அத்தியாயம் 10: விஜயை சந்திப்பாளா அமுதா?
இரண்டு நாட்களுக்கு பின்பு மதுரை மாவட்டம் சோழவந்தான் கிராமத்தில் சூட்டிங் நடப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடக்க தொடங்கி இருந்தது. விஜய் தனது சொகுசு கேரவனில் ஏசியை போட்டுவிட்டு ஒரு சாய்வு நாற்காலியில் அமர்ந்து தன் முன்னே இருந்த ஒரு சிறிய நாற்காலியின் மீது காலை நீட்டி சாய்ந்து இருந்தான். அவன் அருகில் தினேஷ் நின்று கொண்டு இருக்க, விஜய்க்கு ஒரு ஆண் மேக்கப் ஆர்டிஸ்ட் மேக்கப் போட்டுக் கொண்டு இருந்தான்.
இவர்கள் அனைவரும் ஒரு குறிப்பிட்ட பகுதிக்குள் இருக்க, அந்த பகுதியை சுற்றி தற்காலிகமாக தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தது. அந்த ஊர் பொதுமக்கள், அக்கம் பக்கம் ஊரில் இருப்பவர்கள் என அனைவரும் விஜய் தங்களது ஊருக்கு வந்திருப்பதை பற்றி தெரிந்து கொண்டு அவனை காண திரளாக வந்து குவிந்திருந்தார்கள். அந்த ஊர் தலைவரின் மகள் அபிநயா வேறு இந்த படத்தில் நாயகியாக அறிமுகம் ஆகிறாள் என்பதால் அவள் நடிக்கும் அழகை காண அங்கே பலர் கூடி இருந்தார்கள்.
தங்களது வாய்க்கால் வரப்புகளில் வேலையாட்கள் வேலை செய்து கொண்டு இருக்க, அவர்களிடம் ஊர் நாயம் பேசிக் கொண்டு இருந்தாள் அமுதா. அங்கு வேலை செய்து கொண்டு இருந்த ஒரு கிழவி “அடியே அமுதா.. உன் மாமன் வெற்றிய கல்யாணம் பண்ணிக்கிட்டு ராணி கனக்கா புல்லட்டில அவன் கூட ஊரெல்லாம் சுத்தி வருவேன்னு பார்த்தா.. நீ என்ன பைய மாட்டிக்கிட்டு மறுபடியும் பள்ளிக்கூடம் போக போறியாம்! காலா காலத்துல கல்யாணம் பண்ணிக்க வேண்டியது தானே! அந்த பையன் பாவம் எத்தன நாள் தான் உன் பின்னாடியே சுத்திக்கிட்டே இருப்பான்!” என்று அக்கறையுடன் கேட்டாள்.
“நான் ஒன்னும் பள்ளிக்கூடம் போகல பாட்டி. காலேஜுக்கு போக போறேன். நான் தான் ஏற்கனவே ஒரு டிகிரி முடிச்சிட்டேனே! எனக்கு நிறைய படிச்சு கலெக்டர் மாதிரி பெரிய ஆபிஸர் ஆகணும்னு ஆசை. நீ வேணா பாரு.. நான் புல்லட்டில இல்ல! பெரிய பெரிய கார்ல இந்த ஊரையே சுத்தி வருவேன். அப்ப இந்த ஊரே வாய் மேல விரல வச்சு என்ன அசந்து போய் பார்க்கும். அப்ப நீயும் உன் புட்டி கண்ணாடியை போட்டுட்டு வந்து என்னை பாரு.” என்று சொல்லிவிட்டு சிரித்தாள் அமுதா. 😂 😂 😂
அப்போது அமுதாவை தேடி கொண்டு அங்கே வந்த கலைச்செல்வி “ஏய் அமுதா ஊர்ல இருக்கிறவங்க எல்லாம் ஷூட்டிங் பாக்க போயிட்டு இருக்கிறாங்க டி. நானும் காலையிலயே நேரமா எந்திரிச்சு கிளம்பி உன் கூட அங்க போலாம்னு உன்ன ரொம்ப நேரமா தேடிட்டு இருக்கேன். இந்த மொட்ட வெயில்ல எல்லா பக்கமும் நான் உன்ன தேடிட்டு வந்து பாத்தா, நீ இந்த கிழவி கூட இங்க வந்து நின்னு மொக்க போட்டுக்கிட்டு இருக்க! வா டி நம்மளும் ஷூட்டிங் பாக்க போலாம்.” என்று அமுதாவின் கையை பிடித்து இழுத்தாள்.
