தன்னுடைய கிரகத்தை பேரழிவிலிருந்து காப்பாற்ற பூமிக்கு வந்த அந்த வேற்று கிரக வாசி, பூமியில் உருவான தன் காதலையும் செலினோவே உருவான தன் கடமையையும், இரண்டையுமே காப்பாற்றினான்.
இறுதியில் அவன் தன் காதலிலும் கடமையிலும் வெற்றியடைந்தான். ஆனால் அவனுடைய காதலும் கடமையும் அவன் முன்பு தோல்வியடைந்தது.
“அப்றோ என்ன ஆச்சுப்பா?” என்று ஒரு மழலை குரல் கேட்க,
அக்குழந்தையின் தந்தை, “இதோட இந்த கத முடிஞ்சது.” என்று கூறி அந்த புத்தகத்தை மூடினார்.
அப்போது அந்த புத்தகத்தின் முன்பக்கம் தெரிய, அந்த புத்தகத்தின் பெயர் விண்ணைத் தாண்டி வந்தேன்.
“இப்பிடி ஒரு முடிவ நா எதிர்பாக்கவே இல்லப்பா.” என்று தன் மழலை குரலில் கூற,
“யாருமே இந்த முடிவ எதிர்பாக்கல.” என்று சோகமாக கூறி தன் கண்ணாடியை சரி செய்தார் அக்குழந்தையின் தந்தை. அது வேறு யாரும் அல்ல நம் பவன்.
மூன்று வயது நிரம்பிய பவனுடைய மகன், “ஏ சித்தப்பா இப்பிடி ஒரு முடிவ எழுதியிருக்காரு?”
அப்போது பவன் மனதிற்குள், “இந்த கிளைமேக்ஸ எழுதுனது உன் சித்தப்பா இல்ல. இங்கிருந்து போறதுக்கு முன்னாடி உன்னோட பெரியப்பா எழுதிவெச்சுட்டு போனாரு.”
“அப்பா சொல்லுங்க. ஏ சித்தப்பா இப்பிடி ஒரு கிளைமேக்ஸ எழுதுனாரு? ஹேப்பி என்டிங் வெச்சிருக்கலால்ல?”
பவன், “இந்த கிளைமேக்ஸ உன் சித்தப்பாவே எதிர்பாக்கல.”
“அப்பிடின்னா?”
உளரிவிட்டதை உணர்ந்த பவன், “அது வந்து…. உன் சித்தப்பாவுக்கே இது கடைசியாதா தோனுச்சு, இப்பிடி எழுதலான்னு.”
அப்போது “அப்பாவும் பையனும் இங்கதா இருக்கீங்களா?” என்று மாயாவின் குரல் கேட்க, இருவரும் திரும்பி பார்த்தனர்.
அப்போது மாயா அங்கு வந்து, “மறுபடியும் கத சொல்ல ஆரம்பிச்சிட்டியா?”
பவன், “இன்னிக்குதா 100வது பாகம். இன்னியோட இந்த கத முடியுது. ” என்று மிகுந்த வருத்தத்துடன் கூற,
மாயாவிற்கு அவன் வருத்தம் புரிந்தாலும் பேச்சை திசை திருப்ப, “செரி ரொம்ப நேரமாயிருச்சு. ரெண்டு பேரும் வாங்க போய் தூங்கலாம்.” என்று கூறி அருகில் வந்து, பவன் மடியில் அமர்ந்திருக்கும் தன் மகனை துக்கிக்கொண்டு,
“நாளைக்கு நம்ப டெல்லி போகணுமில்ல? சீக்கிரா தூங்குனாதான சீக்கிரமா எந்திரிக்க முடியும்?”
“ம்ம்” என்று தன் மழலை குரலில் அவன் கூற,
மாயா, “அப்ப போய் தூங்கலாமா செல்லம்?”
“ம்ம்”
மாயா, “குட் பாய். வாங்க போலாம்.” என்று கூறி அவனை தூக்கிக்கொண்டு சென்றாள்.
அப்போது பவன் தன் கண்ணாடியை கழட்டிவிட்டு கண்களை துடைத்துக்கொண்டான்.
பிறகு மாயா தன்னுடைய அறைக்கு சென்று தன் மகனை மெத்தையில் படுக்க வைத்து, போர்வையை போர்த்திவிட்டு அவன் அருகில் அமர்ந்து, அவனை தூங்கவும் வைத்தாள். பிறகு அவனும் தூங்கிவிட்டான்.
அப்போது பவன் சோகமாக அறைக்குள் நுழைந்து, மெத்தையில் வந்து அமர்ந்தான். அவனுடைய வாடிய முகத்தை பார்த்த மாயா, அவன் தோளில் கை வைத்து, “என்ன ஆச்சு பவன்? ஏ இன்னும் அதையே நெனச்சு வருத்தப்பட்டுகிட்டிருக்க? அது நடந்து முடிஞ்சு மூனு வருஷம் ஆகுது.”
