அத்தியாயம் 75
“சீக்கிரம் என் வீட்டை விட்டு போக பெரிய பேக் பண்ணிட்டு போறதுக்கு ரெடியா இரு.” என்று அனாமிகாவிடம் ஆத்திரம் பொங்க சொல்லிவிட்டு தனது கேரவனை விட்டு வெளியேறிய விஜய் அப்படியே அந்த ஷூட்டிங் ஸ்பாட்டில் மன அமைதியை தேடி அவன் பாட்டிற்கு நடக்க தொடங்கிவிட்டான். வழக்கம்போல அங்கே ஏராளமானவர்கள் ஷூட்டிங்கை காண வந்திருந்ததால் அவர்களால் விஜய்க்கு எந்த ஆபத்தும் வந்து விடக்கூடாது என்ற எண்ணத்தில் அவனது பாதுகாவலர்கள் அவனை பின் தொடர்ந்து சென்றார்கள்.
தனியாக இருக்க வேண்டும் என்று நினைத்த விஜய் தன்னை பின் தொடர்ந்து இப்படி இவர்கள் வந்து கொண்டிருப்பதை பார்த்து கடுப்பாகி தினேஷை அழைத்து “டேய் நான் என்ன அவுட்டிங்கா போகிறேன்? விட்டா நான் டாய்லெட் போனா கூட உள்ள வந்து நிற்பீங்க போல இருக்கு! என்னை நிம்மதியா கொஞ்ச நேரம் வாக்கிங் போக கூட விட மாட்டீங்களா டா?” என்று கோபமாக கேட்டான்.
தினேஷ் உடனே அவனை மேலும் கீழும் குறுகுறுவென்று பார்க்க, “என்ன பாக்குற? நான் கேட்ட கேள்விக்கு ஒழுங்கா ஆன்சர் பண்ணு. இல்லைனா கண்ணு நோண்டிடுவேன்.” என்று ஆக்சன் உடன் சொன்னான் விஜய். “இல்ல பாஸ்.. உங்களுக்கு நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து பாடிகார்ட்ஸ் ஹையர் பண்ணும் போது அவங்களுக்கு ரூல்ஸ் புக் ரெடி பண்ணி கொடுத்தோமே அது உங்களுக்கு ஞாபகம் இருக்கா?” என்று தினேஷ் கேட்க, தன் ஒற்றைப் புருவத்தை உயர்த்தி அவனை பார்த்த விஜய் “ரூல்ஸ் போட்ட என் கிட்டயே திமிரா நீ அதை பத்தி எல்லாம் கேக்குறியா? எல்லாம் எனக்கு ஞாபகம் இருக்கு.” என்று திமிராக சொன்னான்.
“நீங்க தான் உங்களோட மூடு எப்ப எப்படி இருக்கும்னு யாருக்குமே தெரியாது. உங்களாலேயே சம்டைம்ஸ் உங்கள கண்ட்ரோல் பண்ண முடியாதுன்னு சொல்லி சுச்சுவேஷன் எப்படி இருந்தாலும் நீங்களே வேண்டாம்னு சொன்னாலும் உங்களோட பர்சனல் பாடிகார்ட்ஸ் எப்பயும் உங்களை shadow மாதிரி ஃபாலோ பண்ணனும்னு ரூல்ஸ் போட்டீங்க!
