Home FREE NOVELSசாபமாய் வந்த என் உயிரே CH 47

சாபமாய் வந்த என் உயிரே CH 47

by Thenaruvi Tamil Novels

அத்தியாயம் 47 

அமுதாவும், வெற்றியும் பைக்கில் தங்களது வீட்டை நோக்கி சென்று கொண்டு இருந்தார்கள். ஷூட்டிங்கை கேன்சல் செய்த விஜய் அப்படியே அவனது காரில் சென்னையை நோக்கி சென்று கொண்டிருந்தான். அப்போது அவன் காரை வெற்றியின் பைக் கிராஸ் பன்னி செல்ல, ஓரக் கண்ணால் அதைப் பார்த்த விஜய்க்கு என்னவோ போல் இருந்தது. 

அவனுக்கு எதற்காக என தெரியவில்லை. அமுதா வெற்றியுடன் பைக்கில் செல்வதை பார்க்கவே அவனுக்கு பற்றி கொண்டு வந்தது. அவர்கள் தனது கண்களில் இருந்து மறையும் வரை காரில் ஸ்லோவாக சென்றபடி அவர்களை பார்த்துக் கொண்டிருந்த விஜய் பின் ஹைவேஸ் ரோடு நோக்கி காரை திருப்பிவிட்டு “என்னமோ இவள இவன் தான் கல்யாணம் பண்ணிக்க போறதா சொல்றான்.. அது உண்மையா இருக்குமா? இல்ல நான் கேட்டதற்காக சும்மா சீன் போடறதுக்கு அவன் அப்படி என் கிட்ட சொல்லி இருப்பானா?” என்று யோசித்தபடி ஒரு ஓரமாக தன் காரை நிறுத்தினான். 

அனைத்தையும் கவனித்துக் கொண்டிருந்த தினேஷ் எதுவும் தெரியாதவனை போல வேண்டுமென்றே “என்னாச்சு பாஸ்? சென்னை போகணும்னு சொல்லிட்டு இருந்தீங்க.. இன்னும் மதுரையவே தாண்டல.. ரோட் சைட்ல காரை ஏன் நிறுத்திட்டீங்க.. நான் வேணா ட்ரைவ் பண்ணவா?” என்று கேட்க, அவனை முறைத்து பார்த்த விஜய் “ஒன்னும் வேணாம்!” என்று சொல்லிவிட்டு மீண்டும் தனது காரை ஸ்டார்ட் செய்து அங்கிருந்து கிளம்பினான். 

வெற்றியும், அமுதாவும் தங்களது வீட்டிற்குள் நுழைந்தவுடன் அந்த வீடு மிகவும் பரபரப்புடன் இருப்பதை கவனித்தார்கள். அதனால் குழப்பமாக அவர்கள் இருவரும் என்ன என்பதைப் போல சுற்றி முற்றி பார்க்க, அவர்களை பார்த்தவுடன் வாயெல்லாம் பல்லாக அவர்களின் அருகில் சென்ற வெற்றியின் அம்மா “பாரு டா இவ்வளவு சீக்கிரமா வந்துட்டீங்களா? அதுவும் நல்லது தான்.. இன்னிக்கி சாயங்காலம் உங்க ரெண்டு பேருக்கும் வீட்டுக்குள்ளேயே வச்சு சிம்பிளா யாருக்கும் தெரியாம நிச்சயம் பணிடலாம்னு இருக்கோம்.

நீ படத்துல நடிக்க போறதுனால நம்ம கல்யாணம் பண்ணாலும், இந்த கல்யாணம் ஆகிறது நடந்து முடிகிற வரைக்கும் வெளியே யாருக்கும் தெரியாம இருக்கிறதுதான் நல்லதுன்னு நாங்க எல்லாரும் பேசி முடிவு பண்ணி வச்சிருக்கோம். அதனால எப்படியாவது காதும் காதும் வச்ச மாதிரி எல்லாத்தையும் முடிச்சு புடணும்னு இருக்கும். நீங்க ரெண்டு பேரும் சீக்கிரமா போய் ரெடியாகுங்க. புது துணி எல்லாம் வாங்கி வச்சு தயாரா இருக்கு.” என்று சொல்லி அவர்களை அவசரப்படுத்தி அவர்களது ரூமிற்கு செல்ல சொல்லி துரத்தினாள். 

