமர்ந்திருந்த மூவரும் காரின் வேகத்தை உணர்ந்தனர். சிறுவனான சித்தார்த் பயத்தில் அழ ஆரம்பித்துவிட்டான்.

ஜான்வியும் பதற்றமாக இருந்தாள். அவள் கர்ப்பமாக இருக்கும் இந்தச் சமயத்தில் கார் இப்படி வேகமாகச் செல்வதால் அவளுடைய குழந்தைக்கும் அவளுக்கும் ஏதாவது ஆகிவிடுமோ என்று அவளும் பயந்தாள்.


வருணுக்கு தனக்கு எதுவும் ஆனாலும் பரவாயில்லை, தன்னுடைய மனைவிக்கும், மகனுக்கும் எதுவும் ஆகக்கூடாது என்ற பயம்தான் அதிகமாக இருந்தது. அதனால் டிரைவரைப் பார்த்த வருண், உச்ச ஸ்ருதியில், “காரை மெதுவா ஓட்டு!" என்று கத்தினான்.


சில நிமிடங்கள் எதுவும் தன்னுடைய காதில் கேட்காதது போல் அங்கும் இங்கும் காரை உலட்டியபடி வேகமாக ஓட்டிக் கொண்டிருந்தார் அந்த டிரைவர். வருணின் பொறுமை மொத்தமும் காற்றில் பறந்து விட்டது. பின்னாடியிலிருந்து டிரைவரின் கழுத்தைப் பிடித்து தன்னுடைய இரும்புக் கையால் நெறித்தவன், "காரை நிறுத்து!" என்று ஆணையிட்டான்.


சித்தார்த் பயத்தில் ஜான்வியை இறுக்கமாகக் கட்டிப்பிடித்துக் கொண்டிருந்தான். ஏதேனும் தவறாக நடந்தாலும் தன்னுடைய மகனுக்கும், தன் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கும் எதுவும் ஆகிவிடக் கூடாது என்று நினைத்த ஜான்வி, தனக்குள் தன்னுடைய வயிற்றையும், சித்தார்த்தையும் புதைத்து இறுக்கமாகக் கட்டிப் பிடித்துக் கொண்டாள்.


வருண் அவனுடைய கழுத்தை அவ்வளவு இறுக்கமாக அழுத்திப் பிடித்தும் அந்த டிரைவர் தன் வாயைத் திறந்து ஒரு வார்த்தையும் பேசவில்லை. வருண் கோபத்திலும், பயத்திலும், அந்த டிரைவரின் கழுத்தை இன்னும் அழுத்திப் பிடித்தான். அதில் இன்னும் தடுமாறிய அந்த டிரைவர் காரின் வேகத்தைத் தன்னையறியாமல் கூட்டி விட்டார்.


டிரைவரின் கண்ட்ரோலில் இல்லாத அந்தக் கார் அங்கும் இங்கும் சீறிப் பாய்ந்தது. இதற்கு மேல் இந்தக் காருக்குள் இருந்தால் தன்னுடைய உயிருக்கு ஆபத்து என்று நினைத்த அந்த டிரைவர், வருணின் கையை தன் மீது இருந்து எடுத்துவிட்டு தன் பக்கம் இருந்த காரின் கதவைத் திறந்து ஒரு புதருக்குள் குதித்தார்.


அதை கண்ட வருணுக்கு அடுத்து என்ன நடக்கப்போகிறது என்று தெளிவாகப் புரிந்தது, ஆனாலும் அவனால் எதுவும் செய்ய முடியாத நிலையில் இருந்தான் வருண். தங்களுக்கு எப்படியும் ஆக்சிடென்ட் நடக்கத்தான் போகிறது என்று உணர்ந்த வருண், குறைந்தபட்சம் அவர்களுக்கு ஏதாவது நேர்ந்தால் உடனே அவர்களுக்கு உதவ யாரையாவது அழைப்பதுதான் சிறந்தது என்று நினைத்தவன்; அவனுடைய விலையுயர்ந்த புதிய வகை மொபைல் போனில் இருந்து 'எமர்ஜென்சி அலர்ட்' மற்றும் 'லைவ் லொகேசன்' அனுப்பும் வசதியைப் பயன்படுத்தி ஹரிக்கும், அவனுடைய மேனேஜர் சிவாவிற்கும், 'எமர்ஜென்சி அலர்ட் மெசேஜ்' அனுப்பினான்.


