Home போதையடி நீ எனக்குபோதையடி நீ எனக்கு CH 53

போதையடி நீ எனக்கு CH 53

by Thenaruvi Tamil Novels

அத்தியாயம் 53 

தாத்தாவுடன் தனது அம்மா பிறந்து வளர்ந்த அவர்களுக்கு சொந்தமான பரம்பரை வீட்டிற்கு சென்றான் ரிஷி. சென்னையின் மத்திய பகுதியில் பணக்காரர்கள் வசிக்கும் முக்கியமான இடத்தில் இருந்தாலும், பழமை மாறாமல் பார்ப்பதற்கு அந்த கால அரண்மனை போல பிரம்மாண்டமாக காட்சியளித்தது அந்த மாளிகை. 

ரிஷி காரில் இருந்து கீழே இறங்க உதவிய திலீப் அவனை வீல்சேரில் அமர வைக்க, “நான் டிம்ப்ல உள்ள கூட்டிட்டு போறேன்.” என்று முந்திக் கொண்டு சொன்ன நித்திலா அவனது வீல்சாரை தள்ளிக் கொண்டு முன்னோக்கி நடந்தாள். அனைத்தையும் கவனித்தபடி தாத்தாவும் தனது அசிஸ்டெண்ட்களுடன் அவர்களை பின் தொடர்ந்தார். 

தான் இதற்கு முன்பு இருந்த ரிஷியின் வீட்டை விட இந்த வீடு வித்தியாசமாகவும் தனித்துவமான அழகோடும் இருப்பதைக் கண்டு ஆச்சரியப்பட்ட நித்திலா “இது யாரோட வீடு டிம்பிள்?” என்று கேட்க, “இது நம்ம வீடு தான். உனக்கு இது புடிச்சிருக்கா? நம்ம இன்னைக்கு இங்க தான் தங்க போறோம்.” என்றான் ரிஷி. 

“வாவ் சூப்பர் டிம்பிள்.. எனக்கு இந்த வீடு ரொம்ப புடிச்சிருக்கு. இனிமே நம்ம இங்கயே இருக்கலாம் ஓகேவா?” என்று நித்திலா உற்சாகமான குரலில் கேட்க, தனது வீழ்ச்சாரை தள்ளிக் கொண்டு வந்த அவளை அண்ணாந்து பார்த்த ரிஷி அவளது சிறிய மூக்கை பிடித்து ஆட்டி “நம்ம மேல தாத்தா கோபப்பட்டு இங்க இருந்து போங்கன்னு துரத்துற வரைக்கும் ‌கண்டிப்பா நம்ம இங்கயே இருக்கலாம்.” என்று கிண்டலாக சொன்னான். 

அவன் சொன்னதை சீரியஸாக எடுத்துக் கொண்ட நித்திலா “நீங்க எங்க மேல கோவப்படுவீங்களா தாத்தா? ஏன்? நாங்க தான் எதுவுமே பண்ணலையே!” என்று அப்பாவியாக தாத்தாவை பார்த்து கேட்க, ரிஷியை முறைத்துப் பார்த்தார் தாத்தா. 

“இப்ப என்ன எதுக்கு தாத்தா பார்த்து முறைக்கிறீங்க? அவ உங்கள பாத்து பயந்து தானே நீங்க கோபப்படுவீங்களானு கேட்கிறா.. நீங்களே அவ கொஸ்டினுக்கு ஆன்சர் பண்ணுங்க.” என்று சொல்லிவிட்டு ரிஷி சிரிக்க, 

“ஏன் கண்ணு.. உனக்கு என்னை பார்த்தா கொடுமைக்காரன் மாதிரியா இருக்கு? நீங்க யாரும் எந்த தப்பும் பண்ணாத வரைக்கும் நான் யார் மேலயும் கோபப்பட மாட்டேன். எனக்கு என் கிட்ட பொய் சொல்றது ஏமாத்து வேலை பண்றது தான் சுத்தமா பிடிக்காது.” என்று தாத்தா சொல்ல, “நான் குட் கேர்ள் தாத்தா. யார் கிட்டயும் பொய் சொல்ல மாட்டேன். ரிஷி தான் மத்தவங்க கிட்ட வாய் பேச முடியாத மாதிரி நடிக்க சொல்லி என்னை பொய் சொல்ல சொன்னான். நானா பொய் சொல்லல.” என்று நித்திலா மீண்டும் ரிஷியை தாத்தாவிடம் கோர்த்து விட்டாள். 

