அத்தியாயம் 11: உள்ள போலாமா?
“அவன் நான் வெயில்ல நின்னு கருத்து போயிட்டா என்ன கல்யாணம் பண்ணிக்க மாட்டான்னா, நான் அதுக்காகவே டெய்லியும் 2, 3 மணி நேரம் வெயில்ல நிப்பேன். இப்ப அவன பத்தி எதுக்கு தேவை இல்லாம பேசிக்கிட்டு! எனக்கு ஒரு ஐடியா தோணுது. என் கூட வா. இன்னைக்கு விஜய் சார நேர்ல பாக்காம நான் வீட்டுக்கு போக மாட்டேன்.” என்ற அமுதா கலைச்செல்வியை அழைத்துக் கொண்டு ஒரு ஒத்தையடி பாதையில் நடக்க தொடங்கினாள்.
அந்த இடம் முழுவதையும் போலீஸ் சுற்றி வளைத்து இருந்ததால் இவர்கள் இருவரும் மட்டும் தனியாக ஒரு பாதையில் சென்று கொண்டு இருப்பதை கண்டு யாராவது அவர்களை கேள்வி கேட்டால் என்ன செய்வது என்று நினைத்து பயந்த கலை “ஏய் அமுதா எங்க டி போற? இப்ப எதுக்கு இந்த காட்டுக்குள்ள போற? விஜய் சார் என்ன உனக்காக ஸ்பெஷலா இந்த காட்டுக்குள்ள வந்து உனக்கு மட்டும் சிறப்பு தரிசனம் கொடுக்கிறேன்னு சொன்னாரா?” என்று கேட்க, “செத்த வாய மூடிட்டு வாடி.” என்ற அமுதா கலைச்செல்வியை கூட்டிக் கொண்டு வேகமாக ஒரு காட்டு வழி பாதைக்குள் ஓடினாள்.
“இங்க சுத்தி போலீஸ்காரங்களா இருக்காங்க அமுதா. என்ன விளையாடிட்டு இருக்கியா? இந்த பக்கம் எல்லாம் நான் வந்து பல வருஷம் ஆகுது. அந்த பிரசிடெண்ட்டோட ஆளுங்க யாரும் இல்லாத நேரத்தில நம்ம இந்த பக்கம் வர்றத பாத்தா தேவை இல்லாம ஏன் வந்த எதுக்கு வந்தன்னு கேள்வியா கேட்டு கொல்லுவாங்க.” என்று பதட்டமான குரலில் கலைச்செல்வி சொல்ல, “எல்லாம் எனக்கு தெரியும் வா. நீ கம்முனு என் கூட வா.” என்ற அமுதா அந்த காட்டிற்குள் புகுந்து இப்போது ஷூட்டிங் நடந்து கொண்டு இருக்கும் ஊர் தலைவருக்கு சொந்தமான காட்டுப் பகுதிக்கு பின்னே சென்று விட்டாள்.
ஆனால் இரண்டு காட்டிற்கும் நடுவே எலக்ட்ரிக் Fence போடப்பட்டு இருந்ததால் அதைத் தாண்டி எப்படி உள்ளே செல்வது என்று தெரியாமல் அமுதா யோசித்துக் கொண்டு இருக்க “ஓ.. அப்படியே இந்த பக்கமா போயிடலாம்னு நெனச்சு தான் மேடம் என்ன இந்த பக்கம் இழுத்துட்டு வந்தீங்களா? இது எனக்கு தெரியாது பாரு! இங்க தான் கரண்ட் வேலி போட்டு இருக்காங்களே! இதுல ஏறி போய் கரிக்கட்டை ஆகி சாகப் போறியா நீ? இந்த தேவையில்லாத விஷ பரீட்சை எல்லாம் வேண்டாம் அமுதா. நான் சொல்றத கேளு. ஒரு ரெண்டு, மூணு நாள் கழிச்சு அந்த அபிநயா சீன் போட்டாலும் பரவால்லன்னு அவ கால்ல விழுந்து எப்படியாவது பர்மிஷன் வாங்கி நம்ம உள்ள போய் விஜய் சாரை பார்த்துக்கொள்ளலாம்.” என்றாள் கலைச்செல்வி.
