124
அத்தியாயம் 46:
அமுதா ஷூட்டிங் இருக்கிறது என்று அசிஸ்டன்ட் டைரக்டர் சொன்னதால் தயாராக சென்று விட, அவளுடைய சினிமா கனவை எப்படி சமாதி கட்டி மூடுவது என்று யோசித்துக் கொண்டு இருந்தான் வெற்றி. சாரில் தனது அசிஸ்டன்ட் தினேஷ் உடன் சென்று கொண்டிருந்த விஜய்க்கு வாய்க்கால் வரப்புகளின் ஓரம் சென்று கொண்டிருக்கும்போது அவன் அமுதாவுடன் அந்த வழியாக நடந்து கோவிலுக்கு சென்றது ஞாபகம் வந்தது.
அவள் அந்த நாள் முழுவதும் அவனை எப்படி எல்லாம் பாடாய் படுத்தினாள் என்று யோசித்துப் பார்க்கும்போது இப்போது அவனுக்கு சிரிப்பு தான் வந்தது. அவன் சிரித்த முகமாக கார் ஓட்டிக் கொண்டு இருப்பதை கவனித்த தினேஷ் “என்ன பாஸ் அதிசயமா இருக்கு இன்னிக்கு எதாவது ஸ்பெஷல் டேவா?” என்று கேட்க, “இல்லையே.. இன்னைக்கு என்ன ஸ்பெஷல்? ஏண்டா உளர்ற?” என்று அவனிடம் கேட்டான் விஜய்.
“நான் ஒன்னும் உலர்ல பாஸ். நீங்க தான் எத பத்தியோ யோசிச்சு சிரிக்கிறீங்க. அதுவும் உங்களுக்குள்ளேயே சிரிச்சுக்கிறீங்க. உங்களை நான் இப்படி எல்லாம் லாஸ்ட்டா எப்போ பார்த்தேனு எனக்கே ஞாபகம் இல்ல. அதான் என்ன ஸ்பெஷல்ன்னு கேட்டேன்.” என்று தினேஷ் சொல்ல, அவனிடம் பதிலுக்கு எதுவும் பேசாமல் தன்னை பற்றி அமைதியாக யோசித்துப் பார்த்தான் விஜய்.
அவனுக்கும் தினேஷ் சொல்வது சரி என்று தான் தோன்றியது. அவன் எப்போது இப்படி மனம் விட்டு சிரித்தான் என அவனுக்கு கூட ஞாபகம் இல்லை. அந்த அளவிற்கு இருக்கிறது அவனது வாழ்க்கை. அவன் அமுதாவை பற்றிய சிந்தனைகளில் மூழ்கி இருந்த விஜய் காரை ஓட்டிக் கொண்டு சென்றபடி இருக்க, அவனுக்கு கால் செய்த லாயர் “சார் நாளைக்கு உங்களுக்கும் அனாமிகா மேடமுக்கும் இருக்கிற டிவோர்ஸ் கேஸ் ஃபைனல் ஹீரிங் இருக்கு. நீங்க கண்டிப்பா அதுக்காக இங்க சென்னை வர்ற மாதிரி இருக்கும். நீங்க இந்த ஹியரிங்க்கு ஆஜர் ஆகலைன்னா அதையே சாக்கா வச்சு அவங்க இன்னொரு வாய்தா வாங்குனாலும் வாங்குவாங்க.” என்று அவனுக்கு ஞாபகப்படுத்தினார்.
“Shit.. இவ்ளோ முக்கியமான விஷயத்தை நான் எப்படி மறந்தேன்? நான் ஈவினிங் கிளம்பி சென்னை போனா தான் நாளைக்கு கோர்ட்டுக்கு போக கரெக்ட்டா இருக்கும். இங்க அதுக்குள்ள அவசரப்பட்டு ஷூட்டிங் ஸ்டார்ட் பண்ண சொல்லிட்டேனே..!!” என்று நினைத்த விஜய், “ஓகே சார், நாளைக்கு ஷேரிங் எப்பவுமே எனக்கு ஒரு ரிமைண்டர் மெசேஜ் போட்டுருங்க. நான் டைமுக்கு வந்துருவேன். நம்ம சைடு எல்லாம் கரெக்டா இருக்கு தானே? டிவோர்ஸ் கிடைச்சுரும்ல?” என்று அனைத்தையும் உறுதி செய்து கொள்வதற்காக கேட்டான்.
