அத்தியாயம் 77
சௌபர்ணிகா ரிஜிஸ்டர் ஆபீஸ்ல வச்சு மறுபடியும் விஷ்வாவுக்கும் மேகாவுக்கும் கல்யாணம் பண்ணி வைக்கலாம்னு சொல்ல, “அதெல்லாம் சரிப்பட்டு வராதுங்க..!!” என்றார் காளீஸ்வரன்.
எல்லாரும் ஷாக்காகி அவரைப் பார்க்க, “ஏன் வேண்டாம்னு சொல்றீங்க..??” என்று கேட்டாள் சௌபர்ணிகா.
“இந்த கல்யாண பேச்சு ஆரம்பிச்சதுல இருந்தே எல்லாம் தப்பு தப்பா நடக்குது. சகுனமே சரியில்ல. பல பேர் வாயில விழுந்துட்டு எந்த காரியம் செஞ்சாலும் எப்படிங்க உருப்படும்? ஊரே இந்த கல்யாணத்த பத்திதான் பேசுச்சு. இப்ப கல்யாணம் நடந்தும் கோர்ட்ல அது செல்லாதுன்னு சொல்லிட்டாங்க” என்று காளீஸ்வரன் சொல்லிக் கொண்டிருக்க,
“இப்ப அதுக்கு என்ன பண்ணலாம்னு சொல்றீங்க?” என்று கேட்டான் விஷ்வா.
“குலதெய்வம் கோவமா இருக்கு! எங்கயாவது கல்யாணம் பேசி முடிவு பண்ணா, முறைப்படி கல்யாண பத்திரிகையை குலதெய்வம் கோவில்ல வச்சு சாமி கும்பிடணும். பொண்ணு மாப்பிள்ளைக்கு நலங்கு வைக்கணும். எல்லா சாஸ்திரத்தையும் சரியா பண்ணணும். நாங்க எங்க வீட்டு பொண்ணுக்காக எல்லாத்தையும் சரியா தான் செஞ்சோம். ஆனா வேலை நிறைய இருக்குன்னு சொல்லி நீங்க எதுக்குமே வரல. நிச்சயம் முடிஞ்ச உடனே கிளம்பி ஊருக்கு போய்ட்டீங்க. அதான் குலசாமி நம்ம மேல கோவமா இருக்குன்னு நினைக்கிறேன்.
அதனால உடனே கிளம்பி மதுரைக்கு போய், அங்க இருக்கிற நம்ம அங்காளம்மன் கோவில்ல நீங்களும் மேகாவும் சேர்ந்து பொங்கல் வச்சு சாமியை கும்பிட்டுட்டு, இன்னொரு தடவை அங்கயே கல்யாணம் பண்ணிக்கோங்க. அம்மன் அருளால அதுக்கப்புறம் எந்த பிரச்சனையும் இல்லாம நீங்க ரெண்டு பேரும் நல்லா இருக்கணும். கல்யாணத்துக்கு அப்புறம் செய்ய வேண்டிய சடங்கையாவது இனிமே ஒழுங்கா செய்யலாம்” என்று காளீஸ்வரன் சொன்னார்.
“இங்க ரெண்டு நாள்ல ரிசப்ஷன் அரேஞ்ச் பண்ணிருக்கோமே! இப்ப உடனே கிளம்பி அங்க போயிட்டு மறுபடியும் இங்க வரணும்னா, ரிசப்ஷனை சரியா நடத்த முடியாது” என்றாள் சௌபர்ணிகா.
விஷ்வாவின் முடிவு
“என் லைஃப்ல எதுவுமே ஒழுங்கா நடக்கல. இந்த மேரேஜாவது நல்லபடியா நடக்கட்டும்னு தான் எல்லாத்தையும் பார்த்து பார்த்து பண்ணேன். கடைசில அதுவும் இப்படி ஆகிடுச்சு. ஏதோ பெரிய மனுஷன் இவ்வளவு தூரம் சொல்றாரு! கல்யாணம் நடக்கும்போது இவளும் மயக்கத்துல இருந்தா.. சோ, செகண்ட் டைம் பண்ற மேரேஜ் சென்டிமென்ட்டா கோவில்லையே நடக்கட்டுமே!” என்று நினைத்த விஷ்வா,
“பரவால்ல விடுங்க. நானே ரிசப்ஷனும் சிம்பிளா அதே மேரேஜ் ஹால்லயே நடக்குதேன்னு நினைச்சேன். இவர் சொல்ற மாதிரி கோவில்ல ரெண்டு நாள் கழிச்சு மேரேஜ் பண்ணிட்டு, அப்புறமா கிராண்டா ரிசப்ஷன் வேற எங்கயாவது வச்சுக்கலாம்” என்றான்.
