இதற்கு முன்பு வந்த எபிசோட்கள் போல இது இல்லை. பல மடங்கு அதிகமான சென்சிட்டிவ் கன்டன்ட் உள்ளது. எனவே வயதிற்கு வராதோர் மற்றும் கர்பினிகள் இதை தவிர்த்துவிடுங்கள். ஆனால் ஆண்கள் இதை கட்டாயம் பார்க்க வேண்டும். ஏனென்று இறுதியில் கூறுகிறேன். வாருங்கள் கதைக்குள் செல்வோம்.
தரையெங்கும் அவளின் இரத்தம். அதில் அகல விழி விரித்து பதறி இறங்கியவன், “மூனா!” என்று சத்தமாய் அழைக்க, வீடே அத்தனை அமைதியாய் இருந்தது.
அதில் பதறி அந்த இரத்த தடங்களை பார்க்க, அதுவோ குளியலறைக்குள் செல்லவும் வேகமாய் சென்று குளியலறை கதவை தட்ட, அதுவோ திறந்ததுதான் இருந்தது.
அதில் வேகமாய் கதவை திறந்துக்கொண்டு அவன் உள்ளே நுழைய, அடுத்த நொடி அவன் இதயமே துடிப்பை நிறுத்தியிருந்தது.
அந்த தரையெல்லாம் அவளின் இரத்தம். அதன் மீது ஆடையில்லாமல் வெறும் உடலாய் கிடந்தாள் மௌனா.
அது அவளின் மதாவிடாய் இரத்தம். இரத்த போக்கு அதிகமாகி அவளின் காலெல்லாம் ஒழுகி தரையெல்லாம் ஆகியிருக்க, வலியில் தன் அடி வயிற்றை அழுத்தி பிடித்தபடி குறுகி கிடந்தாள் அவள். வலி உயிரை உறிஞ்சினாலும், அவளால் அசையக்கூட முடியவில்லை. அரை மயக்கத்தில் அவள் இமைகள் மெல்ல பிரிய முயல, கடைசியாய் தெரிந்தது தன் கணவனின் பதறிய முகம் மட்டுமே. அப்படியே அவள் இமைகள் மூடிவிட, முழு மயக்கத்திற்கு சென்றிருந்தாள் மௌனா.
இதேப்போலதான் கூடல் முடிந்து ஆழ்ந்த உறக்கத்திற்குள் இருந்தவளின் நெற்றியில் வியர்வை மொட்டுக்கள் பூத்திருக்க, புருவங்கள் அசவுகரியத்தில் சுருங்கி விரிந்தது. அப்படியே அவள் முகமெங்கும் சுருங்கி விரிய, அடிவயிற்றில் ஆயிரம் கரங்கள் பிசைவதுப்போல ஒரு வலி. அதில் திடுக்கிட்டு விழித்தவளின் கீழ் உடல் மொத்தமாய் நனைந்திருக்க, அவளோ குனிந்து பார்த்தாள்.
அவளின் மாதவிடாய் ஆரம்பித்திருக்க, அவள் தொடை தாண்டி மெத்தையில் படிய துவங்கியிருந்தது அந்த கரை. அதில் அவள் வேகமாய் எழ முயல, அவள் அடி வயிற்றில் ஈட்டி இறங்குவடுப்போல ஒரு வலி. அதில் பொத்தென்று மெத்தையில் விழுந்தவள், வலியில் சுவாசத்தை கூட சரியாக இழுக்க முடியாமல் சிரமப்பட்டு அசைந்து திரும்ப, அருகே தன் கணவன் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான்.
அதை பார்த்தவளின் இதயம் பதறியது. தன் கிராமத்தில் இருக்கும்போது இந்த நேரத்தில் எந்த ஆண்களையும் தொடவே கூடாது என்பது அவளுக்கு உட்டி வளர்த்த சட்டம். தன் தாயே இந்த நேரத்தில் தன் தந்தையின் எதிரில் கூட வரமாட்டார். தன் தந்தைக்கு இந்த வாடையே ஒத்துக்காது. தன் தாத்தாவிற்கும் அப்படித்தான். அதனாலேயே இந்த நேரங்களின் தன் வீட்டு பெண்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்வர்.
அதனாலேயே தன் கணவன் கண்ணில் இது பட்டுவிட கூடாது என்று அத்தனை வலியிலும் தன் உடலை வறுத்தி எழுந்துக்கொண்டவள், அவள் உதிரம் அப்பியிருந்த விரிப்பை சுருட்டி எடுத்துக்கொண்டு, கட்டிலைவிட்டு இறங்கினாள். அவள் கால் தரையில் பதிந்த அடுத்த நொடி அவள் உதிரம் மொத்தமாய் தரையில் கொட்டியது.