அதே கேள்வி தான் அமுதாவின் மனதிற்குள்ளும் ஓடிக் கொண்டு இருந்தது. அதனால் அந்நேரம் அவள் விண்வேளியை தாண்டி எப்படி உள்ளே போகலாம் என்று யோசித்துக் கொண்டு இருக்கும்போது, சட்டென அவள் மண்டையில் ஒரு மணி அடித்தது. அதனால் உடனே தன் மாமா வெற்றிவேலுக்கு கால் செய்து “வெற்றி.. நான் பிரசிடெண்ட் காட்டுல ஷூட்டிங் நடக்குது இல்ல.. அதுக்கு பின்னாடி இருக்கிற தென்னந்தோப்புக்கு பக்கத்துல இருக்கேன். நான் எப்படியாவது அங்க உள்ள போய் இன்னைக்கு விஜய் சார பாக்கணும். எனக்கு ஒரு ஹெல்ப் பண்றியா?” என்று ஆர்வமான குரலில் கேட்டாள்.
அமுதா தன்னிடம் பேசுவதே அபூர்வம். இதில் தன்னிடம் உதவி கேட்கிறாளா என்று நினைத்து சந்தோஷப்பட்ட வெற்றி “நீ என்னனு மட்டும் சொல்லு புள்ள.. உனக்காக இந்த மாமான் என்ன வேணாலும் செய்வேன்.” என்று உற்சாகமான குரலில் சொன்னான்.
அவன் தனக்காக என்றால் எதுவாக இருந்தாலும் கண்டிப்பாக செய்வான் என்று தெரிந்து தானே அவளும் கேட்டாள்! அதனால் வாயெல்லாம் பல்லாக “தேங்க்ஸ் வெற்றி மாமா! நீ அந்த பிரசிடெண்ட் வீட்ல வேலை செஞ்சுகிட்டு அவர் கூட தானே சுத்திக்கிட்டு இருக்க! அந்த வீட்ல இருக்கிற எல்லாமே உனக்கு அத்துபடின்னு எனக்கு தெரியும். இங்க பண்ண வீட்டில கரண்ட் வேலிக்கு கரண்ட் சப்ளை போற ஸ்விட்ச் பாக்ஸ் இருக்கும்ல்ல! அங்க போய் எப்படியாவது அந்த switch-ஐ ஆஃப் பண்ணிவிட்டுரு. தான் இந்த வேலியை தாண்டி ஏறி குதிச்சு உள்ள போயிடுறேன்.” என்றாள் அமுதா.
அவள் சொன்னதைக் கேட்டு அதிர்ந்த வெற்றி “இந்தா புள்ள அமுதா.. என்ன டி விளையாடுறியா? எப்படி அவ்ளோ பெரிய கரண்ட் வேலிய தாண்டி உள்ள குதிப்ப? யோசிச்சு தான் பேசுறியா நீ? இந்த மாதிரி குரங்கு சேட்டை எல்லாம் பண்ணாத. அப்புறம் உனக்கு ஏதாவது ஆச்சுன்னா நாங்க என்ன டி பண்றது?” என்று அக்கறை கலந்த கோபத்துடன் கேட்டான். 😡
அவள் பேசியதை அவள் அருகில் இருந்து கேட்டுக் கொண்டு இருந்த கலைச்செல்வியும் வெற்றி கேட்ட அதே கேள்வியை அவளிடம் கேட்க, “நீ வாய மூடு டி எல்லாம் எனக்கு தெரியும்.” என்ற அமுதா சோகமான குரலில் வெற்றிடம் “மாமா நான் இன்னிக்கி எப்படியாவது விஜய் சார பார்த்திடணும்னு ரொம்ப ஆசையா கிளம்பி வந்தேன். அவர பாக்காம போக எனக்கு மனசு வர மாட்டேங்குது. நீயே சொல்லு! இந்த வழியையும் விட்டுட்டா நான் எப்படி பிரசிடெண்ட் காட்டுக்குள்ள போறது? போலீஸ் வேற சுத்தி இருக்கிற எல்லா வழியையும் அடச்சு வச்சிருக்காங்க. எங்க பார்த்தாலும் போலீஸ்காரங்களா இருக்காங்க. எனக்கு அவங்கள பார்த்தாலே பயமா இருக்கு. ஆனா அதுக்காக நான் விஜய் சாரை பார்க்காமல் வர முடியுமா?” என்று விட்டால் அழுது விடுவேன் என்பதை போல உடைந்த குரலில் கேட்டாள். 😔 🥺
“என் ஆசை அத்தை மகளே…
நீ அழுதா என் மனசு தாங்குமா டி!