ஆனா அந்த பசங்க பாவம்.. உங்க பின்னாடி வந்து எப்ப பார்த்தாலும் திட்டு வாங்கிட்டு இருக்காங்க. நீங்க திட்டுறதோட விட்டா கூட பரவால்ல. நீங்க சொன்னத கேக்கலைன்னு பனிஷ்மென்ட் வேற கொடுக்குறீங்க! அவங்கள வெச்சு இந்த மாதிரி எல்லாம் என்டர்டைன்மென்ட் பண்றது ஜாலியா இருக்குன்னு நீங்க பண்றீங்களா? இல்ல, நெஜமாவே அந்த ரூல்ஸை எல்லாம் மறந்துட்டு அவங்களால உங்களுக்கு டிஸ்டர்பன்ஸா இருக்குன்னு பண்றீங்களான்னு தான் எனக்கு இப்ப வரைக்கும் சுத்தமா புரியல.” என்று தினேஷ் சொல்ல,
அவன் கேட்ட கேள்வி நியாயமாக இருந்ததால் அதற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் தன் கெத்தை விட்டுக் கொடுக்கக் கூடாது என்று அப்போதும் நினைத்து அவனை முறைத்து பார்த்த விஜய், “அந்த ஈர வெங்காயம் எல்லாம் எனக்கு தெரியும். இந்த மாதிரி நான் தனியா போனா, என் கூட உன்னை தவிர வேற யாரும் வரக் கூடாது. அப்படியே இவனுங்க எல்லாரும் வேற வழி இல்லாம என்ன ஃபாலோ பண்ணி வந்தாலும், தூரத்தில இருந்து தான் என்ன பாத்துட்டு இருக்கணுமே தவிர கிட்ட வந்து என்னை டிஸ்டர்ப் பண்ண கூடாது. இதுதான் நியூ ரூல்ஸ் எல்லாருக்கும் அப்டேட் பண்ணிரு.” என்று சொல்லிவிட்டு மீண்டும் நடக்க தொடங்கினான்.
தினேஷும் அவனுடன் சேர்ந்து நடக்க தொடங்கினான். “என்ன ஆச்சு பாஸ்? அனாமிகா மேடம் வந்ததுனால டென்ஷனா இருக்கீங்களா?” என்று தினேஷ் கேட்க, திரும்பி அவனை ஒரு பார்வை பார்த்த விஜய் “அதான் எல்லாம் தெரியுது இல்ல.. அப்புறம் எதுக்கு கேக்குற? மூடிட்டு வா.” என்றான். டைரக்டர் ஸ்ரீகாந்த் பிஸியாக தன்னுடைய ஆட்களை வைத்து செட்டை அடுத்த சீனுக்காக தயார் செய்து கொண்டிருக்க, தன்னை காண்பதற்காக வெளியில் ஆவலுடன் காத்திருக்கும் ரசிகர் கூட்டத்தை கவனித்தான் விஜய்.
“கொஞ்ச நாளைக்கு முன்னாடி வரைக்கும் இந்த மாதிரி என்ன சுத்தி நிறைய பேருக்கு என் பெயரை சொல்லி என்னை தலைவன்னு கொண்டாடி எனக்காக என்ன வேணாலும் செய்ய ரெடின்னு சொல்றத கேட்கும்போது எல்லாம் அப்படியே வானத்துல பறக்குற மாதிரி இருக்கும். நான் அப்படி இருந்ததனாலையோ என்னமோ, இப்ப எனக்கு எது எல்லாம் பிடிச்சதோ அதுவே எதுக்கு இருக்குன்னு தோணுது. அதனால எனக்கு என்ன கிடைக்கப் போகுதுன்னு தோணுது.” என்று நினைத்து தனக்கு சிரித்துக் கொண்டான்.
இந்த உலகமே ஒரு நாடக மேடை அதில் நாம் எல்லாம் சாதாரண நடிகர்கள் என்று ஷேக்ஸ்பியர் சொன்னது இப்போது அவனுக்கு ஞாபகம் வந்தது. அதை யோசித்தபடி விஜய் ஓரமாகக் கிடந்த சேரில் மரத்தடியில் தினேஷுடன் அமர்ந்திருந்தான். அப்போது கூட்டத்தை தாண்டி பிரசிடெண்ட்டின் வீட்டில் வேலை பார்க்கும் நடுத்தர வயது பெண்மணி ஒருத்தி மட்டும் கையில் பெரிய கூடையுடன் சூட்டிங் ஸ்பாட்டிற்குள் நுழைந்தாள்.
அந்தப் பெண்ணை உற்று கவனித்த விஜய் “வெளிய போலிஸ் ப்ரோடுக்ஷன் இருக்கும்போது எல்லாரையும் தாண்டி இவங்க மட்டும் எப்படி உள்ள வர்றாங்க? இந்த பொம்பளை யாருன்னு உனக்கு தெரியுமா?” என்று கேட்க, “இவங்க பிரசிடெண்ட் வீட்ல வேலை செய்றவங்கன்னு நினைக்கிறன் பாஸ். அவரும் அவரோட பொண்ணும் இங்க இருக்கும்போது அப்பப்ப சாப்பிடுறதுக்கு ஏதாவது கொண்டு வந்து கொடுத்துட்டு போவாங்க.” என்றான் தினேஷ்.