“என்ன டா கல்யாணம் அப்படி இப்படின்னு பேசிட்டு இருந்தாங்களே.. எதுவுமே நடக்காத மாதிரி சைலன்ட்டா இருக்காங்களேன்னு நினைச்சேன். விஜய் சார் சூட்டிங் கேன்சல் பண்ணுது யாருக்கு நல்லதா இருக்கோ இல்லையோ.. இவங்களுக்கு நல்லதா போச்சு.. எப்படியோ இவனுக்கும் எனக்கும் கல்யாணம் ஆகப்போகுதுன்னு முடிவு ஆயிடுச்சு.‌ அப்புறம் இதையெல்லாம் அவங்க பண்ண தானே செய்வாங்க.. ஒவ்வொன்றும் நடக்கும்போது இது ஏன் நடக்குது அது ஏன் நடக்குதுன்னு யோசிச்சு நான் சோகமான இருந்தா மட்டும் இதெல்லாம் நடக்காமையா இருக்கப்போகுது? என்னமோ நடந்த தொலையட்டும் பாத்துக்கலாம்.” என்று நினைத்து சோகமான முகத்துடன் தனது ரூமிற்கு சென்ற அமுதா தனியாக அனைத்தையும் செய்ய அவளுக்கு கஷ்டமாக இருந்ததால் உடனே தனது தோழி கலைச்செல்விக்கு கால் செய்து அவளை வீட்டிற்கு வரச் சொன்னாள். 

அமுதா என்ன விஷயம் என்று சொல்லாததால் வழக்கம்போல சாதாரணமாக கிளம்பி அங்கே வந்திருந்த கலைச்செல்வி அந்த வீடு திருவிழா கோலம் பூண்டிருப்பதை கண்டு குழப்பமாக சுற்றும் முற்றிலும் பார்த்துக் கொண்டிருக்க, அமுதாவின் அண்ணி அன்னபூரணி “என்ன கலை வீட்டுக்கு வந்துட்டு புதுசா வீட்டை பார்க்கிற மாதிரி இப்படி சுத்தி பார்த்துட்டு இருக்க? இன்னைக்கு நம்ம அமுதாவுக்கும் வெற்றிக்கும் நிச்சயதார்த்தம் உனக்கு தெரியாதா? அமுதா ரூம்ல தனியா தான் இருக்கா.. நீ போய் அவ கூட இரு.. அவளுக்கு கிளம்பறதுக்கு ஹெல்ப் பண்ணு. நிச்சயம் முடிந்து ராத்திரி விருந்து இருக்கு. நீ இருந்து எல்லாத்தையும் முடிச்சிட்டு நைட்டு தான் போகணும் புரிஞ்சுதா?” என்று உரிமையாக கேட்டாள். 

“வெற்றி அமுதா மாதிரி ஒரு அத்தை பொண்ணு இருக்கும்போது என்னை எல்லாம் என்னைக்கும் திரும்பிப் பார்க்க மாட்டான்னு எனக்கு நல்லா தெரிந்திருந்தும், ஏன் தான் என் மனசுக்குள்ள இந்த பாழாப்போன காதல் வந்து தொலைஞ்சதோ தெரியல.‌ எப்படி தான் என் கண்ணு முன்னாடியே அவங்க கல்யாணம் பண்ணி சந்தோஷமா வாழ்வதை பார்க்க போறேனோ!” என்று நினைத்து பெருமூச்சு விட்ட கலைச்செல்வி “சரிக்கா.. நம்ம வீட்டு விசேஷம் நான் இல்லாம எப்படி? நான் போய் அமுதா என்ன பண்றான்னு பார்க்கிறேன்.” என்று சொல்லிவிட்டு அமுதாவின் ரூமிற்கு சென்றாள். 

அங்கே எழுந்து கிளம்பக் கூட மனம் வராமல் ஒரு ஓரமாக அமர்ந்திருந்த அமுதா இன்று ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்ததையே மீண்டும் மீண்டும் யோசித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவளை மயங்கி கிடக்கும்போது தூக்கிக் கொண்டு போய் தனது கேரவனில் வைத்து விஜய் டாக்டர் எல்லாம் வரவழைத்து பார்த்துக் கொண்டதை அசிஸ்டன்ட் டைரக்டர் சொல்லி அவள் தெரிந்து கொண்டாள். அதனால் விஜயை பார்த்து அவனிடம் நன்றி சொல்ல வேண்டும் என்று அவள் ஆசையுடன் அவனை எதிர்பார்த்ததை காத்திருக்க, திடீரென விஜய் ஷூட்டிங் கேன்சல் செய்துவிட்டு எங்கே சென்றான்? அவனுக்கு என்ன ஆனது? ஏதேனும் பிரச்சினை வந்துவிட்டதா? என்று எல்லாம் தொடர்ந்து அவள் விஜய் பற்றியே யோசித்துக் கொண்டிருந்தாள். 

