Home FREE NOVELSசாபமாய் வந்த என் உயிரே CH 44

சாபமாய் வந்த என் உயிரே CH 44

by Thenaruvi Tamil Novels

அத்தியாயம் 44 

மயக்கம் அடைந்து இருந்த அமுதாவை தூக்கிக் கொண்டு சென்று தனது கேரவனில் படுக்க வைத்த விஜய் டாக்டரை வர சொல்லிவிட்டு வெளியில் வந்தான். விஷயத்தை கேள்விப்பட்டு அங்கே சென்ற வெற்றி உள்ளே சென்று அமுதாவை பார்த்தான். 

அவள் வீட்டில் உள்ளவர்களுக்கு விஜய் அமுதா தனது பொறுப்பு என்று சொல்லி வாக்கு கொடுத்திருந்தான். அதனால் வெற்றியாகவே இருந்தாலும் மயக்கமாக இருக்கும் அமுதாவுடன் எந்த ஒரு ஆணும் தனியாக உள்ளே இருக்க வேண்டாம் என்று நினைத்து அசிஸ்டன்ட் டைரக்டராக இருந்த பெண்ணை அழைத்து “அந்த பொண்ணுக்கு மயக்கம் தெளியுற வரைக்கும் நீ அவ கூடயே இரு.” என்றான். மரியாதையுடன் “ஓகே சார்” என்ற அந்தப் பெண்ணும் உள்ளே சென்று அமுதாவின் அருகில் அமர்ந்து கொண்டாள். 

இப்போது அமுதா வேறு ஒரு ஆடையில் இருப்பதைக் கண்டு பதறிப்போன வெற்றி உள்ளே வந்த பெண்ணிடம் “என்ன ஆச்சு இவளுக்கு? இவ டிரஸ்சை யார் மாத்தினது? அவ மேனேஜர் நான் தானே.. நான் இங்கே இருக்கும்போது, என்னை கேட்காம யார் இப்படி எல்லாம் பண்ணது?” என்று வெற்றி கோபமாக கேட்க, 

“சார் கோபப்படாதீங்க சார்.. முதல்ல என்ன நடந்துச்சுன்னு நான் சொல்றேன் கேளுங்க..!!” என்ற அந்த பெண் நடந்த அனைத்தையும் அவனிடம் சொல்லிவிட்டு “அப்படி எல்லாம் எங்க ஹீரோயினை கேர்லச்சா நாங்க விட்ற மாட்டோம். இந்த செட்ல அவங்களுக்கு என்ன ஆனாலும் அதுக்கு நாங்க தான் பொறுப்பு. முன்னாடில இருந்தே இவங்க கூட நான் தான் இருக்கேன் சார். இப்ப கூட விஜய் சார் அமுதா மேடமை தனியா விட கூடாதுன்னு சொல்லித்தான் என்னை உள்ள அனுப்பி வச்சாரு. டாக்டருக்கு கூட கால் பண்ணியாச்சு வந்துட்டு இருக்காங்க.” என்றாள். 

அவள் சொன்னதை கேட்ட பிறகு தான் வெற்றிக்கு போன உயிரே மீண்டும் வந்ததைப் போல இருந்தது. இருப்பினும் “விஜய் சார் அமுதா மேல ரொம்ப அக்கறை காட்டுற மாதிரி தெரியுதே.. இந்த பொண்ணு சொல்ற மாதிரி அமுதா அவர் கிட்ட வேலை பார்க்கிறான்னு அவளுக்காக இதையெல்லாம் செய்றாரா.. இல்ல அமுதா மேல அவருக்கு ஒரு நல்ல அதிபிராயம் ஏதாவது இருக்குமா? இந்த மாதிரி பணக்காரங்க எல்லாம் அழகா ஏதாவது சின்ன பொண்ணு கிடைச்சா ஏதாவது பேசி பிரைன் வாஷ் பண்ணி கல்யாணம் பண்ணிக்குவாங்க.. ஒருவேளை இவரும் அந்த என்னத்துல தான் இருக்கிறாரா? எப்பயும் எல்லார் கிட்டயும் கடுகடுன்னு இருக்கிற விஜய் சார் இவ கிட்ட மட்டும் எப்படி இந்த மாதிரி பொறுப்பா அன்பா நடந்துக்கிறார்?” என்று எப்படி எப்படியோ யோசித்து தன்னைத்தானே குழப்பிக் கொண்டான். 

