அத்தியாயம் 5
ஐஸ்வர்யா தனது கசின் கௌசல்யாவிடம் ஃபோனை வாங்கி அஸ்வினிடம் பேசிக் கொண்டிருந்தாள். “என்ன ஐஷு நான் பாட்டுக்கு பேசிக்கிட்டே இருக்கேன்.. நீ சைலன்டாவே இருந்த என்ன அர்த்தம்? நீ இன்னும் அமெரிக்காவுல தான் இருக்கியா? ஆனந்த் அண்ணா மேரேஜ்க்கு கூட இங்க வர மாட்டியா என்ன? அந்த அளவுக்கு உன் உடம்புக்கு என்ன ஆச்சு? ஏதாவது சீரியஸ் இஸ்யூவா?
எதுவா இருந்தாலும் வாயைத் திறந்து சொல்லு டி. நான் வேணும்னா உடனே கிளம்பி அங்கு வரவா? எனக்கு ரொம்ப நாளா உன்ன பாக்கணும் போலயே இருக்கு.” என்று அஸ்வின் உடைந்த குரலில் சொன்னான். அவனது குரலில் அப்பட்டமாக அவன் அவள் மீது எந்த அளவிற்கு பாசம் வைத்திருக்கிறான் என்று தெரிந்தது.
அதை நினைத்து பார்த்து தன் நிலையை அவனிடம் விளக்கி சொல்ல முடியாத நிலையில் இருக்கிறோமே என எண்ணி பீறிட்டு வந்த அழுகையை தன் கைகளை இறுக்கமாக மூடி கட்டுப்படுத்திய ஐஸ்வர்யா “ஆனந்த் மேரேஜ்க்கு நான் இல்லாம எப்படி? அந்த டைம்ல கண்டிப்பா வந்துருவேன்னு தான் நினைக்கிறேன் அஸ்வின்.” என்று மட்டும் சொன்னாள்.
“என்னது வந்துருவேன்னு நினைக்கிறியா? அப்ப இன்னும் கிளம்பி இந்தியா வர்ற ஐடியாவுலையே இல்லையா நீ?” என்று நம்ப முடியாமல் அஸ்வின் கேட்க, “இங்க சுச்சுவேஷன் சரியில்ல அஸ்வின். எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல. எனக்கு என்ன பிராப்ளம்னு எனக்கே புரியல. உன்னை நேர்ல பார்க்கும்போது நான் கண்டிப்பா எல்லாத்தையும் கிளியரா சொல்லுவேன். பட் உன்ன எப்ப பாக்க முடியும்னு தான் எனக்கு தெரியல. இப்ப கூட அட்லீஸ்ட் உன்கிட்ட இரண்டு வார்த்தை பேசினா மனசுக்கு நிம்மதியா இருக்குமேன்னு தான் உனக்கு கால் பண்ணேன்.” என்றாள் ஐஸ்வர்யா.
அவள் சோகமே உருவாக இருப்பது, கேட்கும் கேள்விக்கு பதில் சொல்லாமல் அவள் பாட்டிற்கு பேசுவது என்று அனைத்தையும் வைத்தே ஏதோ சரியில்லை என்று நினைத்த அஸ்வின் “ஏய் என்ன டி ஆச்சு? ஏன் இப்படி ஒரு மாதிரி பேசிட்டு இருக்க? ஏதாவது ப்ராப்ளமா? அதை யார் கிட்டயும் சொல்ல முடியாம ஃபீல் பண்ணிட்டு இருக்கியா?
எதுவா இருந்தாலும் பயப்படாம என் கிட்ட சொல்லு டி. என் ஃபிரண்ட்ஸ் நிறைய பேர் அமெரிக்காவுல இருக்காங்க. நானும் உடனே அங்க கிளம்பி வரேன். நான் அங்க வரதுக்குள்ள உனக்கு கண்டிப்பா என் ஃபிரெண்ட்ஸ் ஹெல்ப் பண்ணுவாங்க. இப்ப நீ எங்க இருக்க? ஹாஸ்பிடல்ல எதுவும் அட்மிட் ஆகி இருக்கியா? உன் லொகேஷனை எனக்கு முதல்ல சென்ட் பண்ணு.” என்று அடுக்கடுக்காக தன் கேள்விகளை அடுக்கிக் கொண்டே போனான்.