நீ சிரிச்சா நான் சிரிப்பேன்.
நீ அழுதா நான் அழுவேன்.
நித்தம் உன்னை நினைச்சு உன்ன சுத்தி சுத்தி நான் வருவேன்.
காத்து கூட வேகமா அடுச்சு உன் கண்ண கலங்க வச்சா, அதை கைது செஞ்சு அடைச்சு வச்சுப்புடுவேன் உனக்காக இந்த மாமன்!”
என்று நினைத்த வெற்றி சில நொடிகள் எதையோ யோசித்துவிட்டு “இப்ப என்ன புள்ள உனக்கு! இன்னைக்கே நீ விஜய் சாரை பாக்கணும். அவ்ளோ தானே! இன்னிக்கி உன்னையும் அவரையும் சந்திக்க வைக்க வேண்டியது என் பொறுப்பு. நீ கவலைப்படாத. நீ அங்கயே இரு. இந்தா ஒரு அஞ்சு நிமிஷத்துல நான் அங்க வந்துடறேன்.” என்றவன் உடனே தனது புல்லட்டை ஸ்டார்ட் செய்து அமுதா இருக்கும் இடத்தை நோக்கி பறந்தான்.
அவன் பேசிவிட்டு வைத்தவுடன் சந்தோஷத்தில் கலைச்செல்வியின் கைகளைப் பிடித்துக் கொண்டு துள்ளி குதித்தாள் அமுதா. அதனால் குறுகுறுவென அவள் முகத்தையே பார்த்த கலை “என்ன டி குதிக்கிற? உன் மாமன்காரன் கரண்ட்டை பிடுங்கி விடுகிறேன்னு சொல்லிட்டானா! லூசு ஆயிட்டியா டி நீ? எப்படி இத தாண்டி ஏறி குதிச்சு நம்மளால அந்த பக்கம் போக முடியும்?” என்று அதிர்ச்சி விலகாமல் கேட்டாள். ஒரு வேளை தன்னையும் அமுதா அதில் ஏறி செல்ல சொல்லி விட்டால் என்ன செய்வது என்ற பயம் அவளுக்கு.
பயந்த முகத்துடன் இருந்த கலைச்செல்வியை பார்த்து கலகலவென சத்தமாக சிரித்த அமுதா “அட போடி பைத்தியக்காரி. நான் எதுக்கு இதுல போய் ஏறி குதிக்க போறேன்? வெற்றி கிட்ட நான் ஹெல்ப் பண்ண சொல்லி கேட்டா கண்டிப்பா எதா இருந்தாலும் அது எனக்கு செய்யும்னு தெரியும். ஆனா இப்பவே நான் விஜய் சாரை பாக்கணும்னு அடம் பிடிச்சிருந்தா இங்க சுத்தி போலீஸ் இருக்கிறதுனால எதுக்கு தேவை இல்லாத பிரச்சனைன்னு யோசிச்சு அப்புறம் பாத்துக்கலாம்னு சொல்லி இருக்கும். ஆனா இப்போ நான் இதுல ஏறி குதிக்கிறேன்னு சொன்னதுனால வேற வழி இல்லாம நானே வந்து உன்னை உள்ள கூட்டிட்டு போறேன்னு அவன் சொல்லிட்டான். இதுக்குத் தான் சும்மா பொய் சொன்னேன்.” என்று உற்சாகமான குரலில் சொன்னாள்.