“ஆமாமா வர வர என் பேர பொய் சொல்ல கத்துக்கிட்டான். அதுவும் அவன் தாத்தா கிட்டயே முக்கியமான விஷயம் எல்லாத்தையும் மறைக்க ஆரம்பிச்சிட்டான். அவனை சுத்தி இருக்கிறவங்க எல்லாரும் கெட்டவங்களா இருக்குறாங்கன்னு நானும் அப்படித் தான் நினைச்சுட்டான் போல இருக்கு. அவனுக்கு என் மேல இருந்த நம்பிக்கை எங்க போச்சுன்னு தெரியல.” என்று ஓரக் கண்ணால் ரிஷியை பார்த்தபடி தாத்தா சொல்ல,

“ஐயோ தாத்தா ஏன் இப்படி எல்லாம் பேசுறீங்க? அம்மாவுக்கு அப்புறம் எனக்கு எல்லாமே நீங்க தானே… நான் உங்களை நம்பாம வேற யாரை நம்ப போறேன்? முதல்ல நீங்க என் கூட வாங்க. நம்ம உங்க ரூமுக்கு போகலாம். உங்க கிட்ட நான் பேச வேண்டியது நிறைய இருக்கு.” என்று தாத்தாவை பார்த்து சொன்ன ரிஷி அவரது அசிஸ்டன்ட் பூபதியை பார்த்து “இவங்க எல்லாரும் இங்க தான் தங்க போறாங்க. இவங்களுக்கு ரூம் ரெடி பண்ணி கொடுத்துருங்க சார்.” என்று சொல்லிவிட்டு தாத்தாவுடன் சென்றான். 

ரிஷி வரும்வரை நித்திலாவை தனியாக விட வேண்டாம் என்று நினைத்த நிரஞ்சனா அவளை அழைத்துக் கொண்டு ஒரு ரூமிற்குள் நுழைய, திலீப் பல வருடங்களுக்கு பிறகு மகிழ்ச்சியுடன் இந்த வீட்டுக்கு வந்திருப்பதால் அவனுக்கு மிகவும் பிடித்த தோட்ட பகுதிக்கு சென்று யாரும் இல்லாத இடத்தில் நின்று இயற்கையை ரசித்தபடி சிகரெட் பிடிக்க தொடங்கினான். 

தனது அருகில் உள்ள சாய்வு நாற்காலியில் அமர்ந்து கொண்ட தாத்தா ரிஷியை பார்த்து இப்போதே எனக்கு அனைத்தும் தெரிய வேண்டும் என்று சொல்ல, இதற்கு மேல் மறைக்க ஒன்றும் இல்லை என நினைத்த ரிஷிஅவனது அம்மா சமாதிக்கு அவன் சென்றபோதில் இருந்து லாஸ்ட் ஆக இன்று காலை நடந்தது வரை அனைத்தையும் தாத்தாவிடம் ஒப்பித்தான்.

“அப்படின்னா அந்த பொண்ண பத்தி ஏற்கனவே நீயே எல்லாத்தையும் விசாரிச்சிட்ட.. அவளோட பேக்ரவுண்ட்ல நம்ம சந்தேகப்படுற மாதிரி எதுவும் இல்லை அப்படித் தானே!” என்று உறுதி செய்து கொள்வதற்காக தாத்தா கேட்க, “ஆமா தாத்தா, அவங்க நார்மல் மிடில் கிளாஸ் ஃபேமிலி தான். இப்பயும் கூட காணாம போன அவங்க பொண்ணை தேடி போலீஸ் ஸ்டேஷன் அலஞ்சிட்டு தான் இருக்காங்க. ஒருவேளை அவங்க அம்மு இங்க தான் இருக்காங்க கண்டு பிடிச்சுட்டா, அவளை கூட்டிட்டு போறேன்னு சொன்னா என்ன பண்றதுன்னு தான் எனக்கு தெரியல. 

இப்ப இருக்கிற சிச்சுவேஷன்ல என்னை விட்டுட்டு அவளை போக சொன்னா கூட அவ போக மாட்டா. அந்த அளவுக்கு அவ என் கூட attached-ஆ இருக்கா. அவ ஒரு குழந்தை மாதிரி தாத்தா. மத்தவங்க மாதிரி அவளுக்கு துரோகம் பண்ணி ஏமாத்துறது எல்லாம் தெரியாது.” என்றான் ரிஷி. 

“அந்த பொண்ணுக்கு சரியாகி அவளே இங்க இருந்து போகணும்னு நெனச்சா அப்ப நீ என்ன பண்ணுவ ரிஷி? அவளை போக விட மாட்டேன்னு உன்னால சொல்ல முடியாதே!” என்று தாத்தா கேட்க, அதற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் தன் தலையை கீழே குனிந்து கொண்டான் ரிஷி. 

தொடரும்.. 

(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)

You may also like

Leave a Comment

About Me

Featured