Home FREE NOVELSசாபமாய் வந்த என் உயிரே CH 32

சாபமாய் வந்த என் உயிரே CH 32

by Thenaruvi Tamil Novels

அத்தியாயம் 32 

“பெரியவங்கள மதிக்க மாட்டீங்களா?” என்று வடிவு கேட்டவுடன் என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் அமுதாவும், வெற்றியும் திருதிருவென்று முழித்துக் கொண்டு இருந்தார்கள்.

உடனே எழுந்து நின்ற வடிவு “இங்க பாரு அமுதா! நீ வேற எனக்கு என் மவனுங்க வேற  இல்ல. கல்யாணம் ஆகி வீட்ல கடக்க போற புள்ளைய எதுக்கு படிக்க வைக்கணும்னு உங்க அண்ணனுங்க எல்லாரும் கேட்கும்போது கூட, என் மருமக படிக்கணும்னு உனக்காக பேசினவ நானு‌. உனக்கு எப்படியோ தெரியல.. எனக்கு அந்த அளவுக்கு உன் மேல மரியாதையும் பாசமும் இருக்குது.‌

இப்ப நீ சினிமாவுக்கு போறேன். நடிச்சு பெரிய ஹீரோயின் ஆகப்போறேன்னு சொல்லிட்டு இருக்க. நீ ஊதுற மகுடிக்கு என்ற மகனும் ஆடிக்கிட்டு இருக்கான். அவனுக்கு உன் மேல இருக்கிற மயக்கத்திலே உனக்காக அவன் என்ன வேணாலும் செய்வான் தான். அதுல எந்த சந்தேகமும் இல்ல. ஆனா இதனால நம்ம குடும்பத்துல என்ன நடக்கும்? பொறவு  ஏதாவது தப்பு நடந்து, என் பையன் கஷ்டப்படுற மாதிரி ஒரு சூழ்நிலை வந்தா என்னால அதையெல்லாம் தாங்க முடியாது. 

எனக்கு பொறந்த மூத்தவன் முரட்டு பையனா சுத்திட்டு இருக்கான். அவன கல்யாணம் பண்ணிக்க சொல்லி நானும் பல வருஷமா சொல்லி பாத்துட்டேன். அவன் கேட்கிற மாதிரி இல்ல. இதோ இளையவன் வெற்றி நீயே கதின்னு உன் பின்னாடியே சுத்திட்டு இருக்கான். திடீரென நீ பாட்டுக்கு நடிக்க போன இடத்துல வேற எவனாவது பணக்காரனா பார்த்து கல்யாணம் பண்ணிட்டு போயிட்டினா என் பையன் நிலைமை என்ன ஆகிறது சொல்லு? 

உன் ஆசைக்கு நான் குறுக்க நிக்கனும்னு நினைக்கல தாயி. ஆனா என் பையனுக்காக நான் யோசிச்சு தானே ஆகணும்.. அதுவும் ஒரு வயசு புள்ள சினிமாவுக்கு போய் நடிக்கிறது எல்லாம் சாதாரணமா? உனக்கு ஏதாவது ஒன்னு கிடைக்க ஒன்னு ஆகிட்டா ஐயோன்னா வருமா? அம்மான்னா வருமா சொல்லு? நான் மறுபடியும் கேட்கிறேன் ஒரு தடவை நல்லா யோசிச்சு சொல்லு. உனக்கு இந்த கூத்தாடி பொழப்பு தேவையா கண்ணு? நம்ம கௌரவமா வாழ்ற குடும்பம். இப்படியே நிம்மதியா இதோ என் பையன் வெற்றி.. இவன கல்யாணம் பண்ணிக்கிட்டு வாழற வழியை பாரேன்! உனக்கு பட்டணத்துக்கு போகணும்னு ஆசையா இருந்துச்சுன்னா கல்யாணம் ஆனதுக்கப்புறம் நீங்க ரெண்டு பேரும் வேணா சென்னைக்கு போய் வேற வேலை பாருங்க. உங்களை யாரு வேண்டாம்னு சொல்றது?” என்று அவளிடம் கேட்க, 