பிறகு மேகாவை பார்த்து, “உனக்கு ஏதாவது ட்ரீம் டெஸ்டினேஷன் இருந்தா சொல்லு. நம்ம ரிசப்ஷனை அங்கயே வச்சுக்கலாம்” என்றான். நிலாவின் ஆசை
அதுவரைக்கும் முகத்தை தூக்கி வச்சுட்டு உர்ருனு இருந்த மேகா, அவன் சொன்னதைக் கேட்டு குஷியாகி, “நீங்க இப்படி டக்குனு கேட்டா எனக்கு உடனே சொல்ல தெரியல. ரெண்டு நாள் டைம் இருக்குல்ல.. அதுக்குள்ள நான் ரிசர்ச் பண்ணி நல்ல இடமா சொல்றேன்” என்றாள்.
அவள் தோள்ல இடிச்ச வெண்ணிலா,
“சொல்றது தான் சொல்றீங்க, நல்ல ஃபாரின் கன்ட்ரியா சொல்லுங்க. மாமா புண்ணியத்துல எல்லாரும் வெளிநாட்டுக்கு போயிட்டு வந்துடலாம். நீங்களாவது வேலை பார்க்க சென்னை வந்தீங்க.. நானெல்லாம் மதுரை மாட்டுத்தாவணியைத் தாண்டி எங்கயும் போனதில்ல. நீங்க லவ் பண்ணிட்டு வந்ததுனால, என்னையெல்லாம் வேலைக்கு அனுப்புவாங்களா இல்ல படிச்சு முடிக்கிறதுக்குள்ள எவனுக்காவது கட்டி குடுத்து துரத்தி விட்டுருவாங்களான்னு தெரியல!” என்று மேகாவின் காதுல கிசுகிசுத்தாள்.
“உனக்கு வாய் ரொம்ப அதிகம்தாண்டி.. சைடு கேப்ல நாங்க லவ் பண்ணதை சொல்லி காட்டுறியா நீ?” என்று மேகா கேட்க, “நீங்க கவலைப்படாதீங்க நிலா. உங்களுக்கு நான் இருக்கேன். நீங்க எந்த ஊருக்கு வேணாலும் போய் வேலை பாருங்க. இதுக்கு மேல படிக்கணும்னு தோணுச்சுன்னா கூட படிங்க. நான் உங்களுக்கு சப்போர்ட் பண்ணுவேன்” என்று அவர்கள் பேசுவதை ஒட்டு கேட்டுவிட்டு சொன்னான் அரவிந்த்.
மேகாவும் நிலாவும் ஷாக்காகி அரவிந்தைப் பார்க்க, “ஏங்க ரெண்டு பேரும் அப்படி பார்க்குறீங்க? நம்ம நிலாவுக்கு சப்போர்ட் பண்ண மாட்டோமா? நாங்க எல்லாரும் இருக்கோம்னு சொன்னேன்” என்று சொல்லி சமாளித்தான் அரவிந்த்.
பிரித்து வைத்த காளீஸ்வரன்
நேத்து விடிய விடிய போலீஸ் ஸ்டேஷன்ல உட்கார்ந்திருந்ததுல கழுத்து வலிக்குதுன்னு தேய்த்துவிட்ட விஷ்வா, “எனக்கு டயர்டா இருக்கு, நான் ரூமுக்கு போறேன். ரெண்டு நாள் கழிச்சுதானே ஊர்ல மேரேஜ்! சோ ஒரு நாள் முன்னாடி கிளம்புனா போதும். அதுவரைக்கும் எல்லாரும் சென்னைய சுத்திப் பாருங்க. இல்லனா ஒரு ட்ரிப் போயிட்டு வாங்க. மகேஷ் உங்களுக்கு எல்லாம் அரேஞ்ச் பண்ணி தருவான்” என்று சொல்லிவிட்டு படிக்கட்டில் ஏறினான்.