அதில் பதறி எழுந்தவளுக்கோ இத்தனை இரத்த போக்கு இதுவே முதல் முறை. என்றுமே உயிர் போகும் வலி இருக்கும்தான். ஆனால் இன்று அதைவிட பல மடங்கு அதிகம் வலிப்பதுப்போல் தோன்ற, நிற்கக்கூட முடியாமல் மேசையில் சாய்ந்தாள். அவளின் உதிரமும் நிற்காமல் செல்ல, தடுமாறி அங்கிருந்த மேசையை பிடித்து நிமிர்ந்தவள், வலியில் தட்டு தள்ளாடி குளியலறைக்குள் புகுந்தாள்.
அதில் அவளின் காலடி தடங்கள் இரத்தில் பதிந்து அவளுடனே செல்ல, குளியலறைக்குள் சென்று கதவை தாழிடக்கூட அவளால் முடியவில்லை. தாழ்பாள் மேலே இருக்க நிமிர்ந்து எக்க கூட அவளுக்கு தெம்பில்லை. அசைந்தாலே அடிவயிறில் கத்தி இறங்கியது. அதில் கதவை வெறுமனே மூடிவிட்டு அவள் ஷவரை ஆன் செய்ய போக, அவள் விரல் முதல் உடல் வரை நடுங்கவே ஆரம்பித்திருந்தது. உடல் மொத்தமும் கரண்ட் பாய்வதுப்போல் அடிவயிற்றிலிருந்து மொத்த நரம்புகளை கொடிய வலியை கடத்திக் கொண்டிருக்க, அதை தாங்க முடியாமல் அவள் சுவாச வேகமே நொடிக்கு நொடி அதிகரித்தது. அதில் நுரையீரலை குறுக்கி அந்த ஷவரை ஆன் செய்ய முயற்சிக்க, அவளுக்கோ அதை ஆன் செய்ய தெரியவில்லை. முடிந்த மட்டும் அழுத்தி பிடித்து இழுக்க அவளின் கரம் நழுவி காலும் நழுவி, பொத்தென்று அந்த இரத்தத்தின் மீதே விழுந்திருந்தாள்.
அடுத்த நொடி அவள் அடிவயிற்றில் பலமாய் அடித்திருக்க, உள்ளிருக்கும் இரத்தம் மொத்தமும் வெளி வந்திருந்தது. அதில் கத்தக்கூட முடியாமல் இறுக்கி விழி மூடியவளின் கண்ணீர் பொழபொழவென்று வெளியேற, அதைவிட அதிகம் வந்தது அவளின் உதிரம்தான்.
அவளின் உடலிலுள்ள ஒவ்வொரு செல்களும் உருக்கிக்கொண்டு உதிரமாய் வெளி வருவதுப்போல ஒரு வலி. அதில் உடலை குறுக்கிக்கொண்டு கிடந்தவளின் விழிகள் மெல்ல மெல்ல இருட்ட ஆரம்பித்திருந்தது
அப்போதுதான் தன் கணவனின் பதற்ற முகம் தெரிந்திருக்க, அப்படியே மயக்கத்திற்கு சென்றிருந்தாள்.
ஈரத்தில் இருந்த அவள் உடல் இப்போது கதகதப்பாய் உணர, அவள் இமைகள் மெதுவாய் பிரிய முயன்றது. ஆனால் அடிவயிற்றில் உயிர் பிழியும் அளவிற்கு வலிக்க, முகத்தை குறுக்கி இமையை மெதுவாய் பிரித்தாள்.
பிரிந்த இமைகளின் நடுவே தன் கணவனின் அதே முகம். இன்னுமே அதே பதற்றத்தில் ஆனால் அத்தனை அருகில் தெரிய, அவளோ திடுக்கிட்டு எழ முயன்றாள். ஆனால் சுத்தமாய் முடியாமல் மெத்தையில் சாய, அப்போதே அவள் மெத்தையில் இருப்பதை உணர்ந்தாள்.
தன் கிராமத்தில் சிறிய மெத்தைதான். அதிலும் இந்த நேரத்தில் இருக்கும்போது அமர்ந்துவிட்டால் அம்மா துடப்பத்தாலே அடிப்பார். எதையெல்லாம் கழுவி காய வைக்க முடியுமோ அதில்தான் அமர வேண்டும் படுக்க வேண்டும். இப்போது இவ்வளவு பெரிய வெள்ளை மெத்தையில் அவள் படுத்திருக்க, அவளோ பதறி கடினப்பட்டு அசைய முயன்றாள்.