பவன், “மூனு வருஷம் கழிச்சு, இன்னிக்கு மறுபடியும் அந்த சம்பவம் எனக்கு நியாபகம் வந்திருச்சு.” என்று தன் கண்ணீரை துடைத்தான்.
மாயா, “இதுக்குதா நா அப்பவே சொன்னேன். அந்த கத வேண்டா, வேற எதாவது கதைய நம்ப பையனுக்கு சொல்லுன்னு. பட் நீதா கேக்கல.”
பவன், “நம்ப பையனும் அமித் அண்ணா மாதிரியே வளரணுன்னுதா, இத்தன நாள் அமித் அண்ணாவோட கதையவே அவனுக்கு சொல்லிகிட்டிருந்தேன். இனி அவன் மறந்தாலும் திரும்ப இந்த கதைய சொல்லுவேன். திரும்ப திரும்ப சொல்லுவேன். ஏன்னா
எதிர்காலத்துல அவன் கண்டிப்பா அமித் அண்ணா மாதிரிதா இருக்கணுன்னு நா ஆசப்படுறேன்.”
மாயா, “அதெல்லா செரிதா பவன். ஆனா நம்ப பையனுக்கு இன்னும் அமித்த பத்தின உண்மைகள் தெரியாது. அவன பொறுத்தவரைக்கும் அவனோட பெரியப்பாவும் பெரியம்மாவும் ஒரு ஏக்சிடன்ட்டுல எறந்துட்டாங்க. அத அப்பிடியே இருக்க விடு பவன். அவனுக்கு எந்த உண்மையும் தெரியாம இருக்குறதுதா நல்லது.”
பவன், “அவன் அமித் அண்ணாவோட உண்மைகள தெரிஞ்சுக்கலன்னாலும் பரவால்ல. அவர் வாழ்ந்த வாழ்கைய தெரிஞ்சுகிட்டே ஆகணும். இந்த கதையில வர்ற கதாபாத்திரமாவாவது அவரோட வாழ்கைய அவன் தெரிஞ்சுக்கணும்.”
மாயா, “செரி பவன். சீக்கிரமா தூங்கு. நாளைக்கு நம்ப டெல்லி போகணும். நியாபகம் இருக்கில்ல?”
பவன், “ம்ம். நாளைக்குதா அமித் அண்ணாவோட மிகபெரிய கனவு நெறவேறப்போற நாள். நாளைக்கு அவனோட அவார்டு வங்ஷன்.”
மாயா, “ம்ம். சோ சீக்கிரமா தூங்கு. நாளைக்கு நேரத்துல போயாகணும். அவார்டு ஃபங்ஷனுக்கு நம்பளே லேட்டா போனா அவன் கோச்சுக்குவான். அவன பத்திதா உனக்கு தெரியுமில்ல?”
பவன், “செரி. லைட்ட ஆஃப் பண்ணிட்டு வா.” என்று கூறி படுத்துக்கொண்டான்.
மாயா, “ம்ம்”
பிறகு மாயா சென்று லைட்டை ஆப் செய்துவிட்டு வந்து, மெத்தையில் படுத்துக்கொண்டாள். பிறகு இருவரும் தூங்கிவிட்டனர்.
அடுத்த நாள் காலை, டெல்லியில் ஒரு மிக பெரிய கலையரங்கத்தில், மிக பிரம்மாண்டமான அவார்டு ஃபங்ஷன் நடந்துக்கொண்டிருந்தது. அந்த பிரமாண்ட மேடையில், நிறைய அவார்டுகளை கொடுத்துக்கொண்டிருந்தனர். வி.ஜேக்கள் இரண்டு பேர், “அடுத்ததா நம்ப பாக்க போற அவார்டு, த பெஸ்ட் ரைட்டர் ஆஃப் த இயர். அந்த அவார்ட யாருக்கு போக போகுது?”
அதில் ஒரு பெண் வி.ஜே, “அத அனன்வ்ஸ் பண்ண ஒரு மிகப்பெரிய கெஸ்ட் இங்க வரப் போறாரு. லெட்ஸ் வெல்கம், த பெஸ்ட் ஆக்டர் அன்டு ரைட்டர்… ஷரத் மல்ஹோத்ரா!” என்று அழைக்க,
திரை இரண்டாக திறந்து, உள்ளிருந்து பிரபல நடிகர் ஷரத் மல்ஹோத்ரா வந்தார். அவரை பார்த்ததும் அனைவரும் உற்சாகமாக கத்தி, விசில் அடித்தனர்.