அவ்வளவுதான்! அவன் அந்த மெசேஜை அனுப்பிய அடுத்த நொடியே அவர்கள் கார் எதிலோ சென்று வேகமாக மோதுவது போல் ஒரு பெரிய சத்தம் கேட்டது. வருண் அமர்ந்திருந்த சீட்டின் பக்கத்தில் இருந்த காரின் கதவு திறக்கப்பட்டு வருண் காரிலிருந்து வெளியே தூக்கி எறியப்பட்டான்.


தன்னுடைய காதல் கணவன் ஆக்சிடென்ட் ஆகி இப்படி காற்றில் பறந்து சென்று கீழே விழப்போகும் காட்சியைக் கண்ட ஜான்வி, உச்ச ஸ்ருதியில் "வருண்!" என்று கத்தினாள். ஜான்வி தன்னுடைய பெயரைச் சொல்லி அழும் அந்தக் காட்சியைத்தான் வருண் கடைசியாக அவனுடைய கண்ணால் கண்டான்.


பின் அவனுக்கு மயக்கம் வருவது போல் இருந்தது. அவனுடைய காதில் ஜான்வியின் அலறல் குரலும், அவர்கள் வந்த கார் தரையில் உருண்டு செல்லும் சத்தமும் மட்டுமே கேட்டது. அதன் பிறகு அங்கு என்ன நடந்தது என்று வருணுக்குத் தெரியவில்லை.

அவன் உடம்பு முழுவதும் அடிபட்டு... அந்தக் காயங்களில் இருந்து கசிந்த ரத்தப்போக்கின் காரணமாக பலவீனமாக இருந்த வருணின் உடலில் இருந்து வெளியேறிய ரத்தத்தால் அவனுடைய வெள்ளைச் சட்டை சிவப்பு நிறத்தில் இருந்தது.


அந்தக் காட்சியுடன் வருணுக்கு வந்த கனவு முடிந்தது. ஜான்வியின் கல்லறையில் இருந்த ஒரு மர பெஞ்சில் அது வரை படுத்துத் தூங்கிக் கொண்டிருந்த வருணின் உடல் வியர்வையால் நனைந்து இருந்தது. அந்தக் கனவின் தாக்கத்தால் பதற்றத்தில் இருந்த வருண், "ஜான்வி!" என்று அலறியபடி மூச்சு வாங்க எழுந்து அமர்ந்தான்.


பின் அவன் தான் எங்கிருக்கிறோம் என்று சுற்றிப் பார்த்தான். அவன் ஜான்வியின் கல்லறையில் இருப்பதை உணர்ந்த பின் தான் தனக்கு வந்தது கனவு என்றே அவனுக்கு விளங்கியது. ஆனாலும் அவனுடைய பதட்டமும், பயமும் இன்னும் குறைந்து இருக்கவில்லை.
அவனால் "இது வெறும் கனவு தான்" என்று எப்படி தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ள முடியும்? இது வெறும் கனவு அல்ல, அவனுடைய வாழ்வில் மறக்க முடியாத நிகழ்வு.


அந்த நாளும், அந்த சில நிமிடங்களும் தான் வருணின் வாழ்க்கையை மொத்தமாகப் புரட்டிப் போட்டு விட்டது.
அந்த விபத்தில் அவன் அவனுடைய மனைவி ஜான்வியையும், அவனுக்குப் பிறக்க இருந்த குழந்தையையும், அவனுடைய மகன் சித்தார்த் அவன் மீது வைத்திருந்த நம்பிக்கையையும் இழந்துவிட்டான்.

அன்று உண்மையாக நடந்த அந்தச் சம்பவம்தான் இன்று அவனுக்குக் கனவாக வந்து இருந்தது.
அது கனவு என்றாலும் அவனுக்கு அது நிஜம் போலவே தோன்றியது. அன்று அவன் காரிலிருந்து வீசி அடிக்கப்பட்டு கீழே விழும்போது உணர்ந்த அதே கூர்மையான வலியை அந்தக் கனவிலும் கூட அவனால் உணர முடிந்தது. மீண்டும் ஒரு முறை அவன் தன்னுடன் இருந்த ஜான்வியை இழந்துவிட்டது போல் அவனுடைய இதயத்தில் கனமான வலியை உணர்ந்தான் வருண்.


