Home FREE NOVELSதாபம் தீர்க்க வந்த தாரமே CH 5

தாபம் தீர்க்க வந்த தாரமே CH 5

by Thenaruvi Tamil Novels

அத்தியாயம் 5: இன்று முதல் நாள்…

ரித்திகா புதிதாக வேலை பார்க்கப் போகும் பள்ளி; அவளுக்கும், அவளுடைய குடும்பத்துக்கும் ஒதுக்கியிருந்த அப்பார்ட்மென்ட் வீட்டிற்கு வந்து சேர்ந்தனர்.

அந்தப் பள்ளியின் நிறுவனரான வருண் நாராயணன் மற்றும் அவருடைய குடும்பத்தினர் தங்கும் “நாராயணன் பேலஸ்” அவர்கள் அப்பார்ட்மென்ட் வீட்டின் அருகே இருந்ததால், அவர்கள் தங்கியிருக்கும் அந்த இடத்திற்கு அதிகமான பாதுகாப்பு இருந்தது.

அவர்கள் தங்கள் ஊரிலிருந்து லாரியில் கொண்டு வந்த அனைத்துப் பொருட்களையும் ரித்திகாவும், அவளுடைய பெற்றோரும், ஓட்டுனர் மணியும் இணைந்து எடுத்து வைத்தனர். அவர்கள் அனைத்துப் பொருட்களையும் எடுத்து வைத்து முடிப்பதற்கு இரவு 10 மணி ஆகிவிட்டது. 

ஆகையால் இதற்குமேல் சமைக்க முடியாது என்று நினைத்த ரித்திகா உணவை ஆர்டர் செய்து வாங்கி வந்தாள். மணி, தனக்கு முக்கியமான வேலை இருப்பதாக சொல்லிவிட்டுக் கிளம்பிய நிலையில், ரித்திகா தன்னுடைய பெற்றோர்களுடன் இணைந்து தான் வாங்கி வந்த உணவைச் சாப்பிட்டாள். பின் இருந்த களைப்பில் அனைவரும் உறங்கிவிட்டனர்.

இதற்கிடையே நாராயணன் பேலஸ்க்குள் நுழைந்தான், நாராயணன் குடும்பத்தின் முதல் வாரிசும், தலைவனுமான வருண் நாராயணன். 

33 வயதான வருண், கம்பீரமான தோற்றத்துடனும், இறுக்கமான முகத்துடனும் இருந்தான். அந்த அரண்மனை போன்ற வீட்டின் லிவிங் ரூமில் வருண்னின் வருகைக்காகக் காத்திருந்த அவனுடைய தாய் செண்பகத்தைத் தவிர அங்கு வேறு யாரும் இல்லை.

பார்மாலிட்டிக்காகத் தன் அம்மாவைப் பார்த்துச் சிரித்த வருண், அவர் அருகே சென்று அமர்ந்தான்.

வருண்: “சாப்டீங்களா மா?”

செண்பகம்: “நான் எப்பவுமே உன் கூடத் தானே பா சாப்பிடுவேன். நீ சாப்பிடாம நான் எப்ப சாப்பிட்டிருக்கேன்?”

வருண்: “என்ன அம்மா உங்களுக்கு எவ்வளவு வயசு ஆகுது இன்னும் ஏன் இப்படி பண்றீங்க? எனக்காக வெயிட் பண்ணாதீங்கன்னு சொன்னாலும் கேட்க மாட்டேங்கறீங்க.”