தனக்கும் அமுதாவிற்கும் எப்போது திருமணம் நடக்கும், அந்த திருமணம் நடந்து தான் அவளுடன் சேர்ந்து நல்ல முறையில் வாழ தொடங்கினால் மட்டும் தான் தன்னால் நிம்மதியாக இருக்க முடியும் என்று நினைத்த வெற்றி திருமணம் நடக்கும் வரை அமுதாவே திருமணத்தைப் பற்றி ஏதேனும் நெகட்டிவாக பேசினால் கூட அதை எல்லாம் காதில் வாங்காமல் முதலில் அவளை தன் மனைவியாக்க வேண்டும் என்று உறுதியாக இருந்தான்.

அடுத்த அரை மணி நேரத்தில் அங்கே வந்த டாக்டர் அமுதாவை சோதித்து பார்த்துவிட்டு “இவங்களுக்கு பெருசா ஒன்னும் பயப்பட மாதிரி இல்ல. ஆல்ரெடி இவங்க ரொம்ப வீக்கா இருந்திருக்காங்க. மேபி வெயில்ல நின்னு ரொம்ப நேரமா ஆக்டிங் பண்ணிட்டு இருந்ததனால இவங்க வாங்கி விழுந்திருக்கலாம். கொஞ்ச நேரத்துல அவங்களே நார்மல் ஆயிடுவாங்க.” என்று வெற்றியிடம் சொல்லிவிட்டு வெளியில் சென்றார். 

டாக்டர் அந்த இடத்தை விட்டு செல்வதற்குள் அவரை தடுத்து நிறுத்திய விஜய் அமுதா எப்படி இருக்கிறாள் என்று விசாரித்தான். உள்ளே வெற்றிடம் சொல்லிவிட்டு வந்ததை அப்படியே டாக்டர் விஜய் இடம் சொல்ல, “இதுக்கப்புறம் அவளுக்கு இதே மாதிரி ஆகாதுல்ல?” என்று அக்கறையுடன் விசாரித்தான் விஜய். “இன்னைக்கு அப்படி ஆனதுனால அவங்களுக்கு அடிக்கடி இப்படி ஆகும்னு அர்த்தம் இல்லை மிஸ்டர் விஜய். பட் அவங்க அவங்களோட ஹெல்த் மேல கொஞ்சம் கேரோட நடந்துக்கிட்டாங்கனா இனிமே இப்படி ஆகாம நம்ம பாத்துக்கலாம். அவங்க வீக்கா இருக்காங்க.” என்ற டாக்டர் இதன் பிறகு தன் வாழ்க்கையில் விஜய் சந்திக்கவோ, இவ்வளவு அருகில் நின்று பேசவோ தனக்கு பிற்காலத்தில் வாய்ப்பு கிடைக்க வழியில்லை என நினைத்து அவனிடம் ரிக்வெஸ்ட் செய்து அவனுடன் சேர்ந்து ஒரு செல்ஃபி ஃபோட்டோ எடுத்துக் கொண்டு அங்கிருந்து சென்றார்.  ‌ 

அவர் சென்ற சில நிமிடங்களிலேயே கண் விழித்த அமுதா சுற்றி முற்றி பார்த்துவிட்டு திடுக்கிட்டு எழுந்து அமர்ந்தாள். அவளுக்கு அவள் மயக்கம் அடைவதற்கு முன்பாக விஜய் அவளை முத்தமிட்ட காட்சிதான் மன கண்களில் படமாக ஓடியது. உடனே அவளுக்கு மீண்டும் பதட்டம் கலந்த வெட்கம் வந்துவிட, அந்த இடத்தில் விஜய் இருக்கிறானா என்று தேடிவிட்டு நல்ல வேலையாக அவன் இல்லை என நினைத்து பெருமூச்சு விட்டாள். 

அவனது வசீகரமான கண்களையும், ஆண்மை பொருந்திய உடலையும் அத்தனை அருகில் மீண்டும் பார்க்க அவளுக்கு இப்போது தெம்பு இல்லை. அங்கே வெற்றி இருப்பது அவள் கண்களில் பட்டாலும் கூட அவனிடம் பேச வேண்டும் என்று கூட அவளுக்கு தோன்றவில்லை. அவளது என்ன ஓட்டங்களை முழுவதுமாக விஜய் ஆக்கிரமித்து இருந்தான். 