அவன் பேசியதை அருகில் நின்று கொண்டிருந்த கௌசல்யா அரைகுறையாக கேட்டுவிட்டு இவள் அவனிடம் உண்மையை உலரினால் பிரச்சனையாகிவிடும் என்று நினைத்து பயந்து “ஐயோ போதுமா சிஸ். என் ஃபோன குடுங்க. நான் இங்க இறந்து போகணும். நான் உங்களுக்கு ஹெல்ப் பண்ணது மம்மிக்கு தெரிஞ்சா என்னை திட்டுவாங்க.” என்று அவளை அவசரப்படுத்தினாள்.
தன் கேள்விக்கு ஐஸ்வர்யா பதில் சொல்லாமல் அமைதியாக இருந்ததால் கண்டிப்பாக அவள் ஏதோ ஒரு பிரச்சனையில் மாட்டிக் கொண்டு இருக்கிறாள் என முடிவே செய்துவிட்ட அஸ்வின் “ஹே ஐசு லைன்ல இருக்கியா இல்லையா டி? ஹலோ ஐசு!” என்று தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருந்தான். ஒரு பக்கம் அஸ்வின், இன்னொரு பக்கம் கௌசல்யா. இதில் தனது குடும்பத்தினர்கள் வேறு தன்னை இங்கே பனைய கைதி போல அடைத்து வைத்திருக்கிறார்கள்.
இப்படி இவர்கள் அனைவருக்கும் நடுவில் மாட்டிக் கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் தவித்துக் கொண்டு இருந்த ஐஸ்வர்யா ஏதோ ஒரு பதட்டத்தில் அந்த அழைப்பை துடித்து விட்டாள். அதை பார்த்தவுடன் தான் பெருமூச்சு விட்ட கௌசல்யா எங்கே மீண்டும் அஸ்வின் தன் நம்பருக்கு கால் செய்து விடுவானோ என நினைத்து பயந்து “எல்லாமே நல்லபடியா நடந்து முடிகிற வரைக்கும் நான் என் ஃபோனை சுவிட்ச் ஆஃப் பண்ணி வைக்க போறேன். இனிமே நீங்க யாரையும் காண்டாக்ட் பண்ணனும்னு நினைக்காதீங்க. எல்லாரும் நல்லா தான் இருக்காங்க. நானும் என் ஃபேமிலியும் நல்லா இருக்கணும்னு நினைச்சீங்கன்னா, ப்ளீஸ் சிஸ், எந்த பிரச்சனையும் பண்ணாம நீங்க இங்க சைலன்டா இருங்க. உங்களுக்கு நான் ஹெல்ப் பண்ணத பத்தி தயவு செஞ்சு யார் கிட்டயும் சொல்லிடாதீங்க.” என்று சொல்லிவிட்டு வேகமாக அந்த அறையை விட்டு வெளியேறினாள்.
தனியாக மீண்டும் அந்த அறையின் ஒரு ஓரமாக அமர்ந்து அழுது கரைய தொடங்கினாள் ஐஸ்வர்யா. திடீரென்று அந்த அழைப்பு துண்டிக்கப்பட்டதால் ஐஸ்வர்யாவிற்கு என்ன ஆனதோ என்று நினைத்து பயத்தில் தவித்துக் கொண்டிருந்த அஸ்வின் மீண்டும் மீண்டும் கௌசல்யாவின் எண்ணுக்கு கால் செய்து பார்த்தான். நம்பர் ஸ்விட்ச் ஆஃப்பில் இருப்பதாக வந்தது.
அவனுக்கு எப்படியாவது ஐஸ்வர்யாவை தொடர்பு கொண்டு இப்போது அவளிடம் பேசியே ஆக வேண்டும் என்று இருந்தது. அதனால் இப்போது நேரம் நள்ளிரவு 12 மணியை நெருங்கிக் கொண்டு இருக்கிறது என்பதை பற்றி எல்லாம் சிறிதும் யோசிக்காமல் ஐஸ்வர்யாவின் அப்பா நம்பருக்கு கால் செய்தான் அஸ்வின்.
தனது மொபைல் ஃபோனை எடுத்துப் பார்த்த தினகரன் “இவன் எதுக்கு இந்த நேரத்துல எனக்கு கால் பண்றான்? அப்ப இவனுக்கு ஏதோ டவுட் வந்துருச்சுன்னு நினைக்கிறேன். தேவை இல்லாம இவன் கிட்ட பேசி இவனோட டவுட்டை நம்மளே அதிகப்படுத்திடக் கூடாது.” என்று நினைத்து ஃபோனை சைலண்டில் போட்டுவிட்டு நிம்மதியாக தன் கண்களை மூடி உறக்க தொடங்கினான்.