பிறகு ஷரத் மல்ஹோத்ரா மைக்கை வாங்கி, “த பெஸ்ட் ரைட்டர் ஆஃப் த இயர் அவார்டு கோஸ் டூ…. சந்தோஷ் ஃபார் தொடுவானம் நாவல்.” என்று கூறியதும், கீழே அமர்ந்திருந்த ரைட்டர் சந்தோஷ் மிகுந்த அதிர்ச்சியடைந்து, மிகுந்த மகிழ்ச்சியுடன் மேடைக்கு வந்தார்.
வி.ஜே, “தேங்க் யூ ஷரத் சார். தேங்க் யூ சோ மச்.”
ஷரத் மல்ஹோத்ரா, “தேங்க் யூ” என்று கூறிவிட்டு மைக்கை கொடுத்துவிட்டு மேடையைவிட்டு இறங்கிவிட்டார்.
அப்போது வி.ஜே, ரைட்டர் சந்தோஷை பார்த்து, “இந்த மேடையில உங்களுக்காக ஒரு சர்ப்ரைஸும் இருக்கு. அது என்னன்னு உங்களால கெஸ் பண்ண முடியுதா?”
சந்தோஷ் யோசித்துவிட்டு, “நோ.” என்று புன்னகையுடன் கூற,
வி.ஜே, “இப்ப உங்களுக்கு இந்த அவார்ட குடுக்குறதுக்காகவே, ஒரு ஸ்பெஷல் கெஸ்ட் இங்க வர போறாங்க. கொஞ்ச நாள்லையே நெறைய நாவல்கள எழுதி தி ஃபேமஸ் ரைட்டரா உருவெடுத்த, தி ஒன் அன்டு ஒன்லி பெஸ்ட் ரைட்டர இங்க கூப்புட போறோம். லெட்ஸ் வெல்கம் தி ஃபேமஸ் ரைட்டர் மிஸ்டர் ரவி….!” என்று கூறியதும் திரை இரண்டாக திறந்தது.
திரையின் உள்ளே இருந்து, கோட் சூட்டுடன் கெத்தாக வெளிவந்தான் நம் ரவி.
ரவியை பார்த்த சந்தோஷ் மிகுந்த அதிர்ச்சியடைந்து, தன் வாயில் கைவைத்து அதிர்ச்சியடைந்தான். ரவியை பார்த்ததும் மேடைக்கு கீழே விசில் பறந்தது, மக்களின் கத்தல் உரத்த சத்தமாக கேட்டது. ரவி அனைவரை பார்த்தும் கை அசைத்தான்.
வி.ஜே, “இதுதா நாங்க உங்களுக்கு குடுக்குற சர்ப்ரைஸ்.”
ரவி வந்து அந்த அவார்டை அவனுக்கு கொடுத்தான். அவனும் மிகுந்த மகிழ்ச்சியுடன் அதை வாங்கினான். பிறகு ரைட்டர் சந்தோஷிடம் மைக் கொடுக்கப்பட்டது. அவனும் மைக்கை வாங்கி ஒருசில வார்த்தைகளை பேசினான்.
சந்தோஷ், “நா இத சத்தியமா எதிர்பாக்கல. இந்த அவார்டவிட, இந்த அவர்ட குடுக்க ரவி சாரே வருவாருன்னு நா சுத்தமா எதிர்பாக்கவே இல்ல.” என்று கூறி ரவியை பார்த்து, “நா உங்களோட மிகப்பெரிய ஃபேன் சார். நீங்கதா என்னோட இன்ஸ்ப்பிரேஷன் அன்ட் மோட்டிவேஷன்.”
ரவி புன்னகையுடன், “தேங்க் யூ. தேங்க் யூ சோ மச்.”
சந்தோஷ், “உண்மையிலையே இந்த மேடையில, இந்த அவார்டவிட, உங்கள பாத்ததுதா எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. இப்பிடி ஒரு சர்ப்ரைஸ் தருவீங்கன்னு நா சத்தியமா எதிர்பாக்கல. தேங்க் யூ சோ மச் சார்.”
ரவி, “தேங்க் யூ.”
சந்தோஷ், “உங்கள பாக்குறதே பெரிய விஷயம், அதுவும் இவ்ளோ பக்கத்துல, என்னால நம்பவே முடியல. ப்ளீஸ் நா உங்கள ஒரே ஒரு தெடவ ஹக் பண்ணிக்கலாமா?”
ரவி புன்னகையுடன், “ஷ்யோர்.” என்று கூறி அவனை கட்டி அணைத்துக்கொண்டான். சந்தோஷும் அவனை கட்டி அணைத்துக்கொண்டான்.
மேடைக்கு கீழிருக்கும் பவனும் மாயாவும் அதை பார்த்து ஆனந்தமடைந்தனர்.