அவள் சொல்வதைக் கேட்டு குழம்பிய அமுதா “நம்ம ஊர்ல எங்க டி சூட்டிங் நடக்குது? லூசு மாதிரி உளறிக்கிட்டு இருக்க!” என்று கேட்க, “அட கூறு கெட்டவளே! நம்ம ஊரு பிரசிடெண்ட் தோட்டத்துல தான் டி ஷூட்டிங் நடக்குது. பிரசிடெண்ட்டோட பொண்ணு அபிநயா இருக்காள்ல! அவ தான்.. அந்த மேனாமினுக்கி! அவ அந்த படத்துல ஏதோ ஒரு முக்கியமான Role-ல நடிக்கப் போறாளாம். உனக்கு இன்னொரு விஷயம் தெரியுமா?” என்று ஆர்வமான குரலில் கேட்டாள் கலை.
“என்ன விஷயம்?” என்று சாதாரணமாக அமுதா கேட்க, “என்ன அமுதா நீ.. இன்ட்ரஸ்ட் இல்லாம இப்படி பேசிட்டு இருக்க? நம்ம ஊர்ல சினிமா ஷூட்டிங் எல்லாம் நடக்கிறது எவ்ளோ பெரிய விஷயம்! அதுவும் நம்ம ஊரு காரி… நம்ம கூட நம்ம காலேஜ்ல படிச்சவ நடிக்கப் போறா. இதுல முக்கியமான விஷயமே நமக்கு பிடிச்ச விஜய் சார் தான் இந்த படத்தோட ஹீரோவாம். அவரும் ஷூட்டிங்க்கு வந்திருக்கிறாரு. அவரை பாக்குறதுக்காகவாவது நம்ம சூட்டிங்-க்கு போக வேணாமா?” என்று கேட்டாள் கலைச்செல்வி.
விஜயின் பெயரைக் கேட்ட உடனே அமுதாவின் முகம் சட்டென மலர்ந்து விட்டது. கடந்த சில வருடங்களாகவே அவளுக்கு மிகவும் பிடித்த ஹீரோ விஜய் தான். அவனது திரைப்படம் எப்போது ரிலீஸ் ஆனாலும் தனது அண்ணன்மார்களின் கால்களில் விழுந்து கெஞ்சியாவது தன் வீட்டின் உள்ளவர்களை அழைத்து கொண்டு தியேட்டருக்கு சென்று ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோ பார்த்துவிட்டு வந்துவிடுவாள். தனக்கு கடவுள் போல இருக்கும் விஜயை நேரில் காண ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கும் போது, அவனை சென்று பார்க்க வேண்டும் என்ற ஆசை அவளுக்குள் எழும்புவது நியாயம் தானே!!
அதனால் சந்தோஷமாக கலைச்செல்வியின் கையைப் பிடித்துக் கொண்டு ஒரு சுற்று சுற்றிய அமுதா “வாவ் கலை! நெஜமாவே விஜய் சார் நம்ம ஊருக்கு வந்து இருக்காரா? என்னால இத நம்பவே முடியல டி. அவர எல்லாம் தூரத்தில இருந்து பாக்கிறதே ரொம்ப கஷ்டம். இப்ப நமக்கு அவர பக்கத்துல இருந்து பார்க்க ஒரு சான்ஸ் கிடைச்சிருக்கு. அவர் இந்த சூட்டிங் முடிஞ்சு ஊருக்கு போறதுக்குள்ள ஒரே ஒரு தடவையாவது எப்படியாவது அவரை பாத்து அவர் கூட சேர்ந்து ஒரு செல்ஃபி எடுத்துடனும்.” என்று உற்சாகமான குரலில் சொன்னாள்.
