அத்தியாயம் 6: செண்பகத்தை காப்பாற்றிய ரித்திகா
கோயிலுக்குள் நுழைந்த ரித்திகா, நேராக தனக்கு பிடித்த துர்கா தேவியின் சன்னதியை தேடி கண்டுபிடித்து அங்கே சென்று இருக்க, அவள் கண் முன்னே ஒரு வயதான பெண்மணியின் சேலை தீபத்தில் பட்டு தீ பிடித்து எரிந்து கொண்டிருந்தது. அதை கண்டு அதிர்ச்சி அடைந்த ரித்திகா, அந்த பெண்மணியின் அருகே சென்றாள்.
விரைந்து அந்த வயதான பெண்மணியின் அருகே வந்த ரித்திகா, “அம்மா நெருப்பு!” என்றாள். அப்போது தான் அந்த பெண்மணியின் புடவையில் தீ பற்றி எரிந்து கொண்டிருப்பதை அனைவரும் கவனித்தனர்.
அந்த வயதான பெண்மணி இவ்வளவு நேரம் உள்ளம் உருக கடவுளை.. கண்களை மூடி கும்பிட்டு கொண்டு இருந்ததால், இதை கவனித்து இருக்கவில்லை. ரித்திகாவுக்கு அந்த நெருப்பை எப்படி அணைப்பது என்று தெரியவில்லை. ஆனால் ஏதாவது செய்து அந்த வயதான பெண்ணை காப்பாற்ற வேண்டும் என்று நினைத்தபடியே யோசிக்க..
சட்டென ரித்திகாவின் மூளையில் ஒரு பல்பு எரிய.. நெருப்பை தண்ணீரை ஊற்றி தானே அணைப்பார்கள் என்று நினைத்தவள்; சுற்றி முற்றி தண்ணீர் இருக்கிறதா.. என்று தேடினாள்.
அங்கு எங்கேயும் தண்ணீர் இல்லாத காரணத்தால், தான் கையில் வைத்திருந்த பால் கவரில் போட்டு இருந்த ரப்பர் பேண்டை கழட்டி அந்த பாலை அப்படியே அந்த நெருப்பில் ஊற்றினாள் ரித்திகா. அந்த ஒரு லிட்டர் பாலை அப்படியே நெருப்பில் ஊற்றியதால், அந்த நெருப்பும் பெரிதாக எரிந்து கொண்டு இருக்கவில்லை என்பதால், உடனே அணைந்து விட்டது.
அதுவரை தன் புடவையில் நெருப்பு பற்றிய அதிர்ச்சியில் இருந்த அந்த வயதான பெண்மணி, ரித்திகா பாலை தன் மீது ஊற்றிய பிறகு தான் நிதானத்திற்கு வந்து நிம்மதி அடைந்தாள். இவை அனைத்தும் ஒரு மூன்றே நிமிடங்களுக்குள் நடந்து முடிந்திருந்தது. முகத்தில் வியர்வை வடிய சிறிது பயந்து இருந்த அந்த வயதான பெண்மணியை அன்புடன் பார்த்த ரித்திகா, “அம்மா உங்களுக்கு ஒன்னும் இல்லையே… நீங்க நல்லா இருக்கீங்க தானே..?” என்று அக்கறையுடன் கேட்டாள்.
ரித்திகாவை நன்றியுணர்வுடன் பார்த்த அந்த பெண்மணி, “எனக்கு ஒன்னும் ஆகல மா கண்ணு.. அதான்.. நீ சாமி மாதிரி வந்து என்னை காப்பாத்திட்டியே..” என்று சிரித்துக்கொண்டு பாசமாக ரித்திகாவின் தலையை தடவியபடி சொன்னாள்.
ரித்திகா: “சாமின்ரதெல்லாம் ரொம்ப பெரிய வார்த்தை. நீங்க என்ன சாமின்னு சொல்ற அளவுக்கு நான் எதுவும் பெருசா பண்ணிடல மா.”
அந்த பெண்மணி: “உனக்கு இது பெருசா தெரியாம இருக்கலாம். ஆனா நீ எனக்கு ஹெல்ப் பண்ணி இருக்க. ரொம்ப நன்றி மா.”
ரித்திகா: “நீங்க எனக்கு நன்றி எல்லாம் சொல்ல வேண்டாம் மா. அடுத்த தடவை இப்படி எல்லாம் நடக்காம கேர்ஃபுல்லா இருங்க. அது போதும்.”
அந்த பெண்மணி: “சரி..!! மா. இனி இப்படி நடக்காம பார்த்துக்கிறேன்.” என்று சிரித்து கொண்டே சொன்னாள்.