கிட்டத்தட்ட எதைப்பற்றியும் யோசிக்காமல் பத்து முறைக்கு மேல் தினகரனுக்கு கால் செய்து அதை அவன் எடுக்காததால் எரிச்சல் அடைந்த அஸ்வின் “தனா அங்கீலுக்கு என்ன ஆச்சு? நான் கால் பண்றேன்.. ஏன் எடுக்க மாட்டேங்கறாரு? எனக்கு என்னமோ எல்லாமே தப்பா இருக்க மாதிரி தோணுது. இவர் என் கால் வந்தது தெரியாம அத அட்டென்ட் பண்ணாம இருக்காரா இல்லை தெரிஞ்சும் தெரியாத மாதிரி இருக்காரான்னு தெரியலையே! எது எப்படி இருந்தாலும், என் ஐசு இப்ப எங்க இருக்கா, அவளுக்கு என்ன ஆச்சுன்னு நான் கண்டுபிடிச்சே தீருவேன்.” என்று நினைத்து முதல் வேலையாக விவேக்கிற்கு கால் செய்து அவனை தன் வீட்டிற்கு வரச் சொன்னான்.
பின் அவனுக்கு தெரிந்த ஒரு சிலருக்கு கால் செய்து தனக்கு ஐஸ்வர்யா கால் செய்த நம்பரை சொல்லி அந்த நம்பர் யாருக்கு சொந்தமானது, அவர்களுடைய லாஸ்ட் லொகேஷன் என்ன? என்பது பற்றி எல்லாம் விசாரித்தான். அடுத்த ஒரு மணி நேரத்தில் அவனுடைய அனைத்து கேள்விகளுக்குமான பதிலும் கிடைத்தது. வசுமதியின் வீட்டு அட்ரஸை அஸ்வினுக்கு அனுப்பிய அவனது நண்பன் “மச்சான் நீ கொடுத்த நம்பர் இந்த வீட்டு அட்ரஸ்ல தான் ரிஜிஸ்டர் ஆயிருக்கு. இதை யூஸ் பண்றது ஒரு பொண்ணு தான். பேரு கௌசல்யா.” என்றான்.
“வசுமதி, கௌசல்யா! இந்த பெயரை எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கே!” என்று யோசித்த அஸ்வினுக்கு அவர்கள் ஐஸ்வர்யாவின் சொந்தக்காரர்கள் என்று கண்டுபிடிக்க வெகு நேரம் ஆகவில்லை. “அப்படின்னா, ஐசு இப்ப அவங்க வீட்ல தான் இருக்கணும். அவ இந்தியா வந்துட்டா.. ஆனா ஏன் என்ன வந்து பாக்கவே இல்ல? மத்தவங்களும் அவளை யார் கண்ணுலையும் காட்டாமையே வச்சிருக்காங்க!
நான் நினைச்சது அப்ப கரெக்டு தான். Something is wrong in this family. ஆனந்த் அண்ணாவுக்கு கல்யாணம் ஆக போற இந்த சமயத்துல தூரத்தில எங்கயோ இருக்கிற அவளோட ஆன்ட்டி வீட்டுல அவளை எதுக்காக இவங்க விடனும்? கண்டுபிடிக்கிறேன், ஐஸ்வர்யா என் கிட்ட எதையும் சொல்லாம மறைச்சாலும் அவளை சுத்தி என்ன நடக்குதுன்னு கண்டிப்பா நான் கண்டுபிடிப்பேன்.” என்று தனக்குத்தானே சபதம் எடுத்துக் கொண்ட அஸ்வின் தன் குடும்பத்தினரிடம் எதுவும் சொல்லாமல் அந்த நள்ளிரவில் அவனுடைய காரை எடுத்துக் கொண்டு விவேக்குடன் அங்கே இருந்து கிளம்பினான்.
இரண்டு மணி நேர பயணத்திற்கு பிறகு அஸ்வினின் கார் வசுமதியின் வீட்டு வாசலில் சென்று என்றது. அதை கண்டவுடன் பாதுகாப்பிற்காக கேட்டிற்கு அருகில் நின்று கொண்டிருந்த காவலர்கள் எல்லாம் கதவை திறந்து கொண்டு வெளியில் சென்றார்கள். தைரியமாக தன் காரில் இருந்து கீழே இறங்கிய அஸ்வின் “ஐஸ்வர்யா இந்த வீட்ல தானே இருக்கா! நான் அவளை பாக்கணும். என் பேரு அஸ்வின் கர்ணா. Industrialist மிஸ்டர் கருணாகரனோட சன். நான் வந்திருக்கேனு சொல்லி ஐஸ்வர்யாவை வர சொல்லுங்க.” என்று ஆணையிடும் தோரணையில் கேட்டான்.