“எஸ் சார்.. எல்லாமே கரெக்டா தான் இருக்கு. இந்த கேஸ் நாளையோட முடிஞ்சிடும். டோன்ட் வரி.” என்று லாயர் அவனுக்கு உத்திரவாதம் கொடுக்க, சரி என்ற விஜய் அவர் அழைப்பை துண்டித்தான். அதுவரை அமைதியாக அவன் அருகில் அமர்ந்திருந்த தினேஷ் “என்ன பாஸ் லாயர் கிட்ட பேசிட்டு இருந்தீங்களா? அனாமிகா மேடம் கேஸ் விசயமா ஏதாவது சொன்னாரா?” என்று அக்கறையுடன் விசாரிக்க,
“ஆமா உனக்கு என் மேல ரொம்ப தான் அக்கறையில.. உன்ன எதுக்குத் தான் சம்பளம் கொடுத்து கூட வச்சிருக்கேனோ தெரியல.. நாளைக்கு எங்களோட டிவோர்ஸ் கேஸ் ஃபைனல் இயரிங். அதை நான் தான் மறந்து தொலைஞ்சிட்டேன். அதையே வேலையா செய்வதற்கு தானே உன்னை கூட வச்சிருக்கேன்.. ஞாபகப்படுத்த மாட்டியா நீ? உன் முன்னாடி தானே டைரக்டர் கிட்ட ஷூட்டிங் ஸ்டார்ட் பண்ண சொன்னேன். இப்ப எல்லாமே வேஸ்ட் தானே! சரியான தண்டம் தினேஷ் நீ!” என்று கோபமாக சொன்னான் விஜய்.
“சாரி பாஸ்.. சாரி பாஸ்.. உங்களோட எக்ஸ்போர்ட் கம்பெனில ஒரு இஸ்யூன்னு நேத்து எனக்கு கால் பண்ணாங்க. நான் கூட உங்ககிட்ட சொன்னனே.. அது ரிலேட்டடா மேனேஜ்மென்ட் டீம் கூட கோஆர்டினேட் பண்ணி அந்த பிராப்ளமை முடிகிறதுக்கே இன்னைக்கு மார்னிங் வரைக்கும் ரொம்ப நேரம் ஆயிடுச்சு. அதுல பிஸியா இருந்ததில நான் இத மறந்துட்டேன். ரிமைண்டர் கூட போட்டு வச்சிருந்தேன். எப்படி மிஸ் ஆச்சுன்னு தெரியல..!!” என்று தினேஷ் அவசரமான குரலில் மன்னிப்பு கேட்டான்.
உடனே கார் ஓட்டியபடி அவன் முகத்தை குறுகுறுவென்று பார்த்த விஜய்க்கு அவன் தூங்காமல் கூட இரவு முழுவதும் வேலை செய்திருக்கிறான் என்று நன்றாக புரிந்தது. இருப்பினும் தனது குணம் அப்படி அனைவரையும் புரிந்து நடந்து கொள்வது இல்லையே.. அதனால் ஃபார்மாலிட்டிக்காக வேண்டுமென்றே அவனை கொஞ்ச நேரம் திட்டி விட்டு டைரக்டருக்கு கால் செய்து சூட்டிங் கேன்சல் என்றான்.
அங்கே அவன் பேச்சைக் கேட்டு அனைத்தையும் முதலில் இருந்து தயார் செய்து கொண்டிருந்த டைரக்டர் ஸ்ரீகாந்த் “என்ன இவனுக்கு பைத்தியம் புடிச்சிருக்கா? ஏதோ இந்த படத்துக்கு இவன் ப்ரொடியூசரா இருக்கிறதுனால பரவாயில்லை. வேற யாரோ ஒருத்தரோட படமா இருந்தா இப்படி எல்லாம் இவன் இஷ்டத்துக்கு பண்ண முடியுமா? எல்லாத்தையும் ரெடி பண்ணி வெய்ன்னு இவன் சொல்லிட்டு போய் முழுசா அரைமணி நேரம் கூட ஆகல அதுக்குள்ள எல்லாத்தையும் வேண்டாம்னு சொல்லி கேன்சல் பண்ண சொல்றான்.
இவன் கூட எல்லாம் ஒரு வேலை பாக்குறதுக்கு மனுஷனுக்கு ரொம்ப பொறுமை வேணும். ஒருவேளை நான் நினைச்ச மாதிரி என் பொண்ணு மோனிக்கும் இவனுக்கும் கல்யாணம் ஆச்சுன்னா நிஜமாவே அவ பாவம் தான். இவனை சமாளிக்கிறது ரொம்ப கஷ்டம். இருந்தாலும் அதுக்கு எல்லாம் இவன் வர்த்து தான்.” என்று நினைத்து தனக்குள் புலம்பியபடி தனது அசிஸ்டன்ட்டை அழைத்து அனைத்தையும் பேக்கப் செய்ய சொன்னார்.