விஷ்ணுவின் வருகை
இப்படி ரித்திகாவும், அந்த பெண்மணியும், அங்கே பேசிக்கொண்டிருக்க, அங்கே வந்தான் அந்த பெண்மணியின் மகன், விஷ்ணு நாராயணன்.
விஷ்ணு: “அம்மா நானும், சுகந்தி அக்காவும், உங்களை எங்கெல்லாம் தேடுறது.. நீங்க இங்க என்ன பண்றீங்க?”
அந்த பெண்மணி: “துர்க்கைக்கு ஆரத்தி காமிச்சிட்டு இருந்தாங்க பா.. விஷ்ணு. அதான் பாக்கலாம்னு வந்தேன். நான் வந்து இங்கே சாமி கும்பிட்டு இருக்கிறப்ப கீழே இருந்த விளக்கைக் கவனிக்காம விட்டுட்டேன். அப்போ அந்த விளக்கில என்னோட புடவை பட்டுருச்சு போல நெருப்பு புடிச்சுகிச்சு. இந்தப் பொண்ணுதான் சாமிக்கு கொண்டு வந்த பால என் புடவை மேல ஊத்தி நெருப்பை அணைச்சு என்னைக் காப்பாத்தனா.”
விஷ்ணு: “அப்படியா….? அம்மா..!!! உங்களுக்கு எதுவும் இல்லையே?” என்று பதட்டத்துடன் கேட்டான்.
அந்த பெண்மணி: “அதான்.. சொன்னனே.. இந்தப் பொண்ணுதான் இன்னும் நெருப்பு பெருசா புடிச்சு இருக்குறதுக்குள்ள என்ன காப்பாத்திட்டாளே.. எனக்கு ஒன்னும் இல்ல நான் நல்லா இருக்கேன் விஷ்ணு.”
விஷ்ணு: தன் அம்மா தனக்கு ஒன்றும் இல்லை என்று சொன்னதைக் கேட்டு நிம்மதி அடைந்தவன், பின் அங்கே இருந்த ரித்திகாவைப் பார்த்து “தேங்க்யூ சிஸ்டர்” என்று நன்றியுணர்வுடன் சொன்னான்.
ரித்திகா: “இட்ஸ் ஓகே..!! பிரதர். நீங்க அம்மாவை நல்லா பாத்துக்கோங்க. எனக்கு லேட் ஆகுது. நான் சாமி கும்பிட்டு கிளம்புறேன்.” என்று விஷ்ணுவைப் பார்த்து சொன்னவள்; பின் அந்த பெண்மணியைப் பார்த்து “கிளம்புறேன் மா. இனி கேர்ஃபுல் ஆ இருங்க.” என்று சொல்லி விட்டு வேக வேகமாக சாமி கும்பிட்டு விட்டு அங்கிருந்து கிளம்பினாள்.
செண்பகமும் சுகந்தியும்
அந்த வயதான பெண்மணியைத் தேடி கொண்டு வந்த சுகந்தி.. தூரத்தில் விஷ்ணுவும், அந்த பெண்மணியும், அவர்களுடன் ரித்திகாவும் பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்துக்கொண்டே அருகில் வந்தாள். சுகந்தி அவர்கள் அருகில் வருவதற்குள், அங்கே அவர்களுடன் பேசிக்கொண்டிருந்த ரித்திகா வெளியே சென்று விட்டாள்.
அந்த வயதான பெண்மணியை “செண்பா அம்மா..” என்று அழைத்தபடியே அவர்கள் அருகில் வந்த சுகந்தி, “இப்போ உங்க கிட்ட பேசிக்கிட்டு இருந்த அந்த பொண்ணை உங்களுக்குத் தெரியுமா அம்மா?” என்று கேட்டாள் சுகந்தி.
செண்பகம்: “இல்ல சுகந்தி அந்த பொண்ணை இன்னைக்குதான் பார்த்தேன். நான் கீழ இருந்த விளக்கை கவனிக்காம அங்க நின்னு கண்ண மூடி சாமி கும்பிட்டு இருந்திருக்கேன், அப்ப என்னோட புடவை விளக்குல பட்டு நெருப்பு பிடிச்சுகிச்சு. இப்ப போறாளே.. அந்த பொண்ணுதான் சாமி மாதிரி வந்து…. சாமிக்கு அபிஷேகம் பண்றதுக்கு கொண்டு வந்த பால்ல என் புடவை மேல ஊத்தி என்னைக் காப்பாத்திட்டா. அந்தப் பொண்ணு எங்கேயோ அவசரமா போணும்ன்னு சொல்லிட்டு கிளம்பிட்டா. அதான் அவ பேரக்கூட கேக்க முடியல. ஆனா.. பாக்குறதுக்கு ரொம்ப நல்ல பொண்ணா தெரிஞ்சா. அந்தப் பொண்ணு நல்லா இருக்கணும்.” என்று மனதார சொன்னாள்.