“இவளுக்கு என்ன தான் இருந்தாலும் வெற்றி மேல கொஞ்சம் கூட பிரியமே இல்லை.. இவளை கல்யாணம் பண்ணா அவன் வாழ்க்கை எப்படி நல்லா இருக்கும்? எனக்கு இவங்க ரெண்டு பேருமே முக்கியம் தான். ஆனா இவங்களுக்கு கல்யாணமானா இவங்க ரெண்டு பேருமே சந்தோஷமா இருக்க மாட்டாங்கன்னு தோணுது. நான் என்ன நெனச்சு என்ன பண்றது? இங்க எல்லாமே இவ கையை மீறி தானே நடந்துட்டு இருக்கு!” என்று நினைத்த கலைச்செல்வி அமுதாவின் அருகில் சென்று “என்ன டி உனக்கும் உன் அத்தை மகனுக்கும் இன்னைக்கு நிச்சயதார்த்தமாம்.. நீ கூட என் கிட்ட  உண்மையை சொல்லாம எப்பயும் வீட்டுக்கு வர சொல்ற மாதிரி சாதாரணமா சொல்லி என்னை கூப்பிடுறியா?” என்று அமுதாவிடம் கேட்டாள். 

“அட ஏண்டி நீ வேற.‌.. என் கிட்ட கூட ஒரு வார்த்தை சொல்லாம எல்லாத்தையும் பண்ணிட்டு இருக்காங்க.. எனக்கு வீட்டுக்கு வந்ததுக்கப்புறம் தான் தெரியும். நான் என்ன இந்த கல்யாணத்தை நினைச்சு அப்படியே ரொம்ப சந்தோஷமா இருக்கேனா? உன் கிட்ட சந்தோஷமா எனக்கு நிச்சயதார்த்தம்னு சொல்றதுக்கு!” என்று சலிப்புடன் அமுதா அவளிடம் கேட்டுக் கொண்டிருக்க, அவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருக்கும்போது மீண்டும் அந்த ரூமிற்குள் நுழைந்த அன்னபூரணி “இந்தாரு டி.. உங்க அண்ணன்மாருங்க எல்லாம் கிளம்பி வீட்டுக்கு வந்துட்டு இருக்காங்க. சாயங்காலம் 6:00 மணிக்கு நிச்சயதார்த்தம். நீ கிளம்புறதுக்கு ரொம்ப லேட் பண்ணுவ.  சீக்கிரம் கிளம்பு. அவங்க வந்து நல்ல நேரம் முடியறதுக்குள்ள எல்லாம் சரியா நடக்கலைன்னா, சலங்கை கட்டிக்கிட்டு தாம் தும்ன்னு என் வீட்டுக்காரரும் என் கொழுந்தனாரும் போட்டி போட்டுக்கிட்டு குதிப்பாங்க. எப்படியோ கல்யாணம் உறுதி அடிச்சு.. அதை பிரச்சனை இல்லாமல் நிம்மதியா நடத்துறது தான் எல்லாருக்கும் நல்லது.

இந்த வீட்ல இருக்குற மத்த ஆம்பளைங்க மாதிரி வெற்றி இல்லா அமுதா. நம்ம வெற்றி ரொம்ப தங்கமானவன். அவனை மாதிரி ஒரு புருஷன் கிடைக்கிறதுக்கு நீ புண்ணியம் பண்ணிருக்கணும். அதனால எதை பத்தியும் யோசிக்காம சந்தோஷமா கல்யாணம் பண்ணிக்கோ. உன் வாழ்க்கை நல்லா இருக்கும்.” என்று சொல்லி அவளுக்கு அட்வைஸ் செய்துவிட்டு சென்றாள். 