அப்போதே அவள் உடலில் மாற்று சேலை கட்டப்பட்டிருக்க, புரியாது தொட்டு பார்த்தாள். அவள் உடல் மொத்தமும் சுத்தம் செய்யப்பட்டு குளித்து ஃப்ரெஷாக இருப்பதுப்போல் தோன்ற, அவள் கீழ் உடல்கூட ஈர பதம் இல்லாமல் கதகதப்பாய் எதையோ உணர்ந்து. அதில் அவள் புரியாது புருவத்தை குறுக்கி அழுத்தி பார்க்க, சேனிட்டரி நேப்கின்தான். இதை பற்றி கேள்விப்பட்டிருக்கிறாள், விளம்பரங்களில் பார்த்திருக்கிறாள். ஆனால் உபயோகித்து பழக்கமே இல்லை அவளுக்கு. நினைத்தாலும் அவள் கிராமத்தில் இதெல்லாம் கிடைக்காது.
ஏனோ அது தன் அடிவயிற்றை சற்று இதமாக்கியிருப்பதுப்போல் தோன்ற, அந்த அடிவயிற்றில் சூடாய் படர்ந்தது அவன் கரம். அதில் அவள் திடுக்கிட்டு இமை பிரிக்க, “மம்மு என்ன பாரு. ஆர் யூ ஓகே?” என்று திரும்ப திரும்ப கேட்டுக்கொண்டிருந்த அவனின் குரல் இப்போதே அவள் செவியை எட்டியது.
அதில் அவள் திடுக்கிட்டு சுயம் பெற்று விலக முயல, அவளால் அசைய முடியவில்லை. “என்ன ஆச்சு எதாவது வேணுமா?” என்று அவன் பதறி கேட்க, அவளோ அத்தனை பதற்றமாய் தன்னை ஆராய்ந்தபடி, “இதெல்லா.. எனக்கு.. யாரு..” என்று கேட்க வர, “நாந்தா பண்ணேன். எங்கையும் அன்ஃபிட்டா ஃபீல் ஆகுதா?” என்று பதறி கேட்டான்.
அதில் சட்டென்று புருவத்தை விரித்தவள், “நீ..நீங்களா?” என்று கேட்க, “வேற யாரு பண்ணுவா? ஐயம் யுவர் ஹஸ்பண்ட்.” என்றான் பதறியபடி.
ஆம் அவனேதான் அவள் உதிரத்தை வெறும் கையாலே அருவருப்பின்றி சுத்தம் செய்து, அவளை குளிப்பாட்டி ஆடை மாற்றி நேப்கின் முதற்கொண்டு போட்டுவிட்டு மெத்தையில் கிடத்தியிருந்தான்.
அதில் வேகமாய் அவனை விலக்கிவிட்டு எழ முயன்றவள், “என்ன பண்றீங்க? இதெல்லாம் நீங்க தொட கூடாது.” என்று பதறி கூற, அதில் அவளை அழுத்தி படுக்க வைத்தவன், “ஏ கூடாது? யூ ஆர் மை வைஃப்” என்றான் வேகமாக.
அதில் அவஸ்த்தையாய் இறுக்கி விழி மூடி தலையணையில் புதைந்தவள், “அதெல்லா உங்களுக்கு சொன்னா புரியாது. நீங்க எதுக்காக..” என்று கூற வர, அவள் வாயில் விரல் வைத்து தடுத்தான் அகன்.
அதில் அவள் திடுக்கிட்டு அவனை பார்க்க, அவள் விழிகளை சந்தித்தவன், “உன் அம்மா இருந்திருந்தா பண்ணிருக்க மாட்டாங்களா?” என்று கேட்டான்.
அதில் சட்டென்று அவளின் இதயமே ஒரு நொடி நின்று துடிக்க, “உனக்கு எல்லாமாவும் நானே இருப்பேன். என்ற அவனின் வார்த்தைகள் அவள் அடி மனதில் அழுத்தமாய் ஒலித்தது.
அந்த வார்த்தையில் உள்ள உண்மைத்தன்மை இப்போதே அவன் விழியில் தெரிந்தது அவளுக்கு.
– விழி தீ தொடரும்…
இதை ஆண்கள் பார்க்க வேண்டும் என்று கூறியது, கணவன் எப்படி இருக்க வேண்டும் என்று காட்டுவதற்காக அல்ல. பெண்களின் நிலையை அணுஅணுவாய் நீங்கள் உணர்வதற்காக. நிறைய பேர் இதை மாதா மாதம் வரும் சாதாரண நிகழ்வு என்கிறீர்கள். எங்களுக்கு மட்டும்தான் தெரியும், ஒவ்வொரு மாதமும் எங்கள் உயிர் ஜவ்வாய் பிரிந்து மீண்டும் இணையும் அந்த கொடுமையை. இன்னுமேமுடியவில்லை. சந்திப்போம் அடுத்த பாகத்தில்.