செண்பகம்: “நான் இங்கே சாப்பிடாம வெயிட் பண்ணிட்டு இருப்பேன்னு தானே நீ டெய்லி கரெக்டா வீட்டுக்கு வந்து சாப்பிடற. நான் இப்படி வெயிட் பண்ணலன்னா நீ சாப்பிடுவியா? அப்படி ஒரு விஷயம் இருக்குன்னே மறந்துட்டு வேலை வேலைன்னு அதைத் தானே பா பார்த்துக்கிட்டு இருப்ப…”

வருண்: “நான் எது சொன்னாலும் அதுக்கு ஒரு ஆன்சர் நீங்க தான் ரெடி பண்ணி வச்சிருப்பீங்களே…”

என்று சொல்லிவிட்டு மெல்லிதாகச் சிரித்தவன், 

“ஓகே மா. நான் போயி ரெப்ரெஷ் பண்ணிட்டு வரேன். நான் வந்தோனே சாப்பிடலாம். சாப்பாடு எடுத்து வைங்க.” என்று சொல்லிவிட்டு லிப்டில் மாடியில் இருந்த தன்னுடைய ரூமுக்குள் சென்றான்.

தன்னுடைய ரூமுக்குள் சென்று குளித்துவிட்டு இறங்கி கீழே வந்த வருண், தன்னுடைய அம்மாவுடன் இணைந்து இரவு உணவை முடித்துவிட்டு; மீண்டும் தன்னுடைய ரூமுக்குச் சென்றான்.

தன்னுடைய ரூமுக்குள்ளே வந்த வருண், அங்கிருந்த சோபாவில்… சலிப்பாக அமர்ந்து தன்னுடைய தலையை சோபாவில் சாய்த்தபடி சீலிங்கை வெறித்துப் பார்த்தான். அவனுடைய முகம் உணர்ச்சியற்றுதாக இருந்தது. திடீரென்று சோபையில் இருந்து எழுந்த வருண், ஏதோ நினைத்தவனாய் தன்னுடைய ரூம் கதவைத் திறந்து தன்னுடைய ரூமிற்கு எதிரே இருந்த வேறொரு ரூமுக்குச் சென்று அந்தக் கதவைத் திறந்தான்.

ஏதோ ஒரு வேகத்தில் கதவைத் திறந்து விட்டான். ஆனால் உள்ளே போகலாமா? வேண்டாமா? என்று அவனுக்குள்ளே தயக்கமாக இருந்தது. பின் பரவாயில்லை என்று நினைத்தவன், கதவைத் திறந்து கொண்டு உள்ளே சென்றான். அந்த ரூமுக்குள் ஆடம்பரமான கட்டிலில் சௌகரியமான மெத்தையின் மேல் அழகாகப் படுத்துத் தன்னை மறந்து தூங்கிக் கொண்டிருந்தான் வருண்னின் மகன் சித்தார்த்.

எந்த சத்தமும் எழுப்பாமல் மெதுவாக சித்தார்த்தின் அருகே சென்ற வருண், அவன் அருகில் அமர்ந்தான். தன் மகனின் சலனமற்ற, கள்ளம் கபடமில்லாத முகத்தைச் சில நிமிடங்கள் உற்றுப் பார்த்தான் வருண். 

பின் சித்தார்த்தின் தூக்கம் கலையாத வண்ணம் அவன் அருகே சென்று அவன் நெற்றியில் ஒரு முத்தம் கொடுத்துவிட்டு அங்கிருந்து வெளியே வந்தான் வருண் நாராயணன்.

சித்தார்த்தின் ரூமில் இருந்து வெளியே வந்த வருண்; தன்னுடைய அறைக்குத் திரும்பியவன், அவனுடைய அறையில் இருந்த ஒரு சீக்ரெட் டோரைத் திறந்து அதற்குள் சென்றான். அந்த சீக்ரெட் ரூமிற்குள் சென்ற வருண் லைட்டைப் போட்டவுடன், அழகாகச் சிரித்துக் கொண்டிருக்கும் அவனுடைய மனைவி ஜான்வியின் ஆள் உயரப் புகைப்படம் வரவேற்றது. கடந்த இரண்டரை வருடங்களாக அவன் இந்த வீட்டில் இருக்கும் ஒவ்வொரு நாள் இரவும் இந்த ரூமிற்கு வந்து இந்தப் புகைப்படத்தைப் பார்க்கிறான்.