இப்போது யோசித்துப் பார்த்தால் அன்னபூரணி சொன்னது உண்மை தான் என்று அமுதாவிற்கும் தோன்றியது. அதனால் தனக்கு நிச்சயதார்த்தம் நடக்கப்போகிறது என்ற ஒரு துளி எக்சைட்மென்ட் இப்போது தான் அவளுக்குள் வந்தது. தனக்காக தனது குடும்பத்தினர்கள் வாங்கி வைத்திருக்கும் புடவை நகைகள் என அனைத்தையும் எடுத்து பார்த்த அமுதா, “இதெல்லாம் போட்டா எனக்கு அழகா இருக்குமா டி?” என்று கலைச்செல்வியை பார்த்து கேட்டாள். 

இவ்வளவு நேரமாக முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு இருந்தவள், இப்போது என்ன திடீரென்று உற்சாகமாக திருமணத்திற்கு தயாராகிறாள்? என்று யோசித்தபடி அவளை குழப்பமான முகத்துடன் பார்த்த கலைச்செல்வி “நீதான் ஹீரோயின் ஆகிற அளவுக்கு அழகா இருக்கியே.. அப்புறம் இதுல என்ன உனக்கு டவுட்டு? நீ என்ன போட்டாலும் உனக்கு அழகா தான் இருக்கும்.” என்றாள்‌. 

அவள் அப்படி சொல்லும்போது “நான் தான் எப்படி பார்த்தாலும் கொஞ்சம் கூட அழகாவே இருக்க மாட்டேன்.  அதனால தான் வெற்றிக்கு என்ன பிடிக்காமையே போயிருச்சு.” என்று தனக்குள் நினைத்து வருத்தப்பட்டாள் கலை. 

சில மணி நேரங்களுக்கு பிறகு.. 

சிவப்பு நிற பார்டர் உடைய மஞ்சள் நிற பட்டுப்புடவை அணிந்திருந்த அமுதா எக்ஸ்ட்ரா பெருதளவில் அலங்காரம் செய்யாமல் வழக்கம்போல் லேசாக மேக்கப் போட்டு தனது நீண்ட கூந்தலை பின்னலிட்டு தலை நிறைய முல்லைப் பூ சூடி இருந்தாள்.  அவள் கிளம்பிய பிறகு கலைச்செல்வி அவளை அழைத்துக் கொண்டு அவள் ரூமில் இருந்து வெளியில் வந்தாள். 

பட்டு வேட்டி சட்டையில் ஏற்கனவே தயாராக இருந்த வெற்றி அவளை பார்த்தவுடன் வாயடைத்து போய் அப்படியே நின்று விட்டான். இதுவரை அவன் அவளை பாவாடை தாவணியில் மட்டுமே கண்டு இருக்கிறான். அதனால் முதல் முறையாக அப்படி கிட்டத்தட்ட மணப்பெண் அலங்காரத்தில் பட்டுப் புடவையில், முல்லைப் பூவுடன் அப்படியே கோவிலில் இருந்து வெளியில் வந்த அம்மனை போல இருந்தாள். 

அவளது ஒப்பில்லா பேரழகை பற்றி அவன் ஏற்கனவே அறிந்தது தான். ஆனால் இன்று தனக்கும் அவளுக்கும் நிச்சயம் நடக்கப்போகிறது. அவள் தனக்கானவள் என்று உறுதியாக போகிறது என்று நினைக்கும் போது இதுவரை அவனுக்குள் ஷூட்டிங் நடக்கும்போது நடந்ததை எல்லாம் நினைத்து இந்த கோபம் எல்லாம் இப்போது இருந்த கோபம் எல்லாம் காணாமல் போயிருந்தது. 

வெட்கத்தில் தலை குனிந்தவாறு அமுதா நடுவில் வந்து நிற்க, வெற்றியை அவள் அருகில் வந்து நிற்கச் சொன்னார்கள். அனைவரும் அவர்களை சூழ்ந்து கொள்ள, மணிகண்டன் அவர்கள் இருவருக்கும் வாங்கிய நிச்சயதார்த்த மோதிரத்தை தன் மனைவியிடம் கொடுத்து “இத அவங்க கிட்ட போய் குடு.” என்றார். 

அவர்கள் இருவரும் மோதிரம் மாத்தி கொள்ளும்போது சரியாக அதை படம் பிடிக்க வேண்டும் என்பதற்காக அங்கே வந்திருந்த ஃபோட்டோகிராபர் கையில் கேமராவுடன் காத்திருந்தான். 

-காதல் மலரும் 

You may also like

Leave a Comment

About Me

Featured