“ஜஸ்ட் சாப்பாடு கொண்டு வர்ற பொம்பளைக்கு எதுக்கு இவ்ளோ பதட்டம்? இந்த திருட்டு முழியில ஏதோ தப்பா இருக்கிற மாதிரி தெரியல!” என்று விஜய் அந்த பெண்ணை சந்தேகமாக பார்த்தபடி கேட்க, “பாஸ்.. அங்கே போய் அனாமிகா மேடமை பாத்துட்டு வந்த மைண்ட் செட்டில இருந்து நீங்க இன்னும் வெளிய வரலையா? எல்லாரையும் ஏன் சந்தேக கண்ணோடயே பாக்குறீங்க? இவங்க வில்லேஜ் லேடி. பாக்குறதுக்கு அப்படித் தான் இருப்பாங்க. இங்க வந்து இவங்க திருட்டுத் தனமா பண்றதுக்கு என்ன இருக்கு?” என்று கேட்டான் தினேஷ். அவன் சொல்வதும் சரி தான் என்று நினைத்த விஜய் அந்த பெண்ணை கண்டு கொள்ளாமல் விட்டு விட்டான்.
இப்போது நேரம் மாலை 4 மணியை நெருங்கிக் கொண்டு இருந்ததால், செட் தயார் ஆவதற்கு எப்படியும் கொஞ்சம் நேரம் ஆகும் என்று நினைத்த டைரக்டர் ஸ்ரீகாந்த் அனைவருக்கும் ஒரு மினி பிரேக் கொடுத்தார். அதனால் “எவ்வளவு நேரம் தான் இப்படி கேரவன்குள்ளயே அடஞ்சி கிடைக்கிறது! வெளியே போய் காத்தோட்டமாவது உக்காந்துட்டு இருக்கலாம்.” என்று நினைத்து அமுதா வெளியில் சென்றாள்.
அவளுக்காகவே காத்திருந்த அபிநயா அவள் வருவதை பார்த்துவிட்டு அவள் காதுகளில் விழ வேண்டும் என்பதற்காக “நான் நிஜமா தான் சொல்றேன் சாந்தி அக்கா.. எனக்கு அமுதா ஹீரோயினா நடிக்கிறதுல சந்தோஷம் தான். முதல்ல எனக்கு நம்ம நடிக்க வேண்டிய கேரக்டர்ல இவ நடிக்கிறாளேன்னு கொஞ்சம் கோவம் இருக்கத் தான் செஞ்சது.
அப்புறம் தான் நல்லா யோசிச்சு பார்த்தேன். ஒருவேளை நான் நடிக்கிறது விஜய் சாருக்கு பிடிக்கலைன்னா எனக்கு பதிலா கண்டிப்பா எப்படியும் வேற ஒரு பொண்ணை இந்த கேரக்டர்ல போட்டு இருப்பாங்க இல்ல! அப்படி எவ்வளவு ஒருத்தி வந்து நடிக்கிறதுக்கு, நம்ம ஊர்க்கார பொண்ணு நடிச்சா நல்லா தானே இருக்கும்!” என்று சொல்ல,
“ஆமா மா.. உங்களுக்கு இருக்கிற நல்ல மனசு. உங்களுக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்ப அந்த பொண்ணு தட்டி பிடிச்சாலும், எல்லாரும் நல்லா இருக்கணும்னு நீங்க நினைக்கிறீங்க. இதுக்கு தான் கோபம் இருக்கிற இடத்துல தான் குணம் இருக்குன்னு சொல்லுவாங்க. உங்க விஷயத்துல அது சரியா போச்சு.” என்று உடனே சாந்தி அவளுக்கு ஜால்ரா தட்டினாள்.