ஷாக் ஆகி வெற்றியையும் தன் அத்தையையும் மாறி மாறி பார்த்த அமுதா, “என்ன இவங்க இப்படி பேசுறாங்க? விட்டா எனக்கும் வெற்றிக்கும் இப்பையே கல்யாணம் பண்ணி வச்சிருவாங்க போல! ஏதோ சின்ன வயசுல எனக்கும் வெற்றிக்கும் கல்யாணம் பண்ணி வைக்கிறதா சும்மா விளையாட்டுக்கு பேசிட்டு இருக்காங்கன்னு நினைச்சேன். ஆனா இந்த அத்தை என்ன அதை எல்லாம் சீரியஸா எடுத்துக்கிட்டு அவன கல்யாணம் பண்ணிக்கிட்டு வீட்டோட இருன்னு சொல்லிட்டு இருக்காங்க! இந்த மேரேஜ்ல இருந்து தப்பிக்கிறதுக்காகவே நான் ஆக்டிங் கரியரை சூஸ் பண்ணியாகணும் போல!” என்று நினைத்து பயந்தவள், 

“அப்படி எல்லாம் திடீர் திடீர்னு எதுவும் பண்ண முடியாது அத்தை. நான் விஜய் சாரோட கம்பெனியில நடிக்கிறதா ஒத்துக்கிட்டு கையெழுத்து போட்டு கொடுத்துட்டேன் அக்ரிமெண்ட்ல. நான் அதை மீறினா அவங்க சார்பா என் மேல கோர்ட்ல கேஸ் போடுவாங்க. பெனாலிட்டி அமௌன்ட் கட்ட சொல்லி கேப்பாங்க. அதெல்லாம் நிறைய அமௌன்ட் கட்டுற மாதிரி வரும். அவ்ளோ காசுக்கு நம்ம எங்க போறது சொல்லுங்க? 

எனக்கு கல்யாணம் பண்ற ஐடியா எல்லாம் இப்போதைக்கு இல்லை அத்தை. அதுக்காக நம்ம குடும்பத்தில இருக்கிறவங்களை மீறி நான் எதுவும் பண்ணிட மாட்டேன்! என நம்புங்க. வெற்றி என் கூட தானே இருக்க போறான்.. அவனை மீறி என்ன தப்பா நடக்க போகுது சொல்லுங்க?”  என்று கேட்டாள். 

“அப்ப நீ சினிமாவில நடிச்சு தான் ஆவேன்னு சொல்ற. அவனுங்களே பரவால்ல நீ நடிக்க வேண்டாமானு சொன்னா கூட நீ உட்கார்ந்து ஒப்பாரி வெப்ப போல இருக்கே! உண்மையை சொல்லு உனக்கும் படத்தில நடிக்கணும்னு ஆசை இருக்கு தானே!” என்று வடிவு அவளிடம் அழுத்தி கேட்க, உடனே தலை குனிந்த அமுதா “ஆமா அத்தை. இந்த மாதிரி ஒரு வாய்ப்பு வீடு தேடி வந்து யாருக்கு கிடைக்கும்? இதுக்காக பல வருஷம் கஷ்டப்பட்டு வேலை செய்றவங்க எல்லாம் இருக்காங்க. எனக்கு தானா தேடி வந்த வாய்ப்பை நான் இழக்க விரும்பல. விஜய் சார் கூட நடிக்கிறதுக்கு சான்ஸ் கிடைக்கிறது எல்லாம் வரம் மாதிரி. அதை வேண்டாம்ன்னு சொல்றது முட்டாள் தனம். எனக்கு முட்டாளா இருக்கிறதுல விருப்பம் இல்ல.” என்று தாழ்ந்த குரலில் சொன்னாள்‌. 

“ஓஹோ உனக்கு முட்டாளாக விருப்பம் இல்லையா? அது சரி அது சரி.‌. அதே மாதிரி உன்னை நம்பி நாங்களும் முட்டாளாக விரும்பல மா‌. உனக்கு என்ன சினிமால நடிக்கணும் அவ்வளவு தானே! அதான் உன் மாமாக்காரன் உன் கூடவே இருக்கிறேன்னு வாக்கு கொடுத்துட்டானே…

உன் கூடவே இருந்து அவன் உன்னை பார்த்து கட்டும். இதுக்கு மேல இதுல நாங்க சொல்றதுக்கு ஒன்னும் இல்ல. ஆனா நீ அதுக்கு ஒன்னே ஒன்னு மட்டும் பண்ணா போதும்.” என்று வடிவு சொல்ல, உடனே என்ன என்று கேட்பதைப் போல அவளை ஏறிட்டாள் அமுதா. 