மாயா, “நேத்து வரைக்கும் அவார்டு வாங்கிக்கிட்டிருந்த நம்ப ரவி, இன்னிக்கு அவார்டு குடுக்குற எடத்துக்கு வளந்து நிக்கிறான். இத பாக்கவே ரொம்ப சந்தோஷமா இருக்கு.”
அப்போது பவன், “அவன் தனக்குன்னு ஒரு அடையாளத்த உருவாக்கிக்கணுன்னுதா அமித் அண்ணா ஆசப்பட்டாரு. அவரு சொல்லிட்டு போன மாதிரியே நம்ப ரவி இப்ப தனக்குன்னு ஒரு மிகபெரிய அடையாளத்தையே உருவாக்கிக்கிட்டான். அமித் அண்ணாவோட ஆசைய நெறவேத்திட்டான்.”
மாயா, “ஆமா பவன். பாக்கவே ரொம்ப சந்தோஷமா இருக்கு.”
பவன், “ஆனா நா இன்னும் அவர் சொன்னத நெறவேத்தாம இருக்கேன்.”
அதை கேட்ட மாயா கேள்வியுடன் அவனை பார்க்க,
பவன், “அவனோட கல்யாணத்த அமித் அண்ணா எங்கிட்டதா ஒப்படச்சிருக்காரு. ஆனா நா இன்னும் அத நெறவேத்தாம இருக்கேன்.” என்று வருத்தமாக கூறினான்.
மாயா, “அதுவும் கண்டிப்பா நடக்கும். அவனுக்கான பொண்ணு கண்டிப்பா எங்கயாவது பொறந்திருப்பா.”
அதே சமயம் அங்கு ஒரு மீட்டிங் ஹாலில் அனைவரும் டென்டர் எடுப்பதற்காக கூடியிருந்தனர்.
அங்கு ஒரு பிஸ்னஸ்மேன், “ஏ இன்னும் டென்டர் ஸ்டார்ட் ஆகாம இருக்கு? நம்ப வந்து ரொம்ப நேரம் ஆகுதில்ல? சீக்கிரம் ஸ்டார்ட் பண்ணுங்க.”
டென்டரர், “இன்னும் ஒருத்தர் வரவேண்டி இருக்கு. அவங்க வந்தா, டென்டர ஸ்டார்ட் பண்ணிரலா.”
அந்த பிஸ்னஸ்மேன், “வாட்? அவங்க எப்ப வர்றது, நீங்க எப்ப ஸ்டார்ட் பண்றது? நாங்க என்ன வெட்டி ஆஃபிசர்ஸ்னு நெனச்சீங்களா? இதவிட பெரிய பெரிய வேலையெல்லா எங்களுக்கு பென்டிங் இருக்கு.”
டென்டரர், “அப்பிடின்னா நீங்க தாரலமா கெளம்பலாம். ஆனா அவங்க வராம டென்டர நாங்க ஸ்டார்ட் பண்ண மாட்டோம்.”
அந்த பிஸ்னஸ்மேன், “வாட் த ஹெல்?”
அதற்குள் வெளியில் இரண்டு மூன்று கார் வந்து நின்றது. அதில் ஒரு காரின் கதவு மட்டும் திறக்க, பெரிய ஹீல்ஸ் போட்ட காலுடன் கீழே இறங்கினாள் ஒரு பெண். அந்த பெண்ணை பார்த்த, அங்கிருந்த செக்யூரிட்டி கார்ட் ஓடி வந்து,
“குட் மார்னிங் மேம். எல்லாரும் உங்களுக்காகதா வெய்ட் பண்ணிகிட்டிருக்காங்க. வெல்கம் மேம்.”
அந்த பெண் கூளிங் கிளாஸை கழட்டிவிட்டு அந்த செக்யூரிட்டி கார்டை பார்த்து, “வாட் யூ மீன், எனக்காக வெய்ட் பண்றாங்க?”
செக்யூரிட்டி கார்ட், “மேம்… மித்ரா மேம்… நீங்கதான?”
அந்த பெண், “ஐயம் பிரீத்தா. பி.ஏ ஆஃப் மித்ரா மேம்.”
செக்யூரிட்டி கார்ட், “மேம் அவங்க…”
அப்போது அதே காரின் இன்னொரு கதவும் திறந்தது. அதிலிருந்து ஜீன்ஸ் போட்டு, ஹீல்ஸ் காலுடன் ஒரு பெண் இறங்கினாள்.
அப்போது பிரீத்தா, “சீ அவங்கதா மித்ரா மேம்.”
காரைவிட்டு இறங்கிய மித்ரா, தன் கூந்தலை ஸ்டைலாக விலக்கி, தன் கூளிங் கிளாஸை கழட்டிவிட்டு பிரீத்தாவின் அருகில் வந்து அவளிடம் , “லெட்ஸ் கோ.”