அமுதாவின் அருகில் சென்று அமர்ந்த வெற்றி “நீ இப்ப நல்லா தானே இருக்க அம்மு! டாக்டர் இப்ப தான் உன்ன வந்து பாத்துட்டு போனாரு. நீ ரொம்ப வீக்கா இருக்கேன்னு சொன்னாரு. ஏன் இப்படி இருக்க? ஒழுங்கா சாப்பிட மாட்டியா நீ?” என்று தொடர்ந்து அவளிடம் அடுக்கடுக்காக கேள்விகள் கேட்டுக் கொண்டிருந்தான். அவனுக்கு பதில் சொல்ல வேண்டிய அமுதா தன் வாயை கூட திறக்காமல் விழிகள் விரிய  அந்த கேரவனிற்குள் நுழைந்த விஜயை இமைக்க மறந்து பார்த்துக் கொண்டு இருந்தாள். அவளது கனவு நாயகனை அவள் வாழ்க்கையில் ஒரு நாள் இப்படி உண்மையாகவே முத்தமிடுவாள் என்று அவள் கனவிலும் கூட நினைத்ததில்லை. 

இப்போது அது நிஜமாகவே அனைவரின் முன்னிலையிலும் நடந்து விட்டது என்பதை அவளால் நம்பவே முடியவில்லை. அதை நினைத்து பார்க்க பார்க்க இப்போது விஜய் மீது அவளுக்கு இருந்த பயம் போய், அவன் இப்போது தன் அருகில் வந்து கொண்டிருக்கிறான்.. தன்னையே வேறு குறுகுறுவென்று பார்க்கிறான் என நினைக்கும் போது வெட்கம் அவளை பிடுங்கி தின்றது. 

அதனால் சிவந்த கன்னங்களுடன் அமுதா அவனையே பார்த்துக் கொண்டிருக்க, “என்ன அமுதா நீ நான் பாட்டுக்கு பேசிக்கிட்டே இருக்கேன்.. நீ எதுவுமே சொல்ல மாட்டேங்குற..!!” என்று கேட்ட வெற்றி சட்டென்று எழுந்து நின்றான். அப்போது அவர்கள் அருகில் வந்த விஜய் “நீ இப்ப எப்படி இருக்க?” என்று வெற்றி கேட்டதை போலவே அவளிடம் கேட்டான். அவனது தனித்துவமான காந்தக் குரலை கேட்டவுடன் தன் உடல் முழுவதும் ஏதோ ஒரு புதுவித மின்சாரம் பாய்வதைப் போல உணர்ந்த அமுதா “நான்.. நான் நல்லா இருக்கேன் சார். இப்ப ஓகே தான்.” என்று திக்கி தினரி சொல்லிவிட்டு வெட்கத்தில் தலை குனிந்தாள். 

அவளுடன் சேர்ந்து தானும் மழை நீரில் நனைந்து இருந்ததால் விஜய் வேறு ஆடைக்கு மாறி இருந்தான். அவனை அப்படி பார்த்த பிறகு தான் தனது ஆடையும் மாற்றப்பட்டு இருப்பதை உணர்ந்த அமுதா வெற்றி டாக்டர் வந்ததாக சொன்னதை எல்லாம் நினைவு கூர்ந்தாள். விஜயின் பார்வை முழுவதும் அமுதாவின் மீது இருக்க, அமுதாவும் அவனைத்தான் பார்த்துக் கொண்டிருந்தாள். அவர்கள் இருவரின் பார்வை பரிமாற்றத்தை பார்த்து கொண்டு இருந்த வெற்றிக்கு அப்படியே ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. 

அதனால் உடனே விஜயை பார்த்து “சார் நான் உங்க கிட்ட கொஞ்சம் பேசணும். வெளிய வரீங்களா?” என்று தனது கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டு வெற்றி கேட்க, அவனை அலட்சியமாக ஒரு பார்வை பார்த்த விஜய் அவனுடன் வெளியில் சென்றான். இன்று ஷூட்டிங் தொடர போகிறதா இல்லை நாளை அனைத்தையும் பார்த்துக் கொள்ளலாம் என்று விஜய் முடிவெடுக்கிறானா என தெரியாததால் தான் பத்திரமாக எடுத்து வைத்திருந்த அமுதாவின் ஆடைகளை அவளிடம் கொடுத்த அசிஸ்டன்ட் டைரக்டர் பெண்மணி “மேடம் சிம் கன்டினியூவேஷன் ஆகும்போது நீங்க இதையெல்லாம் மறுபடியும் போட்டுக்குற மாதிரி இருக்கும். சோ நெக்ஸ்ட் டைம் ரெடி ஆகும்போது மானிட்டர்ல ஒரு தடவை முன்னாடி எடுத்த சீனை செக் பண்ணிக்கோங்க. உங்க அப்பியரன்ஸ்ல எந்த சேஞ்சஸும் இருக்கக் கூடாது.” என்று அவளிடம் சொல்லி சினிமாவில் இருக்கும் சில நுட்பமான விஷயங்களை அவளுக்கு விளக்கத் தொடங்கினாள்.