அவனுடைய நெஞ்சு கூட அவனுக்கு லேசாக வலிப்பது போல் இருந்தது. "இதற்கு மேல் இங்கே இருந்தால் தனக்கு மாரடைப்பு வருவதற்கு கூட வாய்ப்பு இருக்கிறது" என்று நினைத்த வருண், அங்கிருந்து கனத்த இதயத்துடன் வெளியே வந்தான். அவன் அங்கே இருந்து வெளியே வரும்போது ஒரு வெள்ளை நிற 'கவுன்' அணிந்த இளம் பெண் அவனை நிழலாகப் பின் தொடர்ந்தாள்.


நேற்றைப்போல் இன்றும் நேராக சித்தார்த்தின் அறைக்குச் சென்ற வருண், அங்கு இருந்த கபோர்ட்டைத் திறந்து அதில் இருந்து ஒரு போர்வையை எடுத்துப் போர்த்திக்கொண்டு சத்தமின்றி சித்தார்த்தின் அருகே படுத்துக் கொண்டான்.

சித்தார்த்தின் அருகாமை அவனை ஆறுதல்படுத்துவதற்குப் போதுமானதாக இருந்தது.
சிறிது நேரம் தூங்கிக் கொண்டிருக்கும் சித்தார்த்தைப் பார்த்துக்கொண்டிருந்த வருண், தன்னை அறியாமல் தூங்கிப் போனான்.

அவர்கள் படுத்திருந்த பெட்டிற்கு எதிரே ஒரு ஜன்னல் இருந்தது. அந்த ஜன்னலுடைய கதவு பாதி திறக்கப்பட்டு இருந்தது. அந்தக் 'கேப்'பியின் வழியாகத் தூங்கிக் கொண்டிருக்கும் சித்தார்த்தையும், வருணையும், வெள்ளை 'கவுன்' அணிந்திருந்த இளம் பெண் பார்த்துக் கொண்டிருந்தாள்.


அவளுடைய நீண்ட கருப்பு நிற கூந்தல் காற்றில் பறந்து கொண்டிருந்தது. அவளுடைய முகத்தில் ஒரு அமைதியும், மெலிதான புன்னகையும் இருந்தது. தங்களை ஒருவர் இப்படி கண்காணித்துக் கொண்டிருப்பதை உணராத வருண் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தான்.


காலைப்பொழுது அழகாக விடிந்தது...
ரித்திகாவின் வீட்டில்...
ரித்திகா ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள். மணி காலை 6:00 ஆக இருக்க.. அவள் செட் பண்ணி வைத்திருந்த அலாரம் அடித்தது. மிகுந்த அசதியில் இருந்த ரித்திகா அலாரத்தை ஆஃப் செய்துவிட்டு மீண்டும் இன்னொரு பக்கம் புரண்டு படுத்துத் தூங்க ஆரம்பித்தாள்.

அதிகாலையிலேயே எழுந்துவிட்ட சுதாகர் ஹாலில் அமர்ந்து செய்தித்தாள் படித்துக் கொண்டிருந்தார்.
ரேவதி சமையல் அறையில் மும்முரமாக ஏதோ வேலைகள் செய்து கொண்டிருந்தாள்.

அவர்கள் இருவருமே அவரவர் வேலையில் 'பிஸி'யாக இருந்ததால் யாரும் ரித்திகாவை பற்றி யோசிக்கவில்லை. ரேவதி சமைத்து முடித்துவிட்ட பின் தான் அவளுக்கு ரித்திகாவை பற்றிய நினைவே வந்தது. சமையல் அறையிலிருந்து வெளியே வந்த ரேவதி ஹாலில் மாட்டப்பட்டிருந்த கடிகாரத்தில் நேரத்தைப் பார்த்தாள். அது 8:00 மணி என்று காட்டியது.


அதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த ரேவதி, "இன்னும் ஏன் ரித்திகா எழுந்து வரவில்லை?" என்று நினைத்தவள், அவளுடைய அறைக்குச் சென்றாள்.

ரித்திகா இன்னும் அசந்து தூங்கிக் கொண்டுதான் இருந்தாள். ரித்திகாவின் அருகே சென்ற ரேவதி, அவள் கையைப் பிடித்து, "அடியே! மணி 8:00 ஆயிடுச்சு! ஸ்கூலுக்கு போக வேண்டாமா...?" என்று கேட்டாள்.