தனது கேரவனில் தயாராகிக் கொண்டிருந்த அமுதாவிற்கும் அந்த செய்தி சென்றடைந்தது. இப்போது தான் தனது காஸ்டியூமை அணிந்து கொண்டு மேக்கப் போடுவதற்காக அமர்ந்திருந்த அமுதா “என்னாச்சு விஜய் சாருக்கு? ஏன் திடீர்னு ஷூட்டிங் ஸ்டாப் பண்ணிட்டாரு? மறுபடியும் எப்ப சூட்டிங் நடக்கும்னு தெரியலையே!” என்று யோசித்துக் கொண்டிருந்தாள். அப்போது சட்டென அவளுக்கு அவன் அவளை முத்தமிட்ட காட்சி ஞாபகம் வந்தது.
அதை நினைத்து பார்த்தவுடன் அவளது முகம் வெட்கத்தில் குங்குமமாய் சிவந்து போக, “அவர் அப்ப ஏன் அப்படி பண்ணாரு? டைரக்டர் சீனை எக்ஸ்பிளைன் பண்ணும்போது அப்படியெல்லாம் ஒரு சீன் இருக்குன்னு சொல்லவே இல்லையே.. அந்த டைரக்டர் அக்கா கூட விஜய் சார் அவரா தான் என்ன கிஸ் பண்ணதா சொன்னாங்க.
ஒருவேளை அவருக்கு என்ன புடிச்சிருக்குமா? அதான் ஏதோ ஒரு ஃபீலிங்கில டக்குனு வந்து கிஸ் பண்ணிட்டாரா? நெஜமாவே அப்படி இருக்குமா இல்ல நான் ரொம்ப ஓவரா யோசிக்கிறேனா?” என்று தனக்குள் பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருந்த அமுதாவிற்கு ஒரு வேலை அவனுக்கு தன் மீது விருப்பம் இருக்கிறதா? என்று யோசித்தால் அவள் வயிற்றுக்குள் ஆயிரம் பட்டாம்பூச்சி பறப்பது போல அப்படி ஒரு இனிமையான உணர்வு ஏற்பட்டது.
தன் வாழ்க்கையில் அப்படி ஒரு உணர்வை அவள் உணர்வதில்லை. இப்படியாக அவள் விஜயை பற்றிய சிந்தனைகளில் மூழ்கி இருக்க, “உனக்கு டவுட்டை வேண்டாம்.. நீதான் ஓவரா யோசிச்சு உன்ன கன்பியூஸ் பண்ணிக்கிற அமுதா. விஜய் சார் யாருன்னு தெரியும்ல? அவரை மாதிரி ஒருத்தருக்கு உன்னை பிடிக்கும்னு எப்படி உன்னால யோசிக்க முடியுது! உன்னை எல்லாம் எப்பயும் ஒரு ஆளாவே அவர் மதிக்க மாட்டார்.. நீ அவரை அன்னதானம் போட்ற இடத்துக்கு சாப்பிட கூட்டிட்டு போனதுக்கு உன்னை லோ கிளாஸ்னு சொல்லி அவர் எப்படி அசிங்கப்படுத்தினாரு..
அதை எல்லாம் அதுக்குள்ள மறந்துட்டியா நீ! உன்னை மாதிரி ஒரு சாதாரண பொண்ணை எல்லாம் அவருக்கு எப்பயும் பிடிக்காது. தேவை இல்லாம யோசிச்சு நீ டைம் வேஸ்ட் பண்ணிட்டு இருக்க. உனக்கும் வெற்றிக்கும் சீக்கிரம் மேரேஜ் ஆக போகுது அதை மைண்ட்ல வச்சுக்கோ.” என்று சொல்லி அவள் மூளை அவளை எச்சரித்தது.
“ஆமா இல்ல எனக்கும் வெற்றிக்கும் மேரேஜ் பண்ணி வைக்க போறாங்க. நான் அத பத்தி மறந்தே போயிட்டேன். இன்னைக்கு நடந்ததை வெற்றியும் பார்த்திருப்பேனே.. அவன் போய் வீட்ல இதை பத்தி சொல்லி என்ன இதுக்கு மேல நடிக்க கூடாதுன்னு சொல்லிட்டா என்ன பண்றது?” என்று யோசித்த அமுதா அவசர அவசரமாக தனது ஆடைகளை மாற்றி விட்டு வெளியில் வந்து பார்த்தாள்.