குறிப்பாக அஸ்வினுக்கு ஐஸ்வர்யா இங்கே இருப்பது தெரியக் கூடாது என்று சொல்லித் தான் அவளுடைய குடும்பத்தினர்கள் அவளை இங்கே விட்டுவிட்டு சென்றார்கள். அப்படி இருக்கும்போது அவனே இப்படி நேரில் வந்து அவனைப் பற்றி கேட்கிறானே! இப்போது இவனை என்ன சொல்லி சமாளித்து அனுப்புவது? என்று புரியாமல் அங்கிருந்த பாதுகாவலர்கள் அனைவரும் தங்களுக்குள் அவனைப் பற்றி பேசிக் கொண்டிருக்க,
தன் முன்னே இருந்த பிரம்மாண்ட பங்களா வீட்டை ஒரு பார்வை பார்த்த அஸ்வின் “என்ன நீங்க பாட்டுக்கு பேசிட்டு இருக்கேன்.. நீங்க நான் கேட்கிற கொஸ்டினுக்கு ஆன்சர் பண்ணாம உங்களுக்குள்ளயே என்னமோ பேசிட்டு இருக்கீங்க! இங்க என்ன நடக்குதுன்னு தெரியாம, என் ஐசுவ பாக்காம நான் இங்க இருந்து போக மாட்டேன். நீங்க இப்ப அவளை கூப்பிடுறீங்களா இல்ல.. நானே அவள கூப்பிடட்டா?” என்று கோபத்துடன் கேட்ட அஸ்வின் அந்த வீட்டை பார்த்து “ஐசு.. ஐசு! ஐஸ்வர்யா..!! நீ இங்க தான் இருக்கேன்னு எனக்கு தெரியும். வெளிய வா டி. நான் உன்ன பாக்கணும்.” என்று தனது அடி தொண்டையில் இருந்து கத்தினான்.
அந்த மெயின் கேட்டிருக்கும், அவர்களது வீட்டிற்கும் நடுவில் கிட்டத்தட்ட 500 மீட்டர் கேப் இருக்கும். அதனால் அவனுடைய குரல் இந்த தூரத்தை கடந்து உள்ளே இருக்கும் ஐஸ்வர்யாவிற்கு சென்றடைய கண்டிப்பாக வாய்ப்பு இல்லை. ஆனால் வேறு யாருக்காவது ஐஸ்வர்யாவை கேட்டு இங்கே வந்து அஸ்வின் பிரச்சனை செய்து கொண்டிருப்பது தெரிந்தால் இந்த பிரச்சனைகளுக்கு நடுவில் தங்களது தலை தான் உருளும் என்று நினைத்து அங்கிருந்த பாதுகாவலர்கள் “சார் என்ன சார் பண்ணிட்டு இருக்கீங்க? நீங்களும் பெரிய குடும்பத்து பையன் தானே.. இப்படி இந்த நேரத்துல பொண்ணுங்க இருக்கிற வீட்டுக்கு முன்னாடி நின்னு இப்படி பிரச்சனை பண்ணிட்டு இருக்கிறது உங்களுக்கு நல்லாவா இருக்கு?
ஐஸ்வர்யா மேடம் எப்பையாவது இங்கே வருவாங்க. ஆனா இப்ப அவங்க இங்க இல்ல. நீங்க கேட்டதுக்கு நாங்க தான் பதில் சொல்லிட்டோம்ல.. தயவு செஞ்சு பிரச்சனை பண்ணாம இங்க இருந்து கிளம்புங்க சார். இந்த டைம்ல யாரையும் வீட்டுக்குள்ள விடக் கூடாதுன்னு ரூல்ஸ் இருக்கு. நாங்க சொல்றதை கேட்காம நீங்க இங்கயே நின்னு இப்படி சத்தம் போட்டுட்டு இருந்தீங்கன்னா போலீச கூப்பிடுவதை தவிர எங்களுக்கு வேற வழியில்லை.” என்று சொல்லி அவனை அங்கிருந்து அனுப்ப பார்த்தார்கள்.
– முத்தங்கள் தொடரும்