பிரீத்தா, “யெஸ் மேம்.” என்று கூறி இருவரும் உள்ளே சென்றனர்.
அப்போது அந்த செக்யூரிட்டி கார்ட் தலையை சொரிந்தபடி, “இவங்க ரெண்டு பேருமே மொதலாளி மாதிரிதா இருக்காங்க” என்று புலம்பிவிட்டு சென்றான்.
உள்ளே சென்றதும் மித்ராவை பார்த்த அனைவரும் எழுந்து நின்றனர். மித்ரா தன் கண்ணசைவால் அனைவரையும் அமர கூறிவிட்டு, தானும் வந்து அமர்ந்தாள். அவளுடைய பி.ஏ பிரீத்தா, அவள் அருகில் வந்து நின்றாள்.
அப்போது அந்த பிஸ்னஸ்மேன், “என்ன நடக்குது இங்க? நாங்களும் டென்டர் எடுக்கதா வந்திருக்கோம், அவங்களும் டென்டர் எடுக்கதா வந்திருக்காங்க. அவங்களும் எங்கள மாதிரி ஒரு பிஸ்னஸ்வுமன்தான? அவங்களுக்கு மட்டும் ஏ இவ்ளோ மரியாத குடுக்குறீங்க?”
அதை கேட்ட மித்ரா தன் இருக்கையில் சாய்ந்து அமர்ந்து, கால் மேல் கால் போட்டு அவனை பார்த்து, “மரியாத இங்குறத நம்பகிட்ட இருக்குற பண்ணத்த பாத்தோ, பதவிய பாத்தோ வரக்கூடாது. அது நம்பள பாத்து வரணும். அப்பதா அந்த மரியாத நமக்கு சொந்தம். புரிஞ்சதா?” என்று புருவத்தை உயர்த்தி கேட்க,
அந்த பிஸ்னஸ்மேன், “வாட் யூ மீன்?”
மித்ரா, “ஐ மீன், யூ ஆர் நாட் சூட்டபிள் டூ தட் ரெஸ்பெக்ட். அன்டர்ஸ்டேன்ட்?” என்று திமிராக கூற,
அதை கேட்டு அந்த பிஸ்னஸ்மேன் கோபம்கொண்டு கொந்தளிக்கும்போது, அவன் தோளில் கைவைத்து அவனை அமைதிப்படுத்தினார் மற்றொரு பிஸ்னஸ்மேன் ராகவ்.
ராகவ், “அமைதியா இருங்க. நம்ப இப்ப சண்ட போட வரல. டென்டர் எடுக்க வந்திருக்கோம்.”
அதை கேட்டு அந்த பிஸ்னஸ்மேனும் பிரச்சனை வேண்டாம் என்று அமைதியாகிவிட்டான். பிறகு டென்டரை ஆரம்பித்தார்கள்.
டென்டரர், “இதுல யாரு ரொம்ப கம்மியான பட்ஜெட் சொல்றீங்களோ, அவங்களுக்குதா இந்த டென்டர் கெடைக்க போகுதுன்னு எல்லாருக்கும் தெரியும். சோ நாங்க யாருக்கும் சாதகமா இல்லன்னு இப்பவே தெரிவிச்சுக்குறோம். டென்டர ஸ்டார் பண்ணலாமா?”
அந்த பிஸ்னஸ்மேன், “யா ப்ளீஸ்.”
டென்டரர், “செரி எல்லாரும் உங்க ஃபைல குடுங்க.”
அனைவரும் அவரவர் ஃபைல்களை கொடுத்தனர். டென்டரர் அதை வாங்கிவிட்டு, ஒவ்வொன்றாக விரித்து படித்தார். அப்போது அனைத்து பிஸ்னஸ்மேன்களும் அந்த மிக பெரிய ப்ராஜக்ட் தனக்குதான் கிடைக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டனர். ஆனால் மித்ரா மட்டும் அது தனக்குதான் கிடைக்கும் என்று முடிவே செய்திருந்தாள்.
அனைத்து ஃபைல்களையும் படித்த பிறகு டென்டரர், மித்ராவின் கம்பனி ஃபைலை எடுத்து பார்த்தார். அதை பார்த்துவிட்டு, “மித்ரா குரூப் ஆஃப் கம்பனி, 40,00,00,000(40 கோடி). இருக்குறதுலையே இவங்கதா கம்மியான பட்ஜெட் போட்டிருக்காங்க. சோ இவங்களுக்குதா டென்டர் கெடைக்கும்” என்று கூற, மித்ரா கர்வமாக புன்னகைத்தாள்.