ஷூட்டிங் பாதியில் நின்றதைக் கேள்விப்பட்டு சந்தோஷமாக அவளை தேடிக் கொண்டு அங்கே வந்த வெற்றி “அதான் இன்னைக்கு ஷூட்டிங் இல்லைன்னு சொல்லிட்டாங்க இல்ல.. அதுக்கப்புறம் உனக்கு இங்க என்ன வேலை? வா கிளம்பலாம்.” என்று சொல்லி அவள் பதிலுக்கு கூட காத்திருக்காமல் உரிமையாக அவள் கையை பிடித்து இழுத்துக் கொண்டு வெளியில் சென்று அவளை தன் பைக்கில் ஏற்றி நான்.
அவர்கள் இருவரும் அங்கிருந்து புறப்பட, இதுவரை எப்போதும் தன்னை கட்டுப்படுத்த வேண்டும் என்ற ரீதியில் வெற்றி அவளிடம் பழகியது இல்லை என்று அவளுக்கு நன்றாக தெரியும். ஆனால் இன்று ஒரே நாளில் அவனது செயல்களில் அத்தனை மாற்றங்கள் வந்திருப்பதை கவனித்த அமுதா “வெற்றி.. நான் உன் கிட்ட ஒன்னு கேட்கணும். இல்ல சொல்லணும்.. நீ கோச்சுக்க மாட்டியே!” என்று மெல்லிய குரலில் திக்கி திக்கி கேட்டாள்.
அவள் தன்னிடம் எதைப்பற்றி பேச போகிறாள் என்று ஏற்கனவே அறிந்திருந்த வெற்றி “நீ சொல்லனுமா கேட்கணுமா?” என்று அவளிடம் நக்கலாக கேட்க, “சொல்லணும் வெற்றி.” என்றாள் அமுதா. “என்னன்னு சொல்லு.” என்று வெற்றி பைக் ஓட்டியவாறு அவளிடம் கேட்க, “இன்னைக்கு அப்படி நடந்தது ஏதோ தெரியாம ஆக்சிடென்ட்டலா எல்லாம் நடந்தது. நான் கால் வழுக்கி விஜய் சார் மேல விழுந்துட்டேன். மத்தபடி இப்படியெல்லாம் என்னை நடிக்க வைக்கணும்னு யாருமே நடிக்கல. அப்போ நடந்ததை கூட படத்துல வராம கட் பண்ணிக்கலாம்னு டைரக்டர் சொன்னதா அசிஸ்டன்ட் டைரக்டர் அக்கா என் கிட்ட சொன்னாங்க. அதனால..!!” என்ற அமுதா அதற்கு மேல் தன் மனதில் இருப்பதை அவனிடம் சொல்ல தயங்கினாள்.
தனது பைக் இன் சைடு மிரர் வழியாக அவளது பதட்டமான முகத்தை பார்த்த வெற்றி “அதனால!” என்று அழுத்தி கேட்க, “அதனால இதை பத்தி நீ யார் கிட்டயும் சொல்லிடாத ப்ளீஸ் எனக்காக.. நம்ம வீட்ல இருக்கறவங்கள பத்தி தான் உனக்கே தெரியுமே.. இத பத்தி எல்லாம் பெரிய பிரச்சனை ஆயிடும்.” என்று மெல்லிய குரலில் சொன்னாள் அமுதா. “அவ்ளோ தானே… இல்ல இன்னும் என் கிட்ட சொல்றதுக்கு வேற ஏதாவது இருக்கா?” என்று வெற்றி கடுப்புடன் கேட்க, “இவன் நம்ம மேல செம கோவத்துல இருப்பான் போல. இப்ப நம்ம என்ன பேசினாலும் இவனை இன்னும் டென்ஷன் பண்ற மாதிரி தான் இருக்கும்.” என்று நினைத்த அமுதா “ஒன்னும் இல்ல வெற்றி சாரி.” என்றாள்.
அவள் எதற்காக இப்போது சம்பந்தமில்லாமல் இவனிடம் மன்னிப்பு கேட்டாள் என்று அவளுக்கே தெரியவில்லை. அதைப்பற்றி யோசித்தபடி அமுதா பிசியாக இருக்க, அவளுடன் தன் வீட்டிற்கு சென்று சேர்ந்தான் வெற்றி.
– காதல் மலரும்
***