அவர்கள் பேசியதை கேட்டு ஆச்சரியப்பட்ட அமுதா “நிஜமாவே இவ தான் இப்படி எல்லாம் பேசுறாளா? இவளுக்கு இந்த விஷயத்துல என் மேல கோபம் இல்லைன்னு சொன்னா நம்பற மாதிரியே இல்லையே! இவளோட அப்பா கூட நம்ம அண்ணனை நேர்ல பார்த்து இவளோட வாய்ப்பை நான் புரிஞ்சுகிட்டேன்னு தானே சண்டை போட்டாரு.. அப்புறம் எப்படி அதுக்குள்ள இவ இந்த அளவுக்கு மாறிட்டா? ஒருவேளை தினமும் இங்க ஷூட்டிங்கு வந்து நான் படுற கஷ்டத்தை எல்லாம் பார்த்துட்டு ஒருவேளை அவளுக்கு இது எல்லாம் சரிப்பட்டு வராதுன்னு முடிவு பண்ணிட்டாளா?” என்று தனக்குத்தானேகேட்டுக் கொண்டாள்.
அவள் தங்களையே பார்ப்பதை கவனித்த அபிநயா உடனே அப்போது தான் அவள் அங்கே இருப்பதை உணர்ந்ததாக சீன் போட்டு “ஹே.. அமுதா! நீ இங்க தான் இருக்கியா? ரொம்ப நேரமா ஷூட்டிங்கும் நடக்கல.. உன்னையும் ஆள காணோமேனு நான் இப்ப தான் யோசிச்சிட்டு இருந்தேன். அதுக்குள்ள கரெக்டா நீ வந்துட்ட.!!” என்று சொல்லிவிட்டு நட்புடன் சிரித்தாள்.
“நான் எங்க போகப்போறேன்? ரொம்ப நேரமா என் கேரவன்ல தான் இருந்தேன். அங்கயே இருந்தா போர் அடிக்குதுன்னு தான் வெளிய வந்தேன்.” என்று அமுதா சொல்ல, “அப்ப வா, இங்க வந்து உட்காரு. இங்க புரொடக்ஷன்ல குடுக்குற சாப்பாடு எல்லாம் நமக்கு செட்டாகாதுன்னு அடிக்கடி சாப்பாடு, ஸ்னாக்ஸ், டீ, காப்பின்னு எல்லாத்தையும் நான் வீட்ல இருந்தே ஆளுங்கள கொண்டு வரச் சொல்லிட்டேன். நம்ம சூட் ஸ்டார்ட் பண்ற வரைக்கும் டீ குடிச்சிகிட்டே பேசிட்டு இருக்கலாம்.” என்று அவளை அழைத்தாள் அபிநயா.
“இல்ல அபி.. பரவால்ல, நீ குடி எனக்கு வேண்டாம். இப்ப தான் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி அடிக்கடி கண்டதை சாப்பிட்டு வெயிட் போட்டுட வேண்டாம்னு அசிஸ்டன்ட் டைரக்டர் அக்கா என்கிட்ட சொல்லிட்டு போனாங்க. இந்த படத்துல நடிச்சு முடிக்கிற வரைக்கும் நான் ஒரே மாதிரி இருக்கணுமாம்.” என்று சொல்லி அமுதா மறுத்து விட, “என்ன நீ ஒரு டீக்கு போய் இப்படி பேசிட்டு இருக்க? இந்நேரம் நீ உங்க வீட்ல இருந்தா சாயங்காலம் உங்க அண்ணிங்க உனக்கு டீ போட்டு குடுக்க மாட்டாங்களா? புரொடக்சன்ல குடுக்கிறது நல்லா இல்லைன்னு நான் வீட்ல இருந்து ஸ்பெஷலா டீ போட்டுட்டு வர சொல்லி இருக்கேன். எனக்காக நீ குடிக்க மாட்டியா?” என்று கேட்டு உரிமையாக அவளிடம் கோபித்துக் கொண்டாள் அபிநயா.
அதனால் வேறு வழி இல்லாமல் “சரி ஓகே, குடிக்கிறேன் உனக்காக. எனக்கு டீ மட்டும் போதும் வேற எதுவும் வேண்டாம்.” என்று சொல்லிவிட்டு அவளுக்கு எதிரில் இருந்த இருக்கையில் அமர்ந்தாள் அமுதா. உடனே தனக்குள் வில்லத்தனமாக அவளை பார்த்து புன்னகைத்த அபிநயா சாந்தியை பார்த்து கண்களால் ஏதோ ஜாடை செய்தாள். அது புரிந்தது என்பதைப் போல தன் வேலையை காட்டத் தொடங்கினாள் சாந்தி.
– காதல் மலரும் 🌹