ஆனால் மற்ற அனைவரும் முகம் சுளித்தார்கள். அப்போது மித்ரா அவர்களை பார்த்து, திமிராக புன்னகைத்து, அங்கிருக்கும் பேப்பர் வெய்ட்டை எடுத்து கூளாக உருட்டிக்கொண்டிருந்தாள்.
அப்போது டென்டரர், “இன்னும் ஒரே ஒரு ஃபைல் மிச்சம் இருக்கு. அதையும் பத்தரலாம்.” என்று கூறி அந்த ஃபைலையும் திறந்து பார்த்தார்.
அதை பார்த்துவிட்டு, “ராகவ் குரூப் ஆஃப் கம்பனி 39,99,99,999. இது வரைக்கும் நா இப்பிடி ஒரு டென்டர பாத்ததில்ல. 40 கோடியில ஒரு ரூபா கம்மி. சோ ரகவ் க்ரூப் ஆஃப் கம்பனிக்குதா இந்த ப்ராஜெட் போகணும்” என்று கூற மித்ரா மிகுந்த கோபமடைந்து, அந்த பேப்பர் வேயிட்டை தன் உள்ளங்கையில் வைத்து இறுக்கினாள்.
அப்போது ராகவ், மித்ராவை பார்த்து திமிராக புன்னகைக்க, அதை பார்த்த மித்ரா கோபமடைந்து, உடனே எழுந்து, அந்த பேப்பர் வெயிட்டை எடுத்துக்கொண்டு, அவன் அருகில் வேகமாக வந்தாள். அதை பார்த்த அனைவருமே பயந்து பார்க்க, கோபத்துடன் அருகில் வந்த மித்ரா, அந்த பேப்பர் வெயிட்டை கீழே வைத்துவிட்டு, தன் கையை நீட்டி, “கன்ங்ரேட்ஸ்.” என்று கூற, ராகவ் மிகவும் வியந்து, அதே வியப்புடன் அவளுக்கு கை கொடுத்தான்.
மித்ரா அவன் கையை குலுக்கி, “இதுவரைக்கும் என்ன யாருமே ஜெயிச்சதில்ல. முதல் தெடவ என்ன தோக்கடிச்சிருக்கீங்க. என்ன மொதல் முறையா ஜெயிச்ச உங்களுக்கு, நா ஒரு சின்ன பார்டி குடுக்கணுன்னு நெனைக்க்றேன். நீங்க என்ன சொல்றீங்க?” என்று புன்னகையுடன் கேட்க,
ராகவ், “மை ப்ளஷர்.”
மித்ரா அவன் கையை விட்டுவிட்டு, “செரி நாளைக்கு காலையில என் கெஸ்ட் ஹவுஸ்ல உங்களுக்கு பார்டி குடுக்குறேன். ஃபுல் அரேஞ்மட்டோட நா வெய்ட் பண்ணுவேன், வந்திருங்க.”
ராகவ், “ஓகே.” என்று புன்னகையுடன் கூறினான்.
அடுத்த நாள் காலை மாயா, ஒரு மிக பெரிய கைரேகை நிபுணரை பார்க்க சென்றாள். அங்கு சென்று அவரிடம் தன் மொபைலை காட்டி, “சாமிஜி நீங்க சொன்ன மாதிரியே ரவியோட கைய, அவனுக்கே தெரியாம ஃபோட்டோ எடுத்திட்டு வந்துட்டேன். இத பாத்து அவனோட வாழ்க்க எப்பிடி இருக்கும்னு கொஞ்சம் சொல்லுங்க.”
சாமிஜி, “ம்ம்” என்று கூறி அதை வாங்கி பார்த்துக்கொண்டிருந்தார்.
அதே சமயம் அங்கு, மித்ராவின் கெஸ்ட் ஹவுஸில் பார்டி நடந்துக்கொண்டிருந்தது. ஆனால் அதே கெஸ்ட் ஹவுஸின் மொட்டை மாடியில் ராகவ்வும், மித்ராவும் நின்றுக்கொண்டிருந்தனர்.
அப்போது ராகவ், “கீழ பார்ட்டி நடந்துகிட்டிருக்கு, எங்கிட்ட எதோ பேசணுன்னு சொல்லி இங்க கூட்டிட்டு வந்துட்டு இப்ப அமைதியா இருந்தா என்ன அர்த்தம்?”
மித்ரா சிரித்துவிட்டு, “நா உங்ககிட்ட ஒன்னு கேக்கட்டுமா?”
ராகவ், “ஏதோ சொல்ல போறீங்கன்னு நெனச்சேன், கேக்க போறீங்களா? செரி கேளுங்க.”
மித்ரா, “டென்டர பொறுத்தவரைக்கும் நா இதுவரைக்கும் யார்கிட்டையுமே தோத்ததில்ல. எல்லா டென்டரையும் நாந்தா எடுத்திருக்கேன். பட் ஃபர்ஸ்ட் டைம் நீங்க என்ன தோக்கடிச்சிருக்கீங்க. அது எப்பிடின்னு நா தெரிஞ்சுக்கலாமா?”
