அத்தியாயம் 30
தனது திருமணத்தில் பிரச்சனை வந்ததால் தான் அது நின்று விட்டதாக உடைந்த குரலில் இந்து அஸ்வினிடம் ஃபோனில் சொல்கிறாள். ஏதோ ஒன்று தவறாக நடந்து இருக்கிறது என தெரிந்தும் அதைப் பற்றி மீண்டும் மீண்டும் அவளிடம் கேட்டு அவளை சிரமப் படுத்த வேண்டாம் என்று நினைத்த அஸ்வின் “ஓகே ஓகே டோன்ட் வரி, எல்லாம் ஏதோ ஒரு காரணத்துக்காக தான் நடக்குதுன்னு நினைச்சுக்கோ. கண்டிப்பா உனக்கு பெட்டர் லைஃப் அமையும் இந்து.
நீ அதப் பத்தியே யோசிச்சிட்டு இருக்காத. நானே நேத்து தான் இங்க வந்தேன். உடனே நான் கிளம்புறேன்னு சொன்னா சித்தப்பா விட மாட்டாரு. அதான் நம்ம மாணிக் அங்க இருக்கான்ல.. நீ இங்க கிளம்பி வந்துரு. நீ நேர்ல வா நாம பேசிக்கலாம்.” என்று சொல்ல, “ஓகே அஸ்வின்! நீங்க எல்லாரும் இருக்கிற தைரியத்துல தான் நான் வீட்டை விட்டு கோச்சிக்கிட்டு கிளம்பி வந்துட்டேன். இனிமே நம்ம எல்லாரும் ஒருத்தருக்கு ஒருத்தர் துணையா இருக்க வேண்டியது தான்.
சில சமயத்துல நம்மள பெத்தவங்களோ நம்ம கூட இருக்கிறவங்கள கூட நம்மள புரிஞ்சிக்கவே மாட்டாங்க. கடைசி வரைக்கும் ட்ரூவா நமக்காகன்னு இருக்கிறது ஃபிரண்ட்ஸ் மட்டும் தான். இப்ப மட்டும் இல்ல, இதுக்கு முன்னாடியும் நிறைய தடவை நான் உடைஞ்சு போய் தனியா நிக்கும்போது என் ஃபிரண்ட்ஸ் நீங்க மட்டும் தான் என் கூட இருந்தீங்க.
என் லைஃப்ல நடந்த ஒரே ஒரு நல்ல விஷயம் நீங்க எல்லாரும் எனக்கு ஃபிரண்ட்ஸா கிடைச்சது தான். இனிமே உனக்கும் அக்ஷயாவுக்கும் யார் இருக்காங்கன்னு நீ நினைக்காத. நம்ம ஃபைனல் இயர் அப்போ ஒரு ப்ராஜெக்ட் பண்ணோல்ல.. படிச்சு முடிச்சுட்டு அதை பெரிய ப்ராஜெக்ட்டா டெவலப் பண்ணி நம்ம எல்லாரும் சேர்ந்து பிசினஸ் பண்ணனும்னு எத்தனை நாள் நம்ம டிஸ்கஸ் பண்ணி இருக்கோம்..
யார் கிட்டயும் பேசாம தனியா இருந்த இந்த இத்தனை நாள்ல நான் அதோட இனிசியல் பிளான் எல்லாத்தையும் ரெடி பண்ணிட்டேன். நாங்க அங்க வரும்போது உனக்கு எக்ஸ்ப்ளைன் பண்றேன். இந்த ப்ராஜெக்ட்டை கண்டிப்பான சேந்து பண்ணனும் அஸ்வின். என்னோட பர்சனல் லைஃப் தான் நாசமா போச்சு. அட்லீஸ்ட் என்னோட கரியர்லையாவது ஏதாவது பண்ணனும்னு நான் நினைக்கிறேன்.” என்றாள் இந்து.
“கண்டிப்பா பண்ணலாம் இந்து. நம்ம டீமா சேர்ந்து பண்ணனும்னு நெனச்ச எல்லாத்தையும் அடுத்தடுத்து நம்ம பண்ணலாம். நீ மனச விட்றாத. உன்னோட பர்சனல் லைஃப் ப்ரொபஷனல் லைஃப் ரெண்டுமே நீ நெனச்ச மாதிரி ஒரு நாள் அமையும். நான் உன் கூட இருந்து உனக்கு அமைச்சு கொடுப்பேன் . It’s a promise.” என்று அஸ்வின் மனதார சொல்ல, “தேங்க்ஸ் அஸ்வின்! It means a lot. இனிமே நீங்க எல்லாரும் தான் எனக்கு ஃபேமிலி. 24/7 நான் நம்மளோட ப்ராஜெக்ட்ட பத்தி மட்டும் தான் யோசிக்க போறேன்.