விஜய் தான் அழைத்தவுடன் வெளியில் வந்துவிட்டதால் அவன் அருகில் சென்ற வெற்றி “சார் எங்க குடும்பத்துக்கு இது எல்லாம் சரிப்பட்டு வராது. வீட்ல இருக்குறவங்களுக்கு மட்டும் இது தெரிஞ்சா அமுதாவை நடிக்கவே விட மாட்டாங்க.” என்று கோபம் கலந்த பொறமையுடன் சொல்ல, அவனை மேலும் கீழும் பார்த்த விஜய் “அப்ப சொல்லாத..!! எதுவா இருந்தாலும் அவங்க மூவி ரிலீஸ் ஆனதுக்கு அப்புறம் பார்த்து தெரிஞ்சுக்கட்டும்.” என்று நக்கலாக பதில் சொன்னான். 

“சார்.. என்ன சார் இப்படி சொல்றீங்க? நீங்களே நேர்ல வந்து பேசுனதுனால தானே எங்க மாமா அமுதா படத்துல நடிக்கிறதுக்கு ஒத்துக்கிட்டாரு! நீங்க குடும்பப்பாங்கான படம். அமுதா நார்மலா எப்படி இருப்பாளோ அதே மாதிரி நடிச்சா போதும்னு தானே சொன்னீங்க.. அப்புறம் இங்க கிஸ் சீன் எல்லாம் வைக்கிறீங்க.. அவளுக்கு அது எல்லாம் பழக்கம் கிடையாது. 

அப்புறம் எங்க வீட்ல இருக்குறவங்களுக்கு இது எல்லாம் பிடிக்காது. இனிமே இப்படி எல்லாம் எதுவும் நடக்காம பாத்துக்கோங்க.. அப்புறம் அமுதா இந்த படத்துல நடிக்க மாட்டா சொல்லிட்டேன்..!!” என்று வெற்றி சொல்ல, பெரிய பெரிய தொழிலதிபர்களும், சினிமாவில் உள்ளவர்களும் கூட தன்னிடம் குரலை உயர்த்தி பேச அத்தனை யோசித்து பயந்து நடுங்கும்போது இப்படி ஒரு சின்ன பையன் தன்னிடம் திமிராக பேசுவதை கண்டவுடன் விஜயின் ஆணவம் தூண்டப்பட்டது. 

இருப்பினும் இந்த படத்திற்கு அமுதா மிகவும் முக்கியமானவள் என்பதால் தன் கோபத்தை பற்களை கடித்து கட்டுப்படுத்திய விஜய் அவனைப் பார்த்து முறைத்து “என் ப்ரொடக்சன்ல ரெண்டு வருஷத்துக்கு நடிக்கிறதா அவ அக்ரீமெண்ட் சைன் பண்ணி என் கிட்ட அட்வான்ஸ் பேமென்ட் வாங்கிட்டு போயிருக்கா.. அது எல்லாத்தையும் ப்ராசஸ் பண்ணுது நீதானே! அப்புறம் எந்த தைரியத்துல டா இப்படியெல்லாம் பேசிட்டு இருக்க? அவ என் படத்துல நடிக்க மாட்டான்னு சொல்றதுக்கு நீ யாரு?” என்று பதிலுக்கு திமிராக கேட்க, அவன் மீது கோபத்தில் இருந்த வெற்றி சட்டென “ம்ம்‌.. நான் அவளோட மேனேஜர் மட்டும் இல்ல.. அவ ஹஸ்பண்ட். எனக்கு அவ என்ன பண்ணனும் பண்ண கூடாதுன்னு சொல்றதுக்கு எல்லா ரைட்ஸும் இருக்கு.” என்று தன் நெஞ்சை நிமித்தி சொன்னான். 

-காதல் மலரும் 

You may also like

Leave a Comment

About Me

Featured