“அதெல்லாம் வேண்டாம், நாங்க ஊருக்கு கிளம்புறோம். கல்யாணத்துக்கு வந்தோம், ஆனா ஒன்னும் உருப்படியா நடக்கல. போலீஸ் ஸ்டேஷன், கோர்ட்டுன்னு போனதுதான் மிச்சம். ஊருக்கு போய் கல்யாண வேலையைப் பார்க்கிறோம்” என்று காளீஸ்வரன் சொல்ல, நிலா சோகமானாள்.
“புள்ளைங்க ஆசைப்படுதுல்லங்க, சரின்னு சொல்லுங்க” என்று வசந்தியும் சொல்ல, காளீஸ்வரன் கடைசியில் வேண்டா வெறுப்பாக சம்மதித்தார்.
இதைப்பார்த்த விஷ்வா, “இவர் பார்க்க டெரரா இருந்தாலும் உள்ளுக்குள்ள பாசக்காரராதான் இருக்காரு” என்று நினைத்து மாடிக்கு செல்ல முயல, மேகாவும் அவர் பின்னாடியே போகப் பார்த்தாள். “ஏம்மா நில்லு!” என்று காளீஸ்வரன் குரல் கொடுக்க, மேகா அப்படியே நின்றாள்.
“உங்களுக்கு நடந்த கல்யாணம் தான் செல்லாதுன்னு சொல்லிட்டாங்களே! முறைப்படி ரிஜிஸ்டர் பண்ணாத வரைக்கும் அவர் உனக்கு புருஷன் கிடையாது. நீ வெண்ணிலா கூட தங்கு” என்று அவர் உறுதியாக சொல்ல, “சரிங்க அண்ணா” என்று விஷ்வாவை ஏக்கமாக பார்த்துவிட்டு அமர்ந்தாள் மேகா.
விஷ்வாவின் வீக்னஸ்
“யோவ் மீசை! இப்பதானே உன்னைப் பத்தி பெருமையா நினைச்சேன். அதுக்குள்ள எங்களைப் பிரிச்சு வச்சு ஆப்பு அடிக்கிறியே! நடந்த கல்யாணம் செல்லாதாம்.. அதைச் சொல்ல நீங்க யாரு? இப்ப குடும்பம் ஆகிட்டோமேன்னு அமைதியா இருக்கேன், இல்லன்னா விஷ்வாவோட இன்னொரு சைட பார்த்திருப்பீங்க” என்று மனசுக்குள் நினைத்தபடி விஷ்வா ரூமுக்கு ஓடினான்.
மகேஷ் அவன் பின்னாடியே போக, மேகா அவன் சட்டையைப் பிடிச்சு இழுத்து, “அண்ணா ஒரு டவுட்!” என்றாள்.
“என்னம்மா? பாஸ் ரூமுக்கு போக ஏதாவது சீக்ரெட் டோர் இருக்கான்னு கேட்க போறியா?” என்று மகேஷ் கிண்டல் செய்ய, “அதெல்லாம் இல்ல.. இவ்வளவு பெரிய வீட்ல லிஃப்ட் இருக்குல்ல, அப்புறம் ஏன் அவரு இத்தனை ஸ்டெப்ஸ் ஏறி போறாரு?” என்று கேட்டாள்.
“அது ஒன்னும் இல்லம்மா.. சின்ன வயசுல இருந்தே அவருக்கு லிஃப்ட்ல போனா பயம். கூட யாராவது இருந்தா தான் லிஃப்ட் யூஸ் பண்ணுவாரு. இல்லனா எத்தனை ஸ்டெப்ஸ் இருந்தாலும் நடந்து தான் போவாரு” என்று மகேஷ் சொல்ல, “ஓஹோ.. இவருக்கு இப்படி ஒரு வீக்னஸ் இருக்கா!” என்று ஆச்சரியப்பட்டாள் மேகா.
தொடரும்..
(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)