போட்டோவாகத் தொங்கி க்கொண்டிருந்த ஜான்வியின் முகத்தைத் தொட்டுப் பார்த்தான் வருண், அவனுடைய மனதில் விவரிக்க முடியாத ஒரு வலி இருந்தது. தன் கண்களை மூடிய வருண்னின் மனக்கண்ணில், அவனும், அவனுடைய காதல் மனைவி ஜான்வியும், செலவிட்ட ஒவ்வொரு மணித்துளியும் ஒரு படமாக விரைந்து ஓடியது.

அவை அனைத்தையும் நினைத்துப் பார்த்தவன் உதடுகளில் ஒரு விரக்திப் புன்னகை தோன்றியது. பின் ஒரு பெருமூச்சு விட்ட வருண், தன்னுடைய ரூமிற்கு வந்து அவன் எப்போதும் சாப்பிடும் தூக்க மாத்திரைகளை எடுத்து வாயில் போட்டுக் கொண்டு தண்ணீர் குடித்துவிட்டு, தன்னுடைய பெட்டில் படுத்தவன் சில நிமிடங்களில் தூங்கிவிட்டான்.

சந்திரன் தன்னுடைய வேலையை முடித்துவிட்டுக் கிளம்ப, அழகாக ஆதவன் தோன்றினான். ரித்திகாவின் வீட்டில்,

ஐந்தரை மணி ஆகியிருக்க, ரித்திகா தன்னுடைய மொபைலில் வைத்திருந்த அலாரம் அடித்து அவளை எழுப்பியது. சலிப்பாக எழுந்து மொபைலைப் பார்த்த ரித்திகா, “5:30 தானே ஆகிறது இன்னும் ஒரு அரை மணி நேரம் தூங்கிவிட்டுப் பிறகு எழுந்து கொள்ளலாம்” என்று அலாரத்தை ஆஃப் செய்துவிட்டு மீண்டும் தூங்கினாள். 

ஆறு மணி ஆகிவிட ரித்திகா வைத்திருந்த அலாரம் மீண்டும் அடித்தது.

இதற்குமேல் வேறு வழியில்லை என்று நினைத்த ரித்திகா; சலிப்பாக எழுந்து பல் துலக்கிவிட்டு, குளித்துவிட்டு வெளியே வந்தாள். அவள் வெளியே வருவதற்குள்ளேயே அவளுடைய அப்பாவும், அம்மாவும் எழுந்து குளித்துத் தயாராக இருந்தனர். 

ரித்திகாவைப் பார்த்த ரேவதி, ” பால் இல்லைன்னு பால்ல டீ வைக்கல. இப்ப போய் பால் எங்க வாங்குறதுன்னும் தெரியல. அதனால வெறும் டீயே வெச்சுட்டேன். சூடா இருக்கு போய் ஊத்தி குடி” என்றாள்.

ரித்திகா: “சரி…மா.”

என்று சொல்லிவிட்டு கிச்சனுக்குள் சென்றாள். ரித்திகா தன்னுடைய அம்மா வைத்திருந்த டீயை தனக்கென ஒரு கப்பில் ஊற்றிக்கொண்டு வெளியே வந்து தன்னுடைய அப்பாவின் அருகில் சேரில் அமர்ந்தாள்.

சுதாகர்: “குட் மார்னிங் டா.”

ரித்திகா: “குட் மார்னிங் அப்பா.”

சுதாகர்: “ஸ்கூலுக்கு எத்தனை மணிக்கு போகணும்?”

ரித்திகா: “9 க்கு அங்க இருக்கணும் ப்பா.”

சுதாகர்: “சரி…மா. இப்பவே சாப்பிட்டுரு. அப்புறம் லேட் ஆயிடுச்சுன்னு சாப்பிடாமக் கிளம்பிப் போய்டுவ.”