ராகவ், “எப்பிடின்னு கேட்டா என்ன அர்த்தம்?”
மித்ரா அதற்கும் சிரித்துவிட்டு, “செரி நா டேரெக்டாவே கேக்குறேன். அந்த டென்டர் எப்பிடி உங்களுக்கு கெடச்சது?”
ராகவ் சிறிது தடுமாற்றத்துடன், “எ..எ..எப்பிடின்னா என்ன அர்த்தம்? நா கோட் பண்ண அமவ்ன்ட் உங்களோடதவிட கம்மியா இருந்ததாலதா எனக்கு கெடச்சது.”
மித்ரா, “அது எப்பிடி கரைக்டா நா கோட் பண்ண அமவ்ன்ட்டுக்கு கரெக்டா ஒரு ரூபா மட்டும் கம்மியா நீங்க கோட் பண்ணீங்க?”
ராகவ் சற்று தடுமாற்றத்துடன், “அ..அது ஜஸ்ட் கோ-இன்ஸிடன்ட்.”
அதற்கும் மித்ரா சிரித்துவிட்டு, “கோ-இன்ஸிடன்ட்? எப்பிடி எப்பிடி? என்னோட ஆஃபிஸ்ல, அதுவும் என்னோட கேபினுக்குள்ளையே பூந்து, என்னோட ஃபைலையே திருடி, நா கோட் பண்ண அமவ்ட்ட பாத்ததுக்கப்றமா நீங்க ஒரு அமவ்ன்ட்ட கோட் பண்ணீங்களே, என்னவிட ஒரு ரூபா கம்மியா, அது கோ-இன்ஸிடன்ட்டா?” என்று தன் புருவத்தை உயர்த்தி கேட்க,
அதை கேட்ட ராகவ் அதிர்ச்சியடைந்ந்து, “அ..அ..அது…” என்று தடுமாறிவிட்டு பிறகு அவளை பார்த்து சிரிக்க ஆரம்பித்தான். அதை பார்த்த மித்ரா ஒன்றும் புரியாமல் அதிர்ச்சியுடன் அவனை பார்த்தாள்.
இங்கு…. சாமிஜி, அந்த புகைப்படத்தை நன்றாக சூம் செய்து, ரவியுடைய கைரேகையை கவனித்தார்.
அப்போது மாயா, “எப்ப கல்யாண பேச்ச எடுத்தாலும் வேண்டா வேண்டான்னு சொல்றான். அவனுக்கு அந்த பேச்ச எடுக்குறதே புடிக்க மாட்டிங்குது. அவனுக்கு எப்ப கல்யாணம் ஆகும்னு பாத்து சொல்லுங்க.”
அதற்கு சாமிஜி, “கூடிய சீக்கிரமே நடக்கும். இந்த வருஷமே இவருக்கு கல்யாணம் நடக்க போகுது.”
அதை கேட்டு மாயா மிகுந்த மகிழ்ச்சியடைந்து, “ரொம்ப சந்தோஷம் சாமிஜி.” என்று மகிழ்ச்சியடைந்தாள்.
அதே சமயம் இங்கு… ராகவ் சிரித்துக்கொண்டே இருக்க, அவன் சிரிப்பதை பார்த்து மித்ரா அதிர்ச்சியாக,
அவளை பார்த்து ராகவ், “ஓ தெரிஞ்சு போச்சா? எல்லா தெரிஞ்சுதா இந்த பார்டியே வெச்சியா? செரி விடு. ஆமா உன் ஃபைல திருடி, உன் கோடிங் அமவ்ன்ட்ட பாத்ததுனாலதா, இந்த டென்டருல நா ஜெயிச்சேன் சீட் பண்ணிதா ஜெயிச்சேன். சோ வாட்? உன்னால என்ன பண்ண முடியும்?”
அதற்கு மித்ரா தன் புருவத்தை உயர்த்தி அவனை பார்க்க, ராகவ், “இது மட்டும் இல்ல, இனி ஒவ்வொரு தெடவையும் நா உன்ன ஜெயிப்பேன். அகைன் அன்டு அகைன் உன்ன ஜெயிச்சுகிட்டே இருப்பேன். உன்ன ஜெயிக்க யாருமே இல்லங்குற மெதப்புல இருந்தல்ல? உன்ன ஜெயிக்க ஒருத்தன் ஏற்கனவே பொறந்துட்டான். அவன் பேரு தி கிரேட் ராகவ்.”