“என்ன டி சொல்ற? அவன் எப்படி உன்ன உள்ள கூட்டிட்டு போவான்?” என்று கலை கேட்க, “அதெல்லாம் எனக்கு தெரியாது. என் மாமா ஏதாச்சு செய்றேன்னு சொன்னா அத செய்யாம விடாது. அது மட்டும் தெரியும்.” என்று வெற்றியின் மீது இருக்கும் நம்பிக்கையில் பெருமையாகச் சொன்னாள் அமுதா. “அது சேரி! அவன் தான் உன்னை நினைச்சு பைத்தியம் பிடிச்சு திரியுறானே! நீ சொன்னா அவன் தலைகீழா நின்னு தண்ணி கூட குடிப்பான்.” என்று சொல்லி சலித்துக் கொண்டாள் கலைச்செல்வி. இப்படி இவர்கள் இருவரும் பேசிக் கொண்டு இருக்கும் போதே வெற்றியின் புல்லட் சத்தம் அவர்களுக்கு கேட்டது.
அதனால் அவர்கள் இருவரும் பேசுவதை நிறுத்திவிட்டு திரும்பி அவனை பார்த்தார்கள். அமுதாவை பார்த்துவிட்டு அழகாக புன்னகைத்த வெற்றி அவள் அருகில் இருந்த கலைச்செல்வியை பார்த்துவிட்டு “ஓஹோ இவளும் இங்க தான் இருக்காளா!” என்று கிண்டலாக கேட்டான்.
“செல் ஃபோனும் சிம் கார்டும் மாதிரி சின்ன வயசுல இருந்து நாங்க ரெண்டு பேரும் இப்படி ஒன்னா தான் இருக்கோம். ஏன் உனக்கு தெரியாதா?” என்று திமிராக கேட்ட கலை அவனை பார்த்து முறைத்தாள். 🤨 அதனால் வெற்றி ஏதோ சொல்ல தன் வாயை திறக்க “போதும் நீங்க ரெண்டு பேரும் சண்டை போட ஆரம்பிச்சிங்கனா நாளைக்கு வரைக்கும் கூட சண்டை போட்டுட்டே இருப்பீங்க. அப்புறம் நம்ம போறதுக்குள்ள ஷூட்டிங்கே முடிஞ்சு போயிடும் போல வாங்க.” என்றாள் அமுதா.
“ஆமாமா நீ வந்து முதல்ல வண்டியில ஏறு.” என்று வெற்றி சொல்ல, அவன் அமுதாவை பார்த்து மட்டும் சொல்லியதால் கலைச்செல்வியை பார்த்துவிட்டு அமுதா வெற்றியை பார்க்க, கலை இன்னும் வெற்றியை பார்த்து முறைத்துக் கொண்டு இருந்தாள். “சும்மா எதுக்கு எல்லாரும் ஒருத்தரை ஒருத்தர் மாத்தி மாத்தி பார்த்து சைட் அடிச்சிட்டு இருக்கீங்க? ரெண்டு பேரும் வந்து வண்டியில ஏருங்க.” என்றான் வெற்றி. அதனால் குசியான அமுதா சென்று அவன் பின்னே வண்டியில் ஏரி அமர்ந்துக் கொள்ள, வெற்றியும் அவனை ஒட்டி கொண்டு அமர்ந்திருக்கும் அமுதாவையும் ஒரு மாதிரி சோகமாக பார்த்த கலை சென்று அமுதாவின் பின்னே அமர்ந்தாள்.
அமுதாவையும் கலைச் செல்வியையும் அழைத்துக் கொண்டு ஒரு குறுக்கு பாதை வழியாக சென்ற வெற்றி நேராக பிரசிடெண்ட்டின் காட்டுப்பகுதியில் ஷூட்டிங் நடந்து கொணடு இருந்த இடத்தில் உள்ள அவர்களுக்கு சொந்தமான பங்களா வீட்டில் பின் பகுதிக்கு சென்றான். அங்கே ஒரு சிறிய கதவு மட்டும் இருக்க, வெற்றி எட்டி ஒரு உதை உதைத்த உடனேயே அந்த கதவு உடைந்து போய் இரண்டடி முன்னே சென்று விழுந்தது. சூட்டிங் நடப்பதால் அனைவரும் அங்கே பிஸியாக இருந்ததால் அவர்கள் மூவரும் ஈசியாக உள்ளே நுழைந்து விட்டார்கள்.
– காதல் மலரும் 🌹