ரித்திகா: “கண்டிப்பா சாப்பிட்டு தான்பா போவேன். டோன்ட் வொர்ரி.”

சுதாகர்: “சரி…மா. ஸ்கூல்ல உனக்கு ஏதாச்சும் யூனிஃபார்ம் இருக்குன்னு சொல்லியிருக்காங்களா? நம்ம எதுவும் வாங்கி வைக்கலையே.. இன்னைக்குப் போட்டுட்டு போக வேணாமா?”

ரித்திகா: “இல்ல அப்பா. எனக்கு யூனிஃபார்ம் தேவை இல்லைன்னு சொல்லிட்டாங்க. என்ன ஸ்பெஷல் டீச்சரா அப்பாயின்ட்மென்ட் பண்ணியிருக்காங்க. மெயினா நான் டான்ஸ் டீச்சர் தான். அண்ட் பார்ட் டைம் இங்கிலீஷ் டீச்சராப் போட்டு இருக்காங்க.”

சுதாகர்: “சரி…மா. சீக்கிரம் சாப்பிட்டு போ. லேட் ஆகிடும். ஃபர்ஸ்ட் டேவே லேட்டா போகக் கூடாது.”

ரித்திகா: “ஓகே…ப்பா. நான் போய் முதல்ல குளிச்சிட்டு அப்புறம் சாப்பிட்டு கிளம்புறேன். ஸ்கூலுக்கு போற வழியில கோயிலுக்கு போயிட்டு போணும். நான் ஈவினிங் வீட்டுக்கு வரும்போது தேவையான மில்க், வெஜிடபிள்ஸ் எல்லாமே வாங்கிட்டு வந்துடுறேன். நம்ம ஏற்கனவே ஹோம் அப்ளையன்சஸ், ஃபர்னிச்சர்ஸ் எல்லாம் வீட்டுக்கு புதுசா வாங்கணும்ன்னு விஷ் லிஸ்ட் பண்ணி வச்சிருந்தோம்ல.. அது எல்லாத்தையுமே ஆர்டர் பண்ணிருங்க. அப்பத்தான் இந்த வீக்குள்ள எல்லாம் வந்துரும்.”

சுதாகர்: “அதெல்லாம் நான் பாத்துக்கிறேன் மா. நீ போய் முதல்ல கிளம்பு.” என்றார். 

ரேவதி சமைத்து வைத்திருந்த உணவைச் சாப்பிட்டுவிட்டு… தனக்கு வேண்டிய பொருட்களை எல்லாம் எடுத்துக்கொண்டு ஒரு சாதாரணமான சுடிதார் அணிந்து, தன்னுடைய வீட்டிலிருந்து வெளியே கிளம்பி வந்தாள் ரித்திகா.

லிஃப்டின் வழியாகக் கீழே இறங்கி வந்து அந்தப் பிரம்மாண்ட கேட்டின் வழியாக வெளியில் வந்த ரித்திகா, அங்கிருந்த ஒரு ஆட்டோ ஸ்டாண்டில் ஆட்டோவைப் பிடித்து ஏறி அமர்ந்தாள்.

ஆட்டோகாரர்: “எங்கம்மா போகணும்?”

ரித்திகா: ” துர்க்கை அம்மன் கோவிலுக்கு போகணும் அண்ணா.”

ஆட்டோகாரர்: ” துர்க்கை அம்மன் கோவிலா? தனியா துர்க்கை அம்மனுக்கு கோயில் இருக்கா? எனக்குத் தெரியலையேமா..”

ரித்திகா: “அப்படியா… அண்ணா… பரவால்ல. துர்க்கை அம்மன் சன்னதி இருக்கிற மாதிரி ஏதாவது கோயிலில் இருந்தா அங்க கூட்டிட்டு போங்க. சில பிள்ளையார் கோயில்ல கூட துர்கைக்குன்னு தனியா சன்னதி வச்சிருப்பாங்க.”