அதற்கும் மித்ரா கைக்கட்டியபடி அவனை பார்க்க, மேலும் ராகவ், “ஆனா சும்மா சொல்ல கூடாது. உன்னோட ஏட்டிட்டியூட் எனக்கு ரொம்பவே புடிச்சிருக்கு. அதோட உன்னோட இந்த திமிரும் புடிச்சிருக்கு. நம்ப ரெண்டு பேரும் சேந்தா இந்த வேர்ல்டுக்கே பிஸ்னஸ் பேசலாம். சோ ஒரு எதிரியா நீ எங்கிட்ட தோக்குறதுக்கு பதிலா, என்னோட மனைவியா எங்கிட்ட தோத்து போறது உனக்கு பெருமதான? இத என்னோட ஆஃபரா நெனச்சுக்கோ. உன்னோட பிஸ்னஸ் எனிமிக்கிட்ட தோத்து போறியா? இல்ல உன் புருஷன்கிட்ட தோத்து போறியா? த சாய்ஸ் இஸ் யுவர்ஸ்.”
அதை கேட்ட மித்ரா மீண்டும் சிரித்துவிட்டு, அவன் அருகில் வந்தபடியே, “உன்னோட ஆச நியாயமானதுதா. என்ன தோக்கடிக்கணுன்னு நெனைக்கிறதுக்கும், என்ன அடையணுன்னு ஆசைப்படுறதுக்கும் நீ தகுதியானவந்தா.”
அதை கேட்டு ராகவ் புன்னகைத்தான்.
இங்கு…. மாயா, “ரொம்ப ரொம்ப சந்தோஷம் சாமிஜி.”
சாமாஜி, “ஆனா…”
அதை கேட்டு மாயா பயந்து, “ஆனா என்ன சாமிஜி?”
சாமிஜி, “கூடிய சீக்கிரமே இவரோட கல்யாணம் நடக்க போகுது. ஆனா அதே மாதிரி, கூடிய சீக்கிரமே இவரோட விதியும் முடிய போகுது.”
அதை கேட்ட மாயா அதிர்ச்சியடைந்து, “என்ன சாமிஜி சொல்றீங்க?”
சாமிஜி, “அதுவும் அவரோட விதி, அவரோட மனைவி கையாலதா முடிய போகுது.”
அதை கேட்டு மாயா இன்னும் அதிர்ச்சியடைந்து, “என்ன சாமிஜி சொல்றீங்க?”
சாமிஜி, “அவரோட ரேகையில அவரோட மரணம், அவர் மனைவியோட கையிலதான்னு எழுதியிருக்கு.”
அதை கேட்டு மாயா இன்னும் அதிர்ச்சியடைந்தாள்.
அதே சமயம் இங்கு….
ராகவ், “நீ இவ்ளோ சீக்கிரம் ஒத்துப்பன்னு நா எதிர்பாக்கவே இல்ல. எனிவே, என்ன மாதிரி ஒரு பையன யார் வேண்டான்னு சொல்லுவா?”
அப்போது மித்ரா அவன் அருகில் வந்து நின்று, “யெஸ். உங்கிட்ட எல்லா தகுதியும் இருக்கு. பட் என்ன தோக்கடிக்கிறதுக்கும், அடையிறதுக்கும் வெறும் தகுதி மட்டும் பத்தாது.” என்று கூற ராகவ் கேள்வியுடன் அவளை பார்க்க,
மித்ரா, “ஒடம்புல உயிரும் இருக்கணும்.” என்று கூற, ராகவ் திடீரென அதிர்ச்சியாவதற்குள், அவனை வேகமாக கீழே தள்ளிவிட்டாள் மித்ரா.
பால்கனியில் தடுப்புப்போல் இருந்த கம்பியின் ஸ்க்ரூவை அவள் நேற்றே கழட்டியிருந்ததால், மித்ரா தள்ளியவுடனே ராகவ் அந்த பால்கனி கம்பியை பிய்த்துக்கொண்டு கீழே கத்தியபடி விழுந்தான். அவ்வளவு உயரத்திலிருந்து விழுந்தவன், தரையில் விழுந்ததும் அவன் மண்டை கபாளம் பிளந்து நிறைய இரத்தம் வெளியேறியபடி கிடந்தான்.
அப்போது மொட்டை மாடியில் இருக்கும் மித்ரா சற்று முன்னால் வந்து கீழே அவனை உற்று பார்த்தபடி, கண்களில் கொலைவெறியுடன், “என்ன தோக்கடிக்கிறதும் மரணத்தோட கதவ தட்டுறதும் ஒன்னுதா. என்ன தோக்கடிக்க எவன் மொளச்சாலும், அவன மொளச்சவொடனே புடுங்கி எறிஞ்சிருவேன். என்ன மீறி எவனும் வளர முடியாது. வளர விடமாட்டேன்” என்று கூறினாள்.
– விதி தொடரும்….