இந்த ப்ராஜெக்ட்ல வர பிராஃபிட் கூட எனக்கு வேண்டாம். இதை நான் செஞ்சு முடிச்சா எனக்கு அதுவே போதும். நீ இல்லைனா இந்த ப்ராஜெக்ட் நடக்காது அஸ்வின். சோ இதுல இருந்து நான் ஒரு ரூபா கூட எடுத்துக்க மாட்டேன். இது நான் உனக்கு பண்ற ப்ராமிஸ்.” என்று நெகிழ்ச்சியுடன் சொன்னாள் இந்து.
தங்களது gangல் இருப்பவர்களிலேயே ஐஸ்வர்யாவும், இந்துவும் தான் மிகவும் எமோஷனல் ஆனவர்கள் என்பதால் இது மாதிரியான விஷயத்தில் அவர்களிடம் எவ்வளவு நேரம் வாக்குவாதம் செய்தாலும் தன்னால் வெற்றி பெற முடியாது என்று நினைத்த அஸ்வின் “அத பத்தி எல்லாம் இப்பயே எதுக்கு பேசிகிட்டு! நீங்க முதல்ல இங்க கிளம்பி வாங்க பாத்துக்கலாம். நான் லொகேஷன் டீடெயில்ஸ் பத்தி மாணிக் கிட்ட சொல்லிக்கிறேன். நீ கிளம்பிட்டு எனக்கு கால் பண்ணு, Bye.” என்று சொல்லிவிட்டு அவள் அழைப்பை தூண்டித்தான்.
ஆடையை மாற்றிக் கொண்டு வித்யா சொன்னதைப்போல அவள் வருவதற்காக தயாராகி அஸ்வின் அறையில் காத்திருந்தாள் ஐஸ்வர்யா. அவள் எதிர்பார்த்ததைப் போல சில நிமிடங்களுக்கு பின்பு அங்கே வந்து வித்யா கதவை தட்ட, முதலில் பயந்தாலும் பின் வித்யாவின் குரலை கேட்டு நிம்மதியாக உணர்ந்த ஐஸ்வர்யா சென்று கதவை திறந்தாள்.
உடனே அவளது ரூமிற்குள் நுழைந்த வித்யா “நீ கிளம்பிட்டியா? நம்ம பக்கத்துல எங்கயாவது ஹோட்டல் ரூம் பார்த்து கூட போய் ஸ்டே பண்ணி ரெப்ரெஷ் பண்ணிக்கலாம். நீ உன் பேக்கை எடுத்துட்டு வா நம்ம கிளம்பலாம்.” என்று அவளை அவசரப்படுத்த,
“நீ அஸ்வின் கிட்ட நம்ம கிளம்புறோம்னு சொல்லிட்டியா?” என்று ஐஸ்வர்யா பதட்டத்துடன் கேட்க “இன்னும் சொல்லல, எதுக்கு முதல்ல சொல்லணும் அவங்க கிட்ட? உனக்கு உடம்பு சரியில்லாம நீ ஹாஸ்பிடல் அட்மிட் ஆகி இருக்கிறேன்னு தெரிஞ்சும் அவன் வேணும்னே தானே உன்னை கிளம்பி வர சொன்னான்..
அவன் பேச்சைக் கேட்டு நீயும் கிளம்பி வந்துட்ட.. அதுக்காக இங்கயே இருந்து மத்தவங்க பேசறதை எல்லாம் கேட்டு கஷ்டப்படணும்னு உனக்கு என்ன தலையெழுத்தா? அவன் ஏதாவது கேட்டா நான் பேசுகிறேன். விவேக்கை நமக்கு டாக்ஸி புக் பண்ணி கொடுக்க சொல்லி இருக்கேன். அது இன்னும் பத்து நிமிஷத்துல இங்க வந்துரும். முதல்ல நம்ம இங்க இருந்து கிளம்புவோம்.” என்றாள் வித்யா.
அதற்கு ஐஸ்வர்யா சரி என்று தலையாட்ட, அவர்கள் இருவரும் டேக்ஸி வருவதற்காக காத்திருந்தார்கள். சில நிமிடங்களுக்கு பிறகு வித்யாவிற்கு கால் செய்த விவேக் “டாக்ஸி வந்துருச்சு. நான் வெளிய தான் இருக்கிறேன். நீங்க வாங்க நான் உங்களை அதுல ஏத்தி விட்டுடறேன். அஸ்வின் எப்ப இங்க இருந்து கிளம்பரானோ நான் அப்ப அவன் கூட கிளம்பி வரேன்.” என்றான்.
சரி என்று சொல்லி விட்டு அந்த அழைப்பை துண்டித்த வித்யா ஐஸ்வர்யாவின் கையை பிடித்து வெளியில் அழைத்துச் சென்றாள். அவர்கள் இருவரும் சரியாக அந்த வீட்டு வாசலை நோக்கி செல்லும்போது, அஸ்வினை சாப்பிட அழைக்கலாம் என நினைத்து அந்த பக்கமாக வந்த திலகா அவர்களை கவனித்து விட்டு “ஏய் நில்லு டி!” என்று சத்தமாக சொல்ல, பதட்டத்துடன் ஐஸ்வர்யா அவள் பக்கம் திரும்பினாள்.