ஆட்டோகாரர்: “இங்க பக்கத்திலேயே ஒரு சிவன் கோயில் இருக்குமா. அங்க துர்க்கை, முருகன், இந்த மாதிரி நிறைய சாமியோட சன்னதி இருக்கும். அங்க கூட்டிட்டு போறேன். இன்னைக்கு வெள்ளிக்கிழமைனால ரொம்ப விசேஷமா இருக்கும். கோயிலே கூட்டமா இருக்கும்.”

ரித்திகா: “அங்க போயிட்டு வர எவ்வளவு நேரம் ஆகும் அண்ணா?”

ஆட்டோகாரர்: “பக்கம் தான்மா. 5 நிமிஷத்துல போயிடலாம்.”

ரித்திகா: “அப்போ ஓகே… அண்ணா. சீக்கிரம் போங்க. நான் கோயிலுக்குப் போயிட்டு J.V. ஸ்கூல் இருக்கு இல்ல அண்ணா அங்க போகணும். 9 மணிக்கு நான் ஸ்கூலுக்குள்ள இருக்கணும்.”

ஆட்டோகாரர்: “அப்படியேமா… ஒன்னும் பிரச்சனை இல்ல. அந்த ஸ்கூலும் பக்கம் தான். நீங்க சீக்கிரம் கோயிலுக்குப் போயிட்டு வாங்க. அங்க போயிரலாம் சீக்கிரமா.”

இப்படி இருவரும் பேசிக்கொண்டிருக்க, ஒரு சிவன் கோயிலுக்கு முன் வந்து ஆட்டோவை நிறுத்தினார் ஆட்டோகாரர். 

சிறிது நேரத்தில் தான் வந்து விடுவதாகச் சொல்லி.. ஆட்டோக்காரரைக் காத்திருக்கச் சொல்லிவிட்டு, கோயில் வாசலில் இருந்த கடையில் அர்ச்சனை தட்டும், அதற்கு சிறிது தூரம் தள்ளி இருந்த ஒரு பால் கடையில், அரை லிட்டர் பாலை கவரில் ஊற்றித் தரச் சொல்லி வாங்கிக்கொண்டு கோவிலுக்குள் சென்றாள் ரித்திகா.

நேராக பிள்ளையார் சன்னதிக்குச் சென்ற ரித்திகா, பிள்ளையாரை வணங்கிவிட்டு அவளுக்கு மிகவும் பிடித்தமான துர்க்கை அம்மன் சன்னதியை நோக்கிச் சென்றாள். அங்கே தாய் துர்க்கை அம்மனுக்கு அர்ச்சகர் பூஜை செய்து கொண்டிருந்தார்.

அந்தச் சாமியின் சன்னதி முன் நிறைய மக்கள் கூட்டமாக நின்று கொண்டிருந்தனர்.

இந்தக் கூட்டத்தில் நாம் எப்படி உள்ளே செல்லப் போகிறோம் என்று யோசித்துக் கொண்டிருந்தாள் ரித்திகா. 

அவ்வாறு யோசித்துக் கொண்டு ரித்திகா, சுற்றி முற்றும் பார்த்துக் கொண்டிருக்கும் போது ஒரு ஐம்பது வயது மதிக்கத்தக்க பெண்மணி தன் கண்களை மூடி கைகளை கூப்பி உள்ளம் நெகிழ சாமி கும்பிட்டுக் கொண்டிருந்தார். அந்தப் பெண்மணியை எதர்ச்சியாகக் கவனித்த ரித்திகா, அந்த வயதான பெண்மணியின் புடவை அங்கே ஏற்றி வைக்கப்பட்டிருந்த தீபத்தில் பட்டுப் பற்றி எரிந்து கொண்டிருப்பதைப் பார்த்தாள்.

நேசம் தொடரும்…

(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் நன்றி 🙏)

You may also like

Leave a Comment

About Me

Featured