சுகந்தி: “அப்படியா..!! உங்களுக்கு எதுவும் ஆகலையே மா? நீங்க நல்லா இருக்கீங்க தானே..”
செண்பகம்: “எனக்கு ஒன்னும் இல்ல சுகந்தி. நான் நல்லாதான் இருக்கேன்.”
சுகந்தி: “சரிங்க மா. அந்தக் கடவுள் புண்ணியத்துல உங்களுக்கு எதுவும் ஆகல. அந்த பொண்ணு பேரக்கூட கேக்கலன்னு சொன்னீங்கல மா.. அந்த பொண்ணு பேரு ரித்திகா.”
விஷ்ணு: “அந்த பொண்ணோட பேரு உங்களுக்கு எப்படி அக்கா தெரியும்?”
செண்பகம்: “அதானே…!! சுகந்தி அந்த பொண்ணை உனக்கு முன்னாடியே தெரியுமா?”
சுகந்தி: “நம்ப சித்தார்த் தம்பி படிக்கிற ஸ்கூல்லதான் அந்த பொண்ணு டீச்சரா சேர்ந்திருக்கு. நேத்துதான் ஸ்கூல்ல இந்தப் பொண்ண பாத்தேன். சொன்னா நம்பமாட்டீங்க மா.. சித்தார்த் தம்பி இந்தப் பொண்ணு கிட்ட நல்லா பேசினாரு. டீச்சர்ன்னு கொஞ்சம் கூட பயப்படவே இல்ல. நேத்து வீட்டுக்கு வந்த உடனே நான் உங்க கிட்ட இதைப்பத்தி சொல்லலாம்னு இருந்தேன். ஆனா அப்படியே வேலை எல்லாம் செஞ்சிட்டே மறந்துட்டேன் மா.”
விஷ்ணு: “ஓ…!! அவங்க நம்ம ஸ்கூல்லதான் வேலை பாக்கிறாங்களா..? இப்ப ஸ்கூல் ஸ்டார்ட் ஆகுற டைம் ஆயிடுச்சுல அதான் வேகமா போறாங்க போல.” இதை கேட்டவுடன் தான் சித்தார்த்தை ஸ்கூலுக்கு அனுப்ப வேண்டும் என்று செண்பகத்திற்கு ஞாபகம் வந்தது. “விஷ்ணு, சித்தார்த்த ஸ்கூலுக்கு கிளப்பி விடணும். வா சீக்கிரம் வீட்டுக்கு போலாம்” என்றாள்.
சுகந்தி: “இல்லை மா. காலைல நேரமாவே தம்பி எந்திரிச்சு ஸ்கூலுக்கு கிளம்பிட்டாரு. நான் அவரை ரெடி பண்ணிட்டுதான் இங்க வந்தேன். பிரார்த்தனா பாப்பா தம்பி ஆ அவங்க காலேஜ்க்கு போற வழியில அப்படியே கொண்டு போய் ஸ்கூல்ல விட்டறேன்னு சொன்னாங்க.”
விஷ்ணு: “சுகந்தி அக்கா நீங்க நல்லா பாத்தீங்களா? நிஜமா பிரார்த்தனாதான் சித்தார்த்தை கூட்டிட்டு போய் விட்டறேன்னு சொன்னாளா? அந்த அனபெல் டால் இதெல்லாம் செய்யுற ஆள் இல்லையே.. இன்னைக்கு மழை வரப்போகுது போங்க” என்று சொல்லி கொண்டே சிரித்தான்.
செண்பகம்: “டேய்.. விஷ்ணு அப்படி அவளை சொல்லாதேன்னு உன்கிட்ட எத்தன தடவ சொல்றது..? அவ இன்னும் சின்ன பொண்ணுதான்டா.”
விஷ்ணு: “யாரு அவ.. சின்ன பொண்ணு? விட்டா நம்ம எல்லாரையும் வித்துப்புட்டு போயிடுவா அவ. நீங்க எல்லாம் இன்னும் அவளை இப்படி சின்ன பொண்ணுன்னு நினைச்சுட்டே இருங்க. அதான் அவ உங்களை எல்லாம் ஈசி ஆ ஏமாத்திக்கிட்டு இருக்கா.”
செண்பகம்: “போதும்டா. நீ ஒன்னும் என் பொண்ண பத்தி பேச வேண்டாம்.”
விஷ்ணு: “போங்க மா. எப்ப பார்த்தாலும் அவ என்ன பண்ணாலும் நீங்க அவளுக்குத்தான் சப்போர்ட் பண்ணுவீங்க. நான் எதுவுமே பண்ணலனாலும் எல்லாரும் சேர்ந்து என்னத்தான் திட்டுவீங்க.”