அவளோடு பேசிக்கொண்டிருக்கும்போதுதான் ரித்திகாவின் உடல் நெருப்பாகக் கொதித்துக் கொண்டிருப்பதை உணர்ந்த ரேவதி, பதற்றமாக ரித்திகாவின் நெற்றியைத் தொட்டுப் பார்த்தாள். ரித்திகாவுக்கு காய்ச்சல் அதிகமாகவே இருந்தது. அதனால் பதற்றமடைந்த ரேவதி அவசரமாக ரித்திகாவை எழுப்பினாள்.


ரித்திகா அவள் மிகுந்த களைப்பில் இருந்ததால் ரேவதியின் உதவியால் எழுந்து அமர்ந்தவள், "ஏன் மா இப்படி சத்தம் போட்டுட்டு இருக்க...? நான் கொஞ்ச நேரம் தூங்குகிறனே..." என்று சலிப்பாகக் கேட்டபடி எழுந்து அமர்ந்தாள்.


ரேவதி: "ஸ்கூலுக்கு போகலையா...? காய்ச்சல் அடிக்குதுன்னு 'லீவ்' போட்டுட்டியா...? நம்ப வேணா 'ஹாஸ்பிடலுக்கு' போயிட்டு வரலாமா...?" என்று அக்கறையாகக் கேட்டாள்.

ரித்திகா: "காய்ச்சலா? யாருக்கு?" என்று தன்னுடைய ஒரு கையால் அவளுடைய கண்களைத் தேய்த்தபடியே கேட்டாள்.

ரேவதி: "உனக்கு தான்டி நெருப்பா கொதிக்கிது. அதுகூட தெரியாம எருமை மாடு மாதிரி தூங்கிட்டு இருக்க. நீயே தொட்டுப் பாரு..." என்று காட்டமாகச் சொன்னாள்.

ரித்திகா: "அப்படியா...?" என்று ஆச்சரியமாகக் கேட்டவள், தன்னுடைய கையால் அவளுடைய கழுத்தைத் தொட்டுப் பார்த்தாள். பின் "ஆமா அம்மா. காய்ச்சல் தான் அடிக்குது போல..." என்று அப்பாவியாகச் சொன்னாள்.

ரேவதி: "அது சரி...! ஒரு வழியா கண்டுபிடிச்சுட்டியா? சரி போய் கிளம்பு, 'ஹாஸ்பிடல்' போயிட்டு வந்துடலாம்." என்றாள்.


ரித்திகா: 'ஹாஸ்பிடலுக்கா?இப்ப வா...? ஸ்கூலுக்கு போகனுமே மா... மணி எத்தனை...?" என்று கேட்க,

ரேவதி: "அது எல்லாம் 8:00 மணிக்கு மேல ஆயிடுச்சு. 'சிக் லீவ்' போட்டுட்டு வீட்டுல இரு. 'ஹாஸ்பிடல்' போகலாம்." என்றாள்.

ரித்திகா: "நான் ஜாயின்ட் பண்ணும்போது ஸ்கூல் ஸ்டார்ட் பண்றதுக்கு 2 மணி நேரத்துக்கு முன்னாடியே இன்ஃபார்ம் பண்ண சொன்னாங்க. இப்ப போய் கேட்டா லீவு திருவாங்களான்னு தெரியலையே...." என்று பாவமாக சொல்ல,

ரேவதி: "அதுக்கு என்ன பண்ண முடியும்? இப்படியே போய் எப்படி வேலை பாப்ப...? 'ரெக்வஸ்ட்' பண்ணு வேற வழி இல்ல." என்றாள்.

ரித்திகா: "கேட்டு பார்க்கிறேன் லீவு கிடைக்கலன்னா போய்தான் ஆகணும் மா." என்றவள், சலிப்பாக தன்னுடைய மொபைலை எடுத்து மானசாவிற்குக் கால் செய்தாள்.


இரண்டு, மூன்று முறை ரித்திகா கால் செய்தும் மானசா எடுக்கவில்லை. கடுப்பான ரித்திகா, இறுதியாக ஒரு முறை அழைத்து பார்க்கலாம் என்று நினைத்தவ
ள்; மானசாவிற்குக் கால் செய்தாள்.

-நேசம் தொடரும்..

(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் நன்றி 🙏)
 

Author: thenaruvitamilnovels
Article Title: தாபம் 27
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.