‌“என்ன பாக்குற? பெருசா ஒன்னும் இல்ல… எல்லாம் நம்ம ஏற்கனவே பேசி முடிவு பண்ணி வச்சது தான். இந்த சூட்டிங் கண்றாவி எல்லாம் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியே நம்ம மாரியம்மன் கோயில்ல வச்சு என் மவன் உன் கழுத்துல ஒரு தாலி மட்டும் கட்டிடட்டும். 

அவன் பொண்டாட்டியா போய் நீ எங்க வேணாலும் நடிச்சிட்டு வா. உன் புருஷன் உனக்கு துணைக்கு வருவான். நாங்களும் எங்க பிள்ளைங்க நல்லா தான் இருக்காங்க நிம்மதியா இருக்காங்கன்னு நெனச்சு சந்தோசமா இருப்போம்.” என்று வடிவு சொல்ல, இம்முறை வெற்றியும் அமுதாவுடன் சேர்ந்து தன் அம்மாவை அதிர்ச்சியுடன் பார்த்தான். 

அவனுக்கு அமுதா இந்த திருமணத்திற்கு ஒப்புக்கொள்வாளா என்று தெரியவில்லை. ஆனால் மணிகண்டன் பேசிவிட்டு சென்றதில் இருந்து அமுதா சினிமாவில் நடிக்க போவதால் தன்னை விட்டு அவள் தூரமாக சென்று விடுவாளோ என்ற பயம் அவன் ஆழ்மனதில் ஒட்டிக்கொண்டே இருந்தது. இப்போது அந்த பயத்தை போக்க தன் அம்மா ஒரு தீர்வு சொல்லி இருப்பதாகவே நினைத்த வெற்றி “அம்மா சொல்றதும் சரி தானே! மீடியால இருக்கிறவன் எவன் நல்லவன் எவன் கெட்டவன்னு யாருக்குமே தெரியாது..

கல்யாணம் ஆகாத வயசுப்புள்ள நடிக்க போறதுன்னா சும்மாவா? நான் அவளுக்கு மேனேஜரா மட்டும் இருந்தா என்னால சில சமயம் எதுவும் பண்ண முடியாம போகலாம். அதுவே எனக்கும் அவளுக்கும் கல்யாணம் ஆயிடுச்சின்னா, அமுதா எப்பயும் என்னை விட்டு போக மாட்டான்னு நானும் ஒரு நிம்மதியோட இருக்கலாம்.” என்று நினைத்து பதிலை எதிர்பார்த்து அமுதாவை பார்த்தான். 

இப்போதே தனக்கும் வெற்றிகும் திருமணமா? என்று நினைத்தாலே அமுதாவிற்கு எங்கேயாவது ஓடி சென்று ஒளிந்து கொள்ளலாம் போல இருந்தது. அவள் இப்போதுதான் படித்து முடித்து இருக்கிறாள். அவளுக்கு ஏராளமானவற்றை எல்லாம் கற்றுக் கொண்டு தன் சொந்த காலில் நின்று சம்பாதித்து தனக்கென்று ஏதாவது தான் செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. அதற்கு இந்த திருமணம் முட்டுக்கட்டையாக இருக்குமா? என்ற எண்ணத்தில் அவள் பேசாமல் அப்படியே நின்று கொண்டிருந்தாள். 

வந்ததும் வராததுமாக ஒரு பிரச்சனையை கிளப்பிவிட்ட வடிவு இப்போதும் அமுதா தனக்கு பதில் சொல்லாமல் அமைதியாக நின்றதால் “என்ன அமுதா நான் கேட்கிறேன் நீ எதுவும் சொல்லாம அப்படியே நிக்கிற? அது சரி உன்கிட்ட நான் எதுக்கு பேசிகிட்டு! இதெல்லாம் பெரியவங்க பேசி முடிக்க வேண்டிய சமாச்சாரம். உங்க அண்ணனுங்க வயல்ல தானே இருப்பானுங்க! நான் அவனுங்கள அங்க போய் நேர்ல பார்த்து பேசுகிறேன். நீ நடிக்க போறதா இருந்தா உனக்கும் என் மகனுக்கும் கல்யாணம் ஆனதுக்கப்புறம் தான் அது நடக்கும். அத நல்லா மனசுல ஏத்தி வச்சுக்கோ.” என்று சொல்லிவிட்டு வாசலை நோக்கி வேக எட்டுகள் வைத்து நடந்தாள்.  