என்று சொன்னவன், குழந்தை போல் கோபித்துக் கொண்டான்.
செண்பகம்: “அதை விடு டா. எனக்கு பிரார்த்தனா, சித்தார்த்தை ஸ்கூலுக்கு கூட்டிட்டு போனது கூட ஆச்சரியமா இல்லை. ஆனா இந்த சித்தார்த்தும் அடம் பிடிக்காம ஸ்கூலுக்கு கிளம்பி போய் இருக்கானே.. அத்தான் ஆச்சரியமா இருக்கு. ஒரு வேளை பிரார்த்தனா ஏதாச்சும் சொல்லி.. அவனை சமாதானப்படுத்தி கூட்டிட்டு போய் இருப்பாளோ?”
விஷ்ணு: “யாரு அவ… 😂 ஏம்மா இப்படி எல்லாம் காமெடி பண்றீங்க.? அவளுக்கு அதெல்லாம் தெரியாது..”
சுகந்தி: “சித்தார்த் தம்பி ஸ்கூலுக்கு போனது பிரார்த்தனா பாப்பானால இல்ல மா. எல்லாம் அந்த பொண்ணு.. இப்ப போனாலே அந்த ரித்திகா… அவனாலதான்.”
செண்பகம்: “ஏன் அந்த பொண்ணு என்ன பண்ணா?”
சுகந்தி: “அதான் இப்ப சொன்னனே அம்மா.. நேத்து ஸ்கூல்ல சித்தார்த் தம்பியும், ரித்திகாவும், பேசிக்கிட்டு இருந்தாங்கன்னு. நான் போய் பார்த்தப்ப.. ரெண்டு பேரும் அவ்ளோ அன்பா, ஜாலியா பேசிக்கிட்டு இருந்தாங்க. சித்தார்த் தம்பி அப்படி யார்கிட்டயும் பேசி நான் பாத்ததே இல்லை மா. இதுல அந்த பொண்ணை நம்ம தம்பி பிரின்ட்ன்னு வேற சொன்னாரு.”
விஷ்ணு: “சித்தார்த், அவன் வயசுல இருக்கிற சின்ன பசங்க கிட்டயே பேசி விளையாட மாட்டான். அவனுக்கு இவ்வளவு பெரிய ஃபிரண்டா” என்று சொல்லி சிரித்தான்.
செண்பகம்: “ஏன்டா.. இருக்க கூடாது..? அந்தப் பொண்ண பாரு எவ்வளவு நல்ல பொண்ணா இருக்கா.. அந்த பொண்ணைப் பாத்தா எல்லாருக்குமே அவளைப் பிடிக்கும். சித்தார்த்துக்கு மட்டும் பிடிக்காதா..?”
விஷ்ணு: “அவனுக்கு புடிச்சிருக்கோ.. இல்லையோ.. உங்களுக்கு புடிச்சிருக்குன்னு சொல்லுங்க.”
செண்பகம்: “நீ தேவையில்லாததை எல்லாம் பேசாத. நான் உன்னை போய் வருணை கூட்டிட்டு வர சொல்லிதானே அனுப்பி விட்டேன். இதுல நான் தனியா போனா அவன் என்ன திட்டுவான்னு.. சுகந்திய வேற கூட கூட்டிட்டு போன.. எங்கடா அவன்?”
விஷ்ணு: “அது வந்து மா…. நீங்க கூப்பிட்டீங்கனு நானும், சுகந்தி அக்காவும் போய் லயன் கிங் அ கூப்ட்டோம்.”
செண்பகம்: “என்னாது????”
விஷ்ணு: “ஒன்னும் இல்ல மா. நாங்க போய் வருண் அண்ணாவ நீங்க கூப்பிட்டீங்கன்னு சொல்லி கூப்பிட்டோம். அவர் தான் வரல. அதான் நாங்க திரும்பி வந்துட்டோம். வந்து பாத்தா உங்கள காணோம். அதான் நானும், சுகந்தி அக்காவும் உங்கள தேடிட்டு வந்தோம்.”
செண்பகம்: “அப்ப அவன் இன்னும் கார்லையேதான் இருக்கானா?”
விஷ்ணு: “ஆமா மா. வாங்க சீக்கிரம் சாமி கும்பிட்டு போகலாம். ஏற்கனவே லேட் ஆயிடுச்சு. நம்ம இன்னும் லேட்டா போனா உங்களை எல்லாம் அவரு எதுவும் சொல்ல மாட்டாரு. என்னதான் கடிச்சு கோதறிருவாறு…” என்றான் கொஞ்சம் பயத்துடன்.
நேசம் தொடரும்…
(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் நன்றி 🙏)