“அதுக்கு நம்ம முதல்ல அங்க போகணும் டி. சுத்து வட்டாரத்தில இருக்கிற எல்லா ஊருல இருந்தும் நிறைய பேர் டிராக்டர்ல எல்லாம் வந்து சூட்டிங் பார்க்க கும்பல் கும்பலா இறங்கி இருக்காங்களாம். தோட்டத்தை சுத்தி யாரையும் உள்ள விடாம ஃபுல்லா போலீஸ் ப்ரொடக்சன் போட்டு இருக்காங்க. நம்ப அங்க போனாலும் பல கிலோமீட்டர் தூரத்தில இருந்து தான் விஜய் சாரை நம்மளால பார்க்க முடியும் போல. இப்ப என்ன டி பண்றது?” என்று சோகமாக கலைச்செல்வி கேட்க,
“அதெல்லாம் அங்க போய் பாத்துக்கலாம். நான் என்ன பண்ண போறேன்னு எனக்கு தெரியாது. ஆனா இன்னைக்கு நான் விஜய் சார நேர்ல பாத்தே தீருவேன். அவர் தான் என்னோட சூப்பர் ஹீரோ. இத்தனை நாளா அவரை ஒரு தடவையாவது என் வாழ்க்கையில பாத்திட மாட்டோமானு நான் ஏங்கிக்கிட்டு இருந்தேன். இப்ப அவர் நம்ம ஊருக்கே வந்திருக்கும் போது, இந்த சான்ஸை நான் மிஸ் பண்ண மாட்டேன். சீக்கிரம் வா போலாம்.” என்ற அமுதா விஜயை காணப்போகும் ஆவலில் கலைச்செல்வியின் கையை பிடித்துக் கொண்டு வேகமாக பிரசிடெண்ட்டின் தோட்டம் இருக்கும் இடத்திற்கு சென்றாள்.
மேக்கப் போட்டுவிட்டு தயாராக இருந்தாள் அபிநயா. அவள் தான் ஹீரோவின் மாமன் மகளாக நடிக்கப் போகிறாள். இன்று முதன் முதலில் தனது சொந்த ஊருக்கு வரும் ஹீரோ இயற்கை எழில் சூழ்ந்த அழகிய கிராமத்தில் மழையில் மயில் போல பாவாடை தாவணியில் வாய்க்கால் வரப்போறம் தனது தோழிகளுடன் ஆடிக் கொண்டு இருக்கும் அபிநயாவை சந்திக்கிறான். இது தான் இன்றைய சீன். அந்த சீனை சூட் செய்வதற்காக பேக்ரவுண்ட் முதல் பேக் டான்ஸர்கள் வரை அனைத்தும் ரெடியாக இருந்தது. இப்போது அபிநயாவும் தயாராகி வந்து விட்டதால், லொகேஷனில் அவளை நிற்க வைத்து டான்ஸ் மாஸ்டர் ஆடும் போது எப்படி கேமராவை பார்த்து ஆட வேண்டும் என்று சொல்லிக் கொடுத்துக் கொண்டு இருந்தார்.
ஒரு ஓரமாக நாற்காலியில் மரத்தடியில் அமர்ந்து கைகளில் உள்ள ஐந்து விரல்களிலும் ஐந்து தங்க மோதிரங்கள் அணிந்து வெள்ளையும் சொல்லையுமாக தனக்கு இல்லாத மீசையை இருப்பதாக நினைத்து கம்பீரமாக அதை தடவி விட்டு தன் மகள் சினிமா நடிகை ஆகப் போகிறாள் என்ற கனவை மனதில் சுமந்து கொண்டு அமர்ந்திருந்தார் அந்த ஊரின் பிரசிடெண்ட் சிதம்பரம். அவருக்கு இடது மற்றும் வலது பக்கத்தில் இரண்டு எடுபிடிகள் வேறு தண்டமாக நின்று கொண்டு இருந்தார்கள்.
இன்னும் ஒரு சீன் கூட அபிநயா முழுவதாக நடித்திருக்காத நிலையில், தன் மகள் இந்த படத்தில் செகண்ட் ஹீரோயினாக நடிக்க இருந்தாலும், இந்த படம் மூலமாக அவளது கதாபாத்திரம் மக்களிடையே நன்மதிப்பை பெற்று விட்டால் அடுத்தடுத்து அவளுக்கு ஏராளமான பட வாய்ப்புகள் கிடைக்கும்.