“போச்சு.. எப்பயும் நம்ம எது நடக்க கூடாதுன்னு நினைக்கிறோமோ அதுதான் கரெக்டான நடக்கும் போல இருக்கு!” என்று நினைத்த வித்யா “அவங்க என்ன பேசினாலும் சைலன்ட்டாவே இரு. நான் அவங்க கிட்ட ஏதாவது சொல்லி சமாளிச்சு உன்னை இங்க இருந்து கூட்டிட்டு போயிடறேன்.” என்று ஐஸ்வர்யாவின் காதுகளில் கிசுகிசுத்தாள்.
“வாடி சிறுக்கி மு***.. எங்க குடிய கெடுத்தது பத்தாதுன்னு எங்க பையன் நிம்மதியாவே இருக்க கூடாதுன்னு கங்கணம் கட்டிக்கிட்டு திரியுற மாதிரி இங்கயே வந்துட்டியா நீ?” என்று ஆத்திரம் பொங்க கேட்ட திலகா தனது புடவையை வரிஞ்சி கட்டிக் கொண்டு ஐஸ்வர்யாவிடம் சண்டை போடுவதற்காக அவளை நோக்கி சீறிக் கொண்டு சென்றாள்.
அவள் தன்னை நோக்கி வரும் விதத்தை பார்த்தாலே ஐஸ்வர்யாவிற்கு பயமாக இருந்ததால் தன்னையும் அறியாமல் அவள் வித்யாவிற்கு பின்னே சென்று ஒளிந்து கொள்ள, அவளை நெருங்கிய திலகா அவளது தலை முடியை கொத்தாக பிடித்து அவளை முன்னே இழுத்து வித்யா சுதாரித்துக் கொண்டு ஐஸ்வர்யாவை அவளிடம் இருந்து காப்பாற்றுவதற்கு முன்பாக அவள் ஐஸ்வர்யாவின் கன்னங்களில் பலார் பலார் என்று மாறி மாறி அறைந்தாள்.
இந்துவும், மாணிக்கும் இப்போது இங்கே தான் வந்து கொண்டு இருக்கிறார்கள் என்பதால், அதைப் பற்றி தனது சித்தப்பாவிடம் சொல்ல வேண்டும் என நினைத்து கிளம்பி வீட்டிற்கு வந்திருந்த அஸ்வின் கண்களில் அந்த காட்சி பட்டது. அவனும் திலகா ஐஸ்வர்யாவிடம் இப்படி நடந்து கொள்வாள் என்று எதிர்பார்த்து இருக்காததால், அதை அதிர்சியுடன் தான் பார்த்தான்.
ஆனால் ஐஸ்வர்யாவின் மீது தனக்கு இருக்கும் வெறுப்பையும் கோபத்தையும் தாண்டி இம்முறை தனது குடும்பத்தினர்களிடம் இருந்து அவன் அவளை காப்பாற்றுவானா?
“ஆன்ட்டி என்ன பண்றீங்க நீங்க? நீங்க பாட்டுக்கு அவளை அடிக்கிறீங்க! இது எவ்ளோ பெரிய தப்பு தெரியுமா?” என்று கோபமாக கேட்ட வித்யா திலகாவிடம் இருந்து ஐஸ்வர்யாவை காப்பாற்ற நினைத்து அவர்கள் இருவருக்கும் நடுவில் சென்று நின்றாள்.
அவள் கையைப் பிடித்து விளக்கி நிறுத்திய திலகா “இங்க பாருமா.. நீ எங்க வீட்டு பையன் அஸ்வினோட ஃபிரெண்டு. எங்க வீட்டுக்கு விருந்தாளியா வந்திருக்க.. இந்த மாதிரி வர்றவங்கள நல்லபடியாக கவனிச்சு அனுப்புறது தான் எங்களுக்கு பழக்கம்.
உன் மேல எனக்கு எந்த கோபமும் இல்ல. தேவை இல்லாம இந்த விஷயத்துல நீ நடுவுல வராத. இது எங்க குடும்ப விஷயம். இத நாங்களே பாத்துகிறோம். இதுக்கு உனக்கு எந்த சம்பந்தமும் இல்லை. நீ அமைதியா இரு. யாருக்கும் தெரியாம ராத்திரியோட ராத்திரியா எங்க வீட்டுக்கு வந்து இப்ப இவ என்ன திட்டம் போட்டு எங்க குடும்பத்தை அளிக்கிற என்னத்துல இருக்கான்னு யாருக்கு தெரியும்?” என்று கோபமாக கேட்டாள்.
அவளை வரச் சொன்னது அஸ்வின் தான் என வித்யா தன் வாயை திறந்து சொல்வதற்குள் அந்த வீட்டில் உள்ள அனைவரும் திலகாபின் சத்தத்தை கேட்டு அங்கே வர தொடங்கினார்கள்.
– முத்தங்கள் தொடரும்