வெற்றி தன் அம்மாவை பார்த்தபடி அப்படியே அசையாமல் நின்று கொண்டிருக்க, அவனையும் தன் அத்தையையும் மாறி மாறி பார்த்த அமுதா “என்ன இது? அத்தை எங்களுக்கு மேரேஜ் சொன்னதுக்கு அப்புறம் இவன் எதுவுமே வாயத் திறந்து பேசாம அப்படியே அமைதியா இருக்கான்! அப்ப இவனும் அதுக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருக்கானா? கலை சொன்ன மாதிரி இவன் என்னை ஒன்சைடா லவ் பண்றானோ? நான் மட்டும் தான் இவனை ஃபிரண்டா நினைச்சு பேசி பழகிட்டு இருக்கேனா? ஐயோ முருகா இது என்ன சோதனை? இவன் எப்பதுல இருந்து என்ன லவ் பண்ண ஸ்டார்ட் பண்ணான்?” என்று யோசித்து வெற்றியை கோபமாக பார்த்துக் கொண்டிருந்தாள். 

அவளை ஓரக்கண்ணால் பார்த்த வெற்றி “இவ நம்ம கிட்ட இந்த கல்யாணத்தை பத்தி பேசி நம்மளையே இப்ப இதெல்லாம் வேண்டாம்னு சொல்லி நிறுத்த சொன்னாலும் சொல்லுவா. ஆனா எனக்கு என்னமோ அப்படி பண்ணா அது யாருக்குமே ‌நல்லது இல்லைன்னு தோணுது. அதுக்கு அமைதியா இங்க இருந்து எஸ் ஆகிறதே நல்லது.” என்று நினைத்து, “அங்க போய் அம்மா என்ன பண்ண போறாங்களோ தெரியல. நானும் பின்னாடியே போய் மாமா என்ன சொல்றாருன்னு பாக்குறேன். நீ இப்போதைக்கு யார்‌ கிட்டயும் எதுவும் பேசாத. என்ன நடக்குதுன்னு பாத்துக்கலாம்.” என்று சொல்லிவிட்டு ஓட்டமும் நடையுமாக வாசலை நோக்கி சென்றான். 

இந்த திருமணம் நடக்குமா? நடக்காதா? இப்போது என்ன செய்வது? என்று புரியாமல் குழப்பத்துடன் இருந்த அமுதா தன் தோழி கலைச்செல்விக்கு கால் செய்து அவளை தன் வீட்டிற்கு வரச் சொன்னாள். 

நன்றாக அயர்ந்து உறங்கிக் கொண்டு இருந்த விஜய் திடீரென்று ஏதோ ஒரு கெட்ட கனவு வந்தால் “அம்மா!” என்று கத்திக் கொண்டு கண் விழித்தான். பயத்தில் அவன் உடல் வியர்வையில் நனைந்து இருக்க, “இத்தனை வருஷம் கழிச்சு எனக்கு எதுக்கு இப்படி ஒரு கனவு வருது? நான் அத பத்தி எல்லாம் நினைக்கவே விரும்பல. ஆனாலும் நான் எத கடந்து வரணும்னு நினைக்கிறேன். பட் தூங்கினாலும் அது தான் என் கண் முன்னாடி வந்து நிக்குது. ச்சை.. இது எல்லாத்துல இருந்தும் எப்ப தான் எனக்கு விடிவு காலம் வரப்போகுதோ தெரியல!” என்று நினைத்து தன் முகத்தை அழுந்த துடைத்துவிட்டு எழுந்து சென்று ரெஃப்ரெஷ் ஆகிவிட்டு யாரிடமும் சொல்லாமல் கிளம்பி தனியாக எங்கேயோ சென்றான். 

– காதல் மலரும் 🌹

***

You may also like

Leave a Comment

About Me

Featured