அதை வைத்து தன் மகளை பெரிய நடிகையாக்கி அவளோடு அனைத்தையும் பேக் செய்து கொண்டு சென்னை சென்று, பிற்காலத்தில் அவளை தனது அரசியல் வாழ்க்கைக்குள் கொண்டு வந்து அவளை வைத்து தானும் ஒரு பெரிய அரசியல்வாதியாகி முடிந்தால் நாளைய தமிழ்நாட்டின் சி.எம் ஆகிவிடலாம் என்ற அளவிற்கு ஏராளமான எதிர்கால திட்டங்களை வைத்திருந்தார் சிதம்பரம். ஆனால் அவரது திட்டங்கள் எல்லாம் திறம்பட நடக்குமா? இல்லை கானல் நீராய் காணாமல் போய்விடுமா? என்று போக போக பார்ப்போம்.
அதற்குள் ஓடி வந்து கொண்டு இருந்த அமுதாவும், கலைச்செல்வியும் ஷூட்டிங் நடந்து கொண்டு இருந்த சிதம்பரத்தின் பல ஏக்கரா நிலப்பரப்புள்ள தோட்ட பகுதிக்குள் வந்து சேர்ந்தார்கள். அவர்களுக்கு முன்னே ஆயிரக்கணக்கான மக்கள் போலீசாரின் தடுப்பிற்கு வெளியே ஒரு முறையாவது விஜயை பார்த்து விட மாட்டோமா என்ற ஏக்கத்துடன் விஜய்! விஜய்! எங்கள் சைனீங் ஸ்டார் விஜய்! என்று கத்தி கோஷம் எழுப்பிக் கொண்டு இருந்தார்கள். அவர்களை எல்லாம் பார்த்த கலைக்கு அவர்களை தாண்டி உள்ளே செல்ல முடியும் என்ற ஆசை உடனே காணாமல் போய்விட்டது.
ஆனால் அமைதியாக இருந்த அமுதா தன் கண்களை அந்த இடம் முழுவதும் சுழல விட்டு, நிதானமாக எதையோ யோசித்து கொண்டு இருந்தாள். அவளைப் பிடித்து உலுக்கிய கலை “ஏய் அமுதா.. இங்கே வந்து என்ன யோசிச்சிட்டு இருக்க?” என்று கேட்க, “உள்ள எப்படி போறதுன்னு தான்.” என்று சாதாரணமாகச் சொன்னாள் அமுதா.
“முன்னாடி இத்தனை பேர் நிக்கிறாங்க. இவங்க எல்லாரையும் தாண்டி உள்ள போக முடியும்னு எப்படி நினைக்கிற நீ? உச்சி வெயில் பல்ல காட்டிகிட்டு அடிக்குது டி. நானும் ஒரு ஆர்வக்கோளாறுல எப்படியாவது விஜய் சாரை பார்த்துவிடலாம்ன்னு தான் உன்னை இழுத்துகிட்டு இவ்ளோ தூரம் நடந்து இங்க வந்தேன். ஆனா இங்கே இருக்கிற கூட்டத்தை எல்லாம் பார்த்ததுக்கு அப்புறம் அதுக்கெல்லாம் வாய்ப்பே இல்லைன்னு நல்லா தெரிஞ்சிருச்சு. தேவை இல்லாம இங்க வெயில்ல நின்னினா நீயும் என்னை மாதிரி கருத்து போயிடுவ. அப்புறம் உன் அத்தை மவன்.. அந்த முட்டாப் பையன் உன்ன கட்டிக்க மாட்டேன்னு சொல்லிடுவான் பாத்துக்க.” என்றாள் கலைச்செல்வி.
“அவன் நான் வெயில்ல நின்னு கருத்து போயிட்டா என்ன கல்யாணம் பண்ணிக்க மாட்டான்னா, நான் அதுக்காகவே டெய்லியும் 2, 3 மணி நேரம் வெயில்ல நிப்பேன் டி. அவனை கட்டிக்கணும்னு எனக்கு என்ன ஆசையா? இப்ப அவன பத்தி எதுக்கு தேவை இல்லாம பேசிக்கிட்டு! எனக்கு ஒரு ஐடியா தோணுது. என் கூட வா. இன்னைக்கு விஜய் சார நேர்ல பாக்காம பாக்காம நான் வீட்டுக்கு போக மாட்டேன்.” என்ற அமுதா கலைச்செல்வியை பிடித்து இழுத்துக் கொண்டு ஒரு ஒத்தையடி பாதையில் நடக்க தொடங்கினாள்.
– காதல் மலரும் 🌹